Saturday, November 27, 2010

தம்பி ஹாரி, டீ இன்னும் வரல


ஹாரி பொட்டரின் பரமவைரியான வோல்டெர்மோரின் பலம் நாளிற்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மந்திரவாதிகளின் தலைமையகத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் வோல்டெர்மோர், ஹாரியை தீர்த்துக்கட்ட எல்லாவகையான நடவடிக்கைகளிலும் இறங்குகிறான். இந்நிலையில் வோல்டெர்மோரின் உயிர்க்கூறுகள் ரகசியமாக பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை கண்டுபிடித்து அழிப்பதற்கான தேடலை தன் நண்பர்களுடன் ஆரம்பிக்கிறான் ஹாரிபொட்டர்…

சிறுவர்களாக இருந்து வனப்பு மிக்க இளைஞர்களாக வளர்ந்து நிற்கும் மந்திரவாதிகளான ஹாரி, ரொன், ஹெர்மியோன் ஆகியோர் பெரியவர்களின் உதவிகளை நம்பியிராது, தம் முயற்சிகளாலும், திறமைகளினாலும் தீமையின் உச்சசக்தியை எதிர்த்து வெல்லவேண்டியிருப்பதை இயக்குனர் David Yates இயக்கியிருக்கும் Harry Potter and The Deathly Hallows திரைப்படம் திரையில் விரிக்கிறது.

இந்தப் போராட்டத்தின் மத்தியில் அந்த மூன்று இளம் மந்திரவாதிகளின் நட்பு, காதல், ஒற்றுமை என்பவற்றிற்கு ஏற்படும் சோதனைகளும் அதனை அவர்கள் எவ்விதம் எதிர்கொண்டு தாண்டி வருகிறார்கள் என்பதும் படத்தின் பெரும்பகுதியாக முன்னிறுத்தப்படுகிறது.

ஒரு புறம் தன் பக்கம் ஆட்களையும், அதிகாரத்தையும் பெருக்கி கொள்ளும் வோல்டெர்மோர், தனது எதிரியான ஹாரியின் கதையை முடிக்க அனைத்து வழிகளையும் நாடி ஓட, மறுபுறம் வொல்டர்மோரின் உயிர்க்கூறுகள் மறைந்திருக்கும் பொருட்களிற்கான தேடலை நிகழ்த்துகிறார்கள் இளம் மந்திரவாதிகள்.

படத்தின் ஆரம்பம் அட்டகாசமாகத்தான் இருக்கிறது. ஹாரிக்கு 17 வயதாகி விடுமுன்பாக அவனைப் போட்டுத் தள்ளுவதற்காக வோல்டெர்மோர் நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் இருளும், திகிலும் கலந்து நிற்கிறது. நாகினி வேடத்தில் நடித்திருக்கும் பாம்பிற்கு இம்முறை ஆஸ்கார் நிச்சயம். சீறலிலும், உடல்மொழியிலும் நாகினிக்கு இணை நாகினிதான். ஆனால் பின்புவரும் காட்சிகளில் திரைப்படம் தன் வேகத்தை மெல்ல மெல்ல இழக்க ஆரம்பித்துவிடுகிறது.

ரொன் வீட்டுத் திருமணத்தில் இடம்பெறும் தாக்குதலின் பின்பாக மூன்று இளம் மந்திரவாதிகளும் ஆரம்பிக்கும் பயணம் ஜவ்வுபோல் இழுக்கிறது. பொறுமைக்கு சோதனை நிகழ்த்துகிறது.ரொன் தன் மனதினுள் புழுங்கிக் கொண்டிருக்க, ஹாரியும், ஹெர்மியோனும் யோசித்துக் கொண்டேயிருக்கிறார்கள். விறுவிறுப்பாக நகர்த்தி செல்லப்பட்டிருக்க வேண்டிய இப்பகுதியின் அளவிற்கதிகமான நீளமும், சுவாரஸ்யமிழந்த காட்சிகளும் ரசிகனை திரைப்படத்திலிருந்து விலத்தி எடுத்து செல்லும் மந்திரச் சொல்லை உச்சரித்து விடுகின்றன. நாவலின் இறுதிப்பகுதி இரண்டு பாகங்களாக திரைவடிவில் உருவாக்கப்பட்டிருப்பதற்கான அவசியம் என்ன எனும் கேள்வி மனதில் எழுகிறது [ துட்டு ஹாரி,துட்டு]. வார்னர் பிரதர்ஸ் மற்றும் ஜே. கே . ராலிங் ஆகியோரின் காதுகளில் சில்லறைகளின் இடை நிறுத்தாத ஹார்மோனி இசைத்துக் கொண்டேயிருப்பதை கற்பனை செய்து கொள்ள முடிகிறது. நல்லவேளையாக நான்கு பாகமாக எடுக்காமல் விட்டார்களே என்று களிப்புறுவதை தவிர வேறு வழியில்லை.

harry-potter-et-les-reliques-de-la-mort-partie-1-2010-15564-1138766867 ஹெர்மியோனை ஹாரி உதட்டில் ஆழமாக முத்தமிடும் காட்சி கற்பனையான ஒன்றாக இருந்தால் கூட மிகுந்த அதிர்ச்சியை அளித்தது. ரொன்னைக் கொலைவெறி கொள்ள வைக்க வேண்டும் என்பது காரணமாக இருந்தாலும்கூட இந்த அளவிற்கு சென்றிருக்க வேண்டுமா எனத் தோன்றுகிறது. அந்த இரு பாத்திரங்கள் மீதும் வாசகனாக நான் கொண்டிருந்த மதிப்பு இதனால் சேதமுற்றது.

நல்ல நடிகர்களின் திறமைகள் இந்த அத்தியாயத்திலும் சிறப்பான விதத்தில் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. படத்தில் எல்ஃபுகள் வரும் காட்சிகள் ஜாலியாக இருக்கின்றன. டாபி எனும் எல்ஃபின் முடிவு நெகிழ வைக்கிறது. பின்னணி இசை கேட்கவே வேண்டாம் பின்னி எடுத்திருக்கிறது. பின்னணி இசைக்காகவே இத்திரைப்படத்தை ஒரு முறை பார்த்து தொலைக்கலாம். சில துரத்தல் காட்சிகளில் கமெராவின் அசைவும், வேகவும் அசரவைக்கிறது. அதிரடிக் காட்சிகள் எல்லாவற்றையும் அடுத்த பாகத்தில் மறைத்து வைத்திருக்கிறார்கள், இப்பாகத்தில் பெரிதாக சொல்லிக் கொள்ள ஏதும் இல்லை.

ஹாரி பொட்டரை அழிக்க உதவும் ஒரு முக்கியமான பொருளை வோல்டெர்மோர் தன் தேடலின் வழி கையகப்படுத்துவதுடன் திரைப்படம் நிறைவுறுகிறது. அசர வைக்கும் விளம்பர உத்திகள், மரண வசூல், திரையரங்குகளில் தள்ளுமுள்ளு என வெளியாகிய ஒரு வார காலத்தினுள்ளேயே ஹாரி பொட்டர் ஜூரத்தை தீவிரமாக்கிய இத்திரைப்படம் என்னைப்போன்ற ரசிகர்களிற்கு மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது. தம்பி ஹாரி, டீ இன்னும் வரல! [*]

ட்ரெயிலர்

Thursday, November 25, 2010

மணிபல்லவம்


தமிழ் நாவல் வகைகளில் சரித்திரப் புனைகதைகள், என் முதிரா இளம் பருவத்தில் நான் விரும்பிப் படித்தவைகளாகும். அவற்றில் இருந்த சாகசங்களும், காதலும், சிருங்காரமும் என்னை அவ்வகை நாவல்களுடன் மிகவும் நெருக்கமாக்கின. வரலாறு என்பது அந்த வயதில் முக்கியமான ஒன்றாக தோன்றவில்லை. இன்றைய கருத்துக்கள்படி அந்நாவல்களில் வரலாறு அதிகம் இருந்ததில்லை என்பதாகிறது.

அன்றைய வாசக ரசனைக்கு அக்கதைகளில் கூறப்பட்ட வரலாறு போதுமானதாக இருந்திருக்கலாம் அல்லது அந்த அளவே போதும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் நான் இன்று எந்த ஒரு கனமான நாவலையும் தயக்கமின்றி அணுகுவதற்கு, அந்த சரித்திர புனைகதைகளுடனான என் நெருக்கமே எனக்கு உதவியாக இருக்கிறது.

சாண்டில்யனையும், கல்கியையும் விரும்பிப் படித்த எனக்கு விக்கிரமனையும், கோவி.மணிசேகரனையும் நெருங்க முடியவில்லை. இன்றுவரை இதற்கான காரணம் என்ன என்பது என்னால் கண்டறியப்பட முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அன்றைய சரித்திரப் புனைவுகளில் நா. பார்த்தசாரதி எழுதிய மணிபல்லவம் சற்று வேறுபட்டது என்று பிறர் கூறக் கேட்டிருக்கிறேன். மணிபல்லவத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்பதை அறியும் என் ஆவல் அண்மையில் நிறைவேறியது.

மணிபல்லவம் நாவலைப் படித்து முடித்தபோது, அந்நாவலிலும் இன்று தமிழ் மசாலா சினிமாவின் உச்ச நாயகர்களிற்காக உருவாக்கப்படும் கதை ஒன்றிலும் இருக்ககூடிய ஒற்றுமைகள் எனக்கு ஆச்சர்யம் தந்ததில் வியப்பென்ன இருக்க முடியும். சோழர் ஆட்சியில், சித்திரை மாதத்தில், இந்திரவிழா விமர்சையாக கொண்டாடப்படும் பூம்புகார் பட்டிணத்தில் இடம்பெறும் மல்யுத்தப் போட்டி ஒன்றிலேயே கதையின் நாயகனான இளங்குமரன் வாசகர்களுடன் அறிமுகமாகிறான்.

இளங்குமரன் அழகன், செந்நிறமேனிக்கு சொந்தக்காரன், மற்றவர்களை தன் பக்கம் கவர்ந்திழுக்கும் இயல்பு அவனுடன் கூடவே பிறந்திருக்கிறது என ஒரு கதாநாயகனிற்குரிய லட்சணங்களை தவறாமல் இளங்குமரனிற்கு அளித்திருக்கிறார் நா.பா. பூம்புகாரில் இருக்கும் வீரர்களை அடித்து வீழ்த்தி, அந்நகரின் ஆண்மையை பரிகாசித்து சவால்விடும் யவன மல்லன் ஒருவனை நாவலின் ஆரம்ப பக்கங்களில் புரட்டி எடுக்கிறான் இளங்குமரன். என்ன ஆச்சர்யம்! அப்போட்டியை பல்லக்கு ஒன்றினுள் இருந்தவாறே பார்த்து வியக்கும் ஒரு அழகுப் பைங்கிளி, இளங்குமரன் வீரத்திலும், அழகிலும் தன் இதயத்தை பறிகொடுத்து விடுகிறாள். அந்த அழகியின் பெயர் சுரமஞ்சரி, செல்வம் கொழிக்கும் குடும்பத்தை சேர்ந்தவள் அவள். தமிழ் சினிமாவில் சண்டைக் காட்சிகளில் விசிலடியும், கனவுப் பாடலொன்றில் அருமையான குலுக்கல்களும் இடம்பெறும். அவை கதையில் இல்லை என்பது குறையாக தோன்றவில்லை.

அது மட்டுமா! அழகி சுரமஞ்சரியின் அன்பை தூக்கி எறிகிறான் நாயகன் இளங்குமரன். செல்வமும், அழகும் அவனைப் பொறுத்தவரையிம் மதிப்பில்லாதவை என்பதை வாசகன் அறிந்து கொள்கிறான். பெற்றோர்கள் இல்லாத அனாதையாக அருட்செல்வ முனிவரால் சிறுவயது முதலே வளர்க்கப்பட்டு, நீலநாக மறவர் எனும் ஒப்பற்ற வீரரின் படைச்சாலையில் யுத்தப் பயிற்சிகளில் தேர்ந்த நாயகன் இளங்குமரனை கதையில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். இளங்குமரனின் அழகு, வீரம், குணாதிசயங்கள் என ஏதாவது ஒன்றை எந்த ஒரு பாத்திரமாவது உயர்த்திப் பேசியபடியே இருக்கிறது. இளங்குமரனை ஒழித்துக் கட்ட விரும்பும் நகைவேழம்பர் மற்றும் பூம்புகாரின் எட்டிப் பட்டம் பெற்ற வணிகரான பெருநிதிச் செல்வர் ஆகிய இருவரையும் இந்த புகழும்- ஜால்ரா- கூட்டத்திலிருந்து பிரித்து அடையாளம் காணமுடிகிறது.

இந்நிலையில் தமிழ் மசாலா சினிமாவின் தீவிர ரசிகர்கள், இளங்குமரனை ஒழித்துக் கட்ட துடிக்கும் வணிகரான பெருநிதிச்செல்வரின் மகளே இளங்குமரன் அன்பிற்காக ஏங்கும் சுரமஞ்சரி என்பதை நான் எழுதாமலேயே ஊகித்திருப்பார்கள். சரித்திர புனைகதைகளின் தவறவிடக்கூடாத வழக்கம்போன்று செல்வந்த அழகி சுரமஞ்சரி மட்டுமல்ல, இளங்குமரனின் பால்யகால நண்பனான கதக்கண்ணனின் தங்கையான முல்லைக்கும் கூட இளங்குமரன் மேல் அன்பு [காதல்] இருக்கிறது. ஆனால் முல்லை அழகில் சுரமஞ்சரியை விட ஒரு படி குறைவானவளாகவும், செல்வத்தில் அதிக படிகள் குறைவானாவளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். ஆகவே இளங்குமரனின் மனம் எந்தப் பெண் பக்கம் சாயும் என்பதும் ஒரு மர்மமாக!! கதை நெடுகிலும் நீண்டு[ இழுத்துக் கொண்டு] செல்கிறது.

சுரமஞ்சரி, முல்லை ஆகிய இருபெண்களும் இளங்குமரனிற்காக ஏங்குகிறார்கள், கண்ணீர் சிந்துகிறார்கள், ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்படுகிறார்கள், சரித்திர நாவல்களில் இடம்பெறும் பெண்களின் குணங்களை அவர்கள் கடந்து சென்றார்களில்லை. முடிவில் இவ்விரு பெண்களும் இளங்குமரனிற்காக தியாகம் செய்யவும் தயங்கினார்களில்லை. தமிழ் சமுதாயம் பார்த்து பெருமை கொள்ளும் வண்ணமே இந்த இரு நாயகிகளும் நா.பாவால் இழைத்து இழைத்து செதுக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் முல்லைக்கு வழங்கப்பட்டிருக்கும் முடிவு என் மனதையே நெகிழ்த்தி விட்டதெனில், கதை தொடராக கல்கி வார இதழில் வெளிவந்தபோது முல்லைக்காக வாசக, வாசகிகள் கண்ணீர் வடித்திருப்பார்கள் என்பது உறுதி. விசாகை போன்ற பெண் துறவிகளை இவ்வகையான கதைகளிலேயே இன்று காணமுடியும் போலும்.

தந்தை, தாய் யாரென்பதை அறியாது, வம்புகளை வீணே வாங்கி வரும் இளைஞனான இளங்குமரனை, பூம்புகாரின் பெரும் வணிகரான பெருநிதிச்செல்வர் ஏன் அழிக்க முற்படவேண்டும்? இதற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக வாசகர்கள் இளங்குமரனோடு மணிபல்லவத் தீவிற்கு பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு முன்பாக சண்டைகளில் வீரனாக இருந்த இளங்குமரன், ஞானமே உண்மையான வீரம் என்பதை கண்டுணர்ந்து சான்றோனாக மாறுவதை வாசகர்கள் கடந்து வரவேண்டியிருக்கிறது.

விறுவிறுப்பாக ஆரம்பமாகிய நாவலில், மூன்றாம் பருவமான வெற்றிக்கொடி, நாங்கூர் அடிகள் எனும் ஞானச் செல்வரிடம் இரு வருடங்கள் தங்கியிருந்து அறிவு எனும் ஒளியை இளங்குமரன் தன்னுள் ஏற்றிக் கொண்டபின் ஆரம்பமாகிறது. சமயவாதங்கள், தத்துவ வாதங்கள் செறிந்த ஒரு பகுதியாக இது இருக்கிறது. இன்றைய வாசிப்பில் வாசகனை சற்று வியப்பிலாழ்த்துவதாகவும், விறுவிறுப்பான கதை சொல்லலிருந்து வேகம் குறைந்த நிலைக்கு கதையை எடுத்து செல்லவதாகவும் இப்பகுதி அமைந்திருக்கிறது. நிச்சயமாக இப்பருவம் அக்கால வாசகர்கள் மத்தியில் உயர்ந்த வரவேற்பை பெற்றிருக்கும் என எண்ணுகிறேன். இப்பகுதியை கடப்பதில் எனக்கு சிரமமிருந்தது என்பதையும் நான் ஒத்துக் கொள்கிறேன். வாயைத் திறந்தாலே தத்துவமாக கொட்டும் இளங்குமரனை இன்றைய ஒரு தளபதியுடன் ஒப்பிட்டு பார்க்க விரும்பினாலும், தத்துவமும், தருக்கமும் குறுக்கே நிற்கின்றன.

தான் படித்த இலக்கியங்கள் வழி நா.பா அவர்கள் தன் நாவலின் வரிகளில் சிருஷ்டித்திருக்கும் பூம்புகாரானது ஒரு பரபரப்பான பல்பொருள் கண்காட்சியை பார்த்தது போன்ற உணர்வையே இன்று வழங்கக்கூடியதாகவிருக்கிறது. பூம்புகாரின் வனப்புடன் அதன் மங்கிய பக்கங்களையும் மெலிதாக கோடிட்டுக் காட்டிய நா.பா, அந்த மங்கிய பக்கங்களை பிரகாசம் கொண்டதாக மாற்ற துடித்திட்ட கதையின் நாயகனான இளங்குமரனை, இறுதியில் சாதாரண ஒரு குடும்பஸ்தனாக அதே பூம்புகார் நகர தெருக்களில் வாசகனிடமிருந்து பிரியாவிடை பெறச்செய்வதென்பது வேதனையான ஒரு நிகழ்வே.

கதையில் இல்லாமல் போயிருக்கும் சிருங்காரம், நா.பாவிற்கும் அவ்வகையான வருணனைகளிற்கும் வெகுதூரம் என்பதற்கு சான்று பகர்கிறது. ஆனால் மிகவும் நீண்ட எண்ண உரையாடல்கள் வாசிப்பின் ஒரு எல்லைக்குமேல் அயர்ச்சியை உருவாக்குகின்றன. இருப்பினும் வாசகனிற்கு நல்ல தகவல்களை சொல்ல வேண்டும் எனும் நா.பாவின் ஆர்வத்திற்கு முன்பாக அவர் மீது மதிப்பை மட்டுமே என்னால் உருவாக்கி கொள்ள முடிகிறது [ நான் படித்த அவரின் படைப்பு மணிபல்லவம் மட்டுமே ]. நாவலின் பல பகுதிகளிலும் அவர் சுவையான , அரிய தகவல்களை தந்து செல்கிறார். நூழிலாட்டு, வல்வில்வேட்டம், போன்ற சொற்கள் எதை உணர்த்துகின்றன என்பதை அறிதல் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. வில்லாதி வில்லன் எனும் சொற்றொடர் மூலம் இன்று நாம் உணர்ந்து கொள்ளும் அர்த்தமும் அச்சொற்றொடரிற்கு நா.பா நாவலில் தந்திருக்கும் அர்த்தத்தையும் ஒப்பிடும்போது எனக்கு என்னவோ செய்தது.

நாவலின் மூன்றாம் பாகத்தை தாண்டிய பின்பாக, அத்தியாயங்கள் தேவையற்று நீண்டு செல்வதான ஒரு உணர்வு தோன்றிவிடுகிறது. மன்னர்களையும், ராணிகளையும், இளவரசிகளையும், யுத்தங்களையும் பேசிடாது பூம்புகார் பட்டிணத்தில் வாழ்ந்திருந்த ஒரு சாதரண இளைஞனின் வாழ்க்கை கதையை தன் கற்பனையின் மூலம் புனைவாக்கியிருப்பதும், அக்கதையில் இடம்பெறும் சமய, தத்துவ வாதங்கள் மற்றும் நல்ல சுவையான தகவல்கள் என்பனவுமே வழமையான சரித்திரப் புனைவுகளிலிருந்து மணிபல்லவத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றன. மணிபல்லவம் வாரத் தொடராக வெளிவந்த காலத்தில் மகத்தான வரவேற்பை பெற்றிருந்தாலும், இன்றுகூட அதற்கான ரசிகர்களை கொண்டிருந்தாலும் இன்றைய வாசிப்பில் மணிபல்லவம் பெரிதான பரவசங்கள் எதையும் வழங்கிவிடவில்லை என்பதை பூம்புகாரின் வன்னிமன்ற காபலிகையான பைரவி என் கழுத்தை நெரித்தாலும் தயங்கிடாமல் கூறிடுவேன்.

Monday, November 22, 2010

தாத்தா சுட்டா தப்பாது


பிரான்ங் மோசஸ் [Bruce Willis], CIAன் அதிரடி ஏஜெண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். தனது ஒய்வு வாழ்க்கையை சலிப்பின் துணையுடன் வாழ்ந்திருக்கும் பிரான்ங்கிற்கு, அவனிற்கு ஓய்வூதியத்தை வழங்கும் நிறுவனத்தில் பணிபுரியும் சாரா எனும் பெண்மீது ஒரு ஈர்ப்பிருக்கிறது.

250px-Warren_Ellis_Red_3_cover சாராவுடன் தொலைபேசியில் உரையாடுவதும், முளைவிடும் அவகாடோ விதை ஒன்றை கரிசனையுடன் பார்த்துக் கொள்ளுவதும், சலிப்பு ஊறிய அவன் வாழ்வின் முக்கியமான தருணங்களாக இருக்கின்றன. இவ்வாறான நிலையில் பிராங் மோசஸின் வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்து அவனைத் தீர்த்துக்கட்ட முயல்கிறது ஒரு அதிரடிக் குழு.

இந்த அதிரடிக் குழுவானது CIA வினாலேயே அனுப்பப்பட்டது என்பதை தெரிந்துகொள்ளும் பிராங் மோசஸ் இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்குகிறான். CIA ன் புதிய தலைமுறை எஜெண்டுகளின் அசுர நடவடிக்கைகளை மோசஸ் முறியடித்து உண்மையைக் கண்டடைய அவனிற்கு துணை வருகின்றனர் மேலும் சில ஓய்வு பெற்ற CIA ஏஜெண்டுகள்….

திரைப்படத்தின் அதே பெயரைக் கொண்ட காமிக்ஸ் கதையொன்றின் ஒரு வரி மையக்கதையை தழுவி இயக்குனர் Robert Schwentke இயக்கியிருக்கும் RED திரைப்படத்தில் முதலில் விசிலடிக்க வைக்கும் அம்சம் அதில் இடம்பெறும்- நம்புவதற்கு சற்று சிரமமான – அதிரடி ஆக்‌ஷன். இரண்டாவது விசில் அதில் நடிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அற்புதமான நடிகர்களின் தெரிவிற்கு. மூன்றாவது விசில் எந்த பந்தாவுமில்லாமல் இப்படி ஒரு ஆக்‌ஷன் காமெடியில் அலட்டிக் கொள்ளாமல் அசர வைக்கும் விதத்தில் கலக்கி எடுத்திருக்கும் மார்கன் ஃப்ரீமேன், ஜான் மால்கோவிச், ஹெலன் மிரென் போன்ற பண்பட்ட கலைஞர்களிற்கு.

red-2010-18717-839584313 ரெட், காமிக்ஸ் கதையானது Warren Ellis ஆல் எழுதப்பட்டு ஓவியங்கள் Cully Hamnerல் உருவாக்கப்பட்டன. தன்னைக் கொல்ல உத்தரவிட்ட CIA யின் உயரதிகாரிகளை தனியாளாக துவம்சம் செய்யும் ஒரு ஓய்வு பெற்ற CIA ஏஜெண்டின் கதையை கொடுமையான வன்முறையுடனும் ரத்தத்துடனும் கூறும் மூன்றுபாக காமிக்ஸ் கதை அது. நகைச்சுவை என்பது அக்காமிக்ஸில் தவறியும் இடம்பெற்றிருக்காது. தன் வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களை எழுத உதவியவர்களையும், அந்தப் பக்கங்களையும் CIA எவ்வாறு தந்திரமாக துடைத்தெடுக்க முயல்கிறது என்பதை அக்கதை கூறிச் செல்லும். ஆனால் காமிக்ஸின் திரைவடிவத்தில் நிறைய மாற்றங்கள், ஆச்சர்யம் தரும் போனஸாக சிறப்பான நகைச்சுவை என்பவற்றை காமிக்ஸை படித்த அன்பர்கள் காணமுடியும். [இக்காமிக்ஸை படிக்க வாய்ப்பளித்த இலுமினாட்டி அவர்களிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்- கனவுகளின் காதலன் விளம்பர சேவை]

எக்ஸ்பெண்டபிள்ஸ் திரைப்படத்தில் திரையில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றி அகன்ற மொட்டை மாமா ப்ருஸ் வில்லிஸிற்கு, நீண்ட நாட்களின் பின்பாக அவரின் மொட்டைத் தலைக்கு பொருந்திப் போகும் அழகான ஒரு விக் போல வந்து அமைந்திருக்கிறது பிராங் மோசஸ் பாத்திரம். ஓய்வு பெற்ற சிஐஏ ஏஜெண்டாக சலிப்புடன் தன் வாழ்க்கையை கடத்தும் பிராங்கிற்கு, வெளியுலகுடன் தன்னை இணைத்துக் கொள்வதில் சிரமம் இருக்கிறது. திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில் பிராங் பாத்திரத்தின் தவிப்பை உணர்த்தும் தருணங்களில் சிறப்பான நடிப்பை வழங்குகிறார் மொட்டை மாமா ப்ருஸ். தன் வீட்டை சுற்றியுள்ள வீடுகள் எல்லாம் கிறிஸ்துமஸ்கால அலங்காரங்களுடன் ஜொலிக்க தன் வீடு மட்டும் தன் தலையைப் போலவே மொட்டையாக இருப்பதை அவர் உணரும் தருணத்தில் திரையில் அவர் வழங்கும் அந்தப் பார்வை அட்டகாசம்.

red-2010-18717-637927801 பிராங்கின் வீட்டினுள் புகுந்து அவனைக் கொலை செய்ய முயலும் குழுவுடனான மோதல் காட்சிகளிலேயே, அக்காட்சிகளில் கலந்திருக்கக்கூடிய தடிப்பான அபத்தத்திலேயே ரசிகர்கள் இது எவ்வகையான படம் என்பதை தெளிந்து உஷாராகிவிட வேண்டும். இந்த உணர்தலே படத்தை மேற்கொண்டு ஜாலியாக ரசிக்க உதவும். இல்லையேல் அந்த மோதலுடனேயே திரைப்படத்தை பார்ப்பதை நிறுத்தி விடுவது நல்லது. படத்தில் இருக்கும் அட்டகாசமான ஆக்‌ஷனிற்கு அளவெடுத்து தைத்த கையுறைபோல் பொருந்தி துள்ள வைக்கின்றன, பின்னணி இசையும் அதனுடன் கூடவே இழையும் பாடல்களும்.

திரைப்படம் முழுவதிலும் ப்ருஸ் வில்லிஸ் அடக்கி வாசித்திருக்கிறார். ஆச்சர்யப்படத்தக்க வகையில் அது அருமையான ஒரு விளைவை வழங்கியிருக்கிறது. ப்ருஸ் மட்டுமல்லாது படத்தின் முக்கியமான நடிகர்கள் யாவரிற்கும் சிறப்பான வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் தத்தமது பாத்திரங்களை அருமையாக செய்திருக்கிறார்கள். மார்கன் ஃப்ரீமேனிற்கு மட்டும் கொஞ்சம் வாய்ப்பு குறைவாக உள்ளது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இருப்பினும் சிட்டு ஒன்றின் பின்னழகை ரசிப்பவராக மார்கன் ஃப்ரீமேன் காந்தச் சிரிப்பால் கவர்கிறார்.

கிறுக்கு குணம் படைத்த முன்னாள் ஏஜெண்டாக வரும் ஜான் மால்கோவிச் படத்தில் வழங்கும் நடிப்பு சிரிப்பை அள்ளுகிறது. அவரது அதீத கற்பனைகளும், காரணப்படுத்தல்களும், கொலைவெறியும் அவரை பிற பாத்திரங்களிலிருந்து தனிப்படுத்தி ரசிக்க வைக்கிறது. சிஐஏன் ஓய்வு பெற்ற பெண் ஏஜெண்ட் விக்டோரியாவிற்கும் [Helen Mirren] KGB ன் ஏஜெண்டாகவிருந்த இவானிற்கும் இடையில் இருக்கும் காதல் அழகாக காட்டப்படுகிறது. இவானாக நடித்திருக்கும் நடிகர் Brian Cox சிறிய வேடம் எனிலும் கவர்ந்திழுக்கிறார். மோசஸின் கதையை முடிக்கும் பொறுப்பை ஏற்கும் சிஐஏ ஏஜெண்டான வில்லியம் கூப்பர் வேடத்தில் வரும் நடிகரான Karl Urban மிக அட்டாகாசமன ஒரு தெரிவு. அவரின் கம்பீரமும், கவர்ச்சியும் திரையை அதிரடிக்கிறது.

அதிரடி ஆக்‌ஷன் காமெடி கலவையாக திரைப்படம் இருந்தாலும் ஓய்வு பெற்ற மனிதர்கள் தம் சலிப்பான வாழ்விலிருந்து விடுபட எடுக்கும் முயற்சிகளை மெலிதாக கோடிட்டு காட்டுகிறது திரைப்படம். சலிப்பான வாழ்விலிருந்து விடுபட மீண்டும், அதிரடி, காதல் போன்றவற்றில் தயங்காது இறங்கிடும் ஓய்வு பெற்ற பாத்திரங்களை திரைக்கதை முன்னிறுத்துகிறது. தர்க்கரீதியான கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிக்காது குஷியாக பார்த்து மகிழ வேண்டிய திரைப்படமாகவே ரெட் இருக்கிறது. மேலும் இப்படத்திலிருந்து அடியேனைப் போன்ற ஆக்‌ஷன் திரைப்பட விசிலடிச்சான் குஞ்சுகள் பெற்றுக் கொள்ளக்கூடிய ஜென் தத்துவம் என்னவெனில் சிஐஏ தாத்தா சுட்டால் குறி தப்பாது என்பதாகும். [**]

ட்ரெயிலர்

Thursday, November 18, 2010

மால்கோவா மரண ரயில்


பேரழிவை ஏற்படுத்திடக்கூடிய நச்சுப்பொருளையும், எரிபொருளையும் ஏற்றிக்கொண்ட ஒரு சரக்கு ரயில்வண்டி, ஓட்டுனர் அற்ற நிலையில் தறிகெட்ட வேகத்தில் பொதுமக்கள் செறிந்து வாழும் ஒரு பகுதியை நோக்கி விரைகிறது. நிறுத்தப்பட முடியாத ரயில் வண்டியாக கருதப்படும் இவ்வண்டியை நிறுத்தியே தீருவது எனும் முடிவிற்கு வருகிறார்கள் பிறிதொரு ரயில் வண்டியில் சரக்குகளோடு சென்று கொண்டிருக்கும் பிரான்க் [Denzel Washington] எனும் ரயில்வண்டி ஓட்டுனரும், வில்[Chiris Pine] எனும் நடத்துனரும்…..

இயக்குனர் Tony Scott, தனது அபிமான நடிகரான Denzel Washington ஐ இம்முறை ஒரு ரயில் வண்டி ஓட்டுனராக என்ஜின் பெட்டிக்குள் உட்கார வைத்து Unstoppable திரைப்படத்தில் அழகு பார்த்திருக்கிறார். கூடவே டென்சலிற்கு பேச்சுத்துணையாகவும், சிறிது ஆக்சனிற்காகவும் இளம் நடிகர் Chris Pine துணை வந்திருக்கிறார்.

பிரான்க், ரயில்வே நிர்வாகத்தால் ஒரு வகை கட்டாய ஓய்விற்கு அனுப்பப்படும் நிலையில் உள்ளவன். இளைஞன் வில், சேவையில் சேர்ந்து நான்கு மாதங்களே ஆகும் நிலை. புதிய தலைமுறை இளைஞர்களின் வரவால், நீண்ட காலமாக ரயில்வண்டி ஓட்டும் சேவையில் இருந்த அனுபவம் பெற்றவர்களை நிர்வாகம் வெளியே அனுப்பும் நிலையைக் கொண்டு ஆரம்பாமாகும் இருவரினதும் முதல் ரயில் ஓட்டம் இருவரிற்குமிடையிலான வேறுபாடுகளின் வெளிப்பாடுகளில் ஆரம்பமாகி, தமது வாழ்க்கை கதைகளை பரிமாறி, அவர்கள் பின்பு ஒன்றுபட்டு எதிர் கொள்ளும் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் மதிப்பு மிகுந்த ஒரு உறவாக பரிணமிக்கிறது.

unstoppable-2010-15331-1242763733 எவ்வாறு ஒரு ரயில் வண்டி, ஓட்டுனர் இல்லாத நிலையில் வேகமெடுத்து பேரழிவை தரிப்பாக கொண்டு பயணமாகிறது என்பதுடன் வேகமெடுக்கும் திரைப்படம், உச்சக்கட்டக் காட்சிகள்வரை தன் வேகத்தை குறைப்பதில்லை. தறிகெட்டு பயணிக்கும் ரயில், ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், ரயில்சேவை நிர்வாகம், தொலைக்காட்சி சேவைகளின் நேரடி ஒளிபரப்பு என்பவறின் ஊடாக மாறி மாறி பயணிக்கும் காட்சிகளில் வேகத்தையும், விறுவிறுப்பையும் அடுத்து என்ன நடக்கப் போகிறது எனும் பரபரபரப்பையும் சிறப்பாக பரிமாறியிருக்கிறார் டானி ஸ்காட். இவ்வகையான வேகமான பயணத்தினூடும் பிரான்கினதும், வில்லினதும் கதைகளை மிகச்சுருக்கமாக அவர் திரையில் பதித்தும் விடுகிறார்.

டென்ஸலிற்கு நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த ரயில் பெட்டியினுள் அவரின் பிரசன்னம் ஒன்று மட்டுமே போதுமான ஒன்றாகவிருக்கிறது. சற்றுத் துருத்த துடிக்கும் தனது வெண்பற்களை பளிச் அடித்து சிரித்தவாறே, உட்கார்ந்த நிலையிலேயே ஜாலியாக தன் திறமையை வழங்கியிருக்கிறார் அவர். இறுதிக் காட்சிகளில் ரயில் வண்டியின் கூரைமேல் ஓடி ஆக்‌ஷன் செய்வதாக நம்ப வைக்க கடுமையாக முயல்கிறார். இளம் நடிகரான கிரிஸ் பைன் தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். இந்த இரு பாத்திரங்களினதும் வாழ்க்கைகள் கூட இந்த ரயில்வண்டியால் சிறு அழிவுகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றன எனலாம்.

தனது வழமையான முறையில் திரையில் பதட்டத்தை தேர்ந்த கலைஞன் போல் உருவாக்கி, திகிலையும், விறுவிறுப்பையும் வேகமாக பயணிக்க வைக்கிறார் இயக்குனர் டானி ஸ்காட். ஒர் ஆபத்தான சூழ்நிலையின் முன்பாக கூட தம் லாப நஷ்டங்களை எடைபோட்டு பார்த்து முடிவெடுக்கும் அதிகாரங்களை அவர் தனக்கேயுரிய பாணியில் நகைப்பிற்குரிய வகையில் சித்தரித்திருக்கிறார். ஓடும் ஒரு ரயிலை வைத்துக் கொண்டு ரசிகர்களை கட்டிப்போட்டுவிட முடியும் என்பதை அவரின் இத்திரைப்படம் மறுக்கவியலாத வகையில் நிரூபிக்கிறது. குறிப்பாக உச்சக்கட்டக் காட்சிகளில், எடிட்டிங், ஒளிப்பதிவு[ அபாரம், அட்டகாசம்] இசை, இயக்கம் என யாவுமே டைனமைட் கூட்டுப் பக்குவத்துடன் அமைந்திருக்கிறது. செண்டிமெண்ட், ஆக்‌ஷன், நாயக பிம்ப கலவையாக வந்திருக்கும் Unstoppable, கிழட்டு டானி ஸ்காட்டால் இன்றும் கூட ரசிகர்களின் அடிவயிற்றில் திகில் பம்பரம் விட முடியும் என்பதை தெளிவாக்குகிறது. [***]

ட்ரெயிலர்

Sunday, November 14, 2010

ஷெர்லாக் ஹோல்ம்ஸும் ரத்தக் காட்டேரிகளும்


தனது பரம வைரியான புரபசர் மொரியார்டியுடனான மோதலில், சுவிஸிலிருக்கும் ரெய்க்கான்பாக் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து ஷெர்லாக் ஹோல்ம்ஸ் உயிரிழந்துவிட்டதாக பத்திரிகைகள் செய்திகளை தருகின்றன. இந்த செய்திகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஷெர்லாக், பாரிஸில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறான்.

உலகைச் சுற்றி பயணம் செய்ய வேண்டும் என்பது ஷெர்லாக்கின் நீண்ட நாள் கனவு. இக்கனவை நிறைவேற்றிட இதனைவிட தகுந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை அறியும் ஷெர்லாக், அதற்கான ஏற்பாடுகளில் இறங்குகிறான்.

ஆனால் ஷெர்லாக்கின் தலை மறைவு வாழ்க்கையை கண்டுபிடித்து விடுகிறார்கள் அவனை தேடி அலைந்து கொண்டிருக்கும் லண்டனைச் சேர்ந்த ரத்தக் காட்டேரிகள். ஷெர்லாக்கை அணுகும் ரத்தக் காட்டேரிகள், தங்கள் தலைவர், ஷெர்லாக்கை சந்திக்க விரும்புவதை அவனிடம் தெரிவிக்கிறார்கள். வேறு வழிகள் அற்ற நிலையில் ரத்தக் காட்டேரிகளுடன் லண்டனிற்கு பயணமாகிறான் ஷெர்லாக்….

லண்டனில், ஈஸ்ட் எண்ட் பகுதியில் நிகழும் ஒரு ரத்தக் காட்டேரியின் தாக்குதலுடனேயே Sherlock Holmes & Les Vampires de Londres காமிக்ஸ் ஆல்பத்தின் கதை ஆரம்பிக்கிறது. ஆரம்ப பக்கங்களில், சக மனிதர்களை துன்புறுத்தும் நோக்குடைய இரு மனிதர்களை ஒரு காட்டேரி ரத்தப்பலி எடுப்பது இந்தக் காட்டேரியானது ராபின்கூட் பரம்பரையை சேர்ந்ததாக இருக்குமோ என எண்ணத் தூண்டுகிறது.

sh&v நல்ல வேளையாக அடுத்த பக்கங்களில் கதை 1891களின் பாரிஸிற்கு நகர்ந்து அங்கு ரகசிய வாழ்க்கை வாழும் ஷெர்லாக்கை அறிமுகம் செய்து வைக்கிறது. கதைக்கு சித்திரங்களை வரைந்திருக்கும் ஓவியரான Laci, தன் சித்திரங்களில் அந்தக்காலத்திற்குரிய பாரிஸ் நகரையும், இங்கிலாந்தையும் அற்புதமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். தெருக்கள், உணவகங்கள், மாளிகைகள் என சிறப்பான ஓவியங்களை அவர் வழங்கியிருக்கிறார். அவர் வரைந்திருக்கும் பக்கங்களில் ஒளி விளையாட்டு அருமையாகவிருக்கிறது.

காட்சிகளின் பிரம்மாண்டத்தை அதிகரிக்க அவர் கதை நெடுகிலும் நீள்சதுரக் கட்டங்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். இங்கிலாந்து தெருக்களில் வறுமையின் அடையாளத்தை சிறிதளவேனும் காட்டிய சித்திரக் கலைஞர், பாரிஸ் தெருக்களில் அதனை முற்றிலுமாக தவிர்த்திருக்கிறார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் தன் தந்தையின் சாயல் ஷெர்லாக்கில் தெரியும் வண்ணமாகவே அவர் ஷெர்லாக் பாத்திரத்தை வரைந்திருக்கிறார் என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

லண்டனிற்கு ரத்தக் காட்டேரிகளுடன் பயணமாகும் ஷெர்லாக், அதன் முன்பாக ரத்தக் காட்டேரிகள் குறித்த புத்தகங்களை தேடிப் படித்து அவர்களைப் பற்றியும் அவர்களை எதிர்க்கும் வழிகள் குறித்தும் நன்கு அறிந்து கொள்கிறான். ரத்தக் காட்டேரிகள் அவனைப் பாரிஸில் சந்திக்கும் வேளைகளில் சில ரத்தக்காட்டேரிகள், ஷெர்லாக்கின் ஜு- ஜிட்சு திறமைகளை சுவை பார்க்கின்றன. சில அவன் உடலில் கலந்திருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட நீரினால் கருகிப் பொசுங்குகின்றன. ஷெர்லாக்கின் துப்பறியும் திறமைக்கு பெருமை சேர்ப்பதான கதையோட்டம் இந்த ஆல்பத்தில் இல்லை என்பதுதான் உண்மை.

ஷெர்லாக்கை தன் மாளிகையில் சந்திக்கும் ரத்தக் காட்டேரிகளின் தலைவன் செலிம்ஸ், தன் கூட்டத்தைவிட்டு பிரிந்து சென்று, இங்கிலாந்து மகாராணிக்கு நெருக்கமான வட்டத்தில் இருக்கும் நபர்களை போட்டுத் தள்ளும் ஓவன் எனும் காட்டேரியை ஷெர்லாக் விரைவில் கண்டுபிடித்து தரவேண்டும் என மிரட்டுகிறான். தன் நண்பன் வாட்சனிற்கும் அவன் குடும்பத்திற்கும் ஆபத்து ஏதும் வந்துவிடக்கூடாதே எனும் அச்சத்தில் அந்த காட்டேரியைக் கண்டுபிடிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான் ஷெர்லாக்.

ஓவன் ஏன் தன் கூட்டத்திற்கு எதிராக செயல்படுகிறான்? ஓவன் எனும் காட்டேரியின் கொட்டத்தை ஷெர்லாக் அடக்கினாரா? கொடிய ரத்தக் காட்டேரிகளின் பிடியிலிருந்து அவரால் தப்ப முடிந்ததா? ஒவனிற்கும், செர்லாக்கிற்கும் இடையில் நிகழும் ஒரு ஜீவமரணப் போராட்டத்தின் சஸ்பென்ஸ் திருப்பத்துடன் நிறைவு பெறுகிறது ஆல்பத்தின் முதல்பாகம்.

இந்த ஆல்பத்தின் கதையை எழுதியிருப்பவர் Sylvian Cordurié ஆவார். ஆல்பத்தின் கதையின் தரம் ஹாலிவூட்டின் மட்டரக பேய்ப்படங்களை நினைவூட்டினாலும் கூட, கதை மிக வேகமாக நகர்கிறது. ஷெர்லாக்கின் வலது கரமான வாட்சன் இந்த ஆல்பத்தில் ஷெர்லாக்கின் விசாரணைகளில் பங்கு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது மாறாக அவரைச் சுற்றி எப்போதும் ஒரு காட்டேரிக் கூட்டம் உலா வருகிறது. வழமையாக ஷெர்லாக்கின் கதைகளை வாட்சன் விபரிப்பதாக கதையோட்டம் இருக்கும் இங்கு ஷெர்லாக்கே நல்ல கதை சொல்லியாக கதையைக் கூறிச் செல்கிறார். நல்ல சித்திரங்களிற்காகவும், வேகமான கதை சொல்லலிற்காகவும் படிக்கக்கூடிய இந்த ஆல்பம் Soleil பதிப்பக வெளியீடாகும். [**]

Chronique_Des_Immortels_2La Chronique des Immortels 2

lcdim1 காமிக்ஸ் பதிவுகளை இங்கு தொடர்ந்து படித்து வரும் அன்பர்களிற்கு சில காலத்திற்கு முன்பு நாம் இங்கு பார்த்த இறக்காதவர்களின் ஏடுகள் எனும் பதிவு சிலவேளைகளில் நினைவிலிருக்கலாம். La Chronique des Immortels எனும் அந்த ஆல்பத்தின் இரண்டாம் பாகமானது 5 வருட இடைவெளியின் பின் இந்த வருடத்தின் ஜூன் மாதத்தில் வெளியானது. சென்றவாரம் அதனை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

தான் வாழ்ந்த ஊரிற்கு திரும்பி வந்த அண்ட்ரெஜ் டுலேனி, தன் கிராமம் அழிக்கப்பட்டுவிட அக்கிராம ஆலயத்தில் தன் மகன் குற்றுயிரான நிலையில் இருப்பதை அறிந்து தன் மகனை தன் வாளாலேயே அவன் வேதனைகளிலிருந்து விடுவிக்கிறான். ஊரில் அதிர்ஷ்டவசமாக தப்பியிருந்த சிறுவன் ப்ரெட்ரிக்கை தன்னுடன் கூடவே அழைத்துச் செல்லும் அண்ட்ரெஜ் டுலேனி, கடத்திச் செல்லப்பட்ட கிராம மக்களைத் தேடி தன் பயணத்தை ஆரம்பிக்கிறான். இதில் அவன் எதிர் கொள்ளும் ஆபத்துக்களை முதல் பாகம் விபரித்தது. சித்திரங்களும், கதை சொல்லலும் அட்டகாசமாக இருந்த ஆல்பமது.

இரண்டாம் பாகத்தின் கதையானது, அண்ட்ரெஜ்ஜின் கிராம மக்கள், சிறை வைக்கப்பட்டிருக்கும் துறைமுக நகரமான கான்ஸ்டாண்டாவில் ஆரம்பமாகிறது. மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை ஒன்றின் ஊடாக அண்ட்ரெஜ்ஜும் சிறுவன் ப்ரெட்ரிக்கும் ஒரு முக்கிய சந்திப்பிற்காக குருட்டுக் கரடி மதுவகத்தை தேடிச் செல்கிறார்கள். ஆபத்து அவர்களை பல ரூபங்களிலும் நெருக்க ஆரம்பிக்கிறது.

சிறுவன் ப்ரெட்ரிக்கிற்கும் அண்ட்ரெஜ்ஜிற்குமிடையில் உருவாகும் உறவின் சிக்கலான பக்கங்கள், அண்ட்ரெஜ்ஜின் கடந்த காலத்தின் சில நினைவூட்டல்கள், சிறுவன் ப்ரெட்ரிக்கிற்கும், தனக்கும் காயங்கள் உடனடியாக ஆறிவிடுவதன் மர்மம் குறித்த அண்ட்ரெஜ்ஜின் புரியாத்தன்மை என விரியும் கதை, மரியா எனும் பெண்பாத்திரத்தை கதையோட்டத்தினூடு அறிமுகம் செய்து வைக்கிறது. மரியாவின் அழகில் ஈர்க்கப்பட்டு அவள்மேல் காதல் வயப்படுகிறான் அண்ட்ரெஜ். கதையில் திருப்பமும் மரியாவினாலேயே உருவாகிறது…

முதல் அதிர்ச்சி வருவது சித்திரங்கள் வழியாக. முதல் ஆல்பத்திலிருந்த சித்திரத்தின் சாயல் இருந்தாலும் அதை வழங்கும் பாணியை முற்றிலுமாக மாற்றியிருக்கிறார் ஓவியக் கலைஞர் தாமஸ் வான் குமாண்ட். இந்த மாற்றத்தை இலகுவாக மனம் ஏற்க மறுப்புத் தெரிவிக்கிறது. பனி வீழ்ந்து கொண்டிருக்கும் கான்ஸ்டாண்டாவின் ஒடுங்கிய தெருக்களிலும், சதுக்கங்களிலும் இருளையும் ஒளியையும் கலந்து தெளித்திருக்கிறார் ஓவியர். எங்கிருந்தோ வந்த இனம் புரியாத ஒரு இருள் கதையை சூழ்ந்து நிற்கும் தன்மையை தாமஸின் ஓவியங்கள் கதைக்கு வழங்குகின்றன. ஆனால் அவரது பாணி தனித்துவமானது என்பதை அவர் மீண்டும் நிரூபிக்கிறார். உண்மையைக் கூறினால் அவரது ஓவியங்கள் மட்டுமே இந்த ஆல்பத்தை காப்பாற்றியிருக்கின்றன.

ஐந்து வருட காலமாக சிறப்பான விருந்து ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருந்த வாசகனிற்கு 32 பக்கங்களில் [ ஆம், 32 பக்கங்கள் மட்டுமே கதை இடம்பெறுகிறது. மிகுதிப் பக்கங்களில் பொம்மை காட்டுகிறார்கள் ] ஒரு பிடி சோளப்பொரி அள்ளித் தந்திருக்கிறார் கதாசிரியர் பெஞ்சமன் வான் எக்கார்ட்ஸ்பர்க். விறுவிறுப்பான கதை நகர்வு காணாமல் போயிருக்க மென்சோகம் அதன் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் குறைந்த நிலையில் இறுதியில் கதையில் வரும் திருப்பம் சப்பென்று இருக்கிறது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளிவரவிருக்கும் மூன்றாவது பாகத்தின் முன்பாக அதிகம் காத்திருந்த வாசகர்களை ஏமாற்றம் கொள்ள வைத்த மலிவான ஒரு வணிக உத்தி எனவே இந்த ஆல்பத்தை கணிக்கக்கூடியதாகவிருக்கிறது. அடுத்த பாகத்திலாவது ரசிகர்களை படைப்பாளிகள் திருப்திப்படுத்தாவிடில் இத்தொடர் அதன் வீழ்ச்சியின் சரிவை நோக்கிப் பயணிப்பதை தடுக்க எந்த வழியுமேயிருக்காது. [**]

தமிழில் வெளியான ஷெர்லாக் ஹோல்ம்ஸ் காமிக்ஸ் கதைகள்

Thursday, November 11, 2010

ஆந்தைகள் ராஜ்யம்


ஹாகூல் எனப்படும் ஆந்தைகளின் உலகில், பலவேறுபட்ட ஆந்தை இனங்களும் சுபீட்சமாக தம் வாழ்கையை நடாத்தி வாழ்ந்திருக்கின்றன. தூய ரத்தம் உடலில் ஓடும் டைடோஸ் எனும் ஆந்தைக்கூட்டமே ஆந்தைகள் உலகில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனும் எண்ணம் கொண்ட, சர்வாதிகார போக்குடைய ஆந்தையான எஃகு அலகு, ஆந்தைகள் உலகின் அதிகாரத்தை தான் கைப்பற்றிக் கொண்டு ஆந்தைகள் உலகின் ஒரே ஒரு மன்னனாக தான் இருக்க விரும்புகிறது.

இதற்காக ஹாகூலில் வாழ்ந்திருக்கும் இளம் ஆந்தைகளை தன் ஆந்தை அடியாள்கள் மூலம் கடத்தி, அவற்றின் சிந்தனைகளை மழுங்கடித்து, தனக்காக போரிடக்கூடிய ஒரு சேனையை உருவாக்குகிறது எஃகு அலகு. இப்படியான ஒரு ஆந்தை கடத்தல்[ பிடித்தல்] படலத்தில், எஃகு அலகின் அடியாட்களின் பிடிக்குள் துரதிர்ஷ்டவசமாக மாட்டிக் கொள்ளுகிறார்கள் இளம் ஆந்தைகளான சொரெனும் அவனது சகோதரனுமான க்ளட்டும்.

க்ளட், டைடோஸ்கள் மத்தியில் தனக்கு கிடைக்கக்கூடிய அங்கீகாரத்திற்காக எஃகு அலகின் பக்கம் சேர்ந்து கொள்ள, டைடோஸ்களின் கோட்டையிலிருந்து தப்பிச் செல்கிறான் சொரென். தன் தந்தை கூறிய ஆந்தை உலகின் காவலர்களின் சாகசக் கதைகளை தன் மனதில் கனவாக இருத்தி வாழும் சொரென், எஃகு அலகின் கொடிய திட்டத்திலிருந்து ஆந்தை உலகை காப்பாற்ற வேண்டி, ஹாகூல் ராஜ்யத்தின் காவலர்களை தேடி ஒரு பயணத்தை ஆரம்பிக்கிறான்….

Kathryn Lasky அவர்கள் சிறுவர்களிற்காக எழுதிய Guardians of Ga’Hoole எனும் மிகுபுனைவு கதை வரிசையினைத் தழுவியே Legend of The Guardians: The Owels of Ga’Hoole அசைவூட்டத் திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது. 300ல் ஸ்பார்டானின் அதிரடி வீரர்களையும், வாட்ச்மேனில் தம் சூப்பர்ஹீரோ வாழ்வில் சலிப்புற்றுபோன மனிதர்களையும் திரையில் உலவவிட்ட இயக்குனர் Zack Snyder, ஆந்தைகளின் விசித்திர உலகை வெள்ளித்திரைக்கு எடுத்து வரப்போகிறார் என்பதை அறிந்தபோது, அதனை நம்பமுடியாது விழிகளை அகல விரித்தவர்களின் பட்டியலில் என் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

le-royaume-de-ga-hoole-la-legende-des-gardiens-2010-16888-2065043724 மிகுபுனைவு கதைகளில் கதாசிரியர்கள் சிருஷ்டித்த உலகங்களை திரையில் தீட்டுவது என்பது இலகுவான ஒரு காரியமல்ல. ஆனால் இயக்குனர் ஸாக் ஸ்னெய்டர், திறமையான ஒரு அணியின் கூட்டுடன் உருவாக்கியிருக்கும் ஆந்தைகளின் பூமி அசர வைக்கிறது. பொதுப்புத்தியில் ஆந்தைகள் இருளோடு தொடர்பு கொண்ட உயிரினங்களாக அறியப்பட்டு இருக்கையில், இயக்குனரின் ஆந்தைகள் உலகம் ஒளியால் சூழப்பட்ட, சந்துஷ்டி மிக்க, எழில் நிறைந்த ஒரு பூமியாக காட்டப்பட்டிருக்கிறது. திரைப்படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இந்த ஆந்தைகளின் பூமிக்குள் ரசிகர்கள் தூக்கிச் செல்லப்படுகிறார்கள்.

காடுகள், மலைகள், குகைகள், கடல், ஆகாயம் என ரகசியமான ஒரு கனவின் நனவு வடிவாக வியக்கவைக்கிறது செயற்கையான உத்திகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்னெய்டெரின் ஆந்தைகள் பூமி. இலைகள் மென்மையான காற்றில் நடனமிடுவதாகட்டும், அந்திச் சூரியனின் கதிர்கள் மேகங்களை ஊடுருவி சூழலை ரம்யமாக மாற்றி அடிப்பதாகட்டும், மழைத்துளிகளும், பனித்துளிகளும் அவற்றிற்கேயுரிய குளிர்ந்த அழகுடன் வீழ்ந்து சிதறுவதாகட்டும் அண்மைக்காலத்தில் இவ்வளவு தத்ரூபமாக உருவாக்கப்பட்ட அசைவூட்டக் காட்சிகளை நான் பார்த்ததில்லை எனலாம். சொரெனின் தங்கை, அவனது இறகுகளிற்குள் பொதிந்து தூங்கும்போது, அக்கணத்தின் மென்மையை, அந்த இறகு மெத்தையின் மென்மையை ரசிகனும் உணர்ந்து கொள்ளக்கூடிய தத்ரூபம் அது.

இயக்குனர் ஸாக் ஸ்னெய்டரிற்கு மென்னகர்வில் காட்சிகளை உருவாக்குவதில் உள்ள பிரியம் அலாதியானது. இத்திரைப்படத்திலும் அவ்வகையான காட்சிகள் உண்டு. குறிப்பாக ஆந்தைகளின் பறத்தல் காட்சிகள். மிகவும் ரசனையுடன் உருவாக்கப்பட்டிருக்கும் பறத்தல் காட்சிகள் திரைப்படத்தில் ரசிகர்களை மயங்க செய்யும் அம்சங்களில் ஒன்று. அதிலும் புயல் மழைத்துளிகளினூடு சொரென் தன்னை இழந்து பறந்து செல்லும் காட்சியின் அழகு விவரிக்க முடியாத ஆனால் உணர மட்டுமே படக்கூடிய ஒன்றாகும். இவ்வகையான காட்சிகளின் அழகை மெருகேற்றுவதில் 3D நுட்பம் சிறப்பான பங்காற்றியிருக்கிறது.

le-royaume-de-ga-hoole-la-legende-des-gardiens-2010-16888-260125424 சண்டைக் காட்சிகளிலும் ஸாக் ஸ்னெய்டர் தயங்கவில்லை. அதே மென்னகர்வுடன் சிறுவர்களை சற்று அச்சம் கொள்ள வைக்கும் வகையில் ஆந்தைகளிற்கிடையான மோதல் காட்சிகளை அவர் திரைப்படுத்தியிருக்கிறார். இருப்பினும் தொடர்ச்சியான மோதல்கள் சலிப்படைய வைக்கின்றன.

ஆந்தைகள் உலகை உருவாக்குவதிலும், அதனை அற்புதமாக ரசிகர்களிற்கு பரிமாறுவதிலும் அபார வெற்றி கண்ட ஸ்னெய்டர், திரைப்படத்தின் பாத்திரங்களை ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் வண்ணம் வலுவானவையாக உருவாக்குவதில் தவறியிருக்கிறார். சுவாரஸ்யமான குணாதிசயங்கள் கொண்ட பல கதாபாத்திரங்கள் படத்தில் இருப்பினும் அதில் ஒருவர்கூட குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் மனதில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது வேதனையானது.

சண்டைக்காட்சிகளில் இருந்த ஆக்ரோஷம், பாத்திரங்களின் உணர்வுகளில் சுரமிழந்திருக்கிறது. சாகசம், போராட்டம், சகோதர பாசம், லட்சியம், வீரம், மந்திரம் எனும் அம்சங்கள் கொண்ட கதை இருந்தும், மனதை கதை முழுமையாக ஆக்கிரமிக்காத வகையில் அமைந்திருக்கிறது கதை நகர்வு. மேலும் அசைவூட்ட படைப்புக்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகிய நகைச்சுவையை சிறப்பாக பயன்படுத்தியிருக்ககூடிய பாத்திரங்கள் இருந்தும் திரைப்படத்தில் நகைச்சுவை மிகவும் குறைந்த அளவிலேயே காணக்கிடைக்கிறது. ஸாக் ஸ்னெய்டரிற்கும் நகைச்சுவைக்கும் இடையில் தூரம் அதிகமாக இருக்கிறது.

செரொனின் பறத்தல் முதல், காவலர்களை தேடிய அவன் பயணம், எஃகு அலகுடானான இறுதி மோதல் என படத்தின் நிகழ்வுகள் யாவும் மிகவும் அவசரகதியில் பொட்டலமாக்கப்பட்டு பார்வையாளன் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதாக எழும் உணர்வை தவிர்க்க முடியாது. ஒன்றரை மணி நேரத்தினுள் அசர வைக்கும் ஆந்தை உலகையும், ஆக்‌ஷனையும் வழங்கிய ஸ்னெய்டர், உணர்வுகளால் ரசிகர் மனதை கொத்தும் வாய்ப்பை இழந்திருக்கிறார். ஆந்தைகள் ராஜ்யமான ஹாகூலின் அனுபவம், மெலிதான ஏமாற்றத்தையும் கூடவே ஒரு சிறகாக உதிர்த்து செல்கிறது. [**]

ட்ரெய்லர்

Sunday, November 7, 2010

புதைக்கப்பட்டவன்


மயக்கமுற்ற நிலையிலிருந்து சுயநினைவுக்கு திரும்பும் பால் கான்ராய் [Ryan Reynolds], இறுக மூடப்பட்ட சவப்பெட்டி ஒன்றினுள் வைத்து தான் நிலத்திற்குள் புதைக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்கிறான். அவனிற்கு துணையாக அந்த சவப்பெட்டியினுள் ஒரு ஸிப்போ லைட்டர், ஒரு கைத்தொலைபேசி கூடவே 90 நிமிடங்கள் மட்டுமே அவன் உயிர் வாழத்தேவையான ஒக்சிஜன் என்பனவும் புதைக்கப்பட்டிருக்கின்றன….

இறுக மூடப்பட்ட ஒரு சவப்பெட்டியினுள் அடைக்கப்பட்ட ஒரு மனிதனின் உணர்வுகளையும், அதிலிருந்து வெளியேறிவிட அவன் நடாத்தும் போராட்டங்களையும் மட்டுமே திரையில் காட்டி 90 நிமிடங்களிற்கு பார்வையாளர்களை சஸ்பென்ஸால் திணற அடிக்க முடியுமா எனும் கேள்விக்கு, ஆம் எனும் பதிலாக அமைந்திருக்கிறது ஸ்பானிய இயக்குனர் Rodrigo Cortés ஆங்கில மொழியில் உருவாக்கியிருக்கும் Buried எனும் இத்திரைப்படம். மிகக்குறைந்த செலவில் விறுவிறுப்பான படைப்பினை வழங்க முடியும் என்பதனையும் இத்திரைப்படம் தெளிவாக்குகிறது. திரைப்படம் ஆரம்பித்து அது நிறைவு பெறும்வரை பார்வையாளன், பால் கான்ராயுடன் மூடப்பட்ட சவப்பெட்டியினுள் இருந்தாக வேண்டிய கட்டாயம்! ஒரு கணம்கூட கமெரா சவப்பெட்டியின் உள்வெளியை விட்டு விலகுவதில்லை.

இருண்ட திரையுடனும், ஆழமான மூச்சு ஒலிகளுடனும் ஆரம்பிக்கும் திரைப்படம், ஸிப்போ லைட்டரை எரியவிட்டு தான் ஒரு புதைக்கப்பட்ட சவப்பெட்டியினுள் அடைபட்டிருப்பதை ஒரு மனிதன் தெரிந்து கொள்ளும் திகில் கணங்கள் வழியாக பார்வையாளனிற்கு முதல் அதிர்ச்சியை எடுத்து வருகிறது. அம்மனிதன் அடைக்கப்பட்டிருக்கும் அந்த ஒடுங்கிய வெளியினுள், அவனது குழப்பமும், அச்சமும், கையறுநிலையும், சவப்பெட்டியை ஸிப்போவின் ஒளி நிரப்புவதைபோல் ரசிகனின் மனதை இருளும் ஒளியும் கலந்த பரப்பாக நிரப்புகின்றன. ஸிப்போவின் ஒளியிலும், கைத்தொலைபேசியின் மிளிர்விலும், மூச்சுத்திணற வைக்கும் கோணங்களிலும் ஒளிப்பதிவானது அடைபட்ட உணர்வை திரைக்கு அப்பால் கடத்த, இசை; திகிலை செவி வழி ஊதுகிறது. இந்த மனிதன் யார்? எதற்காக அவன் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கிறான்? எனும் கேள்விகளிற்கான விடைகள் குறுகிய வெளியினுள் ஆரம்பமாகும் தொலைபேசி உரையாடல்கள் மூலம் ரசிகனை எட்டுகின்றன.

buried-2010-18948-624553307 2006ம் ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் கனரக வாகன சாரதியாக ஈராக்கில் பணிபுரியச் சென்ற ஒரு சாதாரண அமெரிக்க பிரஜையே பெட்டிக்குள் அடைக்கப்பட்ட மனிதன் என்பதையும், அவன் பெயர் பால் கான்ராய் என்பதையும் தொலைபேசி உரையாடல்கள் வழியாக பார்வையாளன் அறிந்து கொள்கிறான். பால் கான்ராய் ஏற்படுத்தும் ஒவ்வொரு தொலைபேசி அழைப்பும், உரையாடலும் அவற்றிற்கேயுரிய திகிலை பார்வையாளனிடம் கடத்த தவறுவதில்லை. ஒவ்வொரு முறையும் தொலைபேசி உரையாடல் ஏதோ ஒரு காரணத்திற்காக துண்டிக்கப்படும்போதும் இதயம் தன் துடிப்பை சற்று உயர்த்தி இறக்குகிறது.

தன்னைப் புதைத்த மனிதனுடன்[ அல்லது பயங்கரவாதியுடன்!] பால் கான்ராய் உரையாடும் தருணங்களில், இரு பக்கங்களிலும் இருந்து பரிமாறப்படும் வாதங்களும், நியாங்களும் இந்த இரு மனிதர்களையும் பெரும் அரசுகளின் யுத்த அரசியலிற்கு பலியான இனமாகவே அடையாளம் காட்டுகின்றன. பால் கான்ராய் தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பணம் சம்பாதிக்க அமெரிக்காவிலிருந்து ஈராக்கிற்கு பணிபுரிய வந்த ஒரு மனிதன். பால் கான்ராயை புதைத்தவனிற்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அவனும், அவன் குடும்பமும், அவன் தேசமும்கூட எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத யுத்தமொன்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை வலிமையாக முன்வைக்கிறார் இயக்குனர். விரும்பத்தகாத இந்த நிலைக்கு இவ்விரு மனிதர்களையும் இட்டு வந்த பணத்தின் பிரசன்னம் அரூபமாக ஒடுங்கிய வெளிக்குள் நகைக்கிறது.

நிலத்திற்குள் புதைக்கப்பட்ட நிலையில் தன் மீட்பிற்காக போராடும் ஒரு மனிதனை, அவன் நாட்டின் அரசின் பிரதிநிதிகளும், அவன் பணிபுரியும் நிறுவனத்தின் அதிகார உச்சங்களும் எவ்விதமாக புதைக்கமுடியும் என்பதை வலி ததும்ப இன்னொரு பக்கமாக திரையில் விரிக்கிறார் இயக்குனர் ராட்ரிகோ கோர்டேஸ். அரச பிரதிநிதிகளின் மெத்தனமும், கையாலாகத்தனமும், பொய்களும், இக்கட்டான சூழ்நிலைகளில் தம் பொறுப்புகளிலிருந்து கழன்றுவிடத்துடிக்கும் முதலாளிகளின் நரித்தனமான தந்திரங்களும் மனங்களை அதிரச் செய்யும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

திரைக்கதையில் தொலைபேசி உரையாடல்கள் மூலம் மனித உறவுகளின் பல்வேறுபட்ட முகங்களை சவப்பெட்டியின் மீது மோத வைத்திருக்கிறார் இயக்குனர். உரையாடல்களை மட்டும் நம்பியிராது திரைக்கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்கள் மூலம் பார்வையாளனை அசர அடிக்கிறார் அவர்.

படத்தின் ஒரே ஒரு நடிகரான! ரையான் ரெனோல்ட்ஸ், ஒரு குறுகிய வெளிக்குள் அடைப்பட்ட மனிதனின் உணர்வுகளை மிகவும் சிறப்பாக திரையில் காட்டியிருக்கிறார். ஒரு சில தருணங்களில் அவரின் நடிப்பும், உரையாடல்களும் மிகையானதாகவும், பொருத்தமற்றதாகவும் உணரப்படக்கூடும் எனிலும் படத்தின் இறுதித்தருணங்களின் வேகமும், திகிலும் சவப்பெட்டியின் பிளவுகளினுடாக வந்து விழும் மணல் போல் பார்வையாளனை திக்கு முக்காட வைக்கின்றன. Buried திரைப்படம் சஸ்பென்ஸ் பிரியர்களை மூச்சடைக்க வைக்கும். [***]

ட்ரெயிலர்

Friday, November 5, 2010

ரேப் ட்ராகன் - 26


காதல் கடல், கண்ணீர் அலை

கலெக்டிக் ரோமியோ காமா ஜோஸ் அவர்களின் காதல் இம்சை

நலம்தானா என்னுயிர்க் காதலரே என்ற காதல் ஜீவக் கேள்வியை காதல் கணையாக காமா ஜோஸை நோக்கி ஏவிய மொனிக்காவை பதறிப் போனவனாக தன் பாதங்களில் இருந்து அள்ளி எடுத்தான் காமா ஜோஸ்.

- மொனிக்கா, என் அன்பே, என்ன இது, என் பாதங்களில் உன் இதழ்கள் பதிவதற்கு நான் தகுதியானவன் இல்லை. என்னைப் போன்ற ஒரு கயவனிற்காகவா நீ உன் கண்ணீரை செம்முத்துக்களாக உதிர்க்கிறாய். கூடாது பெண்ணே கூடாது. உன்னை விட்டு, உன் உயிர் காதலைவிட்டு விலகிச் சென்றவன் நான் என்பதனை மறந்துவிடாதே.

- இருக்கலாம், ஆனால் நீங்கள் உங்கள் உள்ளத்திலும், உணர்வுகளிலும் என்றும் என்னையும் நம் காதலையும் பரிசுத்தமாக காத்து வந்திருக்கிறீர்கள். என் காதலரே, உங்களை என் கண்களில் கண்டதும் எனக்குள் நிகழும் மாற்றங்கள் வேதியியலையும் வெல்கின்றனவே.

- என் உயிரே, கட்டிக் கரும்பே, காதல் எறும்பே உன்னைவிட்டு நான் பிரிந்த நாள் முதலாய், உன் கொடிய சாபத்தை நீக்குவதற்கான வழிகளை கண்டறிய விழைந்தேன். உன் சாபத்திலிருந்து உன்னை விடுவிக்கும் விமோசனத்தைக் கண்டறியாது உன்னைக் காண்பதில்லை என தவமிருந்தேன். ஆனால் கண்கள் காணாவிடிலும், என் கரங்கள் உன் அழகை தழுவாவிடிலும் என் இதயத்தின் நினைவுகளின் ஏகபோக ராணி நீ. மொனிக்கா என் பேரின்பக் காதல் மோகினி.

- அத்தான்

- அப்படி அழைக்காதே, கூசுகிறது.

- அத்தான், அத்தான், அத்தான்

- ஹொய், ஹொய், ஹொய்

இவ்வாறாக இரு காதல் புறாக்களிற்குமிடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த குலவல் காதல் சம்பாஷணையைக் காது கொடுத்துக் கேட்ட குந்தவியும், டேனியும் மனம் நெகிழ்ந்து கண்ணீர் உகுக்க ஆரம்பித்தார்கள்.

- டேனி, எமக்கு மட்டும் இப்படி ஒரு காதலர் கிடைக்காமல் போய் விட்டாரேயடி, ஆகா….காதல் என்றால் இதுவன்றோ அமர காதல் என்றவாறே டேனியைக் கட்டிப்பிடித்து கண்ணீரை சொரிந்தாள் குந்தவி.

- ஆம் இளவரசி, கொடுத்து வைத்தவள் இந்த மொனிக்கா. காட்டேரியாக இருக்க சபிக்கப்பட்டாலும், ஒரு உண்மையான ஆண்மகனின் காதலில் அவள் உயிர் வாழ்கிறாள் என்றவாறே மூக்கை உறிஞ்சினாள் டேனி.

மென்னிக்கடி மொனிக்காவிடம் மரண அடி வாங்கிய சீனன் ஷங்லிங், காதல் புறாக்களின் பரிபாஷனையை வெறுப்புடன் பார்த்தான்… உலக மா கவி செக்ஸ்பீர் மட்டும் உங்கள் காதல் நாடகத்தை காண்பார் எனில் காதல் காவியங்களை எழுதுவதை நிறுத்திவிட்டு பிச்சை எடுக்க ஆரம்பித்து விடுவார். என்ன உருக்கம், என்ன நெருக்கம். காமா, இன்றுடன் இந்த மொனிக்காவின் கதையை முடித்து உன்னை இந்த கொடூரமான காதல் சிறையிலிருந்து விடுவிக்கிறேன். ம்ம் அவளை விட்டு விலகு என்றவாறே வெள்ளிக் குறுவாள் ஒன்றை உருவினான் சீனன்.

- அத்தான், தயவுசெய்து உத்தரவு தாருங்கள் மொட்டையின் இருப்பிற்கு இப்போதே முற்றுப்புள்ளி வைக்கிறேன்…

- முற்றுப்புள்ளி வைப்பது நீயல்ல அழகுப் பெண்ணே, நான்…. ரஃபிக்கின் குரல் அறையை அதிர வைத்தது. பஞ்சணையில் இருந்த தன் உடலை அப்படியும் இப்படியுமாக முறுக்கிய ரஃபிக்…. அடேய், பச்சைக் கண்ணா, நீ ஒர் உண்மையான ஆண்மகன் என்றால் என் விலங்குகளிலிருந்து என்னை அவிழ்த்து விடு. மதம் கொண்ட களிறுகள் பொருதுவதுபோல் நாம் பொருதுவோம், உன் காதலிற்கும், ஆயுளிற்கும் நான் முற்றுப்புள்ளி இடுகிறேன். மொனிக்கா… என் காதல் மொனிக்கா, உன் காதலனை நான் அழிக்கப் போகிறேன் என்று என்னை வெறுக்காதே, உன் மேல் நான் கொண்ட காதலிற்காகவே இந்த செயலை நான் செய்யப் போகிறேன். இது காதல் யுத்தம். அதன் வெற்றிச் சங்காக ஒலிக்கப் போவது என் இதயத்தின் சத்தம்…. யாரங்கே… அடேய் மொட்டைத் தலை சீனா என் விலங்குகளிலிருந்து என்னை விடுவியடா, என்னுள் இருக்கும் விலங்கை நான் விடுவிக்கிறேன்… ரஃபிக்கின் சொற்கள் தீ அம்புகளாக நாலா திக்கிலும் பறந்தன.

- ஒஹோ, இவன்தானா அந்தப் புரட்சிக்காரன். காமா, இவனைக் கொன்று விடவா, அதிகம் துள்ளுகிறான் என்றான் சீனன்.

- வேண்டாம், அவனை நம் கப்பலிற்கு எடுத்துச் சென்றுவிடலாம்..

- சபாஷ், அருமையான யோசனை காமா, இவனை அடிமை வியாபாரிகளிடம் விற்று அழகான பெண் அடிமைகளை வாங்கிக் கொள்ளலாம்…

- அத்தான், இந்த சீனனுடன் சேராதீர்கள். இவன் ஒரு நாசக்கிருமி.

vampire - அழகியே, அத்தான், அத்தான் என்று நீ அந்தக் கோழையை அழைக்கும்போது, அவன் செத்தான் செத்தான் என்று என் மனம் பாடுகிறது… இடையில் புகுந்தான் புரட்சிக்காரன். ரஃபிக் இருந்த பஞ்சணையை சில எட்டுக்களில் நெருங்கிய சீனன், ரஃபிக்கின் கழுத்தில் ஓடிய நரம்பொன்றினை தன் விரல்களால் ஊன்றி அழுத்தவே மொனிக்.. என்றவாறே தன் நினைவை இழந்தான் ரஃபிக்.

- ஷங்லிங், ராஜமாந்தீரிகனும், இலுமினாட்டியும் ஓட்டி வரும் புஷ்பக் விமானத்தில் குந்தவியை ஏற்றியனுப்பு. என்னை சற்று தனிமையாக மொனிக்காவுடன் இருக்க விடு. ம்ம்ம்.. கிளம்பு சீனா என்றான் காமா

- ஆமாம், கிளம்படா மொட்டைத்தலை சீனா என்றாள் கேலியாக மொனிக்கா.

- மொனிக்கா, அவனை வையாதே, அவன் ஒரு நாசக்கிருமிதான் ஆனால் அவன் உருவாக்கும் அழிவுகள் கொஞ்சமே…மொனிக்காவின் காதுகளில் மென்மையாக கிசிகிசுத்தான் காமா

- காமா, இந்த அழகியையும் கப்பலிற்கு இட்டுச் செல்லவா என்றவாறே டேனியை நோக்கி தன் தலையை நீட்டிச் சிரித்தான் சீனன்.

- அதனை விட நான் இறப்பதே மேல் என்றவாறே குந்தவியை அணைத்த டேனி... இளவரசி, பிறந்தால் அடுத்த பிறப்பில் உங்களிற்கு தோழியாக நான் பிறக்க வேண்டும் என்று கூறி இளவரசியை ஆரத்தழுவி கண்ணீர் வடித்து அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.

ரஃபிக்கை விலங்குகளிலிருந்து விடுவித்த சீனன், அடடா இந்தக் கனம் கனக்கிறானே என்றவாறே அவனை அந்த அறையிலிருந்து இழுத்துக் கொண்டு சென்றான். அறையிலிருந்து வெளியேறுமுன்.. ஆகா என்ன அருமையான பஞ்சணை என்று கூறி காமாவை பார்த்து தன் கண்களை சிமிட்டினான். மொனிக்கா நாணினாள்.

மயங்கிய நிலையிலிருந்த ரஃபிக்கை ஆதரவுடன் நோக்கிய குந்தவி.. என் அன்பே, என் காதலே, என் விளையாட்டு இப்படி விபரீதத்தில் முடிந்துவிட்டதே, உன்னை நான் மீண்டும் காணும் நாள் வருமா என்று மனதினுள் அழுதாள். மனம் வடித்த கண்ணீர் அவள் விழிகளில் அரும்ப ஆரம்பித்த கணத்தில் அறைக்குள் சிதறிக் கிடந்த தன் ஆடைகளை எடுத்துக் கொண்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் அவள். அறையில் காதலும், காதலரும் தனியே நின்றனர்.

- அத்தான் இனியும் உங்களை என்னால் பிரிந்திருக்க முடியாது, என்னுடன் வந்து விடுங்கள்.

- இல்லை மொனிக்கா. உன் காட்டேரி சாபத்தை போக்க வழிகள் உண்டு என்பதாக அறிகிறேன். மன்மதக்குகை தீவுகளை தேடுபவையாகவே என் பயணங்கள் அமைந்திருக்கின்றன. அதுவரை பொறுத்திரு பெண்ணே.

- நீங்கள் திரும்பாவிடில்..

- என் இதயத்தில் உன்னையும், உன் உயிரில் என்னையும் கொண்டு இந்தக் காற்றில் உன் காதல் தேடி வருவேன்..

- அய்யகோ, அத்தான் என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள்..

- பெண்ணே, பிரியும் நேரமிது, விடைகொடு.

மொனிக்காவின் இதழ்கள் காமாவின் இதழ்கள்மேல் பதிந்தன, காமாவின் கரங்கள் மொனிக்காவை அள்ளி அணைத்தன, அவர்கள் இருவரினதும் நாக்குகளும் ஆரத் தழுவிக் கொண்டன. சொர்க்கம் என்பது இதுதானே என்பதை இருவரும் உணர ஆரம்பித்த நிலையில் காமாவிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அறையின் கூரை வழியாக வெளியே பறந்தாள் மொனிக்கா.

சொகுசு விடுதியை விட்டு கனத்த மனதுடன் வெளியே வந்த காமா, வானில் ராஜமாந்தீரிகனின் புஷ்பக் விமானம், குத்து நகரின் திசையில் வேகமாக பறந்து கொண்டிருபதைக் கண்டான். புஷ்பக் விமானத்தை விழி வெட்டாது பார்த்த அவன் தோளின் மீது, மேலேயிருந்து வந்த ஏதோ ஒன்று விழுந்து உருண்டது. தன் கைகளில் அதனைப் பற்றிய காமா, நிலவு வெளிச்சத்தில் அது என்னதென்று நோக்கினான். அந்த செங்கண்ணீர் முத்து அவன் கண்களை காதலுடன் பார்த்தது. தன் கண்களை மேலே உயர்த்தினான் காமா. நிழலான ஒரு உருவம் அவனை விட்டு தூரமாக வானில் பறந்து சென்று கொண்டிருந்தது கலங்கலாக அவன் கண்களில் வீழ்ந்தது.

=================

கப்பலில் ரஃபிக்கிற்கு ஒதுக்கப்பட்ட அறையில் தூக்கம் வராது புரண்டு கொண்டிருந்தான் ரஃபிக். இரவு நன்றாக ஏறிவிட்ட வேளையில் அவனது எதிர்காலமானது அந்த இரவைவிட இருளாக அவனிற்கு காட்சியளித்தது. கொடிய சீனன் தன்னை அடிமை வியாபாரிகளிடம் விற்று விடுவான் என்பதை ரஃபிக் உறுதியாக நம்பினான். இவ்வேளையில் அவன் இருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது. கையில் விளக்குடன் அறையினுள்ளே நுழைந்தாள் ஒரு அழகி. அவள் கண்கள் கடலினதும், ஆகாயத்தினதும் நீலத்தைக் கலந்த வண்ணத்தைக் கொண்டிருந்தன. அவள் உடலெங்கும் அழகு தோரணம் கட்டி குதூகலித்துக் கொண்டிருந்தது. விளக்கை கீழே வைத்த அவள் ஏதும் பேசாது தன் ஆடைகளை களைய ஆரம்பித்தாள். அந்த அழகி தன் ஆடைகளை களைந்ததால் பதறிப்போன ரஃபிக், பெண்ணே நீ யார், ஏன் ஆடைகளைக் களைகிறாய் என்றான்.

- ஆணழகே, இந்த துர்பாக்யவதியின் பெயர் நீல அழகி. கொள்ளையர் கப்பலில் இருக்கும் கொடியவர்களிற்கு என் உடலை பரிமாற வேண்டியது என் சாபம். அழகியின் வார்த்தைகளை கேட்ட புரட்சிக்காரனின் ரத்தம் சூடாக ஆரம்பித்தது. உள்ளம் கொதித்தது. மீசை துடித்தது.

- அழகியே, இந்தக் கொடிய செயலை உன்னை செய்யத் தூண்டியவர் யாரோ.

- வேறு யார், குரூர மனம் கொண்ட சீனன் ஷங்லிங்.

- பெண்ணே, பேரழகே, நீலப்புஷ்பமே நான் சொல்வதை நன்றாகக் கேள். கொடிய கடற்கொள்ளையர்களான காமா ஜோஸையும், ஷங்லிங்கையும் கடல் அரக்கன் புட்டுக் கிறுக்கனின் பலிபீடத்திற்கு அனுப்பி வைப்பேன். இந்தக் கப்பலை எனதாக்குவேன். உன்னை என் ராணியாக்குவேன். இது இந்த வானின் மீது ஆணை, இந்த வையத்தின் மீது ஆணை, இந்தக் கடலின் மீது ஆணை, ஏன் நான் உன் மேல் கொண்டிருக்கும் உயிர்க் காதல் மீது ஆணை…

ரஃபிக்கின் ஆவேசக் குரல் இருளில் ஓடிய காற்றில் கலந்து, கடலில் சென்று கொண்டிருந்த கப்பலை தழுவியது. இதைப்போல பல சபதங்களையும், காதல்களையும் தன் உடல் மேல் தழுவவிட்ட அந்தக் கப்பல், சிருங்காரமாக ஆடிய அலைகளில் தன் உடலை நளினமாக நகர்த்தியது. தன் முன்பாக பிரம்மாண்டாமாக உருவெடுத்த அலையைக் கிழித்து உடைக்க வேகமாக முன்னே பாய்ந்தது ரேப் ட்ராகன்.

rdfin

ராஜமாந்தீரிகன் கருந்தேள், இளவரசன் இலுமினாட்டி, அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு அவர்கள், புரட்சிக்காரன் ரஃபிக், காமா ஜோஸ் ஆகியோரிற்கு என் அன்பான நன்றிகள்.

நண்பர்கள் அனைவரிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.