Thursday, October 8, 2009

தீராமல் தழுவும் தாகம்


கொரிய நாட்டைச் சேர்ந்த கத்தோலிக்க குருவான Sang Hyun இறைவனின் சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்து வருபவன். மருத்துவ மனையொன்றில் தங்கியிருக்கும் நோயாளிகளிற்கு மனதிற்கு ஆறுதல் தரும் வார்த்தைகளை கூறுபவனாகவும், பிரார்த்தனை சடங்குகளை நிறைவேற்றுபவனாகவும் கையுன் செயற்பட்டு வருகிறான்.

நாள் தோறும் அவன் காணும் நோயாளிகளின் வேதனை அவனையும் வேதனையுறச் செய்கிறது. மனிதர்களிற்கு கேடு விளைவிக்கும் நோயொன்றிற்கான தடுப்பூசி தயாரிப்பதற்கான பரிசோதனையில் தன் உடலையும் ஒர் சோதனை உடலாக இணைத்துக் கொள்ள விரும்புகிறான் கையுன். தன் தலைமைக் குருவிடம் பிடிவாதமாக அதற்கான அனுமதியைப் பெற்று ஆபிரிக்காவில் நடைபெறும் பரிசோதனை முயற்சியில் கலந்து கொள்கிறான் அவன்.

நோய்க் கிருமிகள் அவன் உடலில் செலுத்தப்பட்ட சில நாட்களின் பின் அவன் உடலில் கொப்புளங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. அவன் உடலிருந்து குருதியானது வாய், மூக்கு, காது வழியாக கட்டுப்பாடின்றி வழியத் தொடங்குகிறது.

உடல் நிலை சீர்குலைந்து, உயிரிழக்கும் நிலைக்கு போய்விட்ட அவனிற்கு தவறுதலாக மாசுற்ற மாற்றுக் குருதி வழங்கப்பட்டு விடுகிறது. இக்குருதியானது அதிசயிக்க வைக்கும் விதத்தில் நின்று போன அவன் இதயத்தை மீண்டும் துடிக்க செய்கிறது. மருத்துவர்களே வியக்கும் வகையில் இறப்பிலிருந்து உயிர்த்தெழுந்து வருகிறான் கையுன். இதன் பின் கையுன் கொரியாவிற்கு திரும்பி வருகிறான்.

ஆபிரிக்காவில் நடைபெற்ற தடுப்பூசி பரிசோதனைகளில் கலந்து கொண்டவர்களில் உயிர் பிழைத்தவன் கையுன் மட்டுமே என்பதால், அந் நிகழ்ச்சி ஒர் அற்புதம் எனவும், கையுன் ஒர் புனிதன் எனவும் வதந்திகள் விசுவாசிகளிடையே பரவி, அவனிடம் ஆசி வாங்க வரும் மக்களின் தொகை அதிகரிக்கிறது. தங்கள் வலிகளை அவனிடம் கூறி அதனை நிவர்த்திக்கும்படி அவனிடம் வேண்டுகிறார்கள் அவர்கள்.

5-photos-festival-de-cannes-photo-fiche-film-Thirst-Thirst_articlephoto இவற்றையெல்லாம் நம்ப முடியாத தன்மையுடன் பார்க்கும் கையுன் தன் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்கிறான். சூரிய ஒளி பட்டால் அவன் தோல் பொசுங்க ஆரம்பிக்கிறது. பார்த்தல் ,கேட்டல் ஆகிய புலன்கள் கூரிய விருத்தியடைகின்றன. கடவுளிற்காக பிரம்மச்சர்யம் எனும் பெயரில் அவன் உடலில் அடக்கி வைக்கப்பட்டிருந்த இச்சைகள் தங்கள் எழுச்சியின் இசையை இசைக்க ஆரம்பிக்கின்றன. ரத்தத்தை பருக வேண்டுமென்ற வேட்கை அவன் உடலை தாகமாக பிழிய ஆரம்பிக்கிறது.

கையுன் தன் மனதையும், உடலையும் கட்டுப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கினாலும், அவன் உடல் அவனிற்கு எதிராக இயங்க ஆரம்பிக்கிறது. அவன் உடலில் மீண்டும் கொப்புளங்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. உடலின் வேதனையும், குருதி மீதான தாகத்தையும் தாங்க இயலாத நிலையில், மருத்துவ மனையில் நீண்ட மயக்க நிலையில் ஆழ்ந்திருக்கும் நோயாளி ஒருவனின் குருதியை, அந்நோயாளிற்கு தீங்கிழைக்காத வகையில் பருகுகிறான் கையுன்.[ இரு கூரான பற்கள், கழுத்தில் ஓட்டை பதிப்பதை முற்றாக மறந்து விடுங்கள்] குருதியைப் பருகியதும் அவன் உடலிலிருந்து கொப்புளங்கள் மறைகின்றன. தன் தேகத்தில் புதுப் பொலிவும், ஆரோக்யமும் நிறைவதை உணர்கிறான் கையுன்.

கையுன் சேவை புரியும் மருத்துவமனையில் தன் மகனை மருத்துவத்திற்காக அனுமதித்திருக்கும் தாய் ஒருவர், கையுனைப் பற்றி கேள்விப்பட்டு அவனைத் தேடி வருகிறார். கையுன் தன் மகனை வந்து பார்வையிட்டு அவனிற்காக பிரார்த்திக்க வேண்டும் எனவும் அவனிடம் கேட்டுக் கொள்கிறார். தாயுடன் கூடவே செல்லும் கையுன், நோயாளி தன் பால்ய வயது சினேகிதன் என்பதை தெரிந்து கொள்கிறான்.

நோய் குணமடைந்து வீடு திரும்பும் நண்பனின் அழைப்பை ஏற்று வாரம் தோறும் நண்பனின் வீட்டிற்கு செல்லும் கையுன், நண்பனின் அழகிய இளம் மனைவியின் உடல், உள்ளம் இரண்டின் மீதும் தாகம் கொள்ள ஆரம்பிக்கிறான்….

Park chan-wook எனும் பெயரைக் கேட்டால், தன் படைப்புக்களின் பிம்பங்களால் பார்வையாளர்களை நெளிய வைப்பவர், அதிர்ச்சியடைய வைப்பவர், இவை இரண்டிற்குமிடையில் மென்மையான கவிதைகளை பொதிந்து வைத்து தன் அற்புதமான படைப்புக்களால் அவர்களை பிரம்மிக்க வைப்பவர் எனச் சிலாகிப்பார்கள் அவருடைய ரசிகர்கள். Thirst திரைப்படம் அதற்கு விதிவிலக்கு அல்ல.

paysage-7 தமக்குள் ஊற்றெடுக்கும் தாகங்களால் அல்லலுறும் பாத்திரங்களை இம்முறை திரையில் செதுக்கியிருக்கிறார் அவர். அத்தாகங்கள் மனித சமூக ஒழுக்க நெறிகளை மீறியவையாகவே காணப்படுகின்றன. தாகம், துரோகம், குற்றம், பிராயச்சித்தம் என நகரும் கதையை வழமை போன்றே நகைச்சுவை, குருதிப் பிரவாகம், அதிரவைக்கும் தருணங்கள், கவிதை என்பவற்றின் கலவை தெறித்த ஓவியமாக பார்வையாளர்கள் முன் வைக்கிறார் Park Chan-wook.

ரத்த தாகம் கொண்ட குரு கையுனாக வருபவர் நடிகர் Song Kang-Ho. அப் பாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்திப் போகும் இயல்பான நடிப்பு அவருடையது. ரத்தம் குடிக்கப்படும் காட்சிகளை இவ்வளவு நகைச்சுவையுடனும், இயல்புடனும் யாரும் இது வரை சொல்லவில்லை எனலாம். கையுன் தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களின் பின்னும் தனக்குள் இருக்கும் இறுதித்துளி மனிதத்தை தக்க வைக்க போராடும் ஒர் காட்டேரியாக காட்டப்பட்டிருக்கிறார்.

ஆனால் காட்டேரியை மட்டுமன்றி பார்வையாளர்களையும் மயக்கி விடுகிறார் அழகிய இளம் மனைவியாக வரும் நடிகையான Kim Ok-Vin. அவருடைய அப்பாவித்தனமான பார்வையும், அலட்டிக் கொள்ளாத உடல் மொழி கொண்ட நடிப்பும், தாகம் கொள்ள வைக்கிறது. தன் கணவன் வீட்டில் தன் விருப்பங்களை அடக்கி வாழும் பெண்ணாக வரும் அவரே இத்திரைப்படத்தில் பார்வையாளர்களை அதிர்ச்சியில் உறையச் செய்யும் பாத்திரமாகிறார். காட்டேரிக் காதலனின் கரங்களில் தவழ்ந்த படியே, கூரைகள் மீதாக அவர் பறந்து செல்லும் காட்சி எங்கள் மனங்களின் சிறகுகளில் அதன் மென்மையை ஊதிச் செல்கிறது.

சற்று ஊன்றி அவதானித்தால் படத்தின் பாத்திரங்கள் யாவரும் ஏதோ ஒன்றின் மேல் தாகம் கொண்டவர்களாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள் [ மது, ரத்தம், விடுதலை, விளையாட்டு, நம்பிக்கை]. அதே போன்று மனிதர்களின் மத நம்பிக்கைகள் குறித்த அபத்தங்களை காட்டேரி பாத்திரம் வழி கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார் இயக்குனர். சிறப்பான ஒளிப்பதிவு, நேர்தியான இசை,அழகான அலங்காரங்கள் என்பன படத்தினை சுவைக்க செய்கின்றன. இத்திரைப்படம் 2009 CANNES திரைப்பட விழாவில் ஜூரிகளின் விருதை வென்றிருக்கிறது [PRIX DU JURY].

மருத்துவமனை அறையின் சுவரில் விழும் ஜன்னலின் நிழல், சிறைப்பிடித்துள்ள பிரகாசமான ஒளியில், அசைந்திடும் இலைகள் இசைக்கும் சங்கீதத்துடன், புல்லாங்குழல் இசையும் சேர்ந்து கொள்ளும் ஆரம்பக் காட்சியும், சோகமும், மென்நகைச்சுவையும் இழைந்து, வார்த்தைகளேயின்றி கால்கள் உதிரும் கவிதையாக உருவாக்கப்பட்டிருக்கும் இறுதிக்காட்சியும் இருந்தாலும் கூட திரைப்படம் Park Chan Wook ன் ரசிகர்களின் தாகத்தினை முழுமையாக தீர்க்கவில்லை. இருப்பினும் இலைகள் இசைக்கும் சங்கீதத்தை மனம் மீட்டிக் கொண்டே இருக்கிறது. [***]

ட்ரெயிலர்

JO YEONGன் இசையை ரசிப்பதற்கு- (இதே யூ டியூப் பக்கத்தில் இந்த இசையமைப்பாளரின் ஏனைய இசை வடிவங்களையும் கேட்டுத்தான் பாருங்களேன்…..)

12 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு!

  பார்க் வான் சூக்கின் வென்ஜென்ஸ் ட்ரிலஜி பார்த்து விட்டு அதன் பாதிப்பிலிருந்து இன்னும் நான் மீளவில்லை!

  சப்-டைட்டில் உடன் டிவிடி மட்டும் வரட்டும், இதையும் இன்குளோரியஸ் பாஸ்டெர்ட்ஸ் படத்தையும் ஒரு கை பார்த்து விடுகிறேன்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 2. ஆங்கிலம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்துறது இல்லை. கண்டிப்பா இதை பார்க்க முயற்சிக்கிறேன். :)

  Old Boy மட்டும் 3-4 தடவை பார்த்திருக்கேன்.

  ReplyDelete
 3. படம் பார்க்க முடிகிறதோ இல்லையோ டிரைலர் பார்த்துவிட்டு உங்கள் விமர்சனம் படிப்பதே சுவையாக இருக்கிறது

  ReplyDelete
 4. தலைவரே விடாதீர்கள் உங்கள் கைவரிசையை காட்டி எங்களை மகிழ்வியுங்கள். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி தலைவரே.

  உலவு காம் நண்பர்களே, உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி.

  நண்பர் பாலா, ஒல்ட் பாய் எனக்கும் பிடித்த திரைச்சித்திரம்தான். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  சிவ், மகிழ வைக்கும் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 5. அருமையா இருக்கு விமர்சனம்..

  ReplyDelete
 6. ட்ரொண்ட் தளங்களுக்கு மீள வேலை கொடுக்க வைத்துவிட்டீர்களே தோழரே~ ;)

  அருமையான விமர்சனம். தொடர்க நின் சேவை.

  ReplyDelete
 7. கிஷோர் அவர்களே வருகைக்கும், கருத்துக்களை பதிந்து சென்றமைக்கும் நன்றி நண்பரே.

  ஜே, தவறாமல் பாருங்கள், உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 8. நண்பரே நான் முன்பே பின்னூட்டம் போட்டிருந்தேன்
  காணவில்லை. அதில் படம் பார்க்கவில்லை என்றும்
  எங்கு கிடைக்கும் என்றும் கேட்டிருந்தேன். ஆனால்
  இப்பொழுது பார்த்து விட்டேன்.
  உங்களின் பதிவின் காரணம் புரிந்தது
  //தாகத்தினை முழுமையாக தீர்க்கவில்லை. இருப்பினும் இலைகள் இசைக்கும் சங்கீதத்தை மனம் மீட்டிக் கொண்டே இருக்கிறது//
  உண்மை தான். இந்த நிமிடம் வரை ...

  ReplyDelete
 9. நண்பர் வேல்கண்ணன் அவர்களே, சில வேளைகளில் கருத்துக்கள் காணாமல் போய்விடுவதுண்டு. இருப்பினும் மீண்டும் வந்து கருத்து பதிந்து சென்றமைக்கு நன்றி நண்பரே.நேர வசதிகள் இருப்பின் இப்படத்தின் இயக்குனர் இயக்கிய OLD BOY எனும் படத்தையும் பாருங்கள் நண்பரே.

  ReplyDelete
 10. பார்க்கவேண்டுமென்ற ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்.. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். படத்தை பார்த்தது போல இருக்கிறது.

  ReplyDelete
 11. நண்பர் பின்னோக்கி அவர்களே கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete