Sunday, January 11, 2015

ராஜாளிப்பாறை காதலன்


வதனமோ சந்த்ர பிம்பமோ - 20

கனேடிய குதிரைப்பொலிஸ்படை அதிகாரி காலனல் ஜிம் பிராண்டன், தனது முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப்போன நிலையில் ஒரு குற்றவாளியை சட்டத்தின் பிடியினுள் இட்டு வரும் பொருட்டு பனிச்சிங்கம் டெக்ஸின் உதவியை நாடுகிறார். ஜிம் பிராண்டன் மீதும் கனேடிய பட்டை விஸ்கி மீதும் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடான நட்பு கொண்ட டெக்ஸ், தனது பங்காளி கார்சன் மற்றும் கனடாவில் இடம்பெறும் டெக்ஸ் சாகசங்களில் டெக்ஸிற்கு GPS ஆக பணியாற்றும் க்ரோ ஜான் சகிதம் ஜிம் பிராண்டனை வந்து சந்திக்கிறார் ....

டெக்ஸ் கனடாவிற்கு செல்கிறார் என்றாலே மனதில் அந்தப் பெரும்நிலத்தினை காணும் ஆர்வம் குடிவந்து விடுகிறது. அழகான இயற்கையின் துணையுடன் டெக்ஸ் செய்யும் சாகசங்கள் அக்கதைகளின் சித்திரங்கள் வாயிலாக எம்முடன் ஒன்றிக்கொள்ளும் சாத்தியங்கள் அதிகமாக அவற்றில் இருக்கும். TEX Special n°11 ன் கதையான L'ultime Frontiere ன் அட்டைப்படத்தை பாருங்கள் சாஸ்காச்சேவான் ஏரியில் சிறுபடகொன்றில் ஜிம் பிராண்டன் துடுப்பு போட டெக்ஸ் தன் கையில் வின்செஸ்டரை தயார்நிலையில் தாங்கியவாறே வெண்பனிபோர்த்த அந்த மலைப்பகுதியில் சிறுபடகில் ஒரு சீறும் எரிமலையாக நிற்பது எவ்வளவு தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முன்னட்டையில் இக்காட்சி தரும் உணர்வுகளுடன் கதையில் இக்காட்சியை தேடினால் அது கதையில் எங்கும் கிடைக்காது. ஆம் நண்பர்களே கதையில் வராத சம்பவங்களை சித்திரப்படுத்தும் முன்னட்டை கொண்ட டெக்ஸ் கதைகளில் இதுவும் ஒன்று. ஆனால் இதனால் வாசக அன்பர்கள் உடனே வேதனையாகி கண்ணீர் சிந்தக்கூடாது. கதையில் டெக்ஸ் பூர்வகுடிகளின் இச்சிறுபடகில் பயணிப்பது மட்டுமல்லாது சாஸ்காச்சேவான் ஏரியின் காவல் தேவதை கதறி அழும் வகையிலான ஆக்சன்களையும் செய்வார்.

ஜிம் பிராண்டனின் அழைப்பை ஏற்று கனடாவில் அமைந்திருக்கும் சஸ்கட்டூனிற்கு டெக்ஸ் வந்து சேருவதற்கு ஒன்றரை மாதங்களின் முன்பாக குதிரைப்பொலிஸ் காலனல் ஜிம் பிராண்டன் ஒரு கொலைகாரனை பிடிப்பதற்கான ஒரு ரகசியத்தாக்குதலில் இறங்குவார். ஆனால் மூர்க்கமும், தந்திரமும், வெள்ளையர்கள் மீதான வெறியும் கொண்ட அந்த கலப்பின கொலைகாரன் ஜிம் பிராண்டனையே மரணத்தின் எல்லைவரை கொண்டு செல்லும் அளவிற்கு பதிலடி தருவான். வெள்ளையின தந்தைக்கும், செவ்விந்திய தாய்க்கும் பிறந்த அந்த கலப்பின இளைஞன் இரு வருட காலமாக சாஸ்காச்சேவானை அண்மித்த பகுதிகளில் தன் கொலைவெறியை அரங்கேற்றி வரும் ஒருவன். அவன் பெயர் யேசு ஸேன்.

யேசு ஸேனின் தந்தையான சிலாஸ் தன் பாதி வாழ்க்கையை காடுகளிலே கழித்து ஏறக்குறைய ஒரு காட்டுவாசியாகிப் போனவன். மிருகங்களை வேட்டையாடி அவற்றின் தோல்களை விற்று ஜீவிதம் நடாத்தும் அவன் வாழ்க்கை இலட்சியம் பூர்வகுடிகளை கொல்வது மட்டுமே. ஒரு நாள் அவன் வழியில் குறுக்கிட்ட ஒரு பூர்வகுடி பெண்ணை அவன் வன்புணர்வு செய்கிறான். அன்றிரவே மது தந்த மயக்கத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழும் அவனை அப்பூர்வகுடிப் பெண் கொலை செய்கிறாள். அப்பெண்ணின் குடி அவளை விலக்கி வைக்க தனித்து நின்று தன் மகனை அவள் வளர்க்கிறாள், அச்சிறுவன் மனதில் வெள்ளையினத்தவர்களின் மீதான வெறுப்பையும் ஊட்டுகிறாள். தன்னால் இயலாது எனும் நிலையில் மதகுருவானவர்களின் அனாதை விடுதி ஒன்றில் தன் மகனை கொண்டு சேர்க்கிறாள். யேசு ஸேன் எனும் பெயர் அந்த விடுதியை நடத்தும் குருக்களாலேயே அவனிற்கு வழங்கப்படுகிறது.

கிறிஸ்தவ குருக்களின் வழிநடத்தலின் கீழ் யேசு ஸேனின் வாழ்க்கை அவனிற்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது இல்லை. பிரார்த்தனை, போதனை, கட்டுபாடு, ஒழுங்கு என அவனிற்கு பிடிக்காத விடயங்கள் அங்கு ஏராளமாக இருந்தன. கூடவே அவன் தாய் அவன் மனதில் வளர்த்த வெள்ளையினத்தவர் மீதான வெறுப்பு விடுதியில் வாழ்ந்திருந்த வெள்ளையின சிறுவர்கள் மீது அவன் வன்முறையை பிரயோகிப்பதில் பெரும் பங்காற்றியிருந்தது. நடப்பது நடக்கும் என்பது போல அவன் வாழ்க்கை தடம் மாறிப் போகும் சம்பவங்களும் நடந்தேறின.

டெக்ஸின் பல கதைகளில் நாம் பார்த்தது போல மீண்டும் ஒரு மனித வேட்டையையே இங்கு கதாசிரியர் நிஸ்ஸி கதையின் ஆரம்ப பகுதியில் சொல்கிறார். ஜிம் பிராண்டனையும் அவனுடன் வந்த காவலர்களையும் யேசு ஸேன் தாக்கும் ஆரம்பக் காட்சியில் அவன் எவ்வளவு கொடூரமானவன் என்பதை நிஸ்ஸி உறுதிப்படுத்த விரும்புகிறார். இருப்பினும் கொல்லப்பட்டவர்களின் தலைத்தோல்களை உரித்தெடுக்கும் செயலை அவர் பூர்வகுடிகளிடம் கடத்தி விடுகிறார். சிலாஸ் பூர்வகுடிகளை கொல்வதில் எவ்வளவு விருப்பம் உள்ளவனாக இருந்தானோ அதேபோன்ற அல்லது அதனிலும் சற்று அதிகமான விருப்புடன் வெள்ளையினத்தவர்களை கொல்பவனாக யேசு ஸேனை அவர் சித்தரிக்க விரும்புகையில் தலைத்தோல்களை உரிக்கும் செயலிலிருந்து ஸேனை கதாசிரியர் விலக்கியது அவன்மீது வாசகர்கள் அதிகளவு எதிரான உணர்வுகளை உருவாக்கி கொள்ளக்கூடாது என்பதற்காகவே என்பது கதையின் நகர்வில் பின் புலனாக ஆரம்பிக்கும்.

சஸ்கட்டூனிற்கு வரும் டெக்ஸ் அண்ட் கோ ஜிம் பிராண்டனுடான சந்திப்பின் பின் செல்லும் முதலிடம் யேசு ஸேன் சில வருடங்கள் தன் வாழ்க்கையை கழித்த கிறிஸ்தவ குருமார்களால் நடாத்தப்படும் அனாதை விடுதியே. அங்கு செல்லும் வழியில் பிராண்டனாலேயே அவனை கைது செய்ய முடியல, நீ மட்டும் என்ன கிழிக்கப் போறே என சற்று சலித்துக் கொள்வார் கார்சன் அதற்கு டெக்ஸ் நான் அதிர்ஷ்ட நட்சத்திரத்தில பொறந்த பய என பதில் சொல்வார். அந்த பதிலுக்கு ஏற்றவாறு கதையின் பல காட்சிகளில் அதிர்ஷ்ட தேவதை டெக்ஸிற்கு ஆயுள் சந்தா கட்டியிருப்பதை வாசக வெள்ளம் நுரைபொங்க ரசித்திட முடியும். அதில் ஒரு அதிர்ஷ்டம்தான் குருவானவர் எலியாஸ் டெக்ஸிற்கு தரும் தகவல்.

கதையின் இப்பகுதி யேசு ஸேனின் இன்னொரு முகத்தை சித்தரிக்க ஆரம்பிக்கிறது. வெறுப்பு மட்டுமல்லாது நட்பும், காதலும் கூட அவன் மனதில் வாழ்ந்திருக்கிறது என்பதை கடந்தகால சம்பவங்கள் வழியாக குருவானவர் எலியாஸ் வாசகர்களிடம் கடத்துகிறார். அனாதை விடுதியில் நட் மோர்கன் எனும் வெள்ளையினச் சிறுவனுடனும், ஷீபா எனும் பூர்வகுடி சிறுமியுடனும் யேசு ஸேனின் இனிய சில கணங்களை விபரிக்க ஆரம்பிக்கிறார் கதாசிரியர். ஆரம்பத்தில் அழகுச்சிறுமி ஷீபாவின் நட்பை வெல்ல போட்டியிடும் நட்டும், ஸேனும் காலத்தின் நகர்வில் அவள் மனதில் இடம்பிடிக்க போட்டி போட ஆரம்பிக்கிறார்கள். விதியின் ஓட்டம் ஸேனை கொலைகாரனாக்க, அவன் மனதில் இன்னும் அழியாமல் இருக்கும் வெறுப்பின் காரணத்தால் தன் மனதை நட்டிடம் தந்து விடுகிறாள் ஷீபா. திருமணமான நிலையில் கனவா ஆற்றின் அருகே உள்ள ஒரு சிறு பண்ணையில் தம் வாழ்க்கையை இனிதே கழித்து வருகிறது இத்தம்பதி. ஆனால் யேசு ஸேன் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளும்போது தன் மனதில் தன் காதலியாக, தன் மனைவியாக எப்போதும் இருக்கும் ஷீபாவை நட்டிடமிருந்து கவர்ந்து செல்வது எனும் தீர்மானத்திற்கு அவன் வந்து விடுகிறான். அதை நிறைவேற்றவும் செய்கிறான். இதை நிறைவேற்ற தன் பழைய நண்பனான நட்டுடன் அவன் மோத வேண்டி வருகிறது. மூர்க்கமான ஒரு மோதலில் நட்டை நினைவிழக்க செய்கிறான் யேசு. ஆனால் அம்மோதலின் முன்பாக அவன் நட்டிடம் வழங்கிய ஒரு தகவலே அவனிற்கு ஆபத்தாக அமைந்து விடுகிறது.

சிறுவர்கள் நட், ஷீபா, ஸேன் ஆகியோரிற்கு இடையிலான நட்பும் பின் அது வளர்ந்து காதலாவதும் ஸேனை ஷீபா காதலிக்க மறுப்பதும் என கொடூரமான ஒரு உலகின் ஒரு சிறு தென்றல் தருணம் என கதையின் இப்பகுதி அமைகிறது. ஸேன் மீது வாசகர்கள் கொண்ட பார்வைகளும் கதையின் இப்பகுதியிலேயே மாற்றம் கொள்ள ஆரம்பிக்கும். அன்பை தேடும் ஒருவனாக, அது மறுக்கப்பட்ட நிலையிலும் அதை மூர்கத்துடன் தனதாக்க விழையும் ஒருவனாக ஸேன் மாற்றம் பெரும் தருணமிது. ஆனால் அவன் இழைத்த குற்றங்கள் அவனை விடுவதாக இல்லை. குருவானவர் எலியாஸின் சந்திப்பின் பின்பாக கனவா ஆற்றின் பண்ணை வீட்டிற்கு வரும் டெக்ஸ் அண்ட் கோ ஷீபாவை ஸேன் கவர்ந்து சென்றிருப்பதை அறிந்து கொள்கிறார்கள். தன் மனைவியை காப்பாற்ற புறப்படவிருக்கும் நட்டை அதை செய்ய வேண்டாம் என ஆலோசனை சொல்லவும் செய்கிறார்கள். அந்த உரையாடலின்போதே ஸேனைப் பற்றிய ஒரு முக்கியமான தகவலை ரேஞ்சர்கள் அறிந்து கொள்கிறார்கள். விஸ்கி மற்றும் துப்பாக்கிகளை கடத்துவதன் மூலமே ஸேன் பணம் சம்பாதிக்கிறான் எனும் தகவல்தான் அது.

இந்த தகவலை டெக்ஸ் அண்ட் கோ பெறும் தருணத்திலிருந்து கதை அதிரடியான ஓட்டம் பெற்று விடுகிறது. சஸ்கட்டூன் நகரில் செயற்படும் கடத்தல்காரர்கள் யாரென அறிந்து கொள்ள ரேஞ்சர்கள் கிளம்ப, தன் மனைவி ஷீபாவை தேடி நட்டும் தன் தேடலை ஆரம்பிக்கிறான். இத்தேடல்களின் பாதைகள் இட்டுவரும் எதிர்பாராதவொரு மனநெகிழ்வான முடிவை நோக்கி கதை வாசகனை வேகமாக இட்டு செல்கிறது.

டெக்ஸின் வழமையான அதிரடிகள் ஆரம்பமாகும் தருணங்கள் அவர் கடத்தல்காரர்களை விசாரணை செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. முகமூடிகளை அணிந்து கொண்டு அவர் தன் விசாரணை முறையை மாற்றாது கடத்தல்காரர்களை அடி அடி என்று அடிக்கிறார். உடலை விறைக்க வைக்கும் ஏரி நீரில் அவர்களை போட்டு மூச்சு திணற வைக்கிறார். உண்மைகளை வலியுடனும், கண்ணீருடனும் சிந்த வைக்கிறார். தனிப்பட்ட முறையில் உண்மையில் இக்கதையின் நாயகன் டெக்ஸ் என என்னால் சொல்ல முடியாது. ஏனெனில் கதையின் முடிவுப் பகுதி அப்படி.

ஷீபாவை கவர்ந்து வந்து தன் மறைவிடமான ராஜாளிப்பாறையின் அருகிலான குடியிருப்பில் கட்டிப்போட்டு வைத்தாலும் கூட ஸேனால் அவள் மனதை மாற்றவோ, வெல்லவோ முடிவதில்லை. ஸேன் நினைத்திருந்தால் தன் தந்தைபோல ஷீபாவை வன்புணர்விற்குள்ளாக்கி இருக்கலாம். ஆனால் அதை அவன் செய்வதில்லை. அவளின் மறுப்புக்கள் ஒவ்வொன்றும் அவன் இதயத்தில் ஒவ்வொரு இறப்புகளாக இறங்கி கொண்டே இருந்த போதிலும் ஷீபாவின் நலன்களை கவனிக்க அவன் தவறுவதே இல்லை. காதலிடமும், வாழ்க்கையிடமும் அவன் கேட்பது ஒரு வாய்ப்பைத்தான், ஆனால் அவை அவன் அபயக்குரலின் மொழி புரியாத சிலைகளாக ராஜாளிப்பாறையின் கூடாரத்திற்குள் உறைந்து போகின்றன.

டெக்ஸுடனான இறுதி மோதலின்போதும்கூட ஸேன் பேசும் வசனங்கள், வாசகர்களை நெகிழ வைப்பதாக இருக்கும். ஏன் டெக்ஸே கூட வியந்துபோகும் ஒருவனாக மாறிப்போவான் ஸேன். எந்த ஒரு கொடியவனின் உள்ளத்திலும் அன்பு இருக்கவே செய்கிறது. மரணித்துக்கொண்டிருக்கும் விதையாக. நீர் ஊற்றுகிறோமா, தீயை ஊற்றுகிறோமா என்பது யார் கையில் இருக்கிறது.

கதைக்கு சித்திரங்களை வழங்கி இருப்பவர் Goran Parlov. மேஜிக் விண்ட், நிக் ரைடர் போன்ற பொனெலி குழும கதைகளிற்கு தன் ஆற்றலை அர்பணித்தவர். யேசு ஸேனை பார்க்கும்போது அட இது மேஜிக்விண்டா எனும் ஒரு உணர்வு தோன்றுவதுபோல அவர் ஸேனை சித்திரப்படுத்தி இருக்கிறார். கனேடிய மலைகளும், ஏரிகளும், வனங்களும் அவர் கைகளில் அருமையாக வந்திருக்கின்றன. மனிதர்கள் ஓடும்போது பின்னே மரங்கள் நகர்வதுபோன்ற ஒரு பிரம்மையை உருவாக்கும் ஒரு சித்திரக்கட்டம் இருக்கிறது அது என்னை மிகவும் கவர்ந்தது. சில சமயங்களில் சாதாரண கிறுக்கல்கள் போல தோன்றினாலும் கொரான் பார்லோவின் சித்திரங்கள் நின்று நிதானமாக ரசித்து பின் நகர வேண்டிய திறமையை தம்முள் உள்ளடக்கி இருக்கின்றன.

டெக்ஸின் கதைகளில் அவரையே பின் தள்ளி எதிர் நாயகனான ஸேன் முன்னிடம் பிடிக்கும் வண்ணமாகவே இக்கதையை என்னால் உணர முடிகிறது. யேசு ஸேன் டெக்ஸ் கதைகளில் நினைவில் நிற்கும் ஒரு பாத்திரமாக இருப்பான் என்பது என் எண்ணம். கதாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி இக்கதையை பிரபல காமிக்ஸ் கலைஞர் அமரர் ஹூகோ பிராட்டிற்கு சமர்பித்து இருக்கிறார். ராஜாளிப்பாறையை தழுவி ஓடும் ஆற்றின் மீதான காற்றில் கரைந்து உலவியிருக்கும் ஆன்மாக்களின் உதடுகள் முடிவிலா காலத்தின் எல்லைகளிலும் கிசுகிசுக்கும் ராஜாளிபாறைக் காதலனின் காதல் மொழியை.

Saturday, January 3, 2015

கான்ஃபெடரேட் தங்கத்தின் பின்

சமீபத்தில் சிகுகுவாபேர்ல் முதல் அரிசோனா லவ் வரையிலான  ப்ளுபெரியின் பிரதான கதைவரிசை ஆல்பங்களை மீண்டும் படித்தேன். படித்தபின்பாக அவற்றின் தமிழ் வடிவங்களின் சில பக்கங்களை யதேச்சையாக காண நேர்ந்தது. தமிழில் டைகர் தொடரை படிக்காதது நல்லதே எனும் எண்ணம் வலுப்பெற்றது. இதில் ரத்ததடம் விதிவிலக்கு, சிறப்பான மொழிபெயர்ப்பு என அதை நான் உணர்ந்தேன். சமீபத்தில் உருவாக்கப்பட்ட மொழிபெயர்ப்பு என்பது அதன் காரணமாக இருக்கக்கூடும்.

சந்தேகமேயில்லாமல் இந்த ஆல்பங்களில் சிகுகுவாபேர்ல், 500 000 டாலர் மனிதன், சவப்பெட்டிக்காக ஒரு உலா, எனும் கதைகள் அடங்கிய கான்ஃபெடரேட் தங்கம் இன்றும் சிறப்பாக இருக்கிறது. சார்லியரின் திறமையான கதைசொல்லலிற்கு சான்றாக இக்கதைவரிசையையே நான் தேர்ந்தெடுப்பேன். ஜிரோவின் சித்திரங்கள் அது உருவாக்கப்பட்ட காலத்தில் அதிக வரவேற்பை பெற்றிருக்கலாம், இன்றும் அச்சித்திரங்கள் சிறப்பாகவே உள்ளன ஆனால் தொடரின் நகர்வோடு அவர் சித்திரங்களும் மாற்றம் பெற்று செல்வதை நாம் அவதானிக்கலாம். ஜிரோவின் சித்திரங்களில் தரம் ஏறிச்செல்லுவதாக நான் உணர்ந்த வேளையில் சார்லியரின் கதைசொல்லல் தடுமாற்றமான தருணங்களை சந்தித்து நகர்ந்தது என்பதே என் கருத்து.

ஜனாதிபதி கிராண்ட் மீதான முதல் கொலைச்சதி எனும் கதைவரிசை சட்டவிரோதி எனும் ஆல்பத்தில் ஆரம்பமாகிறது. 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட கைதியாக ப்ளுபெரி, பிரான்சிஸ்வில் சிறைச்சாலையில் காமாண்டர் கெலி கைகளில் சிக்கி சின்னாபின்னமாகிறார் ... இருப்பினும் பின் தன் நேர்மையை நிரூபிக்க தப்பி செல்கிறார் ... அதன் வழியாக ஜனாதிபதி கிராண்ட் கொலைச்சதியில் பலிக்கடாவாக ஆக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார். சார்லியரின் திணறல் கதையை படிக்கையிலேயே உணரப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. கதையின் திணறலை சமாளிக்கும் பொருட்டு ஜிரோ பெரிது பெரிதாக சித்திரங்களை வழங்கி இருக்கிறார் என்றே நான் எண்ணுகிறேன். ஏஞ்சல்பேஸ் எனும் பாத்திரம் முக்கியமான ஒன்றாக கதையின் ஆரம்பத்தில் சித்தரிக்கப்பட்டு பின் ப்ளுபெரியால் டெமொன்பேஸாக மாற்றம்பெறும் வில்லன்பாத்திரமாக மாறும். டுயுராங்கோ நகரில் மாறுவேடத்தில் ப்ளுபெரி ஓடுவது, கிழவியை காப்பாற்றுவது, போஸ்டர் ஒட்டுவது, தண்ணீர் தாங்கியில் ஒளித்து இருப்பது என ஒட்டுமொத்த யூனியன் படைகளையும் அதிகாரிகளையும் லாயக்கற்ற ஏமாளிகளாக சித்தரிக்ககூடிய கதை. இறுதியில் டென்னஸி ப்ளேக் கும்பலை முறியடித்து! ரயில் வெடிப்பில் மறைந்துபோகும் ப்ளுபெரி ராணுவ சர்வதிகார அரசொன்றின் உருவாக்கத்தையும் தகர்க்கிறார். போதாக்குறைக்கு குண்டு கூஃபி ஃபால்மர் குதிரைவண்டிலில் குற்றுயிரும் குலையுயிருமாக வந்து கிராண்டின் பழைய காதல் நினைவுகளை பழைய படம் ஒன்றினால் கிளறும் படாவதி செண்டிமெண்ட் காட்சி. இப்படியாக ஏஞ்சல்பேஸில் நிறைவுக்கு வரும் இக்கதை இக்கதை வரிசையில் சுமாரான ஒன்றே. இது போதாது என்று 30 வருட தண்டனையை 20 வருட தண்டனையாக கதையில் சார்லியர் குறைக்கும் காமெடி எல்லாம் உண்டு. அவை எடிட்டிங்கின்போது கண்டு கொள்ளப்படமால் போனது எவ்வாறு என்பது ஆச்சர்யமே.

நல்லது ரயில்வெடிப்பில் காணாமல்போன ப்ளுபெரி என்ன ஆனார். எங்கே சென்றார். தேடப்படும் சிறைப்பறவை கதைவரிசையில் அதை நாம் கண்டு கொள்ளலாம்.

செவ்விந்திய ஏஜெண்ட் டொல்சன் அநீதியான முறையில் செவ்விந்தியர்களுடன் நடந்து கொள்ள அதற்கு பதிலடி தருகிறார்கள் செவ்விந்தியர்கள். ஆனால் அந்தப் பதிலடியில் செவ்விந்திய வெள்ளைய தாக்குதல் உத்திகள் கலந்து பயன்படுத்தபடுகின்றன. வெள்ளையர்களிற்கு இது ஆச்சர்யமானாலும் அப்பாச்சேகளிற்கு இது ஆச்சர்யமல்ல. ஏனெனில் சகோ உடைந்தமூக்கார்தான் அவர்களை தன் தந்திரங்களால் வெற்றிகளிற்கு அழைத்து செல்வது.

அமெரிக்க சட்டத்தால் தலைக்கு விலை வைக்கப்பட்ட நிலையில் [ 50000, 10000, 20000 என கதைநெடுக மாறும் தலைவிலை சார்லியரின் கைங்கைர்யம்] அப்பாச்சே பெருந்தலைவர் கொச்சிஸிடம் சென்று அங்கு அவர் மகள் ச்சினியை வளைத்துப்போட விட்டோரியோ எனும் அப்பாச்சேவுடன் முறுகும் ப்ளுபெரி செய்யும் சாகசங்கள் ஒன்று இரண்டல்ல ... ச்சினிக்கு பரிசு கொணர்வது, கழுகை பிடிக்க செல்வது, விட்டோரியோவின் தவறால் முற்றாக அழிக்கப்பட இருந்த கொச்சிஸ் கூட்டத்தை காப்பாற்றுவது .. பின் வெள்ளையின துரோகி என குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் யூனியன் துருப்புக்களின் சிறைக்கு வந்து சேர்வது ... இக்கதையின் இரு முக்கிய பாத்திரங்கள் எக்ஸ்கல் ஜெடியோன் ... செவ்விந்தயர் மண்டைத்தோலை கிழிப்பதை தொழிலாக கொண்டு இரு மோப்ப நாய்களுடன் அலையும் தடவேட்டையன், மற்றது சும்மா புளுகிக்கொண்டு திரியும் வைல்ட் பில் ஹிக்காக், இருவருமே ப்ளுபெரியினை பிடித்து தருவதால் கிடைக்கும் வெகுமதிக்கு வேட்டை போடுபவர்கள்... இதில் வைல்ட் பில் சாடிஸம் குறைந்தவனாக சித்தரிக்கப்படுவான் ... எக் ஸ்கல் இக்கதையின் மூன்று பாகங்களிலும் அப்பாச்சேக்கள், ப்ளுபெரி பின் ஓடி தேடிச் சென்று தன் உயிரைவிடுவான் .. வைல்ட் பில்லை விட மூர்க்கமான படிப்பவர்கள் மனதில் தாக்கத்தை உருவாக்கும் பாத்திரம் எக்ஸ்கல்...

நீண்ட பயணம் ஆல்பம் ப்ளுபெரி எப்படி சான் கார்லோஸில் இருக்கும் செவ்விந்தியர்களை காப்பாற்றுகிறார் என்பது பற்றியது... மீண்டும் ஜிம்மி, ரெட்நெக், சிகுகுவா பேர்ல் இக்கதையில் அறிமுகமாவார்கள்... காப்பாற்றுவார்கள் ... உதவுவார்கள்... சொதப்புவார்கள்.... அதற்குள் ச்சின்னி விட்டோரியோவை மணந்து கொள்ள வேண்டும் என தன் மூக்கை சிந்தியபடியே காதலிற்கு குட்பை சொல்வார் ப்ளுபெரி ... வழமைபோலவே ராணுவவீரர்களிற்கு தண்ணி காட்டி ப்ளுபெரி தப்புவார் .. சான் கார்லோஸில் பீப்பீயை விடியும்வரை மூடு பனிக்குள் ஊதி கொச்சிஸை காப்பாற்றுவார் ... மூன்றாம் பாகத்தில் கொச்சிஸ் கண்மூடுவார் ... விட்டோரியோ தலைமையை ஏற்றுக் கொண்டு மெக்ஸிக்கோவிற்குள் தன் குடியை வழிநடாத்தி ச்சின்னியுடன் செல்ல ப்ளுபெரி தன் பங்கிற்கு மெக்ஸிக்கோவின் சிகுகுவாவை நோக்கி பயணிப்பார். செமையான இழுவை கொண்ட கதை ... செவ்விந்தியர்கள் ஓடுவதும் ... மாட்டிக் கொள்வதும் ...ப்ளுபெரி ஓடுவதும் மாட்டிக் கொள்வதும் ... பின்னர் தப்பிப்பதும் ... போக்கு காட்டி ஏமாற்றப்படும் ராணுவ வீரர்கள் ஏமாளிகளாக துரத்தி துரத்தி வருவதும் என முன்னொரு காலத்தில் அசத்தல் என சொல்லக்கூடிய கதை இன்று அப்படி தரப்படுத்த முடியாத ஒன்றாக இருக்கிறது இருப்பினும் கிராண்ட் கொலைச்சதியைவிட இது சிறப்பான கதை என்பேன்.

இதன்பின் வருவது ப்ளுபெரி சிகுகுவா சென்று அங்கு காமாண்டர் விகோ கவர்னராகியிருப்பதை அறிந்து அங்கு சிறையில் அடைபட்டு பின் விடுபட்டு மரணதண்டனை பெற்ற விகோவை காப்பாற்றி தன் நேர்மையை நிரூபிக்க அமெரிக்கா அழைத்து வர முயல்வது ... இறுதி சீட்டு ஆல்பம் கான்ஃபெடரேட் தங்கத்தின் பின்பு இதுதான் என சொல்லக்கூடிய ஒரு ஆல்பம். குறிப்பாக சித்திரங்களும் ... விக்கோவின் பாத்திரப்படைப்பும் அதற்கு நன்கு துணை செய்கின்றன ... வழமைபோல மாறுவேடம், மெக்ஸிக்க வீரர்களை ஏமாளியாக்குவது போன்றவற்றுடன் பித்துப்பிடித்த கொள்ளையனான பரோன் டு லிஸ்ட்ராக் பாத்திரம் ... உச்சக்கட்டத்தில் விகோ ப்ளுபெரியை மிஞ்சுவார்... லுலு பெல் என ஒரு அம்மிணி ... அங்கேயும் இங்கேயுமாக அலைபாய்ந்து சதிகளில் உதவி ப்ளுபெரி முன் சங்கோஜம் இன்றி மேலாடையைக் கழட்ட தயங்காதவர் .. சிகுகுவா பேர்லிற்கு டூப்பாக சார்லியர் உருவாக்கி இருக்கும் பாத்திரம் .. ஒரு வழியாக மெக்ஸிக்க சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி ப்ளுபெரி அமெரிக்க எல்லைக்குள் நுழைவார் .. நீரோட்டத்தின் வேகத்துடன் அவர் கரையை அடையும் முறையை படமெல்லாம் போட்டு காட்டி இருப்பார்கள் ...

இருந்த ஒரே சாட்சியம் விகோவும் மண்டையைப் போட்டதால் விகோ தந்த ஆவணங்களை கொண்டு தன் நேர்மையை நிரூபிக்க ப்ளுபெரி எடுக்கும் முயற்சிகளே ஓட்டத்தின் முடிவு ஆல்பம். ரயிலில் போய் டொட்ஜிடம் வேண்டுகோள் வைப்பது, பிரான்சிஸ்வில் சிறையின் காமாண்டர் கெலிக்கு மொட்டைக் கடுதாசி அனுப்புவது, டெல்டா ராஞ்சில் மாட்டிக் கொள்வது, இறுதியாக மீண்டும் கிராண்டின் மீதான கொலைச்சதி 2 ஐ முறியடிப்பது. ஜெனரல் அலிஸ்டரின் மறுவரவு நல்ல சஸ்பென்ஸ். சார்லியரின் கதைசொல்லல் மிளிரும் தருணங்கள் கொண்ட ஆல்பம் இது. ஜிரோவும் தன் சித்திரங்களில் ஒரு நேர்த்தியை காட்டியிருப்பார். கிராண்ட் வரும் ரயில் அதை தடுத்து ப்ளுபெரி கிராண்டை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் போன்றன நல்ல பரபரப்புதான் என்றாலும் கதைதானே என ஆறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது. கதையின் இறுதியில் தன் நேர்மையை நிரூபித்து , தங்கத்தையும் ரெட்நெக், ஜிம்மியுடன் பங்கிட்டு கொண்டு அவசரமாக கிளம்புகிறார் ப்ளுபெரி ...எங்கு

தகாமோவில் சிகுகுவாபேர்லின் திருமணத்திற்கு ... அரிசோனா லவ் கதை சிகுகுவாபேர்ல் பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்துகிறது, அவரது உடலழகை கண்ணிற்கு விருந்தாக்குகிறது, ப்ளுபெரியை காமெடிபீஸ் ஆக்குகிறது, கூடவே ட்யூக் சாண்டனையும் ... நெகிழ்வான ஒரு முடிவு. ஆனால் கதை சுமாரிற்கும் கீழே.

காமிக்ஸ் வரலாற்றில் ப்ளுபெரி தனி இடம் வகிக்கிறார். அதற்கு இங்கு குறிப்பிட்ட கதைகளில் சிலவும் அமெரிக்க ரயில்பாதை, சியாரா தங்கம் தொடர்களில் இடம்பெற்ற கதைகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன. பல விமர்சனங்கள் இருந்தாலும் ப்ளுபெரியின் அந்த இடம் தகுதியானதே என்பதையே இம்மறுவாசிப்பு எனக்கு உணரச்செய்தது.  அதேபோல மறுபதிப்பு முயற்சியானது திருத்தப்பட்ட ஒன்றாக வருதலே நலம். சில விலகல்களை சரிசெய்வதன் வழி சிறப்பான ஒரு மறுபதிப்பாக அது உருப்பெறலாம். ஆனால் நம் குரலைக் கேட்கத்தான் காதில்லையே. என்ன ஆனாலும் எது நடந்தாலும் நான் சொல்வது மாறப்போவது இல்லை. பரட்டை ஒழிக.