Friday, June 1, 2012

தீராக்காயச் சித்திரங்கள்


ஒர்க்கா திமிலங்களைக் கொண்டு கேளிக்கை காட்சிகளை நடாத்தி வரும் ஸ்டெஃபானிக்கு இரவு விடுதி ஒன்றில் நிகழும் ஒரு அசம்பாவிதத்தின் வழியாக அலி என்பவனின் அறிமுகம் கிடைக்கிறது. சிறிது காலத்தின் பின்பாக கேளிக்கை காட்சி ஒன்றின்போது ஏற்படும் விபத்தில் தன் இரு கால்களையும் இழந்து தனியாக வாழ்ந்து வரும் ஸ்டெஃபானியுடன் தனது ஒய்வு நேரங்களை கழிக்க ஆரம்பிக்கிறான் அலி…..

அலி, அவன் மனைவியை விட்டுப் பிரிந்து தன் மகன் சகிதம் தன் சகோதரியின் வீட்டுப் பட்டறையில் தங்கிக் கொள்பவன். அலி எப்படிப்பட்ட ஒரு மனிதன் என்பதனையும் அவன் சகோதரியான ஆனாவின் குடும்ப மற்றும் தொழில் நிலைமையையும், அவற்றுடன் எவ்விதமாக தன்னை அலி இருத்திக் கொள்கிறான் என்பதையுமே தன் புதிய திரைப்படமான De Rouille Et D’Os ன் ஆரம்ப பக்கங்களில் எழுதுகிறார் இயக்குனர் Jacques Audiard. கனடாவை சேர்ந்த எழுத்தாளரான Craig Davidson எழுதிய Rust and Bone எனும் படைப்பை தழுவியே இத்திரைப்படமானது உருவாக்கப்பட்டிருக்கிறது.

தன் வாழ்க்கையில் இலட்சியம் என எதையுமே கொண்டிராத அலி, காவல் வேலை மற்றும் பந்தய பணத்திற்காக நிகழும் தெருச்சண்டைகள் போன்றவற்றில் ஈடுபட்டு தன் வாழ்க்கையை நகர்த்துபவன். இங்கிதம் என்பது அவனிற்கு புரியாத ஒரு விடயமாகவே இருக்கிறது. கொடும் விலங்குகள் நிறைந்த காட்டில் இரைதேடும் ஒரு விலங்கின் குணத்துடன் அவன் தன் வாழ்நாட்களை முன்கொண்டு செல்கிறான். உறவு, பாசம், கருணை, போன்றவை குறித்த அவன் உணர்வுகள் சாதாரண நிலையிலிருந்து தொலைவில் நிற்பவையாக அவனிடம் அமைந்திருக்கின்றன. பணத்தை தேடிக் கொள்வதற்காக அவன் எந்த வகையான வேலைகளிலும் இறங்கிவிடக் கூடியவன்தான் இருப்பினும் அவனிற்கென அவன் வகுத்துக் கொண்ட சுதந்திரத்திற்கு இடையூறாக யாரும் இருப்பதையும் அவன் விரும்புவதில்லை. பணத்தைக் கொடுப்பதுடன் தன் கடமைகள் யாவும் முடிந்து விடுகின்றன எனும் மனநிலை அவனிடம் உண்டு. தன் மகனைப் பராமரிப்பதுகூட அவனிற்கு சிரமமான ஒரு செயலாகவே இருக்கிறது. ஒரு சிறுவனுடன் பழகும் நுட்பம் அலியிடம் கிடையாது. அவனிடம் இயல்பாகவே ஒட்டி இருக்கும் ரவுத்திரம் திடீரெனப் பொங்கும் ஒரு வன்முறை எரிமலையாக அவனை மாற்றியடிக்க கூடிய தன்மையைக் கொண்டது. பெண்கள் குறித்து அவன் அதிக மதிப்புக்களை கொண்டிருப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பெண்கள் உடலை சுகிக்க தயங்காதவனாகவே அவன் இருக்கிறான். அவன் உள்ளிருக்கும் வன்முறை சுகித்தலின்போது பெண்ணுடலில் தன் வன்கவிதைகளை எழுதிக் கொண்டே சென்று மறைகிறது. புதிய உறவுகளை உருவாக்கி கொள்ளும் விருப்பம் அவனிடம் இருப்பதில்லை. தன் உறவுகளையும் எளிதான சில அம்சங்களாகவே அவன் சில கணங்களில் கருதிச் செல்கிறான்…..

இவ்வாறாகவே தன் புதிய படைப்பின் முக்கிய பாத்திரங்களில் ஒன்றான அலியை இயக்குனர் ஜாக் ஒடியார், அவனிற்குள் வாழ்ந்திருக்கும் அனைத்து இயல்புகளுடனும், குணாதிசயங்களுடனும் தனக்கேயுரிய அதிரவைக்கும் நேர்மையுடன் திரைப்படுத்துகிறார். அலி எனும் பாத்திரத்தின்மீது பார்வையாளன் கொண்டிருக்க வேண்டிய உணர்வை மிகச்சரியாக கொணர்வதற்கு அவர் இயக்கம் தயக்கம் காட்டுவதேயில்லை. தன் படைப்பின் இறுதிக் காட்சிகள்வரை அலியுடன் பார்வையாளன் உணர்வுபூர்வமாக ஒன்றிக் கொள்வதை திறமையாகத் தடுத்தபடியே அலியின் வாழ்வை எதார்த்தத்தின் துடிப்புடன் எடுத்துவர விழைகிறார் ஜாக் ஒடியார். எவ்வாறு முரட்டுக் குணம் கொண்ட ஒரு மனிதனை நாம் விலகியபடியே தாண்டிச் செல்வோமோ, அந்த விலகலின் பாதுகாப்பான தூரத்தில் பார்வையாளனை எச்சரிக்கையுடன் நிறுத்தி வைக்கிறது ஒடியாரின் திறமை.

ஸ்டெஃபானியுடன் அலி அறிமுகமாகிக் கொள்வது ஒரு மோதலின் வழியாகவே. அலியுடன் அவள் அறிமுகமாகிக் கொள்ளும் அந்த முதல் இரவிலேயே ஸ்டெஃபானியின் இயல்பை தெளிவான வரியாக வரைகிறார் ஒடியார். தன்னுடன் வாழ்ந்திருக்கும் ஆணுடன் அலியை நேரிற்கு நேர் சந்திக்க செய்து அவர்கள் ஆண்மையினால் அவர்களிற்கிடையே சவால் விட வைக்கும் தருணங்களை உருவாக்கி, தன் துணை காணும் தோல்வியில் அவனைச் சற்று பரிகசித்து மகிழும் ஸ்டெஃபானிக்கு தன் துணைவனுடான வாழ்க்கை திருப்தியான ஒன்றாக இல்லை. ஒர்க்கா திமிங்கல கேளிக்கை காட்சி விபத்தின் பின்னாக தனித்து விடப்படும் ஸ்டெஃபானி தன் வெறுமையின் வெளியில் நீட்டிய ஒரு கரமாக தொலைபேசியில் அலியை அழைக்கிறாள். அந்த கணத்திலிருந்து ஆரம்பமாகிறது சாத்தியமேயில்லாத ஒரு உறவின் பிறப்பு.

இரு கால்களையுமே இழந்து வாழும் பெண்னொருத்தியின் விரக்தி, வெறுமை, சலிப்பு போன்றவற்றை தன் கருணையான இயல்பால் மனிதர்கள் இல்லாதாக்குவதை நாம் வழமையான கதைகளில் கண்டிருக்கிறோம். ஆனால் அலி இங்கு ஸ்டெஃபானி மேல் கருணை கொண்டவனாக இருப்பதில்லை. ஒரு சிறு தொகைப் பணத்தை வெல்வதற்காக தன் உடலை சகல வழிகளிலும் சிதைக்க தயங்காத ஒரு மனிதனிற்கு முடம் என்பது இன்னுமொரு காயமே. அதில் இரக்கம் கொள்ள அவனிடம் காரணங்கள் ஏதுமில்லை. தன் இயல்புகள் ஏதிலுமிருந்து விடுபடாமலேயே ஸ்டெஃபானியுடன் தன் பொழுதை கழிக்க ஆரம்பிக்கிறான் அலி. இவர்கள் இருவரிற்குமிடையில் இருக்கும் உறவு என்ன என்பது குறித்த கேள்வியை எழுப்பாமலேயே அவர்கள் கணங்கள் கழிகின்றன. அவனது முரட்டு இயல்பு அவள் வெறுமையை நிரப்ப முயல்கிறது. ஸ்டெஃபானியின் உடல் இச்சைகளை அலி தீர்த்து வைக்கத் தயங்குவதில்லை. அலியை பொறுத்த வரையில் தனக்கு நேரம் இருக்கும் போதெல்லாம் ஸ்டெஃபானியின் உடல் இச்சையை தீர்த்து வைப்பது என்பது அவளுடன் உலாச் செல்வது போல ஒரு செயல்தான், அதைத் தாண்டி அவன் அதற்கு அர்த்தங்களை சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால் இது குறித்த ஸ்டெஃபானியின் நிலைப்பாடு அப்படியானது அல்ல. அவள் உடல் முடமான ஒன்றான போதும் அவள் தன் உறவுகளை முடமான ஒன்றாக்குவதிலிருந்து விலகி வருகிறாள். அவளைப் பொறுத்த வரையில் உறவு என்பதன் அர்த்தம் புரியாத, புரிந்து கொள்ள விழையாத ஒருவனுடன் தொடர்ந்தும் தன் உடலை பகிர்ந்து கொள்ள அவள் தயாராக இல்லை. தன் உடலை ஒரு உறவின் பகிர்தலாகவே காணும் இயல்பைக் கொண்டவள் ஸ்டெஃபானி. இது அலிக்கும் அவளிற்கும் இடையில் ஒரு சிறு விரிசலை உருவாக்க ஆரம்பிக்கிறது.
um7WT


கால்கள் முடமான ஒரு பெண்ணைப் பார்த்து கண்களை கலங்க செய்யும் கதை வழக்கை இங்கு தவிர்க்க முயலும் ஒடியார், தன் ஊனத்துடன் தனித்த நிலையில் வாழ்க்கையோடு பொருதத் துடிக்கும் ஒரு பெண்ணாகவே ஸ்டெஃபானியை திரைப்படுத்துகிறார். இருப்பினும் கால்கள் இரண்டையும் இழந்த பெண் ஒருத்தியின் சங்கடங்களை அவர் திரையில் காட்டுவதிலிருந்து விலகி நிற்கவில்லை. கேளிக்கை காட்சியில் திமிங்கலங்களை தன் கை அசைவிற்கேற்ப அசைய வைப்பது போல அவள் அலியையும் தன் மனதின் அசைவுகளிற்கேற்ப அசைய வைக்க விரும்புகிறாள். ஆனால் அலி அவளிடமிருந்து நழுவிச் செல்பவனாகவே இருக்கிறான். முடமான பெண்ணின் நாட்களின் அசைவை மிகை உணர்வுகள் எதுமின்றி இங்கு காட்சிப்படுத்துகிறார் ஒடியார். இங்கு உரையாடல்களில் உறைந்திருக்கும் எதார்த்தம்தான் மனதை கனக்க செய்கிறது. இவ்வகையான பூச்சலங்காரமற்ற பச்சையான உரையாடல்களில் மிளிரும் நேர்மையை அது பறைசாற்றுகிறது. படிப்படியாக அலியின் வாழ்வில் அவன் உணர்ந்துகொள்ளா விதத்திலேயே ஒரு காயம் போல் தோற்றம் கொள்ள ஆரம்பிக்கிறாள் ஸ்டெஃபானி. ஆனால் அலி அது குறித்து அறியாத ஒருவனாகவே ஆரம்பத்தில் இருக்கிறான்.

தன் சகோதரி ஆனாவின் வேலை பறிபோகக் காரணமாக அமைவதும் அவனே தான் என்பதையும் அலி அறியாதவனாகவே இருக்கிறான். இங்கு ஒடியார், பெரும் பல்பொருள் அங்காடிகளின் நிர்வாக அதிகாரிகளின் கயமைத்தனத்தையும் அதற்கு துணைபோபவர்களையும் இதன் வழியாக தம் வாழ்க்கையின் அடுத்த நாளை கேள்விக் குறியாக்கி அழும் மனிதர்களையும் காட்சிப்படுத்துகிறார். குப்பையில் எடுத்து வீசப்பட வேண்டிய பொருட்களை தம் வீடு கொண்டு சென்றதற்காக கட்டாயப் பணிநீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களின் அவல நிலையையும், அவர்கள் பணியிடத்தில் மறைமுகமாக வேவு பார்க்கப்படும் விதத்தையும் சமூக அக்கறையோடு கதையில் சேர்க்கிறார் ஒடியார். சமூகத்தின் இந்தக் காயத்தை அவர் கதையில் கையாண்டிருக்கும் விதம் சற்று வீர்யம் குறைந்த ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் திரைக்கதையில் பெரும் திருப்பத்தை கொண்டுவரும் ஒரு காயமாகவே ஒடியார் இதைக் கையாண்டிருக்கிறார்.

மிக உணர்சிகரமாக நகர்த்தி சென்றிருக்கக்கூடிய இக்கதையை அதன் எதார்த்தமான நம்பகத்தன்மைக்காக ஒடியார் அதன் நிஜ சொரூபத்துடன் காட்சிப்படுத்த விழைந்திருக்கிறார். அதுவே பார்வையாளர்களை இப்படைப்பிலிருந்து சற்று விலகி நிற்க வைக்கும் ஒரு காரணியாக செயற்படுகிறது. ஆண், பெண், குடும்ப உறவுகளின் சமகால நிலையை அவர் அன்றாடங்காய்ச்சிகளின் குரலாக திரையில் ஒலிக்க செய்கிறார். தோல்விகளை கண்டு ஓடும் மனிதனையும், தோல்விகளுடன் வாழ்க்கையை நகர்த்தி செல்ல வேண்டிய மனிதனையும் உக்கிரமான பார்வை வழியே ஒடியார் இங்கு காட்டியிருக்கிறார். கலங்க வைக்க வேண்டிய உச்சக்கட்டக் காட்சிகளில் கூட பார்வையாளன் கலங்கி விடாது அவலத்தை சுவைக்க வேண்டும் என அதிர வைக்கும் நிகழ்வுகளை தனக்கேயுரிய லாவகத்துடன் அவர் திரையில் வரைகிறார்.

உடலில் ஏற்படும் காயங்கள் வழியாக மனித வாழ்வின் சிதைவும் சீராக்கமும் சேர்ந்த நகர்வை தன் படைப்பின் வாயிலாக வெளிக்கொணர விழைகிறார் இயக்குனர். திரைப்பபடத்தில் காயங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. புதிய காயங்கள் உருவாக, முன்னையவை ஆற, ஓயாத மனித வாழ்க்கை தன் அடிகளை முன்வைக்கத் துடிப்பதையே அவர் தன் பாணியில் இங்கு இட்டு வருகிறார். துருப்பிடிப்பதன் வழி தன்னை அழித்து செல்லும் உலோகத்திற்கும், உடைந்து நொருங்கினாலும் மீண்டும் ஒட்டி முன்னை விட பலமாகும் என்பிற்கும் உள்ள இயல்புகளை மனித வாழ்விற்கும், உறவிற்கும் பொருத்தி பார்க்க முனைகிறது ஒடியாரின் இப்படைப்பு.

ஆண் நடிகர்களை தேர்வு செய்வதில் ஓடியார் திறமை வாய்ந்தவர் என்பதை அலி பாத்திரத்திற்காக அவர் பயன்படுத்தி இருக்கும் நடிகரான Matthias Schoenaerts தவறாது நிரூபித்திருக்கிறார். முரட்டு மனிதனாக அவர் நடிப்பு மிக சிறப்பாக வெளிப்பட்டு இருக்கிறது. ஸ்டெஃபானியாக வேடமேற்று இருக்கும் நடிகை Marion Cotillard தன் அமைதியான நடிப்பால் பாத்திரத்துடன் பொருந்திப் போகிறார். உணர்ச்சிபூர்வமாக இப்படைப்பை நெருங்குவது என்பது சிரமமான ஒன்று. ஆனால் வலிகளும், முறிவுகளும், காயங்களும், விபத்துக்களும், பிரிவுகளும், ஒன்றுசேரல்களும் உள்ள மனித வாழ்க்கை என்றும் உணர்வுபூர்வமாக இருந்து விடுவதில்லையே. எம் உணர்வுகளே மரத்துப்போகும் வாழ்வின் கணங்களில் நாம் அடி எடுத்து வைத்து செல்வதும் உண்டல்லவா. காணமுடியாக் காயங்களுடனும், சொல்லவியலா வலிகளுடனும், அரூப முடங்களுடனும் வாழ்க்கையை பந்தயமாக வைத்து மனிதர்கள் மோதிக் கொண்டே செல்கிறார்கள். அவர்கள் தீராக்காயங்கள் வரைந்த சித்திரங்களாக மனித அவலக் காட்சியகங்களின் மெளன அலறலில் தம் குரலை ஒலிக்க விட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

ட்ரெய்லர்

9 comments:

 1. Nice Post Brother. விரிவான விமர்சனம்.

  ReplyDelete
 2. மாமேதை கார்ல் மார்க்ஸின் தத்துவமான...
  முதலாளித்துவ உலகில் மனித உறவுகள்...பண உறவுகளாக மாற்றம் கொள்கின்றன.
  புனிதங்கள்... புனிதங்களை இழக்கின்றன.
  இந்த தத்துவத்தில் இப்படம் இயங்குவதை தங்கள் பதிவின் மூலமாக புரிந்து கொண்டேன்.

  இதையே கருவாக்கி... வந்திருக்கும் வழக்கு எண்ணை...
  'நான் மிகப்பெரிய எழுத்தாளன்' எனக்கூறிக்கொள்பவரும் காறி உமிழ்கிறார்.
  ஐடெண்டி கிரைசிஸ் உள்ள பதிவர்களும் வழி மொழிகிறார்கள்.

  மக்கள் சினிமாவை... மக்களிடம் நகர்த்தும் பாங்கு உங்களிடம் அதிகமாக இருக்கிறது.
  உங்கள் தீவிரம்...ஆற்றல்...என்னிடமும் பரவ ஆசைப்படுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உலக சினிமா ரசிகரே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

   Delete
 3. கெட்ட கெட்ட Images எல்லாம் போட்டு சின்ன பயங்கள பயமுருத்தாதீங்க. அப்புறம் உங்க ப்ளாக்க்கு A certificate குடுத்தறபோறோம் :)

  ReplyDelete
  Replies
  1. இளம் தலைமுறையை நல்வழியில் நடாத்தி செல்ல துடிக்கும் என் ப்ளாக்கிற்கு இப்படி ஒரு Aவப்பட்டமா....அய்யகோ என்ன கொடுமை....:))

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. //அவர்கள் தீராக்காயங்கள் வரைந்த சித்திரங்களாக மனித அவலக் காட்சியகங்களின் மெளன அலறலில் தம் குரலை ஒலிக்க விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். //

  //ஒரு சிறு தொகைப் பணத்தை வெல்வதற்காக தன் உடலை சகல வழிகளிலும் சிதைக்க தயங்காத ஒரு மனிதனிற்கு முடம் என்பது இன்னுமொரு காயமே. //

  //கேளிக்கை காட்சியில் திமிங்கலங்களை தன் கை அசைவிற்கேற்ப அசைய வைப்பது போல அவள் அலியையும் தன் மனதின் அசைவுகளிற்கேற்ப அசைய வைக்க விரும்புகிறாள்.//

  அருமையான வரிகள். படம் உம்மை கவர்ந்திருப்பது பதிவிலேயே தெரிகிறது. சமீபத்தில் வந்த உமது பதிவுகளிலேயே இது சிறப்பானவொன்று.

  படத்தின் trailer உமது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விசயங்களை மென்கவிதை போல கோடிட்டுச் செல்கிறது. அதன் ஆரம்பத்தில் வரும் ஒளிவுமறைவற்ற வசனமும் சரி, "Do you even realize?" என்ற கேள்வியில் இருக்கும் அதிக்கப்படியான செண்டிமெண்ட் இல்லாத மெலிதான கேலி நிறைந்த கோபமும் சரி, இயக்குனர் வழக்கமான செண்டிமெண்ட் கதைகளை படைப்பவரல்ல என்று கட்டியம் கூறுகிறது. விரைவில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டீர்.

  ReplyDelete
 6. hii.. Nice Post

  Thanks for sharing

  More Entertainment

  For latest stills videos visit ..

  .

  ReplyDelete
  Replies
  1. ஸ்வப்னா ஆத்தா, ஷங்கரு உங்க ப்ளாக் வரணுமா என்ன? இது மோசமான பீசாச்சே.
   போன தபா இப்படி என் ப்ளாக்க்கு வாங்கன்னு சொன்ன ஒரு பிகரு கிட்ட எதுத்த வீட்டு அம்புஜம் ஆண்டி போன் நம்பர் வாங்கிக் கொடுத்தா தான் வருவேன்னு அடம் பிடிச்ச பீசு இது. போறபோக்கில நீங்க பொழப்பயே மாத்திக்க வேண்டிக் கூட வரலாம். அட, ஒரு நிமிஷம் இருங்க... :)

   Delete