Saturday, January 18, 2014

6174

பூமியின் மேலே இரு விண்கற்கள் புவிநிலை வட்டப்பாதையின் இரு குறித்த புள்ளிகளில் நிலைபெற்று புவியை வலம்வர ஆரம்பிக்க... வடகொரிய மற்றும் ரஷ்ய போர்கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் மூன்றாம் உலகப்போரிற்கான சாத்தியம் ஒன்றினை உருவாக்க நகர... தொன்மம் ஒன்றின் பரமரகசியமானது உலகிற்கு தன் முகம் காட்டும் ஆயத்தங்களில் இறங்குகிறது... மனித குலத்தின் அழிவு என்பதே முடிவு என இயங்கும் இச்சக்திகளின் ஆவேச ஆட்டத்திலிருந்து மனிதகுலத்தை காத்திட யாரால்தான் முடியும்? நம்மிடம் ஆட்கள் இருக்கிறார்கள் என பாசத்துடன் முன்வந்து ஒரு நிபுணர் குழுவை தன் 6174 நாவலில் களமிறக்கி இருக்கிறார் நாவலாசிரியர் சுதாகர். அறிந்ததை கொண்டு அறியாததை அறியும் தேடலில், வாழ்ந்திருந்த நம்பிக்கைகள் இறக்க புதிய நம்பிக்கைகள் தொன்மங்களுடன் உயிர்துளிர்க்கும் புனைவில்; வரலாறு, தொன்மம், அறிவியல், சர்வதேச ராஜதந்திர அரசியல், உளவுத்துறைகள், ரகசியக்குழுக்கள், அங்காங்கே தூவப்பட்டிருக்கும் நுட்பமான நகைச்சுவை என இப்பட்டியலை இன்னம் நீளவைக்கும் அளவிற்கு  தன் படைப்பை பல்லம்சங்களால் நிரப்பியிருக்கிறார் சுதாகர்.

நாவலின் ஆரம்பத்தில் கதையானது அழகான சிட்டுக்கள் மத்தியில் தனியாக விடப்பட்ட ஒரு அப்பாவி கணவனின் விழிகளைப்போல காலம்விட்டு காலம் தாவுகிறது. இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக பாயும் கதையின் காலம், இடம், வேளை என்பவற்றை ஒரு கனமாக எடுத்திடாது கதையோட்டத்துடன் கலந்துவிடுவது இப்பகுதியில் வாசகர்களிற்கு நலமான ஒன்றாக இருக்கும். ஏனெனில் கதையின் ஓட்டத்தில் தான் உருவாக்கிய காலப்பாய்ச்சல்கள் எல்லாவற்றிற்குமான காரணங்களை கதையில் விளக்கிவிடுகிறார் சுதாகர். இந்தக் காலப்பாய்ச்சல்களினூடு கதையின் பிரதான பாத்திரங்கள் சென்னையில் ஒன்று கூட கதையும் பாய்ச்சல்களிலிருந்து ஓய்வுபெற்று முன்னோக்கி சீராக நகர ஆரம்பிக்கிறது.

6174ன் ஆரம்ப பக்கங்களில் சுதாகரின் கதைசொல்லும் பாணி அல்லது அவரின் புனைவு மொழியுடன் ஒன்றிட எனக்கு சிறிது நேரம் பிடித்தது. அவரது அந்தக் கதைசொல்லும் பாணியுடன் என்னால் உடனடியாக ஒன்றிட முடியாமல் இருந்தது. ஆனால் ஒரு 150 பக்கங்களின் பின்பாக அவருடைய நடையுடன் என்னால் ஒன்றிட முடிந்தது. இடறல்கள் ஏதும் இல்லாமல் கதையோட்டத்துடன் கைகோர்த்திட முடிந்தது. சுதாகரின் கதைமொழி இளமையாக தன்னை புதுப்பித்துக் கொள்ள அதனுடன் என்னை இணைத்துக் கொள்ள நானும் என்னை இளமையாக்கிகொள்ள வேண்டியிருந்தது. இளமைகள் ஈடாகிவிட்டநிலையில் ஓட்டத்தில் தடையேதுமிருக்கவில்லை.

சிதம்பரம் முதல் சிதம்பலம்வரை, மயன் முதல் மாயன்வரை உள்ள தொடர்புகளையும் மேலும் இதுபோன்ற பிற தகவல்களையும் படிப்படியாக வாசகன் முன் பரிமாற ஆரம்பிக்கிறார் சுதாகர். அனகொண்டா எல்லாம் எங்கள் ஊர் சிட்டிசன் என்கிறார். எதிர்த்து ஏதும் மனதில் கேள்வி எழுந்தால் அகராதியை ஆதாரமாக கொண்டு மிரட்டுகிறார். இப்படியாக அவர் அள்ளிப் போடும் தகவல் கோலங்கள் உருவாக்கும் சுவாரஸ்யமானது கதையை வேகமாக நகர்த்துவதில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. தேடி எடுத்த தகவல்களை எல்லாம் சீரான பொருத்தத்துடன் தக்க இடங்களில் இடம்பெறசெய்த சுதாகர் பாராட்டிற்குரியவர்.

கதையானது 150 பக்கங்களை தாண்டி கருஞ்சுழி எண் குறித்த விளக்கத்தை எட்டியபின்பாக நாவல் தன் வேகத்தை அதிகரித்து விடுகிறது. மிங்குனிற்கு செல்லும்வரை நாவலின் பக்கங்களை வேகமாக புரட்டுவது என்பது இயல்பான ஒன்றாக ஆகிவிடுகிறது. விறுவிறுப்பாக, எளிதான மொழியில், புரியும்விதமாக இப்படியான ஒரு கதையை தமிழில் சொல்ல முடியும் என சுதாகர் அடித்து சொல்லும் பகுதியாக நாவலின் மத்திய பகுதி அமைகிறது. தமிழ் நாவல்களில் சாதாரணமாக கையாளப்படும் அறிவியல் தகவல்களின் ஆழத்தை இன்னும் ஆழமாக்கிவிட்டு அதை இலகுவாக புரிந்திட செய்வதில் சுதாகர் சிறப்பாக செயற்பட்டு இருக்கிறார். ஆனால் மிங்குனை அடைந்தபின் கதை பகோடாவையும், குளத்தையும், பாதாளத்தையும் சற்று அதிகமாக சுற்றி சுற்றி வருகிறதோ எனும் ஒரு தொய்வையும் நாவல் ஏற்படுத்தியது என்பதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும்.

மூலக்கூறுகளின் பொருண்மைகளை தரவாக்கி அதன் வழியாக தனிநபரை இனம்காணல், செயற்கை குரல் ஒன்றை புத்திசாலித்தனமாக உருவாக்கல் என சுதாகர் புதிய நுட்பங்களால் திகிலூட்டுகிறார். தோலிற்கு கீழே பதிக்கும் நுண்கருவிகள் பற்றி பேசும் சுதாகர் தமிழ் செய்யுள்களாலும், பாடல்களாலும், வடிவக்கணிதத்தாலும் புதிர்களையும் போடுகிறார். போட்ட புதிர்களை என்னைப்போன்ற வாசகர்களிற்காக அவிழ்க்கவும் செய்கிறார். அவர் செய்யுள் புதிர்களை அவிழ்க்கும்போது என் தமிழ் புலமை குறித்த எண்ணமும் அவிழ்ந்து கீழே வீழ்ந்து விடுகிறது. இத்தரைக்கும் அவர் பயன்படுத்தியிருப்பது மிக எளிமையான சொற்களிலான செய்யுள்களே எனும்போது தமிழை தவறவிட்ட ஏக்கம் மெதுவாக மனதில் வடிவக்கணித கோலம் போடுகிறது. அவர் நாவல் தமிழை போற்றுகிறது என்றால் அது மிகையல்ல.

சுதாகர் தன் கதைக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட தகவல்களை விளக்குவதில் உள்ள எளிமை அவரின் பலம் என்றால் சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு தகவலை தந்துவிட்டு அதை நீங்களே தேடிப்பார்த்து கொள்ளுங்கள் என வீட்டுவேலை தரும் கறாரான ஆசிரியபண்பும் அவரிடம் இருக்கிறது. 1908 ல் சைபீரியாவின் சுங்குஸ்காவில் என்ன நடந்தது என்பதை தேடி அறிந்தால் மட்டுமே சுதாகர் தன் நாவலில் முன்வைக்கும் பேரழிவு குறித்த ஒரு மனச்சித்திரத்தை வாசகன் தன்னுள் உருவாக்கி கொண்டு அந்த பரபரப்புடன் நாவலை தொடர முடியும். இவ்வகையில் நாவலாசிரியனும், வாசகனும் இணைந்து களப்பணியாற்றக்கூடிய பண்பையும் இந்நாவல் கொண்டிருக்கிறது எனலாம்.

சீலகந்தா மீன்கள் பற்றிய வரலாற்றை கதையில் சுவையாக தருகிறார் சுதாகர். ஏன் அந்த மீன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கான விளக்கங்களுடனும் கூடவே நேஷனல் ஜியோகிராபிக் அம்மீன் குறித்து நிகழ்த்திய மிக ரகசியமான ஆய்வு ஒன்றைப்பற்றிய  விபரங்களுடனும். அவர் வழங்கியவற்றை படித்தபின் யார் இந்த சீலகந்தா, அவர் எப்படியிருப்பார் என அறிந்துகொள்ளாவிடில் என் தலைக்குள் புகுந்த வண்டு வெளியேறாது என்பது உறுதியானது. கூகிள் இமேஜை தட்டி அதில் வந்த போட்டோவை பார்த்தால்.. சீலகந்தா... நம்புங்கள் காஜல் அகர்வால் இடையை எவ்வளவு கரிசனையுடன் ஒரு ரசிகர் வர்ணிப்பாரோ அப்படியாக சீலகந்தாவை கதையில் வர்ணித்திருக்கிறார் சுதாகர். இதற்காக சீலகந்தா இனமே அவரிற்கு கடமைப்பட்டு இருக்கிறது.

இவ்வாறாக சற்று பெரிதான எதிர்பார்ப்பை வாசகன் மத்தியில் உருவாக்கும் நாவல் அதன் முழுமையானநிலையில் அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்கிறதா எனக் கேட்டால் எனது பதில்; முழுமையாக அந்த எதிர்பார்ப்பு நாவலில் நிறைவு செய்யப்படவில்லை என்பதுதான். அனந்த், ஜானகி இருவரும் அன்னியர்களாக இருந்தாலும் கூட கதையோட்டத்தில் பெரிதான தாக்கங்கள் உருவாகி இருக்குமா என்பது ஒரு கேள்வி. லெமூரியர்கள் புரிந்து கொள்ள எடுக்கும் நேரம் குறித்த நுட்பமான நகைச்சுவை.. ஏன் இவள் லெமூரியாவை கட்டி அழுகிறாள், கிழம் ராவுகிறது போன்றவற்றில் இல்லை. எனக்கு சுதாகரின் நுட்பமான நகைச்சுவைதான் இணக்கமானதாக இருக்கிறது. ஐராவதி நதி இன்னம் முழுமையாக ஆய்வுக்குட்படாத நதி அதன் ஆழத்தில் மர்மமான ஜீவன்கள் வாழ வாய்ப்புண்டு எனும் சுதாகரின் வரிகள் கதையின் உச்சக்கட்டத்தில் தரும் ஆச்சர்யம் கதையை சிறிது பலவீனமாக்குகிறது. தொன்மங்கள், ஜேம்ஸ்பாண்ட், இண்டியானா ஜோன்ஸ், பெளதிக வகுப்பறை, டாம் க்ளான்ஸி என விரியும் அந்த கூட்டு உச்சக்கட்டத்தில் நாவல் என்னை விட்டு சற்று விலகி சென்றது என்பதுதான் உண்மை. இதை நான் நேர்மையாக சொல்வதே தமிழ் வாசக பரப்பில் இவ்வளவு துணிச்சலுடன் இப்படியான ஒரு நாவலை தயங்காது முன் வைத்த சுதாகரிற்கு நான் தரும் உண்மையான பாராட்டும் உற்சாகமுமாக இருக்ககூடும். இதே சமயத்தில் சகட்டு மேனிக்கு மேற்கத்தைய எழுத்துக்களுடன் சுதாகரின் எழுத்தை ஒப்பிட்டு அவர் படைப்பின் மீது நியாயமற்ற எதிர்பார்ப்புக்களை உருவாக்கும் பதிவுகளையும் ஒரு வாசகர் அவதானமாக கையாள வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

மேற்கத்திய எழுத்தாளர்களின் எழுத்துக்களின் பின்பாக உள்ள ஆட்பலமோ, பணப்பலமோ, விளம்பரபலமோ சுதாகரிடம் இல்லை. தன் ஓய்வு நேரத்தில் தன் படைப்புக்கான தேடல்களை செய்து தன் நாவலை அவர் சிறுக சிறுக உருவாக்கி இருப்பார் என்றே நம்புகிறேன். அந்த உழைப்பும் அர்ப்பணமும் அவர் நாவலில் நான் கண்ட சில குறைகளை தாண்டியும் மதிக்கப்படவேண்டும் என நான் நம்புகிறேன். சுதாகரின் உழைப்பிற்குரிய வரவேற்பும், உற்சாசகமும், பாராட்டுமே அவரை மேலும் செய்யுள்களால் புதிர்போட வைக்கும். இவ்வகையான நாவல் ஒரு நல்ல ஆரம்பம். ஒரு தீபத்தை ஏற்றி வைத்திருக்கிறார் சுதாகர், அது பெருந்தீயாக மாறி டான் ப்ரவுன்களை எரிக்கட்டும்.



Wednesday, January 1, 2014

The Wise Man's Fear - The Goodbye Kiss - Jar City

The Wise Man's Fear

நீங்கள் படிக்கும் ஒரு நாவல் விறுவிறுப்பான ஒன்றாக ஆன அதன் 600 பக்கங்கள் வரை நீங்கள் சென்றாக வேண்டும் என்றால் உங்கள் நிலை எப்படி இருக்கும். இங்கு 600 பக்கம் என்பது நாவலின் மூன்றில் இரண்டு பகுதி என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்.என் நிலையும் எப்படியாக இருந்திருக்கும் என்பதை நான் இங்கு எழுதவே தேவையில்லை.

அந்த 600 பக்கங்கள் வரை கதையின் பிரதான பாத்திரத்துடன் நானும் தேமனே அலைந்து திரிந்தேன். ஹாரிபாட்டர் கதைகளின் சாயல் இப்பகுதிகளில் தெரிவது போல எனக்கு தோன்றியதற்கு பற்றிக் ராத்பஸின் இந்த மிக நீண்ட தட்டையான கற்பனை பதிவே காரணம் என்பேன். Kvothe பள்ளிக்கு காசு செலுத்த கஷ்டப்படுகிறார், மதுவிடுதிகளில் இசைக்கலைஞனாக சிறப்பிக்கிறார், சொல்ல முடியாத ஈர்ப்புடன் ஒரு பெண்ணின் பின் சுற்றுகிறார், செல்வந்த பிரபுவின் வாரிசுடன் தொடர்ந்தும் மோதுகிறார், தன் குடும்பத்தை அழித்த அமானுடர்கள் குறித்த தேடல்களை தொடர்கிறார்... சில மந்திர ஏவல்களை முறியடிக்கும் சம்பவங்களையும், அங்காங்கே காணப்படும் மனதை நெகிழ வைக்கும் தருணங்களையும் தவிர்த்து இப்பகுதிகளில் பெரிதாக ஏதும் இல்லை. ஆனால் இவற்றைதானே கதைவரிசையின் முதல் பாகத்திலேயே படித்து விட்டோம். என்ன கொடுமை இது என எண்ணி நான் விம்ம ஆரம்பித்த நேரத்தில் Kvothe ஒரு பயணத்தில் இறங்குகிறார்.

அப்பயணம் அவரை செவெரென் எனும் இடத்திற்கு கொண்டு செல்கிறது அங்கு அவர் செய்யும் சாகசங்கள் சிறப்பானவை. பக்கங்கள் பரபரவென நகர்ந்து 600 பக்க கொடுமைக்கு ஓரளவேனும் நஷ்ட ஈடு தருகின்றன. காடு ஒன்றினுள் நடக்கும் மோதல் காட்சி ஒன்றின் விவரிப்பை கதாசிரியர் சொற்களில் கொண்டு வந்திருக்கும் விதம் அபாரமானது. இதன் பின் கதையில் Kvothe பிற நிலம் ஒன்றில் சென்று அந்த இன மக்களின் தற்காப்பு கலைகளிலும் மொழிகளிலும் பயிற்சி பெற்று குறிப்பிடத்தக்க பெயர் எடுப்பது எல்லாம் பெருசு ஜோர்டானின் கதைகளில் ட்ராகன் ரீ பார்ன் செய்து விட்டார்.

அடுத்த பாகத்துடன் கதை முடியவில்லை எனில் இக்கதை வரிசையை நான் தொடரப்போவது இல்லை. அடுத்த பாகமானது 1000 பக்கம் என்றால் நான் 600 ம் பக்கத்தில் இருந்தே படிக்க ஆரம்பிப்பேன்.


The Goodbye Kiss

போனோமா அலுவல முடிச்சோமான்னு இருக்கனும் என்பார்கள் அனுபவஸ்தர்கள். இத்தாலிய வெகுஜன குற்றப்புனையாசிரியர் Massimo Carloto வின் எழுத்துக்களும் அதைப்போன்றதே. அவர் கதை சொல்லல் தன் பாதையிலிருந்து விலகி பூ பறிக்கவோ அல்லது அந்தி சூரியனின் அழகை சொல்லழகால் கவிப்படுத்தவோ செய்வது இல்லை. கொல்வது மட்டுமே காரியம் என்றால் அவர் எழுத்துக்கள் கொல்வதை மட்டுமே செய்கின்றன. அவ்வகையில் அவர் எழுத்துக்கள் ஆழம் அற்றவையாக இருந்தாலும் பரபரப்பிலும் விறுவிறுப்பிலும் குறைந்து போவது இல்லை.

The Goodbye Kiss நாவல் முன்னாள் தீவிர இடதுசாரி சிந்தனை போராளி ஒருவனின் கதை. இத்தாலியில் நிகழ்ந்த கலகங்களில் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தென்னமெரிக்க கெரில்லாக்களோடு தன்னை இணைக்கும் ஒருவன் மீண்டும் தன் தாய் மண்ணிற்கு திரும்பி, வாழ்க்கையில் வெற்றி பெற ஓடுவதே கதை. அதை அவன் எவ்வாறு செய்கிறான் என்பதை தன் வரிகளில் அதிர்வு குறையாமல் எழுதுகிறார் கார்லோட்டோ.

தன் போராளி சகாக்களை போட்டுக் கொடுப்பதில் இருந்து அறம், மனச்சாட்சி போன்ற பம்மாத்து வார்த்தைகளை பத்திக்கு பத்தி உயிர் கசிய நசுக்கி கொண்டு பறக்கிறது கதை. வாலிப வயதின் வேகத்தில் இடதுசாரி சிந்தனைகளின்பால் ஈர்க்கப்பட்ட ஒருவன் தான் தேடும் ஒரு வாழ்க்கைக்காக எடுக்கும் உரு, ஆணி பதித்த செருப்பால் வாசகனை அடி மேல் அடித்து ரத்த களறியாக்குகிறது. சமூகம் கொண்ட வேடம் யாவையும் துகிலுரித்து வன்புணர்வுக்கு உள்ளாக்குகிறது கார்லோட்டாவின் எழுத்துக்கள்.

விலைமாதர்கள், போர் குற்றவாளிகள், முன்னாள் போராளிகள், ஊழலில் கொழுத்த சட்ட அதிகாரிகள், குற்ற தலைவர்கள் , புதிய சமூகமொன்றின் நாகரீக குற்றவான்கள் என இத்தாலியின் குற்ற சமூகத்தினூடு வாசகனை கட்டி அவன் உடல் காயம்பட இழுத்து செல்கிறது கதை.

அமெரிக்க ஹார்ட் பாய்ல்ட்டுகளில் காணப்படும் ஆபத்தான பெண், பெண்கள் மீதான கரிசனம், ஈர்ப்பு , இரக்கம் போன்றவை யாவற்றையும் கால்வாயில் வீசி விட்டு செல்கிறார் கார்லோட்டோ. அவர் கதைகளில் அறம், தர்மம், ஒழுக்கம் ஜெயிப்பது இல்லை. வாழ்க்கை தன் அசுரப்பற்களுடன் இரத்தம் வழிய எள்ளல் புன்னகை மட்டும் செய்கிறது. எளிமையான, வழிதப்பாத, ஆழமற்ற, அட்டகாசமான, வன்மையான எழுத்துக்கு சொந்தக்காரர் கார்லோட்டோ


Jar City

கொல்பெர்க் எனும் எழுபது வயதுடைய நபர் அவன் வசிக்குமிடத்திலேயே கொலை செய்யப்படுகிறான். கொலையை செய்தவன் புதிரான ஒரு தகவலை கொலை நிகழ்ந்த இடத்தில் விட்டு செல்கிறான். இக்கொலை பற்றிய புலனாய்வை குற்றபிரிவு அதிகாரிகளான எர்லெண்டரும் அவரது சகாக்களும் தம் பொறுப்பில் எடுத்துக் கொள்கிறார்கள்.

ஐஸ்லாந்து நாட்டின் புகழ்பெற்ற குற்றபுனையாசிரியர்களில் Arnaldur Indridason ஒருவர். அவரின் ஜார் சிட்டி நாவல் ஸ்காண்டினேவிய குற்றபுனைகளின் முக்கிய பண்புகளில் ஒன்றான சமூக அவலங்கள் மீதான பார்வையை தன்னில் தெளிவாக உள்ளடக்கி இருக்கிறது. கொலை செய்யப்படும் கொல்பெர்க் பாத்திரத்தின் பின்பாக உள்ள ரகசியங்கள் வாயிலாக ஐஸ்லாந்து சமூகத்தின் அவலநிலை சிலவற்றை நாவல் விபரிக்கிறது. பெண்களின் மீதான வன்முறை என்பது பிரதான முன்வைப்பாக இருந்தாலும், பெற்றோரிற்கும் குழந்தைகளிற்குமான உறவென்பது ஐஸ்லாந்தில் எவ்வாறனதாக இருக்கிறது  என்பதும் நாவலில் பேசுபொருளாக இருக்கிறது.

குற்றங்களிற்கு ஐஸ்லாந்து நீதிமன்றங்களில் கிடைக்கும் தண்டனையின் அளவு எவ்வளவு நகைப்பிற்கிடமானது என்பதை கதாசிரியர் தெளிவு படுத்துகிறார். குற்றவாளிகள் விடுமுறைக்காலத்தை கழிப்பது போல தமக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனைகளை வரவேற்பதை அவர் வரிகள் சொல்கின்றன. திட்டமிட்ட ஒரு கொலைக்கு  இரு வருடங்கள் சிறைத்தண்டனை என்பது தீர்ப்பாக வழங்கப்படக்கூடிய ஒரு நாட்டில் இவ்வகையான செயல்களை செய்யும் மனிதர்கள் மத்தியில் அது பலமான மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை எனும் வாதத்தையும் இண்ட்ரிடாசன் தன் வரிகளின் பின்னால் சொல்கிறார்.

ஐஸ்லாந்து நாட்டில் குற்றவாளிகளின் மீது நீதித்துறையிலிருந்து காவல்துறைவரை ஒரு வகை சட்ட நிர்பந்தத்தின் பேரில் காட்டும் சகிப்புதன்மை வியக்க வைக்கிறது. கடந்த காலங்களிலும், சமகாலத்திலும் காவல்துறையிலும், மருத்துவதுறையிலும் இருந்து வரும் மெத்தனப் போக்குகள், அலட்சியமான சேவை மனப்பான்மை இவற்றின் வழியாக பாதிக்கப்பட்ட மனிதர்கள் பற்றியும் இண்ட்ரிடாசனின் கதை பேசுகிறது.

கொலை குறித்த விசாரணைகள் வழியே வண்புணர்ச்சி எனும் குற்றத்தினால் உடையும் வாழ்க்கைகள் பற்றி மென்மையான சோகத்துடன் கதையை எடுத்து செல்கிறார் கதாசிரியர். மென்மையான ஒரு பெண்ணின் வாழ்க்கை வண்புணர்ச்சி ஒன்றின் பின்பாக கொள்ளும் மாற்றங்கள், அவளின் தொடர்ச்சியான வீழ்ச்சிகள், அதன் பின் மறைந்திருக்கும் ஒரு ரகசியம் என விறுவிறுப்பாக கதை நகர்கிறது. குழந்தை ஒன்றின் இழப்பு தரும் வேதனைகளை புலனாய்வு வழி உணர ஆரம்பிக்கும் ஒரு மனிதன், தன் மகளுடன் தன் உறவை புதிதாக்கி கொள்ளும் நிலையையும் நாவலில் ஒருவர் காணலாம். அதே வேளையில் தன் மகளை துஷ்பிரயோகம் செய்ய தயங்காத மனிதர்களையும் ஒருவர் கதைசொல்லலில் கண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது.

மனித உடலின் உறுப்புக்களை பரிசோதனை தேவைகளிற்காக போத்தல்களில் போட்டு பாதுகாப்பதுபோல மனிதர்கள் தம்மைபற்றி அறிந்திராத ரகசியங்களும் போத்தல்களில் இடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ரகசியங்களை உடைக்கும் வழி அறிந்தவன் ரகசியங்களை அறிந்து கொள்கிறான். தன் வலி தன்னுடன் முடியட்டும் என்பதற்கான செயல்களில் தன்னை மீறி இறங்குகிறான். வண்புணர்ச்சியானது வாழ்க்கைகளை ரகசியங்கள் இடப்பட்ட போத்தல்களை போல மூடச் செய்கிறது, எங்கோ ஒரு ஆய்வுகூடத்தின் இருண்ட அடுக்கொன்றிற்கு  அவற்றை காவிச்சென்று அங்கு அவற்றை மறைத்துக் வைக்க முயல்கிறது ஆனால் அது விதைத்த வாழ்க்கைகள் வினைகளிற்கான ஆதாரங்களை ரகசியங்களுடன் சேர்த்து நொருக்க விழைகின்றன.

இண்ட்ரிடாசனின் நாவலில் பொதிந்திருக்கும் ஒரு சோகம் கதையை குற்றப்புனை என்பதை தாண்டியும் சற்று ஆழமானதாக்குகிறது. கதையுடன் தொடர்பில்லாத விடயங்களை எல்லாம் கதைக்குள் இழுத்து வந்து சுற்றோ சுற்றென சுற்றி பக்கங்களை அதிகரித்து கதையை சலிப்படைய வைக்காது சிறப்பாக கதையை சொல்கிறார் கதாசிரியர். இண்ட்ரிடாசனின் எழுத்தில் ஒரு வீதம் ஸ்வீடன் குற்றபுனையாசிரியர் ஸ்டெய்க் லார்சனின் எழுத்துக்களில் இருந்திருந்தால் அவர் நாவல்கள் இன்று பெற்றிருக்கும் புகழ் நியாயமான ஒன்றாக இருக்கும். ஆனால் அதுவும் ஒரு ஐஸ்லாந்து நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு போலவே தெரிகிறது.