Sunday, January 31, 2010

நட்சத்திரங்களின் தனிமை


upintheairhardcover440x663 தம்மிடம் பணிபுரியும் ஊழியர்களை, தாம் வேலை நீக்கம் செய்யவிருக்கும் தகவலை அவர்களிடம் தாமே நேரடியாகத் தெரிவிக்க தயங்கும் நிறுவன நிர்வாகங்கள் ரையான் பிங்ஹாம் பணிபுரியும் நிறுவனத்தின் சேவைகளை நாடுகிறார்கள்.

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம், உங்கள் வேலை காலி என்பதை மிகுந்த மரியாதை மற்றும் கண்ணியத்துடன் தெரிவிப்பதே ரையான் போன்றவர்களின் வேலை. ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படும் அதிர்ச்சி தரும் செய்தியுடன் அவர்களிற்கு புது ஆரம்பம் ஒன்றிற்கான நம்பிக்கை கலந்த ஆலோசனைகளை வழங்கலும் ரையான் வழங்கும் சேவையில் இடம்பிடிக்கிறது. ரையான் இந்த விளையாட்டில் மிகத் தேர்ந்த ஒருவனாக மிளிர்கிறான்.

தன் பணி நிமித்தம் இடைவிடாது அமெரிக்காவின் பல பகுதிகளிற்கும் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ரையானிற்கு இருக்கிறது. ரையான், தரையில் இருப்பதை விட விமானத்தில் பறப்பது அதிகம். விமான நிலையங்களே அவன் இனிய இல்லங்கள். எந்தவிதமான உறவுகளையும் விரும்பாத ஒரு சுதந்திரப் பறவையாக வானில் பறந்து திரிகிறான் அவன். தன் தனிமை குறித்து அவன் என்றுமே சிந்தித்ததில்லை.

இவ்வாறான பயணம் ஒன்றின்போது ஒரு ஹோட்டலில் அலெக்ஸ் என்ற பெண்ணுடன் அறிமுகமாகிறான் ரையான். அலெக்ஸும் அவனைப் போலவே பறந்து திரிபவள் என்பதை ரையான் அவளுடன் உரையாடுவதன் மூலம் தெரிந்து கொள்கிறான். அலெக்ஸிற்கும், ரையானிற்குமிடையில் ஏற்படும் ஈர்ப்பு, இருவரையும் தயக்கமின்றி அவர்கள் சந்தித்துக் கொண்ட அந்த இரவிலேயே தங்கள் உடல் தாகங்களை தீர்த்துக் கொள்ள வைக்கிறது, அவர்களிடம் ஒரு புதிய தொடர்பை உருவாக்குகிறது.

in-the-air-2010-17415-1414723604 தங்கள் பரபரப்பான வேலை நேர அட்டவணைகளிற்கு மத்தியிலும், தங்களிற்கு நேரம் கிடைக்கும் வேளைகளில் இருவரும் சந்தித்துக் கொண்டு, மகிழ்வாக அந்தத் தருணங்களை கழிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ரையான் பணிபுரியும் நிறுவனமானது புதிதாக நத்தாலி எனும் திறமை வாய்ந்த இளம் பெண்ணொருத்தியை பணிக்கு சேர்த்துக் கொள்கிறது. நத்தாலி, உங்கள் வேலை காலி என்பதை ஊழியர்களிடம் நேரில் சந்தித்து தெரிவிக்கும் முறையை மாற்றி, அதனை இணையத்தின் வழியாக அறிவிக்கும் ஒரு திட்டத்தை தன் நிறுவன ஊழியர்கள் முன் வைக்கிறாள்.

இத்திட்டத்தை விரும்பாத ரையான் இது குறித்து தன் பாஸிடம் உரையாடுகிறான். பாஸோ, புதிய வரவான நத்தாலி தொழிலில் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, ரையான் செய்யவிருக்கும் உங்கள் வேலை காலி அறிவிப்பு பயணத்தில் அவளையும் இணைத்து விடுகிறார். நத்தாலியுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கும் ரையான் தன் தொழில் நுணுக்கங்களை அவளிற்கு சொல்லித்தர ஆரம்பிக்கிறான்…..

in-the-air-2010-17415-857991226 தன் பணிக்காக தன்னையே அர்ப்பணித்து விட்ட, வீடு என்பதே அர்த்தமிழந்த ஒருவனிற்கு உறவுகளின் தேவை அவசியமானதா எனும் கேள்விக்கு விடை காண விழைகிறது Up In The Air எனும் திரைப்படம். தொழில் வாழ்க்கையின் வேகமான ஓட்டங்களிற்கிடையில் தற்காலிகமாக உருவாக்கிக் கொள்ளக்கூடிய கானல் உறவுகளின் எல்லைகளையும் கதை விபரிக்கிறது. இத்திரைப்படத்தின் கதை Walter Kirn எனும் அமெரிக்க எழுத்தாளரின் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

உறவுகளை அண்டாது எந்தப் பொறுப்புகளுமற்ற சுதந்திர மனிதனாக வாழும் ரையான், கானல் உறவுகளில் திருப்தி காண்பவனாக இருக்கிறான். தேவையற்ற எந்தப் பாரத்தையும் அவன் தன் தோள் பைகளில் சுமக்க விரும்புவதில்லை. மாறாக அப்பாரங்களை எரித்துவிட்டு எதுவுமில்லாத ஒருவனாகவே அவன் பிறக்க விரும்புகிறான். இதனையே அவன் தான் வழங்கும் கருத்தரங்குகளிலும் போதிக்கிறான்.

ஆனால் ரையான், அலெக்ஸை சந்தித்த பின், அவளுடன் ஆடிக், குடித்து, காதல் செய்தபின்னும்கூட அவளை நோக்கி ஈர்க்கப்பட ஆரம்பிக்கிறான். அலெக்ஸோ நிஜவாழ்வையும், தொழில்முறையின் அழுத்தமிகுந்த தருணங்களை பாரமின்றிக் கழிப்பதற்காக அவள் உருவாக்கிய கானல் வாழ்க்கையையும் சிறப்பாக பிரித்துக் கையாளும் பக்குவம் கொண்டவளாக இருக்கிறாள். அவளிற்கு தன் குடும்பம் முக்கியம். அதே வேளையில் சந்திக் காதல்களையும் அவள் வரவேற்கிறாள்.

அலெக்ஸிற்கு இது குறித்த எந்த மனக்கிலேசமும் இருப்பதில்லை. ஒரு முதிர்ச்சியடைந்த பெண்ணாகவே அவள் நடவடிக்கைகள் இருக்கின்றன. தான் உரையாற்றப் போகும் கருத்தரங்கையே அலெக்ஸிற்காக உதறித்தள்ளி விட்டு அவள் வீட்டைத் தேடி வரும் ரையானின் முகத்தில் தன் வீட்டின் கதவுகளை மூடுவதில் அவள் தயக்கம் காட்டுவதில்லை. மறு நாள் ரையானை தொலைபேசியில் அழைத்து நீ விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்று எந்த தயக்கமுமின்றிச் சொல்லும் ஒரு குடும்பத்தலைவி அவள்.

up-in-the-air-2010-17415-1864088282 முகத்தில் கதவு மூடப்பட்ட ரையானும் கண்ணியமாக, ஒரு விஸ்கி குவளையுடனும், தனிமையுடனும் மெளனமாகத் தன் ஏமாற்றத்தையும் வேதனையும் விழுங்கிக் கொள்ளத் தெரிந்தவனாகவேயிருக்கிறான். அவன் விரும்பி ஏற்படுத்திக் கொள்ள விழைந்த உறவொன்றின் மரணம் அவனைச் சாய்த்து விடவில்லை.

ரையானுடன் தொழில் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள வரும் நத்தாலி புதிய தலைமுறையைச் சேர்ந்த இளம் பெண்ணாக இருப்பினும், குடும்பம், கணவன். குழந்தைகள் எனும் கனவு அவளிற்கு இருக்கிறது. இவை பற்றி சற்றுச் சிந்தித்தும் பார்க்காத ரையான் குறித்து அவள் ஆச்சர்யம் கொள்கிறாள்.

தன் காதலனிற்காக தனக்கிருக்கும் சிறப்பான வாய்ப்புக்களை தவிர்த்து அவனைத் தொடர்ந்து வந்தவள் நத்தாலி. அந்தக் காதலன் அவளை விட்டு தான் பிரிந்து செல்வதை குறுஞ்செய்தியாக அனுப்பும் போது அவள் உடைந்து போகிறாள். ஆனால் தொடரும் வாழ்க்கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள்.

நத்தாலி, வேலை நீக்க தகவலை வழங்கிய ஒரு பெண் அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வதை அறியும் அவள் தன் வேலையை ராஜினாமா செய்கிறாள். ரையான் பணிபுரியும் நிறுவனம் நத்தாலி முன்மொழிந்த திட்டத்தைக் கிடப்பில் போடுகிறது. ரையான் மீண்டும் வானத்தில் அதிக காலம் வாழ இனி எந்தத் தடையுமில்லை..

அலெக்ஸ் அளித்த ஏமாற்றத்தை தாண்டி, நத்தாலியை புதிய நிறுவனம் ஒன்றிற்கு பரிந்துரைத்து கடிதம் எழுதுகிறான் ரையான். சமீபத்தில் திருமணம் முடிந்த, வசதிகள் அதிகமற்ற தன் தங்கைக்கு தான் விமானத்தில் வாழ்ந்த தூரங்கள் மூலம் ஒரு சுற்றுப் பயணத்தை ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறான். மேகங்களால் செய்த இதயம் கொண்ட மனிதன் அவன்.

திரைப்படத்தில் ரையானாக வருபவர் ஜார்ஜ் க்ளூனி. பின்னியிருக்கிறார் என்பதற்கு சரியான அர்த்தத்தை இப்படத்தில் அவரின் நடிப்பை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அவரின் கவர்ந்திழுக்கும் உடல் மொழியை ரசிக்காமல் இருப்பதென்பது அசாத்தியமானது. அலெக்ஸ் வீட்டிற்கு அவர் வந்து செல்லும் அந்தத் தருணத்தில் அவர் வழங்கும் நடிப்பு அற்புதமானது.

up-in-the-air-2010-17415-963862436 அலெக்ஸ் பாத்திரத்தில் Vera Farmiga, அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பு. ரையானை விட பார்வையாளர்களை அதிகம் அதிர்ச்சி அடைய வைக்கும் பாத்திரத்தை அமைதியாகச் செய்திருக்கிறார்.

நத்தாலியாக Anna Hendrick, தனது காதலன் தன்னை விட்டு பிரிந்து விட்டான் என்பதை அறிந்து ஹோட்டல் வரவேற்புப் பகுதியில் கதறி அழுவதும், அன்றிரவே இன்னொரு பையனுடன் சேர்ந்து நடனமாடிவிட்டு, அவனுடன் இரவைக் கழிப்பதும், தன் பணியில் உறுதியாக நிற்பதும் என புதிய தலை முறைப் பாத்திரம் இவரிற்கு நன்கு பொருந்தியிருக்கிறது.

படத்தில் வரும் வேலையிழக்கும் ஊழியர்கள் வழங்கும் உணர்வு குறிப்பிடத்தக்கது. திரைப்படத்தின் முடிவில் அவர்கள் வழங்கும் சாட்சியங்கள் அவதானிக்கப்பட வேண்டியவை.

நகைச்சுவை, மென்சோகம், நவீன வாழ்க்கை முறையின் அவலம் என அட்டகாசமாக படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் Jason Reitman. ஹாலிவூட்டின் நம்பிக்கை தரும் இயக்குனர்கள் பட்டியலில் அவரிற்கு இனி ஒரு இடம் இருக்கும். படத்தில் ரையான் பாத்திரம் சொல்வதாக வரும் இறுதி வரிகள் தனிமையையே கலங்க வைக்கும் தன்மை கொண்டவை.

ரையானின் பயணங்கள் தொடர்கின்றன. வானில் தெரியும் நட்சத்திரங்களிற்கும் ரையானிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது தனிமை. [****]

ட்ரெயிலர்

Wednesday, January 27, 2010

பெர்சியன் பூனைகள்


ஈரானின் தற்போதைய அதிகாரமானது மேலைத்தேய இசை குறித்து கொண்டுள்ள பார்வை வேறானது. ராக் போன்ற இசை வகைகளை கேட்பதற்கோ, இசைப்பதற்கோ ஏறக்குறைய தடை விதிக்கபபட்டுள்ள ஒரு நிலை அங்கு நிலவுகிறது.

ஆஷ்கானும், அவனது காதலி நேகாரும் மேலைத்தேய இசை குறித்த ஈரான் அதிகாரத்தின் ஒழுங்கு விதிகளை மீறியதால் சிறையில் அடைக்கபட்டு சிறிது கால தண்டனையின்பின்பாக விடுதலையாகிறார்கள்.

ராக் இசை மீது ஆர்வம் கொண்ட அந்த இரு இளம் கலைஞர்களும், ஈரானில் தமது இசைத்திறமையை அவர்களிற்கு விருப்பமான வகையில் வெளிப்படுத்த முடியாத நிலை நிலவுவதை எண்ணி மிகுந்த மன வேதனை அடைகிறார்கள்.

ராக் பாடகியான நேகார், கெடுபிடிகள் நிரம்பிய ஈரானை விட்டு கலைச் சுதந்திரம் நிரம்பிய ஐரோப்பிய நாடுகளிற்கு சென்றுவிட வேண்டுமெனும் எண்ணம் கொண்டவளாக இருக்கிறாள். லண்டனில் நடக்கவிருக்கும் ஒரு இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக ஆஷ்கானுடன் இங்கிலாந்துக்கு செல்ல விரும்புகிறாள் அவள். [இவ்வாறு செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் பின்பு ஈரான் திரும்புவதில்லை]

சட்டரீதியாக பாஸ்போர்ட்டுக்களையும், விசாக்களையும் தாங்கள் பெற்றுக் கொள்வது என்பது நடவாது என்பதை அறிந்திருக்கும் ஆஷ்கானும், நேகாரும் இவ்விடயத்தில் உதவி வேண்டி தங்கள் நண்பன் பாபாக்கை சென்று சந்திக்கிறார்கள்.

பாபாக் ஒரு இசைக்கலைஞன், ஈரானின் அதிகாரத்தால் அனுமதி மறுக்கப்பட்ட இசை வடிவங்களை பதிவு செய்வதற்காக, ஒரு ரகசியமான நிலவறை ஒலிப்பதிவு நிலையத்தை அவன் நடாத்தி வருகிறான். நேகார் சொல்வதை அக்கறையுடன் கேட்கும் பாபாக், காதலர்களை தனக்கு தெரிந்தவனான நாதேரிடம் அறிமுகம் செய்து வைக்கிறான்.

les-chats-persans-2009-18772-758573165 நாதேர், ஈரானில் தடைசெய்யப்பட்டவைகளின் முகவர்களில் ஒருவன். மேற்கு நாட்டு திரைப்படங்களின் குறுந்தட்டுக்கள், இசைத்தட்டுக்கள், போலிப் பாஸ்போர்ட்கள், மற்றும் விசாக்கள் போன்றவற்றை வினியோகித்தல், இசை நிகழ்சிகளை நடாத்த அதிகாரிகளிடம் அனுமதியைப் பெற்றுத்தரல் என அவன் தெஹ்ரானின் இளம் இசைக்கலைஞர்கள் வட்டத்தில் பிரபலமானவன். இசை என்பது நாதேரிற்குப் பிடித்தமான ஒன்று.

அதிகாரத்தின் ஒடுக்கு முறையால் திறமையான படைப்பாளிகள் நாட்டை விட்டு நீங்குவது அவனிற்கு வேதனையளிக்கும் விடயமாக இருக்கிறது. ஆஷ்கான், நேகாருடன் உரையாடும் நாதேர் அவர்கள் ராக் இசைக்கலைஞர்கள் என்பதை அறிந்து கொள்கிறான். அவர்கள் ரகசியமாக பதிவு செய்த பாடல் ஒன்றை தன் வீட்டில் கேட்கும் நாதேர், அவன் கேட்ட இசையிலும், குரலிலும், வரிகளிலும் அவர்களின் திறமையைக் கண்டு கொள்கிறான்.

ஆஷ்கானும், நேகாரும் இசைக்குழு ஒன்றுடன் இங்கிலாந்து செல்வதற்கு தேவையான பாஸ்போர்ட், மற்றும் விசாக்களை தான் எப்படியும் பெற்றுத்தருவதாகக் கூறும் நாதேர், இங்கிலாந்து கிளம்பும் முன்பாக தெஹ்ரானில் அவர்கள் ஒரு இசை நிகழ்சியை நடாத்த வேண்டும் என கனிவுடன் வேண்டுகோள் விடுக்கிறான். அந்த இசை நிகழ்சிக்கான அனுமதியை அதிகாரிகளிடமிருந்து தான் பெற்றுத்தருவதாகவும் கூறுகிறான். முதலில் சிறிது தயங்கும் ஆஷ்கானும், நேகாரும் பின்னர் இசை நிகழ்சியை நடாத்த சம்மதம் தெரிவிக்கிறார்கள்.

இங்கிலாந்து பயணத்திற்குத் தேவையான போலிப் பாஸ்போர்ட், மற்றும் விசாக்களை ஒழுங்கு செய்வதற்காக நாதேர், ஆஷ்கானையும், நேகாரையும் மாஷ் டேவிட் எனும் முதியவனிடம் அழைத்துச் செல்கிறான். மிகக் குறைந்த வசதிகள் கொண்ட குறுகலான அறை ஒன்றில் தன் ரகசிய அலுவலகத்தை இயக்கி வருகிறான் மாஷ் டேவிட். அமெரிக்கன் விசா, பச்சை அட்டை, ஐரோப்பிய விசா, ஆப்கானிஸ்தான் விசா!! பல நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் என டேவிட்டிடம் கிடைக்காத நாடுகளே இல்லை.

les-chats-persans-2009-18772-6212110 ஹாலிவூட் நடிகர் நிக்கோலாஸ் கேஜின் ஆக்‌ஷன் படத்தின் சிடியை கொண்டு வரவில்லை என்பதற்காக நாதேரிடம் செல்லமாக கோபித்துக் கொள்ளும் டேவிட், ஒரு வார காலத்தில் ஆஷ்கானிற்கும், நேகாரிற்கும் தேவையான பாஸ்போர்ட், மற்றும் விசாக்களை தயாரித்து தருவதாகக் கூறுகிறான்.

ஆஷ்கானும், நேகாரும் டேவிட்டின் அலுவலகத்திலிருந்து நாதேரிடம் விடைபெற்றுக் கொள்கிறார்கள். பாஸ்போர்ட் செலவுகளிற்காக டேவிட்டிற்கு தர வேண்டிய பெருந்தொகைப் பணம் குறித்து கவலை கொள்கிறாள் நேகார். பணவிடயத்தில் தன் தாயார் தனக்கு உதவி செய்வாள் என்று நேகாரை ஆறுதல் செய்கிறான் ஆஷ்கான்.

இங்கிலாந்து செல்வதற்கு முன் ஒரு இசைக்குழுவை உருவாக்கி கொள்ள வேண்டுமென்பதால், இசைக் கலைஞர்களைத் தேடி தெஹ்ரானில் வேட்டையை ஆரம்பிக்கிறது நாதேர், ஆஷ்கான், நேகார் கூட்டணி. தெஹ்ரானின் மூலை முடுக்களில் எல்லாம் இசைக்கலைஞர்களை தெரிந்து வைத்திருக்கிறான் நாதேர். நிலவறைகள், மாட்டுக் கொட்டகைகள், மொட்டை மாடி மறைவிடம், கைவிடப்பட்ட கட்டிடங்களின் தளங்கள் என ஒளிந்து கொண்டிருந்து ஒலிக்கும் இசையினைத் தேடிச் செல்கிறார்கள் அவர்கள்.

அவர்கள் சந்திக்கும் பெரும்பாலான இளம் கலைஞர்களிற்கு பாஸ்போர்ட், விசா, இவற்றை ரகசியமாகப் பெற்றுக் கொள்ளத் தேவையான பணம் பிரச்சினையாகவிருக்கிறது. சிலரிற்கு கடமைகள் குறுக்கே நிற்கின்றன, வேறு சிலரிற்கோ தங்கள் இசை ஈரான் மண்ணிலேயே தடைகளின் செவிகளிற்குள் ஒலிக்க வேண்டும் எனும் ஆசை.

நீண்ட தேடல் ஒன்றின் வழியாகச் சில இசைக்கலைஞர்களை இசைக்குழுவில் இணைய சம்மதிக்க வைக்கிறது மூவர் கூட்டணி. இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக நடக்கவிருக்கும் இசைநிகழ்ச்சியால் கிடைக்கும் பணம், பாஸ்போர்ட் மற்றும் விசாக்களைப் பெற்றுக் கொள்ளப் போதுமாக இருக்கும் என்று அவர்களை தைரியப்படுத்துகிறான் நாதேர்.

இதனை தொடர்ந்து ரகசியமான இடமொன்றில் தங்கள் ஒத்திகையை ஆரம்பிக்கிறது ஆஷ்கான், நேகார் இசைக்குழு. இங்கிலாந்துப் பயணம் குறித்தும், தங்கள் விருப்பங்கள் குறித்தும் கனவுகளைக் காண்கிறது அந்த இளம் இசைக் குழு. இவ்வேளையில் நாதேரைத் தொடர்பு கொள்ளும் ஒரு அதிகாரி ஆஷ்கானின் இசைக்குழு இசைநிகழ்ச்சியை தெஹ்ரானில் நிகழ்த்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதை அறிவிக்கிறார்.

les-chats-persans-2009-18772-52042181இத்தகவலால் சோகமாகும் நாதேர், ஆஷ்கானிடம் விடயத்தை தெரிவிக்கிறான். நேகாரிற்கு இதனை தெரிவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறான். ஆஷ்கான் மற்றும் நேகாரின் திறமையில் நம்பிக்கையும் அவர்களில் நேசமும் கொண்ட நாதேர், அனுமதியின்றியாவது இந்த இசை நிகழ்ச்சியை நடாத்தி அவர்களை எப்படியாவது இங்கிலாந்திற்கு அனுப்பி வைப்பதற்கு உதவ வேண்டும் என விரும்புகிறான்.

இருப்பினும் இசைநிகழ்ச்சி மீது முழு நம்பிக்கை வைக்காது தான் மிகவும் நேசிக்கும் மோட்டார் சைக்கிளை விற்று விடுகிறான் நாதேர். அதில் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஆஷ்கானிற்கும் நேகாரிற்குமான பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை பெற்றுக் கொள்வதற்காக மாஷ் டேவிட்டை சந்திக்க செல்கிறான் அவன்.

மாஷ் டேவிட்டின் அலுவலகத்தை அவன் நெருங்குகையில் அந்தக் கட்டிடத்திற்கு முன்பாக ஒரு கூட்டம் கூடியிருப்பதையும், பொலிஸ் கார் ஒன்று கட்டடத்தின் வாசலில் முறைப்பாக தரித்து நிற்பதையும் கண்டு நாதேர் உஷாராகி ஒரு சிறிய சந்தில் மறைந்து கொள்கிறான்.

சிறிது நேரத்தின் பின்பு மாஷ் டேவிட்டை பொலிஸார் கைது செய்து வந்து காரில் ஏற்றுவதை சந்திலிருந்து ரகசியமாகப் பார்கிறான் நாதேர். நாதேர் தன்னை ஒளிந்திருந்து பார்பதைக் காணும் டேவிட் எந்தச் சலனமுமின்றி பொலிஸ் காரில் ஏறிக் கொள்கிறான். தான் மறைந்திருந்த சந்திலிருந்து மனமுடைந்து ஓடிப்போகிறான் நாதேர்.

மூன்று நாட்களிற்கு மேலாக நாதேரிடமிருந்து எவ்விதமான தகவல்களும் கிடைக்காத நிலையில் ஆஷ்கானும், நேகாரும் பதட்டம் கொள்கிறார்கள். அவர்களின் இசைநிகழ்ச்சி, இங்கிலாந்து செல்வதற்கான பாஸ்போர்ட் போன்றவை குறித்த அச்சம் அவர்களை ஆக்கிரமிக்கிறது. நாதேரின் நண்பர்கள் அவர்களிற்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்துகிறார்கள்.

நாதேர் இல்லாமலேயே தங்கள் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொள்கிறது ஆஷ்கானின் இசைக்குழு. இசைநிகழ்சி நடக்கவிருக்கும் இரவில் அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் ஆஷ்கானிற்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பு, நாதேர் தெஹ்ரானில் ரகசியமாக இடம்பெறும் ஒரு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் தகவலை அவனிற்கு தெரிவிக்கிறது. இசைநிகழ்ச்சியின் பொறுப்புக்களை தன் இசைக்குழுவினரிடம் ஒப்படைத்து விட்டு நேகாரையும் அழைத்துக்கொண்டு நாதேரை தேடிச் செல்கிறான் ஆஷ்கான்.

les-chats-persans-2009-18772-1929960640 கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும் வீட்டை நெருங்கும் ஆஷ்கானும், நேகாரும் அவ்வீட்டிலிருந்து அதிகாரத்தால் தடைசெய்யப்பட்ட இசையானது சுதந்திரமாக தெருவில் கசிந்து கொண்டிருப்பதை அவதானிக்கிறார்கள். தான் மட்டும் உள்ளே சென்று நாதேரை அழைத்து வந்துவிடுவதாக கூறுகிறான் ஆஷ்கான். அவனை எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறாள் நேகார்.

வீட்டினுள் நுழைவதற்கான சங்கேத வார்த்தையைக் கூறி உள்ளே நுழைகிறான் ஆஷ்கான். வீடெங்கும் டெக்னோ இசை பெருத்த சத்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படிகளில் மதுக் கிண்ணங்களுடன் இளைஞர்கள் போதையில் கரைந்திருக்கிறார்கள். வீட்டின் மத்தியில் இளைஞர்களும், யுவதிகளும் டெக்னோவின் வீச்சிற்கு தங்களை நடனத்தின் மூலம் இணைத்துக் கொண்டு அதிர்கிறார்கள். அதிகாரம் தடைசெய்த உலகம் அங்கு ஆவேசமாக உயிர் கொண்டு ஆட, அதனூடு நாதேரைத் தேடிச் செல்கிறான் ஆஷ்கான்.

வீட்டின் இரண்டாவது மாடியிலுள்ள அறையொன்றில் போதையோடு கட்டிலில் வீழ்ந்து கிடக்கும் நாதேரைக் கண்டு கொள்ளும் ஆஷ்கான், அவனை உலுப்பி எழுப்புகிறான். ஆஷ்கானை தன் முன்னே காணும் நாதேர் குலுங்கி அழ ஆரம்பிக்கிறான். எல்லாவற்றையும் தான் சிதைத்து விட்டதாக ஆஷ்கானை அணைத்துக் கொண்டு அழுகிறான் அவன்.

நாதேரை நட்புடன் அணைத்துக் கொள்ளும் ஆஷ்கான் போதையில் இருப்பதற்காக நாதேரைக் கடிந்து கொள்கிறான், நாதேரை அவ்வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் ஆயத்தமாகிறான். இவ்வேளையில் அவ்வீட்டின் முன் சைரனை ஒலித்தவாறே வந்து நிற்கிறது ஒரு பொலிஸ் வாகனம்.

பொலிஸ் வாகனத்திலிருந்து இறங்கும் காவலர்கள் வீட்டினுள் நுழைகிறார்கள். பொலிஸ் வீட்டினுள் நுழைவதைக் காணும் ஆஷ்கான் மாடி ஜன்னல் வழியே வெளியே துரிதமாக கீழே இறங்க முயல்கிறான். துரிதகதியில் இறங்கும் பதட்டத்தில் கால் இடறி கீழே வீழ்ந்து விடுகிறான் ஆஷ்கான்.

ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும் நாதேர் தரையில் ஆஷ்கானின் உடல் எந்த அசைவுமற்றுக் கிடப்பதைக் காண்கிறான். வெறி கொண்டவனாய் வீட்டிற்குள் நுழைந்த காவலர் மேல் பாயும் நாதேரை அவர்கள் அடக்கி வீழ்த்துகிறார்கள்.

les-chats-persans-2009-18772-2090845041 ஆஷ்கானிற்கு நடந்ததை அறிந்து கொள்ளும் நேகார் அவ்விடத்தை விட்டு விலகி, ஆஷ்கானும் அவளும் அற்புதமான தருணங்களை இனிமையாகக் கழித்த மொட்டை மாடிக்குச் செல்கிறாள். மொட்டை மாடியிலிருந்து இருளில் மூழ்கியிருக்கும் தெஹ்ரானை அவள் விழிகள் வெறிக்கின்றன. அடக்கு முறையின் ரகசிய கண்கள் அந்த இரவினூடு அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கின்றன. நேகாரின் கண்கள் திரையில் இருந்து விலக, அவள் உடல் மாடியிலிருந்து மெதுவாகப் பின்னோக்கி சரிகிறது.

மருத்துமனையில் ஒரு ட்ராலியில் ஆஷ்கான் தள்ளிச் செல்லப்படுகிறான். அவன் தலையிலிருந்து ரத்தம் வடிந்தபடியே இருக்கிறது. அவனது வலி நிரம்பிய முகம், அவனைத் தள்ளிச் செல்வோர், மருத்துவமனை என யாவும் தெளிவற்றுக் கலங்கலாக தெரிகின்றன. அந்தக் கலங்கலினூடாக திரை இருள்கிறது, நிலவறையில் வாழும் இசை ஒளிர்கிறது.

இளமை, இசை, துள்ளல், கொண்டாட்டம், நகைச்சுவை, சோகம் என ஈரானில் ஒடுக்கப்பட்டிருக்கும் இளம் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை அற்புதமாக படம் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறது Nobody Knows About the Persian cats எனும் இந்த ஈரானியத் திரைப்படம். படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் இயக்குனர் Bahman Ghobadi.

இயக்குனர் பாமன் கோபாடி ஒரு படத்தை இயக்குவதற்காக ஈரானிய அதிகாரிகளிடம் அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தார். மூன்று வருட இழுத்தடிப்புக்களின் பின்னர் அவரிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோபாடி தளராமல் ஒரு இசை ஆல்பத்தை பதிவு செய்வதற்கு விண்ணப்பித்தார் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. சற்றும் தயங்காது கோபாடி அனுமதி பெறப்பாடாத இசை ஆல்பங்களை பதிவு செய்யும் ஒரு நிலவறை ஒலிப்பதிவு மையத்தில் தனது ஆல்பத்தை பதிவு செய்தார்.

அந்த நிலவறையில் அவர் சந்தித்த இளம் இசைக்கலைஞர்களின் ஒரு புதிய உலகை அவர் திரைக்கு எடுத்து வந்திருக்கிறார். அந்த இளைஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் அபாயங்கள், அயலவர்களின் தொல்லைகள், பொலிஸ் ரெய்டுகள், சவுக்கடித் தண்டனைகள் என பல விடயங்களை திரைப்படம் பேசுகிறது. இவையெல்லாவற்றையும் இசை எனும் ஒன்றிற்காகவே அந்த இளைஞர்கள் அனுபவிக்கிறார்கள் என்பது சிறப்பாக திரைப்படத்தில் கூறப்படுகிறது. ஈரான் அதிகாரத்தின் அனுமதி இல்லாமலேயே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் பல சம்பவங்கள் உண்மை நிகழ்வுகளே.

Indie Rock, பாப் ராக், பெர்சியன் ராப், மெட்டல், நாட்டார் பாடல், மரபுப் பாடல், என படத்தில் வரும் பாடல்களும் இசையும் ரசிகர்களைக் கிறங்கடிக்கின்றன. குறைந்த வசதிகளுடன் செயற்படும் இந்த இளம் கலைஞர்களின் படைக்கும் திறமை பிரம்மிக்க வைக்கிறது.

கண் விழித்தெழு கடவுளே எனும் பெர்சியன் ராப் பாடலின் மிளகாய் வரிகள் ஈரானின் இன்றைய சமூக நிலையை குறுக்காக வெட்டி உண்மை நிலையைப் பாடுகின்றன. நாதேர் பாடும் மரபுப் பாடலின் இசை, ஒளிப்பதிவு, நடனம் என்பன ஒன்று சேர்ந்து, எல்லைகள் கடந்து அரங்கிலிருக்கும் ரசிகனின் மனதைக் கட்டி அணைக்கின்றன.

823ae03 திரைப்படத்தில் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்ததும் கமெரா தெஹ்ரானின் தெருக்களில் இறங்கிவிடுகிறது. நிலவறையில் உருவாகும் அப்பாடல்களால் எட்ட முடியாத தொலைவிலுள்ள தெருக்களையும், மக்களையும் ஊடுருவியவாறே கமெரா வேகமாகப் பறக்கிறது. அக்காட்சிகள் வழியே தெஹ்ரானின் வறுமையையும், செல்வத்தையும், வாழ்வையும் நுட்பமாகக் காட்டியிருக்கிறது கமெரா.

படத்தின் மற்றொரு முக்கிய அம்சம் நகைச்சுவை. ஷோலே படத்தில் கதாநாயாகி கண்ணாடித் துண்டுகளின் மேல் நடனமிடும் காட்சியைக் கண்டு கண்ணீர் சிந்தும் குருவி, இளைஞர்கள் இசைக்கும் மெட்டல் இசையைக் கேட்டபின் உணவு உட்கொள்ள மறுக்கும் மாடுகள், கண்பார்வை இல்லாவிடிலும் ஈரானை விட்டு நீங்கி வேறு நாடுகளில் அழகை ரசிக்க விரும்பும் தம்பதிகள் என இயல்பான, செறிவான நகைச்சுவை.

படத்தில் தன் சிறப்பான நடிப்பால் மனதைக் கவர்பவர்களில் முதலிடம் பிடிப்பவர் நாதேர் பாத்திரத்தில் பின்னியெடுத்திருக்கும் Hamed Behdad. தடை செய்யப்பட்ட திரைப்பட சிடிக்களை விற்றதற்காக நடக்கும் விசாரணையில் அவர் வழங்கும் நடிப்பு அரங்கையே சிரிப்பில் ஆழ்த்திவிடுகிறது. நேகார், ஆஷ்கான் ஆகிய இருவரும் நிஜ வாழ்வில் இசைக்கலைஞர்கள். படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே இவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு சென்று விட்டார்கள்.

ஈரானில் ஒடுக்கப்படும் இளம் இசைக்கலைஞர்களின் உண்மைநிலை குறித்து வெளிப்படையாக துணிச்சலுடன் பேசும் ஒரு பதிவாக இப்படம் அமைந்திருக்கிறது. ஈரானில், வீட்டில் பூனைகள், நாய்களை வளர்க்கலாம் ஆனால் அவற்றை வெளியே எடுத்துச் செல்ல அங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்ற நிலையில்தான் இளைஞர்கள் இசைக்க விரும்பும் இசையும் அடைபட்டுக்கிடக்கிறது. நீண்ட நாட்களின் பின் நான் மிகவும் ரசித்துப் பார்த்த படமிது. தரமான படங்களை விரும்பும் நண்பர்களிற்கு நான் இத்திரைப்படத்தை தயங்காது பரிந்துரை செய்கிறேன். [****]

ட்ரெயிலர்


கடவுளே கண்விழி !
























நாதரின் பாடல்




Wednesday, January 20, 2010

தோற்கடிக்க முடியாத ஆன்மா

ஏறக்குறைய முப்பது வருட சிறைத்தண்டனையின் பின்பாக 1990ல் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் நெல்சன் மண்டேலா, 1994ல் தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொள்கிறார். அக்காலத்தில் தென்னாபிரிக்கா நாடு வேலையின்மை, பொருளாதாரத்தில் பின்னடைவு, குற்றச் செயல்களின் அதிகரிப்பு, வெள்ளை, கறுப்பு இன மக்களிற்கிடையில் முற்றிலுமாக மலர்ந்திருக்காத புரிந்துணர்வு என்பவற்றை தன்னகத்தே பாரிய பிரச்சினைகளாகக் கொண்டிருந்தது.

பெரும்பான்மையான வெள்ளை இனத்தவர்கள், புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்கும் மண்டேலாவின் ஆட்சியில் தாங்கள் யாவரும் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்படுவோம் என்ற அச்சமும், மண்டேலாவின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். கறுப்பின மக்களின் மனங்களிலும், தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறையால் உருவாகிய வெள்ளையர்கள் மீதான கோபம் இன்னமும் தணியாத சூட்டுடன் இருக்கிறது.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற மண்டேலா, தனக்கு முன்பாக சாவாலாக குவிந்து கிடக்கும் பிரச்சினைகளை கண்டு அஞ்சிடாது அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கிறார். அவர் கட்டியெழுப்ப விரும்புவது பல்வேறு இன மக்களும் ஒற்றுமையுடனும், சுபீட்சத்துடனும் வாழக்கூடிய ஒரு வானவில் தேசம்.

இதற்காக மண்டேலா, தென்னாபிரிக்காவின் வெள்ளை இனத்தவரின் நம்பிக்கையை தான் வென்றெடுக்க வேண்டுமென்பதில் குறியாக இருக்கிறார். தனது அலுவலகத்தில் வெள்ளையர்களை தொடர்ந்து பணியில் பேணுகிறார். கறுப்பினத்தவர்களை மட்டுமே கொண்டிருக்கும் தன் மெய்காவலர் குழுவில் வெள்ளையர்களையும் அங்கம் வகிக்கச் செய்கிறார். மக்களுடன் நெருங்கியிருக்க இயலுமானவரை முயல்கிறார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டபின் முதன்முதலாக ஒரு ரக்பி மேட்ச்சிற்கு செல்கிறார் மண்டேலா. அந்த மேட்சில் இங்கிலாந்து ரக்பி அணியும், தென்னாபிரிக்காவின் ரக்பி அணியும் மோதவிருக்கின்றன.

தென்னாபிரிக்காவின் ரக்பி அணியானது Springboks எனவும் அதன் ஆதரவளார்களால் செல்லமாக அழைக்கப்படுகிறது. [ஸ்பிரிங்பொக் என்பது தென்னாபிரிக்காவின் ஒரு வகை மானினத்தைக் குறிக்கிறது.] கறுப்பின மக்களிற்கு அந்த அணியானது ஆண்டாண்டு காலமாக அவர்கள் அனுபவித்த நிறவெறியின் அடையாளமாகவே தெரிகிறது. இதனால் தென்னாபிரிக்க ரக்பி அணியை அவர்கள் வெறுக்கிறார்கள். ரக்பி அணியிலும் ஒரே ஒரு கறுப்பினத்தவர் மட்டுமே அங்கம் வகிக்கிறார்.

invictus-2010-15450-351972636 இங்கிலாந்திற்கும், தென்னாபிரிக்காவிற்குமிடையிலான மேட்ச் ஆரம்பமாகிறது. தென்னாபிரிக்கா அணியானது மிகவும் வலுவிழந்த அணியாக இருக்கிறது. இதனால் இங்கிலாந்து அணி இலகுவாக புள்ளிகளை ஈட்டிக் கொள்கிறது.

மைதானத்தில் இருக்கும் கறுப்பர்கள் இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக ஆரவாரம் செய்கிறார்கள். வெள்ளையர்கள் மட்டுமே தென்னாபிரிக்கா அணிக்காக உற்சாக குரல் எழுப்புவர்களாக இருக்கிறார்கள். ஆட்டத்தின் முடிவில் பரிதாபமான ஒரு தோல்வியைத் தழுவுகிறது தென்னாபிரிக்கா அணி.

ஒரு நாட்டின் மக்கள் விளையாட்டு மைதானத்தில் இரு வேறு நாடுகளாகப் பிரிந்து கிடப்பதை அவதானிக்கும் மண்டேலாவின் உள்ளத்தில் ரக்பி விளையாட்டை வைத்தே இரு இனங்களிற்கு இடையிலும் ஒற்றுமையை உருவாக்க முடியும் என்ற எண்ணம் எழுகிறது. உடைந்து போய்க் கிடக்கும் ரக்பி அணிக்கு புத்துயிர்ப்பு அளிப்பதற்கு தன் மனதில் தீர்மானம் கொள்கிறார் அவர்.

நடந்து முடிந்த மேட்சில் தென்னாபிரிக்க அணி சந்தித்த தோல்வியை அடுத்து அந்த அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு வருடத்தில் வரவிருக்கும் உலகக் கோப்பை ஆட்டத்திற்கு தென்னாபிரிக்கா அணியானது அதன் கனவில் கூட தெரிவாகாது எனக் கணிக்கிறார்கள் வல்லுனர்கள்.

தென்னாபிரிக்க ரக்பி அணியின் நிர்வாகம், மற்றும் அதன் கேப்டன் பிரான்சுவாவைக் குறி வைத்து விமர்சனங்கள் பாய்கின்றன. இந்நிலையில் வெள்ளை இனத்தவர்களின் நிறவெறியின் அடையாளமாக திகழும் தென்னாபிரிக்க ரக்பி அணியைக் கலைத்து விடவேண்டுமென தீர்மானம் கொண்டு வருகிறது கறுப்பர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தேசிய விளையாட்டுக் கவுன்சில்.

தேசிய விளையாட்டுக் கவுன்சிலின் தீர்மானத்தை அறிந்து கொள்ளும் மண்டேலா அதற்கு குறுக்கே நிற்கிறார். தனது முப்பது வருட சிறை வாழ்க்கையில் வெள்ளையர்களையும், அவர்கள் நூல்களையும் தான் நன்கு கற்றறிந்ததை தேசிய விளையாட்டுக் கவுன்சில் அங்கத்தினர்களிடம் அவர் நயமாக எடுத்துக் கூறுகிறார்.

invictus-2010-15450-958563979 எதிரியை மன்னிப்பதன் மூலமே எங்கள் ஆன்மாக்களைச் சுதந்திரமாக்கமுடியும், இனங்களிற்கிடையில் வாழ்ந்துவரும் அச்சத்தை உடைக்க முடியும், வானவில் தேசத்தை பல இனங்ளாக சேர்ந்து உருவாக்க முடியும் என்றும் விளக்குகிறார். ஆனால் மண்டேலாவிற்கு அதிகம் நெருங்கியவர்கள் கூட ரக்பி விளையாட்டின் மூலம் தேச மக்களை ஒன்றிணைக்கமுடியும் என்ற மண்டேலாவின் ரகசியத் திட்டத்தில் நம்பிக்கை இல்லாது இருக்கிறார்கள்.

ஸ்பிரிங்பொக்ஸ் மீதான கடுமையான விமர்சனங்களின் பின் அந்த அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுகிறார். பிரான்சுவா அணியின் தலைவனாக நீடிக்கிறான். தனது பரபரப்பான நேர அட்டவணைக்கு மத்தியிலும் ஸ்பிரிங்பொக்ஸை சிறப்பான அணியாக மாற்றிட விரும்பும் மண்டேலா, அணியின் காப்டன் பிரான்சுவாவை தன் அலுவலகத்தில் வரவேற்று அவனுடன் உரையாடுகிறார்.

தன் சிறை வாழ்க்கையில் தான் உடைந்து போய்விடாது தனக்கு ஊக்கம் தந்தது ஒரு கவிதை என்பதை பிரான்சுவாவிற்கு தெரிவிக்கும் மண்டேலா, வாழ்க்கையில் மகத்துவங்களை வெல்வதற்கு அவனும் எதிலிருந்தாவது ஊக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவனுடன் ஆதரவாக உரையாடுகிறார். மண்டேலா, தனது அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதை தன்னிடம் மறைமுகமாகக் கேட்கிறார் என்பதை மெல்லப் புரிந்து கொள்கிறான் பிரான்சுவா.

தென்னாபிரிக்க அணியின் பயிற்சிகள் கடுமையாகின்றன. மண்டேலாவின் வேண்டுகோளிற்கிணங்க ரக்பி பற்றி அதிகம் அறிந்திராத, அலட்டிக் கொள்ளாத கறுப்பின மக்கள் வாழும் வறிய பகுதிகளிற்கு சென்று அங்குள்ள சிறுவர்களிற்கு ரக்பி விளையாட்டை அறிமுகம் செய்கிறது பிரான்சுவாவின் அணி. இது அணியினர்க்கு ஒரு புது அனுபவமாக அமைகிறது.

இவ்வகையான நடவடிக்கைகள் தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்கள் மத்தியில் ரக்பி அணி குறித்த நல்லெண்ணத்தை உருவாக்கும் அதே வேளையில் வெள்ளை இன மக்களின் பெருமையும், உயிருமான ரக்பி மீது மண்டேலா காட்டும் அக்கறை, அவர் மீது வெள்ளையர்கள் கொண்டிருந்த அவநம்பிக்கையை விலக்கி கொள்வதற்கும் உதவுகிறது.

தென்னாபிரிக்க மக்களின் ஆதரவும், கடுமையான பயிற்சிகளும், ஊக்கமான விளையாட்டும் தென்னாபிரிக்க அணியை உலக கிண்ணப் போட்டியின் கால்சுற்றுக்கு எடுத்து வருகின்றன. கால்சுற்றுப் போட்டியில் அவர்கள் அவுஸ்திரேலிய அணியுடன் மோதியாக வேண்டும்.

invictus-2010-15450-1276228227 அவுஸ்திரேலிய அணியுடன் மோத கடுமையான பயிற்சிகளை எடுத்துக் கொள்ளும் தென்னாபிரிக்க அணியை தானே நேரில் வந்து சந்திக்கும் மண்டேலா, அவர்களுடன் அன்பாக உரையாடி அவர்களை ஊக்கப்படுத்துகிறார். பிரான்சுவாவுடன் தனிமையில் உரையாடும் மண்டேலா விடைபெறுவதற்கு முன்பாக அவனிடம் ஒரு கடித உறையைத் தந்து செல்கிறார். அன்றிரவு தனது அறையில் அந்த உறையைப் பிரிக்கும் பிரான்சுவா, Invictus எனும் கவிதையை அதனுள் காண்கிறான். அந்தக் கவிதை தனக்காக மண்டேலாவின் கைகளால் பிரதி செய்யப்பட்டிருக்கிறது என்பதனையும் அவன் அறிந்து கொள்கிறான்.[ Invictus கவிதை William Ernest Henley எனும் ஆங்கிலக் கவிஞரால் 1875ல் எழுதப்பட்டது]

அடுத்த நாள் இடம்பெறும் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை அட்டகாசமாகத் தோற்கடிக்கிறது தென்னாபிரிக்க ரக்பி அணி. தென்னாபிரிக்கா தேசமே களிப்பாகிறது. தாம் கண்ட வெற்றியைக் கூட முழுமையாகக் கொண்டாடாது கடுமையான பயிற்சிகளில் இறங்குகிறது தென்னாபிரிக்க ரக்பி அணி. தெருவில் ஓடிச் செல்லும் அவர்களைக் காணும் மக்கள் உற்சாக குரல் எழுப்பி அவர்களைப் பாராட்டுகிறார்கள்.

கடுமையான பயிற்சிகளின் மத்தியில் கிடைக்கும் ஒரு ஓய்வு நாளில், மண்டேலா தன் தண்டனையைக் கழித்த Robben Island சிறையைச் சென்று பார்க்கும் வாய்ப்பு தென்னாபிரிக்கா அணியினர்க்கும், அவர்கள் துணைவிகளிற்கும் கிடைக்கிறது. சிறைச்சாலையை சுற்றிப் பார்க்கும் பிரான்சுவா, மண்டேலா அடைக்கப்பட்டிருந்த அறையைப் பார்வையிடுகிறான்.

மிகக் குறுகலான சிறு அறை. ஒரு சிறிய ஜன்னல், ஒரு மேசை, ஒரு கதிரை, தரையில் படுத்துக் கொள்ள ஒரு விரிப்பு. அறையின் மத்தியில் நின்று தன் கைகளை விரிக்கிறான் பிரான்சுவா. அவன் இரு கைகளின் விரல்களும் அந்த சிறு அறையின் ஒடுக்கு முறை எல்லைகளை தொடுவதற்கான இடைவெளி அதிகம் இருக்கவில்லை.

பிரான்சுவாவின் காதுகளில் மண்டேலா சிறையில் படித்து ஊக்கம் பெற்ற Invictus கவிதையின் வரிகள் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. அவன் மனதில் சிறையில் கல்லுடைத்துக் கடூழியம் செய்யும் நெல்சனின் உருவம் தோன்றுகிறது. முப்பது வருடங்களாக ஒரு குறுகிய அறையில் தன்னை அடைத்துவைத்து ஒடுக்கிய மக்களை நேசத்துடன் அணைத்துக் கொள்ளும் ஒரு மாமனிதனை அவன் உணர்ந்து கொள்கிறான்.

invictus-2010-15450-657749166 தொடரும் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை தோற்கடிக்கிறது தென்னாபிரிக்கா [ யார்தான் அவர்களை தோற்கடிக்க தவறினார்கள்!]. இறுதிப் போட்டியில் அவர்களுடன் மோதவிருப்பது வெல்லவே முடியாத அணியெனப் பெயர் எடுத்த நியூசிலாந்தின் All Blacks. தென்னாபிரிக்காவிற்கு தோல்வி நிச்சயம் என்பது பரவலாகப் பேசப்படுகிறது.

தென்னாபிரிக்க அணியானது, நியூசிலாந்தை எப்படிக் கவிழ்க்கலாம் என வியூகம் வகுக்க, ஓய்வில்லாத கடும் வேலையால் மயங்கி விழுந்து தன் வீட்டில் கட்டாய ஓய்விலிருக்கும் மண்டேலா, நியூசிலாந்து அணி கலந்து கொண்ட போட்டிகளில் அவர்களின் தீவிரமான விளையாட்டைப் பார்த்து சிறிது அச்சம் கொள்கிறார். அவர் எதிர்பார்த்திருப்பது வெறும் ஆட்டமல்ல, ஒரு தேசத்தின் ஒற்றுமையை நிர்ணயிக்கப் போகும் ஆட்டமல்லவா அது.

இறுதி ஆட்டம் நிகழும் நாள் வருகிறது. மைதானத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரே நாடு, ஒரே அணியென தென்னாபிரிக்காவின் கொடிகள் காற்றில் உற்சாகமாய் அசைகின்றன. தென்னாபிரிக்க வீரர்கள் அணியும் மேற்சட்டை அணிந்து மைதானத்திற்குள் நுழையும் மண்டேலா அவர்களை உற்சாகப்படுத்துகிறார்.

தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. மதுபான விடுதிகள், வீடுகள், கடைகள் என எங்கும் தொலைக்காட்சியின் முன்பாக எல்லா இன மக்களும் குழுமியிருக்கிறார்கள். மைதானத்தில் நீயுசிலாந்து வீரர்கள் தங்கள் எதிரிகளைப் பயமுறுத்தும் போர் நடனத்தை ஆடுகிறார்கள். நடுவர் விசிலை ஊதுகிறார். ஆட்டம் ஆரம்பமாகிறது…. அந்த ஆட்டத்தின் முடிவு விளைவித்த மந்திரக் கணங்களை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Jhon Carlin, என்பவர் எழுதிய Playing The Enemy எனும் நாவலைத் தழுவி Invictus எனும் இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் மதிப்பிற்குரிய ஹாலிவூட் பெருசு Clint Eastwood ஆவார்.

பிளவு பட்டுக்கிடந்த ஒரு நாட்டின் மக்களை, ஒரு விளையாட்டு அணியின் வெற்றி மூலமாக ஒன்றிணைப்பதில் வெற்றி கண்ட மண்டேலாவின் கதையை உணர்ச்சி ததும்பக் கூறுகிறது திரைப்படம். பொருளாதாரப் பின்னடைவில் இருந்த தென்னாபிரிக்காவை முன்னேற்றுவதற்கு அவர் மேற்கொண்ட ஓய்வற்ற முயற்சிகளையும், வெள்ளை இன மக்களை தன் மேல் நம்பிக்கை கொள்ள வைக்க அவர் எடுத்த நடவடிக்கைகளையும் திரைப்படம் அழகாகச் சித்தரிக்கிறது.

உறக்கம் விழித்து எழுந்து, கலைந்திருக்கும் தன் படுக்கையை தானே ஒழுங்குபடுத்தும் ஆரம்பக் காட்சிகளிலேயே மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்கிறார் ஜனாதிபதி மண்டேலா.

அவரது ஒவ்வொரு செயல்களும் வியக்க வைக்கின்றன. ஆபிரிக்காவின் முன்னேற்றத்திற்காக அயராது ஓய்வின்றி உழைப்பதிலும், ஒரு சிறுவனைப் போல் தென்னாபிரிக்க ரக்பி அணியின் தகவல்களை அறிந்து கொள்ள விழைவதிலும், தன்னை நெருங்கியுள்ள மனிதர்களுடன் அவர் பழகும் கண்ணியமான விதத்திலும் இப்படி ஒரு மனிதர் இருப்பது சாத்தியமா என ஆச்சர்யப்படவைக்கிறது அப்பாத்திரம் .

வெள்ளையர்களை எதிரிகளாகக் கருதாது, அவர்களையும் நேசத்துடன் அணைத்துக் கொண்டு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதில் அவர் காட்டும் அக்கறை, எப்படி முப்பது வருட ஒடுக்குமுறையின் பின்னால் இவரால் இதை சாத்தியமாக்க முடிகிறது எனும் கேள்வியினை மனதில் ஓயாது எழுப்புகிறது.

திரைப்படத்தில் மண்டேலாவைப் போலவே காட்சிகளும் எளிமையாக இருக்கின்றன. இது பார்வையாளர்களை காட்சிகளுடன் இலகுவாக ஒன்றிவிடச் செய்கிறது. படத்தில் இடையிடையே பொழியும் பியானோ இசை, இனிமையான ஒரு சாரல்.

invictus-2010-15450-1472055972 மண்டேலா பாத்திரத்தில் Morgan Freeman. தன் சிறப்பான, மென்மையான நடிப்பால் ரசிகர்களை இலகுவாகக் கவர்கிறார் ஃப்ரீமேன். பிரான்சுவா வேடத்தில் Matt Damon. திரைப்படத்தில் அவரின் முழுத்திறமையையும் வெளிப்படுத்தக்கூடிய பாத்திரம் அவரிற்கு கிடைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் அடக்கமாக, அழகாக நடித்துச் செல்கிறார்.

மண்டேலாவின் இரு இன மெய்ப்பாதுகாவலர்கள் மத்தியில் ரக்பி மூலமாக துளிர்விடும் நட்பு இயல்பாக சொல்லப்படுகிறது. தன் வீட்டில் வேலை பார்க்கும் கறுப்பின பணிப்பெண்ணிற்கும் சேர்த்து ரக்பி ஆட்டத்திற்கு டிக்கட் வாங்கி வரும் பிரான்சுவா, இறுதி ஆட்டத்தின்முடிவில் மண்டேலாவின் கறுப்பின மெய்ப்பாதுகாவலரை கட்டியணைத்து உற்சாக கூச்சல் போடும் வெள்ளையர் என மனதை நெகிழ வைக்கும் காட்சிகள் ஏராளம். மண்டேலாவின் தனிமை நிறைந்த வாழ்க்கையின் சோகமும், தென்னாபிரிக்காவே தன் குடும்பம் என்று அவர் கூறுவதும் மனதைக் கலங்கடிக்கின்றன.

இருப்பினும் பெருசு க்ளிண்ட், வெள்ளையர்கள் மற்றும் கறுப்பர்கள் ஒன்றிணைவதை ஆழமாகக் காட்டவில்லை என்பது என் கருத்து. பிரான்சுவா குடும்பம் மூலமாக ஒரு வெள்ளை இன குடும்பத்தை அவர் முன்னிறுத்துகிறார். ரக்பி அணி வீரரொருவரின் குடும்பத்தை தவிர்த்து பிறிதொரு குடும்பத்தை அவர் காட்டியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். அதே போன்று ரக்பி அணியில் இடம்பெறும் சில வீரர்களின் இன வெறித் தன்மை எவ்வாறு மாற்றம் கொள்கிறது என்பதை அவர் விரிவாகக் காட்டவில்லை. எல்லாம் கலந்ததுதான் உலகம் என்று கூறுகிறாரோ பெருசு!!

நடிகராக க்ளிண்டை எனக்கு சிறு வயது முதலே பிடிக்கும். ஆனால் இயக்குனர் க்ளிண்டை இன்று எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் இயக்கும் படங்களில் மனித நேயம் என்பது உணர்வுபூர்வமாகவும், மென்னழகுடனும் வெளிப்படுகிறது என்று நான் உணர்கிறேன். Invictus திரைப்படம் மூலம் Clint Eastwood, ரசிகர்களின் மனங்களை இலகுவாக வென்று விடுகிறார். [***]


Invictus

Out of the night that covers me,
Black as the pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.

In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeonings of chance
My head is bloody, but unbowed.

Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds and shall find me unafraid.

It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.


ட்ரெயிலர்

Friday, January 15, 2010

கற்களை வீசிய புனிதர்கள்


கிறிஸ்துவிற்கு பின் நான்காம் நூற்றாண்டு. எகிப்தின் பிரபலமான துறைமுக நகரமான அலெக்ஸாண்ட்ரியா, எண்ணற்ற அறிஞர்களின் எழுத்துக்கள் நிரம்பிய அதன் நூலகத்திற்கும், மத்திய தரைக்கடலை கண்சிமிட்டாது நோக்கிக் கொண்டிருக்கும் அதன் கலங்கரை விளக்கத்திற்கும் பேர் போனது.

அலெக்ஸாண்ட்ரியா நகரம் ரோம அதிகாரத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு நகரமாகும். கிரேக்க ரோம நாகரீகம் அங்கு மேலோங்கியிருந்தது. பேகான் தெய்வங்களின் [ கிறிஸ்தவ, இஸ்லாம், யூத கடவுள்கள் அல்லாத தெய்வங்கள்] வழிபாடுகள் விமரிசையாக அங்கு இடம்பெற்றன. இவற்றையெல்லாம் ஆட்டிப்பார்க்கப் போகும் காற்று ஒன்று அலெக்ஸாண்ட்ரியா தெருக்களில் மெதுவாக உயிர் கொள்ள ஆரம்பித்திருந்தது. அக்காற்றின் பெயர் கிறிஸ்தவம்.

கிறிஸ்தவம் வறியவர்களை பசியாற்றியது, அடிமைகளை அணைத்தது, அலெக்ஸாண்ட்ரியாவின் சமூக ஏற்றத்தாழ்வுகள் அதன் வேரிற்கு தீர்ந்து விடாத நீராக அமைந்தன. அதிகாரத்தின் கண்களிற்கே தெரியாது அது தன் ஆதிக்கத்தை அக்காலத்தில் பெருக்கிக் கொள்ள ஆரம்பித்திருந்தது.

அலெக்ஸாண்ட்ரியாவின் நூலகத்தில் தன் மாணவர்களிற்கு விரிவுரை ஆற்றிக் கொண்டிருக்கிறாள் ஹிப்பேசியா(Hypatia). நாலகத்தின் சாளரங்கள் வழி உள்ளே நுழையும் சூரியக்கதிர்கள் அவளைத் தங்கள் தூரிகைகளால் தேவதையாக தீட்டி விட்டிருந்தன.

ஹிப்பேசியா, தத்துவ ஞானி, கணித மேதை, வான சாஸ்திர விஞ்ஞானி என பல முகங்கள் கொண்டவள். கடவுள் நம்பிக்கை அற்றவள். பிறர்பால் அன்பும், அவர்களின் வாழ்க்கை முறைகள் மேல் மதிப்பும் கொண்டவள். அவள் மாணவர்களில் கிறிஸ்தவர்கள், பேகான்கள் எனப் பலரும் கலந்திருக்கிறார்கள். எல்லா மாணவர்களையும் சமமாகக் கருதும் ஆசான் அவள்.

agora-trailer-epique-dernier-amenabar-L-6 ஹிப்பேசியாவின் தந்தையான தியோன், அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் இயக்குனராக செயற்பட்டு வருகிறார். அவரிடம் சேவை செய்யும் பல அடிமைகளில் இளைஞன் டேவுஸும் ஒருவன். ஹிப்பேசியா பாடங்களை நடாத்தும்போது அவற்றை அருகிலிருந்து கூர்மையாக அவதானிக்கிறான் டேவுஸ். இவ்வழியாக தன் அறிவைக் கணிசமாகப் பெருக்கி கொள்கிறான் அவன்.

தன் எஜமானி ஹிப்பேசியா மீது ரகசியமான ஒரு காதலையும் தன் உள்ளத்தில் வளர்த்து வருகிறான் இளைஞன் டேவுஸ். தனது அடிமை தளையிலிருந்து விடுதலை பெற விரும்பும் அவன், அலெக்ஸாண்ட்ரியாவில் பரவும் புதிய மதமான கிறிஸ்தவத்தின் கொள்கைகளில் பிடிப்புற்று யாரிற்கும் தெரியாது அம்மதத்தை தழுவிக் கொள்கிறான்.

ஹிப்பேசியாவிடம் கல்வி கற்கும் மாணவனான ஒரெஸ்டிஸும் (Orestes) அவள் மீது தன் மனதை இழந்தவனாக இருக்கிறான். கடவுள் மற்றும் அவரது சிருஷ்டியாக்கம் குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாதவன் ஒரெஸ்டிஸ். வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவன். உயர்ந்த பதவிகள் அவனிற்காக காத்திருக்கின்றன.

தன் சக கிறிஸ்துவ மாணவனான சினேசியஸ் (Synesius) கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை நிறைந்த கருத்துக்களுடன் உடன்படாதவனாக இருக்கிறான் ஒரெஸ்டிஸ். இவர்களின் வாக்குவாதங்கள் மோதல்களை நெருங்கிவிடும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இவர்கள் இருவரையும் ஹிப்பேசியா, தனது மாணவர்கள் யாவரும் சகோதரர்களே என்பதை விளக்கி சமாதானம் செய்து வைப்பவளாக இருக்கிறாள்.

small_438600 அலெக்ஸாண்ட்ரியாவின் நூலகம் கல்விக்கூடமாகவும், ஞானிகளின் ஆவணக் காப்பகமாகவும் செயற்படுவதோடு மட்டும் நின்று விடாது, பேகான் தெய்வங்களின் வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகிறது. அலெக்ஸாண்ட்ரியாவின் தெருக்களிலோ கிறிஸ்தவம் தன் வலுவான போதனைகளால் வறிய மக்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

அலெக்ஸாண்ட்ரியாவில் மக்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதிகளில் [Agora] கிறிஸ்தவ மத போதகர்கள், பேகான் கடவுள்களிற்கு சவால் விடுகிறார்கள், எள்ளி நகையாடுகிறார்கள், கொளுந்து விட்டெரியும் தீச்சுவாலைகளிற்குள் நடந்து வெளியேறுகிறார்கள், பேகான்களை தீச்சுவாலைக்குள் தள்ளி விட்டு உங்கள் கடவுள் உங்களைக் காப்பாற்றுவாரா பார்க்கலாம் என வேடிக்கை பார்க்கிறார்கள். இவ்வகையான வன்முறைச் செயல்களிற்கு தலைமை வகிக்கிறான் அமோனியஸ் எனும் துறவி. இவன் பராபோலானி [Parabolani]எனும் சகோதரத்துவ சபையைச் சேர்ந்தவன்.

அலெக்ஸாண்ட்ரியா நூலக அரங்கில் நிகழும் ஒரு கலை நிகழ்ச்சியின்போது ஹிப்பேசியா மீதான தன் அபிமானத்தை அங்கு கூடியிருப்போர் முன்பாக வெளிப்படையாக அறிவிக்கிறான் ஒரெஸ்டிஸ். ஆனால் ஹிப்பேசியா அவனது வேண்டுகோளை நிராகரித்து விடுகிறாள். அறிவுத்தேடலிற்காக தன் வாழ்வை அர்பணிக்க விரும்புகிறாள் அவள். பூமி சுழலும் பாதையின் வடிவம் குறித்து ஆர்வத்துடன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுபவளாக அவள் இருக்கிறாள். பூமி ஒரு வட்டப் பாதையில் சுழல்கிறது என்பதே அன்றைய கருத்தாக்கமாக இருந்தது. ஆனால் ஹிப்பேசியாவின் மனமோ இந்தக் கருத்துடன் உடன்பட மறுக்கிறது.

agora-trailer-epique-dernier-amenabar-L-9 அலெக்ஸாண்ட்ரியா தெருக்களில் நிலைமை சற்றுச் சூடாக ஆரம்பிக்கிறது. பேகான்கள் கிறிஸ்தவர்களால் மேலும் மேலும் சீண்டப்படுகிறார்கள். பேகான் தெய்வங்களின் விக்கிரகங்கள் கிறிஸ்தவர்களால் அவமதிக்கப்படுகின்றன. இந்நிலையை மேலும் ஏற்றுக் கொள்ள முடியாத பேகான்கள் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் கூடுகிறார்கள். கலந்துரையாடுகிறார்கள். முடிவாக ஆயுதங்களைக் கொண்டு கிறிஸ்தவர்களைத் தாக்குவது எனும் தீர்மானத்திற்கு வருகிறார்கள்.

ஹிப்பேசியா இந்த முடிவை எதிர்க்கிறாள். வன்முறை தேவையற்றது என்று கூறுகிறாள். தன் மாணவர்களை இந்த விடயத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என வேண்டுகிறாள். ஆனால் ஹிப்பேசியாவின் தந்தை தங்களிற்கு இழைக்கப்பட்ட அவமதிப்பிற்கு பதில் தந்தேயாக வேண்டும் எனக் கூறி விடுகிறார். இதனையடுத்து ஆயுதங்களுடன் அலெக்ஸாண்ட்ரியா தெருக்களில் இறங்குகிறார்கள் பேகான்கள். ஒரெஸ்டிஸும் இதில் அடக்கம்.

அலெக்ஸாண்ட்ரியாவின் சந்தைத் திடலில் கூடியிருந்த கிறிஸ்தவர்களை கொடூரமாக தாக்க ஆரம்பிக்கிறார்கள் பேகான்கள். மரண ஓலம், உருளும் தலைகள், பிரியும் உயிர்கள், எஜமானனைத் தாக்கும் அடிமைகள், சிதறும் ரத்தம், வெறியின் தாண்டவம், மதங்களின் வன்ம மொழி. ஆனால் பேகான்கள் எதிர்பார்த்திராத அளவில், நகரில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியிருக்கிறது. கிறிஸ்தவர்களின் எதிர்தாக்குதலை சாமாளிக்க முடியாது திணறுகிறார்கள் பேகான்கள்.

agora-2009-16759-1986286395 நகரிலிருக்கும் கிறிஸ்தவர்களுடன், அமோனியஸ் தலைமையில் பராபோலானிக்களும் கைகளில் ஆயூதம் ஏந்தி எதிர்தாக்குதலை தீவிரமாக்க, வேறுவழியில்லாது பின்வாங்கும் பேகான்கள் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தினுள் நுழைந்து அதன் பிரம்மாண்டமான வாயிற்கதவுகளை தாழிட்டுக் கொள்ளுகிறார்கள். அவர்களை துரத்தி வந்த கிறிஸ்தவர்கள் நூலகத்திற்கு வெளியே வெறியுடன் காத்து நிற்க ஆரம்பிக்கிறார்கள்.

அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் கல்வி பயிலும் சினேசியஸ் போன்ற கிறிஸ்தவ மாணவர்களை பணயமாக பிடித்து வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் பேகான்கள். ஹிப்பேசியாவும், கிறிஸ்தவர்களிற்கு எதிராக மோதிய ஒரெடிஸும் இதற்கு குறுக்கே வந்து அந்தக் கிறிஸ்தவ மாணவர்களைக் காப்பாற்றுகிறார்கள். அன்றிரவு அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் ஹிப்பேசியாவிற்கு தன் மனதின் நன்றிகளை கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறான் கிறிஸ்தவ மாணவனான சினேசியஸ்.

அலெக்ஸாண்ட்ரியா நூலகத்திற்கு வெளியே கூடியிருக்கும் கிறிஸ்தவர்களின் வெறிக்கூச்சல் அதிகரிக்கிறது. நூலகத்தின் வாயிற்கதவுகள் இடிக்கப்படுகின்றன. நகரில் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை அறியும் ரோம அதிகாரத்தின் ஆளுனர் நூலகத்திற்கு தன் வீரர்களை அனுப்பி வைக்கிறார்.

நூலகத்தை அடையும் வீரர்கள் நூலகத்தை சுற்றி காவல் நிற்கிறார்கள். நிகழ்ந்த அசம்பாவிதங்களைக் கருத்தில் கொண்டு ஆளுநர் தயாரித்த அறிக்கையை வீரர் தலைவன் உரத்த குரலில் படிக்கிறான்.

கலகத்தை ஆரம்பித்துவிட்டு நூலகத்தில் பதுங்கியிருக்கும் பேகான்கள் உடனடியாக நூலகத்தை விட்டு வெளியேற வேண்டும், அலெக்ஸான்ட்ரியா நூலகமானது இனி கிறிஸ்தவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்பதே அவ்வறிக்கையின் சாரம். அறிக்கையைக் கேட்ட கிறிஸ்தவர்கள் கூச்சல் எழுப்பிக் குதிக்கிறார்கள். பேகான்கள் அறிக்கை அளித்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாதவர்களாக இருக்கிறார்கள்.

நூலகத்தில் இருக்கும் பேகான்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பொறுப்பை ரோம வீரர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். நூலகத்திலிருக்கும் எண்ணற்ற அறிவுப் பொக்கிஷங்களில் முக்கியமானவற்றை தம்முடன் எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார்கள் பேகான்கள். ஹிப்பேசியாவும், ஒரெஸ்டிஸின் உதவியுடன் சில ஆவணங்களை தன்னுடன் எடுத்துக் கொண்டு, மோதலில் காயமடைந்த தன் தந்தையுடன் நூலகத்தை விட்டு கண்ணீருடன் வெளியேறுகிறாள்.

ஹிப்பேசியாவின் அடிமை டேவுஸ் நூலகத்தில் தங்கி விடுகிறான். அவன் மனம் வெகுவாக குழப்பம் அடைந்த நிலையிலிருக்கிறது. நூலகத்தினுள் நுழையப் போகும் கிறிஸ்தவர்களை வெட்டிப் போடுவது போல் ஆயுதம் ஒன்றுடன் நூலக வாசலை நோக்கி ஓடுகிறான் அவன். இந்நிலையில் நூலகத்திற்கு வெளியே நின்ற கூட்டம் நூலக வாயில் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறது.

மதத்திற்கு மதம் பிடிக்கும்போது அதன் விளைவுகள் மனச்சாட்சியை கொடிய நரகத்திற்கு அனுப்பி விடுகின்றன. அலெக்ஸாண்ட்ரியாவின் புகழ் பெற்ற அறிவுக் கருவூலம் எந்தவிதக் கிலேசமும் இன்றி சிதைக்கப்படுகிறது. ஆவணங்கள் எரிக்கப்படுகின்றன. அறிவுக்களஞ்சியம் புகையாக வான் நோக்கி எழுகிறது. கலையழகு கொண்ட சிற்பங்கள் உடைத்து நொருக்கப்படுகின்றன. அறிவின்மேல் மதம் தன் வெறிக்கால்களை உக்கிரமாக ஊன்றி ஆடுகிறது.

பராபோலானிக்களின் தலைவன் அமோனியஸ் இந்த வெற்றியால் உற்சாகமாக கத்துகிறான். தன்னைச் சுற்றி நடப்பவற்றை நம்பமுடியாதவனாக பார்க்கிறான் டேவுஸ், ஆனால் அமோனியஸின் அழைப்பின்பேரில் நூலகத்தை அழிப்பதில் தானும் பங்கு வகிக்கிறான் அவன்.

agora-trailer-epique-dernier-amenabar-L-16 நூலக அழிப்பின் பின்னாக நள்ளிரவில் தன் எஜமானன் வீட்டிற்கு கையில் நீண்ட கத்தி ஒன்றுடன் வருகிறான் டேவுஸ். வீட்டில் அவனை வரவேற்கும் ஹிப்பேசியாவை பலவந்தமாக அணைத்துக் கொள்கிறான் அவன். ஹிப்பேசியாவின் உடலை அவன் கரங்கள் மேய்கின்றன, ஆனால் சிறிது நேரத்தில் ஹிப்பேசியாவை பலவந்தம் செய்வதை நிறுத்திவிட்டு அவள் தோளில் சாய்ந்து அழ ஆரம்பிக்கிறான் டேவுஸ். அவள் மேல் அவன் கொண்டது அன்பால் செய்த காதல் அல்லவா.

ஹிப்பேசியாவின் காலடியில் வீழ்ந்து கண்ணீர் சிந்தும் டேவுஸ், தன் கைகளில் இருந்த கத்தியை ஹிப்பேசியாவிடம் தருகிறான். அவள் தனக்கு தரப்போகும் தண்டனையை எதிர்பார்த்து அவள் கால்களை அணைத்துக் கொள்கிறான் அவன். ஆனால் ஹிப்பேசியாவோ அவன் கழுத்தில் இருந்த இரும்பு வளையத்தை நீக்கி அவனை அடிமை எனும் நிலையிலிருந்து சுதந்திர மனிதனாக்குகிறாள். அலெக்ஸாண்ட்ரியாவில் அன்று விரிந்திருந்த அந்தக் கொடிய இரவினுள் இருளாகச் சென்று மறைகிறான் டேவுஸ்.

வருடங்கள் ஓடுகின்றன. அலெக்சாண்ட்ரியாவின் அழிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி கிறிஸ்தவ ஆலயமாக மாறியிருக்கிறது. பிறிதொரு பகுதியில் ஆடுகள், கோழிகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. அலெக்சாண்ட்ரியாவில் பேகான் வழிபாடு தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டிருக்கிறது.

ஹிப்பேசியாவின் தந்தை உயிருடன் இல்லை. இப்போது அவள் தன் அறிவை சிறுவர்களிற்கு சொல்லித் தருகிறாள். அவளுடைய முன்னாள் மாணவனான ஒரெஸ்டிஸ் அலெக்ஸாண்ட்ரியாவின் ஆளுனனாகப் பதவியிலிருக்கிறான், கிறிஸ்தவ மதத்தையும் அவன் தழுவியிருக்கிறான். ஒரெஸ்டிஸிற்கும், ஹிப்பேசியாவிற்குமிடையில் நட்பு தொடர்கிறது. டேவுஸ், பராபோலானிக்கள் குழுவில் முக்கியமான ஒருவன். இவ்வேளையில் அலெக்ஸாண்ட்ரியாவின் கிறிஸ்தவ ஆயர் இறந்துவிட புதிய ஆயராக பதவியேற்றுக் கொள்கிறான் சிரில்.

agora-trailer-epique-dernier-amenabar-L-11 பதவியேற்ற சிரில், அலெக்ஸாண்ட்ரியாவில் வாழும் யூதர்களிற்கு எதிராக செயற்பட ஆரம்பிக்கிறான். யூதர்கள் கற்களால் தாக்கப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். ஆளுனரிற்கு முன்பாக தீர்விற்காக கொண்டுவரப்படும் இவ்விடயத்தில் இருதரப்புக்களும் சமாதானமாக மறுத்து விடுகின்றன.

தங்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு பழிவாங்கத் துடிக்கும் யூதர்கள், தந்திரமாக பராபோலானிக்களை கிறிஸ்தவ ஆலயத்திற்குள் வரவைத்து அதன் கதவுகளை அடைத்து விடுகிறார்கள். ஆலயத்தின் மேற்பகுதியிலிருந்து பராபோலானிக்களை நோக்கி பொழிய ஆரம்பிக்கிறது உக்கிரமான கல்மழை. இந்ததாக்குதலில் கணிசமான பராபோலானிக்கள் உயிரை இழக்கிறார்கள். அமோனியஸும், டேவுஸும் இத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விடுகிறார்கள்.

உணர்ச்சிகள் கொதிநிலையிலிருக்கும் கிறிஸ்தவர்கள் மத்தியில் உரையாற்றுகிறான் சிரில். அவன் உரை கிறிஸ்தவர்களின் உணர்சிகளை மேலும் தூண்டிவிடுகிறது. யூத இனம் கடவுளால் சபிக்கப்பட்ட இனம். அந்த இனம் வெளியேற்றப்பட வேண்டும் என்று கிறிஸ்தவர்களின் வெறிக்கு தூபம் போடுகிறான் சிரில். சிரிலின் உரையால் வெறியேறிய கிறிஸ்தவர்கள் அலெக்ஸாண்ட்ரியாவில் யூத இன மக்களின் அழிப்பில் இறங்குகிறார்கள்.

யூதர்கள், கொல்லப்படுகிறார்கள்,அவர்கள் உடமைகள் நாசமாக்கப்படுகின்றன. யூதப் பெண்கள் வீதிகளில் நிர்வாணமாக்கப்படுகிறார்கள். ஆளுனர் ஒரெஸ்டிஸ், சிரிலிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுத்து இக்கொடுமையை நிறுத்த வேண்டும் என ஒரெஸ்டிஸின் சபையில் கடுமையாக வாதிடுகிறாள் ஹிப்பேசியா. ஆனால் ஒரெஸ்டிஸ், சிரிலிற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் தானிருப்பதை விளக்குகிறான்.

அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்த யூத இன மக்கள் யாவரும் அந்நகரை விட்டு வெளியேறுகிறார்கள். அலெக்ஸாண்ட்ரியாவில் இப்போது எஞ்சியிருப்பவர்கள் கிறிஸ்தவர்களும், ஹிப்பேசியா போன்ற சில கடவுள் நம்பிக்கை அற்றவர்களுமே.

யூதர்கள் அலெக்ஸாண்ட்ரியாவை விட்டு வெளியேறிச் செல்லும் தருணத்தில், நகரத்தில் நுழைகிறான் ஹிப்பேசியாவின் முன்னாள் கிறிஸ்தவ மாணவன் சினேசியஸ். சிரிலைப் போன்று ஒரு ஆயராக உயர்ந்திருக்கிறான் அவன். நகரில் யூதர்களிற்கு இடம் பெற்றிருக்கும் கொடுமைகளை தன் கண்களால் காண்கிறான் அவன்.

சினேசியஸ் தன் ஆசிரியையான ஹிப்பேசியாவை சென்று சந்திக்கிறான். தனது நண்பன் ஒரெஸ்டிஸ் கூடவும் உரையாடுகிறான். ஒரெஸ்டிஸும், சினேசியஸும், ஹிப்பேசியாவிற்கு மதிப்பு தருவதையும், அவள் கருத்துக்களை கேட்பதையும் அறிந்து கொள்ளும் சிரில், தனக்கும் அதிகாரத்திற்கும் இடையில் ஒரு தடையாக இருக்கும் ஹிப்பேசியாவை அழித்து விட முடிவு செய்கிறான்.

agora-trailer-epique-dernier-amenabar-L-12 மிகத் தந்திரமான ஒரு திட்டத்தை வகுக்கும் சிரில், சினேசியஸ் வழியாக ஒரெஸ்டிஸை தன் ஆலயத்திற்கு வரவழைக்கிறான். ஒரு சமூகத்தில் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென இறை நூலில் எழுதியிருக்கும் வரிகளை ஆலயத்தில் கூடியிருக்கும் கூட்டத்தில் உரக்கப் படிக்கிறான் சிரில். ஆலயத்தில் கூடியிருக்கும் பராபோலானிக்கள் நடப்பதை உன்னிப்பாக கவனிக்கிறார்கள்.

பெண்கள் கண்ணியமாக உடை உடுக்க வேண்டும், ஆண்களிற்கு அடங்கி இருக்க வேண்டும், குறிப்பாக தங்கள் கருத்துக்களை சொல்ல பெண்களிற்கு உரிமை கிடையாது என்பதான வரிகளை சிரில் படித்து முடித்தபின் இது இறைவனின் வார்த்தை அனைவரும் முழந்தாளிடுங்கள் என்கிறான் அவன்.

கோவிலில் இருக்கும் ரோம அதிகாரிகளிற்கும், ஒரெஸ்டிஸுக்கும் சிரிலின் நோக்கம் புரிந்து விடுகிறது. இறைவனின் வார்த்தைகளிற்கு முன்பாக மண்டியிடுவதன் மூலம் ஹிப்பேசியாவை சாதாரண ஒரு பெண்ணாக்கி அவளை அதிகாரத்தின் அருகிலிருந்து பிரித்து விடுவதே சிரிலின் நோக்கம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். முழந்தாளிட மறுத்தால் கிறிஸ்தவர்களின் வெறுப்பு அவர்களின் ஆட்சிக்கு உலை வைக்கும் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

ரோம அதிகாரிகள் ஒவ்வொருவராக சிரிலின் முன் முழந்தாளிட ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஒரெஸ்டிஸ் முழந்தாளிட மறுத்து விடுகிறான். அவன் முகத்தில் சினம் கொப்பளிக்கிறது. பரபோலானிக்களின் தலைவன் அமோனியஸ் ஒரெஸ்டிஸ் முழந்தாளிட வேண்டுமென கத்த ஆரம்பிக்கிறான். ஆலயத்தில் குழுமியிருந்த கூட்டமும் அதனுடன் சேர்ந்து கொள்கிறது. சிரில் தன் பதவியை அடைய விரும்பிக் காய் நகர்த்துகிறான் என்பது ஒரெஸ்டிஸுக்கு புரிகிறது.

ஆலயத்தை விட்டு தன் வீர்கள் பாதுகாப்புடன் வெளியேறுகிறான் ஒரெஸ்டிஸ், ஆனால் அமோனியஸ் எறியும் ஒரு கல் அவன் மண்டையை பதம் பார்க்கிறது.

தனது மாளிகையில் தன் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருக்கும் ஒரெஸ்டிஸை வந்து சந்திக்கிறான் ஆயர் சினேசியஸ். சிரிலை எதிர்ப்பதற்கு ஒரெஸ்டிஸுக்கு தான் உதவுவதாகக் கூறும் அவன், ஏன் ஆலயத்தில் கடவுளின் வார்த்தைகளிற்கு முன்பாக ஒரெஸ்டிஸ் மண்டியிடவில்லை என்று கேட்கிறான். நீ உண்மையிலேயே கடவுளை விசுவசிப்பவனாக இருந்தால் இங்கே என் முன்பாக மண்டியிடு என்கிறான் சினேசியஸ். தன் இயலாமை கனமாக அழுத்த சினேசியஸின் முன்பாக கண்களில் கண்ணீருடன் மண்டியிடுகிறான் ஒரெஸ்டிஸ்.

தனது இல்லத்தில் புவியின் சுழற்சிப் பாதை வட்டமானது அல்ல அது நீள் வட்டமாக இருக்க வேண்டுமென்பதைக் கண்டுபிடிக்கிறாள் ஹிப்பேசியா. இதனை தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென அவள் விரும்புகிறாள். மறுநாள் ஒரெஸ்டிஸ் அவளைத் தனது மாளிகைக்கு அழைக்க அங்கு அவனைக் காணச் செல்கிறாள் ஹிப்பேசியா. அங்கு ஒரெஸ்டிஸும், சினேசியஸும் தனக்காக காத்திருப்பதை அவள் காண்கிறாள்.

ஆலயத்தில் ஒரெஸ்டிஸ் மீது கல் வீசியதற்காக பராபோலானிக்களின் தலைவன் அமோனியஸிற்கு மரணதண்டனை வழங்கப்படுகிறது. கிறிஸ்தவத்திற்காக தனது இன்னுயிரை நீத்த அமோனியஸினதுனது பெயரை மாற்றி அவனை ஒரு புனிதனாக அறிவிக்கிறான் சிரில். அமோனியஸின் மரணத்திற்காக ஒரெஸ்டிஸை பழிவாங்க முடியாத பராபோலானிக்கள், ஹிப்பேசியாவைக் கொன்று விடுவது என்று தீர்மானிக்கிறார்கள்.

பராபோலானிக்களின் திட்டத்தை அறிந்து கொள்ளும் டேவுஸ், ஹிப்பேசியாவைக் காண்பதற்காக அவள் இல்லத்திற்கு செல்கிறான். ஆனால் அவளோ ஒரெஸ்டிஸின் மாளிகைக்கு சென்று விட்டிருப்பதை அறியும் டேவுஸ் அவளைத்தேடி ஒரெஸ்டிஸ் மாளிகைக்கு விரைகிறான்.

அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் அல்லாதோர் அனைவரும் கட்டாயமாக திருமுழுக்கு மூலம் கிறிஸ்தவர்களாக்கப்படுவார்கள் எனும் அதிர்ச்சி தரும் செய்தியை ஹிப்பேசியாவிடம் தெரிவிக்கிறான் ஒரெஸ்டிஸ். தன் மாணவர்கள் இருவரையும் நம்ப முடியாதவளாகப் பார்க்கிறாள் ஹிப்பேசியா.

அதிகார ஆசை மனிதர்களை எப்படி மாற்றிப் போடுகிறது எனும் விஞ்ஞானத்தை அவள் அதிகம் படித்திருக்கவில்லை அல்லவா. விளைவுகள் எதுவாகவிருந்தாலும் தான் கிறிஸ்தவ மதத்தை தழுவப் போவதில்லை என்று உறுதியுடன் கூறுகிறாள் ஹிப்பேசியா. ஒரெஸ்டிஸ் அவளிற்கு வழங்கி வந்த பாதுகாப்பையும் உதறிவிட்டு, ஒரு சுதந்திர மனுஷியாக அலெக்ஸாண்ட்ரியா தெருவில் இறங்குகிறாள் அவள்.

3650171kmjgn ஒரெஸ்டிஸ் மாளிகையை நெருங்கும் டேவுஸ், தெருக்களில் பராபோலானிக்கள் கூட்டமாக வருவதைக் கண்டு ஒளிந்து கொள்ள எத்தனிக்கிறான். ஆனால் அவர்களோ அவனைக் கண்டு கொண்டு கூவி அழைக்கிறார்கள். ஹிப்பேசியா எனும் வேசை தங்களிடம் அகப்பட்டு விட்டாள் என்று கூச்சல் போடுகிறார்கள். வெறிபிடித்த விலங்குகள் மத்தியில் மாட்டிக் கொண்ட பட்டாம் பூச்சி போல் பராபோலானிக்கள் மத்தியில் ஹிப்பேசியா விக்கித்து நிற்பதைக் காண்கிறான் டேவுஸ். அவன் மனதின் வார்த்தைகள் ஒலியற்று அழ ஆரம்பிக்கின்றன.

மிகவும் முரட்டுத்தனமாக கிப்பேசியாவை, ஆலயமாக மாறியிருக்கும் அலெக்ஸாண்ட்ரியாவின் அழிந்து போன நூலகத்திற்கு இழுத்துச் செல்கிறார்கள் பராபோலானிக்கள். இறைவனின் பீடத்தின் முன் அவள் ஆடைகள் கிழித்து வீசப்பட்டு நிர்வாணமாக்கப்படுகிறாள் ஹிப்பேசியா. அவள் உடலை தசை தசையாக கூறு போட விரும்புகிறார்கள் பராபோலானிக்கள், ஆனால் அவர்களிடம் கத்திகள் இருக்கவில்லை என்பதால் கற்களால் எறிந்து ஹிப்பேசியாவைக் கொல்வது என்று அவர்கள் தீர்மானிக்கிறார்கள். இதற்காக கற்களைப் பொறுக்க ஆலயத்திற்கு வெளியே செல்கிறார்கள்.

இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் டேவுஸ், எதுவுமே செய்ய முடியாத நிர்க்கதியில், உடல் நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ள ஹிப்பேசியாவை நெருங்குகிறான். ஆடைகள் அற்ற அவள் உடலை ஆதரவுடன் அணைத்துக் கொள்கிறான். ஹிப்பேசியாவின் கண்கள் டேவுஸை நோக்குகின்றன. அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை அவள் உணர்கிறாள்.

அன்புடன் தன் மேல் அவளை அணைத்தபடியே, ஹிப்பேசியாவின் வாயையும், மூக்கையும் தன் கரங்களால் இறுகப் பொத்துகிறான் டேவுஸ். அவன் உள்ளம் அந்தத் தேவதை தன் அடிமை வாழ்வில் தனக்கு வழங்கிய இனிய தருணங்களை அசை போடுகிறது. மூச்சு எடுக்க முடியாது அகல விரிகின்றன ஹிப்பேசியாவின் பாசம் நிறைந்த விழிகள். அவள் உயிர் மெல்ல மெல்லப் பிரிகிறது. அந்த வேளையிலும் அலெக்ஸாண்ட்ரியா நூலகத்தின் வட்டமான கூரை ஜன்னலில் உட்புகும் சூரிய வெளிச்சத்தில் புவியின் சுழற்சிப்பாதையைக் காணவிழைகிகிறாள் அந்த மகத்தான பெண், அவளது உயிரற்ற உடல் பிரபஞ்சத்தை உருவாக்கிய தேவனின் இல்லத்தின் தரைகளில் சரிகிறது.

கொலைவெறியுடன் கற்களுடன் உள்ளே வரும் மத வெறியர்களிடம் ஹிப்பேசியா நினைவிழந்து விட்டதாக கூறுகிறான் டேவுஸ். உயிரற்ற ஹிப்பேசியாவின் உடல் மீது கற்கள் வெறித்தனமாக விழ ஆரம்பிக்கின்றன. கண்களில் வழியும் கண்ணீருடன் ஆலயத்தை விட்டு தூரமாக நடந்து செல்கிறான் டேவுஸ்……

ஹிப்பேசியா எனும் அறிவு செறிந்த, பிறர் நேசம் கொண்ட பெண்பாத்திரம் வழியாக, அலெக்சாண்ட்ரியாவின் குறிப்பிட்ட கால வரலாற்றை வலியுடன் கண்முன் கொணர்கிறது Agora எனும் இத்திரைப்படம். ஹிப்பேசியா, ஒரெஸ்டிஸ், சினேசியஸ், சிரில், தியோன் ஆகியோர் வரலாற்றில் வாழ்ந்த நிஜப்பாத்திரங்கள். படத்தை உணர்சிகரமாக இயக்கியிருப்பவர், ரசிகர்களின் மென்னுணர்சிகளை மீட்டுவதில் வல்லவரான ஸ்பெயின் இயக்குனர் Alejandro Amenabar. இத்திரைப்படத்தின் கதையை சரித்திர வல்லுனர்களின் ஆலோசனைகள் வழியே இயக்குனரும், திரைக்கதையாசிரியரும்[ Mateo Gil] மூன்று வருட உழைப்பில் உருவாக்கினார்கள்.

ஒரு மததத்தின் வளர்ச்சி எவ்வாறு, விஞ்ஞான வளர்ச்சி, பெண் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், பிற மதம் மற்றும் இனங்கள் மீதான சகிப்புத்தனமை என்பவற்றை கொன்றொழித்தது என்பதை மனத்தை அதிர வைக்கும் விதத்தில், தைரியமாக கூறியிருக்கிறார் இயக்குனர்.

திரைப்படத்தில் ஹிப்பேசியா பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் நடிகை Rachel weisz. மம்மி போன்ற மசாலாப் படங்களிலிருந்து விலகி அவர் தந்திருக்கும் அமைதியான, பண்பட்ட நடிப்பு அசத்துகிறது. டேவுஸ் எனும் பாத்திரம் கற்பனையாக உருவாக்கப்பட்டது. அப்பாத்திரத்தில் நடித்திருக்கும் Max Minghella சிறப்பாக செய்திருக்கிறார்.

Agora_wallpaper1_1680x1050 இவ்வகையான வரலாற்றுப் படங்களில் இசையின் பங்கு குறித்து எழுத வேண்டியதில்லை. அருமையான இசை. அதற்காக படம் முழுவதும் இசை வெள்ளமாகப் பாய்ந்தோடாது, தேவையான சமயங்களில் உணர்சிகளை பந்தாடுகிறது Dario Marianelli ன் இசை. குறிப்பாக இறுதிக் காட்சிகளில் வரும் இசையானது காட்சிகளுடன் சேர்ந்து கண்களை கலங்க வைத்து விடுகிறது.

அலெக்ஸாண்ட்ரியா நகரம், நூலகம் என்பவற்றை மால்ட்டா நாட்டில் செட்கள் மூலம் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். நூலக அழிப்புக் காட்சிகள், யூத இன அழிப்பு என்பன வேதனைச் சாட்டையால் மனதைக் குரூரமாக அடிக்கின்றன. இன்று புனிதர்கள் என்று போற்றப்படுபவர்களின் சாத்தியமிகு கடந்தகால வரலாறு சங்கடப்படுத்துகிறது. [ சிரில் ஒரு புனிதராக அறியப்படுகிறார்]

அமேனாபாரின் இத்திரைப்படம் கிறிஸ்தவ அன்பர்களின் முணுமுணுப்புக்களை அல்லது கூச்சல்களை அள்ளிக் கொள்ளப் போவதற்கு அனேகமான சாத்தியங்கள் உண்டு [இத்தாலியில் திரைப்படத்திற்கு வினியோகிஸ்தர்கள் கிடைக்கவில்லையாம்!!]. ஆனால் கலைஞன் உண்மைகளைக் கூறுவதற்கு தயங்கல் ஆகாது என்பதற்கு இப்படம் ஒரு சான்று.

நான்காம் நூற்றாண்டிற்கும், இன்று உலகில் நடக்கும் நிகழ்வுகளிற்கும் அதிகம் வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை. மதம் குறித்த போர்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. தன்னை விட அறிவு நிறைந்த பெண்களை மதிக்கும் ஆண்கள் இவ்வுலகில் பெரும்பான்மையானவர்கள் அல்ல. இன அழிப்புக்கள் நாள்தோறும் நிகழ்ந்தேறுகின்றன. இவ்வாறான வலி நிறைந்த உண்மைகளை திரைக்கு அப்பால் எடுத்து செல்வதில் வென்றிருக்கிறார் இயக்குனர் அமேனாபார். [***]

ட்ரெயிலர்