Saturday, March 28, 2015

இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்

வாழ்க்கையின் ஒரு தருணத்தில் தன்னை தாயுடன் தனியே விட்டு சென்றுவிட்ட ஒரு தந்தை மீது அன்புடன் இருக்க ஒரு மகனிடம் என்ன காரணம் இருக்க முடியும். தந்தையின் நிழலையும், அவரளித்த அவமானங்களையும் விலத்தி நின்று தனியே போராடி முன்னேறி செல்ல துடிக்கும் ஒரு மகன் தன் தந்தையை தன் வாழ்வின் எல்லைக்குள் வராது விடச்செய்வதில் என்ன தவறு இருக்க முடியும். குற்றவாளி அமைப்பு ஒன்றின் தலைவனின் விசுவாசமான முன்னாள் அடியாளான தன் தந்தையை பற்றி எண்ணிட அந்த மகனிடம் கசப்பேறிக் காய்ந்த நினைவுகளை தவிர என்னதான் இருக்க முடியும். ஆனால் ஒரு இரவு முடிவதற்குள் அவன் உள்ளம் தன் தந்தையின் இருளான நிழலிற்கு இடமளிக்குமா. தந்தை, மகன், குடும்பம், உறவுகள், நட்பு, விசுவாசம் என்பவற்றினூடாக உணர்சிகரமாகவும், மிக வேகமாகவும் நகர்கிறது இயக்குனர் Jaume Collet - Serra  இயக்கியிருக்கும் Run All Night திரைப்படம்.

ஷான் எனும் குற்றக்குழு தலைவனின் முன்னாள் தளபதி ஜிம்மி. இன்று தன் கடந்தகாலத்தின் இருளான நினைவுகளை மறப்பதற்காக மதுவில் ஆழ்கிறான். இன்றைய தலைமுறையின் நகைப்பின் உச்சப்பொருளாகிறான். அவனது வாழ்க்கை என்பது அர்த்தம் அற்ற ஒன்றாக அவன் பறித்த உயிர்கள் கேட்கும் கனவுக்கேள்விகளால் சூழப்பட்டு இருக்கிறது. தன் தலைவனான ஷானிடம் அவன் கொண்டிருக்கும் விசுவாசம் அபாரமானது. கடந்தகாலத்தில் அவன் அதற்காக  சென்ற எல்லைகள் இன்றும் அவனை அவன் உறவுகள் அஞ்ச வைப்பதாகவே இருக்கிறது. ஷானின் மதுவிடுதியில் குடித்துவிட்டு மயங்கி விழுந்து எழுந்து சூடாக்கி ஒன்றை வாங்குவதற்காக கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடம் போட்டு சொதப்பும் பரிதாபமானவனாக ஜிம்மி பாத்திரத்தில் லியம் நீசன் அறிமுகம் ஆகும்போதே அவரின் பண்பட்ட நடிப்பு ஆக்கிரமிப்பை செலுத்த ஆரம்பித்து விடுகிறது. அந்த ஆக்கிரமிப்பிற்கு எதிரடியாக அலட்டாமல் தன் நடிப்பை வழங்கும் எட் ஹாரிஸும் ஷான் வேடத்தில் இலகுவாக பொருந்திக் கொள்கிறார்.

நட்பும், விசுவாசமும் உதிர்ந்து செல்லக்கூடிய எல்லை என ஒன்று உண்டாஎன ஜிம்மி அறியும் வேளையும் வருகிறது. அந்த தருணமே ஜிம்மி உண்மையிலேயே எப்படியான ஒரு தந்தை என்பதை சொல்ல ஆரம்பிக்கிறது. துரதிர்ஷ்டவசமான ஒரு நிகழ்வால் ஷானின் மகனை ஜிம்மி தன் மகனான மைக்கேலை காப்பாற்றுவதற்காக கொல்ல நேரிடுகிறது. அதிலிருந்து ஆரம்பிக்கும் ஓட்டம் ரசிகர்களை உணர்ச்சிகரமான மென் திருப்பங்களோடு மனதை நெகிழ வைக்கும் ஒரு முடிவை நோக்கி படு வேகமான கதையுடனும், வன்முறை தெறிக்கும் நிகழ்வுகளுடனும், அழுத்தமும், பதட்டமும், வேகமும், திகிலும் குறையாது அழைத்து செல்கிறது. காவல்துறை, அடியாள் கூட்டம், தொழில்முறைக் கொலைஞன் என தன்னாலான அனைத்து அழிவு சக்திகளையும் ஷான் ஜிம்மியின் மகனை ஒரு இரவு முடிவதற்குள் முடிப்பதற்கு ஏவ அவற்றை எவ்வாறு ஜிம்மி எதிர் கொள்கிறான் என்பது மிகச் சாதரணமான ஒரு கதையே ஆனால் அதை இயக்குனர் திரையில் தந்திருக்கும் விதமே அந்த நிகழ்வுகளின் பின்னான அழுத்தத்தை ரசிகர்களிடம் சிறப்பாக கடத்தி இவ்வகையான ஆக்சன்கள் இன்றும் சிறப்பான ஒரு திரையனுபவத்தை தரமுடியும் என்பதை நிரூபிக்கிறது. ஷானுக்கும், ஜிம்மிக்கும் இடையிலான அந்த உச்சக் கட்டம் கண்ணியம் தவறாத ஒரு அஸ்தமனம் போல அழகானது. அரவணைப்பும், விசுவாசமும் சிலரிற்கிடையே மரணத்திலும் புது அழகாக உருப்பெறுகிறது போலும். தன்னை வெறுக்கும், தன் குழந்தைகளை கூட தன் தந்தையிடம் அறிமுகப்படுத்த விரும்பாத ஒரு மகனிடம் தந்தை எனும் இடத்தை பெறுவதற்காக குற்றவாளியான அவன் தந்தை செய்ய வேண்டியது எல்லாம் அவனும் தன்னை போல ஆகவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் அல்லவா. அதைவிட சிறப்பாக அந்த தந்தை என்னதான் தன் மகனிற்கு இந்த குரூரமான சமூகத்தில் தந்துவிட முடியும்.

சில உறவுகளின் இடைவெளிகளில் பேசப்படாத வார்த்தைகள் துளிகளாக நிரம்பிக் கொண்டே இருக்கின்றன. துளிகள் நிரம்பி வழியும் தருணத்தில் குரல் ஏதுமின்றி தன்னை அக்கறை எனும் அடையாளமாக காட்டி செல்கிறது பாசம். அது சொற்களால் ஆனது அல்ல செயல்களால் ஆனது. அந்தப் புரிதலில் மலர்வது மனதில் இறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்.

Sunday, March 22, 2015

ஆந்தைகளின் இரவு

ஒருவன் தன் வாழிடம் குறித்து தனக்கு அனைத்தும் தெரியும் எனும் நம்பிக்கையை கொண்டிருக்கலாம். அதன் இண்டு இடுக்குகள் அனைத்திலும் தான் அறியாத எதுவுமே இல்லை எனும் எண்ணம் கொண்டவனாக இருக்கலாம். அங்கு வாழ்பவர்கள் மீதும் அவர்களின் வாழ்க்கைநிலை மீதும் அக்கறை கொள்பவனாக இருக்கலாம். அந்த வாழ்க்கைநிலையை மேம்படுத்த புதிய திட்டங்களை முன்னெடுத்து செல்பவனாக இருக்கலாம். அந்த வாழிடத்தின் காவலனாகவும், நீதியின் மேகவொளிச்சித்திரமாகவும் அவன் தன்னை நிலைநிறுத்தி இருக்கலாம். ஆனால் இவை யாவுமே கேள்விக்குறியாகி நிற்கும் தருணம் எப்போதாவது வருவதுண்டு. செல்வந்தன் ப்ருஸ் வெய்னிற்கு மரணதண்டனையை ஆந்தைகள் அவை வழங்கும் தருணமே அது.

கோத்தம் நகரின் முன்னேற்றத்திற்கான புது திட்டங்களை ப்ரூஸ் வெய்ன் முன்னெடுக்கையில் கிடைக்கும் இந்த தகவல் பேட்மேனை விசாரணை களத்தில் இறக்குகிறது. புதிய ஒரு துவக்கத்தை ஆரம்பிக்கும் பேட்மேன் கதைவரிசைகளில் பேட்மேனிற்கு உக்கிரமான சவாலாக ஆந்தைகள் அவை எனும் ரகசிய அமைப்பையும் அறிமுகம் செய்கிறது. கதையின் ஆரம்பமே அர்க்ஹாம் மனநல காப்பகத்தில் பேட்மேனும் ஜோக்கரும் ஒரே அணியாக இனைந்து நின்று எதிரிகளை துவம்சம் செய்வதாக ஒரு காட்சியை அமைத்திருக்கிறார் கதாசிரியர் Scott Snyder. மிக ஆச்சர்யம் தரும் காட்சி உருவாக்கம் அது. அதன் பின்பாகவுள்ள மர்மம் தெரியவரும்போது பேட்மேன் கதைகளில் அறிவியல் நுட்பங்களும் காலத்திற்கேற்ப தம்மை மாற்றிக் கொள்கின்றன என்பதும் கதைக்களங்களும், பாத்திரங்களின் மனநிலைகளும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதும் தெளிவாகிறது.

முதல் பாகமான Court of Owls ஆரம்பத்தில் மட்டுமல்லாது கதை நெடுகிலும் ஆச்சர்யங்களை கதாசிரியர் தந்து செல்கிறார். இலகுவில் முறியடிக்கப்படமுடியாத பேட்மேனை ஆந்தைகள் அவை புதிர்ச்சுழலில் சிக்கவைத்து மனப்பிறழ்வு எய்ய செய்யும் நிலைவரை கொண்டு செல்வதோடு மட்டுமல்லாது, தன் நகரென பேட்மேன் எண்ணியிருந்த கோதத்தை தம் லாசரஸ் குழந்தைகளான ஏவலர்கள் துணையுடன் தமதாக்கி கொள்ளும் திட்டத்தை அவர்கள் செயற்படுத்தும்வரை கதையின் முதல்பாகம் மெதுவாக நகர்ந்தாலும் அதில் இருக்கும் நவீனமும், மர்மமும் கதையை விறுவிறுபாக்குகிறது. ஆந்தைகள் குறித்த தொன்ம நம்பிக்கைகள் கதையில் அதிகம் ஆந்தைகள் அவையின் இயல்பை தெளிவாக்க கையாளப்பட்டிருக்கும்விதம் சிறப்பாக இருக்கிறது. வவ்வால்களிற்கும், ஆந்தைகளிற்கும் இடையில் முன்னொரு காலத்தில் வெய்ன் மாளிகையில் இடம்பெற்ற போட்டியின் முடிவையே உபகதையாக கதாசிரியர் ஒரு முக்கிய தருணம்வரை கொண்டு சென்று உக்கிரமாக முடிப்பது ஆக்சன் கதை பிரியர்களை முழுமையாக நிறைவடையச் செய்யும்.

அதிகாரமும், பலமும், செல்வாக்கும், செல்வமும் நிறைந்த ஆந்தைகள் அவைதான் ப்ரூஸ் வெய்னின் முன்னைய தலைமுறை உறுப்பினர் சிலரின் அழிவிற்கு காரணம் எனும் கருத்தை கதையில் முன்வைக்கிறார் கதாசிரியர் ஸ்காட் ஸ்னைடர். கதையின் இரண்டாம் பாகத்தில் தனியாக கூறப்பட்டு இருக்கும் ஆல்பிரட்டின் தந்தையான ஜார்விஸ் பெனிவொர்த்தின் கதை அதை உறுதிப்படுத்துவதாக இருப்பதோடு மட்டுமல்லாது, ஆல்ஃபிரட்டின் தந்தையின் இறப்பிற்கும் காரணம் என ஆந்தைகள் அவையையே சுட்டுகிறது. இக்கதையை போன்றே மிஸ்டர் ப்ரீஸின் கடந்த காலத்தை நோக்கி சென்று மிஸ்டர் ப்ரீஸின் அன்னையுடனான அவனின் உறவைச் சொல்லும் மனதை நெகிழச்செய்யும் கதை ஒன்றும் உண்டு. இக்கதைகள் இரண்டும் ஆந்தைகள் அவையின் ஆதிக்க நீட்சியை விபரிப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் கதைகள் ஆகும்.

ஆந்தைகள் அவை கோத்தம் நகரை தமதாக்க அறிவியல்நுட்பங்களை பயன்படுத்தி Talons எனும் வீரர் குழுவை உருவாக்குகிறார்கள் ஆனால் அவர்கள் எதிர்பாராத திருப்பம் ஒன்று கதையில் உண்டு. பேட்மேனிற்கு சகலவகையிலும் சவாலாக அமையும் அந்த திருப்பம் அருமையான ஒன்று. கதையின் இரண்டாம் பாகமான Night of Owls வேகமும் விறுவிறுப்பும் திருப்பங்களிற்கும் பஞ்சமில்லாத ஒன்று. முதல் பாகம் மெதுவாக நகர்ந்தது எனும் எண்ணத்தை இப்பாகம் இல்லாது ஆக்கி கதையை முழுமையாக்கும். கதையின் முடிவானது ஆந்தைகள் அவை மீண்டும் வரும் என்பதை மறைமுகமாக சொல்லி கோதத்தை அவற்றின் உகிர்களின் பிடியிலிருந்து விடுவித்து பேட்மேனின் கரங்களில் அளித்து நிறைவடைகிறது. ஸ்னைடர் மற்றும் சில கதாசிரியர்களின் சலிக்க வைக்காத திருப்பங்கள் நிறைந்த கதை சொல்லலும், அசத்தலான சித்திரங்களிற்கு பொறுப்பான Greg Capullo வின் திறமையும் பேட்மேன் கதை வரிசைகளில் இவ்விரு தொகுப்புகளையும் குறிப்பிடத்தக்கவையாக சொல்ல வைக்கின்றன.