Tuesday, October 27, 2009

ரயில் கூரையின் பெயரற்ற கனவுகள்


மெக்ஸிகோவின் பொம்பிலா எனப்படும் சிறிய ஊர் ஒன்றில் பலம் பொருந்திய தாதா குழுவாக லா மாரா செயற்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் ஒர் அங்கத்தவனாக தன் வாழ்க்கையை கழித்து வருகிறான் கஸ்பர்(Edgar Flores) எனும் இளைஞன். பொம்பிலாவில் லா மாரவின் தலைவனாக இருக்கிறான் லில் மகோ(Tenoch Huerta Mejia). மிகவும் கொடியவனான லில் மகோ தன் குழுவில் இருப்பவர்கள் தன்னிடமிருந்து எதையும் மறைத்து வைத்திருக்க கூடாது என்பதில் கண்டிப்பாக இருக்கிறான்.

லா மாராவில் அங்கம் வகிப்பதற்கு வயது என்பது ஒர் தடையல்ல. அக்குழுவில் புதிதாக இணைந்து கொள்ளும் சிறுவன் ஸ்மைலி, கஸ்பரிற்கு நெருங்கியவனாக இருக்கிறான். லா மாரா எனும் குற்றப் பள்ளியின் புதிய மாணவ வரவு ஸ்மைலி(Kristyan Ferrer).

பொம்பிலாவிலிருந்து அமெரிக்கா எல்லையை நோக்கி செல்லும் ரயிலில்களில், அமெரிக்க நாட்டிற்குள் ரகசியமாக நுழைந்து விடுவதற்காக பயணிக்கும் வழியற்ற மக்களிடம் இருந்து வழிப்பறிகள் செய்வதும், தங்கள் எதிரிகளை தலையில் சுட்டுக் கொண்ட பின், துண்டம் துண்டமாக வெட்டி, தாம் வளர்க்கும் நாய்களிற்கு உணவாக தருவதுமாக லா மாராவில் அவர்கள் நாட்கள் நகர்கின்றன.

ஹொண்டூராஸ் நாட்டில் வசித்து வரும் இளம் பெண் சயாரா(Paulina Gaitan), அங்கு தன் எதிர்காலத்தின் வெறுமையான நிசப்தத்தை உணர்ந்து கொள்கிறாள். அமெரிக்காவிற்குள் ரகசியமாக நுழைய விரும்பும் தன் தந்தையுடனும், மாமனுடனும் அமெரிக்க எல்லையை நோக்கிய நீண்ட பயணத்தை அவள் ஆரம்பிக்கிறாள்.

தங்கள் ஊரிலிருந்து நீண்ட தூரத்தை வாழைத் தோட்டங்களினூடாக நடந்தே கடந்து வரும் அவர்கள், அமெரிக்கா எல்லையை நோக்கி செல்லும் ரயிலைப் பிடிப்பதற்காக பொம்பிலாவை வந்து சேர்கிறார்கள். ஊரை வந்தடையும் அவர்களை காவல் துறை சோதனை எனும் பெயரில் அவர்களிடமிருக்கும் பெறுமதியான பொருட்களை அபகரிக்க பயன்படுத்திக் கொள்கிறது.

sin_nombre_020 லா மாராவின் தொடர்சியான வன்செயல்களால், தளர்வு உற்றவனாக இருக்கிறான் கஸ்பர். அவன் காதலி மட்டுமே அவன் வாழ்வின் மகிழ்வான ஒர் கணமாக அவனிற்கு இருக்கிறாள். தனக்கு ஒர் காதலி இருப்பதை அவன் மிக ரகசியமாக வைத்திருக்கிறான். லா மாராவில் ஸ்மைலியைத் தவிர இந்த விடயம் வேறு யாரிற்கும் தெரியாது அவன் பார்த்துக் கொள்கிறான். ஸ்மைலியும் கஸ்பரிற்காக இது குறித்து யாரிடமும் பேசாது இருக்கிறான்.

ஒரு மாலை கஸ்பர் தன் காதலியுடன் உரையாடிக் கொண்டு வருவதை தற்செயலாக அவ்வழியே வரும் லா மாரா குழுவினர் பார்த்து விடுகிறார்கள். இந்த தகவல் லில் மகோவிற்கு உடனடியாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து லா மாராவின் கூட்டம் ஒன்றை கல்லறை ஒன்றில் ஒழுங்கு செய்யும் லில் மகோ, கஸ்பரையும், ஸ்மைலியையும் தன் குழு உறுப்பினர்களைக் கொண்டு நையப்புடைத்து தண்டிக்கிறான்.

தண்டனை முடிந்து தன் வலியையும், காயங்களையும் மெளனமான கண்ணீருடன் துடைத்துக் கொண்டிருக்கும் கஸ்பரை சந்திக்க கல்லறைக்கே வந்து சேர்ந்து விடுகிறாள் அவனது காதலி. தன் காதலியைக் கண்டு அதிர்ச்சியுறும் கஸ்பர் உடனடியாக அவளை அங்கிருந்து போகச் சொல்கிறான். ஆனால் லில் மகோ கஸ்பரின் அழகிய காதலியை கண்டு விடுகிறான்.

கஸ்பரின் காதலியை தான் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்து செல்வதாக கூறுகிறான் லில் மகோ. லில் மகோவை எதிர்த்து எதுவுமே செய்யாத நிலையில் கஸ்பர் தன் காதலியை அவனுடன் அனுப்பி வைக்கிறான். செல்லும் வழியில் கஸ்பரின் காதலியின் அழகால் ஈர்க்கப்படும் லில் மகோ அவளுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்க அவளோ அவனை எதிர்த்துப் போராடுகிறாள். தன்னை எதிர்க்கும் அவளை லில் மகோ பலமாக உதைக்க, கீழே விழும் அவளின் தலை கல்லில் மோதி அவள் இறந்து போகிறாள்.

3934837816_58e84e9729 தன் காதலி கொலையுண்ட தகவல் அறியும் கஸ்பரின் உள்ளம் ஊமையாக உடைகிறது. வேறொரு பெண் உனக்கு கிடைப்பாள் என அவனிற்கு ஆறுதல் கூறும் லில் மகோ, மறு நாள் டொனாலா எனும் ஊரிற்கு ஒர் காரியமாக செல்ல வேண்டியிருப்பதால் ஸ்மைலியையும், கஸ்பரையும் அதற்கு தயாராக இருக்கச் சொல்கிறான்.

அமெரிக்கா நோக்கி செல்லும் ரயிலை எதிர்பார்த்து, தண்டவாளங்களிலும், கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளிலும் உறங்குகிறார்கள் சயாரா குழுவினர். அவர்களின் பதட்டமான காத்திருப்பை நிறைவேற்றுவதைப் போல் சரக்கு ரயிலொன்று ரயில் நிலையத்தை வந்தடைகிறது. தங்கள் எதிர்காலத்தையே கையில் பிடித்து விட்டாற்போல் ரயிலின் கூரைகளில் ஏறி உடகார்ந்து தங்கள் கனவுப் பயணத்திற்காக ஆயத்தமாகி விடுகிறார்கள் அந்த ரயில் நிலையத்தில் குழுமியிருந்த மக்கள்.

ரயில் தன்னை உலுக்கிக் கொண்டு கிளம்புகிறது. மெதுவாக ஓடிச்செல்லும் ரயிலில் ஓடிவந்து ஏறிக் கொள்கிறார்கள் லில் மகோ, கஸ்பர் மற்றும் ஸ்மைலி. வறுமை விளைந்து பலவீனமாக புன்னகைத்துக் கொண்டிருக்கும் பாதையை ஊடறுத்து மெதுவாக விரைகிறது ரயில். அதன் கூரையில் தங்கள் கனவுகளை பொதிகளாக சுமந்தவாறு பயணிக்கும் வறிய மக்கள். டொனாலா எனும் ஊரை ரயில் நெருங்கும் வேளை வானம் தன் மேகங்களை திறந்து கனவுகள் மேல் நீரூற்ற ஆரம்பிக்கிறது.

தங்கள் பைகளிலிருந்த பிளாஸ்டிக் போர்வைகளால் தங்களை மூடிக் கொள்கிறார்கள் ரயில் கூரைப் பயணிகள். இந்த வேளையில் அவர்களிடம் வழிப்பறி செய்ய ஆரம்பிக்கிறான் லில் மகோ. தன் துப்பாக்கியை காட்டி மிரட்டி கூரைப் பயணிகளிடம் எஞ்சியிருக்கும் ஏதோ கொஞ்சத்தையும் அபகரிக்கிறான் லில் மகோ. அவனிற்கு பாதுகாப்பாக நிற்கிறார்கள் ஸ்மைலியும், கஸ்பரும்.

ரயிலின் கூரையில் சராயா இருக்கும் இடத்திற்கு வரும் லில் மகோ, அவள் அழகைப் பார்த்து வெறி கொண்டு துப்பாக்கி முனையில் அவளை பலவந்தம் செய்ய ஆரம்பிக்கிறான். சராயாவின் கூச்சல்களிற்கு அபயம் தர அங்கு யாருமில்லை. ஆனால் கஸ்பரின் மனதில் மழையைத் தாண்டி உணர்வுகள் மெதுவாக கொதிக்க ஆரம்பிக்கின்றன.

கஸ்பரின் மனம் தன் காதலியை எண்ணிப் பார்த்திருக்க வேண்டும். அவன் கையில் வைத்திருந்த வாள் மழையினூடு ஓடும் ஒர் மின்னல் போன்று லில் மகோவின் கழுத்தில் பதிகிறது. ரயிலின் கூரையில் மழை நீருடன் குருதியும் சேர்ந்து வழிந்து ஓடுகிறது. தன் கண்களைப் பார்க்கும் லில் மகோவை ரயிலிலிருந்து கீழே தள்ளுகிறான் கஸ்பர். இந்தக காட்சியைப் பார்த்து திகைத்து நிற்கும் ஸ்மைலியை ரயிலிலிருந்து இறக்கி விடுகிறான் கஸ்பர். பின் ரயில் பெட்டியின் கூரையில் ஒர் ஓரமாக தனியாக உட்கார்ந்து கொள்கிறான் அவன்.

sin-nombre_jpg_595x325_crop_upscale_q85 தொடரும் ரயில் பயணத்தில் கூரைப் பயணிகள் கஸ்பரை வெறுத்து அவனைக் கூரையிலிருந்து தள்ளிவிட முயல்கின்றனர். ஆனால் சராயாவின் கூச்சலினால் சுதாரித்துக் கொள்கிறான் கஸ்பர். கஸ்பர் தனியே விலகி இருந்தாலும் அவனைத் தேடிச் சென்று உரையாட ஆரம்பிக்கிறாள் சராயா, தன் தந்தையின் எச்சரிக்கைகளை அவள் பொருட்படுத்துவதே இல்லை.

கஸ்பரும் தாதாக் குழுவிற்காக நாட்டின் எல்லைகளை தாண்டி ஆட்களை கடத்தி சென்ற தன் அனுபவத்தைக் கொண்டு கூரைப் பயணிகளிற்கு உதவ ஆரம்பிக்கிறான். கஸ்பரிற்கும் சராயாவிற்குமிடையே ஒர் புதிய கனவின் ஆரம்பத்திற்கான சாத்தியம் அழகான ஒரு விடியல் போல் புலர ஆரம்பிக்கிறது .

தன் ஊருக்கு திரும்பி வரும் ஸ்மைலியை விசாரிக்கும் லா மாராவின் புதிய தலைவனான சோல், அவனிடம் ஒர் துப்பாக்க்கியை தந்து கஸ்பரைச் சுட்டுக் கொல்வதன் மூலமே அவன் லா மாரா மேல் கொண்ட விசுவாசத்தை நிரூபிக்க முடியும் என்கிறான். கஸ்பரை தான் சுட்டுக் கொல்வேன் என்று கூறி கிளம்பிச் செல்கிறான் ஸ்மைலி….

சராயா குழுவினர் தங்கள் கனவு தேசத்தை அடைந்தார்களா? ஸ்மைலி தன் விசுவாசத்தை நிரூபித்தானா என்பதனை சோகமும், வலியுமாக சொல்கிறது அமெரிக்க- மெக்ஸிக்கன் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஸ்பானிய மொழித் திரைப்படமான SIN NOMBRE [ பெயரற்றவர்கள்]

sin_nombre_1 ரயில் கூரை ஒன்றின் மேல் சந்தித்துக் கொள்ளும் இரு வேறுபட்ட வாழ்க்கைகளின் கதையை அதன் தருணங்களின் வெப்பத்துடன் காட்டியிருக்கிறார் இயக்குனர். மிகக் குரூரமான மெக்ஸிக்கோ தாதாக்களின் உலகம், கனவு தேசம் நோக்கி நாட்டு எல்லைகள் கடந்து ஓடும் மக்களின் வேதனையான வாழ்க்கை என்பவற்றில் பார்வையாளர்களை அமிழ்த்துகிறார் அவர்.

ரயில் பயணிக்கும் பாதைகளில் இயற்கை அழகாக இருக்கிறது. ஆனால் அதன் ஓரங்களில் வசித்து வரும் மக்களின் வாழ்க்கை வறுமையால் சீரழிக்கபட்டிருப்பதையும், அவர்களின் எதிர்காலம் வெறும் சூன்யம் என்பதையும் எளிதாக உணர்த்தி விடுகிறார் இயக்குனர். ஸ்மைலி பாத்திரம் வறுமை என்பது எவ்வாறு சிறுவர்களைக் கூட வன்முறைக் கலாச்சாரத்திலன் சுழலில் தள்ளிவிடுகிறது என்பதைக் காட்டுகிறது.

படத்தில் வரும் இளம் பாத்திரங்களின் யாதார்த்தமான நடிப்பு, படத்தின் கதையை விட்டு பார்வையாளனை வேறு எங்கும் அழைத்துச் சென்று விடாத அலங்காரங்களற்ற அழகான ஒளிப்பதிவு என்பன படத்தின் பலம்(SUNDANCE 2009- சிறந்த ஒளிபதிவிற்கான விருது). படத்திற்கு கதையை எழுதி இயக்கியிருப்பவர் அமெரிக்காவை சேர்ந்த இளம் இயக்குனர் Cary Joji Fukunaga.

இப்படத்திற்காக அவர் ரயில் கூரைப் பயணிகளுடன் பயணம் செய்திருக்கிறார், மெக்ஸிக்கோ தாதாக் குழுக்களின் உறுப்பினர்களை சந்தித்திருக்கிறார். இதன் விளைவு திரைப்படத்தில் தெளிவாக தெரிகிறது. அவருடைய முதல் திரைப்படமான இது அவரிற்கு 2009ம் ஆண்டின் அமெரிக்க SUNDANCE திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனரிற்கான விருதைப் பெற்றுத் தந்தது. எடின்பேர்க் சர்வதேச திரைப்பட விழாவில்[2009] அறிமுக இயக்குனரிற்கான விருதை வென்றது. பிரான்சின் DEAUVILLE அமெரிக்கத் திரைப்படவிழாவில் [2009] இத்திரைப்படத்திற்கு ஜூரி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

142467-4-sin-nombre கூரையில் பயணிக்கும் பயணிகள், மற்றும் லா மாரா தாதாக் குழு போன்றவை உலகின் பல பாகங்களில் வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் பல ஜீவன்களிற்கு பொருந்திப் போகக் கூடியவை என்பதை மறுக்க முடியாது. ரயில் கூரைகளில் பயணிக்கும் இவ்வகையான பயணிகளைப் போன்ற பெரும்பாலானோர் அவர்கள் கனவின் முகவரிகளைக் கண்டு கொள்வதில்லை ஆனால் பயணங்களும் முடிந்தபாடாக இல்லை.

பயணிகளை கூரையின் மீது தாங்கிச் செல்லும் ரயில் வண்டி ஏற்றிச் செல்லும் சரக்குகளின் சுமைகளை விட பார்வையாளனின் மனதை கனக்க வைத்து விடுகிறது திரைப்படத்தின் இறுதிப் பகுதி.

ரயில் பயணம் செய்யும் வழியில், நிமிர்ந்து நிற்கும் மலையொன்றில் எழுந்திருக்கும் பிரம்மாண்டமான கிறிஸ்துவின் சிலையைக் காணும் ரயில் கூரைப் பயணிகள் சிலுவை அடையாளமிட்டு அவரின் ஆசிர்வாதத்தை வேண்டுகிறார்கள். ஆனால் தன் கைகளை அவர்களை நோக்கி விரித்து விட்ட நிலையில் அவர் நிற்பதாகவே எனக்கு தோன்றுகிறது. [***]

ட்ரெயிலர்

Thursday, October 22, 2009

மந்திரா, மந்திரா


mer1 ஆதியில் உலகை சிருஷ்டித்தவனிற்கும், அவனுடைய தூதர்களில் ஒருவனான லுசிபரிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் லுசிபர் பாதாளம் நோக்கித் தள்ளப்பட்டான். பாதாளம் நோக்கிய அவன் வீழ்ச்சியின் போது அவன் நெற்றியிலிருந்த மரகதக் கல் ஒன்று பூமியில் வந்து வீழ்ந்தது.

உலகைச் சிருஷ்டித்தவனின் விசுவாசிகளான ஞானிகள் ஏழு பேர், பூமியில் வீழ்ந்த மரகதக்கல்லை தேடி ஒர் பயணத்தை ஆரம்பித்தனர். மரகதக் கல்லிலிருந்து கிளம்பிய ஒர் மர்ம ஒளிவீச்சின் வழியாக அம்மரகதக்கல்லை கண்டுபிடித்து விடும் ஞானிகள், அக்கல்லினுள் புதைந்திருக்கும் ரகசியத்தை அறிந்து கொள்கின்றனர்.

தாம் தெரிந்து கொண்ட விடயங்களை உலக மக்களிற்கு அறிவிப்பதற்காக ஆறு ஞானிகள் கிளம்பிச் செல்ல, எஞ்சிய ஞானி மரகதக்கல்லினை பாதுகாப்பாக தன்னுடன் வைத்திருக்கிறான். சில காலங்களின் பின் மரகதக்கல்லுடன் ஜெருசலேம் நகரை அடைகிறான் அந்த ஞானி.

ஜெருசலேம் நகரை அடைந்து பல நூறு வருடங்களின் பின் அம்மரகதக் கல்லானது சீமோன் என்பவரின் கைகளினால் உருவாக்கப்பட்ட ஒர் கிண்ணத்தில் இடம்பிடித்துக் கொள்கிறது. இயேசுவின் இறுதி ராப்போசனத்தின் போது அவர் கரங்களில் ஏறிய கிண்ணம் இதுவே.

இயேசுவின் மரணத்தின் பின் அவரது உடலை அரிமத்தியா சூசை என்பவர் ஒர் கல்லறையில் அடக்கம் செய்தார். தன் இறப்பின் மூன்றாம் நாளின் பின் இயேசு உயிர்த்தெழுந்து விட, கல்லறையிலிருந்து இயேசுவின் உடல் மறைந்ததற்கு அரிமத்தியா சூசையைக் காரணமாக்கி அவரை ஜன்னல்கள் இல்லாத ஒர் இருண்ட கோபுரத்தில் அடைக்கின்றனர் அதிகாரிகள்.

இருண்ட கோபுரத்தின் நிரந்தர இருளில் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் அரிமத்தியா சூசைக்கு காட்சி தரும் இயேசு, மரகதக் கிண்ணத்தை அவரிடம் தருகிறார். அக்கிண்ணம் பல சக்திகளை தன்னுள் கொண்டிருக்கிறது என்பதையும் அவர் தெரிவிக்கிறார். அக்கிண்ணத்திற்கு GRAIL எனும் பெயரையும் அளிக்கிறார்.

தண்டனை முடிந்து விடுவிக்கப்படும் அரிமத்தியா சூசை, நகரை விட்டு நீங்கி கடல் வழியாக மேற்கு நோக்கி தன் பயணத்தை ஆரம்பிக்கிறார். அவர் பயணத்தின் நோக்கம் அவலோன் எனும் தீவைக் கண்டு கொள்வதாக இருக்கிறது.

சில நூற்றாண்டுகளிற்கு பின்

mer2 ஒரே ஒர் உண்மையான கடவுள் எனும் நம்பிக்கையின் வரவு தங்கள் பிரதேசத்தை நெருக்குவதை அறியும் செல்டிக் பெண் தேவதையான ஏஸ், தங்களைப் போன்ற தேவர்களின் இறுதிக்காலம் நெருங்குவதை உணர்கிறாள். தங்கள் தெய்வங்கள் நிரந்தரமாக மக்களால் மறக்கப்படப் போவதை எண்ணிக் கலங்கும் அவள், அதனை தடுப்பதற்காக ஒரு மானுடப் பெண்ணையும், தேவன் ஒருவனையும் உறவு கொள்ள வைத்து ஒர் புதிய உயிரை உருவாக்குவது என்று முடிவெடுக்கிறாள்.

காற்றுத் தேவனை தன் சக்தியால் வரவழைக்கும் ஏஸ், அவனிடம் தன் விருப்பத்தை தெரிவிக்கிறாள். ஏஸ் கூறியபடியே தூய்மையான ஒர் பெண்ணை தேடி பிரெத்தான் பிரதேசம் எல்லாம் அலையும் காற்றுத் தேவன் இறுதியில் ஒர் சிறுகிராமத்தில் அவளைக் கண்டு கொள்கிறான்.

அப்பெண்ணின் பெயர் மயேல். அவள் உறங்கும் போது அவள் சொப்பனத்தில் கலந்து, அவளுடன் காதல் உறவாடி அவள் வயிற்றில் ஒர் உயிரைக் கருவாக்குகிறான் காற்றுத்தேவன். உறக்கம் விழிக்கும் மயேல் தன் உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களினால் அச்சம் கொண்டு தன் கிராம ஆலயத்தின் குருவானவரான பிலேய்ஸிடம் தன் சந்தேகங்களை கூறி பரிகாரம் கேட்கிறாள். அவளிற்கு ஆறுதல் கூறுகிறான் ஆலயக் குரு பிலேய்ஸ். ஆனால் அவன் மனதிலோ புதிய வரலாறு ஒன்று ஆரம்பம் ஆகிறது எனும் குரல் மெளனமாக ஒலிக்கிறது.

நாட்கள் செல்ல செல்ல மயேலின் உடலில் ஏற்படும் மாற்றம் கிராம மக்களால் அவதானிக்கப்படுகிறது. அவள் நடத்தையைப் பற்றி வாய்க்கு வந்த படி பேசுகிறார்கள் கிராம மக்கள். மயேலின் சகோதரியும் அவளிற்கு தொல்லை தருகிறாள். ஒர் நாள் வீதியொன்றில் வைத்து ஊர் மக்களின் முன்பாக மயேலை அவமானப்படுத்துகிறாள் அவள் சகோதரி. மயேலின் துணிகளைக் களைந்து அவள் கர்ப்பமாகவிருக்கிறாள் என்பதை ஊரின் கண்களிற்கு காட்டுகிறாள் அவள்.

மயேல் உயிருடன் இருக்கக் கூடாது எனக் கூறியவாறே அவள் மேல் கொலை வெறியுடன் பாய்கிறாள் மயேலின் சகோதரி. பிறக்கவிருக்கும் குழந்தைக்கு வரவுள்ள ஆபத்தை கண்டுகொள்ளும் தேவதை ஏஸ் தன் மந்திர சக்தியால் மயேலின் சகோதரியை கொன்றுவிடுகிறாள். இந்நிகழவைப் பார்த்த கிராம மக்கள் மயேலை சூனியக்காரி என்று திட்டுகிறார்கள். பிலேய்ஸ் கிராம மக்களுடன் வாதிட்டு மயேலைப் பாதுகாப்பாக தன்னுடன் அழைத்து செல்கிறான்.

ஆத்திரம் அடங்காத கிராம மக்கள் மயேலின் குடிசைக்கு தீ வைக்கிறார்கள். ஆனால் மயேலை அழைத்துக் கொண்டு பிலேய்ஸ் படகில் ஏறி கிராமத்திலிருந்து தப்பிவிடுகிறான். கிராம மக்களின் மீது கோபம் கொள்ளும் ஏஸ், கடல் தேவனை அழைத்து மயேலின் கிராமத்தை அவன் அலைகளால் மூழ்கடிக்க சொல்லி கட்டளையிட, ராட்சத அலைகள் கிராமத்தை மூழ்கடித்து அழிக்கின்றன.

கடலில் படகில் பயணித்துக் கொண்டிருக்கும் மயேலிற்கு பிரசவ வலி எடுக்கிறது. அந்தப் படகிலேயே அவள் ஒர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்தக் குழந்தைக்கு மெர்லின் எனப் பெயரும் சூட்டுகிறாள்…..

இயற்கையுடன் மனிதன் சேர்ந்து வாழ்ந்த காலங்களில் அவன் விருட்சங்களுடனும், விலங்குகளுடனும் பரிபாஷனை செய்யக் கூடியவனாக இருந்திருக்கிறான். இத்தகைய சக்திகள் கொண்ட சித்தர்கள் இயற்கையை தெய்வங்களாக கண்டனர். இயற்கையுடன் சார்புடைய கடவுள்கள் பலர் மக்களால் கொண்டாடப்பட்டிருக்கிறார்கள்.

mer3 ஒரே ஒரு உண்மையான கடவுள் எனும் புதிய நம்பிக்கையின் வேகமான பரவல் மனிதர்களிற்கும் இயற்கைக்குமிடையிலான உறவை மூட நம்பிக்கை, போலித் தெய்வ வழிபாடு என்று உரக்க உரைத்து நசுக்க ஆரம்பித்தது.

இயற்கையுடன் தொடர்புடைய புராண தெய்வங்களின் அழிவைத் தடுப்பதற்காக அவர்களினால் உருவாக்கப்பட்டவனே மெர்லின் என்பவன் என்ற கருவைக் கொண்டதாக இக்காமிக்ஸ் தொடர் ஆரம்பமாகிறது.

புராதன பிரித்தானியைச் சேர்ந்த [இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்தின் தென்பகுதியை உள்ளடக்கிய வலயம்] புகழ் பெற்ற ஞானியும், மாந்தீரிகனுமான மெர்லினின் பிறப்பு, குரு பிலேய்ஸ் மூலமாக சிறு வயதில் அவன் கற்றுக் கொள்ளும் பாடங்கள், மெர்லினில் புதைந்துள்ள மகத்தான சக்திகளின் வெளிப்பாடு என்பவற்றுடன் MERLIN எனும் காமிக்ஸ் தொடரின் முதல் ஆல்பமான La Colére d’Ahés [ஏஸின் சினம்] நிறைவு பெறுகிறது. தொடரும் ஆல்பங்கள் மெர்லினின் கதையை விறுவிறுப்பாக கூறுகின்றன [மெர்லினை தன் சக்திக்குள் இழுக்கும் GRAIL கிண்ணம்,பிலேஸுடனான பிரிவு, ஏஸின் சதி, மெர்லினின் மாய உலகப் பயணம், மனிதர்களிற்கு எதிராக மெர்லின் தொடுக்கும் போர்…..]

மெர்லின், மன்னன் ஆர்தரின் கதைகளில் இடம்பெற்ற ஒர் புகழ் பெற்ற மந்திரவாதி ஆவார். ஆர்தரை மன்னனாக்கி அவரிற்கு ஆலோசகராகவும் செயற்பட்டு வந்தவர் எனக் கதைகளில் சித்தரிக்கப்படுகிறார். இயற்கையையும், விலங்குகளையும் கட்டுப்படுத்தும் வலிமை உள்ளவர் எனக்கருதப்படும் இவரின் அபூர்வ சக்திகள் இவர் தந்தை ஒர் தேவன் என்பதனால் இவரிற்கு உரித்தாக கிடைத்தன.

விவியான் எனும் தேவதை மீது தீராக் காதலில் வீழ்ந்த மெர்லின், அவளிற்கு ஒர் மனிதனை நிரந்தரமாகக் கட்டிப்போடும் மந்திரத்தை சொல்லித்தர, மெர்லின் உறங்கிய போது அவனைச் சுற்றி ஒன்பது வளையங்களை வரைந்து விவியான் அம்மந்திரத்தை உச்சரிக்க, மெர்லின் மந்திரத்தில் இருந்து விடுபட முடியாது நிரந்தரமாக சிறையுண்டதாக ஒர் கதை கூறுகிறது. [மெர்லினிற்கு மட்டும்தானா இந்த நிலை....]

தேவர்கள், இயற்கை ரகசியங்கள், மாய உலகம் எனும் மாய ரசத்தில் தோய்ந்த சிறப்பான கதை சொல்லலும், தேவர்களையும், மாயஜாலங்களின் பிரம்மாண்டங்களையும், இயற்கை வனப்புக்களையும் கண் முன்னே விரியச் செய்திடும், மனதைக் கொள்ளை கொள்ளும் அருமையான சித்திரங்களும் காமிக்ஸ் தொடரின் வெற்றிக்கு அச்சாரம்.

தொடரிற்கு கதையை எழுதுபவர் Jean-luc Istin. ஒவியங்களின் பொறுப்பு Eric Lambert. இருவருமே பிரெஞ்சுக் கலைஞர்கள். 2000ம் ஆண்டிலிருந்து வெளியாக தொடங்கிய தொடரில் இது வரை ஒன்பது ஆல்பங்கள் வெளிவந்திருக்கின்றன. வாசகர்களிடம் தொடரிற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக Merlin-La quete de l’épée [வாள் தேடும் படலம்] எனும் தொடரும் ஆரம்பமாகி இருக்கிறது. மாயஜாலக் கதைப் பிரியர்களின் இஷ்டமான கதைத் தொடராக இக்காமிக்ஸ் தொடர் மகுடம் சூட்டும் என்பது உறுதியான ஒன்று. [****]

ஏனைய ஆல்பங்கள்



bouquet1

வாழ்த்துக்கள்

தனது முதலாவது ஆண்டில் வெற்றிக் காலடி பதிக்கும் சிறந்த தமிழ் காமிக்ஸ் வலைப்பூவான அகொதீகவிற்கும் அதன் நிறுவனர் டாக்டர் செவனிற்கும் எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பாண்டி மைனரும், கார்லா சார்கோஸியின் முறைப் பையனும், தமிழ் கூறும் நல்லுலகின் பிராட் பிட்டுமான அன்பு நண்பர் கண்டால்ஃப் ஜோஸ் அவர்களிற்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Wednesday, October 14, 2009

ஒன்று, இரண்டு...XIII- மூன்று வெள்ளிக் கடிகாரங்கள்


trois1 கோஸ்டா வெர்டின் இருள் அந்த வீட்டைச் சலனமின்றி சூழ்ந்து கொண்டிருந்தது. வீட்டின் வாராந்தாவில் சிவப்பு ஒயினை அருந்தியவாறே ஷோன் முல்வே, சூழ்ந்து கொண்டிருக்கும் இருளில் தன் பார்வையை ஆழ்த்துகிறான். சில கணங்களிற்குள் நிகழ்காலத்திற்கு திரும்பும் அவன், கதிரையொன்றில் சாய்ந்திருக்கும், தன் கடந்த காலத்தை மறந்து தொலைத்த ஏஜண்ட் XIII க்கு தன் குடும்ப வரலாற்றைக் கூற ஆரம்பிக்கிறான்.

1898 - லியாம் மக்லேன், ஜோர்ஜ் முல்வே, ஜாக் கலகான் ஆகிய மூன்று இளைஞர்களும் தங்கள் தாய் மண்ணான அயர்லாந்தை நீங்கி அமெரிக்காவிற்கு புலம் பெயர்கிறார்கள். சந்தைகளில் உருளைக்கிழங்கு விற்று தங்கள் ஜீவனத்தை நடத்தும் அவர்களிற்கு ஜெனி எனும் இளம் பெண்ணின் வழியாக அவள் தந்தையான ஹென்ரி டாடி ஒ கெஃபின் அறிமுகம் கிடைக்கிறது.

டாடி ஒ கெஃபிற்கு சொந்தமாக ஒர் கயலான் கடை இருக்கிறது. அக்கடையின் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று வருவதால் மேலும் பல கிளைகளை ஆரம்பிக்க விரும்புகிறான் டாடி. இக்காரணத்தினால் அந்த மூன்று அயர்லாந்து இளைஞர்களையும் தன்னிடம் வேலைக்கு அமர்த்திக் கொள்கிறான் அவன்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கடைகளின் வியாபாரமும் சூடு பிடிக்க, பணம் கொட்டுகிறது. மூன்று இளைஞர்களையும் டாடிக்கும் அவன் குடும்பத்திற்கும் நன்கு பிடித்துப் போகவே தன் மூன்று மகள்களையும் அந்த அயர்லாந்து இளைஞர்களிற்கே மணம் முடித்து வைக்கிறான் டாடி. திருமணப் பரிசாக தன் மாப்பிள்ளைகளிற்கு, அவர்களதும் அவர்கள்தம் மனைவியரினதும் பெயர் பொறித்த மூன்று வெள்ளிக் கடிகாரங்களையும் வழங்குகிறான்.

வாழ்க்கை, அமைதியான அலைகள் தழுவ தன் படகை செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதுவே நிரந்தரமில்லை அல்லவா. மாஃபியா வடிவில் டாடி ஒகெஃபின் வாழ்வில் நீந்த ஆரம்பிக்கிறது சிக்கல். டான் விட்டால் எனும் மாஃபியா தலைவன் ஒருவனின் மிரட்டல் பேரத்திற்கு அடி பணிய மறுக்கிறான் டாடி. தொடரும் மோதல்களின் விளைவாக மாஃபியா குண்டர்கள் டாடியின் கடைக்கு தீ வைக்கிறார்கள். இந்த தீ விபத்தில் டாடியும் அவன் மனைவியும் உயிரிழக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அன்றிரவு தன் தாத்தா வீட்டில் தங்க வந்திருந்த ஜாக் கலகானின் நான்கு வயது மகன் டாமும் அவர்கள் கூடவே கருகிப் போகிறான்.

trois2 தங்கள் குடும்ப பெருமையை நிலைநாட்டவும், வஞ்சம் எனும் அனலை அணைக்கவும் விரும்பும் மூன்று நண்பர்களும், மாஃபியா தலைவன் டான் விட்டாலை ஒர் விடுதியில் வைத்து தீர்த்துக் கட்டுகிறார்கள். கொலை நடந்ததைக் கண்ணால் கண்ட சாட்சியங்கள் பல இருந்ததால், நிலைமை மறக்கடிக்கப்பட்ட பின்னர் திரும்பி வருவதாக தங்கள் மனைவிகளிடம் வாக்களித்து விட்டு அமெரிக்காவை விட்டு அந்த மூன்று நண்பர்களும் நீங்கிச் செல்கிறார்கள். அவர்கள் மனைவியர் விழிகளில் மீண்டும் அவர்கள் உயிர் பெறவேயில்லை.

மாஃபியா தலைவன் டான் விட்டாலின் மரணத்தின் பின் அவன் மருமகன் பஸ்குவால் ஜியோர்டினோ, டாடியின் மகள்களிடம் மிரட்டல் பேரம் பேசி, எந்தவித குழப்பங்களுமின்றி அவர்கள் தங்கள் வியாபாரத்தை தொடர பாதுகாப்பு வழங்குகிறான்.

1929ல் அமெரிக்கா மாபெரும் பொருளாதார சரிவை சந்திக்கிறது. வியாபாரங்கள் இழுத்து மூடப்படுகின்றன. டாடி ஒ கெஃபின் மகள்களிடம் இந்நிலையைப் பயன்படுத்தி புதிய பேரம் பேசுகிறான் பஸ்குவால். அப்பேரத்தின் படி பஸ்குவாலிற்கு முதலீட்டில் பங்கு கிடைக்க, பஸ்குவாலின் இளைய சகோதரனான ஜியம்பட்டிஸ்டா ஜியோர்டினோவிற்கு ஜாக் கலகானின் மகளான டெபோரா மனைவியாக வாய்க்கிறாள்.

இதன் பின் வரும் வருடங்களில் ஐரோப்பாவில் யுத்தம் வெடிக்கிறது. ஜோர்ஜ் முல்வேயின் மகனான பிரான்சிஸ்ஸும், லியாம் மக்லேனின் மகனான டாமும் அமெரிக்க நாட்டிற்காக யுத்தத்தில் பங்கு கொள்ள கிளம்பிச் செல்கிறார்கள். யுத்தத்தின் போது ஏற்படும் விமான விபத்தொன்றின் பின், ஜப்பானிய படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு குவாய் நதியில் பாலம் கட்டும் சிரமமான பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்தப் பாலம் கட்டும் பணியில் இறந்து போனவர்களில் தானும் ஒருவனாகக் கலந்து விடுகிறான் டாம் மக்லேன்.

1945ல் பிரித்தானிய துருப்புக்களினால் ஜப்பானியர்களிடமிருந்து பிரான்சிஸ் மீட்கப்பட்டு தன் நாட்டிற்கு திரும்பி வருகிறான். நாடு திரும்பிய அவனை துக்ககரமான செய்திகள் trois3 தழுவி வரவேற்கின்றன. ஒன்று அவன் மனைவியின் மரணம். மற்றது மாஃபியாக்களின் சதியில் குடும்ப வியாபாரம் பறி போன விபரம்.

வேறு வழி ஏதுமற்ற நிலையில் பொலிஸ் வேலைக்கு சேர்ந்து கொள்கிறான் பிரான்சிஸ். தங்கள் குடும்பம் வாழ்வதற்கு புதிய வீடொன்றை வாங்குகிறான். விதவையாகவிருக்கும் டாம் மக்லேனின் மனைவியை மறுமணம் செய்து கொள்கிறான். சில வருடங்களின் பின் டாமின் ஒரே மகனான ஜோனதன் பத்திரிகைத் துறைப் படிப்பிற்காக மான்ஹாட்டன் சென்று விடுகிறான். ஜோனதனின் பிரிவு பிரான்சிஸின் மகனான ஷோனை தனிமையால் மெல்ல மெல்ல வருத்துகிறது.

ஷோன் பொறுப்பற்று அலையத் தொடங்குகிறான். அவன் சகோதரி மார்கரெத் செவிலிப் படிப்பில் சிறந்து விளங்குகிறாள். இதே வேளையில் தன்னை அழுத்திக் கொண்டிருக்கும் உயிரற்ற வாழ்வின் சலிப்பால், மெல்ல மெல்ல குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுகிறான் பிரான்சிஸ் முல்வே. இதனால் அவன் வேலை பறிபோக, பிரான்சிஸ் தற்கொலை செய்து கொள்கிறான்.

பிரான்சிஸ் முல்வே இறந்து ஒரு வாரத்தின் பின் டாம் மக்லேனின் பெயரிற்கு கோஸ்டா வெர்ட்டிலிருந்து ஒர் தடித்த கடிதம் வருகிறது. ஷோன் அதனைப் பெற்றுக் கொள்கிறான். தபால் உறையில் அனுப்பியவரின் பெயர் லியாம் மக்லேன் என்று எழுதப்பட்டிருக்கிறது.

இந்த தருணத்தில் ராணுவ வீரன் ஒருவனின் குறுக்கீட்டால் ஏஜண்ட் XIIIக்கு தான் கூறிக் கொண்டிருந்த கதையை பாதியில் நிறுத்துகிறான் ஷோன். அப்போது விடியல் தன் முதல் கவிதைக் கீற்றை எழுத ஆரம்பித்திருந்தது. கோஸ்டா வெர்டின் புதிய ஜனாதிபதியான மரியாவின் அழைப்பை ஏற்று அவளைச் சந்திப்பதற்காக உடனே கிளம்புகிறார்கள் ஷோனும், ஏஜண்ட் XIIIம்.

trois4 ஜனாதிபதி மரியாவின் அலுவலகத்தை அடையும் அவர்கள் இருவரிற்கும், கோஸ்டா வெர்டின் புரட்சியின் போது நாட்டின் மேற்குப் பகுதிக்கு தப்பி ஓடிய ராணுவ அதிகாரி பெரல்டா, முன்னைய ஜனாதிபதி ஒர்டிஸிக்கு விசுவாசமான துருப்புக்களுடன் இணைந்து, கடல் மற்றும் தரை மார்க்கமாக PEURTO PILAR நகரை தாக்கப் போவதையும், இரு வழியில் நடக்கப் போகும் இந்தத் தாக்குதலை தங்களால் சாமாளிக்க முடியாது என்பதையும் அவர்களிற்கு விளக்குகிறான் XIIIன் முன்னாள் தோழரான பாதிரியார் ஜெசெண்டோ.

இந்த தாக்குதலை தடுக்க ஒரே வழி பெரல்டாவின் தாங்கிகள் வரவிருக்கும் பாதையொன்றில் இருக்கும் பாலமொன்றை தகர்த்து நிர்மூலமாக்குவதே என்பதையும், அதற்கு XIII ஐ விட்டால் இந்தக் கதையில் வேறு ஆளே கிடையாது என்பதையும் ஜெசெண்டோ எடுத்துக் கூறுகிறான்.

பாதிரியார், ஷோன், மற்றும் மூன்று ராணுவ வீரர்களுடன் பாலத்தை தகர்க்க கிளம்புகிறான் XIII. அழகிய ஜனாதிபதி மரியா, உயிருடன் திரும்பி வா என் அன்பே என XIIIடம் தன் இதயத்தின் குரலால் கேட்டுக் கொள்கிறாள். சீறிக் கொண்டு ட்ரக் கிளம்ப, விட்ட இடத்திலிருந்து மீண்டும் தன் குடும்பக் கதையை தொடர ஆரம்பிக்கிறான் ஷோன்….

லியாம் மக்லேனின் கடிதங்கள் கொண்டு வந்த தகவல்கள் என்ன? மூன்று வெள்ளிக் கடிகாரங்களில் ஒளிந்திருக்கும் ரகசியம்தான் என்ன? பாலத்தை தகர்த்து கொஸ்டா வெர்ட்டை சர்வாதிகாரிகள் பிடியிலிருந்த்து காப்பாற்றினானா XIII?

trois5 Trois Montres d’Argent எனப்படும் XIII காமிக்ஸ் தொடரின் பதினோராவது ஆல்பம், ஏஜண்ட் XIIIன் பரம்பரை வரலாற்றைக் கூறுகிறது. ஆல்பத்தின் இறுதிப் பக்கங்களின் அருகாமை வரை ஓடும் குடும்பக் கதையின் ஊடு, கோஸ்டா வெர்டில் சர்வதிகார ஆட்சி மீண்டும் உருவாகிவிடக் கூடிய அபாயத்தை ஏஜண்ட் XIII முறியடிக்க முயல்வதும், கூடவே ஒர் காதலின் சோகமான முடிவும் கூறப்படுகிறது.

XIIIன் தந்தை என அறியப்படும் ஷோன் முல்வே, தன் பரம்பரையின் வரலாற்றினை XIIIடம் கூறுகிறார். XIIIன் பிறப்பு ரகசியம் இவ்வால்பத்தில் உறுதியாக்கப்படுகிறது. மாஃபியா தலைவன் டான் விட்டாலைக் கொன்றபின் தப்பி ஓடிய மூன்று நண்பர்களின் கதை, ஷோன் தன் தந்தை பிரான்சிஸ் இறந்தபின் பெற்றுக் கொள்ளும் கடிதம் வழி கூறப்படுகிறது.

மெக்ஸிக்கோவிற்கு சென்ற மூன்று நண்பர்களினதும் சோகமான சாகசங்கள் சிறப்பாக இருக்கிறது. மூன்று வெள்ளிக் கடிகாரங்களில் மர்மம் ஒளிந்து கொள்வது இந்தப் பகுதியில்தான். ஷோன், கோஸ்டா வெர்டில் தொடர்ந்து தங்கியிருப்பதற்கான ஒரு காரணமும் வெள்ளிக் கடிகாரங்களின் மர்மத்திலேயே அடங்கியுள்ளது.

பரம்பரை வரலாறு ஒன்றினுள், காதல், அதிரடி ஆக்‌ஷன், மர்மம் என்பவற்றை கலந்து அலுக்காத வகையில் கதையை தந்துள்ளார் வான் ஹாம். சில தருணங்களில் அவரின் வசனங்கள் மனதை நெகிழச் செய்கிறது. ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை பின்பு சூடு பிடிக்கிறது. இறுதிப் பக்கங்கள் திக் திக் திக் ரகம். வான்சின் ஓவியங்கள் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக மழைபெய்யும் தருணங்களில் காட்டிற்குள் நடைபெறும் காட்சிகள் அருமை. XIIIன் பதினோராவது ஆல்பம் அதன் ரசிகர்களை அதிகம் ஏமாற்றாத ஆல்பம். (***)

நண்பர்களிற்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்…

Thursday, October 8, 2009

தீராமல் தழுவும் தாகம்


கொரிய நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க குருவான Sang Hyun இறைவனின் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்து வருபவன். மருத்துவ மனையொன்றில் தங்கியிருக்கும் நோயாளிகளிற்கு மனதிற்கு ஆறுதல் தரும் வார்த்தைகளை கூறுபவனாகவும், பிரார்த்தனை சடங்குகளை நிறைவேற்றுபவனாகவும் கையுன் செயற்பட்டு வருகிறான்.

நாள் தோறும் அவன் காணும் நோயாளிகளின் வேதனை அவனையும் வேதனையுறச் செய்கிறது. மனிதர்களிற்கு கேடு விளைவிக்கும் நோயொன்றிற்கான தடுப்பூசி தயாரிப்பதற்கான பரிசோதனையில் தன் உடலையும் ஒர் சோதனை உடலாக இணைத்துக் கொள்ள விரும்புகிறான் கையுன். தன் தலைமைக் குருவிடம் பிடிவாதமாக அதற்கான அனுமதியைப் பெற்று ஆபிரிக்காவில் நடைபெறும் பரிசோதனை முயற்சியில் கலந்து கொள்கிறான் அவன்.

நோய்க் கிருமிகள் அவன் உடலில் செலுத்தப்பட்ட சில நாட்களின் பின் அவன் உடலில் கொப்புளங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அவன் உடலிருந்து குருதியானது வாய், மூக்கு, காது வழியாக கட்டுப்பாடின்றி வழியத் தொடங்குகிறது.

உடல் நிலை சீர்குலைந்து, உயிரிழக்கும் நிலைக்கு போய்விட்ட அவனிற்கு தவறுதலாக மாசுற்ற மாற்றுக் குருதி வழங்கப்பட்டு விடுகிறது. இக்குருதியானது அதிசயிக்க வைக்கும் விதத்தில் நின்று போன அவன் இதயத்தை மீண்டும் துடிக்க செய்கிறது. மருத்துவர்களே வியக்கும் வகையில் இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்து வருகிறான் கையுன். இதன் பின் கையுன் கொரியாவிற்கு திரும்பி வருகிறான்.

ஆபிரிக்காவில் நடைபெற்ற தடுப்பூசி பரிசோதனைகளில் கலந்து கொண்டவர்களில் உயிர் பிழைத்தவன் கையுன் மட்டுமே என்பதால், அந் நிகழ்ச்சி ஒர் அற்புதம் எனவும், கையுன் ஒர் புனிதன் எனவும் வதந்திகள் விசுவாசிகளிடையே பரவி, அவனிடம் ஆசி வாங்க வரும் மக்களின் தொகை அதிகரிக்கிறது. தங்கள் வலிகளை அவனிடம் கூறி அதனை நிவர்த்திக்கும்படி அவனிடம் வேண்டுகிறார்கள் அவர்கள்.

5-photos-festival-de-cannes-photo-fiche-film-Thirst-Thirst_articlephoto இவற்றையெல்லாம் நம்ப முடியாத தன்மையுடன் பார்க்கும் கையுன் தன் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கிறான். சூரிய ஒளி பட்டால் அவன் தோல் பொசுங்க ஆரம்பிக்கிறது. பார்த்தல் ,கேட்டல் ஆகிய புலன்கள் கூரிய விருத்தியடைகின்றன. கடவுளிற்காக பிரம்மச்சர்யம் எனும் பெயரில் அவன் உடலில் அடக்கி வைக்கப்பட்டிருந்த இச்சைகள் தங்கள் எழுச்சியின் இசையை இசைக்க ஆரம்பிக்கின்றன. ரத்தத்தை பருக வேண்டுமென்ற வேட்கை அவன் உடலை தாகமாக பிழிய ஆரம்பிக்கிறது.

கையுன் தன் மனதையும், உடலையும் கட்டுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கினாலும், அவன் உடல் அவனிற்கு எதிராக இயங்க ஆரம்பிக்கிறது. அவன் உடலில் மீண்டும் கொப்புளங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. உடலின் வேதனையும், குருதி மீதான தாகத்தையும் தாங்க இயலாத நிலையில், மருத்துவ மனையில் நீண்ட மயக்க நிலையில் ஆழ்ந்திருக்கும் நோயாளி ஒருவனின் குருதியை, அந்நோயாளிற்கு தீங்கிழைக்காத வகையில் பருகுகிறான் கையுன்.[ இரு கூரான பற்கள், கழுத்தில் ஓட்டை பதிப்பதை முற்றாக மறந்து விடுங்கள்] குருதியைப் பருகியதும் அவன் உடலிலிருந்து கொப்புளங்கள் மறைகின்றன. தன் தேகத்தில் புதுப் பொலிவும், ஆரோக்யமும் நிறைவதை உணர்கிறான் கையுன்.

கையுன் சேவை புரியும் மருத்துவமனையில் தன் மகனை மருத்துவத்திற்காக அனுமதித்திருக்கும் தாய் ஒருவர், கையுனைப் பற்றி கேள்விப்பட்டு அவனைத் தேடி வருகிறார். கையுன் தன் மகனை வந்து பார்வையிட்டு அவனிற்காக பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவனிடம் கேட்டுக் கொள்கிறார். தாயுடன் கூடவே செல்லும் கையுன், நோயாளி தன் பால்ய வயது சினேகிதன் என்பதை தெரிந்து கொள்கிறான்.

நோய் குணமடைந்து வீடு திரும்பும் நண்பனின் அழைப்பை ஏற்று வாரம் தோறும் நண்பனின் வீட்டிற்கு செல்லும் கையுன், நண்பனின் அழகிய இளம் மனைவியின் உடல், உள்ளம் இரண்டின் மீதும் தாகம் கொள்ள ஆரம்பிக்கிறான்….

Park chan-wook எனும் பெயரைக் கேட்டால், தன் படைப்புக்களின் பிம்பங்களால் பார்வையாளர்களை நெளிய வைப்பவர், அதிர்ச்சியடைய வைப்பவர், இவை இரண்டிற்குமிடையில் மென்மையான கவிதைகளை பொதிந்து வைத்து தன் அற்புதமான படைப்புக்களால் அவர்களை பிரம்மிக்க வைப்பவர் எனச் சிலாகிப்பார்கள் அவருடைய ரசிகர்கள். Thirst திரைப்படம் அதற்கு விதிவிலக்கு அல்ல.

paysage-7 தமக்குள் ஊற்றெடுக்கும் தாகங்களால் அல்லலுறும் பாத்திரங்களை இம்முறை திரையில் செதுக்கியிருக்கிறார் அவர். அத்தாகங்கள் மனித சமூக ஒழுக்க நெறிகளை மீறியவையாகவே காணப்படுகின்றன. தாகம், துரோகம், குற்றம், பிராயச்சித்தம் என நகரும் கதையை வழமை போன்றே நகைச்சுவை, குருதிப் பிரவாகம், அதிரவைக்கும் தருணங்கள், கவிதை என்பவற்றின் கலவை தெறித்த ஓவியமாக பார்வையாளர்கள் முன் வைக்கிறார் Park Chan-wook.

ரத்த தாகம் கொண்ட குரு கையுனாக வருபவர் நடிகர் Song Kang-Ho. அப் பாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்திப் போகும் இயல்பான நடிப்பு அவருடையது. ரத்தம் குடிக்கப்படும் காட்சிகளை இவ்வளவு நகைச்சுவையுடனும், இயல்புடனும் யாரும் இது வரை சொல்லவில்லை எனலாம். கையுன் தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னும் தனக்குள் இருக்கும் இறுதித்துளி மனிதத்தை தக்க வைக்க போராடும் ஒர் காட்டேரியாக காட்டப்பட்டிருக்கிறார்.

ஆனால் காட்டேரியை மட்டுமன்றி பார்வையாளர்களையும் மயக்கி விடுகிறார் அழகிய இளம் மனைவியாக வரும் நடிகையான Kim Ok-Vin. அவருடைய அப்பாவித்தனமான பார்வையும், அலட்டிக் கொள்ளாத உடல் மொழி கொண்ட நடிப்பும், தாகம் கொள்ள வைக்கிறது. தன் கணவன் வீட்டில் தன் விருப்பங்களை அடக்கி வாழும் பெண்ணாக வரும் அவரே இத்திரைப்படத்தில் பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறையச் செய்யும் பாத்திரமாகிறார். காட்டேரிக் காதலனின் கரங்களில் தவழ்ந்த படியே, கூரைகள் மீதாக அவர் பறந்து செல்லும் காட்சி எங்கள் மனங்களின் சிறகுகளில் அதன் மென்மையை ஊதிச் செல்கிறது.

சற்று ஊன்றி அவதானித்தால் படத்தின் பாத்திரங்கள் யாவரும் ஏதோ ஒன்றின் மேல் தாகம் கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் [ மது, ரத்தம், விடுதலை, விளையாட்டு, நம்பிக்கை]. அதே போன்று மனிதர்களின் மத நம்பிக்கைகள் குறித்த அபத்தங்களை காட்டேரி பாத்திரம் வழி கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் இயக்குனர். சிறப்பான ஒளிப்பதிவு, நேர்தியான இசை,அழகான அலங்காரங்கள் என்பன படத்தினை சுவைக்க செய்கின்றன. இத்திரைப்படம் 2009 CANNES திரைப்பட விழாவில் ஜூரிகளின் விருதை வென்றிருக்கிறது [PRIX DU JURY].

மருத்துவமனை அறையின் சுவரில் விழும் ஜன்னலின் நிழல், சிறைப்பிடித்துள்ள பிரகாசமான ஒளியில், அசைந்திடும் இலைகள் இசைக்கும் சங்கீதத்துடன், புல்லாங்குழல் இசையும் சேர்ந்து கொள்ளும் ஆரம்பக் காட்சியும், சோகமும், மென்நகைச்சுவையும் இழைந்து, வார்த்தைகளேயின்றி கால்கள் உதிரும் கவிதையாக உருவாக்கப்பட்டிருக்கும் இறுதிக்காட்சியும் இருந்தாலும் கூட திரைப்படம் Park Chan Wook ன் ரசிகர்களின் தாகத்தினை முழுமையாக தீர்க்கவில்லை. இருப்பினும் இலைகள் இசைக்கும் சங்கீதத்தை மனம் மீட்டிக் கொண்டே இருக்கிறது. [***]

ட்ரெயிலர்

JO YEONGன் இசையை ரசிப்பதற்கு- (இதே யூ டியூப் பக்கத்தில் இந்த இசையமைப்பாளரின் ஏனைய இசை வடிவங்களையும் கேட்டுத்தான் பாருங்களேன்…..)

Friday, October 2, 2009

உன் விழிகளில் என் கண்ணீர்


மெல்போர்னில் அமைந்திருக்கும் ஆர்வங்கள் இறந்த புறநகரான மவுண்ட் வெவெர்லியில் தன் பெற்றொருடன் வாழ்ந்து வருகிறாள் சிறுமி மேரி. மேரியின் நெற்றியில் ஒர் பெரிய மச்சம், முகமெல்லாம் கோலமிட்டிருக்கும் புள்ளிகள், வெட்கத்திற்கிடையில் வெளிவரத் துடிக்கும் ஒர் புன்னகை என அவசர மனிதர்கள் நாள் தோறும் அவதானிக்கமால் கடந்து செல்லும் சிறுமிகளில் அவளும் ஒருத்தி.

மேரியின் தந்தை நோர்மன் ஒர் தொழிற்சாலையில் தேனீர் பைகளிற்கு நூல்களை இணைப்பவராக வேலை பார்த்து வருகிறார். வேலை நேரம் போக அவரின் மீதி நேரங்களில் தெருக்களில் இறந்து கிடக்கும் பறவைகளின் உடல்களை பாடம் செய்வது அவரின் பொழுது போக்கு.

மேரியின் தாயான வேரா, ஒர் மதுப் பிரியை. தேனீரில் செரி மதுவைக் கலந்து சுவைத்தபடியே, வானொலியில் ஒலிபரப்பாகும் கிரிக்கெட் வர்ணனைகளை ரசித்தபடியே, மதுவின் போதையில் மயங்கிப் போவது அவள் வாடிக்கை.

பெற்றோர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய அன்பும், அரவணைப்பும் கிடைக்கப் பெறாத மேரிக்கு நண்பர்கள் என்று சொல்லிக் கொள்வதற்கு யாரும் இல்லை. அவள் பிரியம் கொண்டிருந்த தாத்தாவின் மரணம் அவளைத் தனிமையில் தள்ளுகிறது. நொப்லெட்ஸ் எனப்படும் கார்ட்டூன் தொடரின் பாத்திரங்களிற்கு அவள் ரசிகையாகவிருக்கிறாள்.

ஒரு நாள் தபால் அலுவலகம் ஒன்றிற்கு தன் தாயுடன் செல்லும் மேரி, அங்கிருக்கும் தொலைபேசி புத்தகம் ஒன்றில் காணப்படும் அமெரிக்க வாழ் மனிதர்களின் வித்தியாசமான பெயர்கள் குறித்து ஆச்சர்யம் கொள்கிறாள்.

Mary---Max---Image-01

அவுஸ்திரேலியாவில் குழந்தைகள் பீர் கிண்ணங்களின் அடியிலிருந்து உருவாகின்றன என்று தன் தாத்தா கூறியதை நினைவு படுத்திப் பார்க்கும் மேரி, அமெரிக்காவில் குழந்தைகள் எப்படி உருவாகின்றன என்பதை அறிய ஆவல் கொள்கிறாள்.

தொலைபேசிப் புத்தகத்தின் ஒர் பக்கத்தின் சிறு பகுதியை கிழித்து தன்னுடன் வீட்டிற்கு எடுத்து வரும் அவள் மாக்ஸ் ஹாரோவிட்ஸ் எனும் நபரிற்கு ஒர் கடிதத்தை எழுதி அனுப்புகிறாள்.



மாக்ஸ், நீயூயார்க்கில் வசித்து வரும் 44 வயது நிரம்பிய, உடல் எடை கூடிய, ஒர் யூதன். Asperger Syndrome எனப்படும் ஒர் வகை மதி இறுக்க குறைபாட்டால் பீடிக்கப்பட்டவன். அதிகம் சாப்பிடுபவர்கள் சங்க கூட்டங்களிற்கு சமூகமளிப்பவன். சைகைகளையும், அறிகுறிகளையும் அவனால் இலகுவாக விளங்கிக் கொள்ள முடிவதில்லை. சிரித்தல், பயம் போன்ற தன் உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கு உதவியாக படங்கள் கொண்ட ஒர் சிறு புத்தகம் அவனிடம் இருக்கிறது. எதிர்பாராத புதிய சம்பவங்கள் அவனை அதிக பதட்டத்துக்குள்ளாக்கி அவன் மன நிலையை பாதிப்படைய செய்து விடும்.

mary-et-max-45553 தன் தபால் பெட்டியில் மேரியின் கடிதத்தைக் காணும் அவன் திகைத்துப் போகிறான், அக்கடிதத்தைப் படிப்பதா வேண்டாமா என முடிவெடுக்க முடியாது திணறுகிறான். மறு நாள் காலை மேரியின் கடிதத்தை திறந்த்து பார்க்கும் மாக்ஸ், அதனுள் ஒர் சாக்லேட்டும் இருப்பதைக் காண்கிறான். நண்பர்கள் யாருமில்லாத மாக்ஸ் மேரியை தன் நண்பியாகக் கொண்டு அவளிற்கு பதில் எழுத ஆரம்பிக்கிறான்.

மேரியின் சந்தேகங்களிற்கு பதிலையும், அவள் பிரச்சினைகளிற்கு ஆலோசனைகளையும் எழுதி அனுப்புகிறான் மாக்ஸ். கடிதங்களுடன் சாக்லேட், கேக், கெட்டிப்பால் போன்ற அவரவர் நாட்டில் கிடைக்காத புதிய சுவைகளும் நட்புடன் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.

தங்கள் எண்ணங்கள், வேதனைகள், கனவுகள்,ஆசைகள்,தோல்விகள் என அவர்கள் வெறுமையான வாழ்வினை எழுத்துக்களால் பகிர்ந்து கொள்கிறார்கள் இருவரும். அவர்களிடையே நட்பு மிக இயல்பாக உருவாகி இறுக்கமாக வேர் கொள்ள ஆரம்பிக்கிறது.

இயல்பாக அழும் ஆற்றல் தனக்கு இல்லை என்று ஒர் கடிதத்தில் மேரிக்கு எழுதுகிறான் மாக்ஸ், தான் அழுவதில் வழியும் தன் கண்ணீர் துளிகளை ஒர் சிறிய போத்தலினுள் சேகரித்து அவனிடம் அனுப்பி வைக்கிறாள் மேரி. மேரியின் கண்ணீர் துளிகளை தன் விழிகள் மீது ஊற்றி தான் அழுதால் எப்படி இருக்கும் என்பதைக் கண்ணாடியில் காண்கிறான் மாக்ஸ்.

தன் அயல் வீட்டுப் பையனான டேமியன் மீது காதல் கொள்ளும் மேரி, காதல் குறித்து தன் எண்ணங்களை மாக்ஸிற்கு கடிதத்தில் எழுதுகிறாள். வாழ்க்கையில் காதல் எனும் உணர்விலிருந்து அச்சத்தினால் ஒதுங்கியே இருக்கும் மாக்ஸிற்கு மேரியின் கடிதம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி விட, அவன் மனநிலை தீவிரமான பாதிப்புக்குள்ளாகி சிகிச்சைக்காக மனநிலை மருத்துவ மனை ஒன்றில் அவன் அனுமதிக்கப்படுகிறான்.

எட்டு மாதங்களிற்கு மேலாக மாக்ஸிடமிருந்து கடிதங்கள் எதுவும் வராததால் கோபம் கொள்ளும் மேரி, அவன் தனக்கு அனுப்பிய கடிதங்களை எரித்து விடுகிறாள். மாக்ஸ் தனக்கு கடிதம் எழுதாமலிருப்பதற்கான காரணம் தானாகவே இருக்க வேண்டுமெனக் கருதி தன் மேலான வெறுப்பை அவள் வளர்த்துக் கொள்கிறாள்.

mary-et-max-45537 மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பும் மாக்ஸ், மேரியின் கடிதங்களினால் மீண்டும் தன் மன நலம் பாதிக்கப் படலாம் எனும் அச்சத்தில் அவளிற்கு கடிதங்கள் எழுதுவதை நிறுத்தி விடுகிறான். பல வருடங்களாக அவன் விளையாடி வரும் லொட்டோ எனும் விளையாட்டில் பெரும் தொகைப் பணத்தை வெல்கிறான் அவன்.

கிடைத்த பணத்தின் மூலம் தன் கனவுகள் சிலவற்றை அவன் நிறைவேற்றிக் கொண்டாலும் அவன் வாழ்க்கை முழுமை அடையாது இருக்கிறது என்பதை அவனால் உணர்ந்து கொள்ளமுடிகிறது. ஒர் நாள் நன்கு முடிவெடுத்தவனாக தன் நிலை என்ன என்பதை விளக்கி மேரிக்கு ஒர் கடிதத்தை எழுதுகிறான் மாக்ஸ்.

பல காலங்களின் பின் மாக்ஸின் கடிதம் கண்ட மேரி மகிழ்சியில் திளைக்கிறாள். நண்பர்களிடையே மீண்டும் கடிதங்கள் சென்று வர ஆரம்பிக்கின்றன. மேரியின் கடிதங்களை பதட்டமில்லாது படிக்கப் பழகிக் கொள்கிறான் மாக்ஸ்.

காலத்தின் ஓட்டத்தில் தன் அயலவனான டேமியனைக் காதலித்து திருமணம் செய்து கொள்கிறாள் மேரி. அவள் பெற்றோர்கள் எதிர்பாராத சம்பவங்களால் இறந்து போகிறார்கள். கல்வியில் சிறப்பாக செயற்படும் மேரி, தன் உயர் கல்வி ஆராய்ச்சியை மாக்ஸையும் அவன் மனநிலைக் குறைபாட்டையும் மையமாக கொண்டு அலசி, அது குறித்த ஒர் புத்தகத்தையும் வெளியிட ஆயத்தமாகிறாள். இதனை மாக்ஸிற்கு ஒர் ஆச்சர்யமாக தர அவள் விரும்புகிறாள்.

புத்தகம் வெளியாவதற்கு முன்பாக மாக்ஸிற்கு அதில் ஒரு பிரதியையும் அனுப்பி வைக்கிறாள். மாக்ஸை சந்திப்பதற்காக தான் நீயுயார்க் நகரிற்கு வரவிருப்பதையும் அவள் மாக்ஸிற்கு அறியத்தருகிறாள்.

மேரி அனுப்பிய புத்தகத்தை பெற்றுக் கொள்ளும் மாக்ஸ் அதிர்ந்து போய் விடுகிறான். மேரி தனக்கு துரோகமிழைத்து விட்டதாக கருதும் அவன், தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளவே இயலாத நிலையில் கோபத்தின் உச்சத்தில் தான் கடிதங்களை எழுதும் தட்டச்சு இயந்திரத்தில் M எனும் எழுத்திற்குரிய அச்சுக் கம்பியை ஆவேசமாக முறித்து எடுத்து விடுகிறான்.

நியூயார்க் பயணத்திற்காக தன் வீட்டை விட்டுக் கிளம்பும் மேரியின் கைகளில் மாக்ஸின் கடிதம் கிடைக்கிறது. அதனைத் திறந்து பார்க்கும் அவள் அதனுள்ளே தட்டச்சு இயந்திரத்தின் M எழுத்தின் உடைக்கப்பட்ட அச்சுக் கம்பி மட்டும் இருப்பதைக் காண்கிறாள்.

mary-et-max-45547 மாக்ஸிடம் தன் மன்னிப்பை ஒர் கெட்டிப்பால் ரின்னின் மீது எழுதி அனுப்பி வைக்கிறாள் மேரி. தான் வெளியிட இருந்த புத்தகத்தின் பிரதிகள் அனைத்தையும் அவள் அழித்து விடுகிறாள். மீண்டும் அவள் மீதான வெறுப்பு அவள் மேல் குடி கொள்கிறது. எதைக் குறித்தும் அக்கறை இல்லாதவளாக குடிப்பழக்கத்திற்கு மெதுவாக அடிமையாக ஆரம்பிக்கிறாள் அவள்.

அவள் வாழ்க்கை சீர் குலைய ஆரம்பிக்கிறது. அவள் கணவன் டேமியன் வேறொரு காதலிற்காக அவளை விட்டு பிரிந்து செல்கிறான். ஒவ்வொரு நாளும் போதையின் மயக்கத்தின் பிடியில் தன் தபால் பெட்டியினை மாக்ஸின் கடிதத்திற்காக திறந்து பார்க்கும் மேரி தபால் பெட்டியினுள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நத்தைகளை மட்டுமே கண்டு கொள்கிறாள்.

நீயூயார்க்கில் மாக்ஸ் மனிதர்களின் வேடிக்கையான நடத்தைகளை அவதானித்து பொழுதைப் போக்குகிறான். நகர மேயரிற்கு கண்டனக் கடிதங்கள் எழுதுகிறான். வெறுமையான மனத்துடன் தெருக்களில் அலையும் அவன் பிச்சைக்காரன் ஒருவனுடன் ஏற்படும் அசம்பாவிதத்தின் போது, பிச்சைக்காரன் அவனிடம் கேட்கும் மன்னிப்பு அவன் மனதின் விழிகளைத் திறந்து விடுகிறது. மேரி தன்னிடம் கேட்ட மன்னிப்பை புரிந்து கொள்கிறான் மாக்ஸ்.

தன் வீடிற்கு வரும் மாக்ஸ் மேரிக்கு கடிதம் எழுத ஆரம்பிக்கிறான். அக்கடிதத்துடன் கூடவே தன் சேகரிப்பில் இருந்த நொப்லெட்ஸ் பாத்திரங்களின் உருவ பொம்மைகளையும் அவளிற்கு அனுப்பி வைக்கிறான்.

மேரியின் வீட்டிற்கு மாக்ஸ் அனுப்பிய பொதியை எடுத்து வரும் தபால்காரர், அவள் வீட்டுக் கதவை பல முறை தட்டியும் கதவு திறக்கப்படாததால் பொதியை வீட்டின் வாசலில் வைத்து விட்டு சென்று விடுகிறார். வெளியே பெய்து கொண்டிருக்கும் மழையின் சிறு துளிகள் அப்பொதியை ஈரம் செய்து ஆனந்தம் கொள்கின்றன.

தன் வீட்டினுள் போதை மயக்கம் கலைந்து எழும் மேரி, எதையாவது சாப்பிடுவதற்காக அலுமாரி ஒன்றைத் திறக்கிறாள். அலுமாரியினுள் அவள் தாயார் வேரா உபயோகித்து வந்த தூக்க மாத்திரைகள் அவள் கண்களில் படுகிறது.

வீட்டினுள் தூக்குப் போடத் தயாராகும் மேரி தன் கழுத்தில் கயிற்றை மாட்டிக் கொள்கிறாள், அவள் நிற்கும் கதிரை மெதுவாக ஆட்டம் போடுகிறது. கிடைத்த தூக்க மாத்திரைகள் யாவையும் விழுங்கி மதுவைக் குடிக்கிறாள் மேரி, அவள் வீட்டு வாசலில் மாக்ஸின் கடிதம் மெளனமாக அவளிற்காக காத்திருப்பது தெரியாமலே……

mary-et-max-2009-17596-425126402 பின்பு நடக்கும் மனதை உடைக்கும் தருணங்களை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரு புதியவர்களிற்கிடையில் ஒர் கடிதத்தின் மூலம் ஆரம்பிக்கும் இருபது வருடங்களிற்கும் மேலான உண்மை நட்பின் கதையை அற்புதமாக கூறுகிறது Mary And Max எனும் இந்த அனிமேஷன் திரைப்படம்.

Plasticine எனப்படும் விசேடக் களியில் உருவாக்கப்பட்ட உருவ பொம்மைகளை கொண்டு படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் அவுஸ்திரேலிய இயக்குனர் Adam Elliot. காமெடிக்குள் ஒளிந்திருக்கும் காமெடி, அருமையான கதை சொல்லல், மனதைப் பிழிந்து விடும் முடிவு என பிரம்மாதப்படுத்தியிருக்கிறார் அவர். அவுஸ்திரேலியாவில் நடைபெறும் காட்சிகள் Sepia வண்ணத்திலும், நியூயார்க்கில் இடம்பெறும் காட்சிகள் கறுப்பு வெள்ளையிலும் அழகாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.

மேரியின் முதல் கடிதத்திற்கு மாக்ஸ் பதில் எழுதும் காட்சி அருமையான இசையுடன் ஒர் நடனம் போல் காட்சியாக்கப்பட்டிருக்கும் விதம் மனதைக் கொள்ளை செய்கிறது. தன் வீட்டு வாசலை தாண்டி வெளியே வர பயம் கொண்ட லெனின், திக்குவாய் டேமியன், கண்பார்வை குறைந்த இவி, குடி மற்றும் திருட்டுப் பழக்கம் கொண்ட வேரா என திரைப்படத்தில் வரும் துணைப்பாத்திரங்களையும் அவர்களிற்குரிய குறைகளைக் கொண்டே பார்வையாளர்களை கவரச் செய்து விடுகிறார் இயக்குனர்.

மனிதர்களிடம் இருக்கும் சில குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வழியே இல்லாமல் இருக்கலாம், சில மனிதர்களின் வாழ்வின் பாதைகளும் அதன் ஓரங்களும் மலர்களால் அழகூட்டப்படாது கஞ்சல்களால் நிறைந்திருக்கலாம் ஆனால் மனிதர்கள் தம்மைத் தாமே வெறுத்து வாழ்வை சீரழித்தல் ஆகாது என்பதை நட்பின் மகத்துவத்துடன் எடுத்துக் கூறுகிறது திரைப்படம். அனிமேஷன் திரைப்படங்களில் இப்படம் ஒர் அரிய முத்து.

நண்பர்களே, உங்கள் நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களிற்காக நீங்கள் காத்திருந்திருக்கிறீர்களா? எதிர்பார்த்த கடிதங்கள் வராத போதும் உங்கள் உயிர் நண்பன் உங்களை விட்டு பிரிந்து சென்று விட்ட போதும் ஏற்படும் வேதனையை உங்கள் மனம் உணர்ந்ததுண்டா? உங்களுடன் மனம் திறந்து பேசுவதற்கு யாருமே இல்லாத வலியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? உங்களிற்கு ஒர் நண்பன் இருந்தால், உங்கள் நட்பு உண்மையாகவே உண்மையான நட்பாகவிருந்தால் உங்கள் நண்பணின் விழிகளில் வழிவது கூட உங்கள் கண்ணீர்தானே! [*****]

ட்ரெயிலர்