Sunday, October 5, 2014

புரட்சியின் இறுதி வீரன்

வதனமோ சந்த்ர பிம்பமோ - 17

ஜெனரல் டேவிஸின் தந்தியை பெற்றுக் கொள்ளும் டெக்ஸும், கார்சனும் அரிசோனாவிலிருந்து வெர்ஜினியாவின் தலைநகரான ரிச்மொண்டுக்கு கிளம்பி செல்கிறார்கள். தந்தியில் எந்த தகவல்களையும் வழங்காது விடும் ஜெனரல் டேவிஸ் மிகவும் ரகசியமாக வைத்திருக்க விரும்பும் அந்த விடயம் என்ன என்பதை அறிந்திடும் ஆர்வம் ரயிலில் பயணிக்கும் இரு ரேஞ்சர்களின் மனதிலும் பசித்திருக்கும் கேள்வியாக கூடவே வருகிறது ..

TEX Special கதை வரிசையின் பதினான்காவது ஆல்பமான Le Dernier Rebelle வாசகர்களை வேகமாக தன்னுள் உள்ளிழுக்கும் கதை சொல்லலைக் கொண்டிருக்கிறது. கதையின் ஆரம்ப பக்கங்கள் வெர்ஜினியாவின் ரப்பா ஹனோக் ஆற்றின் அருகில் அமைந்திருக்கும் எழிலான பகுதிகளில் ஆரம்பமாகிறது. மலைகளும், அதில் பசுமையின் விரல்களாக நீண்ட மரங்களும், அவற்றின் நலத்தை கேட்பதில் அலுத்து விடாத மலைக்காற்றும், அந்த காற்றில் ஏறிப்பயணிக்கும் அந்நிலவெளிக்குரிய வாசமும் என ஆரம்ப பக்கங்களின் சித்திரங்கள் அப்பகுதியில் வாசகனும் பயணம் செல்வது போன்ற ஒரு நிலைக்கு அவனை இட்டு வருகின்றன ஆனால் அவன் கவனத்தை திசை திருப்புவதுபோல ஆற்றின் அருகில் நீண்டு செல்லும் ரயில்பாதையில் வருகிறது ஒரு ரயில் வண்டி. அதில் பயணித்து கொண்டிருக்கும் யூனியன் வீரர்கள் அலுத்துக் கொள்கிறார்கள். வானத்தை கூரைகளாக கொண்டிருக்கும் திறந்த பெட்டிகளில் பயணிக்கும் ஒருவன் மலைக்காற்றின் குளிரை வெறுத்துக் கொள்கிறான். மூடப்பட்ட பெட்டிகளினுள் சக வீரர்களுடன் அரட்டை அடித்து கொண்டிருக்கும் வீரன் ஒருவன் அவன் உட்காந்திருக்கும் ஆயுதப்பெட்டிகள் உட்காருவதற்கு வசதியாக இல்லை என குறைப்பட்டு கொள்கிறான். ரயில் பயணித்து கொண்டிருக்கும் இடத்திலிருந்து சிறிது தொலைவில் சில மனிதர்கள் ரயில்பாதையிலிருந்து ஒரு தண்டவாளத்தை அகற்றுவதில் மும்முரமாக இயங்கி கொண்டிருக்கிறார்கள்.

ரயில் ஓட்டுனர் சுதாரித்துக் கொள்ளும் முன்பாக, கச்சிதமான அந்த இறுதி தருணத்தில் தண்டவாளம் அகற்றப்பட வேகத்துடன் வந்த ரயில் அதே வேகத்துடன் தன் பாதைவிட்டு விலகி வீழ்கிறது. ரயிலில் பயணித்தவர்களின் வேதனை ஒலிகள் அமைதியான அந்த நிலவெளியின் கீறல்களாக ஒலிக்கின்றன. ரயிலைக் கவிழ்த்த மனிதர்கள் தம் துப்பாக்கிகளால் அந்தக் கீறல்களை இல்லாது ஆக்க ஆரம்பிக்கிறார்கள். ஒருவர்கூட மிச்சமிராது ரயில் பயணிகள் கொல்லப்படுகிறார்கள். ரயிலில் ஏற்றி வரப்பட்ட ஆயுதங்களுக்காக ரயிலை கவிழ்த்து படுகொலைகளை நிகழ்த்தியவர்கள் அவற்றை ரப்பா ஹனோக் ஆற்றின் வழியாக எடுத்து செல்கிறார்கள்.

இவ்வகையான கொலை, கொள்ளை, வழிப்பறி தாக்குதல் சம்பவங்கள் புதிதானவை அல்ல. கடந்த ஒரு வருட காலமாக இவ்வகை நிகழ்வுகள் அப்பகுதியில் ராணுவ ஒழுங்குடன் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. இவற்றை செய்வது ஒரு குழுதான் என்பதை ரிச்மொண்ட் வந்து சேரும் டெக்ஸ் & கார்சனிடம் விளக்குகிறார் ஜெனரல் டேவிஸ். சிவில் யுத்தம் முடிவுக்கு வந்திருந்தாலும், தம் லட்சிய கொள்கைகளில் இருந்து விடுபடாத சில கான்பெடரேட் புரட்சியாளர்கள் இவ்வகையான நடவடிக்கைகளால் மீண்டும் யூனியனுக்கு எதிராக ஒரு புரட்சியை உருவாக்க முன்னெடுக்கும் முயற்சிகளே இவை என்பதையும் அவர் ரேஞ்சர்களிடம் விளக்குகிறார். யுத்த பாதிப்புக்களும், இழப்புக்களும், வலிகளும் இன்னும் ஆறியிருக்காத அந்த மண்ணில் இந்த குழுவிற்கு எதிரான ஒரு ராணுவ நடவடிக்கை என்பது அப்பகுதி மக்களின் ஆதரவை புரட்சியாளர் குழுவிற்கு மேலும் ஈட்டி தருவதுடன் யூனியன் மீதான வெறுப்பை இன்னும் அதிகரிக்க செய்யும் என்பதையும் டேவிஸ் அவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் குதிரை வண்டியினுள் விபரிக்கிறார். தாக்குதல் நடைபெற்ற இடங்களை கருத்தில் கொண்டு புரட்சியாளர்கள் குழுவின் மறைவிடம் செனண்டாவோ ஆற்றுப் பள்ளத்தாக்கு மலைப்பகுதியில் அமைந்திருக்க வேண்டும் எனும் ஊகத்தையும் அவர் முன்வைக்கிறார். அம்மறைவிடத்தை கண்டுபிடித்து ரத்தம் சிந்தாது புரட்சியாளர்களின் நடவடிக்கைகளை முறியடிக்க பொருத்தமானவர்கள் டெக்ஸும், கார்சனுமே என்பதாலேயே அவர்களுக்கு தந்தியை அனுப்பியதாகவும் தனது நீண்ட விளக்கங்களை முடிக்கிறார் ஜெனரல் டேவிஸ்.

ஆனால் ரேஞ்சர்கள் இருவருக்கும் இந்த நிலவெளி புதிதான ஒன்று. அவர்களின் சாகசங்களில் இருந்து தொலைவில் இருக்கும் இந்த பகுதியில் ஒரு புரட்சிக் குழுவின் மறைவிடத்தை கண்டுபிடிப்பது என்பது இலகுவான ஒன்றல்ல என்பதை அவர்கள் உடனே ஜெனரல் டேவிஸிடம் தெரிவிக்கிறார்கள். அதற்கும் ஒரு திட்டத்தை தன் வசம் வைத்திருக்கும் ஜெனரல் டேவிஸ், ஜான் ஃப்ரெமொண்ட் எனும் மனிதனுடன் டெக்ஸ் அறிமுகமாகிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

ஜான் ஃப்ரெமொண்ட் முன்னாள் கான்பெடரேட் அதிகாரி. கம் ஸ்பிரிங் ஆயுதக்கிட்டங்கியை புரட்சியாளர்கள் தாக்கியபோது இடம்பெற்ற மோதலில் காயமுற்று, கைதாகி பீட்டர்ஸ்பெர்க் சிறையில் தண்டனையை அனுபவித்து கொண்டிருப்பவன். இப்படியான ஒருவனுடன் பழகி, அவன் நம்பிக்கையை வென்று அவன் மூலமாக புரட்சியாளர்களின் மறைவிடத்தை அறிய டெக்ஸ் முயல வேண்டும் என்பதே டேவிஸ் முன்வைக்கும் திட்டம். ரேஞ்சர்களும், டேவிஸும் பயணிக்கும் குதிரை வண்டியும் விரைந்து கொண்டிருப்பது பீட்டர்ஸ்பெர்க் சிறைச்சாலையை நோக்கித்தான். ஆக சிறையில் இருக்கும் ஜான் ஃப்ரெமொண்டின் நம்பிக்கைக்கு டெக்ஸ் பாத்திரமாக வேண்டின் அந்த சிறைக்கு டெக்ஸும் சிறைத்தண்டனை பெற்ற குற்றவாளியாக செல்வதை தவிர வேறு சிறப்பான வழி உண்டோ டெக்ஸ் வாசக மன்றமே!

இந்த தருணத்தில் என் கண்களில் இருந்து ரப்பா ஹனோக் வழிந்து கொண்டிருந்தது. என் அன்பு ரேஞ்சர், நீதியின் காவலன், அநீதியின் எமன், ஒடுக்கபட்டவர்களின் உரிமைக்குரல் ஜெயிலுக்கு கைதியாக போவதா! அய்யகோ வானமே வையமே மேற்கின் மறையுரு பிரபஞ்சமே இது என்ன சோதனை. உயிரும் ஒடுங்கி ஆன்மாவும் நடுங்கி அழுதேன் அய்யா, டெக்ஸ் நீதான் என் பசுமைக் கொய்யா என தீடிர் கவிதை என்னுள் பீரிட்டது. ஆனாலும் நான்கு பேருக்கு நல்லது என்றால் நான் நரகத்துக்கும் செல்வேன் என அன்பு தலைவர் டெக்ஸ் அரிசோனா பெரும்பீஜ எருது சலூனில் என்னிடம் சொன்னது என் நினைவில் வந்தது. மனதை அமைதியாக்கி கொண்டு கதையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். இங்கு சில விஷமிகள் இப்படி எத்தனை கதை படித்திருக்கிறோம், வில்லன் குகை இருக்குமிடத்தை அறிய வில்லன்களுடன் நட்பாக பழகி, அவர்கள் நம்பிக்கையை பெற்று, அவர்களுடன் வில்லனின் குகைக்கு செல்வது என்பது ஆதிவாசி டெக்னிக் என கிண்டல் அடிக்கலாம். அந்த விஷமிகளுக்கு எல்லாம் நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். நீங்கள் சொல்வது உண்மை! இது ஒரு அரதப்பழைய கிழிந்த பீத்தல் தேய்வழக்கே.

இப்படி ஒரு கதைக்களத்தை உருவாக்கி இருப்பவர் டெக்ஸின் ஆஸ்தான கதையாசிரியர் க்ளோடியோ நிஸ்ஸி. நல்ல கதைகளையும் உருவாக்கும் ஆற்றல் பெற்ற கதாசிரியரான நிஸ்ஸி அந்த ஆற்றலை எல்லா கதைகளிலும் பயன்படுத்துவதில்லை என்பதை பூதவேட்டை போன்ற கதைகளை படித்தவர்கள் புரிந்திருப்பார்கள். கதையின் ஆரம்பத்தில் மிக வேகமான ஆறாக செல்லும் கதைசொல்லல் டெக்ஸ் சிறைக்கு கைதியாக ஆக்ட் குடுக்க செல்கிறார் எனும் இடத்தில் அணைகட்டி நின்று விடுகிறது. கைதியாக வாசலில் இறங்கும் டெக்ஸ், தலைமைக் காவலன் மாக்ஸனுடன் விடும் சவால்களும், பஞ்சுகளும் எரிமலை சீறல் எனில் அதன் பின் அவர் அடங்குவதாக நடிக்கும் இடங்களும், பின்னர் ப்ரெமொண்டின் நம்பிக்கைக்கு பாத்திரமாகுவதற்காக எடுக்கும் நடவடிக்கைகளும் பாதிவழியில் கீழே விழுந்த ராக்கெட்டுகளாக உருவெடுக்கின்றன.

புரட்சியாளன் ப்ரெமொன்டின் நம்பிக்கையை வென்று, அவனுடன் சிறையிலிருந்து தப்பிசென்று, புரட்சியாளர்களின் பாச்றையை டெக்ஸ் கண்டு அங்கு என்ன நடக்கிறது என்பதை அறியும் வரையிலான நீண்ட பகுதியில் அதிரடி என எதுவும் இல்லை. ஒரே வள வள வள. கதாகாலேட்சேபம் ஒன்றில் போய் அமர்ந்துவிட்ட உணர்வு உருவாகி பூவாகி காயாகி கனியாகி விழுந்து விதையாகி விருட்சமாகி வரும்வரை பேசுகிறார்கள். ஒரு வழியாக எதிர்பாராமைகளின் சங்கமத்தால் ஒரு முடிவை தந்து கதையை முடித்து வைக்கிறார்கள். அதுவும் அந்த இறுதி துரத்தல் காட்சி போல ஒரு சலிப்பான அனுபவத்தை எந்த டெக்ஸ் கதையும் இதுவரை தந்தது இல்லை. அந்த கட்டத்தில் மந்திரவாதிபோல தன் சட்டைப் பையிலிருந்து டைனமைட்டுகளை எடுப்பார் பாருங்கள் ... அய்யா நாம் படிப்பது டெக்ஸ் கதை என்பது எமக்கு தெரியும் ஆனால் அதற்காக இப்படியா!

கதாசிரியர் நிஸ்ஸி, ஜான் ப்ரெமொண்ட் பாத்திரம் வழியாக இலட்சியங்களை தொலைத்து விட்ட, தன்னை இன்னும் சரியாக அறிந்திராத ஒரு மனிதனை தீட்டி செல்கிறார். இக்கதையின் இரு ஆறுதல்களின் ஒன்று ப்ரெமொண்ட் பாத்திரமே. இருப்பினும் அப்பாத்திரத்தை இன்னும் மெருகுடன் தந்திருக்கலாம். கதையின் முடிவில் டெக்ஸும் தன் மனதில் ப்ரெமொண்ட் என்றும் இருப்பான் என உறுதியாக சொல்வார். அப்படி ப்ரெமொண்ட் என்ன செய்தான் என்பதை கதையை படித்து அறிவதே சிறப்பானது. நம்மையும் அறியாமல் நமக்குள் ஒரு மனிதம் இருக்கிறது. அது வெளிப்படும் தருணங்களும் அதன் விழைவுகளும் நம்மை யாரென்று சரியாக அடையாளப்படுத்தி விடக்கூடியவை. அவ்வகையில் ப்ரெமொண்ட் டெக்ஸைப் போலவே படிப்பவர் மனதிலும் சிறிது காலமேனும் புரட்சியின் இறுதி வீரனாக நின்றிருக்க கூடிய ஒரு சிறு பாத்திரமே.

இதைதாண்டி இந்த கதையில் எந்த சிலிர்ப்பும், மயிர்கூச்சும், சுகாபனுபவமும் இல்லை. கதைக்கு சித்திரங்களை வரைந்திருப்பவர் காலின் வில்சன். பரட்டையின் பால்ய கால சித்திரவதைகள் தொடரில் சித்திரங்களில் அசத்தியவர் வில்சன். கதையில் வரும் டெக்ஸ் அங்காங்கே பரட்டைபோல தோற்றம் தருகையில் புத்தகத்தை தகனமாக்கிவிடலாமா எனும் உணர்வை தடுப்பது சிரமமாக இருந்தது. மலைக்காடுகள், மலைகள் எனும் நிலவெளியில் பின்னி எடுக்கிறார் வில்சன். டெக்ஸ், கார்சன் சக பாத்திரங்கள் என அப்பாத்திரங்களை தன் தூரிகையின் தீட்டல்களால் சிறப்பாக கம்பீரப்படுத்தி இருக்கிறார் அவர். இருப்பினும் அதிரடி ஆக்சன் காட்சிகளில் அவர் சிறப்பாக அதற்குரிய உணர்வுகளை தர திணறியிருக்கிறார். பக்கத்தின் மூன்றில் இரண்டு பங்கை பிடிக்கும் சித்திர கட்டங்களில் பெரும்பான்மையானவை ஏமாற்றத்தையே தருகின்றன இருப்பினும் இக்கதையின் இரண்டாவது ஆறுதல் அவர் சித்திரங்களே. டெக்ஸ் ஸ்பெசல் கதைவரிசைகளில் சுமாரிற்கும் கீழான சுவாரஸ்யம் கொண்ட கதைகளில் மீண்டும் ஒன்று இது என்பதை தவிர வேறில்லை. புரட்சியின் இறுதி வீரன் ப்ரெமெண்டா இல்லை தலை டெக்ஸா என ஒரு கேள்வி கதையை படித்து முடிக்கும்போது உங்களில் எழுந்தால் ...... சபாஷ் பாராட்டுக்கள், உங்களிற்கான நவஹோ எருதுக் கம்பள விருது அதிக தூரத்தில் இல்லை!