Wednesday, January 27, 2010

பெர்சியன் பூனைகள்


ஈரானின் தற்போதைய அதிகாரமானது மேலைத்தேய இசை குறித்து கொண்டுள்ள பார்வை வேறானது. ராக் போன்ற இசை வகைகளை கேட்பதற்கோ, இசைப்பதற்கோ ஏறக்குறைய தடை விதிக்கபபட்டுள்ள ஒரு நிலை அங்கு நிலவுகிறது.

ஆஷ்கானும், அவனது காதலி நேகாரும் மேலைத்தேய இசை குறித்த ஈரான் அதிகாரத்தின் ஒழுங்கு விதிகளை மீறியதால் சிறையில் அடைக்கபட்டு சிறிது கால தண்டனையின்பின்பாக விடுதலையாகிறார்கள்.

ராக் இசை மீது ஆர்வம் கொண்ட அந்த இரு இளம் கலைஞர்களும், ஈரானில் தமது இசைத்திறமையை அவர்களிற்கு விருப்பமான வகையில் வெளிப்படுத்த முடியாத நிலை நிலவுவதை எண்ணி மிகுந்த மன வேதனை அடைகிறார்கள்.

ராக் பாடகியான நேகார், கெடுபிடிகள் நிரம்பிய ஈரானை விட்டு கலைச் சுதந்திரம் நிரம்பிய ஐரோப்பிய நாடுகளிற்கு சென்றுவிட வேண்டுமெனும் எண்ணம் கொண்டவளாக இருக்கிறாள். லண்டனில் நடக்கவிருக்கும் ஒரு இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவதற்காக ஆஷ்கானுடன் இங்கிலாந்துக்கு செல்ல விரும்புகிறாள் அவள். [இவ்வாறு செல்லும் பெரும்பாலான இளைஞர்கள் பின்பு ஈரான் திரும்புவதில்லை]

சட்டரீதியாக பாஸ்போர்ட்டுக்களையும், விசாக்களையும் தாங்கள் பெற்றுக் கொள்வது என்பது நடவாது என்பதை அறிந்திருக்கும் ஆஷ்கானும், நேகாரும் இவ்விடயத்தில் உதவி வேண்டி தங்கள் நண்பன் பாபாக்கை சென்று சந்திக்கிறார்கள்.

பாபாக் ஒரு இசைக்கலைஞன், ஈரானின் அதிகாரத்தால் அனுமதி மறுக்கப்பட்ட இசை வடிவங்களை பதிவு செய்வதற்காக, ஒரு ரகசியமான நிலவறை ஒலிப்பதிவு நிலையத்தை அவன் நடாத்தி வருகிறான். நேகார் சொல்வதை அக்கறையுடன் கேட்கும் பாபாக், காதலர்களை தனக்கு தெரிந்தவனான நாதேரிடம் அறிமுகம் செய்து வைக்கிறான்.

les-chats-persans-2009-18772-758573165 நாதேர், ஈரானில் தடைசெய்யப்பட்டவைகளின் முகவர்களில் ஒருவன். மேற்கு நாட்டு திரைப்படங்களின் குறுந்தட்டுக்கள், இசைத்தட்டுக்கள், போலிப் பாஸ்போர்ட்கள், மற்றும் விசாக்கள் போன்றவற்றை வினியோகித்தல், இசை நிகழ்சிகளை நடாத்த அதிகாரிகளிடம் அனுமதியைப் பெற்றுத்தரல் என அவன் தெஹ்ரானின் இளம் இசைக்கலைஞர்கள் வட்டத்தில் பிரபலமானவன். இசை என்பது நாதேரிற்குப் பிடித்தமான ஒன்று.

அதிகாரத்தின் ஒடுக்கு முறையால் திறமையான படைப்பாளிகள் நாட்டை விட்டு நீங்குவது அவனிற்கு வேதனையளிக்கும் விடயமாக இருக்கிறது. ஆஷ்கான், நேகாருடன் உரையாடும் நாதேர் அவர்கள் ராக் இசைக்கலைஞர்கள் என்பதை அறிந்து கொள்கிறான். அவர்கள் ரகசியமாக பதிவு செய்த பாடல் ஒன்றை தன் வீட்டில் கேட்கும் நாதேர், அவன் கேட்ட இசையிலும், குரலிலும், வரிகளிலும் அவர்களின் திறமையைக் கண்டு கொள்கிறான்.

ஆஷ்கானும், நேகாரும் இசைக்குழு ஒன்றுடன் இங்கிலாந்து செல்வதற்கு தேவையான பாஸ்போர்ட், மற்றும் விசாக்களை தான் எப்படியும் பெற்றுத்தருவதாகக் கூறும் நாதேர், இங்கிலாந்து கிளம்பும் முன்பாக தெஹ்ரானில் அவர்கள் ஒரு இசை நிகழ்சியை நடாத்த வேண்டும் என கனிவுடன் வேண்டுகோள் விடுக்கிறான். அந்த இசை நிகழ்சிக்கான அனுமதியை அதிகாரிகளிடமிருந்து தான் பெற்றுத்தருவதாகவும் கூறுகிறான். முதலில் சிறிது தயங்கும் ஆஷ்கானும், நேகாரும் பின்னர் இசை நிகழ்சியை நடாத்த சம்மதம் தெரிவிக்கிறார்கள்.

இங்கிலாந்து பயணத்திற்குத் தேவையான போலிப் பாஸ்போர்ட், மற்றும் விசாக்களை ஒழுங்கு செய்வதற்காக நாதேர், ஆஷ்கானையும், நேகாரையும் மாஷ் டேவிட் எனும் முதியவனிடம் அழைத்துச் செல்கிறான். மிகக் குறைந்த வசதிகள் கொண்ட குறுகலான அறை ஒன்றில் தன் ரகசிய அலுவலகத்தை இயக்கி வருகிறான் மாஷ் டேவிட். அமெரிக்கன் விசா, பச்சை அட்டை, ஐரோப்பிய விசா, ஆப்கானிஸ்தான் விசா!! பல நாடுகளின் கடவுச் சீட்டுக்கள் என டேவிட்டிடம் கிடைக்காத நாடுகளே இல்லை.

les-chats-persans-2009-18772-6212110 ஹாலிவூட் நடிகர் நிக்கோலாஸ் கேஜின் ஆக்‌ஷன் படத்தின் சிடியை கொண்டு வரவில்லை என்பதற்காக நாதேரிடம் செல்லமாக கோபித்துக் கொள்ளும் டேவிட், ஒரு வார காலத்தில் ஆஷ்கானிற்கும், நேகாரிற்கும் தேவையான பாஸ்போர்ட், மற்றும் விசாக்களை தயாரித்து தருவதாகக் கூறுகிறான்.

ஆஷ்கானும், நேகாரும் டேவிட்டின் அலுவலகத்திலிருந்து நாதேரிடம் விடைபெற்றுக் கொள்கிறார்கள். பாஸ்போர்ட் செலவுகளிற்காக டேவிட்டிற்கு தர வேண்டிய பெருந்தொகைப் பணம் குறித்து கவலை கொள்கிறாள் நேகார். பணவிடயத்தில் தன் தாயார் தனக்கு உதவி செய்வாள் என்று நேகாரை ஆறுதல் செய்கிறான் ஆஷ்கான்.

இங்கிலாந்து செல்வதற்கு முன் ஒரு இசைக்குழுவை உருவாக்கி கொள்ள வேண்டுமென்பதால், இசைக் கலைஞர்களைத் தேடி தெஹ்ரானில் வேட்டையை ஆரம்பிக்கிறது நாதேர், ஆஷ்கான், நேகார் கூட்டணி. தெஹ்ரானின் மூலை முடுக்களில் எல்லாம் இசைக்கலைஞர்களை தெரிந்து வைத்திருக்கிறான் நாதேர். நிலவறைகள், மாட்டுக் கொட்டகைகள், மொட்டை மாடி மறைவிடம், கைவிடப்பட்ட கட்டிடங்களின் தளங்கள் என ஒளிந்து கொண்டிருந்து ஒலிக்கும் இசையினைத் தேடிச் செல்கிறார்கள் அவர்கள்.

அவர்கள் சந்திக்கும் பெரும்பாலான இளம் கலைஞர்களிற்கு பாஸ்போர்ட், விசா, இவற்றை ரகசியமாகப் பெற்றுக் கொள்ளத் தேவையான பணம் பிரச்சினையாகவிருக்கிறது. சிலரிற்கு கடமைகள் குறுக்கே நிற்கின்றன, வேறு சிலரிற்கோ தங்கள் இசை ஈரான் மண்ணிலேயே தடைகளின் செவிகளிற்குள் ஒலிக்க வேண்டும் எனும் ஆசை.

நீண்ட தேடல் ஒன்றின் வழியாகச் சில இசைக்கலைஞர்களை இசைக்குழுவில் இணைய சம்மதிக்க வைக்கிறது மூவர் கூட்டணி. இங்கிலாந்து செல்வதற்கு முன்பாக நடக்கவிருக்கும் இசைநிகழ்ச்சியால் கிடைக்கும் பணம், பாஸ்போர்ட் மற்றும் விசாக்களைப் பெற்றுக் கொள்ளப் போதுமாக இருக்கும் என்று அவர்களை தைரியப்படுத்துகிறான் நாதேர்.

இதனை தொடர்ந்து ரகசியமான இடமொன்றில் தங்கள் ஒத்திகையை ஆரம்பிக்கிறது ஆஷ்கான், நேகார் இசைக்குழு. இங்கிலாந்துப் பயணம் குறித்தும், தங்கள் விருப்பங்கள் குறித்தும் கனவுகளைக் காண்கிறது அந்த இளம் இசைக் குழு. இவ்வேளையில் நாதேரைத் தொடர்பு கொள்ளும் ஒரு அதிகாரி ஆஷ்கானின் இசைக்குழு இசைநிகழ்ச்சியை தெஹ்ரானில் நிகழ்த்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதை அறிவிக்கிறார்.

les-chats-persans-2009-18772-52042181இத்தகவலால் சோகமாகும் நாதேர், ஆஷ்கானிடம் விடயத்தை தெரிவிக்கிறான். நேகாரிற்கு இதனை தெரிவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறான். ஆஷ்கான் மற்றும் நேகாரின் திறமையில் நம்பிக்கையும் அவர்களில் நேசமும் கொண்ட நாதேர், அனுமதியின்றியாவது இந்த இசை நிகழ்ச்சியை நடாத்தி அவர்களை எப்படியாவது இங்கிலாந்திற்கு அனுப்பி வைப்பதற்கு உதவ வேண்டும் என விரும்புகிறான்.

இருப்பினும் இசைநிகழ்ச்சி மீது முழு நம்பிக்கை வைக்காது தான் மிகவும் நேசிக்கும் மோட்டார் சைக்கிளை விற்று விடுகிறான் நாதேர். அதில் கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஆஷ்கானிற்கும் நேகாரிற்குமான பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை பெற்றுக் கொள்வதற்காக மாஷ் டேவிட்டை சந்திக்க செல்கிறான் அவன்.

மாஷ் டேவிட்டின் அலுவலகத்தை அவன் நெருங்குகையில் அந்தக் கட்டிடத்திற்கு முன்பாக ஒரு கூட்டம் கூடியிருப்பதையும், பொலிஸ் கார் ஒன்று கட்டடத்தின் வாசலில் முறைப்பாக தரித்து நிற்பதையும் கண்டு நாதேர் உஷாராகி ஒரு சிறிய சந்தில் மறைந்து கொள்கிறான்.

சிறிது நேரத்தின் பின்பு மாஷ் டேவிட்டை பொலிஸார் கைது செய்து வந்து காரில் ஏற்றுவதை சந்திலிருந்து ரகசியமாகப் பார்கிறான் நாதேர். நாதேர் தன்னை ஒளிந்திருந்து பார்பதைக் காணும் டேவிட் எந்தச் சலனமுமின்றி பொலிஸ் காரில் ஏறிக் கொள்கிறான். தான் மறைந்திருந்த சந்திலிருந்து மனமுடைந்து ஓடிப்போகிறான் நாதேர்.

மூன்று நாட்களிற்கு மேலாக நாதேரிடமிருந்து எவ்விதமான தகவல்களும் கிடைக்காத நிலையில் ஆஷ்கானும், நேகாரும் பதட்டம் கொள்கிறார்கள். அவர்களின் இசைநிகழ்ச்சி, இங்கிலாந்து செல்வதற்கான பாஸ்போர்ட் போன்றவை குறித்த அச்சம் அவர்களை ஆக்கிரமிக்கிறது. நாதேரின் நண்பர்கள் அவர்களிற்கு ஆறுதல் கூறி உற்சாகப்படுத்துகிறார்கள்.

நாதேர் இல்லாமலேயே தங்கள் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொள்கிறது ஆஷ்கானின் இசைக்குழு. இசைநிகழ்சி நடக்கவிருக்கும் இரவில் அதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருக்கும் ஆஷ்கானிற்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பு, நாதேர் தெஹ்ரானில் ரகசியமாக இடம்பெறும் ஒரு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் தகவலை அவனிற்கு தெரிவிக்கிறது. இசைநிகழ்ச்சியின் பொறுப்புக்களை தன் இசைக்குழுவினரிடம் ஒப்படைத்து விட்டு நேகாரையும் அழைத்துக்கொண்டு நாதேரை தேடிச் செல்கிறான் ஆஷ்கான்.

les-chats-persans-2009-18772-1929960640 கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கும் வீட்டை நெருங்கும் ஆஷ்கானும், நேகாரும் அவ்வீட்டிலிருந்து அதிகாரத்தால் தடைசெய்யப்பட்ட இசையானது சுதந்திரமாக தெருவில் கசிந்து கொண்டிருப்பதை அவதானிக்கிறார்கள். தான் மட்டும் உள்ளே சென்று நாதேரை அழைத்து வந்துவிடுவதாக கூறுகிறான் ஆஷ்கான். அவனை எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறாள் நேகார்.

வீட்டினுள் நுழைவதற்கான சங்கேத வார்த்தையைக் கூறி உள்ளே நுழைகிறான் ஆஷ்கான். வீடெங்கும் டெக்னோ இசை பெருத்த சத்தமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படிகளில் மதுக் கிண்ணங்களுடன் இளைஞர்கள் போதையில் கரைந்திருக்கிறார்கள். வீட்டின் மத்தியில் இளைஞர்களும், யுவதிகளும் டெக்னோவின் வீச்சிற்கு தங்களை நடனத்தின் மூலம் இணைத்துக் கொண்டு அதிர்கிறார்கள். அதிகாரம் தடைசெய்த உலகம் அங்கு ஆவேசமாக உயிர் கொண்டு ஆட, அதனூடு நாதேரைத் தேடிச் செல்கிறான் ஆஷ்கான்.

வீட்டின் இரண்டாவது மாடியிலுள்ள அறையொன்றில் போதையோடு கட்டிலில் வீழ்ந்து கிடக்கும் நாதேரைக் கண்டு கொள்ளும் ஆஷ்கான், அவனை உலுப்பி எழுப்புகிறான். ஆஷ்கானை தன் முன்னே காணும் நாதேர் குலுங்கி அழ ஆரம்பிக்கிறான். எல்லாவற்றையும் தான் சிதைத்து விட்டதாக ஆஷ்கானை அணைத்துக் கொண்டு அழுகிறான் அவன்.

நாதேரை நட்புடன் அணைத்துக் கொள்ளும் ஆஷ்கான் போதையில் இருப்பதற்காக நாதேரைக் கடிந்து கொள்கிறான், நாதேரை அவ்வீட்டிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் ஆயத்தமாகிறான். இவ்வேளையில் அவ்வீட்டின் முன் சைரனை ஒலித்தவாறே வந்து நிற்கிறது ஒரு பொலிஸ் வாகனம்.

பொலிஸ் வாகனத்திலிருந்து இறங்கும் காவலர்கள் வீட்டினுள் நுழைகிறார்கள். பொலிஸ் வீட்டினுள் நுழைவதைக் காணும் ஆஷ்கான் மாடி ஜன்னல் வழியே வெளியே துரிதமாக கீழே இறங்க முயல்கிறான். துரிதகதியில் இறங்கும் பதட்டத்தில் கால் இடறி கீழே வீழ்ந்து விடுகிறான் ஆஷ்கான்.

ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும் நாதேர் தரையில் ஆஷ்கானின் உடல் எந்த அசைவுமற்றுக் கிடப்பதைக் காண்கிறான். வெறி கொண்டவனாய் வீட்டிற்குள் நுழைந்த காவலர் மேல் பாயும் நாதேரை அவர்கள் அடக்கி வீழ்த்துகிறார்கள்.

les-chats-persans-2009-18772-2090845041 ஆஷ்கானிற்கு நடந்ததை அறிந்து கொள்ளும் நேகார் அவ்விடத்தை விட்டு விலகி, ஆஷ்கானும் அவளும் அற்புதமான தருணங்களை இனிமையாகக் கழித்த மொட்டை மாடிக்குச் செல்கிறாள். மொட்டை மாடியிலிருந்து இருளில் மூழ்கியிருக்கும் தெஹ்ரானை அவள் விழிகள் வெறிக்கின்றன. அடக்கு முறையின் ரகசிய கண்கள் அந்த இரவினூடு அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கின்றன. நேகாரின் கண்கள் திரையில் இருந்து விலக, அவள் உடல் மாடியிலிருந்து மெதுவாகப் பின்னோக்கி சரிகிறது.

மருத்துமனையில் ஒரு ட்ராலியில் ஆஷ்கான் தள்ளிச் செல்லப்படுகிறான். அவன் தலையிலிருந்து ரத்தம் வடிந்தபடியே இருக்கிறது. அவனது வலி நிரம்பிய முகம், அவனைத் தள்ளிச் செல்வோர், மருத்துவமனை என யாவும் தெளிவற்றுக் கலங்கலாக தெரிகின்றன. அந்தக் கலங்கலினூடாக திரை இருள்கிறது, நிலவறையில் வாழும் இசை ஒளிர்கிறது.

இளமை, இசை, துள்ளல், கொண்டாட்டம், நகைச்சுவை, சோகம் என ஈரானில் ஒடுக்கப்பட்டிருக்கும் இளம் இசைக்கலைஞர்களின் வாழ்க்கையை அற்புதமாக படம் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறது Nobody Knows About the Persian cats எனும் இந்த ஈரானியத் திரைப்படம். படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் இயக்குனர் Bahman Ghobadi.

இயக்குனர் பாமன் கோபாடி ஒரு படத்தை இயக்குவதற்காக ஈரானிய அதிகாரிகளிடம் அனுமதிக்காக விண்ணப்பித்திருந்தார். மூன்று வருட இழுத்தடிப்புக்களின் பின்னர் அவரிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கோபாடி தளராமல் ஒரு இசை ஆல்பத்தை பதிவு செய்வதற்கு விண்ணப்பித்தார் அதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. சற்றும் தயங்காது கோபாடி அனுமதி பெறப்பாடாத இசை ஆல்பங்களை பதிவு செய்யும் ஒரு நிலவறை ஒலிப்பதிவு மையத்தில் தனது ஆல்பத்தை பதிவு செய்தார்.

அந்த நிலவறையில் அவர் சந்தித்த இளம் இசைக்கலைஞர்களின் ஒரு புதிய உலகை அவர் திரைக்கு எடுத்து வந்திருக்கிறார். அந்த இளைஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், சந்திக்கும் அபாயங்கள், அயலவர்களின் தொல்லைகள், பொலிஸ் ரெய்டுகள், சவுக்கடித் தண்டனைகள் என பல விடயங்களை திரைப்படம் பேசுகிறது. இவையெல்லாவற்றையும் இசை எனும் ஒன்றிற்காகவே அந்த இளைஞர்கள் அனுபவிக்கிறார்கள் என்பது சிறப்பாக திரைப்படத்தில் கூறப்படுகிறது. ஈரான் அதிகாரத்தின் அனுமதி இல்லாமலேயே இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தில் வரும் பல சம்பவங்கள் உண்மை நிகழ்வுகளே.

Indie Rock, பாப் ராக், பெர்சியன் ராப், மெட்டல், நாட்டார் பாடல், மரபுப் பாடல், என படத்தில் வரும் பாடல்களும் இசையும் ரசிகர்களைக் கிறங்கடிக்கின்றன. குறைந்த வசதிகளுடன் செயற்படும் இந்த இளம் கலைஞர்களின் படைக்கும் திறமை பிரம்மிக்க வைக்கிறது.

கண் விழித்தெழு கடவுளே எனும் பெர்சியன் ராப் பாடலின் மிளகாய் வரிகள் ஈரானின் இன்றைய சமூக நிலையை குறுக்காக வெட்டி உண்மை நிலையைப் பாடுகின்றன. நாதேர் பாடும் மரபுப் பாடலின் இசை, ஒளிப்பதிவு, நடனம் என்பன ஒன்று சேர்ந்து, எல்லைகள் கடந்து அரங்கிலிருக்கும் ரசிகனின் மனதைக் கட்டி அணைக்கின்றன.

823ae03 திரைப்படத்தில் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்ததும் கமெரா தெஹ்ரானின் தெருக்களில் இறங்கிவிடுகிறது. நிலவறையில் உருவாகும் அப்பாடல்களால் எட்ட முடியாத தொலைவிலுள்ள தெருக்களையும், மக்களையும் ஊடுருவியவாறே கமெரா வேகமாகப் பறக்கிறது. அக்காட்சிகள் வழியே தெஹ்ரானின் வறுமையையும், செல்வத்தையும், வாழ்வையும் நுட்பமாகக் காட்டியிருக்கிறது கமெரா.

படத்தின் மற்றொரு முக்கிய அம்சம் நகைச்சுவை. ஷோலே படத்தில் கதாநாயாகி கண்ணாடித் துண்டுகளின் மேல் நடனமிடும் காட்சியைக் கண்டு கண்ணீர் சிந்தும் குருவி, இளைஞர்கள் இசைக்கும் மெட்டல் இசையைக் கேட்டபின் உணவு உட்கொள்ள மறுக்கும் மாடுகள், கண்பார்வை இல்லாவிடிலும் ஈரானை விட்டு நீங்கி வேறு நாடுகளில் அழகை ரசிக்க விரும்பும் தம்பதிகள் என இயல்பான, செறிவான நகைச்சுவை.

படத்தில் தன் சிறப்பான நடிப்பால் மனதைக் கவர்பவர்களில் முதலிடம் பிடிப்பவர் நாதேர் பாத்திரத்தில் பின்னியெடுத்திருக்கும் Hamed Behdad. தடை செய்யப்பட்ட திரைப்பட சிடிக்களை விற்றதற்காக நடக்கும் விசாரணையில் அவர் வழங்கும் நடிப்பு அரங்கையே சிரிப்பில் ஆழ்த்திவிடுகிறது. நேகார், ஆஷ்கான் ஆகிய இருவரும் நிஜ வாழ்வில் இசைக்கலைஞர்கள். படப்பிடிப்பு நிறைவடையும் முன்பே இவர்கள் இருவரும் இங்கிலாந்துக்கு சென்று விட்டார்கள்.

ஈரானில் ஒடுக்கப்படும் இளம் இசைக்கலைஞர்களின் உண்மைநிலை குறித்து வெளிப்படையாக துணிச்சலுடன் பேசும் ஒரு பதிவாக இப்படம் அமைந்திருக்கிறது. ஈரானில், வீட்டில் பூனைகள், நாய்களை வளர்க்கலாம் ஆனால் அவற்றை வெளியே எடுத்துச் செல்ல அங்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்ற நிலையில்தான் இளைஞர்கள் இசைக்க விரும்பும் இசையும் அடைபட்டுக்கிடக்கிறது. நீண்ட நாட்களின் பின் நான் மிகவும் ரசித்துப் பார்த்த படமிது. தரமான படங்களை விரும்பும் நண்பர்களிற்கு நான் இத்திரைப்படத்தை தயங்காது பரிந்துரை செய்கிறேன். [****]

ட்ரெயிலர்


கடவுளே கண்விழி !
நாதரின் பாடல்
8 comments:

 1. காதலரே,

  மீ த பர்ஸ்ட்.

  நம்ம சூர்யா கூட அடிக்கடி இந்த பெர்சிய/ இரானிய படங்களை பற்றியே கூறுவார். அதனால் தான் (நீங்கள் கூறி) ஒரு வருடத்திற்கு முன்பே நான் பெர்சிபோலிஸ் மற்றும் மர்ஜானே சட்ராபி கதைகளை படித்தேன். அதனால் இதனையும் பார்த்து விடுகிறேன்.

  ReplyDelete
 2. இசைக்கு தடை - இதனை படிக்கும்போது சமீபத்தில் பார்த்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது (பெயர் மறந்து விட்டது - Damn on my memory). அதில் எதிர்காலத்தில் புத்தகங்களை தடை செய்து இருப்பார்கள். புத்தகங்கள் இருந்தால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற சூழ்நிலை இருக்கும். ஹீரோ ஒரு வீட்டில் பதுக்கபட்டு இருக்கும் நூல்களை அழிக்க முயலும்போது தான் அவனுக்கு நூல்களின் மகாத்மியம் தெரிய வருகிறது. அதன் பின்னர் கதையானது ஒரு கவிதை போல ஆரம்பிக்கும்.

  பெயர் நினைவில் உள்ளதா காதலரே?

  ReplyDelete
 3. அருமையான விமர்சனம். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 4. காதலரே . . இப்படத்தை நான் தவறவே விடப்போவதில்லை. காரணம்: அடக்குமுறை அரசுகளைக் கவிழ்க்கும் உறுதி, மக்களுக்குப் பாடல்களின் மூலமாகவும் இசையின் மூலமாகவும்தான் கிடைக்கிறது. இதற்குப் பல தென்னமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை உதாரணமாகக் கூற முடியும். உலகின் பல இசைக்கலைஞர்கள், இந்தப் புரட்சி இசையின் மூலமாகவே தோன்றியிருக்கிறார்கள். அனைத்துத்தளைகளையும் உடைத்து, வாழ்வின் உன்னதத்தை மனிதனுக்கு உணர்த்தும் வல்லமை இசைக்கு மட்டுமே உண்டு (காதலும் தான். . ஆனால் அதில் சோகமயமான தருணங்களும் உண்டு) . .

  இப்படத்தில் நீங்கள் விவரித்திருக்கும் இறுதிக்காட்சி, என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அதுவும், அந்த "இனிமையான கணங்கள்" படம்! அதுவே ஒரு ஆழ்ந்த கவிதையைப் போல் உள்ளது. இந்த விமரிசனத்தைப் படித்ததுமே மனம் இலகுவாக மாறியதை உணர்ந்தேன். இப்படத்தை நான் தவறவே விடப்போவதில்லை. மனமார்ந்த பாராட்டுக்கள் !

  ReplyDelete
 5. காதலரே,
  இந்த அளவு ரசிப்பு தன்மை எனக்கு கிடையாது காதலரே. நமக்கெல்லாம் டுமீல்,டுமீல் பர,பர படங்கள் தான் லாயக்கு...

  அன்புடன்,
  லக்கி லிமட்
  சுஸ்கி & விஸ்கி தோன்றும் பேரிக்காய் போராட்டம்!

  ReplyDelete
 6. காதலரே
  இந்த பதிவின் தலைப்பை சற்று ஆங்கிலப்படுத்தி கூற முடியுமா?

  ReplyDelete
 7. தயவு செய்து நம்ம விஸ்வா சொல்லும் படங்களை எல்லாம் பார்த்து விடாதீர்கள். அவர் சொல்லித்தான் மிகவும் எதிர்பார்ப்புடன் நாங்கள் ஆயிரத்தில் ஒருவன் படத்தினை பார்த்தோம்.

  ஒருவேளை எதிர்பார்ப்பு இல்லை என்றால் ரசித்து இருப்போமோ என்னவோ தெரியவில்லை. ஆனால் எதிர்பாப்பு இருந்ததால் அது இல்லை என்று தெரிந்தவுடன் மனம் நொந்து விட்டோம்.

  ReplyDelete
 8. விஸ்வா, சந்தர்ப்பம் கிடைக்கும் போது பார்த்துவிடுங்கள் நல்லதொரு திரைப்படம். நீங்கள் கூற விரும்பும் படம் கிறிஸ்டியன் பேல் நடித்த Equilibrium ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன். அத்திரைப்படத்திலும் கலை வடிவம் யாவும் அதிகாரத்தால் தடை செய்யப்பட்டிருக்கும். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் சரவணக்குமார் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கருந்தேள், தவறவிடாதீர்கள். உங்களை படம் அப்படியே அள்ளிக் கொள்ளும். பாராட்டுக்களிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

  நண்பர் லக்கி, இன்னமும் சிறிது காலத்தில் இதனைவிட தரமான படங்களிற்கு நீங்கள் விமர்சனம் எழுதத்தான் போகிறீர்கள். டமால், டுமீல், கிளு கிளு படங்களிற்கு நான் இப்போதும் ரசிகன். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ஒலக காமிக்ஸ் ரசிகரே, விட மாட்டீர்களே. ஆங்கிலத்தில் வேண்டுமானால் Persian Cats என்று வைத்துவிடலாம். அல்லது :))!
  விஸ்வா சொல்லி எது இல்லை என்று நொந்து போனீர்கள், ரீமா சென்னிற்குதான் தாராளமாக இருக்கிறதே. நண்பர்களுடன் லொள்ளு பண்ண விஸ்வாவிற்கு உரிமையில்லையா என்ன. கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete