Thursday, March 11, 2010

நிழல் எழுத்தாளன்


இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங் [Pierce Brosnan] அவர்களின் சுயசரிதையை எழுதி வரும் எழுத்தாளரான மைக் மக்காரா, அமெரிக்காவில் ஆடம் லாங் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகிலிருக்கும் கடற்கரையில் கரை ஒதுங்கிய பிணமாக கண்டெடுக்கப்படுகிறார். அவரது மரணம் ஒரு விபத்து அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்று முடிவாகிறது.

மைக் மக்காராவின் மரணத்தையடுத்து, ஆடம் லாங்கின் சுயசரிதையை வெளியிட உரிமை பெற்றிருக்கும் நிறுவனமானது, இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நிழல் எழுத்தாளனை [Ewan McGregor] ஆடம் லாங்கின் சுயசரிதையை எழுதும் பணியில் நியமிக்கிறது.

அப்பணியை ஏற்பதற்கு முதலில் அந்த நிழல் எழுத்தாளன் தயங்கினாலும், அதன் மூலம் கிடைக்கும் பெருந்தொகைப் பணம் அவனை ஈர்க்க, ஆடம் லாங்கின் நினைவுகளை எழுத்தில் பதிப்பதற்காக அவன் அமெரிக்காவிற்கு கிளம்பிச் செல்கிறான்.

விமான நிலையத்தில் அமெரிக்கா நோக்கி செல்லும் விமானத்திற்காக காத்திருக்கும் நிழல் எழுத்தாளன், பார் ஒன்றில் விஸ்கியைச் சுவைத்தவாறே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செய்திகளைப் பார்க்கிறான். அச்செய்தி அறிக்கையின் வழி, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ஆடம் லாங், CIAன் சட்ட விரோதமான ஆட்கடத்தலிற்கு துணைபோனார் எனும் சூடான தகவல் வெளியாகியிருப்பதை அவன் அறிந்து கொள்கிறான்.

நீண்ட விமானப் பயணத்தின் பின், அமெரிக்காவின் ஒரு சிறு தீவில் அமைந்திருக்கும் ஆடம் லாங்கின் கடற்கரையோர வீட்டை வந்தடைகிறான் நிழல். நிழலை ஆடம் லாங்கின் வீட்டில் வரவேற்கும் ஆடம் லாங்கின் உதவியாளர், அவனது பணி குறித்த விபரங்களை அவனிற்கு அறியத் தருகிறாள். பின்பு உதவியாளர் ,மைக் மக்காரா எழுதிய பக்கங்களை நிழலைப் படித்துப் பார்க்கும்படி வேண்டிக் கொள்கிறாள்.

the-ghost-writer-2010-16251-1185583270 மைக், எழுதிய பக்கங்களைப் படித்துப் பார்க்கும் நிழல், அது வாசகர்களைக் கவரும் வகையில் எழுதப்பட்டிருக்கவில்லை என்று கருதுகிறான். சுயசரிதையை மீண்டும் புதிதாக எழுத ஆரம்பிக்க வேண்டுமெனத் தீர்மானிக்கிறான். அன்றிரவு விமான நிலையத்தில் வைத்து அவனிற்கு ஆடம் லாங் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறார். இந்நிகழ்வின் பின் தீவில் அமைந்திருக்கும் விடுதி ஒன்றில் தனக்கென ஏற்பாடாகியுள்ள அறைக்குச் சென்று பயணக் களைப்பு காரணமாக நன்றாக உறங்கிப் போகிறான் நிழல்.

மறுநாள் காலை ஆடம் லாங்கின் வீட்டில் அவரைச் சந்திக்கும் நிழல், சுயசரிதையை தன் பாணியில் எழுத ஆரம்பிக்கிறான். இவ்வேளையில் சர்வதேச நீதிமன்றம் ஆடம் லாங்கிற்கு எதிராக போர்க் குற்றங்கள் சம்பந்தமான ஒரு விசாரணைக்கு உத்தரவிடுகிறது. இங்கிலாந்து அரசாங்கம் இவ்விசாரணைக்கு தன் பூரண ஒத்துழைப்பை வழங்க சம்மதம் தெரிவிக்கிறது. ஆடம் லாங்கினால் பதவி நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் ஆடம் லாங்கிற்கு எதிராக சாட்சியம் கூற முன் வருகிறார்.

இத்தகவல்கள் யாவும் ஆடம் லாங்கிற்கு அதிக அழுத்தத்தை தருகின்றன. நிழல் மீது அவர் சீறிப்பாயும் சந்தர்பங்களையும் ஏற்படுத்துகின்றன. இருப்பினும் இவற்றைச் சகித்துக் கொண்டு தன் பணியைத் தொடர்கிறான் நிழல்.

the-ghost-writer-2010-16251-2145878922 ஆடம் லாங் குறித்த புதிய தகவல்கள் மனித உரிமை ஆர்வலர்களை அவர் வீட்டிற்கு முன்பாக ஆவேசமான ஆர்ப்பாட்டத்தில் குதிக்க வைக்கின்றன. சர்வதேச செய்தி சேனல்களில் ஆடம் லாங்கின் தலை பகடைக் காயாகிறது. இவ்வேளையில் இங்கிலாந்திற்கு திரும்பிச் சென்றால் அங்கே தான் கைது செய்யப்படுவதற்கு சாத்தியங்கள் உண்டு என்ற நிலையில், அமெரிக்க அரசிடம் தனக்கு ஆதரவு வேண்டுவதற்காக நியூயார்க் நகரத்திற்கு உடனடியாகப் பயணமாகிறார் ஆடம் லாங்.

விடுதியில் தங்கியிருக்கும் நிழலிற்கு, மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் போன்றவர்களால் ஏற்படக்கூடிய தொல்லைகளைத் தவிர்ப்பதற்காக அவனை ஆடம் லாங்கின் வீட்டிலேயே தங்கிக் கொள்ளச் சொல்கிறாள் ஆடம் லாங்கின் உதவியாளர். நிழல் தங்கிக் கொள்வதற்கு கடலில் மூழ்கி இறந்து போன மைக் மக்காராவின் அறை ஒதுக்கப்படுகிறது.

பணியை ஏற்றுக் கொண்ட நாள் முதலே, மைக் மக்காரா எழுதிய சுயசரிதை குறித்த ஒரு சந்தேகமான உணர்வைத் தன்னுடன் கொண்டிருக்கும் நிழல், மைக் மக்காராவின் அறையை ஒரு நாள் சோதனை செய்யும் போது, சில போட்டோக்களையும், ஆடம் லாங்கின் ஆரம்ப கால கட்சி உறுப்பினர் அட்டையையும் ஒரு மறைவிடத்திலிருந்து கண்டுபிடிக்கிறான்.

மைக் மக்காரா எழுதிய சுயசரிதையின் சில பக்கங்களையும், ஆடம் லாங்கின் கட்சி உறுப்பினர் அட்டையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் நிழல், அவற்றில் ஒரு வித்தியாசம் இருப்பதைக் கண்டு கொள்கிறான். இந்நிகழ்வுகள் தரும் உந்துதலில் மைக் மக்காராவின் உடல் கரை ஒதுங்கிய கடற்கரைப் பகுதியைத் தேடிச் செல்கிறான் நிழல். வழியில் அவனிற்கு கிடைக்கும் சில தகவல்கள் மைக் மக்காராவின் மரணம் விபத்தோ அல்லது தற்கொலையோ அல்ல எனும் ஐயத்தை அவன் மனதில் விதைக்கிறது. தொடரும் அவன் தேடல்கள் அதிர வைக்கும் ஒரு உண்மையின் திசையை நோக்கி வேகமாக அவன் நிழலை நகர்த்த ஆரம்பிக்கின்றன….

l-homme-de-l-ombre-2009-16251-1081491977 பிரபல எழுத்தாளர் Robert Harris எழுதிய The Ghost எனும் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது The Ghost Writer எனும் இத்திரைப்படம். சமகால உலக அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து பின்னப்பட்டிருக்கும் திரைக்கதையின் மூலம் சிறப்பான ஒரு அரசியல் த்ரில்லரை வழங்கியிருக்கிறார் இயக்குனர் Roman Polanski .

பிரபலங்களின் சுயசரிதைகளை எழுதும் பெரும்பாலான நிழல் எழுத்தாளர்களின் பெயர்கள் வெளியே வருவதில்லை என்பதைப் போலவே இத்திரைப்படத்திலும் நிழலின் பாத்திரத்திற்கு பெயர் வழங்கப்படவில்லை!!

அரசியல் உள்குத்தல்கள், பழிவாங்கல்கள், அந்தர் பல்டிகள் என அரசியல் சூழலைக் கூறு போடும் திரைக்கதை, ஈராக் போர், அதன் விளைவுகள், அகில பிரபஞ்ச நாட்டாமையான CIAன் சட்ட விரோத நடவடிக்கைகள் என்பவறையும் தன்னுடன் அணைத்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நீதிமன்றத்தின் கையாலாகத்தனம் குறித்து நிழல் வழியாக சூடான விமர்சனம் ஒன்றையும் தயங்காமல் அது முன் வைக்கிறது.

ஈராக் போரில் அமெரிக்காவுடன் தோள் கொடுத்து நின்ற இங்கிலாந்துப் பிரதமர் டானி பிளேயரை நோக்கி கலைஞன் ரோமான் பொலான்ஸ்கி எழுப்பும் ஒரு கேள்வியாகவும் இத்திரைப்படம் உருப்பெறுகிறது. திரைப்படத்தில் பியர்ஸ் புரொஸ்னான் ஏற்றிருக்கும் ஆடம் லாங் பாத்திரத்தின் அசல், டானி பிளேயர் என்பது சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றல்ல.

திரைப்படத்தில் நிழல் எழுத்தாளனாக வரும் இவான் மக்கிரகோரின் பாத்திரம் அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத ஒன்றாகும். அதனை அழகான முறையில் நடித்துக் காட்டியிருக்கிறார் மக்கிரகோர். ஆனால் ஆடம் லாங் பாத்திரத்தில் வரும் பியர்ஸ் புரொஸ்னான் பின்னி எடுத்திருக்கிறார். நீண்ட நாட்களின் பின் அவரின் முக்கியமான வேடமாக ஆடம் லாங் பாத்திரத்தைக் கூறலாம்.

l-homme-de-l-ombre-2009-16251-1027734208 மனைவியால் வெறுக்கப்பட்டு, மனித உரிமை ஆர்வலர்களால் கொலைகாரன் எனத் தூற்றப்பட்டு, தன் சொந்த நாட்டிற்கே திரும்பிச் செல்ல முடியாத நிலையிலுள்ள ஒரு முன்னாள் பிரதமர் பாத்திரத்திற்குரிய அழுத்தம், கோபம், வெடிப்பு என்பவற்றைப் பிரமாதமாக திரையில் கொணர்கிறார் பியர்ஸ் புரொஸ்னான். தன் ஜெட் விமானத்தில் வைத்து தன்னைக் குற்றம் சாட்டும் நிழல் மீது அவர் சீறிப்பாயும் பாய்ச்சல், ஆவேசமான புலிப் பாய்ச்சல்.

திரைப்படத்தின் முன்பாதி மிகவும் நிதானமான வேகத்துடனேயே நகர்கிறது. இருப்பினும் சந்தேகங்களையும், மர்மங்களையும் பார்வையாளன் மனதில் திரைக்கதை விதைத்துக் கொண்டே செல்கிறது. மைக் மக்காராவின் மறைவிடத்தில், நிழல், போட்டோக்களைக் கண்டெடுத்த பின் படத்தில் வேகம் தொற்றிக் கொள்கிறது.

கதையின் ஒரு தருணத்தில் ரசிகர்கள் மர்ம முடிச்சை அவிழ்த்து விடுவதற்கு தோதாக ஒரு வாய்ப்பை வழங்குவார் இயக்குனர். ரசிகர்களும் நிழலைவிட வேகமாக தரவுகளைத் தொடர்புபடுத்தி மர்ம முடிச்சை தாங்கள் அவிழ்த்து விட்டதாக புளகாங்கிதம் அடைவார்கள். அவ்வகை ரசிகர்களிற்கு இறுதியாக பொலான்ஸ்கி வைக்கும் ஆப்பு. வெரி நைஸ் ஆப்பு.

இறுதிக் காட்சி வரை மர்மத்தை வெற்றிகரமாக எடுத்துச் செல்வதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர். இறுதிக் காட்சி கசப்பானாது. மனதைக் கனக்க செய்வது. உண்மைக்கு அருகில் அது ஏளனச் சிரிப்பைச் சிந்தியபடியே நிற்கிறது. The Ghost Writer திரைப்படம் நிதானமாக ரசிக்கபட்டு அதன் முழுச் சுவையுடன் சுவைக்கப்படவேண்டிய ஒரு சிறப்பான அரசியல் த்ரில்லர். [***]

ட்ரெயிலர்

28 comments:

  1. காதலரே, மீ த ஃபர்ஸ்ட்டு!

    பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

    ReplyDelete
  2. மூன்று நாட்களுக்கு முன்புதான் என்னுடைய சகோதரர் மூலம் இந்த படம் ரிலீஸ் ஆவதை தெரிந்து கொண்டேன். பின்னர் டிரைலர் பார்த்தேன். படம் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    படத்தின் நாவல் வடிவ கதையும் படத்தின் முடிவும் வேறுபட்டிருப்பதாக ஒரு தளத்தில் படித்தேன். உண்மையா?

    போலன்ஸ்கியின் ஆரம்ப கால படங்களின் ரசிகன் நான். குறிப்பாக அவரது அபார்ட்மென்ட் ட்ரிலஜி படங்கள்.

    ReplyDelete
  3. பிராஸ்னன் அவர்களை ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் இருந்து விலக்கி பார்க்கவே என்னால் முடிவதில்லை. அதனாலே அவரின் பல படங்களை என்னால் முழுவதுமாக ரசிக்க இயல்வதில்லை. (ஸ்டிரியோடைப்பிங்?). இந்த படமாவது வேறுபடுகிறதா என்று பார்க்கிறேன்.

    அடுத்த வாரம் சென்னையில் "வச்ச குறி தப்பாது மாமு".

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
  5. அருமையான விமர்சனம் நண்பரே. படத்தை கண்டிப்பாக பார்க்க தூண்டுகிறது இந்த விமர்சனம்.

    ReplyDelete
  6. காதலரே . . பியர்ஸ் ப்ராஸ்னனின் தீவிர விசிறி நான். அவரது பாண்ட் படங்களை விட, ராபின்ஸன் க்ரூசோ, டைலர் ஆஃப் பனாமா, மாடடர் போன்ற படங்களே எனக்குப் பிடிக்கும். அவரது ரெமிங்டன் ஸ்டீலின் ஆரம்ப கால ரசிகன் நான். . இந்தப் படத்தைப் பற்றி (வழக்கம்போல்) கேள்வியே படவில்லை. . லிஸ்டில் மற்றொரு படம் சேர்கிறது . . ;-)

    இவான் மெக்ரகாருக்குள் ஒரு கலைஞன் ஒளிந்திருப்பதைக் கண்டிருக்கிறேன் . .

    போலான்ஸ்கியை எனக்கு மிகவும் பிடிக்கும் (அட ! ஒரு விமர்சனம் எழுதக் கரு கிடைத்து விட்டது . . மூக்கில் குத்தப்பட்டு, மூக்குடைந்து போன ஜாக் நிகல்ஸனின் நினைவு வந்துவிட்டது. . பயங்கர வேலையின் காரணமாக எதுவும் எழுதாவிடினும், இப்பொழுது ஸ்க்வீஸ் செய்து, ஒரு படத்தைப் பற்றி எழுதப்போகிறேன்) . . . பின்னுங்கள் !!

    ReplyDelete
  7. எழுதியாயிற்று . . :-) மிக்க நன்றி. ஆனால், முழு மப்பில் நான் எழுதிய வெகு சில பதிவுகளில் இதுவும் ஒன்று . .நன்றாகத்தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். . :-)

    ReplyDelete
  8. கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.... என்னுடை லிஸ்டில் இதையும் செயிர்த்துககொள்கேரன்.....

    ReplyDelete
  9. நன்றி தோழா
    இந்த படத்தை வார இறுதியில் பார்த்துவிடுகிறேன்.

    படத்தின் போட்டோவில் தமிழில் எழுதி இருப்பது மிகவும் அழகாக உள்ளது.

    ReplyDelete
  10. நான் இந்த படத்தைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் எழுதி விட்டீர்கள். நல்ல பதிவு...

    ReplyDelete
  11. நண்பர் விஸ்வா, படத்தைப் பாருங்கள், புரொஸ்னான் பாத்திரம் உங்களிற்கு பிடிக்காமல் போனாலும் கூட படம் உங்களிற்கு பிடிக்கும். நாவலை நான் படிக்கவில்லை என்பதால் முடிவுகளை என்னால் ஒப்பிட முடியாது நண்பரே. முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி. ஒரு சந்தேகம், வெச்ச குறி தப்பாது மாமு என்பது இப்படத்தின் தமிழ் பெயரா?!!

    RDX அந்நியன் அவர்களே வாழ்த்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் ராமசாமி கண்ணன் அவர்களே உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், டைலர் ஆஃப் பனாமா, ரெமிங்டன் ஸ்டீல் எனக்கும் பிடிக்கும். உண்மையில் புரொஸ்னானின் சிறப்பான படங்கள் அவைதான் என்று நான் கருதுகிறேன். மப்பில் இவ்வளவு தெளிவாக எழுத முடிகிறதே உங்களால், எல்லாம் குத்தானந்தா ஜுவாமிகளின் நல்லாசிகள். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் ரமேஷ், உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் புதுவை சிவா, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் பிரசன்னா ராசன், தயங்காது இப்படம் குறித்து பதிவொன்றையிட்டு உங்கள் எண்ணங்களை நீங்கள் எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  12. //ஒரு சந்தேகம், வெச்ச குறி தப்பாது மாமு என்பது இப்படத்தின் தமிழ் பெயரா?!!//

    காதலரே,
    வச்சக குறி தப்பாது என்பது தமிழில் முப்பத்தி எட்டு ஆண்டுகள் கழித்து வரப்போகும் ஒரு கவ பாய் காவியத்தின் டீசர் விளம்பரம். அதனை அடுத்த வாரம் ஒரு சிறப்பு காட்சியாக கானவிருக்கிறேன்.

    இம்சை அரசன் படத்தினை இயக்கிய நண்பர் சிம்புதேவன் தான் இந்த படத்தின் இயக்குனரும் கூட. அதனால் எதிர்பார்ப்பு அதிகம்.

    ReplyDelete
  13. //ஒரு சந்தேகம், வெச்ச குறி தப்பாது மாமு என்பது இப்படத்தின் தமிழ் பெயரா?!!//

    இது போன்ற படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்படுவது மிகுந்த சிரமம் நண்பரே. மசாலா படங்களும், பெரிய பேனர் படங்களுமே டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகும் மார்க்கெட் இது. ஆகையால் கிளாஸ் படங்களுக்கு வாய்ப்புகள் குறைவு,Unless Otherwise அவை பெரிய நிறுவனங்களால் வெளியிடப்படவேண்டும்.

    ReplyDelete
  14. விஸ்வா, சந்தேகத்தை தீர்த்து வைத்த இளம் புயலே, வாழ்க நீங்கள் நீடுழி. உங்களிற்காக குத்தானந்தா ஜுவாமிகளின் - சாண்ட்விச் தியானம் ஒரு எளிய அறிமுகம்- டிவிடி விரைவில் அனுப்பி வைக்கப்படும். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. வெச்ச குறி தப்பாது இனிய அனுபவமாக உங்களிற்கு அமையட்டும்.

    ReplyDelete
  15. காதலரே,

    இன்றுதான் பல படங்களின் குறுந்தகடுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளேன். பல மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் படங்களை பார்க்க ஆரம்பித்துள்ளேன்.

    உங்களுக்கு சுவாமி கில்மானந்தா அவர்களின் அருளாசி இருக்கும்வரையில் என்ன பிரச்சினை?

    ReplyDelete
  16. விஸ்வா, உங்களிற்கு சற்று ஓய்வு கிடைத்திருக்கிறது என்றே எண்ணுகிறேன், படங்களை பார்த்து மகிழுங்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் Valhalla Rising என்ற படத்தை மட்டும் பார்த்து விடாதீர்கள். என்ன ஒரு சித்திரவதை. கில்மானந்தா ஜுவாமிகள், பேருந்தை ஊடுருவிச் செல்லும் செப்படி வித்தையை தன் பக்தகோடிகளிற்கு நிகழ்த்திக் காட்ட முயல்கையில் பேருந்தானது அவர் மேல் ஏறிச் சென்று விட்டது. இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

    ReplyDelete
  17. காதலரே,

    இந்த படங்களை நீங்கள் பார்த்தாயிற்றா? உங்களின் கருத்து என்ன?Armoured படத்திற்கு பின்னர் உங்களின் கருத்தை முன்கூட்டியே கேட்பது என்று தீர்மானித்து விட்டேன். Movies Planning to watch Tonight:

    Edge of Darkness - mel gibson

    Old Dogs - John Travolta & Robin Williams

    A Serious Man - My Fav - Coen Brothers.

    ReplyDelete
  18. The Taking of Pelham 1-2-3 என்ற படத்தை நான் சில வாரங்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இந்த வாரம்தான் அது தமிழில் ரிலீஸ் ஆகிறது. இரண்டு கேடிகள் என்ற பெயரில். அந்த படத்தை பார்த்தது விட்டீர்களா?

    ReplyDelete
  19. King Viswa said...

    The Taking of Pelham 1-2-3 என்ற படத்தை நான் சில வாரங்களுக்கு முன்பே பார்த்து விட்டேன். இந்த வாரம்தான் அது தமிழில் ரிலீஸ் ஆகிறது. இரண்டு கேடிகள் என்ற பெயரில். அந்த படத்தை பார்த்தது விட்டீர்களா?

    if u check torrent, u can get tamil version... it is released 2 months before in net.. i mean dubbed version.....

    ReplyDelete
  20. அப்புறம் சொல்ல மறந்துவிட்டேன்.... லக்கி லுக் இங்கிலீஷ் வெர்சன் pirate bay இல் இருக்கிறது......

    http://thepiratebay.org/search/Lucky.Luke.2009.DVDRip.XviD-RUBY/0/99/0

    ReplyDelete
  21. ரமேஷ்,

    தகவலுக்கு நன்றி. நான் இதுவரையில் கணினியில் தரவிறக்கி ஒரு படத்தை கூட பார்த்தது இல்லை, பார்க்கப்போவதும் இல்லை. அதனால் இந்த டாரண்ட் நமக்கு உதவாது. இருந்தாலும் கூட தனியே நான் ஆங்கில படங்களையும் நண்பர்களுடன் சென்றால் மட்டுமே டப்பிங் படங்களை பார்ப்பவன்.

    ReplyDelete
  22. லக்கிலூக் பட விவரங்கள் நண்பர்களுக்கு உதவும். நான் எப்போதுமே ஒரிஜினல் டிவிடி மூலம் பார்ப்பதை விரும்புகிறவன், அதில் படத்தை தவிர்த்து வரும் இதர விவரங்கள் Extra Features (Directors Cut, Deleted Scenes, Artist Interview etc) எனக்கு மிகவும் பிடித்தவை. அதுதான் காரணம்.

    ReplyDelete
  23. விஸ்வா, Edge of Darknessக்கு ஒரு ஸ்டார்தான் வழங்கியிருக்கிறேன். ஆம் பதிவு தயாராகி 3 வாரங்களாக தூங்கிக் கொண்டிருக்கிறது. A Serious Man மற்றவர்களிற்காக மாய்ந்து மாய்ந்து உழைத்து தன் வாழ்வை தொலைக்கும் ஒரு மனிதன் பற்றியது, அவன் பிரச்சினைகள் தீரப்போவதில்லை என்பதாக படம் நிறைவு பெறும்.வழமையான Coen பிராண்ட் நகைச்சுவையுடன் கதை பரிமாறப்படுகிறது. 0ld dogs திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. ஒரு இரவில் 3 திரைப்படங்கள் எனும் உங்கள் வேகம் மிரட்டுகிறது.

    நண்பர் ரமேஷ், தகவலிற்கும் சுட்டிக்கும் நன்றி.

    ReplyDelete
  24. நல்லா இருக்கு.சீக்கிரமே பாக்க ட்ரை பண்றேன் காதலரே.நம்ம பக்கமும் வந்து போங்க.

    ReplyDelete
  25. நண்பர் இலுமினாட்டி வருகைக்கு நன்றி. உங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  26. இது என்னோட முதல் ப்ளாக். சினிமா பற்றி. டைம் இருக்கப்போ படிச்சுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

    http://worldmoviesintamil.blogspot.com

    ReplyDelete
  27. அன்பு நண்பரே,

    இந்த விமர்சனத்திற்கு கிட்டதட்ட ஒருவருடம் கழித்துதான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. போலன்ஸ்கி-மீது எந்த குற்றச்சாட்டு இருந்தாலும் அவரின் திறமை சிறிதும் மங்கவில்லை என்பதற்கு இத்திரைப்படமே சாட்சி.

    முக்கிய ஐந்து பாத்திரங்களை வைத்துக் கொண்டு கதை சொல்லும் லாவகம், நடிகர்களின் திறமை (குறிப்பாக, பிராஸ்னன், கடைசி காட்சியில் விமானத்தில் இரு வரிசைகளை வைத்து, எந்த வரிசையை தேர்ந்தெடுப்பாய் என்ற குமுறல்). ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஒரு பிரதம மந்திரியை மையமாக வைத்து இது போன்ற படம் இங்கே வர வாய்ப்பே இல்லை. மனித உரிமை பற்றி இரு பக்கமும் எழுப்பும் கேள்விக்கு பதிலை நம்மையே தர சொல்லி முடித்திருக்கிறார்.

    இயற்கையை எப்போதுமே ஒரு பாத்திரமாக கருதும் இயக்குநர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் இது ஒரு பிரமாதமான திரைப்படம்.

    ReplyDelete
  28. ஜோஸ், மழையும் மழை சார்ந்த சூழலும் உவப்பான ஒன்று என்பதில் ஐயமில்லை. அது புயலாக மாறாத வரையில் :)) கலைத்திறமை என்பதும் சொந்த வாழ்வு என்பதும் வேறாக பார்க்கப்பட வேண்டியவை. அவர் இப்போது புதிய படத்திற்கான வேலைகளில் இறங்கி விட்டார். ஒரு வருடம் ஆன பின்பும் வந்து கருத்துப் பதிந்தீர்களே அதுவன்றோ பண்பு.. இப்பண்பின் முன்னால் திறமை எல்லாம் களையிழந்துவிடுகின்றன :)) நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete