லாஸ் ஏஞ்சலேஸில் இருக்கும் கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருகிறான் ஜார்ஜ். மிகவும் உன்னிப்பான ஒழுங்கு முறை நிறைந்த நடவடிக்கைகளை கொண்ட அவனிற்கு ஜிம் எனும் காதலன் இருக்கிறான். ஜிம்மை விட ஜார்ஜிற்கு வயது அதிகம் என்றாலும் அவர்கள் வாழ்க்கை அன்பாலும், காதலாலும் நிறைந்ததாக இருக்கிறது.
ஒரு நாள் தன் தாயாரைக் கண்டு வருவதற்காக காரில் பயணம் கிளம்பும் ஜிம், பனி அடர்ந்த தெருக்களில் விபத்துக்குள்ளாகி, ஸ்தலத்திலேயே உயிரிழக்கிறான். இந்த தகவலை அறியும் ஜார்ஜ் உடைந்து போகிறான். ஜிம்மின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விரும்பும் ஜார்ஜ்ஜிற்கு, ஜிம்மின் குடும்பத்தினரால் அதற்குரிய அனுமதி மறுக்கப்படுகிறது. தன் நெருங்கிய தோழியான சார்லொட்டிடம் ஒடிச் சென்று தன் மனதின் வேதனைகளை கண்ணீரால் வடிக்கிறான் ஜார்ஜ்.
ஜிம் இல்லாத ஜார்ஜின் வாழ்க்கையானது அதன் அர்த்தமும், சுவையும் இழந்த ஒன்றாகி விடுகிறது. திட்டமிட்ட காரியங்களை ஆற்றும் ஒரு யந்திரம் போன்று தன் வாழ்வை நகர்த்துகிறான் ஜார்ஜ். தொடரும் வாழ்க்கையில் சலிப்படையும் அவன், தன் வாழ்வை முடித்துக் கொள்வது எனத் தீர்மானிக்கிறான். புதிய காலை ஒன்றில் தன் வாழ்வின் இறுதி நாளை ஆரம்பிக்கிறான் ஜார்ஜ்.
தான் பணியாற்றும் கல்லூரிக்குச் செல்லும் ஜார்ஜ், கல்லூரி அலுவலகத்தில் இருக்கும் காரியதரிசியுடன் இனிமையாக உரையாடுகிறான். வழமையாக தன்னுடன் அதிகம் பேசாத ஜார்ஜ்ஜின் இந்த மாற்றம் அவளிற்கு வியப்பை அளிக்கிறது. ஜார்ஜ்ஜை ஆச்சர்யம் நிரம்பிய விழிகளால் பார்க்கிறாள் அவள்.
தன் வகுப்பறைக்கு செல்லும் ஜார்ஜ் தன் வழமையான முறையிலிருந்து விலகி, தன் மனதிற்கு நெருக்கமான வகையில் மாணவர்களிற்கு பாடம் எடுக்கிறான். ஆனால் மாணவர்கள் இந்த மாற்றத்தினால் உவகை கொண்டவர்களாக மாறிவிடவில்லை. கெனி எனும் மாணவன் மட்டும் பாடம் முடிவடைந்த பின் ஜார்ஜை தேடி வந்து உரையாடுகிறான். ஜார்ஜ் பாடம் நடத்திய விதம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது எனக் கூறுகிறான். ஜார்ஜ் தன்னுடன் ஏதாவது பருக வேண்டுமென அழைப்பு விடுக்கிறான். அந்த அழைப்பை மறுத்து விடுகிறான் ஜார்ஜ்.
தன் முன்னை நாள் காதலியும் இன்னாள் நண்பியுமான சார்லொட்டை கடைசியாக ஒரு தடவை சந்திக்க விரும்புகிறான் ஜார்ஜ். சர்லொட், மதுவில் தன் சுவையற்ற வாழ்வின் சுவையைக் கண்டு பருக முயல்பவளாக இருக்கிறாள். மது, அவள் வாழ்வில் அவளிற்கு மிகவும் நெருங்கிய ஒன்றாக இருக்கிறது.
சார்லொட்டிற்காக ஜின் போத்தல்கள் சிலதை வாங்க ஒரு அங்காடிக்குச் செல்லும் ஜார்ஜ், அங்கு கார்லோஸ் எனும் அழகிய ஆண் விலை மகனைக் கண்டு கொள்கிறான். கார்லோஸுடன் உரையாடும் ஜார்ஜ், அந்த உரையாடல் மனம் திறந்த ஒரு உரையாடலாக அமைந்திருப்பதை உணர்ந்து ஆச்சர்யம் கொள்கிறான்.
அங்காடியின் கார் பார்க்கிங்கில் தன் காரில் சாய்ந்தவாறே அழகான சூரிய அஸ்தமனஸ்தை கார்லோஸுடன் சேர்ந்து ரசித்துப் பார்க்கிறான் ஜார்ஜ். தன் வாழ்க்கையில் சாதாரண தருணங்களைக் கூட அவன் ரசிக்கத் தவறியிருப்பது அவனிற்கு புரிகிறது. ஜார்ஜின் மென்மையான, கண்ணியமான குணத்தைக் கண்டு அவனிற்கு சில சேவைகளை செய்ய முன் வருகிறான் கார்லோஸ். ஆனால் ஜார்ஜ் அதனை மறுத்து தன் வீடு திரும்புகிறான்.
தன் வீட்டிற்கு திரும்பும் ஜார்ஜ், தற்கொலைக்கான ஆயத்தங்களை செய்ய ஆரம்பிக்கிறான். தனக்கு நெருக்கமானவர்களிற்கு கடிதங்களை எழுதி அவற்றை மேசையின் மீது ஒழுங்காக வைக்கிறான். தன் காரின் சாவி, பத்திரங்கள், சொத்து ஆவணங்கள் போன்றவற்றையும் அம்மேசையில் அழகாக பரப்புகிறான். தன் வீட்டில் பணி புரியும் பணிப்பெண்ணிற்கு ஒரு தொகைப் பணத்தை குளிர் பதனப் பெட்டியினுள் வைக்கிறான்.
தன் வாயில் ஒரு கைத்துப்பாக்கியை வைத்து, எந்த நிலையில் உடலை இருத்தி தற்கொலை செய்ய வேண்டுமென்பதை முயன்று பார்க்கிறான் ஜார்ஜ். இவ்வேளையில் சார்லொட்டிடமிருந்து தொலைபேசி அழைப்பு வர, சார்லொட்டிற்காக வாங்கிய ஜின் போததல்களுடன் அவளைக் காண கிளம்பிச் செல்கிறான்.
சார்லொட்டின் வீட்டில் ஜார்ஜ் அவளுடன் மதுவைச் சுவைக்கிறான், உணவருந்துகிறான், நடனமாடுகிறான். ஜார்ஜ், இறந்து போன ஜிம் மீது தொடர்ந்து கொண்டிருக்கும் அன்பினால் பொறாமை கொள்ளும் சார்லொட் அவனுடன் வாக்குவாதம் செய்கிறாள். தன்னுடன் அவன் வாழலாம் என்கிறாள். பின் தன் செயலிற்காக மன்னிப்புக் கேட்கிறாள். தன் வாழ்க்கையில் இப்படி ஒரு அன்பு தனக்கு கிடைக்கவே கிடைக்காது என வருந்தும் அவளைத் தேற்றும் ஜார்ஜ், அவளை லண்டனிற்கு திரும்பிச் செல்லும் படி கூறி அவள் வீட்டிலிருந்து விடை பெறுகிறான்.
தன் வீட்டில் இறுதியாக ஒரு ஸ்காட்ச்சை சுவைக்க விரும்பும் ஜார்ஜ், ஸ்காட்ச் போத்தல் காலியாக இருப்பதைக் காண்கிறான். தான் வழமையாகச் செல்லும் மதுபான விடுதிக்கு சென்று ஒரு போத்தல் ஸ்காட்ச்சை ஆர்டர் செய்கிறான். இவ்வேளையில் அந்த மதுபான விடுதியின் உள்ளே நுழைகிறான் ஜார்ஜின் மாணவனான கெனி.
கெனியைக் காணும் ஜார்ஜ் தன் வாழ்வை முடிக்கும் முன்பாக கெனியுடன் உரையாட விரும்புகிறான். ஸ்காட்ச் போத்தல் ஆர்டரை ரத்துச் செய்து விட்டு இரண்டு ஸ்காட்சுகளிற்கு ஆர்டர் செய்கிறான்.
ஸ்காட்சை சுவைத்தவாறே இருவரும் உரையாடுகிறார்கள், உரையாடல் அவர்களை நெருக்கம் ஆக்க ஆரம்பிக்கிறது. ஜார்ஜ் ஒரு மென்மையான மனிதன் என்பதனை கெனி அறிந்து கொள்கிறான். இதன் பின் விடுதிக்கு அருகிலிருக்கும் கடலில் இருவரும் நீந்துவதற்காக செல்கிறார்கள்.
தங்கள் உடைகளைக் களைந்து பிறந்த மேனியாக இருவரும் அலைகளில் மூழ்கி மகிழ்கிறார்கள். அலைகளுடன் விளையாடி முடிந்ததும் ஜார்ஜின் வீட்டிற்கு இருவரும் திரும்புகிறார்கள். வீட்டிலும் பீர்களை அருந்தியவாறே அவர்களின் உரையாடல் தொடர்கிறது. இரவு அமைதியாகக் கழிகிறது. கெனியுடன் பேசியவாறே மது தந்த அயர்ச்சியில் மயங்கிப் போகும் ஜார்ஜ் சில மணிநேரம் கழித்து விழித்து எழுகிறான்.
வீட்டின் வரவேற்பு அறையிலிருக்கும் சோபாவில் கெனி சுருண்டு படுத்திருப்பதை ஜார்ஜ் காண்கிறான். கெனி அவன் கைகளில் ஜார்ஜ்ஜின் துப்பாக்கியோடு தூங்கிப் போயிருக்கிறான். சோபாவை நெருங்கி கெனியின் கைகளிலிருந்து துப்பாக்கியை எடுக்கும் ஜார்ஜ், கெனியை போர்வையால் ஆதரவோடு போர்த்து விடுகிறான். மரணம் என்பது இனி அவனிற்கு தேவையற்றது. அவன் புதிய வாழ்வை ஆரம்பிக்க விரும்புகிறான்… ஆனால்!? அந்த மனதை நெகிழ வைக்கும் முடிவைத் திரைப்படத்தில் காணுங்கள்.
Christopher Isherwood என்பவர் எழுதிய நாவலைத் தழுவி A Single Man எனும் இந்த மென்மையான உணர்வுகள் உயிர்க்கும் படத்தை இயக்கியிருக்கிறார் பிரபல Fashion Designer ஆன Tom Ford. 1962களில் கதை நிகழ்கிறது. தன் அன்பின் பிரிவால் வாழ்வின் சுவையை இழந்த மென்மையான மனிதன் ஒருவனின் இறுதி நாளை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறது கதை. தன் மரணத்தை நோக்கி அவன் செல்ல செல்ல, வாழ்க்கையானது அதன் ரகசிய ருசியை அவனிற்கு புகட்ட ஆரம்பிப்பதை மேகம் போன்ற மென்மையுடன் காட்டியிருக்கிறார்கள்.
படத்தின் உரையாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன. அதே போல 1960களை இவ்வளவு அழகுடனும், மோஸ்தருடனும் ரசிக்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்தியிருப்பதை இதுவரையில் நான் திரையில் கண்டதில்லை. ஒவ்வொரு காட்சியும், அதில் வரும் ஒவ்வொரு பொருளும் தன் அழகை பூரணமாக வெளிப்படுத்தும் விதமாக காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். மரணத்தைக்கூட அழகுடன் இணைத்தே காட்ட விழைந்திருக்கிறார் இயக்குனர் டாம் ஃபோர்ட். இக்காட்சிகளுடன் ஒட்டிக் கொள்ளும் இனிமையான திரை இசையானது மனதை அனுமதியின்றிக் கொள்ளை கொள்கிறது.
ஜார்ஜ் பாத்திரத்தில் ஒன்றியிருக்கும் நடிகர் Colin Firth க்கு இயக்குனர் டாம் ஃபோர்ட் படத்தில் வழங்கியிருக்கும் வாய்ப்பு மிக முக்கியமானது. படத்தில் தனித்து தெரிகிறார் காலின் ஃபேர்த். மென்மையான குணம் கொண்ட ஒரு ஒரினச் சேர்க்கையாளன் பாத்திரத்தில் பாந்தமாக நடித்துச் செல்கிறார் அவர். அவரது உடல் மொழி முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. படத்தில் அவரின் தோற்றத்தையே அசர வைக்கும் ஆடைகளுடன் படு ஸ்டைலாக காட்டியிருக்கிறார்கள். நான் பார்த்து ரசித்த காலின் ஃபேர்த்தின் பாத்திரங்களில் ஜார்ஜ் பாத்திரம் சிறப்பானது என்பதில் ஐயமில்லை. அவரது சிகையலங்காரமும், அழகான மூக்குக் கண்ணாடி வழி அவர் வீசும் மென்மையான பார்வையும் வசீகரிக்கிறது.
காலின் ஃபேர்த்தும் அவர் காதலனும் தோன்றும் ப்ளாஷ் பேக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. சார்லொட் பாத்திரத்தில் தோன்றும் ஜூலியான் மூர் சிறிது நேரம் காட்சிகளில் தோன்றினாலும் மனதைக் கவர்கிறார். கதை நடந்த காலத்தில் பரபரப்பாகவிருந்த கியூபா ஏவுகணை விவகாரம் மனித மனங்களில் அரசு இயந்திரம் எவ்வாறாக பயத்தை விதைத்து அதன் வழி சிறுபான்மைக்கு எதிராக வெறுப்பை வளர்க்கிறது என்பதை கோடிட்டுக் காட்டுகிறது.
மிகச் சிறப்பான ஒளிப்பதிவுடன், 1960களின் உணர்வுகளை ரசிகனின் மனதில் பதிக்கும் வண்ணங்களுடன் படமாக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படத்தின் அழகே, திரைப்படம் தர வேண்டிய உணர்வுகளிலிருந்து பார்வையாளனை சற்று விலகிச் செல்லவும் வைத்து விடுகிறது. காட்சியில் விரியும் அழகின் செறிவு அந்த தருணத்தில் பார்வையாளனைக் கட்டிப் போட்டாலும், படைப்பு உருவாக்கும் உணர்வுகள் மனதில் ஆழமாக இறங்குவதற்கு அதுவே தடையாகியும் விடுகிறது. இருப்பினும் டாம் ஃபோர்ட்டின் முதல் முயற்சி, மென் உணர்வுகளை உள்ளடக்கிய நல்லதொரு படைப்பாகவே அமைகிறது. [***]
ட்ரெயிலர்
நண்பரே
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி, வழமையான அழகுடன் தெளிவுடன் சொல்லிச்சென்ற உங்களின் பதிவு இறுதி காட்சிப்பற்றி சொல்லாமல்விட்டது
படம் பார்க்கும் ஆவலை தூண்டிவிட்டது.
//மரணத்தைக்கூட அழகுடன் இணைத்தே காட்ட விழைந்திருக்கிறார் இயக்குனர் டாம் ஃபோர்ட்//
இதற்கு fashion Designer இயக்குனராக இருப்பதும் ஒரு காரணமாக இருக்குமோ நண்பரே ?
ஹி.. ஹி.. ஹி.. எல்லாம்.. உங்களால..!!!!!!!!!
ReplyDelete:) :) :) :) :) :)
நல்ல அருமையான கவிதைத்தனமான விமர்சனம்.
ReplyDelete//சர்லொட், மதுவில் தன் சுவையற்ற வாழ்வின் சுவையைக் கண்டு பருக முயல்பவளாக இருக்கிறாள். மது, அவள் வாழ்வில் அவளிற்கு மிகவும் நெருங்கிய ஒன்றாக இருக்கிறது.//
இந்த இரு வரிகளில் ஒரு நாயகியின் மொத்த குணாதிசியங்களையும் சொல்லிவிட்டீர்.
காதலரே,
ReplyDeleteஇதுதான் இயக்குனரின் முதல் படமா? நம்ப முடியவில்லை. டிரைலரை பார்க்கும்போது அப்படி தெரியவில்லை.
பதிவை படித்தவுடன் இந்த படம் வெகு விரைவில் இந்தி மொழியில் வந்து விடும் என்று தோன்றுகிறது. சைப் அலி கான் தான் ஹீரோ. என்ன சொல்கிறீர்கள்?
ReplyDeleteகாதலரே,
ReplyDeleteமரணத்தின் கடைசி நாளை வித்தியாசமான ஒரு பார்வையுடன் அணுகும் வாய்ப்பு போல தெரிகிறது, இப்பட விமர்சனம். முடிவை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள்.
ஆனால் ஒன்று, குடி குடியை கெடுக்கும் என்று யார் கூறினார்களோ.... இக்கதையில் அந்த குடிதான், ஜின் மற்றும் ஸ்காட்ச் ரூபத்தில் ஒரு உயிரை திரும்பவும் வாழ வைத்திருக்கிறது.. :)
// மதுவில் தன் சுவையற்ற வாழ்வின் சுவையைக் கண்டு பருக முயல்பவளாக இருக்கிறாள் //
// அன்பின் பிரிவால் வாழ்வின் சுவையை இழந்த மென்மையான மனிதன் ஒருவனின் இறுதி நாளை //
ஆத்மார்த்த வார்த்தை பின்னல்கள். அருமை.
// மரணத்தைக்கூட அழகுடன் இணைத்தே காட்ட விழைந்திருக்கிறார் இயக்குனர் டாம் ஃபோர்ட். //
இயக்குனர் டாம் ஃபோர்ட் தனது தொழிலை ரம்மியமாக படத்தில் இழைத்திருக்கிறார் போல, அழகை ஆராதிக்கும் துறை ஆயிற்றே. ஃபோர்டே அமர்க்களமாக ஒரு நடிகருக்கு உண்டான தகுதிகளுடன் தென்படுகிறார்.... அவரே கூட முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கலாம். ஆனால், தனது முதல் முயற்சியில் இயக்குனராக மட்டும் சாதித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பார் போல, கூடவே காலின் பிர்த் போன்ற தேர்வு அவரை மறு பரீசிலனை செய்ய விடாமல் செய்திருக்கும்.... நம் ஊரிலும் தான் இயக்குனர்கள் என்ற பெயரில் நடிகர்கள் இருக்கிறார்களே.... மேற்கத்தியவர்களிடம் இருந்து நம்மவர் பாடம் கற்க வேண்டும்,
ஜுலியன் முரேவிற்கு 50 வயதாகிறதா என்று ஐயம் கொள்ள செய்கிறார், தன் வசீகர தோற்றத்தால்.... மேற்கத்திய பெண்டீரிடம் மட்டும் காண கிடைக்கும் சஞ்சீவினி ரகசியம். :)
ஓரின சேர்க்கை என்பது இன்றும் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு உறவாக தான் நெளிகிறது. ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கு இணையான ஒரு ஜோடியை தேடி பிடிக்கவும்,, அதற்கு அந்த இருவர் ஒப்புதல் இருக்கும் போதும், அது சமுதாயத்தில் மற்றவர்களுக்கு பங்கம் விளைவிக்காத வரை, பாதகம் இல்லை என்பது தானே முக்கியம் . நமக்கு ஒத்துவரவிலையென்றால், அவர்களை அவர்கள் வாழ்வில் வாழ வழி விட்டு ஒதுங்கி கொள்வதே சிறந்தது. சிறந்த சமுதாயத்திற்கு அதுவே அளவுகோல்.
சமீப காலங்களில் உங்கள் பதிவுகள் மூலம் இச்சாரார்களின் பக்க நியாயங்களையும் புரிந்து கொள்ள வைக்கிறீர்கள்... பதிவும் டாப், கருத்தும் டாப். கலக்கலாக தொடருங்கள் காதலரே.
நண்பர் வேல்கண்ணன், நீங்கள் கருதியது சரியே, அழகாக காட்டுவதுதானே அவர்களின் கனவு. கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் பாலா, எனக்கு எதுவும் தெரியாது. அது நானில்லை. என்னை விட்டு விடுங்கள். காலின் ஃபேர்த்தின் அதிர்ஷ்டம் எப்படியென்று நாளை மாலை தெரிந்துவிடும். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
நண்பர் மயில்ராவணன் அவர்களே கனிவான உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
விஸ்வா, இத்திரைப்படத்தைப் பார்க்கும் முன்பாக அதன் ட்ரெயிலரை நான் பார்க்கவில்லை. பதிவைத் தயாரித்த பின்பே பார்த்தேன். அதுவே ஒரு நிமிடப் படம் போல் அசத்துகிறது. இதற்கு காரணம் டாம் ஃபோர்ட், பேரரசிடம் எடுத்த பயிற்சிதான்!! இல்லாவிடில் இப்படியெல்லாம் எடுக்க இயலுமா. சைப் அலி கான், டிஸ்கோதெக் வாசல்களில் நிற்கும் தடியன் போலிருக்கிறார். அமிதாப் பொருந்துவார் என்று நினைக்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ரஃபிக், மது வாழ்வை ரசிக்க உதவும் ஒன்று. அதன் எல்லைகளை தெரிந்து கொண்டால் போதும். மது குறித்து எதிர் மறையான எண்ணம் உண்டு. மதுவைக் குடிப்பவன் வேறு, அதனைச் சுவைப்பவன் வேறு. எப்போதுமே மதுவை விட உறுதியாக நாம் இருப்போமெனில் அது எம்மை அழிக்காது :)
டாம் ஃபோர்ட்டை பார்த்தால் நம் பாண்டி மைனர் போல் இல்லையா!! நான் கூட ஆரம்பத்தில் மைனர் படம்தான் தவறுதலாக வந்து விட்டது என்று நினைத்தேன்.ஃபோர்ட், ஃபாஷன் துறையில் பெரிய ஆள். தன் முயற்சியில் வென்று காட்டியிருக்கிறார். இருந்தாலும் எங்கள் விஜய டி. ராஜேந்தர் போல் வருமா! என்ன ஸ்டைல், என்ன கம்பீரம், என்ன இளமை.
மேற்கத்தைய பெண்கள் அடிக்கடி காதலர்களை மாற்றி விடுகிறார்கள். இதுதான் அவர்கள் இளமையின் ரகசியம்.
ஒரினச் சேர்க்கையாளர்கள் இன்று உலகின் சிறுபான்மை இனத்தவராகவே இருக்கிறார்கள். வன் முறைகளிற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். நியாயம் எல்லா மனிதர்க்கும் பொதுவான ஒன்றல்லவா. ஆனால் பெரும்பான்மையின் நியாயங்கள் முன் இவை எடுபடாது. யாவரும் அன்பில் மகிழ்வுடன் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். விரிவான உங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
இப்படியா பயப்படுவீங்க..??! ஹா.. ஹா. ஹா..!! :)
ReplyDelete:) :)
நண்பர் பாலா, பயமா!! எனக்கா! ஹிஹி :):)
ReplyDelete//ஹிஹி :):)//
ReplyDeleteநம்ம குமுதம் அரசு ஸ்டைல்ல இருக்கே. அந்த பாதிப்பா?
காதலரே . . . .நேற்றே பதிவைப் பார்த்துப் பின்னூட்டமிட்டேன். ஆனால் அது மிஸ்ஸிங். அடிக்கடி இது நேர்கிறது. நான் பின்னூட்டமிட்டதன் சாராம்சம் : காலினுக்குள் இப்படி ஒரு நல்ல நடிகர் ஒளிந்திருப்பது ஒரு நல்ல விஷயம். fashion Designer ஒருவர் இயக்குனராக இருப்பதால், ஓரினச் சேர்க்கையைப் பற்றி ஒரு நல்ல படத்தை எடுக்க அவரால் முடிந்திருக்கிறது. இப்படிப் படங்கள் வருவதை நான் வரவேற்கிறேன்.
ReplyDeleteபி.கு - ஆஸ்கரில் ஹர்ட் லாக்கர் recognize செய்யப்பட்டிருப்பது மனதுக்கு இதமாக உள்ளது.
பி.கு ரெண்டு - தியானம் செய்து முடித்தாகி விட்டதா? எப்படி feel செய்கிறீர்கள்?
//டிஸ்கோதெக் வாசல்களில் நிற்கும் தடியன்//
ReplyDeleteஇது சைப் அலி கானுக்குத் தெரியுமா? :-)
விஸ்வா, ஹிஹி.. :)
ReplyDeleteநண்பர் கருந்தேள், மீண்டும் வந்து உங்கள் கருத்துக்களை பதிந்தமைக்கு முதலில் நன்றி [எனக்கும் இதுபோல் நடப்பதுண்டு]. காலினிற்கு தகுந்த வாய்புக்கள் வழங்கப்படவில்லை என்றே நான் கருதுகிறேன். வெனிஸ் திரைப்படவிழாவில் இத்திரைப்படத்திற்காக காலின் ஒரு விருதை வென்றிருந்தார். ஆஸ்கார் கிடைக்கவில்லை. ஹர்ட் லாக்கர் ஆஸ்கார்களை வென்றிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. வழமைபோல் அவதாரிற்கு அள்ளி வழங்குவார்கள் என்றே எண்ணியிருந்தேன், அப்படி நடக்கவில்லை என்பதே இனிய ஆச்சர்யம்.
வயதாகி விட்டதல்லவா 2 தியானங்கள் முடிந்தவுடன் சற்று தூங்கி விடலாம் போலிருக்கிறது :))
சைப் அலிகானிற்கு அதனை தெரிவித்து விடுங்கள் நண்பரே :)
UP, The Hurt Locker போன்ற ஆஸ்கர் வென்ற படங்களின் அறிமுகம் உங்கள் பதிவு மூலமே கிடைத்தது. தொடருங்கள் உங்கள் பதிவுகளை..
ReplyDeleteநண்பர் சிவ், உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. தரமான திரைப்படங்கள் குறித்த பதிவுகள் தொடரும்.
ReplyDeleteகாணவில்லை: சமீப நாட்களில் மூன்று நாட்களுக்கு ஒரு பதிவு என்று போட்டு தாக்கிக் கொண்டு இருந்த எங்கள் அன்பு கனவுகளின் காதலனை காணவில்லை. காணாமல் போகும்போது அவர் ஆயிரத்தில் ஒருவன் பட டிவிடியுடன் இருந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். கண்டுபிடித்து தருவோருக்கு மேகன் பாக்ஸின் மேலான முத்தங்கள் இரண்டு கிடைக்கும்.
ReplyDeleteவிஸ்வா, இதோ தியானம் முடிந்து விட்டது.
ReplyDelete