Sunday, January 31, 2010

நட்சத்திரங்களின் தனிமை


upintheairhardcover440x663 தம்மிடம் பணிபுரியும் ஊழியர்களை, தாம் வேலை நீக்கம் செய்யவிருக்கும் தகவலை அவர்களிடம் தாமே நேரடியாகத் தெரிவிக்க தயங்கும் நிறுவன நிர்வாகங்கள் ரையான் பிங்ஹாம் பணிபுரியும் நிறுவனத்தின் சேவைகளை நாடுகிறார்கள்.

நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களிடம், உங்கள் வேலை காலி என்பதை மிகுந்த மரியாதை மற்றும் கண்ணியத்துடன் தெரிவிப்பதே ரையான் போன்றவர்களின் வேலை. ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படும் அதிர்ச்சி தரும் செய்தியுடன் அவர்களிற்கு புது ஆரம்பம் ஒன்றிற்கான நம்பிக்கை கலந்த ஆலோசனைகளை வழங்கலும் ரையான் வழங்கும் சேவையில் இடம்பிடிக்கிறது. ரையான் இந்த விளையாட்டில் மிகத் தேர்ந்த ஒருவனாக மிளிர்கிறான்.

தன் பணி நிமித்தம் இடைவிடாது அமெரிக்காவின் பல பகுதிகளிற்கும் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ரையானிற்கு இருக்கிறது. ரையான், தரையில் இருப்பதை விட விமானத்தில் பறப்பது அதிகம். விமான நிலையங்களே அவன் இனிய இல்லங்கள். எந்தவிதமான உறவுகளையும் விரும்பாத ஒரு சுதந்திரப் பறவையாக வானில் பறந்து திரிகிறான் அவன். தன் தனிமை குறித்து அவன் என்றுமே சிந்தித்ததில்லை.

இவ்வாறான பயணம் ஒன்றின்போது ஒரு ஹோட்டலில் அலெக்ஸ் என்ற பெண்ணுடன் அறிமுகமாகிறான் ரையான். அலெக்ஸும் அவனைப் போலவே பறந்து திரிபவள் என்பதை ரையான் அவளுடன் உரையாடுவதன் மூலம் தெரிந்து கொள்கிறான். அலெக்ஸிற்கும், ரையானிற்குமிடையில் ஏற்படும் ஈர்ப்பு, இருவரையும் தயக்கமின்றி அவர்கள் சந்தித்துக் கொண்ட அந்த இரவிலேயே தங்கள் உடல் தாகங்களை தீர்த்துக் கொள்ள வைக்கிறது, அவர்களிடம் ஒரு புதிய தொடர்பை உருவாக்குகிறது.

in-the-air-2010-17415-1414723604 தங்கள் பரபரப்பான வேலை நேர அட்டவணைகளிற்கு மத்தியிலும், தங்களிற்கு நேரம் கிடைக்கும் வேளைகளில் இருவரும் சந்தித்துக் கொண்டு, மகிழ்வாக அந்தத் தருணங்களை கழிக்க ஆரம்பிக்கிறார்கள்.

ரையான் பணிபுரியும் நிறுவனமானது புதிதாக நத்தாலி எனும் திறமை வாய்ந்த இளம் பெண்ணொருத்தியை பணிக்கு சேர்த்துக் கொள்கிறது. நத்தாலி, உங்கள் வேலை காலி என்பதை ஊழியர்களிடம் நேரில் சந்தித்து தெரிவிக்கும் முறையை மாற்றி, அதனை இணையத்தின் வழியாக அறிவிக்கும் ஒரு திட்டத்தை தன் நிறுவன ஊழியர்கள் முன் வைக்கிறாள்.

இத்திட்டத்தை விரும்பாத ரையான் இது குறித்து தன் பாஸிடம் உரையாடுகிறான். பாஸோ, புதிய வரவான நத்தாலி தொழிலில் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, ரையான் செய்யவிருக்கும் உங்கள் வேலை காலி அறிவிப்பு பயணத்தில் அவளையும் இணைத்து விடுகிறார். நத்தாலியுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கும் ரையான் தன் தொழில் நுணுக்கங்களை அவளிற்கு சொல்லித்தர ஆரம்பிக்கிறான்…..

in-the-air-2010-17415-857991226 தன் பணிக்காக தன்னையே அர்ப்பணித்து விட்ட, வீடு என்பதே அர்த்தமிழந்த ஒருவனிற்கு உறவுகளின் தேவை அவசியமானதா எனும் கேள்விக்கு விடை காண விழைகிறது Up In The Air எனும் திரைப்படம். தொழில் வாழ்க்கையின் வேகமான ஓட்டங்களிற்கிடையில் தற்காலிகமாக உருவாக்கிக் கொள்ளக்கூடிய கானல் உறவுகளின் எல்லைகளையும் கதை விபரிக்கிறது. இத்திரைப்படத்தின் கதை Walter Kirn எனும் அமெரிக்க எழுத்தாளரின் நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டிருக்கிறது.

உறவுகளை அண்டாது எந்தப் பொறுப்புகளுமற்ற சுதந்திர மனிதனாக வாழும் ரையான், கானல் உறவுகளில் திருப்தி காண்பவனாக இருக்கிறான். தேவையற்ற எந்தப் பாரத்தையும் அவன் தன் தோள் பைகளில் சுமக்க விரும்புவதில்லை. மாறாக அப்பாரங்களை எரித்துவிட்டு எதுவுமில்லாத ஒருவனாகவே அவன் பிறக்க விரும்புகிறான். இதனையே அவன் தான் வழங்கும் கருத்தரங்குகளிலும் போதிக்கிறான்.

ஆனால் ரையான், அலெக்ஸை சந்தித்த பின், அவளுடன் ஆடிக், குடித்து, காதல் செய்தபின்னும்கூட அவளை நோக்கி ஈர்க்கப்பட ஆரம்பிக்கிறான். அலெக்ஸோ நிஜவாழ்வையும், தொழில்முறையின் அழுத்தமிகுந்த தருணங்களை பாரமின்றிக் கழிப்பதற்காக அவள் உருவாக்கிய கானல் வாழ்க்கையையும் சிறப்பாக பிரித்துக் கையாளும் பக்குவம் கொண்டவளாக இருக்கிறாள். அவளிற்கு தன் குடும்பம் முக்கியம். அதே வேளையில் சந்திக் காதல்களையும் அவள் வரவேற்கிறாள்.

அலெக்ஸிற்கு இது குறித்த எந்த மனக்கிலேசமும் இருப்பதில்லை. ஒரு முதிர்ச்சியடைந்த பெண்ணாகவே அவள் நடவடிக்கைகள் இருக்கின்றன. தான் உரையாற்றப் போகும் கருத்தரங்கையே அலெக்ஸிற்காக உதறித்தள்ளி விட்டு அவள் வீட்டைத் தேடி வரும் ரையானின் முகத்தில் தன் வீட்டின் கதவுகளை மூடுவதில் அவள் தயக்கம் காட்டுவதில்லை. மறு நாள் ரையானை தொலைபேசியில் அழைத்து நீ விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளலாம் என்று எந்த தயக்கமுமின்றிச் சொல்லும் ஒரு குடும்பத்தலைவி அவள்.

up-in-the-air-2010-17415-1864088282 முகத்தில் கதவு மூடப்பட்ட ரையானும் கண்ணியமாக, ஒரு விஸ்கி குவளையுடனும், தனிமையுடனும் மெளனமாகத் தன் ஏமாற்றத்தையும் வேதனையும் விழுங்கிக் கொள்ளத் தெரிந்தவனாகவேயிருக்கிறான். அவன் விரும்பி ஏற்படுத்திக் கொள்ள விழைந்த உறவொன்றின் மரணம் அவனைச் சாய்த்து விடவில்லை.

ரையானுடன் தொழில் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள வரும் நத்தாலி புதிய தலைமுறையைச் சேர்ந்த இளம் பெண்ணாக இருப்பினும், குடும்பம், கணவன். குழந்தைகள் எனும் கனவு அவளிற்கு இருக்கிறது. இவை பற்றி சற்றுச் சிந்தித்தும் பார்க்காத ரையான் குறித்து அவள் ஆச்சர்யம் கொள்கிறாள்.

தன் காதலனிற்காக தனக்கிருக்கும் சிறப்பான வாய்ப்புக்களை தவிர்த்து அவனைத் தொடர்ந்து வந்தவள் நத்தாலி. அந்தக் காதலன் அவளை விட்டு தான் பிரிந்து செல்வதை குறுஞ்செய்தியாக அனுப்பும் போது அவள் உடைந்து போகிறாள். ஆனால் தொடரும் வாழ்க்கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள்.

நத்தாலி, வேலை நீக்க தகவலை வழங்கிய ஒரு பெண் அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வதை அறியும் அவள் தன் வேலையை ராஜினாமா செய்கிறாள். ரையான் பணிபுரியும் நிறுவனம் நத்தாலி முன்மொழிந்த திட்டத்தைக் கிடப்பில் போடுகிறது. ரையான் மீண்டும் வானத்தில் அதிக காலம் வாழ இனி எந்தத் தடையுமில்லை..

அலெக்ஸ் அளித்த ஏமாற்றத்தை தாண்டி, நத்தாலியை புதிய நிறுவனம் ஒன்றிற்கு பரிந்துரைத்து கடிதம் எழுதுகிறான் ரையான். சமீபத்தில் திருமணம் முடிந்த, வசதிகள் அதிகமற்ற தன் தங்கைக்கு தான் விமானத்தில் வாழ்ந்த தூரங்கள் மூலம் ஒரு சுற்றுப் பயணத்தை ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறான். மேகங்களால் செய்த இதயம் கொண்ட மனிதன் அவன்.

திரைப்படத்தில் ரையானாக வருபவர் ஜார்ஜ் க்ளூனி. பின்னியிருக்கிறார் என்பதற்கு சரியான அர்த்தத்தை இப்படத்தில் அவரின் நடிப்பை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அவரின் கவர்ந்திழுக்கும் உடல் மொழியை ரசிக்காமல் இருப்பதென்பது அசாத்தியமானது. அலெக்ஸ் வீட்டிற்கு அவர் வந்து செல்லும் அந்தத் தருணத்தில் அவர் வழங்கும் நடிப்பு அற்புதமானது.

up-in-the-air-2010-17415-963862436 அலெக்ஸ் பாத்திரத்தில் Vera Farmiga, அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பு. ரையானை விட பார்வையாளர்களை அதிகம் அதிர்ச்சி அடைய வைக்கும் பாத்திரத்தை அமைதியாகச் செய்திருக்கிறார்.

நத்தாலியாக Anna Hendrick, தனது காதலன் தன்னை விட்டு பிரிந்து விட்டான் என்பதை அறிந்து ஹோட்டல் வரவேற்புப் பகுதியில் கதறி அழுவதும், அன்றிரவே இன்னொரு பையனுடன் சேர்ந்து நடனமாடிவிட்டு, அவனுடன் இரவைக் கழிப்பதும், தன் பணியில் உறுதியாக நிற்பதும் என புதிய தலை முறைப் பாத்திரம் இவரிற்கு நன்கு பொருந்தியிருக்கிறது.

படத்தில் வரும் வேலையிழக்கும் ஊழியர்கள் வழங்கும் உணர்வு குறிப்பிடத்தக்கது. திரைப்படத்தின் முடிவில் அவர்கள் வழங்கும் சாட்சியங்கள் அவதானிக்கப்பட வேண்டியவை.

நகைச்சுவை, மென்சோகம், நவீன வாழ்க்கை முறையின் அவலம் என அட்டகாசமாக படத்தை வழங்கியிருக்கிறார் இயக்குனர் Jason Reitman. ஹாலிவூட்டின் நம்பிக்கை தரும் இயக்குனர்கள் பட்டியலில் அவரிற்கு இனி ஒரு இடம் இருக்கும். படத்தில் ரையான் பாத்திரம் சொல்வதாக வரும் இறுதி வரிகள் தனிமையையே கலங்க வைக்கும் தன்மை கொண்டவை.

ரையானின் பயணங்கள் தொடர்கின்றன. வானில் தெரியும் நட்சத்திரங்களிற்கும் ரையானிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது தனிமை. [****]

ட்ரெயிலர்

12 comments:

  1. அன்பு நண்பரே

    தலையில் நரையுடன் இவ்வளவு கவர்ச்சியான கதாநாயகனை பார்க்க முடியுமா? உடல் மொழி, முகபாவங்கள் குரல் என க்ளூனி பின்னியெடுத்திருக்கிறார். படத்தில் அவரின் சின்ன சின்ன மேனரிஸங்கள் (உதாரணதிற்கு அவரை வயசானவன் என நதாலி சொல்லும்போது கண்ணாடியை பார்க்கும் பார்வை இதையே ஓஷன் ட்வெல்விலும் செய்வார்). படத்தின் நறுக்கு தெறிக்கும் வசனங்கள், பின்னணி இசை என கச்சிதமாக வந்திருக்கும் படம். நல்ல விமர்சனம்.

    க்ளுனியின் புகைப்படத்தை பெரிதாக போடாமைக்கு என் கண்டனத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  2. காதலரே . . . மிக நல்ல விமர்சனம். மனித வாழ்க்கையின் நிலையாமையைப் பற்றியும் உறவுகளின் இன்றியமையாத தன்மையான நீங்குதலைப் பற்றியும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இப்படத்தைப் பற்றி முன்னமே கேள்விப்பட்டிருக்கிறேன். நான் பார்க்க விரும்பும் படங்களில் இதுவும் உண்டு.

    ReplyDelete
  3. நல்ல நடையில் அழகாக எழுதியுள்ளீர்கள் நண்பா. எனக்கும் படம் பிடித்திருந்தது.

    ReplyDelete
  4. //////வசதிகள் அதிகமற்ற தன் தங்கைக்கு தான் விமானத்தில் வாழ்ந்த தூரங்கள் மூலம் ஒரு சுற்றுப் பயணத்தை ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறான். ////

    அது தங்கையின் பெண்!!!

    எனக்கும் இப்படி எழுதணும்னுதான் ஆசை!! சட்டியில் இருந்தாதானே அகப்பையில் வரும்.. இல்லீங்களா??!!! :)

    ரொம்ப பிடிச்சிருந்தது.. உங்க வார்த்தை கோர்ப்புகள்.

    ReplyDelete
  5. ஜோஸ், //தலையில் நரையுடன் இவ்வளவு கவர்ச்சியான கதாநாயகனை பார்க்க முடியுமா?// இது எனக்கு விடப்பட்ட ஒரு சவால் ;)) ஆம் க்ளுனி படத்தில் செய்வது எல்லாம் சிறப்பாகவே இருக்கின்றன. மிகவும் இயல்பாக அவற்றை அவரால் எப்படி செய்ய முடிகிறது என்பதே வியப்பு அளிக்கிறது. படத்தின் வசனங்கள் மிக அருமையாக இருக்கும். அதிலும் கடைசி வரிகள் எவ்வளவு வலியைத்தருகின்றன. ரஃபிக் மிரட்டியதாலேயே க்ளுனியின் படங்களை பெரிதாகப் போடவில்லை. உங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் கருந்தேள், அரிய வகைப் படங்களில் இது ஒன்று. பார்த்து விட்டு உங்கள் வரிகளில் கொண்டு வாருங்கள். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் சரவணக்குமார்,படம் உங்களிற்குப் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி. உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும், ஊக்கம் தரும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    நண்பர் பாலா, அது ரையானின் தங்கைதான் தங்கையின் பெண் அல்ல!! உங்கள் சட்டியில் நிறைய இருக்கிறது, உங்கள் பாணியில் நீங்கள் ஒரு கில்லாடி. உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  6. காதலரே,
    நானும் பாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஜார்ஜ் க்ளூனியை Ocean Elevan series படங்களிலே மிகவும் பிடித்தது. பார்த்து விட வேண்டியது தான்.

    அன்புடன்,
    லக்கி லிமட்
    ப்ளாக்கரில் wizom redirect பிரச்சனைக்கு தீர்வு

    ReplyDelete
  7. ஒரு விடயம் காதலரே,
    ஆங்கில மற்றும் பிறமொழி காமிக்ஸ்களை அறிமுகம் செய்து வைத்துகொண்டு இருந்தீர்கள்.தற்போது நிறுத்தி விட்டீர்கள். அவ்வபோது அதையும் பதிவிடுங்களேன்.

    ReplyDelete
  8. மிக அருமையான படம் இது. முதன் முறையாக விமரிசன்னிதிக்கு முன் பார்த்துவிட்டேன்....

    வேலை நீக்கம் செய்யவும் ஒரு கம்பெனிய?

    நம்ம ஊருலயும் இது மாதிரி கம்பெனி இருக்க?

    நம்ம ஊருக்கு இது தேவை படாது.. நம்ம மேனேஜர்கள் இதைப்பாருத்துக்கொள்வார்கள்..... சரிதனே?

    ReplyDelete
  9. நண்பர் லிமட், கண்டிப்பாக பாருங்கள் நல்லதொரு படம். காமிக்ஸ் பதிவுகள் முன்பைப்போல் அதிகளவில் இல்லை என்பது உண்மை. ஆனால் காமிக்ஸ் பதிவுகளை நான் முழுமையாக இன்னமும் நிறுத்தி விடவில்லை. காமிக்ஸ் பதிவுகள் வரும். உங்கள் அக்கறையான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் ரமேஷ், நீங்கள் கூறுவது உண்மையே மானேஜர் என்றால் சும்மாவா!! நீங்கள் படத்தை ரசித்திருப்பது உங்கள் சிறந்த ரசனைக்கு சான்று. கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  10. நண்பரே
    என்ன சொல்ல... அருமையான படம் அற்புதமான விமர்சனம். படம் முடித்த பிறகு ரையானின் தனிமை நம் நினைவெங்கும்
    வியாபித்திருக்கிறது. உங்களின் இறுதி வரி அதை உறுதி செய்கிறது

    ReplyDelete
  11. தங்களது மொழி நடை மிகவும் நேர்த்தியாகவும் சுவையாகவும் உள்ளது. இதுவே கேள்விப்படாத படம் பற்றிய பதிவென்றாலும் முழுவதும் படிக்க வைக்கிறது.
    ஒவ்வொரு பட விமர்சினத்தின் போதும் இந்தியாவில் இந்த படத்தை பார்க்கும் வழியினை கூறினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  12. நண்பர் வேல்கண்ணன், நீங்கள் சொல்வது உண்மையே. உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிவ், தரமான டிவிடியில் பார்ப்பதே சிறந்தது என்று எண்ணுகிறேன். தமிழகத்தில் சிறப்பான டிவிடி கிளப்புகள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறேன், முயன்று பாருங்கள். அப்படி இல்லையெனில் தரவிறக்கம் ஒன்றுதான் வழி. உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete