Saturday, March 20, 2010

மீன்களின் கனவுகள்


நியூ ஆர்லியன்ஸின் காவல் துறையில் சார்ஜெண்டாக பணியாற்றி வருகிறான் டெரென்ஸ் மக்டொனா [Nicolas Cage]. காத்ரீனா சூறாவளி சமயத்தில், நீரில் பாதி மூழ்கியிருந்த ஒரு காவல் நிலையத்தின் கைதிகள் அறையில் அகப்பட்டுக் கொண்ட ஒரு கைதியை, தன் உயிரை துச்சமென மதித்துக் காப்பாற்றுகிறான் டெரென்ஸ். இந்தச் தீரச் செயலானது சில மாதங்களின் பின் டெரென்ஸிற்கு காவல் துறையில் லியூட்டினெண்ட்டாக பதவி உயர்வைப் பெற்றுத் தருகிறது.

இந்த வேளையில் ஆர்லியன்ஸின் புற நகர்ப் பகுதியில் வாழ்ந்து வரும் ஆபிரிக்காவின் சினெகல் நாட்டைச் சேர்ந்த ஒரு குடும்பம், கொடூரமான முறையில் சுட்டுக் கொலை செய்யப்படுகிறது. இந்தக் கொடூரமான கொலைகளின் மீதான விசாரணைக்கு டெரென்ஸ் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்படுகிறது.

வெள்ள நீரில் குதித்து, கைதியைக் காப்பாற்றிய நாள் முதலாக டெரென்ஸை ஒரு மோசமான முதுகு வலி பீடித்துக் கொள்கிறது. தீராத வேதனையான அந்த முதுகு வலிக்காக டெரென்ஸ் தன் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளுடன் போதை மருந்துகளையும் நாட ஆரம்பிக்கிறான். இது அவனைப் படிப் படியாக போதைப் பொருட்களின் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. போதை மருந்து உட்கொள்ளாது தன் பணிக்கு செல்ல முடியாதவனாக மாறி விடுகிறான் டெரென்ஸ்.

அமெரிக்க ஃபுட் பால் பந்தயங்கள் மீது நிகழ்த்தப்படும் சூதாட்டங்களிலும் டெரென்ஸ் மிகுந்த ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். சூதாட்டத் தரகன் ஒருவனின் உதவியுடன் சூதாட்டங்களில் பெரும் தொகைப் பணத்தைக் கட்டும் டெரென்ஸ், அந்தச் சூதாட்டத் தரகனிடம் கடனாளியாக மாறும் நிலை ஏற்படுகிறது.

தன் போதைப் பொருள் தேவைக்காக பொலிஸ் பாதுகாப்பில் இருக்கும் போதை மருந்தில் கை வைப்பதற்கு டெரென்ஸ் தயங்குவதில்லை. அதே போல் தெருக்களிலும், வேறு இடங்களிலும் அவன் சோதனையிடும் நபர்களிடமிருக்கும் போதைப் பொருட்களை தன் பாவனைக்காக அவன் எடுத்துக் கொள்கிறான். பெண்கள் விடயத்தில் அவன் தயங்குவது அரிது. சந்துகளிலும் புணர்வதற்குத் தயங்காதவனாக அவன் இருக்கிறான். ஆனால் அவன் மனதிலும் அன்பு இருக்கிறது.

bad-lieutenant-2009-17028-518490278 டெரென்ஸிற்கு பிராங்கி எனும் பெண் நண்பி இருக்கிறாள். தனது கவர்ச்சியான உடலை முன் வைத்து, ஆண்களின் உணர்சிகளின் வடிகாலாக செயற்படும் தொழிலைச் செய்பவளாக அவள் இருக்கிறாள். டெரென்ஸின் மீது மிகுந்த கரிசனம் கொண்ட பிராங்கியும் போதைப் பொருட்களை உபயோகிக்கும் பழக்கம் கொண்டவளே.

டெரென்ஸ், அழுத்தங்களிலிருந்து விடுபட்டு சற்று இளைப்பாற விரும்பும் நேரங்களில் பிராங்கியைத் தேடி வருகிறான். பிராங்கியும் அவனும் கொக்கேய்னை தம் மூக்குகளால் ஒரு இழுவை இழுத்துக் கொண்டு அது தரும் உச்சத்தில் அழுத்தங்களை தற்காலிகமாக அழிக்கிறார்கள். டெரென்ஸ் என்ன தேவையென்று கதவைத் தட்டினாலும் தன் வீட்டின் கதவுகளை அவனிற்காக சிரித்த முகத்துடன் திறக்கும் பெண்ணாக பிராங்கி இருக்கிறாள்.

சினெகலைச் சேர்ந்த குடும்பத்தின் கொலை மீதான விசாரணை வேகமாக நகர, கொலைக்கு காரணம் போதைப் பொருள்கள் விற்பதில் ஏற்பட்ட தகராறே என்பது தெளிவாகிறது. Big Fate [Xzibit], என அழைக்கப்படும் போதைப் பொருள் விற்பனையாளன் மற்றும் அவன் இரு சகாக்கள் மீது கொலை குறித்த சந்தேகம் உறுதியாக வலுப்பெற ஆரம்பிக்கிறது. தனது தளராத முயற்சிகளால் கொலை செய்தவர்களை நேரில் பார்த்த சாட்சியான இளைஞன் டரிலை கண்டு பிடிக்கும் டெரென்ஸ், அந்த இளைஞனை நீதிமன்றத்தில் சாட்சி கூறவும் சம்மதிக்க வைக்கிறான்.

bad-lieutenant-2009-17028-93662023 பிக் ஃபேட்டையும், அவன் சகாக்களையும் தேடி நடக்கும் வேட்டையில் பிக் ஃபேட்டின் சகாக்களை தன் குழுவின் உதவியுடன் சமார்த்தியமாகக் கைது செய்கிறான் டெரென்ஸ். காவல் துறை தன்னை தீவிரமாகத் தேடி வருகிறது என்பதை அறியும் பிக் ஃபேட், தன் வக்கீலுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்து சேர்கிறான்.

கொலை சம்பந்தமான பிறிதொரு ஆதாரங்களும் இல்லாத நிலையில் சிறுவன் டரிலின் சாட்சியத்தை மட்டுமே தம் வசம் ஆதாரமாகக் கொண்டு, பிக் ஃபேட் குழுவிற்கு எதிராக வழக்கை தாக்கல் செய்ய பொலிஸாரும், அரசு சட்டத்தரணியும் முடிவெடுக்கிறார்கள். வழக்கின் முக்கிய சாட்சியான டரிலின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக டெரென்ஸ் நியமிக்கப்பட்டு, டரில் டெரென்ஸின் கைகளில் ஒப்படைக்கப்படுகிறான். இந்தச் சமயத்தில் டெரென்ஸின் பெண் நண்பியான பிராங்கியிடமிருந்து டெரென்ஸிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.

பிராங்கியின் தொலைபேசி அழைப்பை அடுத்து டரிலுடன், பிராங்கி தங்கியிருக்கும் காசினோவிற்கு செல்கிறான் டெரென்ஸ். பிராங்கி தங்கியிருக்கும் அறையை அடையும் அவன், பிராங்கி தன் சேவைகளை வழங்கிய நபர் அவளுடன் சிறிது முரட்டுத்தனமாக இயங்கியிருப்பதை அறிந்து கொள்கிறான்.

பிராங்கியின் அறையில் இன்னமும் தங்கி இருக்கும் அந்த நபரிடமிருந்து, பிராங்கிக்கு அவன் தர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு அவனை நன்றாக மிரட்டி வெளியே துரத்துகிறான் டெரென்ஸ். ஆனால் அந்த மனிதனோ தான் செல்வாக்கு நிறைந்த ஒரு பெரும் புள்ளியின் மகன் என்றும் டெரென்ஸும், பிராங்கியும் இதற்கான விலையை தரவேண்டியிருக்கும் என்றும் அவர்களை எச்சரித்து விட்டு அமைதியாக அந்த இடத்தை விட்டு விலகுகிறான்.

bad-lieutenant-escale-a-la-nouvelle-orleans-2010-17028-7806564 இதன் பின் பிராங்கி தங்கியிருந்த அறையை விட்டு வெளியேறும் டெரென்ஸ், பிராங்கி, டரில் ஆகியோர் காசினோவின் உணவு விடுதியில் காப்பி அருந்துவதற்காகச் செல்கிறார்கள். பிராங்கியையும், டரிலையும் உணவு விடுதியில் சிறிது நேரம் தனக்காக காத்திருக்குமாறு கூறி விட்டு, காசினோவின் தொலைக்காட்சித் திரைகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஃபுட் பால் மேட்சைக் காணச் செல்கிறான் டெரென்ஸ். தான் பணம் கட்டிய அணி மேட்சில் தோற்றுக் கொண்டிருப்பதைக் காணும் டெரென்ஸ் சற்று எரிச்சல் அடைகிறான்.

பிராங்கியையும், டரிலையும் தேடி வரும் டெரென்ஸ், உணவு விடுதியில் பிராங்கி மட்டும் தனியே அமர்ந்திருப்பதைக் கண்டு டரில் எங்கே என்று அவளிடம் வினவுகிறான். டரில் கழிவறைக்கு சென்றிருப்பதாக பதிலளிக்கிறாள் பிராங்கி. டெரென்ஸின் மனதில் மெதுவான படபடப்பு பட்டாம் பூச்சியாக சிறகடிக்க, காசினோவின் எல்லாக் கழிவறைகளிலும் அவன் டரிலைத் தேடுகிறான். ஆனால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான டரிலோ எந்தத் தடயமுமில்லாது காணாமல் போய்விடுகிறான்.

அது மட்டுமா! தொடரும் நாட்களில் டெரென்ஸால் மிரட்டி அனுப்பப்பட்ட பிராங்கியின் வாடிக்கையாளனின் தந்தை, டெரென்ஸ் மீது உள்ளக பொலிஸ் விசாரணை ஒன்றை தூண்டி விடுகிறார், பிராங்கியை குறி வைத்து குண்டர் படையொன்றையும் அவர் ஏவுகிறார், இரு நாட்களில் டெரென்ஸ் 50000 டாலர்களைத் தராவிடில் பிராங்கிக்கும், அவனிற்கும் ஏற்படப் போகும் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என டெரென்ஸை மிரட்டுகிறது அந்தக் குண்டர் படை, இது போதாதென்று டெரென்ஸின் சூதாட்டத் தரகன் அவன் அலுவலகத்திற்கே நேரில் வந்து அவன் தர வேண்டிய பணத்திற்காக அவனுடன் வாக்குவாதம் செய்கிறான்.

கவிழ்ந்து போன கொலை வழக்கு, குண்டர்களிற்கும், சூதாட்டத் தரகனிற்கும் தந்தாக வேண்டிய பெருந்தொகைப் பணம், பறி போகும் நிலையில் ஊசலாடும் பொலிஸ் பதவி, இவை எல்லாவற்றிற்கும் மத்தியில் தன் போதைப் பொருள் தேவைக்காக ஓட வேண்டிய அவல நிலை என சிக்கல்கள் எல்லாம் ஒரே சமயத்தில் டெரென்ஸ் மீது இறங்க, போதைப் பொருள் விற்பனையாளனான பிக் ஃபேட் உடன் இணைந்து செயற்பட்டு பணம் சம்பாதிப்பது எனும் தீர்மானத்திற்கு வருகிறான் டெரென்ஸ், அதனை அவன் விரைவாக செயற்படுத்தவும் ஆரம்பிக்கிறான்….

bad-lieutenant-escale-a-la-nouvelle-orleans-2010-17028-1952183669 கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அந்தக் குடும்பத்தின் கொலைகளிற்கு காரணமான குற்றவாளிகளை டெரென்ஸ் சட்டத்தின் பிடியில் சிக்க வைத்தானா? பெருந்தொகைப் பணம் தரவேண்டிய குண்டர்கள் மற்றும் சூதாட்டத் தரகன் ஆகியோரின் பிடியிலிருந்து டெரென்ஸ் மீண்டானா? அவன் பொலிஸ் அதிகாரி பதவி அவனிற்கு நிலைத்ததா? தான் அடிமையாகி விட்ட போதைப் பொருட்களிடமிருந்து டெரென்ஸால் மீள முடிந்ததா? விடைகளை நீங்கள் அறிய விரும்பினால் Bad Lieutnant: Port of Call: New Orleans எனும் திரைப்படத்தை தயங்காது பாருங்கள்.

போதை வஸ்துக்களின் பிடிக்குள் அகப்பட்ட, சற்று வில்லங்கமான ஒரு பொலிஸ் அதிகாரியின் வாழ்க்கையை அதன் கிறுக்குத்தனமும், சூடும், சுழிகளும், இவற்றினிடையே அங்காங்கே திடீர் மின்னலென வெட்டும் மனித நேயமும், அன்புமென, விறுவிறுப்பாக திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் Werner Herzog. [Abel Ferrara, 1992ல் இயக்கிய Bad Lieutnant திரைப்படத்திற்கும் இதற்கும் இருக்கும் ஒற்றுமைகள் போதைப்பொருள் உட்கொள்ளும் வில்லங்கமான பொலிஸ் அதிகாரி பாத்திரம், மற்றும் அதன் பெயர் என்பவை மட்டுமேயாகும். இத்திரைப்படம் ஒரு ரீ மேக் அல்ல என அடித்துக் கூறுகிறார் இத்திரைப்படத்தின் இயக்குனர் வெர்னெர் ஹெர்ஸாக் ]

போதைப் பொருட்களிற்கு அடிமையாகி, அவை தரும் உச்சத்தின் உந்துதலில் ஓடிக் கொண்டிருக்கும் டெரென்ஸின் உணர்வுகளையும், விபச்சாரம், போதைப் பொருள் விற்பனை, பொலிஸ் பணி என்பவற்றின் சிக்கல்கள், ஆபத்துக்கள் இவற்றில் ஈடுபடுவர்களின் வாழ்க்கையின் சில கூறுகள் போன்றவற்றை ரசிகனிடம் வெற்றிகரமாகக் கடத்துகிறார் இயக்குனர் ஹெர்ஸாக். டெரென்ஸ் பாத்திரம் பார்வையாளனை அதிர வைக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தால் அதில் அவர் அதிரவைக்கும் வெற்றி கண்டிருக்கிறார்.

bad-lieutenant-escale-a-la-nouvelle-orleans-2010-17028-2037842078 தன் பெண் நண்பியான பிராங்கியை முரட்டுத்தனமாக ஒருவன் அடித்திருந்த போதும், குண்டர்கள் கத்தி முனையில் அவளை மிரட்டும் போதும், தன் அதிகாரத்தாலும், வலிமையாலும் அந்த தீயவர்களை துவம்சம் செய்யாமல் மெதுவாக அடங்கிச் செல்லும் பொலிஸ் அதிகாரி டெரென்ஸ் வழியாக பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்த ஹீரோயிஸ அதிரடி ஆக்‌ஷன்களிலிருந்து இயக்குனர் அவர்களைப் பட்டினி போட்டாலும், அடுத்து நடக்கப் போவது என்ன என எதிர்பார்க்க வைக்கும் திரைக்கதையை அழகான பாணியில் நகர்த்தி சபாஷ் போட வைக்கிறார் அவர்.

டெரென்ஸின் பைத்தியக்காரத்தனமான ஓட்டத்தினூடு சில மென்மையான தருணங்களையும் ஒட்ட வைப்பதற்கு ஹெர்ஸாக் தவறவில்லை. தான் சிறுவனாக இருந்தபோது கடற்கொள்ளையரின் புதையல் எனக் கண்டெடுத்த துருப்பிடித்த கரண்டியை பிராங்கிக்கு டெரென்ஸ் வழங்குவது, திரைப்படத்தின் இறுதித் தருணத்தில் டெரென்ஸ் தான் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய கைதியுடன் மீன்களின் கனவு பற்றி வினவுவது, அதன் பின் வரும் பிரம்மாண்டமான மீன் தொட்டிக் காட்சிகள் என்பன கவிதையும், அன்பும் கலந்து செய்த தருணங்களாக சுவை பெற்றிருக்கின்றன.

திரைப்படத்தில் நீக்கமற நிலைத்திருப்பவர், நிற்பவர், நடிகர் நிக்கோலாஸ் கேஜ். அவர் ஏற்றிருக்கும் டெரென்ஸ் பாத்திரம் ஏனைய பாத்திரங்கள் அனைத்தையும் வலிய சுனாமி அலை போல் அப்பால் அடித்துத் தள்ளி விடுகிறது. கையில் கொக்கேய்னை போட்டு, மூக்கால் ஒரு இழுவை இழுத்துக் கொண்டு, தன் முதுகு வலியால் ஒரு பக்கம் சற்று சாய்ந்தவாறே நடந்து, கசங்கிய ஆடைகளுடன் அவர் வழங்கும் வெறித்தனமான நடிப்பும், சிரிப்பும் அட்டகாசம்.

மருந்துக் கடையில் தன் வலி போக்கும் மாத்திரைகளிற்காக நீண்ட நேரம் காத்திருந்த பின்பாக வெடித்தல், கொலைக்கு சாட்சி சொல்ல வந்த டரிலின் பாட்டி பணியாற்றும் முதியோர் விடுதியில் முதிய பெண்மீது உண்மைகளை அறிவதற்காக அவர் நிகழ்த்தும் வன்முறை, தன் போதை மருந்து தேவைக்காக தெருவில் வைத்து சோதனையிடும் இளம் பெண் ஒருத்தியுடன் அந்தப் பெண்ணின் நண்பனிற்கு எதிரிலேயே உறவு கொள்ளல்[ இந்தக் காட்சியுன் உக்கிரத்தை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை] என அதிர அதிர அதிர வைக்கிறார் நிக்கோலாஸ் கேஜ். அரங்கில் ரசிகர்களின் கைதட்டல்களையும் அவர் அள்ளிக்கொள்கிறார். ரசிகர்கள் அவர் நடிப்பின் மீது உன்மத்தம் கொள்ள வைக்கும் பாத்திரமாக இது கேஜிற்கு அமைந்திருக்கிறது.

bad-lieutenant-2009-17028-1268913927 போதையின் உச்சத்தில் அவர் ஓணான்களை காண ஆரம்பிப்பதும், சுடப்பட்டவர்களின் உடல்களிலிருந்து வெளியேறும் ஆன்மாக்கள் அவர் முன்பாக நடனம் ஆடுவதுமாக இயக்குனரும், கேஜும் ரசிகர்களிற்கு வழங்கும் விருந்து பிரம்மாதம். பிக் ஃபேட்டின் கும்பலுடன் டெரென்ஸ் அடிக்கும் லூட்டிகள் கலக்கல்.

Val Kilmer எனும் நடிகரை உங்களிற்கு நினைவிருக்கலாம். தான் இன்னமும் இருப்பதை இப்படத்தில் சில காட்சிகளில் வருவதன் மூலம் நிரூபித்திருக்கிறார். நடிப்பால் அல்ல அவரது பிரசன்னத்தால்! Eva Mendes க்கு தன் நடிப்புத்திறனைக் காட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் இல்லை, ஆனால் அவர் தனது ஏனைய அழகான திறமைகளையும் காட்ட இயக்குனர் அனுமதிக்கவில்லை என்பது என் போன்ற தீவிர ரசிகர்களிற்கு ஏமாற்றமே. படத்தில் ஒரு எரோட்டிக் கனவின் சுவை ரகசியமாக ஒளிந்திருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து.

சிறப்பான ஒளிப்பதிவுடன், சூடான வசனங்களுடன், விறுவிறுப்பாக நகரும் திரைப்படத்தின் உச்சக் கட்டக் காட்சிகள், இவை டெரென்ஸ் போதையில் காணும் கனவா என ரசிகர்களைச் சற்றே சந்தேகம் கொள்ள வைக்கும். டெரென்ஸின் சிக்கல்கள் எல்லாம் ஒரே நாளில் தீர்ந்து விடுகிறது என்றால் நம்ப முடியுமா! ஆனால் அந்த தீர்தலில் அதிர்ஷ்டம், தற்செயல், போதையில் மூழ்கினாலும் டெரென்ஸுடன் எப்போதும் ஒட்டியிருக்கும் அவன் புத்திசாலித்தனம் என்பன அடங்கியிருக்கின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை [ கொலைக் குற்றவாளியை மாட்ட வைப்பதற்கு டெரென்ஸ் கையாளும் அந்த யுக்தி மெச்சத்தகுந்தது]

Leaving Las Vegas திரைப்படத்திற்குப் பின், நிக்கோலாஸ் கேஜிடமிருந்து சிறப்பான ஒரு பாத்திரத்தை எதிர்பார்த்து இதுநாள்வரை காத்திருந்த ரசிகர்களிற்கு திகட்டாத விருந்தாக இத்திரைப்படம் அமைகிறது. நிக்கோலாஸ் கேஜ் ஒரு அற்புதமான கலைஞன் என்பதை இத்திரைப்படம் மீள நிறுவுகிறது. ரசிகர்களின் மனதிற்கு மிகவும் பிடித்தமானவனாகிப் போகிறான் இந்த அட்டகாசமான Bad Lieutnant. [***]

ட்ரெயிலர்

14 comments:

 1. மிக சுவையாக இருக்கிறது

  ReplyDelete
 2. நண்பரே
  பகிர்வுக்கு நன்றி, படத்தை தரவிறக்கம் தான் செய்ய வேண்டும்,நிக்கோலாஸ் கேஜ், Leaving Las Vegas , Face/off இரண்டு படங்களிலும் இவரின் நடிப்பை மறக்க முடியாது. இந்த படமும் அதனை செய்யும் என்று தோன்றுகிறது

  ReplyDelete
 3. காதலரே,

  மீ த தேர்ட்.

  முழுவதும் படித்து விட்டு வருகிறேன்.

  ReplyDelete
 4. //தனது கவர்ச்சியான உடலை முன் வைத்து, ஆண்களின் உணர்சிகளின் வடிகாலாக செயற்படும் தொழிலைச் செய்பவளாக அவள் இருக்கிறாள்.//

  மிகவும் டீசன்ட் ஆக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  ReplyDelete
 5. லீவிங் லாஸ் வேகாஸ் படம் என்னை மிகவும் பாதித்த படங்களில் ஒன்று. அதில் எலிசபெத் ஷூவின் பாத்திரமாக்கம் மறக்க முடியாத ஒன்று. அந்த படமே ஒரு கவிதை போல தான் எனக்கு பட்டது.

  ReplyDelete
 6. போதை மருந்து உட்கொண்டால் ஏற்படும் விளைவுகளை நன்றாக காட்டி உள்ளார்கள்....

  பார்க்களாம்....

  ReplyDelete
 7. Matchstick Men ல் நிக்கோலாஸ் கேஜ் நடிப்பு ரொம்ப பிடித்திருந்தது. இந்த படத்தையும் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 8. நண்பரே,
  மிக அருமையான விமர்சனம்,உடனே பார்க்க ஆவலாயிருக்கிறது.

  ReplyDelete
 9. வால் கில்மரும் அருமையான நடிகர்.
  அவரின் சால்டன் சீ மற்றும் ஃபெல்லான் எனக்கு மிகவும் பிடிக்கும்.இவா மெண்டஸ் நல்ல அழகி
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 10. அன்பு நண்பரே,

  நிக்கோலஸ் கேஜ் வயது முதிர்ந்த நிலையில் இப்போது அழகாக காணப்படுகிறார். இந்த படம் இன்னும் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனத்தை வைத்து பார்கையில் இயக்குநரின் படம் என படுகிறது.

  இத்திரைப்படம் மக்களிடம் எடுபடவில்லை. இதுவரை படித்த விமர்சனங்களும் சற்று குழப்பமாகவே இருந்தன. தெளிவான விமர்சனம் உங்களது.

  முதல் படத்தில் கேஜின் பார்வை.....வாவ்.

  ReplyDelete
 11. நண்பர் அண்ணாமலையான் அவர்களே தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் வேல்கண்ணன், ஃபேஸ் ஆஃப் திரைப்படம் ஜான் வூவின் ஆக்‌ஷன் படங்களில் சிறப்பானதொன்று. அப்படியொரு ஆக்‌ஷன் படத்தை பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது. கேஜும், ட்ராவோல்டாவும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள். தொடர்ந்த உங்கள் அன்பான ஆதரவிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் விஸ்வா, எலிஷபெத் ஸுவின் பாத்திரம் மனதைக் கலங்க வைக்கும் பாத்திரம் என்பதில் இரு வேறு கருத்துக்களில்லை. பாராட்டுக்களிற்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

  நண்பர் ரமேஷ், தங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

  நண்பர் சிவ் கண்டிப்பாக பாருங்கள். கேஜின் நடிப்பு பிரம்மாதமாக இருக்கும்.

  நண்பர் கார்திகேயன், பாருங்கள், உங்களிற்கு இப்படைப்பு பிடித்ததாக அமையும் என்று கருதுகிறேன், பின்பு உங்கள் பாணியில் ஒரு பதிவைப் போட்டுத் தாக்கிடுங்கள். வால் கில்மர் ஒரு காலத்தில் பிரபல கதாநாயகன் இன்று துணை நடிகரைப் போல் நடிக்கிறார். எல்லாம் காலம் செய்யும் கோலம். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் ப.ந அவர்களே நன்றி.

  ஜோஸ், அவர் சில அழகியல் சிகிச்சைகள் செய்ததாகக் கூறுகிறார்கள். இயக்குனரின் படம்தான் ஆனால் இயக்குனர் கேஜிற்கு மட்டுமே அதிக வாய்ப்பளித்துள்ளார் என்பது ஒரு குறையே. திரைப்படம் பரவலாக வெளியிடப்படவில்லை என்று கருதுகிறேன். இங்கு திரையரங்கில் ரசிகர்கள் நன்றாக ரசித்துப் பார்த்தார்கள். அரங்கில் கேஜின் அட்டகாசங்களிற்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. விமர்சகர்களும் நன்றாகவே வரவேறிருக்கிறார்கள். ரஃபிக்கின் ஒரு போட்டோவைப் பார்த்துதான் அந்தப் பார்வையை கேஜ் காப்பி அடித்தார் என்பதை இங்கு கூறிக் கொள்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ReplyDelete
 12. பட அறிமுகத்திற்கு நன்றி. கவனத்தில் கொண்டேன். பார்க்கவேண்டிய படம்

  ReplyDelete
 13. நண்பர் பின்னோக்கி, உங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete