Thursday, March 26, 2009

தேளினும் இனியவன்

வணக்கம் அன்பு நண்பர்களே, கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு நன்றி. பதிவுகள் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களிற்கான என் பதில் கருத்துக்களை நீங்கள் அப்பதிவுகளின் கருத்துப்பெட்டிகளில் காணலாம். வழமை போன்றே முதலில் காமிக்ஸ் வலைப்பூ உலாவை ஆரம்பிக்கலாம்.
அறுந்த நரம்புகள் எனும் ஒர் மென்மையான, மனதை நெகிழ வைக்கும் கதையினை முழுமையான காமிக்ஸ் வடிவத்தில் வழங்கியிருக்கிறார் நண்பர் புலா சுலாகி. தமிழில் காமிக்ஸ்கள் சரியான கால இடைவேளையில் வருவதில்லை எனும் குறையை நீக்கியவர். புலா சுலாகி காமிக்ஸ் என்றுதான் அவர் வலைப்பூவை நான் அழைக்க விரும்புகிறேன்.
சுஸ்கி-விஸ்கி எனப்படும் மினிலயன் நாயகர்களைப் பற்றிய ஒர் திரைப்படத்தினை பதிவாக்கியுள்ளார் காகொககூ அன்பர். தன் வழமையான பாணிக்கு திரும்பி, பதிவின் லே அவுட்டையும் சிறப்பாக கவனமெடுத்து செய்திருக்கிறார்.
பூங்காவனம் தன் பிரம்மாக்களைப் பற்றி ஒர் பதிவை இட்டிருக்கிறார். ஆனால் அவர் யாரோ ஒர் டாக்டரின் புதிய டூ வீலரில் சுற்றுவதாக ஒர் வதந்தி உலவுகிறது.
இளைய தளபதி விஸ்வா பரபரப்பான காமிக்ஸ் செய்திகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதில் ராட்சத ஸ்பெசல் செப்டெம்பர் மாதம் வெளிவரும் எனும் தகவல் நம்பிக்கை அளிக்கிறது.
மெழுகு பொம்மைச் சிற்பியான தூஸாட் அம்மணியைப் பற்றி வெளிவந்துள்ள இரண்டு காமிக்ஸ் புத்தகங்களை, சிறப்பான பாணியில் பதிவாக தந்திருக்கிறார் ரகசிய உளவாளி ரஃபிக். அவர் வலைப்பூவில், மாற்றம் என்பதே நிரந்தரம். நாளிற்கு நாள் மெருகு ஏறிக் கொண்டே போகிறது.


கடந்த இரு வாரங்களிற்கு முன்பாக வாட்ச்மேன் படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. Zack Snyder நாவலிற்கு விசுவாசமாக ஒர் படத்தினை தந்துள்ளார் என்பது உண்மை, ஆனால் அலன் மூரின் நாவல் தந்த அந்த பரவச அனுபவத்தை, திரைப்படம் எனக்கு வழங்கவில்லை. வன்முறைக் காட்சிகளில் மிகையான செறிவு எனக்கு அனாவசியாமாகப் பட்டது. ரோர்ஷாக் பாத்திரம் அதற்குரிய முக்கியத்துவம் நீக்கப்பட்டு, இரவு ஆந்தையும், டாக்.மான்ஹாட்டனும் படத்தினை ஆக்கிரமித்ததாகவே நான் கருதுகிறேன். குறிப்பாக காணாமல் போன சிறுமியை ரோர்ஷாக் தேடிச்செல்லும் தருணத்தை மூரும், கிப்பொன்ஸும் ஒர் வன்முறைக் கவிதையாக தந்திருப்பார்கள், ஏன் ரோர்ஷாக் வாழ்க்கையையே அவர்கள் அப்படித்தான் உருவாக்கியிருப்பார்கள். திரையில் அது வெறும் வன்முறைச் சக்கையாகவே எனக்குப் பட்டது. நாவலைப் படிக்காதவர்கள் Snyderஐ பாராட்டினால் அது அவரின் வெற்றி. நாவலைப் படித்தவர்கள் படத்தினை சிலாகிக்காவிடில் அது அவரின் தோல்வியல்ல, மூரின் நாவல் அவரிற்கு தந்த பெருமை அது. இனி ஸ்கார்பியனின் கதைக்குள் நுழைவோம்.

18ம் நூற்றாண்டு ரோம் நகரம். தன் துறவி வீரர்களுடன் மத குரு ஒருவனை தேடி வருகிறான் கர்தினால் (CARDINAL) TREBALDI.விசுவாசிகள், தங்கள் பாவமன்னிப்பின் போது கூறிய ஒர் விடயத்தை பற்றி குருவிடம்வினவுகிறான் கர்தினால் TREBALDI. முதலில் ரகசியத்தை கூற மறுக்கும் குருவானவர், வற்புறுத்தல்களின் பின் தான் பாவ மன்னிப்பில் கேட்டதை கூறி விடுகிறார்.

சூன்யக்காரி ஒருவள், இறவனிற்கு தன்னை அர்ப்பணித்து, விசுவாசத்தில் வாழ்ந்த துறவி ஒருவனை மயக்கி அவனுடன் உறவு கொண்டாள், இக் கொடுமையான பாவத்தின்!! வழியாக அவளிற்கு ஒர் குழந்தை பிறந்தது. அச் சிசுவின் வலது பக்க தோளில் தேள் போன்ற ஒர் அடையாளம் அது ஜனிக்கும் போதே இருந்தது. தேள், உலகத்தின் பாவங்களின் தலைவனான சாத்தான் வதியும் நரகத்தின் அடையாளம். அக்குழந்தை இப்போது வளர்ந்து இளைஞனாக வலம் வருகிறான் என கூறி முடிக்கிறான் துறவி. அன்று அந்த ஆலயத்தை, அம்மத குருவின் குருதி கழுவியது.

SCORPION கண்டுபிடித்து அவனைக் கொன்று விடும்படி, MEJAI என அழைக்கப்படும் எகிப்து நாட்டு ஜித்தான் ஒருத்திக்கு உத்தரவிடுகிறான் TREBALDI. MEJAI, விஷத்திரவியங்களையும், விஷம் ஊறிய ஆயுதங்களை கொண்டும் ஆட்களின் கதைகளை முடிப்பதில் கைதேர்ந்தவள். அவளை நன்கு கூர்ந்து கவனித்தால், அவள் கண்களைவிட கொடிய விஷம் உலகத்தில் இல்லை என்பதனை அறிந்து கொள்ளலாம். அவள் SCORPION தேடும் வேட்டையை தொடங்குகிறாள்.

SCORPIONன் தாயார், திருச்சபையால் சூனியக்காரி எனக் குற்றம் சாட்டப்பட்டு உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டு மரணமானவள். SCORPION கடவுளையோ, ரோமன் திருச்சபையையோ நம்பாதவன், வாள் சண்டைக்கலையில் வித்தகன், கலை நயம் மிக்க பொருட்களின் காதலன், புனிதர்களின் சமாதிகளை உடைத்து, அவர்களின் எலும்புகளை கவர்ந்து, கவர்ந்த எலும்புகளை செல்வந்தக் குடும்பங்களிடம் விற்று பணம் சம்பாதிக்கிறான். வாழ்வை எவ்வித கட்டுப்பாடுமின்றி, மதத்தின் சட்டங்களிற்கு அடிபணியாது கேளிக்கையும், கும்மாளமுமாக வாழ்கிறான். அவன் வாழ்க்கையை வாழ கடவுள் சில நேரங்களில் இஷ்டப்படலாம்.மதுச்சாலைப் பெண்கள் அவனுடன் ஒர் இரவினைக் கழித்திட தங்களிற்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறான ஒர் இரவில், பெண் ஒருத்தியுடன் இரவினை விடியாமல் தடுக்க செல்லும் SCORPION மறைந்திருந்து தாக்குகிறாள் MEJAI. ஆனால் அவள் வைத்த குறி தப்பி விட, அவளுடன் மோதி தன்னைக் கொல்ல ஏவிய நபர் யார் என்பதை அறிந்து கொள்கிறான் SCORPION.

இதற்கிடையில், ஒன்பது பிரபலமான குடும்பங்களை சேர்ந்த நபர்களை, ஒர் ரசியக்கூட்டத்திற்கு வரும்படி சொல்லி, தன் துறவி வீரர்கள் மூலம் அக் குடும்பங்களிற்கு தகவல் அனுப்பி விட்டு, தன் துறவி வீரர்கள் புடைசூழ, அந்த ரகசிய இடத்திற்கு பயணமாகிறான் TREBALDI.

TREBALDI தேடி பாப்பாண்டவரின் மாளிகைக்குள் நுழைந்து அங்குள்ள காவல் வீரர்களோடு மோதும் SCORPION, இறுதியில் TREBALDIன் காரியதரிசி மூலமாக அவன் சென்ற இடத்தினைப் பற்றி அறிந்து கொள்கிறான். அந்த ரகசிய இடத்தை நோக்கி தானும் செல்கிறான்.


TREBALDIயும், அவன் தகவல்சொல்லி அனுப்பிய 9 குடும்பத்தினரும் அந்த ரகசிய இடத்தில் கூடுகிறார்கள். இவ்விடத்தை மறைவாக அணுகும் SCORPION விஷக்கத்தியால் தாக்கி அவனை மரணத்தினை நோக்கி வழிய விட்டு விட்டு, தன் சன்மானத்தினைப் பெற்றுக் கொண்டு சென்று விடுகிறாள் MEJAI. ஒன்பது குடும்பங்களை சேர்ந்தவர்கள் மத்தியில், தனது திட்டத்தினையும், பயங்கரமான சதி ஒன்றைப்பற்றியும் விளக்க ஆரம்பிக்கிறான் கர்தினால் TREBALDI.

SCORPION, TREBALDI கொல்லத் துடித்தது ஏன்? உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் SCORPIONன் கதி என்னாயிற்று? TREBALDI பின்னும் அப் பயங்கரமான சதி என்ன? போன்ற கேள்விகளிற்கு விறுவிறுப்பாக பதில் தருகிறது LE SCORPION எனும் இக்காமிக்ஸ் தொடர்.

தங்கள் சுயலாபத்திற்காகவும், அதிகாரங்களிற்காகவும் மதத்தை தங்கள் கையில் எடுத்து அதனை தங்கள் இஷ்டப்படி பயன்படுத்த துடிக்கும் மனிதர்களின் கதை இது. மனித உரிமைகள், தனி மனித சுதந்திரம், விடுதலை வேட்கை என்பவை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதிகாரத்தை தம் கையில் இருத்தி, மதத்தின் மூலமாக மக்களை அடக்கி, ஒடுக்கி அடிமைகளாக்க விரும்பும் இவர்கள் பாதையில் குறுக்கிடும் ஒருவனின் பயணமே இத்தொடராகும்.

குதிரைகள், ரதங்கள், கண்ணைக் கவரும் மேலங்கிகள், சூடான வாள் சண்டைகள், வத்திக்கன் ரகசியங்கள், SCORPIONன் பிறப்பு மர்மம், TREBALDIன் சதி என தூண்டில் போடுகிறது கதை. இரண்டாவது ஆல்பத்தில் கதை இன்னும் விறுவிறுப்பாகிறது, மர்மங்களின் முடிச்சுகள் விடுபடுவது போல் தோன்றினாலும், அவை மேலும் இறுகவே செய்கின்றன.




LE scorpion எனும் இக்காமிக்ஸ் தொடர் 2000 ஆண்டிலிருந்து வெளியாக ஆரம்பித்தது. இது வரை 9 ஆல்பங்கள் வெளியாகி இருக்கிறது, இதில் SCORPION- LE PROCES( SCORPION- THE TRIAL.) எனும் ஆல்பம் பிரதான தொடருடன் சம்பந்தப்படாத ஒர் ஆல்பமாகும்.

இத்தொடரின் கதாசிரியர் STEPHEN DESBERG ஆவார். பெல்ஜியத்தை சேர்ந்தவர், பிறந்த வருடம்1954. ஆரம்பத்தில் TINTIN எனப்படும் பெல்ஜிய சித்திரக்கதை வாராந்திரியில் சிறிய கதைகளை எழுத ஆரம்பித்தார், 1980 களில் முழுமயான கதைகளை படைக்கத் தொடங்கினார். இது வரையில் 30 வித்தியாசமான தலைப்புகளில் காமிக்ஸ் ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. இவரது இன்னொரு பிரபலமான தொடரான IR$ ஐப்பற்றி நண்பர் ரஃபிக் ராஜா பதிவிட்டுள்ளார், தவறாது அப்பதிவினைப் படியுங்கள்.

DESBERG தன் பணியை சிறப்பாக செய்திருந்தாலும், அவரைத் தாண்டி பல படிகள் பாய்ந்திருக்கிறார் சித்திரங்களிற்கு பொறுப்பான ENRICO MARINI. 1969ல் சுவிட்சர்லாந்தில் பிறந்த இவர் ஒர் இத்தாலியர். DESBERG உடன் இணைந்து ஏற்கனவே பாலைநிலத் தாரகை [L 'ETOILE DU DESERT] எனும், இரண்டு ஆல்பங்களை கொண்ட ஒர் வெஸ்டர்ன் காமிக்ஸ் தொடரை வெளியிட்டுள்ளார். ஆனால் SCORPIONல் MARINIன் ஒவியங்கள், ஆம் ஓவியங்கள், சித்திரங்களல்ல மிக உச்சமான தரம் கொண்டவையாக இருக்கின்றன. முதலாவது ஆல்பத்தில் ஒவியங்களினாலேயே கதை சொல்கிறார் அவர். ஆல்பத்தின் ஆரம்பக் காட்சிகள், எரியும் தணல் கங்குகள் போல் ஒளிர்கின்றன. நண்பர்கள் DARGAUD தளத்திற்கு சென்று , அந்த அற்புதமான ஒவியங்களை கண்டு களியுங்கள்.

இக்காமிக்ஸ் தொடரின் வெற்றிக்கு MARINI ன் ஓவியங்கள் ஒர் முக்கிய காரணம் என்பது என் தாழ்மையான கருத்து. சுருங்கக் கூறின் இத்தொடரினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விடாதீர்கள். சினிபுக் ஆங்கிலத்தில் இந்த ஆல்பங்களை வெளியிட்டுள்ளது, தமிழகத்தில் இக்காமிக்ஸ் தொடர் வெளிவந்து விட்டது மேலதிக விபரங்களிற்கு காமிக்காலஜியில் சினிபுக் புதிய வரவுகள் பதிவினைப் படியுங்கள்.

ஆல்பத்தின் தரம் *****

நண்பர்களே, வழமை போன்று, பதிவைப் பற்றிய உங்கள் மேன்மையான கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.

ஆர்வலர்களிற்கு

Thursday, March 12, 2009

ஓடு நண்பனே ஓடு

வணக்கம் அன்பு நண்பர்களே, கடந்த பதிவுகளிற்கான உங்கள் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கனிவான கருத்துக்களிற்கான என் பதில்களை அப்பதிவுகளின் கருத்துப்பெட்டியில் நீங்கள் காணலாம். இலை துளிர் காலத்தின் அழகான சூரியன் வருவதும் போவதுமாக போக்குக் காட்டுகிறது. மென் மழை பிடிவாதமாக போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது, அழகான நாட்களின் நிச்சயம், அழகிகளின் அணிவகுப்பின் நிச்சயம் என்பதனை மனதில் கொண்டு உவகையுடன் காமிக்ஸ் வலைப்பூ வலத்தை ஆரம்பிக்கலாம்.
உழைப்பு, அர்ப்பணிப்பு, சிறிது தியாகம், எல்லாவற்றிற்கும் மேலாக காமிக்ஸ்களின் மேல் கொண்ட காதல். தன் 50 வது பதிவை இட்டு என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்பவர் அருமை நண்பர் ரஃபிக். உயிரைத்தேடி எனும் சிறுவர் மலரில் இடம்பெற்ற காமிக்ஸ் தொடர் பற்றி அருமையாக பதிவிட்டுள்ளார். அதே சமயம் அழகியைத்தேடி எனும் கலக்கல் பதிவையும் ராணிகாமிக்ஸ் வலைப்பூவில் இட்டு பாராட்டுக்களை இன்னும் கூடுதலாக அள்ளிக் கொள்கிறார். தொடருங்கள் ரஃபிக் உங்கள் சிறப்பான முயற்சிகளை.இப்பதிவின் தலைப்பு உங்களிற்கும் பொருந்தும்.
இளைய தளபதி, இளம் கிள்ளைகளின் மனதின் அதிபதி, நண்பர் விஸ்வா, டேவிட் குரொகெட் எனும் வரலாற்றுப் பாத்திரத்தினை மையமாகக் கொண்டு வெளிவந்த பூனைத்தீவு எனும் கதைபற்றிய சிறப்பான பதிவை இட்டுள்ளார். அல்லக்கை கும்பல் ஒன்று தங்கள் அன்பை சொல்லி ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நண்பர் புருனோ, பயங்கரப்புயல் எனும் காப்டன் பிரின்ஸ் கதைபற்றி சுவையான பதிவிட்டுள்ளார்.
புதிய வரவு. ஆச்சர்ய நிகழ்வு. அன்பர் புலா சுலாகி. இந்திரஜால் கதைகளை முழுமையாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார். உங்களை அன்புடன் வரவேற்கிறேன். தொடருங்கள் உங்கள் அதிரடியை.
காகொககூ அன்பர், ஸ்பைடரின் சிறுகதை ஒன்றினை பதிவாகத் தந்துள்ளார். பாராட்டுக்கள் அன்பரே.
சித்திரக்கதை சிவ் அவர்கள் ஒர் புதிய முயற்சியாக ரஷ்யப் புரட்சி வரலாறு எனும் சித்திர நூல் பற்றி பதிவிட்டுள்ளார். அவரின் புதிய முயற்சிக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி இரு கிளாசிக் கதாநாயகர்கள் கலக்கி எடுக்கும் ஒர் மென்மையான சாகசக் கதை பற்றிய பதிவிற்குள் நுழைவோம்.

1954 லண்டன் நகரம், ஜூன் மாதத்தின் ஒர் அழகான நாள். MI5 ஆல் கைது செய்யப்பட்ட உளவாளி ஒருவனால் , இங்கிலாந்தில் மறைவாக ஊடுருவியுள்ள அயல்நாட்டு ஒற்றர் படையொன்றின் இருப்பு தெரியவருகிறது. ஸ்காட்லாண்ட் யார்ட் அலுவலகத்தில் இடம்பெறும் உயர்மட்ட அதிகாரிகளின் அவசரக்கூட்டத்தில் MI5ன் எதிர் உளவுத்துறை தலைவர் பிரான்சிஸ் ப்ளேக் (FRANCIS BLAKE), தங்கள் மத்தியில் எதிரிகளிற்கு ரகசிய தகவல்களை கொடுக்கும் ஒர் நபர் இருக்கலாம் என தன் சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார். அந்நிய உளவாளிகளின் கூட்டத்தை உடனடியாக கண்டுபிடிக்கும் படி கண்டிப்பான உத்தரவை உள்துறை துணைச்செயலர் இடுகிறார்.

அன்று மாலை, செண்டொர் கிளப்பில்(CENTAUR CLUB) தன் நண்பரும், விஞ்ஞான பேராசிரியருமான பிலிப் மார்டிமரை (PHILIP MORTIMER) சந்திக்கிறார் ப்ளேக். விஞ்ஞானிகளின் ஒன்றுகூடல் ஒன்றிற்காக ஸ்காட்லாண்டின் மலைப்பிரதேசத்திலுள்ள ஒர் கோட்டைக்கு தான் செல்லப்போவதை நண்பரிற்கு சொல்கிறார் மார்டிமர்.



கைது செய்யப்பட்ட உளவாளி ஜெனிங்க்ஸ் (JENNINGS) கடினமான விசாரணையின் பின்னும் தன் சகாக்களை காட்டிக் கொடுக்க மறுத்து விடுகிறான். இதேவேளை ஜெனிங்ஸ் கைது செய்யப்பட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்ட காமெரா மூலம் எடுக்கப்பட்ட படங்களை பார்வையிடும் உயர் அதிகாரிகள், சிலையொன்றின் பீட விரிசலில் கடித்ததை செருகும் உருவம் சாட்சாத் ப்ளேக்தான் என அறிந்து அதிர்ச்சியடைகிறார்கள். அதிகாரிகளிடம் சரணடைய மறுக்கும் ப்ளேக், கைதி ஜெனிங்ஸ் உடன் தப்பி ஒடுகிறார்.
பணி புரியும் இடத்திலிருந்து விசாரணைக்காக தன் இல்லத்திற்கு பொலிசாரால் அழைத்துவரப்படும் மார்டிமர், தகவலை அறிந்ததும் இடிந்து போகிறார். தன் நண்பன் ப்ளேக் துரோகி இல்லையென வாதிடும் அவரிடம், ப்ளேக்கை உயிருடனோ அல்லது பிணமாகவோ கைப்பற்றுவோம் என கூறுகிறார்கள் MI5 ஏஜண்டுகள். ஆள்வேட்டை ஆரம்பமாகிறது.

தன் நண்பனை நினைத்து வருந்தும் மார்டிமர், MI5, ஏஜண்டுகளால் கலைத்துப் போடப்பட்ட தன் இல்லத்தை ஒழுங்காக்குகிறார். தற்செயலாக சிலையொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒர் பொருளை கண்டுவிடும் மார்டிமர் வீட்டின் முன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பொலிசாரிற்கு தண்ணி காட்டிவிட்டு ப்ளேக்கை தேடிச்செல்கிறார்.

இதேவேளை ஜெனிங்ஸுடன் தப்பிய ப்ளேக் ஒர் தபால்காரன் உதவியுடன் டெம்பில்டன் வதிவிடத்தை வந்தடைகிறார். அங்கு அவரை வரவேற்கிறான் ப்ளேக் & மார்டிமரின் பரமவைரியான ஒர்லிக்(ORLIK). இதே சமயம் ஒர் சாகஸ ரயில் பயணத்தின் பின் சீன்பெரி (SEAN BERRY) எனும் சிறு நகரத்தை வந்தடையும் மார்டிமர், ப்ளேக்கின் உறவினர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ப்ளேக்கின் ரகசியத்திட்டம் பற்றி அறிந்துகொள்ளும் அவர் தன்னை தேடி அங்கு வரும் பொலிசாரிடமிருந்து தப்பி ஸ்காட்லாண்ட் எல்லையை நோக்கி பயணிக்கிறார்.

ஒர்லிக்கின் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு, அவனிடம் கைதியாக இருக்கும் ஃபீல்டிங்கை காப்பாற்றிக் கொண்டு ஒடும் ப்ளேக், ஃபீல்டிங்கிடமிருந்து சில ரகசியங்களை அறிந்து கொள்கிறார். ஸ்காட்லாண்டின் மலைப்பிரதேசமான ஹைலேண்டில்( UPPER HIGH LANDS) ப்ளேக்கை கண்டுபிடிக்கிறார் மார்டிமர். மார்டிமர் கலந்துகொள்ளவிருந்த விஞ்ஞானிகளின் ஒன்றுகூடலின் பின்னணியிலுள்ள மாபெரும் சதி பற்றி அவரிற்கு விளக்குகிறார் ப்ளேக். நண்பர்கள் இருவரும் எவ்வாறு இச்சதியை முறியடித்து, உண்மையான துரோகிகளின் முகத்திரைகளை கிழிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

ப்ளேக் & மார்டிமர் ஆகிய இரு நாயகர்களும் ரின்ரின் (TINTIN) எனப்படும் பெல்ஜிய சித்திரக்கதை வார சஞ்சிகையில் 1946ல் அமரர் எட்கார் ஜாக்கோப்பால் (EDGAR P JACOBS) அறிமுகமானார்கள். இந் நாயகர்களிற்கான கதைகளை எழுதியும் ஓவியங்களை வரைந்தும் தனக்கென ஒர் மதிப்பு நிறைந்த ஆனால் யாராலும் கைப்பற்றமுடியாத இடத்தை சித்திரக்கதை உலகில் பிடித்தவர் அவர். இவரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களிற்கு நண்பர் ரஃபிக்கின் வலைப்பூவை சற்று முகர்ந்துதான் பாருங்களேன்.

ஆனால் நாங்கள் மேலே பார்த்த ''பிரான்சிஸ் ப்ளேக் விவகாரம்'' (THE FRANCIS BLAKE AFFAIR ) எனும் ஆல்பமானது 1987ல் அமரர் ஜாக்கோப் மறைந்த பின்பு வெளியான இரண்டாவது ஆல்பமாகும். எனினும் ஜாக்கோபின் பங்களிப்பு இல்லாது வெளியாகிய முதல் ஆல்பம் என்ற பெயர் இதற்குண்டு. [1990ல், ஜாக்கோப் விட்டுச் சென்ற கதையையும், சில மாதிரி சித்திரங்களையும் கொண்டு பாப் டு மூர் (BOB DE MOOR) '' புரொபசர் சட்டொவின் 3 பார்முயூலாக்கள்'' ளின் இரண்டாம் பகுதியை வரைந்தார்]

இக்கதை முதலில் டெலேராமா(TELERAMA) எனும் பிரெஞ்சு கலை விமர்சக வார இதழில் 1996ம் ஆண்டு தொடராக வெளியானது. பின் அதே ஆண்டில் ப்ளேக் & மார்டிமர் பதிப்பகத்தால்(LES EDITIONS BLAKE ET MORTIMER) ஆல்பமாகவும் வெளியாகியது. இவ்வால்பத்தின் கதையை நண்பர்களிற்கு நன்கு அறிமுகமான வான் ஹாமும் (VANHAMME), சித்திரங்களை, ஹெர்ஜே, ஜாக்கோப் போன்ற ''புருக்சல் மாஸ்டர்களின்'' சித்திரங்களின் அபிமானியான டெட் பெனுவா(TED BENOIT) எனும் பிரெஞ்சு சித்திரக்காரரும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். டெட் பெனுவா தன் பங்கை செவ்வனே செய்திருந்தாலும், ஜாக்கோபின் கைவண்ணமும், அவரின் சித்திரங்களில் இயல்பாக இழையோடும் நகைச்சுவை ரசத்திற்கும் ஈடு இல்லை என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

காப்டன் ஃப்ரான்சிஸ்ப்ளேக் ராயல் ஏர் பார்ஸில் பணியாற்றி பின் MI5ல் சேர்ந்து கொள்பவர். மாறு வேடங்கள் புனைவதில் வல்லவர். இவர் போடும் வேடங்களில் வாசகர்களையும், அவர் எதிரிகளையும் விட ஏமாறுவது அவர் நண்பரான
மார்டிமரே. பிலிப் மார்டிமர் ஒர் அணுபெளதிக விஞ்ஞானி. பெரும்பாலான கதைகளில் ப்ளேக்கைவிட முக்கியம் வாய்ந்தவராக இவர் சித்தரிக்கப்படுகிறார். இவர் ஒர் விஸ்கி பிரியர். அழுத்தங்களில் இருந்து அவர் விடுபட விரும்பும் போதெல்லாம் வெகு ஸ்டைலாக விஸ்கி பெக்குகளை அவர் உள்ளே தள்ளுவது அழகோ அழகு. இவரது முகபாவங்களை அமரர் ஜாக்கோப் வரைந்துள்ள விதம் அலாதியானது ['' மஞ்சள் Mல் '' மார்டிமர் காணாமல் போய்விடுவார் அவரை கண்டுபிடிக்கவேண்டி பொலிஸார் பிபிசி தொலைக்காட்சியில் அவரின் போட்டோ ஒன்றை காண்பிப்பார்கள் வாயில் பைப்பை கவ்விய படி மார்டிமர் உள்ள அந்த போட்டோவில் மார்டிமரின் முகபாவனையை என்னால் மறக்க முடியாது]. ஒர்லிக், இரட்டை நாயகர்களின் பரம வைரியான இவர் எப்போதும் அவர்களிடமிருந்து தப்பித்து, மீண்டும் மீண்டும் அவர்களுடன் புதிய சந்தர்பங்களில் மோதுவார். இவரிடமுள்ள கனவான் தன்மையும், மிடுக்கும் வாசகர்களை இவர் பக்கம் இழுப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம். ஜாக்கோப் , ஒர்லிக்கை தன் முகச்சாயலில் வரைந்தார் என்பதும் சுவாராஸ்யமான ஒன்று.

பிரான்சிஸ்ப்ளேக் விவகாரத்தில் முதல் முறையாக ஒர் பெண் பாத்திரம் சாகசச்
செயல்களிற்குத் துணை புரிவதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜாக்கோப் எழுதிய கதைகளிலோ சாகச உலகம் ஆண்களிற்குரியதாகும். வழக்கமான விஞ்ஞானம் இணைந்த மர்மமுடிச்சும் இக்கதையில் கிடையாது. ஜாக்கோப்பின் சிறப்பம்சமான!! பக்கம் பக்கமான டயலாக்குகள் இக்கதையில் முதல் சில பக்கங்களிலேயே காணக்கிடைக்கின்றன. இக்கதை தொடர்களின் பலவீனம் யாதெனில், அதிரடியும், வன்முறையும் குறைந்த மென்மையான கதைகள் என்பதும், சில மர்ம முடிச்சுக்களை நாம் முன்கூட்டியே ஊகித்து விடக்கூடியதென்பதுமாகும். இருப்பினும் ஜாக்கோபின் நாயகர்களிற்குரிய ரசிகர்கள் இன்றும் அவரை படித்தபடி இருக்கிறார்கள்.

முத்துக்காமிக்ஸின் ரிப் கிர்பி கதைகளையும்[என்ன அற்புதமான கதைகள். விஜயன் சார் அடுத்த ரிப் கிர்பி கதை எப்போது வெளிவரும்.] அவற்றின் நிதானமான வேகத்தையும் நினைவூட்டும் ப்ளேக் & மார்டிமர் கதைகள்,கிளாசிக் ரசிகர்களிற்கு சுவையான இதமான வாசனையை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. சினி புக் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இக்கதையின் ஆங்கில பதிப்பை வெளியிட்டுள்ளது, புத்தகம் இந்தியாவில் வெளியாகி விட்டது என்பதனை நண்பர் ரஃபிக் தன் கருத்துக்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அனைத்துக் காமிக்ஸ் ரசிகர்களும் ஒரு முறையாவது படிக்கவேண்டியவை இக்கிளாசிக் வகைக் கதைகள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் ஆகும்.

-ஜாக்கோபின் கதைகளை படிக்க விரும்பும் நண்பர்கள் முதலில் மஞ்சள் எம் (YELLOW M) மை படியுங்கள்.[ப்ளேக் & மார்டிமர் தொலைக்காட்சி தொடரை பார்க்காதீர்கள் அது ஒர் கெட்ட கனவாகும்]

ஆல்பத்தின் மதிப்பீடு *****

பதிவைப் பற்றிய உங்கள் மேலான கருத்துக்கள் என்னவாயினும் அவற்றை தயங்காது பதிந்து செல்லுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்வலர்களிற்கு