Sunday, May 27, 2012

சாயம் போன கறுப்பு கோட்டு சூட்டு

தன் சகாவான ஏஜெண்ட் K ன் உயிரைக் காப்பாற்றவும், வேற்றுக்கிரக ஜீவன்களின் கொடுமையான ஆக்கிரமிப்பிலிருந்து இப்புண்ணிய பூமியைக் காப்பாற்றவும் விரும்பும் ஏஜெண்ட் J அதற்காக காலத்தில் பின்னோக்கி பயணிக்க வேண்டி இருக்கிறது......


ஏற்கனவே வந்த இரண்டு பாகங்களிலும் உருப்படியானது என ஒருவர் தெரிந்து எடுக்கக்கூடியது Men in Black ன் முதற் பாகமே. இரண்டாம் பாகத்தை தயாரிப்பாளர்களிடம் துட்டு வாங்கிக் கொண்டபின்பாக சிறப்பானது எனச் சொல்லிக் கொள்ளலாம். தற்போது வெள்ளித்திரைகளை தம் கறுப்பு கோட்டு சூட்டு டை வெள்ளை சட்டை கூல் கண்ணாடி சகிதம் அலங்கரிக்கும் மூன்றாம் பாகம் மரணப்படுக்கையில் கிடந்த டாமி லீ ஜான்ஸை வற்புறுத்தலாக எழுப்பி மராதன் பந்தயத்தில் ஓடவிட்ட உணர்வை அளிக்கிறது. திரைப்படத்தில் டாமி லீ ஜான்ஸிற்கு வழங்கப்பட்டிருக்கும் முக அலங்காரமானது அவர் அழகை ஆறு அடி தூரத்திற்கு ஆழப்படுத்தியிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


காலத்தில் பின்னோக்கி பயணிக்கும் ஏஜெண்டு J, 1969 களில் தன் பயணத்தை நிறுத்திக் கொள்கிறார். 1969 களில் கருப்பின மக்கள் மீது இருந்த எள்ளல் கலந்த பார்வையை திருத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கி தன் சாகசங்களை ஆரம்பிக்கும் J , அங்கு தன் சகாவான K ன் இளவடிவ பதிப்பை காண்கிறார். முதுவடிவ பதிப்பிற்கும், இளவடிவ பதிப்பிற்கும் உள்ள வித்தியாசங்களை J ரசித்து வியந்தவாறே தன் சகாவுடன் விசாரணைகளை தொடர்கிறார்... வழமை போலவே சிரிக்க இயலாத, சலிப்பூட்டும் காட்சி அமைப்புகள். அண்டி வொர்கோல் எனும் கலைஞரும் ஏஜெண்டுகளில் ஒருவர் என சிரிக்க வைக்க முயற்சித்து சீரழிவது எப்படி என இனி Barry Sonnenfield பாடம் எடுக்கலாம்.
இதுக்கு மேல நடிக்க முடியுமாலே......


டாமி லீ ஜான்ஸ் மிகவும் அயர்ச்சி அடைந்தவராக திரையில் காணப்படுகிறார். இது பாத்திரத்திற்குரிய குணாம்சமா அல்லது தொடர்ந்து தொடர்ந்து ஏஜென்ட் K ஆக கோட் சூட் அணிந்து சுற்ற வேண்டிய சலிப்பா என்பதுதான் புரியவில்லை. மனிதரிற்கு நல்ல வேளையாக திரைப்படத்தில் அதிக நேரம் அவர் திறமையைக் காட்ட வேண்டிய வாய்ப்பு தரப்படவில்லை என்பது புத்திசாலித்தனமான தீர்மானங்களில் ஒன்று. வழமையாக உற்சாகம் கொப்புளித்து ஒரு இடத்தில் நிற்க இயலாது ஓடி ஆடும் வில் ஸ்மித்திடமும் முன்பு இருந்த அந்த கவர்ச்சி இல்லை. அவரிடமிருந்த அந்த உற்சாகம் ஏதோ சில படிகள் குறைந்துவிட்ட நிலையில் அவர் காலம் விட்டு காலம் தாவித் திரிவதையே காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் ஏஜெண்டு K ன் இளவடிவ பதிப்பாக வரும் நடிகர் ஜோஸ் ப்ரொலான் அருமையான தேர்வு. திரைப்படத்தின் ஆறுதலான அம்சம் அவரே.


படத்தின் வில்லன்களில் ஒருவர் இயக்குனர் என்றால் இன்னொருவர் பொரிஸ் த அனிமல் எனும் வேற்றுக்கிரக ஜீவன். இப்படி ஒரு சப்பை வில்லனை நகைச்சுவை படங்களில் கூட காண இயலாது. ஆரம்பத்தில் அவரை அறிமுகப்படுத்தும் காட்சிகளில் இயக்குனர் உருவாக்கியிருக்கும் பில்ட் அப்பிற்கு தண்டனையாக அவரை ஏதாவது சந்திரனின் சிறையில் ஆயுளிற்கும் அடைத்து வைக்கலாம்.


1960 கள் என்றவுடன் வேற்றுக் கிரக ஜீவன்களும் அக்காலத்திற்குரிய மோஸ்தரிலேயே உலா வருவது, மம்மி பிரெசிடெண்டு, ப்ளீஸ் சொல்லாமலேயே பாலைக் குடிச்சிட்டார் போன்ற வரிகள், தலைமையக திரையில் தோன்றும் லேடி காகா என நுண்ணங்கதங்கள் இருந்தாலும்கூட திரைப்படம் தரும் சலிப்பையும் அயர்ச்சியையும் அவற்றால் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை. உச்சக்கட்டக் காட்சியில் வெளிப்படுத்தப்படும் ஒரு உண்மை மனதை நெகிழச் செய்கிறது என்பதும் உண்மையே. ஆனால் இதை எவற்றை தாண்டியும் கிராபிக்ஸோ, ஸ்டண்டுகளோ, காட்சிப் புதுமைகளோ, நகைச்சுவையோ, நடிகர் திறமையோ என எதுவும் [ ப்ரொலானை தவிர்த்து] சிறப்பான ஒரு அனுபவத்தை வழங்கத் திணறி தோல்வி காண்கின்றன என்பதும் உண்மையே. சாயம் போய் வெளுக்க ஆரம்பித்திருக்கும் இந்தக் கறுப்பு கோட்டு சூட்டை தற்காலிகமாகவாவது ஒதுக்கி வைக்க வேண்டிய தருணமிது என்பதுகூட ஒரு உண்மைதான். [*]


ட்ரெய்லர்

9 comments:

 1. காதலரே,

  கருப்பு சட்டை மச்சான்களின் சாகஸத்தை இப்படி கிழித்து தொங்கபோட்டுட்டீங்களே. படம் இரண்டாவது பாகத்தை விட சூப்பருன்னு ரசிக மக்கா முதல் விமர்சகர்கள் வரை அன்பு மழை பொழியும் போதே பொறி தட்டிற்று.. இப்போது உங்கள் விமர்சனத்தை பார்த்ததும், காசை வேஸ்டாக்க வேண்டாம்னு முடிவு பண்ணிட்டேன். டிவிடி வர வரை வெயிட் மாடி.

  ஆமா 3டி பத்தி எதுவும் சொல்லலியே... சொதப்பல்னு கேள்வி.

  டாமி லீ ஜோன்ஸ் ஏதோ கிழவர் போல தள்ளாடி தெரியிறாரு.... வில் சிமித் அவர் வழியை பின்பற்றுவது போல இருக்குது.... 15 வருடத்திற்கு பிறகு இந்த படம் தேவைதானா... அய்யோடா :)

  ReplyDelete
  Replies
  1. ரஃபிக், கண்ணாடி போட்டால்தான் காட்சிகளை கலங்கலில்லாமால் பார்க்க முடியும் என்பதற்காகவே இப்போது 3D கண்ணாடி அணிய வேண்டி இருக்கிறது.... மற்றும்படி 3 டி எஃபெக்ட்ஸ் எல்லாம் சுண்டங்காய்தான்.... HARIBO போன்ற இனிப்பு வகைகளிற்கான விளம்பரங்களை பார்த்தால் தெரிகிறது 3 டி அருமை. இதற்காக காசை வீணாக்கி விடாதீர்கள். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

   Delete
 2. வணக்கம் உறவே
  உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
  http://www.valaiyakam.com/

  முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

  5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

  ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
  நன்றி

  வலையகம்

  ReplyDelete
 3. அன்பு நண்பரே,

  இந்த முறை நானும் இத்திரைப்படத்தை பார்த்து விட்டேன். ஜோஷ் தன் முகபாவங்களில் நவரசம் (?) காட்டுகிறார். அன்டி வார்ஹோல் இருக்கும் பார்ட்டியில், சக கறுப்பினத்தவரை பார்த்து வில் ஸ்மித் ஒரு சைகை காட்டி போவார், அதே போல் கறுப்பாய் இருப்பவன் கார் ஒட்டினால் திருடியதாக தான் இருக்க வேண்டுமா என கேட்டு, ஆனால் இது திருடியதுதான் என விளக்கம் கொடுப்பார், லெடி காகா. என சின்ன சின்ன இடங்களில் யோசித்த இயக்குநர் போரிஸ் என்ற வில்லன் படைப்பினை பற்றிய எண்ணத்தில் ஒரு நிலா அளவிற்கு பெருந்தூளையை கதையில் நுழைத்து விட்டார்.

  முதல் பாகத்தில் ஒரு ஈ(?)யை பின்தொடர்ந்து போகும் காட்சிகளுடன் ஆரம்பித்த அளவிற்கு யோசித்த இயக்குநர், ஒரு கட்டத்தில் யோசிப்பதை நிறுத்தி விட்டார். அமெரிக்க இயக்குநர்களிடம் உள்ள முக்கிய குறை இதுதான். முதல் படத்தில் மிகச் சிறப்பான முறையில், உழைத்து அடுத்தடுத்த படங்களில் சொதப்புவதையே வேலையாக கொண்டுள்ளனர். ஸ்பீல்பெர்க்கும் இதற்கு விலக்கில்லை.

  பெண் கதாபாத்திரங்கள் இப்படத்தில் குறைந்த ஆடையில் இல்லாதது கூட தங்களின் கடுமையான வெறுப்பிற்கு காரணமாக இருக்கலாம். நியாயமாக, இப்படத்திற்கு விண்வெளியில் உள்ள எதையுமே (நட்சத்திரம், நிலா) எதையுமே கொடுக்கக் கூடாது.

  ReplyDelete
  Replies
  1. அன்பு நண்பரே,

   இந்த திரைப்படத்தை பற்றி ஒரிரு வரிகள் அனுப்பியிருந்தால் நான் தப்பித்துக் கொண்டிருப்பேன். ஆரம்பக் காட்சியில் அம்மணி அழகான ஒரு ரோஸ் வண்ணக் கேக்கை தூக்கி வரும்போது நான் கேக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள் :) நடிகர்களில் ஜோஸ் பரவாயில்லை ஆனால் அவர் என்ன செய்வார் டாமியின் இளவடிவம் அல்லவா அவர்:) மேலும் பிரதானமாக ஒரு கவர்ச்சிக் கன்னியை படத்தில் ஓட விடாததும் என் அறச்சீற்றத்திற்கு காரணமே.... கொடுத்த நட்சத்திரத்தையும் பறித்தால் போயிற்று. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

   Delete
 4. விமர்சனம் நல்லா இருந்தது. ஆனா படம் நல்லா இல்ல போல தெரியுதே.

  ReplyDelete
  Replies
  1. சவுந்தர், பொடிநடையாப் போய் இதையும் பார்த்திட்டு வந்திடுங்க....:))

   Delete
 5. என்ன காதலரே இப்படி பொசுக்குன்னு போட்டு தள்ளிட்டீங்க
  இந்த படத்த பாக்கலாம்னு இருந்தேன்

  ஹ்ம்மம்ம்ம்ம் நன்றி காதலரே ............ காப்பாத்தினதுக்கு ;-)
  .

  ReplyDelete
 6. Saw the movie. Lazy acting, inconsistent screenplay, poor direction... The list goes on. The most pathetic thing than the villain is Will Smith trying to "act". This is the most boring performance I've seen of him. He looks tired just as everyone else in the movie. A terrible film with gaping plot holes.

  ReplyDelete