Wednesday, March 3, 2010

பஷீருடன் ஒரு நடனம்


valse1 இஸ்ரேலின் குளிர் நிறைந்த ஜனவரியின் இரவொன்றில் அரியின் நண்பன் பாவோஸ் அவனைத் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறான். தன் நண்பனின் அழைப்பை ஏற்று மதுபான விடுதி ஒன்றில் அவனைச் சந்திப்பதற்காக செல்கிறான் அரி.

விடுதிக்கு வெளியே குளிர்காலத்தின் மழை சோம்பலுடன் தெருக்களை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. இடையிடையே தெறித்த மின்னல்கள், விடுதியின் மென்னிருளை நொடிநேரம் பிரகாசிக்க செய்து மறைகின்றன.

சிகரெட் ஒன்றைப் புகைத்தவாறே தான் தொடர்ந்து கண்டு வரும் வித்தியாசமான கனவு பற்றி அரியிடம் கூறுகிறான் பாவோஸ். கடந்த இரு வருடங்களாக தன்னை அழுத்தும் அந்தக் கனவில் வெறிநாய்க் கூட்டம் ஒன்று தன் உயிரை எடுப்பதற்காக தன்னை வெறியுடன் தேடியலைவதை அவன் அரிக்கு விபரிக்கிறான்.

1982ல் இஸ்ரேலியப் படையில் தான் பணியாற்றிய வேளையில், நள்ளிரவுகளில் இஸ்ரேலிய ராணுவத்தால் தேடப்படும் பாலஸ்தீனியர்களை தேடிக் கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்துகையில், தங்கள் அரவம் கேட்டு எழுந்து, குலைத்து, கிராம மக்களை உஷார் படுத்திவிடும் நாய்களை சுட்டுக் கொல்வது தனக்கு பணியாகத் தரப்பட்டது என்பதையும், தன் துப்பாக்கியின் குண்டுகள் பாய்ந்து தரையில் வீழ்ந்த அந்த நாய்களின் கடைசிப் பார்வைகளை தன்னால் இப்போதும் நினைவுகூற முடியும் என்றும் அரியிடம் கூறுகிறான் பாவோஸ்.

பாவோஸ் கூறுவதைப் பொறுமையாகக் கேட்கும் அரி, பாவோஸ் ஒரு உளவியல் நிபுணனைச் சென்று காண வேண்டும் என அவனிற்கு ஆலோசனை கூறுகிறான். அதற்குப் பதிலாகவே நான் உன்னுடன் பேச விரும்பினேன் என்று அதற்குப் பதில் தரும் பாவோஸ், அரிக்கு போர் குறித்த நினைவுகள் வருவதில்லையா என வினவுகிறான்.

சற்று நிதானிக்கும் அரி, தனக்குப் போர் குறித்த நினைவுகள் திரும்புவதில்லை எனப் பதிலளிக்கிறான். சிறிது நேரத்தின் பின் நண்பர்களிருவரும் மதுபான விடுதியிலிருந்து கிளம்பி விடைபெற்றுப் பிரிகிறார்கள். காற்றில் கோடுகள் போடும் மழையினூடு அருகிலிருக்கும் அலைகள் பரவும் கடற்கரை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறான் அரி.

valse2 அந்த இரவில், முப்பது வருடங்களிற்குப் பின்பாக, லெபனான் போர் குறித்த சில நினைவுகள் அவனிற்கு திரும்புகின்றன. லெபனான் குறித்த நினைவுகள் மட்டுமல்ல, ஒரு பேரழிவு இரவின் நினைவு, அந்த அகதி முகாம்களில் நிகழந்த படுகொலைகளின் நினைவு என்பன மெல்ல அவன் மனதை தட்டிப் பார்க்கின்றன. ஆனால் அந்நினைவுகள் முழுமையானவையாக இல்லை.

மறுநாள் காலை உளவியலாளனான தன் நண்பன் ஒரியைக் காணச் செல்கிறான் அரி. லெபனான் போர் குறித்த தன் நினைவுகள் திரும்புவதற்கு, பாவோஸின் நாய்கள் பற்றிய கனவு தனக்கு ஏன் தேவைப்பட்டது என ஒரியிடம் அவன் வினவுகிறான். மனித மனம் குறித்த ஆச்சர்யமான தகவல்களை அரிக்கு விளக்கும் ஒரி, அரியின் நினைவுகள் நிஜமானவைதானா என்பதை அரி உறுதிப்படுத்த விரும்பினால், அரியுடன் லெபனானில் அந்தச்சமயம் பணியாற்றியவர்களிடம் அரி அது குறித்து விசாரிக்க வேண்டும் என்கிறான்.

இதனையடுத்து அரி, லெபனான் போரில் பணிபுரிந்த சில நபர்களை சந்திக்கச் செல்கிறான். தன் நினைவுகளில் விழுந்திருக்கும் விரிசல்களை அந்த நபர்களின் நினைவு மீட்டல்கள் மூலம் நிறைவு செய்ய முயல்கிறான். அவன் முழுமையாக்க விரும்பும் போர் குறித்த நினைவுகள், மனதின் ஆழத்திலிருந்து எடுத்து வரும் அந்த உண்மை, எந்த மனிதனையுமே அது குறித்த நினைவுகளை மறந்திடவே தூண்டும்….

valse3 அரி எனப்படும் Ari Folman, 1982ல் லெபனானிற்குள் நுழைந்த இஸ்ரேலிய துருப்புகளில் பங்கு வகித்தவர். முப்பது வருடங்களின் பின்பாக அப்போர் குறித்த தன் நினைவுகளை முழுமையாக மீட்கும் அவரின் முயற்சியே Waltz With Bashir எனும் கதையாக விரிகிறது.

அரி, இந்தக் கதையை முதலில் ஒரு Animmated Documentary திரைப்படமாகவே உருவாக்கினார். அப்படத்திற்கு கதையை எழுதி தயாரித்து இயக்கியவரும் அரிதான். இத்திரைப்படம் 2008ல் முதன் முதலாக கேன் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, விமர்சகர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்தும் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. கோல்டன் குளோப் விருதொன்றையும் இத்திரைப்படம் வென்றிருக்கிறது.

திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட மூலச் சித்திரங்களைக் கொண்டே சித்திர நாவல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சித்திர நாவலின் உருவாக்கத்தை அரி ஃபோல்மேனும், திரைப்படத்தின் கலை இயக்குனருமான David Polonskyயும் மேற்பார்வை செய்திருக்கிறார்கள்.

லெபனான் போர் குறித்த, குறிப்பாக பெய்ரூத்தின் Sabra மற்றும் Chatila அகதி முகாம்களில் நிகழ்ந்த படுகொலைகள் குறித்த தன் நினைவுகளை முழுமையாக மீட்டெடுக்க முடியாத நிலையில் அரி, உளவியலாளர்கள், யுத்த முனையில் பணிபுரிந்த நண்பர்கள், சக வீரர்கள், ஒரு தொலைக் காட்சி நிருபர் ஆகியோரைச் சந்தித்து உரையாடுகிறார்.

valse4 உளவியலாளர்கள் மனித மனதின் விசித்திர ஆட்டங்கள் குறித்து அரிக்கு விளக்குகின்றனர். ஏனையோர் யுத்த முனை சம்பந்தமான தமது நினைவுகளை அரியுடன் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் வழி, படிப்படியாக பெய்ரூத்தில் நடந்த அந்தப் படுகொலைகளை நோக்கி, அழிவால் வரையப்பட்ட போர்ச் சித்திரங்களினூடு வாசகனை கரம் பற்றி அழைத்துச் செல்கிறது சித்திர நாவல். அந்தப் பயணம் வாசகனின் மனதைக் கனக்க வைக்கும் ஒன்றாகவே அமைகிறது.

1982ல் லெபனானின் ஒரு பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த வேளையில் அந்நாட்டின் ஜனாதிபதியாக குறுகிய காலம் பதவியில் இருந்த Bashir Gemayel, அவரது கட்சி அலுவலகத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்நிகழ்விற்கு பழிவாங்கத் துடித்த அவரின் தீவிர ஆதரவாளர்களான, லெபானான் கிறிஸ்தவர்களைக் கொண்ட ஆயுதக்குழுக்கள், பெய்ரூத்தில் அமைந்திருந்த ஸாப்ரா மற்றும் சட்டிலா ஆகிய பாலஸ்தீனிய அகதி முகாம்களில் தமது கொலைவெறியைக் கட்டவிழ்த்து விட்டன.

valse5 இந்த இரு அகதி முகாம்களும் அவ்வேளையில் இஸ்ரேலியத் துருப்புக்களால் சுற்றி வளைக்கப்பட்டிருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வெறிபிடித்த அந்த ஆயுதக் குழுக்களின் கோர ஆட்டத்தைக் கண்டும் காணாமல் கைகட்டி வேடிக்கை பார்த்தது இஸ்ரேலிய ராணுவ உயர் மட்டம். இக்கோரச் செயலில் கொல்லப்பட்ட பாலஸ்தீன அப்பாவி முஸ்லிம்களின் எண்ணிக்கை 300லிருந்து 3000 வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த சமயம் இவ்விரு முகாம்களிற்கும் அருகாமையிலிருந்த அரியின் குற்றவுணர்வு கொண்ட மனச்சாட்சியின் வெளிப்பாடாகவும் கதை இருக்கிறது.

கதையில் இஸ்ரேலியப் படை வீரர்கள் நாயகர்களாக சித்தரிக்கப்படவில்லை. ஆசைகளும், கனவுகளும், தமது உயிர் மீது ஆசையும் கொண்ட சாதாரண இளைஞர்களாகவே அவர்கள் காட்டப்பட்டிருக்கிறார்கள்.

இஸ்ரேலிய ராணுவ அதிகாரம் எவ்வாறு தனது படை வீரர்களை எந்தவித அக்கறையுமின்றி உயிரற்ற பொம்மைகள் போல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதையும் கதை உணர்த்துகிறது.

valse6 எதிரிகளை வெல்வது என்பதை விட தாம் உயிர் பிழைக்க வேண்டுமே எனும் எண்ணம் பெரும்பான்மையான இஸ்ரேலிய இளம் வீரர்களிற்கு இருந்திருக்கிறது. அகதிமுகாம்களில் நிகழ்ந்த படுகொலைகளை கண்களால் கண்ட சாட்சியங்களாக அவர்கள் இருந்த போதும், அதனைத் தடுக்க ஏதும் செய்ய முடியாத நிலையில் அவர்களின் உயரதிகாரம் அவர்களை முடக்கிப் போட்டிருந்ததையும் அறிய முடிகிறது. [ ஆரியல் ஷாரோன் அப்போது இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்]

valse7 பெய்ரூத் தெருவொன்றில் அமைந்திருக்கும் உயர்ந்த கட்டிடங்களிலிருந்து இஸ்ரேலிய வீரர்களை நோக்கி சினைப்பர் குண்டுகள் பாய்கின்றன. எங்கும் நகர முடியாதபடி முடக்கப்படுகிறார்கள் இஸ்ரேலிய வீரர்கள். இந்நிகழ்வு தரும் அழுத்தத்தில் உந்தப்படும் ஒரு இஸ்ரேலிய வீரன் தன் யந்திரத் துப்பாக்கியால் சாரமாரியாக சுட்டவாறே, நடுத்தெருவில், கட்டிடங்களிலிருந்து சீறி வரும் சினைப்பர் தோட்டாக்களிற்கு மத்தியில் சுழன்று ஆட ஆரம்பிக்கிறான். அவன் பின்னனியில், ஒரு சுவரில் இறந்த ஜனாதிபதி பஷீரின் உருவம் வரையப்பட்டிருக்கிறது. தன்னைச் சூழ்ந்து வெடிக்கும் மரணத்துடன் ஒரு உயிர் ஆடும் நடனம் எனும் இந்நிகழ்விலிருந்தே கதையின் அல்லது திரைப்படத்தின் தலைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

மனித மனம் புதைக்க விரும்பும் நினைவுகள் குறித்தும், அதற்காக மனம் செய்யக்கூடிய தந்திரங்கள் குறித்தும் உளவியல் ரீதியாக கதையில் கூறப்படும் விளக்கங்கள் ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன. கதை அகதிகளின் படுகொலைகள் நோக்கி நகர்ந்தாலும் யுத்த நிகழ்வுகளில் இஸ்ரேலியத் தரப்பு விளைவித்த சேதம் குறித்து கதை அடக்கியே வாசித்திருக்கிறது.

அசர வைக்கும் சித்திரங்கள், கவித்துவமான கதை சொல்லல், உணர்வுகளை உயிர்க்க வைக்கும் வண்ணத் தெரிவுகள் என சித்திர நாவல் பிரியர்களிற்கு தரமான ஒரு வாசிப்பனுபவத்தை தரக்கூடிய படைப்பாக Waltz With Bashir சித்திர நாவல் அமைந்திருக்கிறது என்பதில் ஐயம் எதுவும் இல்லை. சித்திர நாவலைப் படிக்கும் வாய்ப்பு உடனடியாக கிடைக்காவிடிலும் திரைப்படத்தையாவது நண்பர்கள் பார்த்திட வேண்டுமென்பது என் தாழ்மையான வேண்டுகோள் ஆகும். [***]

திரைப்படத்தின் ட்ரெயிலர்

11 comments:

 1. மீ த பஸ்ட்.

  முழுவதும் படித்து விட்டு வருகிறேன்.

  ReplyDelete
 2. //எதிரிகளை வெல்வது என்பதை விட தாம் உயிர் பிழைக்க வேண்டுமே எனும் எண்ணம் பெரும்பான்மையான இஸ்ரேலிய இளம் வீரர்களிற்கு இருந்திருக்கிறது//

  இந்த வார்த்தைகள் காரிகனின் ஒரு கதை (மிஸ்டர் பயங்கரம்) கிளைமாக்சில் வரும். ஜெயிப்பதை விட சில வினாடி நேரதிர்காகவே போராடும் வில்லன் காரிகனை முந்தும் கட்டம் அது.

  படித்தவுடன் அதுதான் நினைவுக்கு வந்தது.

  ReplyDelete
 3. சமீப காலங்களில் உங்களின் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தமான பதிவாக இது அமைந்து விட்டது.

  நன்றி காதலரே.

  ReplyDelete
 4. // சித்திர நாவலைப் படிக்கும் வாய்ப்பு உடனடியாக கிடைக்காவிடிலும் திரைப்படத்தையாவது நண்பர்கள் பார்த்திட வேண்டுமென்பது என் தாழ்மையான வேண்டுகோள்//

  ஆசைதான், முடியாதே.

  காத்திருக்க வேண்டியதுதான்.

  ReplyDelete
 5. இப்பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன் . .ஆனால் (வழக்கம்போல்) பார்த்ததில்லை . . காமிக்ஸ் என்றாலே எனக்கு பாஸந்தி (அ) சரக்கு போல. . நீங்கள் அறிமுகப்படுத்தியவற்றையெல்லாம் தொகுத்துக் கொண்டிருக்கிறேன் . .செம வேட்டை . .:-)

  ReplyDelete
 6. கருந்தேள்,

  //காமிக்ஸ் என்றாலே எனக்கு பாஸந்தி (அ) சரக்கு போல//

  வசந்தி தெரியும், யார் அந்த பாஸந்தி? பாக்க எப்படி இருப்பாங்க? உங்க ஏரியாவா?

  ReplyDelete
 7. காதலரே, இச்சித்திரகதையை பற்றி தாங்கள் கூறியபோது நான் கற்பனை செய்து வைத்திருந்த படைப்பை விட பிரம்மாண்டமாக தெரிகிறது, நம் கற்பனா சக்தியின் வரட்சியையும் கோடிட்டு காட்டுகிறது.

  என்ன உயிரோட்டமான ஓவியங்கள், அதன் பின் பினைந்திருக்கும் சரித்திரத்தில் மறக்கபட்ட நிகழ்வுகளை தாங்கும் சோகத்தை பறைசாற்றுவதை போலவே இருக்கிறது. வித்தியாசமான சித்திர பாணி,பின்புலத்தில் சில உண்மை படங்களை வைத்து அதன் மேல் தங்கள் காட்சிகளை அமைத்திருக்கும் விதம், ராக்கெட் லாஞ்சர் தாக்குதலில் டாங்கி உடையும் காட்சியை, சித்திரங்களின் கலவைகளை கலைத்து உணர்த்தியிருக்கும் உத்தி, என்று மலைக்க வைக்கிறது, கர்த்தாக்களின் சிந்தனா வளம்.

  தன் நினைவுகளை பாடம் போட, அவர் இதை விட சிறந்த முறையை கையாண்டிருக்க முடியுமா என்று தெரியவில்லை.

  // தன்னைச் சூழ்ந்து வெடிக்கும் மரணத்துடன் ஒரு உயிர் ஆடும் நடனம் //
  அந்த உயிரோட்டமான காட்சியை தமிழில் அப்படியே வர்ணித்திருக்கிறீர்கள்... அருமை

  // மனித மனம் புதைக்க விரும்பும் நினைவுகள் குறித்தும், அதற்காக மனம் செய்யக்கூடிய தந்திரங்கள் குறித்தும் உளவியல் ரீதியாக கதையில் கூறப்படும் விளக்கங்கள் ஆச்சர்யம் கொள்ள வைக்கின்றன.//
  இப்படிபட்ட நினைவுகளை திரும்பவும் நினைவுக்கு கொண்டு வரதான் வேண்டுமா என்று கேட்க தோன்றும் தான், ஆனால் சரித்திரத்தில் நிகழ்ந்த தவறுகளை நாம் நினைவுகொள்ளவில்லை என்றால், அந்த நிகழ்வுகளை வருங்காலத்தில் மீண்டும் அனுபவிக்க கூடும் என்று கூறுவார்களே... அரி போல்மேன் அவ்விதத்தில் சிறந்த செயலாற்றியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

  //கதை அகதிகளின் படுகொலைகள் நோக்கி நகர்ந்தாலும் யுத்த நிகழ்வுகளில் இஸ்ரேலியத் தரப்பு விளைவித்த சேதம் குறித்து கதை அடக்கியே வாசித்திருக்கிறது//
  இதில் சந்தேகம் என்ன இருக்க போகிறது, இஸ்ரேலிய வெளியீடாக இருந்து கொண்டு அவர்களை பழித்தால் சினிமா என்ன, சித்திரபுத்தகம் கூட வெளிவந்திருக்குமா என்று தெரியவில்லை..

  கடைசி கட்டத்தில், அந்த தொலைநோக்கியில் சுவரோடு நிறுத்தபட்ட அப்பாவிகள், அடுத்த காட்சியில் மடிந்து போயிருப்பதையும், அப்படியே உண்மை புகைபடங்களுடன் இணைத்திருக்கும் பாங்கு,யுத்தங்கள், அது எவ்வகையாயினும், விட்டு விட்டு செல்லும் கொடூரத்தை பறைசாற்றுகிறது.

  // We may forget the past... but the past won't forget us //

  எவ்வளவு உண்மையான வரிகள்.....

  அருமையான சித்திரக்கதைக்கான அருமையான விமர்சனம்...காதலரே. கதையை நேரில் உணர்ந்தது போல இருந்தது. சித்திரக்கதையை தேடி பார்த்துவிட்டு, படத்தை பார்க்க முயல்கிறேன்.

  பதிவிற்கு நன்றி... தொடருங்கள் உங்கள் சிறப்பான அறிமுகங்களை.

  ReplyDelete
 8. // ஆரியல் ஷாரோன் அப்போது இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார் //

  இத்தகைய சரித்திர மகா குற்றங்களின் காரியகர்த்தாவாக இருந்ததினால்தான், தன் அந்திம காலத்தில் ஒரு கெட்டுப்போன உடம்போடு, மரணத்தை எதிர்நோக்கும் நிலையில் அவர் இருக்கிறாரோ என்னவோ...

  விதி வலியது என்பதை நம்பலாம். We may forget the past... but the past won't forget us இது இவருககும் பொருந்தும்.

  ReplyDelete
 9. விஸ்வா,

  //வசந்தி தெரியும், யார் அந்த பாஸந்தி? பாக்க எப்படி இருப்பாங்க? உங்க ஏரியாவா?//

  நம்ம ஏரியாவா இருந்தாத்தான் என்னிக்கோ கரெக்ட் பண்ணிருக்கலாமே . . இது வேற ஏரியா. . சேட்டு. . ஹிந்தில பாடித்தான் கரெக்ட் பண்ணணும் . . ஐயாங் !!

  ReplyDelete
 10. விஸ்வா, நிச்சயமாக இப்படத்தின் டிவிடியை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன், முயற்சி செய்து பாருங்கள். காரிகன் பற்றிய தகவல் நான் அறியாத ஒன்று. பதிவு உங்களிற்கு பிடித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் கருந்தேள், தொகுத்தைவையெல்லாவற்றையும் அனுபவியுங்கள் பரமானந்தம் கிடைக்கட்டும் :) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ரஃபிக், உங்களிடம் இக்கதை குறித்து சிறப்பான முறையில் நான் எடுத்துச் சொல்லாமல் இருந்ததே இது பிரம்மாண்டமாக தோன்றுவதற்கு மூல முழுக் காரணமாகும். கதை உங்களிற்கு பிடித்திருப்பது மகிழ்ச்சியே. படித்து விட்டு உங்கள் பாணியில் ஒரு பதிவைப் போட்டு விடுங்கள். விரிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  விஸ்வாவிற்கும், கருந்தேளிற்கும் ஓர் ஆச்சிரமம் அமைத்துத் தரும்படி உத்தரவு இடப்பட்டுள்ளது. அனுபவிங்க.

  ReplyDelete
 11. இந்த திரைப்படத்தை நீண்ட நாட்களிற்கு முன்னர் பார்த்தேன். காமிக்ஸ் புத்தகமாகவும் இருக்கின்றமை ஆச்சரியம் தருகின்றது.

  திரைப்படம் தொடங்கும் போது என்ன இது இப்படிஒரு கேவலமாக அனிமேஷன் என்று யோசித்தேன். பின்னர் திரைப்படம் முடிந்த பின்னர் இந்த அனிமேஷன் முறைதான் திரைப்படத்தில் உயிரோட்டமே என்பதைப் புரிந்துகொண்டேன்.

  திரைப்படம் முடிந்த பின்னர் உண்மையான காட்சிகளையும் காட்டுவர். எங்களூரில் நடக்காததா!

  இலங்கையில் இந்தப் புத்தகம் கிடைக்க வாய்ப்பில்லை.

  ReplyDelete