Thursday, March 12, 2009

ஓடு நண்பனே ஓடு

வணக்கம் அன்பு நண்பர்களே, கடந்த பதிவுகளிற்கான உங்கள் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் கனிவான கருத்துக்களிற்கான என் பதில்களை அப்பதிவுகளின் கருத்துப்பெட்டியில் நீங்கள் காணலாம். இலை துளிர் காலத்தின் அழகான சூரியன் வருவதும் போவதுமாக போக்குக் காட்டுகிறது. மென் மழை பிடிவாதமாக போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது, அழகான நாட்களின் நிச்சயம், அழகிகளின் அணிவகுப்பின் நிச்சயம் என்பதனை மனதில் கொண்டு உவகையுடன் காமிக்ஸ் வலைப்பூ வலத்தை ஆரம்பிக்கலாம்.
உழைப்பு, அர்ப்பணிப்பு, சிறிது தியாகம், எல்லாவற்றிற்கும் மேலாக காமிக்ஸ்களின் மேல் கொண்ட காதல். தன் 50 வது பதிவை இட்டு என் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பெற்றுக் கொள்பவர் அருமை நண்பர் ரஃபிக். உயிரைத்தேடி எனும் சிறுவர் மலரில் இடம்பெற்ற காமிக்ஸ் தொடர் பற்றி அருமையாக பதிவிட்டுள்ளார். அதே சமயம் அழகியைத்தேடி எனும் கலக்கல் பதிவையும் ராணிகாமிக்ஸ் வலைப்பூவில் இட்டு பாராட்டுக்களை இன்னும் கூடுதலாக அள்ளிக் கொள்கிறார். தொடருங்கள் ரஃபிக் உங்கள் சிறப்பான முயற்சிகளை.இப்பதிவின் தலைப்பு உங்களிற்கும் பொருந்தும்.
இளைய தளபதி, இளம் கிள்ளைகளின் மனதின் அதிபதி, நண்பர் விஸ்வா, டேவிட் குரொகெட் எனும் வரலாற்றுப் பாத்திரத்தினை மையமாகக் கொண்டு வெளிவந்த பூனைத்தீவு எனும் கதைபற்றிய சிறப்பான பதிவை இட்டுள்ளார். அல்லக்கை கும்பல் ஒன்று தங்கள் அன்பை சொல்லி ஆட்டோகிராஃப் வாங்குவதற்காக அவரைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
நண்பர் புருனோ, பயங்கரப்புயல் எனும் காப்டன் பிரின்ஸ் கதைபற்றி சுவையான பதிவிட்டுள்ளார்.
புதிய வரவு. ஆச்சர்ய நிகழ்வு. அன்பர் புலா சுலாகி. இந்திரஜால் கதைகளை முழுமையாக வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறார். உங்களை அன்புடன் வரவேற்கிறேன். தொடருங்கள் உங்கள் அதிரடியை.
காகொககூ அன்பர், ஸ்பைடரின் சிறுகதை ஒன்றினை பதிவாகத் தந்துள்ளார். பாராட்டுக்கள் அன்பரே.
சித்திரக்கதை சிவ் அவர்கள் ஒர் புதிய முயற்சியாக ரஷ்யப் புரட்சி வரலாறு எனும் சித்திர நூல் பற்றி பதிவிட்டுள்ளார். அவரின் புதிய முயற்சிக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி இரு கிளாசிக் கதாநாயகர்கள் கலக்கி எடுக்கும் ஒர் மென்மையான சாகசக் கதை பற்றிய பதிவிற்குள் நுழைவோம்.

1954 லண்டன் நகரம், ஜூன் மாதத்தின் ஒர் அழகான நாள். MI5 ஆல் கைது செய்யப்பட்ட உளவாளி ஒருவனால் , இங்கிலாந்தில் மறைவாக ஊடுருவியுள்ள அயல்நாட்டு ஒற்றர் படையொன்றின் இருப்பு தெரியவருகிறது. ஸ்காட்லாண்ட் யார்ட் அலுவலகத்தில் இடம்பெறும் உயர்மட்ட அதிகாரிகளின் அவசரக்கூட்டத்தில் MI5ன் எதிர் உளவுத்துறை தலைவர் பிரான்சிஸ் ப்ளேக் (FRANCIS BLAKE), தங்கள் மத்தியில் எதிரிகளிற்கு ரகசிய தகவல்களை கொடுக்கும் ஒர் நபர் இருக்கலாம் என தன் சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார். அந்நிய உளவாளிகளின் கூட்டத்தை உடனடியாக கண்டுபிடிக்கும் படி கண்டிப்பான உத்தரவை உள்துறை துணைச்செயலர் இடுகிறார்.

அன்று மாலை, செண்டொர் கிளப்பில்(CENTAUR CLUB) தன் நண்பரும், விஞ்ஞான பேராசிரியருமான பிலிப் மார்டிமரை (PHILIP MORTIMER) சந்திக்கிறார் ப்ளேக். விஞ்ஞானிகளின் ஒன்றுகூடல் ஒன்றிற்காக ஸ்காட்லாண்டின் மலைப்பிரதேசத்திலுள்ள ஒர் கோட்டைக்கு தான் செல்லப்போவதை நண்பரிற்கு சொல்கிறார் மார்டிமர்.கைது செய்யப்பட்ட உளவாளி ஜெனிங்க்ஸ் (JENNINGS) கடினமான விசாரணையின் பின்னும் தன் சகாக்களை காட்டிக் கொடுக்க மறுத்து விடுகிறான். இதேவேளை ஜெனிங்ஸ் கைது செய்யப்பட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்ட காமெரா மூலம் எடுக்கப்பட்ட படங்களை பார்வையிடும் உயர் அதிகாரிகள், சிலையொன்றின் பீட விரிசலில் கடித்ததை செருகும் உருவம் சாட்சாத் ப்ளேக்தான் என அறிந்து அதிர்ச்சியடைகிறார்கள். அதிகாரிகளிடம் சரணடைய மறுக்கும் ப்ளேக், கைதி ஜெனிங்ஸ் உடன் தப்பி ஒடுகிறார்.
பணி புரியும் இடத்திலிருந்து விசாரணைக்காக தன் இல்லத்திற்கு பொலிசாரால் அழைத்துவரப்படும் மார்டிமர், தகவலை அறிந்ததும் இடிந்து போகிறார். தன் நண்பன் ப்ளேக் துரோகி இல்லையென வாதிடும் அவரிடம், ப்ளேக்கை உயிருடனோ அல்லது பிணமாகவோ கைப்பற்றுவோம் என கூறுகிறார்கள் MI5 ஏஜண்டுகள். ஆள்வேட்டை ஆரம்பமாகிறது.

தன் நண்பனை நினைத்து வருந்தும் மார்டிமர், MI5, ஏஜண்டுகளால் கலைத்துப் போடப்பட்ட தன் இல்லத்தை ஒழுங்காக்குகிறார். தற்செயலாக சிலையொன்றினுள் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒர் பொருளை கண்டுவிடும் மார்டிமர் வீட்டின் முன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பொலிசாரிற்கு தண்ணி காட்டிவிட்டு ப்ளேக்கை தேடிச்செல்கிறார்.

இதேவேளை ஜெனிங்ஸுடன் தப்பிய ப்ளேக் ஒர் தபால்காரன் உதவியுடன் டெம்பில்டன் வதிவிடத்தை வந்தடைகிறார். அங்கு அவரை வரவேற்கிறான் ப்ளேக் & மார்டிமரின் பரமவைரியான ஒர்லிக்(ORLIK). இதே சமயம் ஒர் சாகஸ ரயில் பயணத்தின் பின் சீன்பெரி (SEAN BERRY) எனும் சிறு நகரத்தை வந்தடையும் மார்டிமர், ப்ளேக்கின் உறவினர் வீட்டிற்கு செல்கிறார். அங்கு ப்ளேக்கின் ரகசியத்திட்டம் பற்றி அறிந்துகொள்ளும் அவர் தன்னை தேடி அங்கு வரும் பொலிசாரிடமிருந்து தப்பி ஸ்காட்லாண்ட் எல்லையை நோக்கி பயணிக்கிறார்.

ஒர்லிக்கின் வீட்டிற்கு தீ வைத்துவிட்டு, அவனிடம் கைதியாக இருக்கும் ஃபீல்டிங்கை காப்பாற்றிக் கொண்டு ஒடும் ப்ளேக், ஃபீல்டிங்கிடமிருந்து சில ரகசியங்களை அறிந்து கொள்கிறார். ஸ்காட்லாண்டின் மலைப்பிரதேசமான ஹைலேண்டில்( UPPER HIGH LANDS) ப்ளேக்கை கண்டுபிடிக்கிறார் மார்டிமர். மார்டிமர் கலந்துகொள்ளவிருந்த விஞ்ஞானிகளின் ஒன்றுகூடலின் பின்னணியிலுள்ள மாபெரும் சதி பற்றி அவரிற்கு விளக்குகிறார் ப்ளேக். நண்பர்கள் இருவரும் எவ்வாறு இச்சதியை முறியடித்து, உண்மையான துரோகிகளின் முகத்திரைகளை கிழிக்கிறார்கள் என்பதே மீதிக்கதை.

ப்ளேக் & மார்டிமர் ஆகிய இரு நாயகர்களும் ரின்ரின் (TINTIN) எனப்படும் பெல்ஜிய சித்திரக்கதை வார சஞ்சிகையில் 1946ல் அமரர் எட்கார் ஜாக்கோப்பால் (EDGAR P JACOBS) அறிமுகமானார்கள். இந் நாயகர்களிற்கான கதைகளை எழுதியும் ஓவியங்களை வரைந்தும் தனக்கென ஒர் மதிப்பு நிறைந்த ஆனால் யாராலும் கைப்பற்றமுடியாத இடத்தை சித்திரக்கதை உலகில் பிடித்தவர் அவர். இவரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களிற்கு நண்பர் ரஃபிக்கின் வலைப்பூவை சற்று முகர்ந்துதான் பாருங்களேன்.

ஆனால் நாங்கள் மேலே பார்த்த ''பிரான்சிஸ் ப்ளேக் விவகாரம்'' (THE FRANCIS BLAKE AFFAIR ) எனும் ஆல்பமானது 1987ல் அமரர் ஜாக்கோப் மறைந்த பின்பு வெளியான இரண்டாவது ஆல்பமாகும். எனினும் ஜாக்கோபின் பங்களிப்பு இல்லாது வெளியாகிய முதல் ஆல்பம் என்ற பெயர் இதற்குண்டு. [1990ல், ஜாக்கோப் விட்டுச் சென்ற கதையையும், சில மாதிரி சித்திரங்களையும் கொண்டு பாப் டு மூர் (BOB DE MOOR) '' புரொபசர் சட்டொவின் 3 பார்முயூலாக்கள்'' ளின் இரண்டாம் பகுதியை வரைந்தார்]

இக்கதை முதலில் டெலேராமா(TELERAMA) எனும் பிரெஞ்சு கலை விமர்சக வார இதழில் 1996ம் ஆண்டு தொடராக வெளியானது. பின் அதே ஆண்டில் ப்ளேக் & மார்டிமர் பதிப்பகத்தால்(LES EDITIONS BLAKE ET MORTIMER) ஆல்பமாகவும் வெளியாகியது. இவ்வால்பத்தின் கதையை நண்பர்களிற்கு நன்கு அறிமுகமான வான் ஹாமும் (VANHAMME), சித்திரங்களை, ஹெர்ஜே, ஜாக்கோப் போன்ற ''புருக்சல் மாஸ்டர்களின்'' சித்திரங்களின் அபிமானியான டெட் பெனுவா(TED BENOIT) எனும் பிரெஞ்சு சித்திரக்காரரும் பொறுப்பேற்றிருக்கிறார்கள். டெட் பெனுவா தன் பங்கை செவ்வனே செய்திருந்தாலும், ஜாக்கோபின் கைவண்ணமும், அவரின் சித்திரங்களில் இயல்பாக இழையோடும் நகைச்சுவை ரசத்திற்கும் ஈடு இல்லை என்பது என் தாழ்மையான கருத்தாகும்.

காப்டன் ஃப்ரான்சிஸ்ப்ளேக் ராயல் ஏர் பார்ஸில் பணியாற்றி பின் MI5ல் சேர்ந்து கொள்பவர். மாறு வேடங்கள் புனைவதில் வல்லவர். இவர் போடும் வேடங்களில் வாசகர்களையும், அவர் எதிரிகளையும் விட ஏமாறுவது அவர் நண்பரான
மார்டிமரே. பிலிப் மார்டிமர் ஒர் அணுபெளதிக விஞ்ஞானி. பெரும்பாலான கதைகளில் ப்ளேக்கைவிட முக்கியம் வாய்ந்தவராக இவர் சித்தரிக்கப்படுகிறார். இவர் ஒர் விஸ்கி பிரியர். அழுத்தங்களில் இருந்து அவர் விடுபட விரும்பும் போதெல்லாம் வெகு ஸ்டைலாக விஸ்கி பெக்குகளை அவர் உள்ளே தள்ளுவது அழகோ அழகு. இவரது முகபாவங்களை அமரர் ஜாக்கோப் வரைந்துள்ள விதம் அலாதியானது ['' மஞ்சள் Mல் '' மார்டிமர் காணாமல் போய்விடுவார் அவரை கண்டுபிடிக்கவேண்டி பொலிஸார் பிபிசி தொலைக்காட்சியில் அவரின் போட்டோ ஒன்றை காண்பிப்பார்கள் வாயில் பைப்பை கவ்விய படி மார்டிமர் உள்ள அந்த போட்டோவில் மார்டிமரின் முகபாவனையை என்னால் மறக்க முடியாது]. ஒர்லிக், இரட்டை நாயகர்களின் பரம வைரியான இவர் எப்போதும் அவர்களிடமிருந்து தப்பித்து, மீண்டும் மீண்டும் அவர்களுடன் புதிய சந்தர்பங்களில் மோதுவார். இவரிடமுள்ள கனவான் தன்மையும், மிடுக்கும் வாசகர்களை இவர் பக்கம் இழுப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம். ஜாக்கோப் , ஒர்லிக்கை தன் முகச்சாயலில் வரைந்தார் என்பதும் சுவாராஸ்யமான ஒன்று.

பிரான்சிஸ்ப்ளேக் விவகாரத்தில் முதல் முறையாக ஒர் பெண் பாத்திரம் சாகசச்
செயல்களிற்குத் துணை புரிவதாக அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜாக்கோப் எழுதிய கதைகளிலோ சாகச உலகம் ஆண்களிற்குரியதாகும். வழக்கமான விஞ்ஞானம் இணைந்த மர்மமுடிச்சும் இக்கதையில் கிடையாது. ஜாக்கோப்பின் சிறப்பம்சமான!! பக்கம் பக்கமான டயலாக்குகள் இக்கதையில் முதல் சில பக்கங்களிலேயே காணக்கிடைக்கின்றன. இக்கதை தொடர்களின் பலவீனம் யாதெனில், அதிரடியும், வன்முறையும் குறைந்த மென்மையான கதைகள் என்பதும், சில மர்ம முடிச்சுக்களை நாம் முன்கூட்டியே ஊகித்து விடக்கூடியதென்பதுமாகும். இருப்பினும் ஜாக்கோபின் நாயகர்களிற்குரிய ரசிகர்கள் இன்றும் அவரை படித்தபடி இருக்கிறார்கள்.

முத்துக்காமிக்ஸின் ரிப் கிர்பி கதைகளையும்[என்ன அற்புதமான கதைகள். விஜயன் சார் அடுத்த ரிப் கிர்பி கதை எப்போது வெளிவரும்.] அவற்றின் நிதானமான வேகத்தையும் நினைவூட்டும் ப்ளேக் & மார்டிமர் கதைகள்,கிளாசிக் ரசிகர்களிற்கு சுவையான இதமான வாசனையை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. சினி புக் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இக்கதையின் ஆங்கில பதிப்பை வெளியிட்டுள்ளது, புத்தகம் இந்தியாவில் வெளியாகி விட்டது என்பதனை நண்பர் ரஃபிக் தன் கருத்துக்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அனைத்துக் காமிக்ஸ் ரசிகர்களும் ஒரு முறையாவது படிக்கவேண்டியவை இக்கிளாசிக் வகைக் கதைகள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் ஆகும்.

-ஜாக்கோபின் கதைகளை படிக்க விரும்பும் நண்பர்கள் முதலில் மஞ்சள் எம் (YELLOW M) மை படியுங்கள்.[ப்ளேக் & மார்டிமர் தொலைக்காட்சி தொடரை பார்க்காதீர்கள் அது ஒர் கெட்ட கனவாகும்]

ஆல்பத்தின் மதிப்பீடு *****

பதிவைப் பற்றிய உங்கள் மேலான கருத்துக்கள் என்னவாயினும் அவற்றை தயங்காது பதிந்து செல்லுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆர்வலர்களிற்கு

9 comments:

 1. SUUUUUUUUUUUUPER

  ReplyDelete
 2. கனவுகளின் காதலரே,

  அருமையான ஒரு பதிவு. ஜாக்கோபின் எழுத்து நிறைந்த சித்திரங்கள் முதலில் என்னை பொறுமை இழக்க செய்தாலும், படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டும் கிளாசிக் கதைகள்தான். முதலில் படித்த மூணு ஜாக்கோபின் ப்ளேக் மார்டிமர் கதைகளை மீண்டும் படித்து விட்டு புதிய பதிவொன்றில் அவரை கௌரவிக்க எண்ணி கொண்டிருக்கிறன்.

  ப்ரான்சிஸ் மர்மத்தை இன்னும் படித்து முடிக்கவில்லை. ஆனால் ஆரம்பம் கலை கட்டி ஆரம்பித்ததை பார்த்தேன். சுவாரசியம் குறையாமல் இருக்க முழுக்க படித்து விட்டு, பிறகு உங்கள் புத்தக விமரிசனத்தை படித்து வார கடைசியில் என் கருத்துகளை பதிகிறேன்.

  கூடவே, என் வலைப்பூக்களை பற்றி உயர்வான உங்கள் கருத்தை பதிந்தற்கு மீண்டும் நன்றிகள். ப்ளேக் பதிவிற்கு சுட்டி அமைத்ததோடு சேர்த்து.

  I will be Back

  ரஃபிக் ராஜா
  காமிக்கியல்
  ராகா | டைரி

  ReplyDelete
 3. திரு கனவுகளின் காதலன் அவர்களே,

  உங்களின் பதிவால் எனக்கு ஆயிரக்கணக்கில் செலவு ஆகின்றது. உங்களின் ஒவ்வொரு பதிவை படித்து விட்டு அந்த புத்தகத்தை தேடிப் பிடித்து வாங்குவதால் தான் இப்படி. இந்த புத்தகத்தை மூன்று முறை படித்தேன். பிறகுதான் இந்த கதை ஆசிரியரின் மெதுவான பாணி எனக்கு பிடிபட ஆரம்பித்தது. பிடிக்கவும் ஆரம்பித்தது.

  அற்புதம் என்ற வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது. ஆனால் ஏன் நீங்கள் இரண்டு ஸ்டார் ரேட்டிங் மட்டும் அளித்து இருக்கிறீர்கள் என்பது இன்னமும் புரிய வில்லை. நான்கு அளிக்கலாம் என்பது என்னுடைய கருத்து. மற்ற கதைகளையும் படித்து விட்டு இன்னொருமுறை வருகிறேன்.

  இதற்கிடையில் என்னுடைய வலைப்பூவில் புஸ் சாயர் (முத்து காமிக்ஸ் சார்லி) தோன்றும் தமிழ் இந்திரஜால் காமிக்ஸ் கதை ஆகிய அறுந்த நரம்புகள் என்ற புத்தகத்தை அப்லோட் செய்து இருக்கிறேன்.

  நேரம் கிடைக்கின் படித்து மகிழவும்.

  புல சுலாகி.
  தமிழ் இந்திரஜால் காமிக்ஸ்.

  ReplyDelete
 4. வலைப்பூவிற்கு வருகை தந்து, பதிவினைப் படித்து உங்கள் மேலான கருத்துக்களை பதிந்து சென்ற சிங்கங்களிற்கு என் நன்றிகள் உரித்தாகுக. தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.

  அனானி, பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே கிடைக்கும் புகழுரைகள் விட்டமின் லேகியங்கள். உங்கள் ஒரு வார்த்தை ஒரு போத்தல் லேகியம் சாப்பிட்டதற்கு சமம்.

  ரஃபிக்,ஜாக்கோப் விரிவான தகவல்களை தன் வாசகர்களிற்கு தர வேண்டியே அதிகமான டயலாக்குகளை தன் கதைகளில் சேர்த்திருப்பார். அவரின் கதைகளின் நீளமும் சற்றுப் பெரிதே.ஆனாலும் அவர் ஒர் மன்னன் என்பதை மறுக்கவியலாது. கட்டாயமாக அவரைப் பற்றிய பதிவை இடுங்கள்,ஆல்பத்தை நிதானமாகப் படித்த பின்பு உங்கள் கருத்துக்களை பதிவீர்கள் என நம்புகிறேன்.

  புலா சுலாகி, முதலில் உங்களை செலவு செய்ய வைத்ததிற்காக மன்னிப்புகள். செலவு சற்று அதிகம் தான், ஆனால் ஏமாற்றம் அடைந்திருக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன். நீங்கள் யெல்லா எம் கதையைப் படித்து விட்டு பார்த்தீர்களேயானால் பிரான்சிஸ் பிளேக் விவகாரத்திற்கு ஏன் நான் 2 நட்சத்திரங்கள் மட்டும் தந்தேன் என்பது புரியும். இதற்கு மேல் கொடுத்தால் அமரர் ஜாக்கோபின் ஆவி என்னை சும்மா விடாது. வான் ஹாமும் ஆரம்பத்தில் பரபரக்க வைத்தாலும் இறுதியில் கொஞ்சம் சொதப்பலான கதையை உருவாக்கியிருப்பார். ஜாக்கோபின் ஓவியங்களில் ஒட்டியிருந்த அந்த இயல்பான நகைச்சுவை ரசத்தினை கதையில் காணவியலாததும் ஒர் காரணமே. மீண்டும் வாருங்கள்.

  ReplyDelete
 5. கனவுகளின் காதலனே, வணக்கம்.

  இந்த கதை ஒரு மொக்கை கதை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. தவறாக இருந்தால் மன்னிக்கவும். மஞ்சள் எம் இதனை விட சிறப்பான கதை என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் இந்த கதை மிகவும் மெதுவாக செல்வதாக என் நினைவு.

  (அடுத்த ரிப் கிர்பி கதை எப்போது வெளிவரும்?) எனக்கு தெரிந்த வரையில் ஏதாவது ஸ்பெஷல் இதழ்களில் மட்டுமோ அல்லது ஒரு தனி புத்தகத்தில் இரண்டாவது கதையாகவோ மட்டுமே வெளி வர வாய்ப்பு இருக்கிறது.

  நெடு நாட்களாக வீட்டு பணிச்சுமை காரணமாக கமெண்ட் இட இயலவில்லை. மன்னிக்கவும்.

  காமிக்ஸ் பிரியன்.

  ReplyDelete
 6. Super storey. sorry for the delay in response since i had problem in accessing internet.

  ReplyDelete
 7. ககொககூ அன்பரே, உங்கள் கருத்தை வெளிப்படையாகக் கூறுவதற்கு ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் இக்கதையை மொக்கை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. மெதுவாக செல்லும் கதைதான் ஆனால் கடைசிப் பக்கம் வரை படிக்கலாம். விறுவிறுப்பிற்கு பேர் போன வான்ஹாம் சற்று சொதப்பியிருப்பார் என்பது உண்மையே, இருப்பினும் ரசிப்பதற்கும் நல்ல தருணங்கள் உண்டு என்பது என் கருத்து. வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

  ReplyDelete
 8. டேவிட், தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு என் நன்றி. மீண்டும் வாருங்கள்.

  ReplyDelete
 9. கனவுகளின் காதலனே,

  ஓடு நண்பனே ஓடு என்று நானும் என்னுடைய பல நண்பர்களிடம் கூற ஆசை தான். ஆனால் என்ன செய்வது? ஒன்றும் செய்ய முடிய வில்லை.

  இப்போது இந்த பதிவை கவனிப்போம்: சுமார் ஐம்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களின் பின்னணியில் வந்த இந்த கதை ஒரு கோல்டன் ஒல்டி ஆகும். அந்த கால சம்பவங்கும், கதாபாத்திரங்களை எஸ்டாப்ளிஷ் செய்து நகரும் கதையும் நம்முடைய (என்னுடைய) வயது பதிவினருக்கு சற்று வித்தியாசமாக இருக்கலாம். மற்ற காமிக்ஸ் பதிவர்கள் என்னை விட வயதில் மூத்தவர்கள் என்பதால் அவர்களுக்கு இந்த கடினம் இல்லாமல் இருக்கலாம்.

  இந்த கதை அம்சத்துடன் ரிப் கெர்பி கதைகளை ஒப்பிட்டது சரியே.

  கிங் விஸ்வா.
  தமிழ் காமிக்ஸ் உலகம்

  ReplyDelete