Sunday, May 27, 2012

சாயம் போன கறுப்பு கோட்டு சூட்டு

தன் சகாவான ஏஜெண்ட் K ன் உயிரைக் காப்பாற்றவும், வேற்றுக்கிரக ஜீவன்களின் கொடுமையான ஆக்கிரமிப்பிலிருந்து இப்புண்ணிய பூமியைக் காப்பாற்றவும் விரும்பும் ஏஜெண்ட் J அதற்காக காலத்தில் பின்னோக்கி பயணிக்க வேண்டி இருக்கிறது......


ஏற்கனவே வந்த இரண்டு பாகங்களிலும் உருப்படியானது என ஒருவர் தெரிந்து எடுக்கக்கூடியது Men in Black ன் முதற் பாகமே. இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர்களிடம் துட்டு வாங்கிக் கொண்டபின்பாக சிறப்பானது எனச் சொல்லிக் கொள்ளலாம். தற்போது வெள்ளித்திரைகளை தம் கறுப்பு கோட்டு சூட்டு டை வெள்ளை சட்டை கூல் கண்ணாடி சகிதம் அலங்கரிக்கும் மூன்றாம் பாகம் மரணப்படுக்கையில் கிடந்த டாமி லீ ஜான்ஸை வற்புறுத்தலாக எழுப்பி மராதன் பந்தயத்தில் ஓடவிட்ட உணர்வை அளிக்கிறது. திரைப்படத்தில் டாமி லீ ஜான்ஸிற்கு வழங்கப்பட்டிருக்கும் முக அலங்காரமானது அவர் அழகை ஆறு அடி தூரத்திற்கு ஆழப்படுத்தியிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் ஏஜெண்டு J, 1969 களில் தன் பயணத்தை நிறுத்திக் கொள்கிறார். 1969 களில் கருப்பின மக்கள் மீது இருந்த எள்ளல் கலந்த பார்வையை திருத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கி தன் சாகசங்களை ஆரம்பிக்கும் J , அங்கு தன் சகாவான K ன் இளவடிவ பதிப்பை காண்கிறார். முதுவடிவ பதிப்பிற்கும், இளவடிவ பதிப்பிற்கும் உள்ள வித்தியாசங்களை J ரசித்து வியந்தவாறே தன் சகாவுடன் விசாரணைகளை தொடர்கிறார்... வழமை போலவே சிரிக்க இயலாத, சலிப்பூட்டும் காட்சி அமைப்புகள். அண்டி வொர்கோல் எனும் கலைஞரும் ஏஜெண்டுகளில் ஒருவர் என சிரிக்க வைக்க முயற்சித்து சீரழிவது எப்படி என இனி Barry Sonnenfield பாடம் எடுக்கலாம்.
இதுக்கு மேல நடிக்க முடியுமாலே......


டாமி லீ ஜான்ஸ் மிகவும் அயர்ச்சி அடைந்தவராக திரையில் காணப்படுகிறார். இது பாத்திரத்திற்குரிய குணாம்சமா அல்லது தொடர்ந்து தொடர்ந்து ஏஜென்ட் K ஆக கோட் சூட் அணிந்து சுற்ற வேண்டிய சலிப்பா என்பதுதான் புரியவில்லை. மனிதரிற்கு நல்ல வேளையாக திரைப்படத்தில் அதிக நேரம் அவர் திறமையைக் காட்ட வேண்டிய வாய்ப்பு தரப்படவில்லை என்பது புத்திசாலித்தனமான தீர்மானங்களில் ஒன்று. வழமையாக உற்சாகம் கொப்புளித்து ஒரு இடத்தில் நிற்க இயலாது ஓடி ஆடும் வில் ஸ்மித்திடமும் முன்பு இருந்த அந்த கவர்ச்சி இல்லை. அவரிடமிருந்த அந்த உற்சாகம் ஏதோ சில படிகள் குறைந்துவிட்ட நிலையில் அவர் காலம் விட்டு காலம் தாவித் திரிவதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் ஏஜெண்டு K ன் இளவடிவ பதிப்பாக வரும் நடிகர் ஜோஸ் ப்ரொலான் அருமையான தேர்வு. திரைப்படத்தின் ஆறுதலான அம்சம் அவரே.


படத்தின் வில்லன்களில் ஒருவர் இயக்குனர் என்றால் இன்னொருவர் பொரிஸ் த அனிமல் எனும் வேற்றுக்கிரக ஜீவன். இப்படி ஒரு சப்பை வில்லனை நகைச்சுவை படங்களில் கூட காண இயலாது. ஆரம்பத்தில் அவரை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் இயக்குனர் உருவாக்கியிருக்கும் பில்ட் அப்பிற்கு தண்டனையாக அவரை ஏதாவது சந்திரனின் சிறையில் ஆயுளிற்கும் அடைத்து வைக்கலாம்.


1960 கள் என்றவுடன் வேற்றுக் கிரக ஜீவன்களும் அக்காலத்திற்குரிய மோஸ்தரிலேயே உலா வருவது, மம்மி பிரெசிடெண்டு, ப்ளீஸ் சொல்லாமலேயே பாலைக் குடிச்சிட்டார் போன்ற வரிகள், தலைமையக திரையில் தோன்றும் லேடி காகா என நுண்ணங்கதங்கள் இருந்தாலும்கூட திரைப்படம் தரும் சலிப்பையும் அயர்ச்சியையும் அவற்றால் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை. உச்சக்கட்டக் காட்சியில் வெளிப்படுத்தப்படும் ஒரு உண்மை மனதை நெகிழச் செய்கிறது என்பதும் உண்மையே. ஆனால் இதை எவற்றை தாண்டியும் கிராபிக்ஸோ, ஸ்டண்டுகளோ, காட்சிப் புதுமைகளோ, நகைச்சுவையோ, நடிகர் திறமையோ என எதுவும் [ ப்ரொலானை தவிர்த்து] சிறப்பான ஒரு அனுபவத்தை வழங்கத் திணறி தோல்வி காண்கின்றன என்பதும் உண்மையே. சாயம் போய் வெளுக்க ஆரம்பித்திருக்கும் இந்தக் கறுப்பு கோட்டு சூட்டை தற்காலிகமாகவாவது ஒதுக்கி வைக்க வேண்டிய தருணமிது என்பதுகூட ஒரு உண்மைதான். [*]


ட்ரெய்லர்

Friday, May 18, 2012

ஒளிரும் நட்சத்திரங்களின் துன்ப வரி

கன்சாஸிலிருக்கும் விச்சிடா எனும் நகரிற்கு வேலை தேடி வருகிறான் இளைஞன் Nate Colton. நகரில் அவன் நுழைகையில் அவனை விசாரிக்கும் விச்சிட்டா நகரின் ஷெரீப்பான Sam Slade  விசாரிப்பின் பின்பாகஅவனிற்கு கன்ஸாஸ் சேமிப்பு வங்கியில் காவலனாக பணிபுரியும் வாய்ப்பை பெற்றுத் தருகிறான்.....

அட்டைப்படத்தில் வீற்றிருக்கும் இளைஞனான நேட் கால்ட்டனிற்கு ஒரு கை இல்லை. ஒற்றைக் கையால் மாத்திரமே துப்பாக்கியை இயக்க இயலுமான ஒரு இளைஞனிற்கு, அதிலும் அவன் குறிபார்த்து சுடும் திறனானது சுமாரான ஒன்று என்பதை சோதித்து தெரிந்து கொண்டபின்பாகவே அவனை கன்ஸாஸ் சேமிப்பு வங்கியில் பாதுகாவலானக வேலைக்கு அமர்த்த முன்னிற்கும் ஷெரீப் ஸாம் சிலேட்டின் மனதில் ஒரு திட்டம் உண்டு. துப்பாக்கியால் குறி தவறாது சுடும் தன் அபாரமான திறமையை ஷெரீப் ஸாம் சிலேட்டிடமிருந்து மறைத்து அவன் பெற்றுத்தரும் வங்கி காவல் வேலைக்கு செல்லும் நேட் மனதிலும் ஒரு திட்டம் உண்டு. நேட்டின் மனதின் ரகசிய சுழிகளில் மறைந்திருக்கும் அத்திட்டம் உருவானதற்கான மூல காரணங்கள் என்ன என்பதை அறிவதற்கு காலத்தில் பதினொரு வருடங்கள் பின்னோக்கி பயணித்து 1868 ன் ஜூலை மாதத்தில் Fort Laramie எனும் நகரிற்கு நாம் சென்றிட வேண்டும். அந்த சிரமத்தை எமக்கு தந்திட விரும்பாத Western கதையின் கதாசிரியரான ஜான் வான் ஹாம், தன் கதையின் முதல் பக்கத்தை ஃபோர்ட் லராமியிலிருந்தே ஆரம்பிக்கிறார்.

wes1வெஸ்டெர்ன் கதையின் கதைகூறியாக அக்கதையின் பிரதான பாத்திரமான நேட் கோல்ட்டனே இருக்கிறான். அவன் குரலிலேயே கதையானது சித்திரப் பக்கங்களில் விபரிக்கப்படுகிறது. ஆரம்பம் முதலே நேட்டின் குரலில் கலந்திருக்கும் அந்த ஈரமான வேதனை, வரிகளின் மீதான நகர்வுகளுடன் மனதை ஈரலிப்பாக்க ஆரம்பிக்கின்றது. கதையின் தொனி எவ்வாறானதாக இருக்ககூடும் என்பதை அவன் குரல் ஒரு ஒலி இழந்த கட்டியம்போல் படிப்பவன் மனதில் ஒலிக்கச் செய்கிறது. செவ்விந்தியர்களால் கடத்தி செல்லப்பட்ட தன் சகோதரனின் மகனை மீட்ட ஒரு மனிதனை சந்திப்பதற்காக ஃபோர்ட் லராமி செல்லும் வசதி படைத்த ஒரு பண்ணை உரிமையாளனாக கதையில் அறிமுகமாகிறான் அம்ப்ரோஸியஸ் வான் டீர். அவனுடன் கூடவே பயணிக்கிறாள் அவன் மகளான கேத்தி.

அம்ப்ரோஸியஸ் மனதில் ஒரு திட்டம் உண்டு. அம்ப்ரோஸியஸின் சகோதரனின் மகனை செவ்விந்தியர்களிடமிருந்து மீட்டெடுத்த மனிதன் மனதிலும் ஒரு திட்டம் உண்டு. இவ்வாறாக கதையின் ஆரம்பத்திலும் சரி, பதினொரு வருடங்களின் பின்பாக நேட் கோல்ட்டன் விச்சிட்டாவிற்கு வந்து சேர்கையிலும் சரி மனிதர்களின் மனங்களில் புதைந்திருக்கும் திட்டங்களின் ரகசியங்கள் தரும் மர்மத்தின் தடங்களில் தன் கதையை சலிப்பில்லாது நடத்தி செல்கிறார் ஜான் வான் ஹாம்.

1868 ன் கோடையில் ஃபோர்ட் லராமியில் நிகழும் சில எதிர்பாரா நிகழ்வுகளே பதினொரு வருடங்கள் ஓடியபின்பாக நேட் கோல்ட்டனை விச்சிட்டாவிற்கு அழைத்து வருகின்றன. இந்த பதினொரு வருட காலத்தின் விபரிப்பை ஆரம்ப பக்கங்களில் இருந்து எதிர்பாராமை அளிக்கும் வியப்பின் சுவையோடும், ஏமாற்றங்களும், தோல்விகளும், குற்றவுணர்வுகளும் அளிக்கும் மென்சோகத்தின் வலியோடும் கதையில் கொணர்கிறார் கதாசிரியர். இக்கால இடைவெளியில் நேட்டின் வாழ்க்கையை பருவகால மாற்றங்களோடும், அவன் கடந்து வரும் நிலப்பரப்புக்களோடும் சோகத்தின் மூச்சோடு கரைய விட்டிருக்கிறார் வான் ஹாம் எனலாம். தோல்விகளும், ஏமாற்றங்களும், கைவிடப்படுதல்களும் தன் வாழ்க்கையில் சகஜமாகிப் போன அம்சங்கள் என்பதை நேட்டின் குரல் அவன் கடந்து வரும் பெருமேற்கின் பரந்த வெளிகளுனூடு சொல்லிக் கொண்டே தேய்கிறது.

விச்சிட்டாவில் தன் மனதில் உள்ள திட்டத்தை செயற்படுத்தும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறான் நேட் கோல்ட்டன். அந்நாள் வங்கிக் கொள்ளையர் வடிவில் அவனை தேடி வந்து சேர்கிறது. நாள் ஒன்றிற்கு ஐந்து டாலர்களிற்காவும், மூன்று வேளை உணவிற்காகவும் தம் உயிரைப் பணயம் வைக்கத் தயங்காத வங்கிக் காவலர்கள் குறித்த ஒரு மெலிதான பார்வையை கதையின் இப்பகுதியில் ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும். வங்கிக் கொள்ளை முயற்சியை முறியடித்தால் கிடைக்கக்கூடிய மேலதிக சன்மானம் வங்கிக் காவலர்களின் இன்பக் கனவு. கன்ஸாஸ் வங்கிக் கொள்ளை முயற்சி எதிர்பார்த்திராத ஒரு திருப்பத்தை எட்ட, விச்சிட்டாவில் பிரபலமான ஒருவனாக உருவாகிறான் நேட் கோல்ட்டன். அவன் வங்கிக் கணக்கின் வைப்புத் தொகையானது நீள்கொம்பன்கள்போல் கொழுக்க ஆரம்பிக்கிறது. இருப்பினும் ஷெரீப் சிலேட், அக்கால மேற்கின் யதார்த்தத்தை நேட்டிற்கு விளக்குகிறான். நேட்டை விச்சிட்டா நகரை விட்டு விரைவில் விலகிச் செல்ல கேட்டுக் கொள்கிறான் ஷெரீப் சிலேட். சட்டத்தின் காவலர்கள் சிலர் தமது சுயலாபத்திற்காக சமூகவிரோதிகளுடன் இணைந்து செயற்படுவது என்பது சாகசக் கதைகளில் தீமையின் பக்கத்தின் பலத்தை சட்டத்தின் துணைகொண்டு பலப்படுத்துவது போன்ற ஒரு நிலையை உருவாக்கும் அந்த நிலையை ஜான் வான் ஹாம் இங்கு உருவாக்கி வைக்கிறார்.

சிலேட்டின் தொடர்ச்சியான வற்புறுத்தல்களால் விச்சிட்டா நகரை விட்டு விலகிச் செல்லும் நேட் கோல்ட்டன், அங்கிருந்து சற்று தொலைவில் இருக்கும் பண்ணை ஒன்றில் கால்நடை பாதுகாவலனாக வேலைக்கு சேர்ந்து கொள்கிறான். கால்நடை பண்ணையில் கால்நடை பாதுகாவலர்கள், கவ்பாய்கள், பண்ணை எடுபிடிகள் எனும் தொழில்ரீதியான அதிகார அடுக்கை ஒரு சில வரிகளில் கதை விளக்குகிறது. கால்நடை பாதுகாவலர்கள் கல்நெஞ்சம் கொண்ட கொலைஞர்கள் எனும் கருத்தே பண்ணையில் பணிபுரிபவர்கள் மனதில் பதிந்திருக்கிறது. கடும் குளிரிலும், பனியிலும், இரவு பகல் என வேறுபாடின்றி ஒரு நாள் ஓய்வுடன் பணியாற்ற வேண்டிய கட்டாயம் கால்நடை காவலர்களின் விதி. கால்நடை திருடர்கள் குறித்த சட்டங்கள் எளிதானது. யாராக இருந்தாலும் தயங்காது சுடலாம், கொல்லலாம் என்பதே அது. நேட் கோல்ட்டன் தன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய முனைப்பில் வேதனையுடன் சில உயிர்பலிகளை நிகழ்த்துவதாக கதையில் கூறப்படுகிறது. மனிதர்களை கொல்ல அவன் விரும்புவதில்லை என்பதை கதாசிரியர் இங்கு காட்ட விழைகிறார். கதையின் மிக அருமையான கதை சொல்லல் இப்பகுதியில்தான் இடம்பெறுகிறது என்பது என் கருத்து. தக்க தருணம் ஒன்றிற்காக பண்ணையில் காத்திருக்கும் நேட் கோல்ட்டன் அத்தருணம் வாய்க்கையில் தன் திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தவும் ஆரம்பிக்கிறான்.

ஆனால் திட்டம் என்பது என்றும் வெற்றியில்தான் நிறைவுற்றிட வேண்டும் என்பது ஒரு கட்டாயம் அல்ல என்பதை வான் ஹாம் தன் வழமையான கதைகளில் இருந்து இங்கு வேறுபடுத்திக் காட்ட முனைகிறார். ஆனால் நேட்டின் திட்டம் என்ன என்பது கதையில் புலனாக ஆரம்பிக்கும் தருணங்கள் சிறிய ஏமாற்றத்தை தரக்கூடியதாகவே இருக்கின்றன. இவ்வகையான திட்டங்களை தேர்ந்த வாசகன் ஒருவன் அது இட்டு வரக்கூடிய முடிவுடன் முன்கூட்டியே ஊகித்துவிட முடியும் என்பது இக்கதையின் பலவீனமான ஒரு அம்சமாகும். இருப்பினும் ஜான் வான் ஹாமின் பலவீனத்தை சரியாக்குவதற்கு என உருவாக்கப்பட்டவை போல இருக்கிறது ஒவியக் கலைஞர் ரொஸின்ஸ்கியின் அபாரமான தூரிகைச் சித்திரங்கள். கதைசொல்லலானது தனது ஆன்மாவை இழக்கும் வேளைகளில் எல்லாம் கதையை தாங்கிக் கொண்டு அதற்கு மேலதிக ஆன்மாவாக செயல்படுகின்றன ரொஸின்ஸ்கியின் சித்திரங்கள். இக்கதைக்கு ரொஸின்ஸ்கி தேர்வு செய்திருக்கும் வண்ணத்தேர்வு தனித்துவமான ஒன்று. நேட் கோல்டின் வாழ்கை இலையுதிர்கால காடு ஒன்றின் உதிர்தல் வாசனையை தன்னுள் கொண்டிருப்பதை போலவே ரொஸின்ஸ்கியின் ஓவியங்களும் நேட் கோல்டின் வாழ்க்கையின் வண்ணத்தை சித்திரங்கள் வழி சிறப்பாக உணர வைத்திருக்கின்றன. ஐந்து அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் இக்கதையின் அத்தியாயங்களை எல்லைப்படுத்த உபயோகிக்கப்பட்டிருக்கும் ரொஸின்ஸ்கியின் தூரிகை ஓவியங்களின் அழகு அசர வைக்கிறது. ரொஸின்கியின் திறமை இங்கு ஜான் வான் ஹாமை காப்பாற்றியிருக்கிறது என ஒருவர் கூறினால் அது ஒரு மிகையான கூற்றே அல்ல.

கதையில் குறிப்பிட்டு சொல்லியாக வேண்டிய பாத்திரம் ஷெரீப் சிலேட். சிலேட் எவ்வகையான ஒரு கொடூரன் என்பதை அறிய கதையின் இறுதிப்பக்கத்தின் இறுதிக் கட்டம்வரை ஒருவர் சென்றாக வேண்டும். ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாத ஒரு அபாயமான விஷ ஜந்துபோல கதையில் சித்தரிக்கப்படுகிறான் சிலேட். வஞ்சம் என்பதன் அர்த்தம் எத்தகையது என்பதை அவன் வழியாக இங்கு வாசகர்கள் அறிந்து கொள்ளவியலும்.

தான் உண்மையில் அடைய விரும்புவது என்ன என்பதை நேட் கோல்ட்டன் உணர்ந்து கொள்ளும் சமயம், அது குறித்த அவன் உணர்வுகள் கதையில் ஆழமாகப் பதிவுசெய்யப்படவில்லை. இதனாலேயே அது குறித்த அவன் இழப்புக்களும் அதிக பாதிப்புக்களை வாசக மனங்களில் உண்டாக்க தவறிவிடுகிறது. கதையின் நீளம் போதாமையும் இதற்கான காரணங்களில் ஒன்றாக இங்கு இருப்பதை நான் சுட்டிக் காட்டியாக வேண்டும். நேட் கோல்ட்டன் தனக்குரித்தான எதையுமே தனதாக்கி கொள்வதில்லை, அவன் காதலும் சரி பெண்கள் ஸ்பரிசம் மீது அவன் கொண்ட உணர்வும் சரி குதிரைகளின் காலடிகளில் மிதிபட்டுப் போய்விடுகிறது. வானத்தில் ஒளிரும் நட்சத்திரங்களின் உள்ளத்தில் நேட் கோல்ட்டனின் வாழ்க்கை ஒரு துன்பமிகு வரியாக மறைந்திருக்ககூடும்.


Thursday, May 17, 2012

சிலுவை சுமக்கும் சிறுவர்கள்

தன் பெற்றோர்களின் அகால மரணத்தின் பின்பாக சூவீடனின் கரையோரச் சிற்றூரான Fjallbacka எனும் தன் பிறந்த ஊரிற்கு திரும்பி வருகிறாள் எரிக்கா. பெற்றோர்களின் இழப்பு தந்த வேதனை ஆறாத நிலையில், பனிக்காலத்தின் கடும் குளிரினூடு சுயசரிதை நூல் ஒன்றை எழுத முயற்சித்து கொண்டிருக்கும் எரிக்காவை அவள் முன்னாள் தோழியான அலெக்ஸாண்ட்ராவின் மரணம் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது......

ஸ்கண்டினேவிய குற்றப்புனை எழுத்துக்கள், அவை விபரிக்க வரும் குற்றங்களை சற்றுத் தாண்டிச் சென்று அக்குற்றங்கள் நிகழும் சமூகம், சூழல், காலநிலை, கதைமாந்தர்கள், அவர்களின் வாழ்வாதரப் பிரச்சினைகள், உளவியல் என மேலும் பல விடயங்களையும் தம் கதைக்களத்தில் ஆழமாக வேர் ஓட விட்டிருக்கும் பண்பை கொண்டவைகளாகவே இருக்கின்றன. சூவீடனைச் சேர்ந்த கதாசிரியையான Camilla Lackberg அவர்களின் Ice Princess எனும் நாவலும் இப்பண்புகளை உள்ளடக்கிய ஒரு படைப்பாகவே இருக்கிறது. கதையின் முதல் மரணமானது அறிமுகமாகும் முன்பாகவே அம்மரணம் நிகழும் ஊர் குறித்த ஒரு சுருக்கமான பார்வையை தன் வரிகளில் கொணர்ந்துவிடுகிறது நாவல்.

மங்கலான சாம்பலங்கி அணிந்த வானம் எங்கே!
சூவீடனின் மேற்கு கரையோர ஊரான Fjallbacka பராம்பரியமாக மீன் பிடித்தலை பிரதான தொழிலாக கொண்டிருந்த ஒரு ஊராகவே இருந்து வந்திருக்கிறது. குளிர் அந்த ஊருடன் இணைந்த ஒரு அம்சம். வானம் மங்கலான சாம்பல் அங்கியை அணிந்து நிற்கும் நாட்கள் அங்கு ஏராளம். இங்கு Eilert Berg எனும் ஓய்வு பெற்ற மீனவன் வழியாக வசதியற்ற மீனவர்களின் வாழ்க்கையின் இன்றைய நிலையை கோடிட்டுக் காட்டுகிறார் கதாசிரியை. காலம் காலமாக கடினமாக உழைத்தாலும்கூட அவர்களிற்கு கிடைக்கும் ஓய்வூதியமானது ஜீவனம் நடத்த போதுமான ஒன்றாக இருப்பதில்லை எனும் சோகத்தை சுட்டிக் காட்டியபடியே, மீனவத் தொழிலை மட்டும் தனியே செய்வதன் மூலம் இன்றைய காலத்தில் வாழ்க்கையை கொண்டு செல்ல இயலாத நிலையில் வருந்தும் ஊரவர்களின் உள்மனத்தையும் கதை தன் வரிகளில் மெலிதாக விபரிக்கிறது. படிப்படியாக மீனவத் தொழில் ஒடுங்கி, மீனவர்களின் பழமை வாய்ந்த இல்லங்கள் வசதி படைத்த நகரத்தவர்கள் வசம் வந்து சேரும் மென்சோகத்தையும், தனது நிஜ அடையாளத்தை மெல்ல மெல்ல இழக்கும் Fjallbacka படிப்படியாக வசதி படைத்தவர்களின் வசந்தகால உல்லாச ஸ்தலமாக புது அடையாளம் பெறுவதையும், காலகாலமாக அங்கு வாழ்ந்திருந்த மீனவக் குடும்பங்கள் வேறிடங்கள் நோக்கி செல்வதையும் எரிக்கா எனும் பிராதன பாத்திரத்தின் ஏக்கம் கலந்த பார்வையுடன் கூறுகிறது நாவலின் ஆரம்ப பக்கங்கள். இங்கு கதாசிரியை கமிலா லாக்பெர்க் அவர்களின் சொந்த ஊரும் Fjallbacka என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும். தன் கண்கள் முன் நிகழ்ந்தேறிய மாற்றங்களை கதைமாந்தர்களின் உணர்வுகள் வழி கதையின் வரிகளில் இங்கு நழுவச் செய்கிறார் கமிலா லாக்பெர்க். Fjallbacka ஊரவர்கள் பழமைவாதிகள் என்பதையும், அங்கு நிலவும் வர்க்க வேறுபாடுகளையும், புதிய தலைமுறைக்கும் அதன் முன்னையதற்கும் இடையிலுள்ள இடைவெளியையும், வித்தியாசங்களையும் நாவல் தன் கதையோட்டத்துடன் முன்வைத்திட தவறவில்லை.

எரிக்காவின் முன்னாள் நண்பியான அலெக்ஸ்ஸாண்ட்ராவின் மரணம் முதலில் தற்கொலை என்றே கருதப்படுகிறது. வம்பு பேசுவதில் ஆர்வமுள்ள ஊரவர்கள் இது குறித்து ஆர்வமாக பேசிக் கொள்கிறார்கள். அலெக்ஸின் மரணம் தற்கொலை அல்ல அது ஒரு கொலை என்பது ஊர்ஜிதமாகும் நிலையில் சிறிய குற்றச் செயல்களிற்கு பழக்கப்பட்டிருந்த Fjallbacka ஊர் சற்று பரபரப்பானதாகவே ஆகிவிடுகிறது. ஊர் மட்டுமல்ல அப்பகுதி காவல் நிலையமும் தன் வழமையான வேகத்தை விடுத்து புது வேகம் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது. ஒரு சிற்றூரின் காவல்நிலையத்தின் மெத்தனப் போக்கை கிண்டலுடன் கதை வாசகர்களிடம் இங்கு எடுத்து வருகிறது.

அலெக்ஸின் மரணத்தின் பின்பாக, எரிக்கா பல வருடங்களிற்கு முன்பாக அவளுடன் கொண்ட நட்பும், அந்த நட்பின் முறிவால் அவள் அடைந்த வேதனையான அனுபவங்களும் கதையில் இடம்பிடிக்கின்றன. தன் பெற்றோர்களின் மரணத்தை எரிக்கா ஏற்றுக் கொள்ளும் விதம், குறித்த கெடுவிற்குள் சுயசரிதை நூலை எழுதி முடிக்க இயலாமை தரும் அழுத்தங்கள், தன் சகோதரியான ஆனாவுடனான உறவில் ஏற்பட ஆரம்பிக்கும் விரிசல், பிரம்மச்சாரியாக தன் வாழ்கையை தனியே முடிக்க வேண்டுமா என எரிக்கா கொள்ளும் நியாயமான அச்சம் என அவளை சுற்றி கதை தன்னைப் பின்னிக் கொள்கிறது. இவை யாவற்றிலுமிருந்து தப்பிச் செல்லும் வழியாகவே அலெக்ஸின் மரணத்தின் பின்பாகவுள்ள சில ரகசியங்களை அறிந்து கொள்வதற்கு தைரியமாக தேடல்களில் இறங்குகிறாள் எரிக்கா. அலெக்ஸ் குறித்த ஒரு நாவலை எழுத வேண்டும் எனும் ஒரு சுயநலம் இதில் அடங்கியிருந்தாலும் தன் செயல்கள் குறித்து அதிகம் சுயவிசாரணை செய்து இது தவறு, இது நியாயமானது என தீர்வு காணும் ஒரு பாத்திரமாகவே எரிக்கா நாவலில் காணப்படுகிறாள். முப்பதுகளின் மத்தியில் உள்ள ஒரு பிரம்மச்சாரி பெண்ணின் ஏக்கங்களை நாவல் எங்கும் அள்ளி வீசியிருக்கிறார் கமிலா லாக்பெர்க். ஒரு பெண்ணால் அழகாக ஒரு பெண்ணின் ஏக்கங்களையும், அவள் மனக்கோலங்களின் ரகசிய குரலையும் எளிதாக எழுதிவிட முடிகிறது என்பது உண்மைதான்.

ஒருவர் மீது நாம் கொண்டுள்ள அபிப்பிராயமானது நிரூபிக்கப்படும் தகவல்கள் மேல் கட்டப்படும் ஒன்றாகும். அலெக்ஸின் மரணத்தின் பின்பாக விசாரணைகளின் வழியாக வெளிவரும் தகவல்கள் அவள் உறவுகள் உருவாக்கி வைத்திருந்த அலெக்ஸின் அழகான பிம்பத்தை உடைக்க ஆரம்பிக்கின்றன. தனது செயல்கள் வழி சுதந்திரமான ஒரு பெண்ணாக இருந்திட்ட அலெக்ஸ், அச்சுதந்திரத்தின் வழியே தன் அன்பான உறவுகளையும் கண்ணீர் சிந்த வைக்கிறாள். அலெக்ஸின் கணவனான ஹெண்ட்ரிக் சிந்தும் கண்ணீர் உண்மையில் வேதனையானது. மனைவிக்கு துரோகம் இழைக்கும் கணவன், கணவனிற்கு தூரோகம் இழைக்கும் மனைவி என இரு பக்கத்தையும் சமமாக காட்ட கமிலா லாக்பெர்க் முயன்றாலும் கதையின் ஓட்டத்தில் ஆண்கள் மோசமானவர்களாக சித்தரிக்கப்படுவதை தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. சில ஆண்களின் பாத்திரத்தை பெண்கள் மெச்சத்தகும் விதமாக கமிலா உருவாக்கினாலும்கூட மொத்த வாசிப்பில் ஆண்கள் மீதே எதிர்மறையான ஒரு நிழல் வந்து வீழ்கிறது. கமிலா லாக்பெர்க் பெண் வாசகிகளை குறி வைத்து எழுதினாரா இல்லை சுவீடிய சமூகத்தில் ஆண்கள் மோசமானவர்களாகவே இருக்கிறார்களா என்பதுதான் இங்கு எழும் கேள்வி. ஆக உலகம் முழுக்க ஆண் சமூகமே மோசமான ஒன்றுதான் என பெண்கள் தீர்மானம் எடுத்தால் அதில் கமிலா லாக்பெர்க்கின் பங்கும் சிறிது உண்டு என்பதை அவரிற்கு நான் நேரடியாக எடுத்து சொல்ல விரும்புகிறேன் [ பார்க்க போட்டோ]

பெண்கள் மீதான ஆண்களின் வன்முறைக்கு எடுத்துக்காட்டாக நாவலில் உருவாக்கப்பட்டிருக்கும் பாத்திரம் எரிக்காவின் தங்கையான ஆனா. தொடர்ச்சியான வன்முறைக்கு அவள் கணவனால் உள்ளாக்கப்படும் ஆனா, அவ்வன்முறையை வலிகொண்ட மெளனத்துடன் சகித்து கொண்டு தன் கணவன் லூக்காஸின் மனம் கோணாதபடி நடந்து கொள்ள சிரத்தையுடன் செயல்படும் ஒரு பெண். மேலும் தன் இரு குழந்தைகள் மற்றும் குடும்பக் கடமைகள் யாவற்றையும் தானே தனியே சுமந்திடும் ஒரு பரிதாபமான மனைவி மற்றும் தாய். பெண்கள் மீதான காரணமற்ற வன்முறையின் மொத்த வடிவமாக லூக்காஸ் பாத்திரம் திகழ்கிறது. அதே போலவே வன்முறை என்பதன் இலக்கு எக்கணத்திலும் எதன்மீதும் தாவலாம் என்பதையும் லூக்காஸ் பாத்திரம் மூலம் வாசகர்களிடம் எடுத்து வருகிறார் கதாசிரியை. வன்முறை செய்யும் ஆண்களுடன் இணைந்து இருக்காதீர்கள் என உரத்த குரலில் கமிலா நாவலில் செய்யும் பிரச்சாரம் சூவீடியப் பெண்களிற்கு மட்டுமல்ல உலகெங்கும் அவர் நாவல் மொழிபெயர்க்கப்பட்ட தேசங்களில் உள்ள பெண்களிடமெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பது மறுக்க இயலாத ஒன்று.

பெற்றோர்களிற்கும் பிள்ளைகளிற்குமிடையிலான உறவு என்பதும் கமிலா லாக்பெர்க் தன் நாவலில் ஆழமாக சித்தரித்திருக்கும் மற்றுமொரு அம்சமாகும். நாவலில் பெரும்பாலான பாத்திரங்கள் அவர்களின் பெற்றோர்களுடன் சுமூகமான உறவைக் கொண்டிருப்பதில்லை. எரிக்கா, அலெக்ஸின் தங்கையாக அறிமுகமாகும் யூலியா, மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப்போன ஓவியனான நீல்ஸ், Fjallbacka ன் வசதி படைத்த குடும்பத்தில் அங்கம் வகிக்கும் ஜான் ஆகிய பாத்திரங்கள் தம் பெற்றோர்களை வெறுப்பதற்கு தகுந்த காரணங்களை தம் வாழ்க்கையில் கொண்டிருக்கவே செய்கின்றன. இந்த வெறுப்பை இத்தருணத்தில் கமிலா லாக்பெர்க் தன் நாவலின் மிக முக்கியமான ஒரு விடயமாக காட்ட விரும்பிய சிறுவர் மீதான வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்துடன் தொடர்புபடுத்தி பார்த்துக் கொள்ளலாம். எவ்வாறு சில தலைமுறை இடைவெளிக்குள் சிறுவர்கள் மீது ஒழுக்கத்திற்காக பிரயோகிக்கப்பட்ட தண்டனைகள் இன்று சாடிஸமாக கருதப்படக்கூடிய அளவு மனித குலம் தன் கண்களை திறந்திருக்கிறது என்பதை தெளிவாக்குகிறார் கமிலா லாக்பெர்க். எம் பள்ளிகளில் பரீட்சைகளில் புள்ளி குறைந்தால்கூட எம்மைக் கண்டபடி போட்டுத்தாக்கிய ஆசிரியர்கள் சாடிஸ்ட்களா இல்லை குருக்களா எனும் கேள்வி இங்கு எழாமலில்லை. வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சிறார்கள் தம் வாழ்வில் சுமந்து வரும் சிலுவைகளின் பாரம் எத்தகையதாக இருக்ககூடும் என்பதை கதாசிரியை நாவலில் சிறப்பாக கொண்டு வருகிறார். வன்முறைக்குள்ளான சிறுவர்கள் அதே வன்முறையின் வடிவாகவும் அவதாரம் கொள்வதையும் உறைய வைக்கும் விதத்தில் நாவலில் காட்டுகிறார் அவர். தம் குடும்பத்தின் நலன் எனும் பெயரால் தம் குழந்தைகளின் வாழ்க்கையை அழித்துவிடும் பெற்றோர்களையே கமிலா லாக்பெர்க் இங்கு பிரதான குற்றவாளிகளாக காட்ட விழைகிறார். அதனாலேயே நாவலின் மர்ம முடிச்சுக்கள் சிலவற்றை வாசகன் ஒருவனால் முன்னமே ஊகிக்க கூடியதாக இருந்தாலும் கதை சலிப்பில்லாது நகர முடிகிறது. அது மட்டுமல்லாது வாசகனை ஒரு மர்மத்தை சரியாக ஊகிக்க வைப்பதன் மூலம் மிக முக்கியமான ஒரு மர்மத்தை சிறப்பாக நாவலின் இறுதித் தருணம் வரை வாசகர்களிடமிருந்து மறைத்து விடுகிறார் கமிலா.

சில வாசகர்களின் கனிவான பார்வைக்காக
அலெக்ஸின் கொலை விசாரணையை எடுத்து செல்லும் ஒரு காவல் அதிகாரியாக நாவலில் பற்ரிக் இருக்கிறான். எரிக்காவும், பற்ரிக்கும் காதல் கொள்ள ஆரம்பிக்கும் தருணங்கள் அவர்கள் வயதிற்குரிய பதட்டங்களுடன் சிறப்பாக சொல்லப்படுகிறது. எரிக்கா தான் அறியும் தகவல்களை பற்ரிக்குடன் பரிமாறிக் கொள்கிறாள். பற்ரிக், தன் பிரியமானவளுடன் கொலை குறித்த தன் விசாரணை விபரங்களை பகிர்ந்து கொள்கிறான். இந்த ஜோடிகளின் உறவுதான் அலெக்ஸ் கொலை மர்மம் விடுபட முக்கியமான ஒரு காரணியாக கதையில் காணப்படுகிறது. பற்ரிக் பணிபுரியும் காவல் நிலையம் வழியாக சுவீடிய காவல்துறையில் காணப்படும் எதேச்சதிகாரம், சோம்பல்தனம், ஆட்பற்றாக்குறை, போதிய சம்பளமின்மை எனும் விடயங்கள் நகைச்சுவையுடன் அலசப்படுகின்றன. கொலை விசாரணையை விட நாவலில் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் விதமும், அப்பாத்திரங்களை தன் எழுத்துக்களால் படிப்பவர்களை நெருங்க வைத்துவிடும் திறனும் கமிலா லாக்பெர்க் நாவலின் மிக முக்கியமான அம்சமாகும். கதையில் வரும் ஒரு சிறிய பாத்திரமாக இருந்தால்கூட ஒரு ஒரு சில வரிகளில் அப்பாத்திரத்தின் வாழ்க்கையை கூறி வாசகனை நெகிழவோ, அதிரவோ வைத்துவிடுகிறார் கமிலா. ஒரு கொலை ஸ்தலத்தின் குரூரத்தை நம்பவியலா அழகியலுடன் எடுத்து வருவது அவரின் எழுத்துக்களின் சிறப்பம்சம் எனலாம். கதைசொல்லலானது பாத்திரம் விட்டு பாத்திரம் தாவி முன்னகர்ந்து செல்லும் விதமும் இந்நாவலில் நன்றாக வந்திருக்கிறது. Fjallbacka ல் நிலவும் காலநிலையை கதை நெடுகிலும் அழகாக வர்ணித்து கதை நிகழும் ஸ்தலத்தில் இருப்பதுபோல உணரச் செய்கின்றன கமிலாவின் எழுத்துக்கள். காலநிலையுடன் சம்பந்தம் கொண்ட ஒரு விடயமே கதையின் மிக முக்கியமான ஒரு திருப்பத்தை எடுத்து வருவதாக இருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மிக மென்மையான வார்த்தைகளை கோர்த்து, அழகு செறிந்த எளிமையான கதை சொல்லலால் கமிலா லாக்பெர்க் வழங்கியிருக்கும் இந்நாவல் கொலை ஒன்று பரபரப்பான விசாரணையாலும் அதிரடியான நடவடிக்கைகளாலும் நாயகத்தனங்களாலும் அணுகப்படும் வழமையான முறையை வேறுபடுத்திக் காட்டுவதில் அருமையான வெற்றி பெறுகிறது.

Sunday, May 13, 2012

இருண்ட நிழல்கள்

அஞ்செலிக்கா எனும் சூன்யக்காரியின் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பார்னபாஸ் காலின்ஸ், சூன்யக்காரியின் சாபத்தினாலும், சதியாலும் ஒரு ரத்தக் காட்டேரியாக மாற்றம் பெற்று ஊர் மக்களால் உயிருடன் புதைக்கப்படுகிறான்.. ஏறக்குறைய இருநூறு வருடங்களிற்கு பின் தன் சிறையிலிருந்து விடுதலை பெறும் பார்னபாஸ், தான் ஒரு புதிய யுகத்தில் இருப்பதையும் தன் சந்ததிகள் அவர்களின் முன்னைய செல்வாக்கை கொடிய சூன்யக்காரியான அஞ்செலிக்காவிடம் இழந்து விட்டிருப்பதையும் கண்டு கொள்கிறான். இழந்த தன் காலின்ஸ் குடும்ப கவுரவத்தையும், செல்வத்தையும் மீட்டெடுக்கும் முடிவிற்கும் பார்னபாஸ் வருகிறான்.....

மீண்டும் பர்ட்டன், டெப் கூட்டணி, நகைச்சுவை அதிகம் இழையோடிய ட்ரெய்லர், போதாக்குறைக்கு காட்டேரி, அதுவும் டெப் காட்டேரி! டிம் பர்ட்டனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் Dark Shadows திரைப்படத்திற்கான என் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் இந்த வரிகளில் அடங்கிவிட்டது என்றால் அதை யார்தான் நம்பப் போகிறீர்கள். கூடவே அழகான செக்ஸியான திரண்ட பல செளந்தர்ய லாவண்யங்களை கொண்ட சுந்தரி Eva Green ஐயும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது என் எதிர்பார்ப்புகள் எல்லாம் இந்த வரிகளிற்குள் அடங்கி விட்டிருக்கும்.

படத்தின் ஆரம்பகாட்சிகள் எவ்வாறு காலின்ஸ் குடும்பம் அமெரிக்காவில் குடியேறி ஒரு செல்வாக்கான நிலையை எட்டியது என்பதையும், அவர்களின் வாரிசான பார்னபாஸ் காலின்ஸ் மேல் காதல் கொண்ட ஒரு சூன்யக்காரி எவ்வாறு அக்குடும்பத்தை நாசம் செய்கிறாள் என்பதையும் சில நிமிடங்களில் திரையில் காட்சிகளாக விரிக்கிறது. வழமை போலவே பர்டனிற்கு இஷ்டமான, இலைகளை தொலைத்த மரங்கள் தங்கள் கிளைகளை சுருள் கரங்களாக சுருட்டிக் கொண்டு இருளான ஒளிப்பதிவில் புகாருடன் ரசிகர்களை மிரட்ட முயற்சிக்க ட்ராகுலா இசை பயத்தை கடல் அலைகளின் நுரைக்குமிழிகளில் கரைக்கிறது. அடடா என்ன ஒரு விருந்துக்கு வந்து விட்டோம் என எம் மனம் உவகையில் புரள ஆரம்பிக்கிறது.

இருநூறு ஆண்டுகள் கழித்து காலின்ஸ் குடும்பம் பார்வையாளர்களிற்கு அறிமுகமாகும் போதும் ஒவ்வொரு பாத்திரங்களினதும் அறிமுகம் அப்பாத்திரங்கள் மீதான ஆர்வத்தை உருக்கொள்ள செய்கிறது. 1972 களில் சற்று வசதியற்ற ஒரு செல்வந்த குடும்பத்தை ஒரு தூசு பிடித்த மாடமாளிகையில் அவர்களின் குடும்ப செருக்கு குறையாத நிலையில் காட்சிப்படுத்துகிறார் டிம் பர்ட்டன். மிக நீண்ட நாட்களிற்கு பின்பாக திரையில் காட்சிக்கு வரும் முன்னாள் பிரபல நடிகை மிச்செல் பெய்ஃபெர் காலின்ஸ் குடும்பத்தின் தலைவியாக அறிமுகமாகிறார். மிகவும் எதிர்பார்க்க செய்த பாத்திரம் அவருடையது. அதற்கேற்ப ஆரம்ப காட்சிகளில் சிறப்பாகவும் செய்திருக்கிறார் நடிகை மிச்செல் பெய்ஃபெர். மர்மமான பின்னணியுடன் காலின்ஸ் வீட்டிற்கு பணிபுரிய வரும் பெண்ணான விக்டோரியா, தன் தாயின் ஆவியுடன் உரையாடுபவன் என்பதால் கிறுக்கனாக கருதப்படும் சிறுவன் டேவிட், அவனை குணமாக்க வந்து பின் காலின்ஸ் மாளிகையிலேயே தங்கிவிடும் மருத்துவரும் மதுப்பிரியருமான ஜூலியா என ஆர்வத்தை மிக கண்டிப்பாக தூண்டும் பாத்திரங்கள் எண்ணிக்கை திரைப்படத்தின் ஆரம்பத்தில் குறைவே இல்லாத அம்சங்கள்.

போஸ்டு போட்டவன போட்டு தள்ளிடனும்!!!
இது போதாது என்று தன் பிரேதப் பெட்டி சிறையிலிருந்து விடுதலை பெற்று புதிய உலகிற்குள் வரும் காட்டேரி பார்னபாஸ்!! விடுதலை பெற்ற வேகத்தில் விடுதலை செய்தவர்களை ஒன்றுவிடாது உறிஞ்சிதள்ளிவிட்டு மனிதர் தன் வழமையான பாணியில் கலக்க ஆரம்பிப்பார். அவரிற்கேயுரிய அந்தச் செல்ல நடையுடன் கையில் கோலுடன் தார் வீதியில் அவர் நடைபழகும் அழகே அழகு. விளம்பரம் செய்ய பணமும் தந்து அதற்கு பதிலாக செம கிண்டலை வாங்கும் நற்குணம் McDonalds க்கு உள்ளது என்பதை பர்ட்டன் நிரூபித்திருக்கிறார். டெப் மக்டோனால்ட்டின் M ஐ பார்த்து சொல்லும் ஒரு சொல் போதும் அது எவ்வகையான நகைச்சுவை என்பதை விளங்கி கொள்ள.

ஒரு புதிய யுகத்தில், தன்னைப் பொருத்திக் கொள்ள இயலா ஒரு சமூகத்தில் தன் குடும்பத்தை மீண்டும் செல்வாக்கான நிலைக்கு இட்டு வரும் போராட்டத்தில் சவாலுடன் குதிக்கும் பார்னாபாஸ் ரசிகர்கள் ஆர்வத்தில் அவல் போடுகிறார். அவர் காலின்ஸ் குடும்பத்தில் வந்து அறிமுகம் செய்து கொள்ளும் காட்சிகளும் அதைப் பின் தொடரும் காட்சிகளும் சிரிக்கவே வைக்கின்றன. பார்னபாஸின் விடுதலையை அறியும் சூன்யக்காரி அஞ்செலிக்காவும் பார்னபாஸை வந்து சந்தித்து மோதலா காதலா என முட்டிப் பார்க்கையிலும் இன்னொரு பிடி அவல் வந்து விழுகிறது. ஆனால், ஆனால்,....... துரதிஷ்ர்ட வசமாக இந்த அவல்களுடன் மட்டுமே எல்லாம் நிறைவு பெற்று விடுகிறது.

மிகையான எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தொடரும் காட்சிகள் வழியே சுக்கு நூறாக்கப்படுகின்றன . ஆரம்பத்தில் சிரிக்க வைத்த காட்சிகளில் சிரித்த ரசிகர்கள் சலிப்பின் எல்லைக்கு செல்லும் வகையில் இருக்கிறது தொடரும் காட்சிகள். பார்னபாஸ் முடங்கிய தன் குடும்ப வியாபாரத்தை ஆரம்பிப்பது ஆகட்டும், மனிதனாக ஆகிட டாக்டர் ஜூலியாவின் துணையுடன் முயற்சிப்பது ஆகட்டும், சூன்யக்காரியுடன் சல்லாபமாடி தன் குடும்பத்தை காப்பாற்ற முயற்சிப்பதாகட்டும் எதுவுமே முன்பு உருவாக்கப்பட்ட ஆர்வத்திற்கு தீனி போடவில்லை. அதுவும் டாக்டர் ஜூலியாவாக வீணடிக்கப்பட்டிருப்பவர் நடிகை ஹெலனா பொன்ஹாம் கார்ட்டர். பர்ட்டன் இதிலுமா உங்கள் நகைச்சுவையை நீங்கள் காட்ட வேண்டும். ஆரம்பக் காட்சிகளில் மப்புக் குலையா மயக்கத்துடன் அமைப்பற்ற உடலுடன் ஹெலனா உணவருந்தும் மேசைக்கு வந்தமரும் காட்சியில் இருந்த நளினம் அழகு எல்லாம் பின்னால் பணால் பணால். போதாக் குறைக்கு தொப்பியும் குளிர்கண்ணாடியும் அணிந்த பார்னபாஸ் தூரத்தில் இருந்து பார்க்கையில் மைக்கேல் ஜாக்சன் போல் இருக்கிறார்.

கதை உருவாக்கத்தில் பங்கேற்பு, திரைக்கதை ஆகியன செத் கிராஹாம் க்ரீன் என திரையில் வீழ்ந்தபோது, அடடா இவர் அதற்குள் இப்படி வளர்ந்து விட்டாரே என ஆச்சர்யம் உருவானது. ஆனால் மனிதர் கதையையும், திரைக்கதையையும் சொதப்பி பாத்திரங்களை வீணடித்து அவர்களின் மதிப்புக்களை இழக்க வைத்து அவர்களை ஏறக்குறைய பிணங்கள் போல் ஆக்கி விடுகிறார். தாடி வெச்ச டேஞ்சர் மாமா நாவலை எழுதிய புண்யவான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். பார்னபாஸின் காதல், சவால், குடும்பம் என அனைத்துமே பிச்சைப்பாத்திரத்தில் கடைசியாக வந்து சேரும் தானங்கள் போல் ஒரு நிலையை எட்டி விடுவது பரிதாபமான ஒன்று.

எவா க்ரீனையாவது எதையாவது காட்ட விட்டார்களா என்றால் அதுவும் இல்லை!!! எவா அழகான சூன்யக்காரி, செக்ஸி பேபி ஒத்துக் கொள்கிறேன் அதற்காக திரைப்படம் நெடுகிலும் அவர் கண்களை மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருக்க முடியுமா என்ன. அதிலும் காட்டேரிக்கும், சூன்யக்காரிக்கும் இடையில் வரும் சல்லாபக் காட்சியை IKEA உரிமையாளர் மட்டுமே ரசிக்க முடியும். அவ்வளவு தளபாட சேதம். அதில் சிருங்காரமும் இல்லை, நகைச்சுவையும் இல்லை.

வழமையாக தான் இயக்கும் படங்களில் ஒரு சிறப்பான அழகியலை தக்க வைத்துக் கொள்வார் பர்ட்டன். இதில் அதுவும் இல்லை. 1972 களில் இத்திரைப்படம் வெளிவந்திருந்தால் ரசிகர்கள் சுமாராக ரசித்திருக்ககூடிய வகையில் அமைந்திருக்கின்றன இத்திரைப்படத்தின் வரைகலைநுட்ப காட்சிகள். இறுதியில் கதை இயக்கம் நடிப்பு என எல்லாம் போய் வரைகலைக்கு பின்னால் ஒளிந்து கொள்கின்றன. டிம் பர்ட்டன் இயக்கியதா இப்படம் எனும் கேள்வி எழுவதை தடுக்கவே இயலவில்லை. போதாக்குறைக்கு படத்தின் இறுதியில் ஒரு தூண்டில் திருப்பம் வேறு. சிக்கல் என்னவெனில் தூண்டில் இரையுடன் வீழ்ந்திருக்க வேண்டிய இடத்தில் பர்ட்டனின் திரைப்படம் வீழ்ந்துவிட்டது என்பதுதான். டிம் பர்டன் மோசமான திரைப்படங்களை தந்திருக்கலாம் இருப்பினும் டெப்பும் அவரும் இணைந்த இத்திரைப்படம் இவ்வளவு மோசமான ஒரு அனுபவமாக அமையும் என எந்த இருளின் நிழலும் வெளிச்சம் போட்டுக் காட்டினாலும் ஏற்றுக் கொண்டிருக்கவே செய்யாது. திரையரங்கை விட்டு பல இருண்ட நிழல்கள் வெளியேறின என்பது ஒரு மிகையான கூற்றே அல்ல!! [*]

காப்பிரைட்.... இலுமி [ தாடி வெச்ச டேஞ்சர் மாமா]


ட்ரெய்லர்