சிறுமியான ஆலிஸ், தன் தூக்கத்தில் வினோதமான கனவொன்றைக் காண்கிறாள். நீண்டு செல்லும் ஆழமான குழி ஒன்றினுள் விழும் அவள், அங்கு ஒரு விந்தை உலகையும் விசித்திரமான மனிதர்களையும், பிராணிகளையும் அறிந்து கொள்வதாக அந்தக் கனவு அமைந்திருக்கிறது.
தனக்கு வரும் இந்தக் கனவு குறித்து தன் தந்தையிடம் மனதைத் திறக்கிறாள் ஆலிஸ். ஆலிஸின் தந்தையோ இது வெறும் கனவு மட்டுமே, எப்போது விரும்பினாலும் அதிலிருந்து நீ விழித்தெழுந்திட முடியும் என்று அவளிற்கு தைரியம் தருகிறார்.
காலம் ஓடிச் செல்கிறது. ஆலிஸின் தந்தை மரணத்தை அணைத்துக் கொண்டு விடுகிறார். ஆலிஸ் வளர்ந்து அழகு செழிக்கும் இளம் பெண்ணாக மிளிர்கிறாள். கட்டுப்பாடுகளிற்குள்ளும், விக்டோரிய கலாச்சாரத்திற்குள்ளும் இலகுவாக மடங்கிவிட மறுக்கும் தன்மை அவளில் இயல்பாகவே வளர்ந்து விட்டிருக்கிறது. தந்தையைப் போலவே அசாத்தியங்களை சாத்தியமாக்கும் விருப்பம் கொண்ட இளம் பெண் அவள்.
ஆலிஸின் தந்தையின் மரணத்தின் பின் ஆலிஸின் குடும்பத்தின் நிதி நிலை அவ்வளவு கவுரவமானதாக இல்லை. ஆலிஸின் தந்தையின் செல்வந்த நண்பனான ஒருவரின் மகனிற்கு ஆலிஸை நிச்சயம் செய்து வைக்க இரு வீட்டாரும் விருப்பமாக இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியான நிகழ்விற்காக செல்வந்தர் வசிக்கும் மாளிகையின் அழகான தோட்டத்தில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.
வசதி படைத்த அந்தக் குடும்பத்தில் மருமகளாகச் செல்வதற்கு ஆலிஸிற்கு தயக்கம் இருக்கிறது. செல்வந்தரின் மகனின் குணாதிசயங்களும் ஆலிஸிற்கு திருப்தியளிப்பதாக இல்லை. இந்நிலையில் ஆலிஸின் சகோதரி, தம் குடும்ப நிலையை ஆலிஸிற்கு விளக்கி, அவளிற்கு ஆலோசனைகள் தந்து, திருமண நிச்சயதிற்கு உடன்படும்படியாகக் கேட்டுக் கொள்கிறாள்.
அழகான அந்த தோட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு மேடையொன்றில், செல்வந்தனின் மகனிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது தடுமாறும் ஆலிஸ், தான் சிறுமியாக இருந்தபோது கண்ட கனவில் தோன்றிய மேல் கோட் அணிந்த முயல், அந்தத் தோட்டத்தில் ஒரு செடிக்குப் பின்பாக நின்று தன்னை நோக்கிக் கொண்டிருப்பதை பார்த்து விடுகிறாள். செல்வந்தனின் மகனை மேடையிலேயே காத்து நிற்க விட்டுவிட்டு மேல்கோட் அணிந்த முயலை தேடிச் செல்கிறாள் ஆலிஸ்.
மேல்கோட் அணிந்த அந்த முயலானது வெகு வேகமாக ஓடி ஒரு மரத்தின் அடியில் இருக்கும் குழியொன்றில் புகுந்து மறைந்து விடுகிறது. முயலைத் துரத்தி வந்த ஆலிஸும் தயங்காது அந்தக் குழிக்குள் இறங்கி விடுகிறாள். ஆனால் அந்தக் குழியோ சிறுவயதில் அவள் கனவில் வந்த குழிபோல் நீண்டு முடிவற்று செல்கிறது. சுழன்றபடியே அக்குழியில் விழுந்து கொண்டிருக்கும் ஆலிஸ் ஒரு கணத்தில் ஒரு அறைக்குள் சென்று விழுகிறாள்.
அந்த அறையில் அவள் கண்டெடுக்கும் ஒரு சாவியின் உதவியுடன், உடலை சிறிதாக மாற்றும் பானத்தைக் குடித்து தன் உடலை சிறிதாக்கி, அறையிலிருக்கும் சிறியதொரு கதவின் வழியாக கீழுலகிற்குள் [Underworld] பிரவேசிக்கிறாள் ஆலிஸ்.
கீழுலகம் தான் கனவில் கண்ட விந்தை உலகம் போலவே தோற்றமளிப்பதை வியப்புடன் பார்க்கிறாள் ஆலிஸ், விசித்திரமான உயிரினங்கள், விந்தையான தாவரங்கள் என அழகும், ரகசியமும் கலந்த ஒரு உலகம் அது. ஆலிஸ் தம் உலகிற்குள் நுழைந்ததை அறியும் சில விலங்குகள் ஆலிஸை நெருங்குகின்றன. இவ்விலங்குகளிற்கு பேசும் சக்தி வாய்க்கப் பெற்றிருக்கிறது.
ஆலிஸை நெருங்கிய விலங்குகள், ஆலிஸின் வளர்ச்சியையும், தோற்றத்தையும் பார்த்து இவள் முன்பொரு முறை இங்கு வந்த ஆலிஸா எனச் சந்தேகம் கொள்கின்றன. ஆலிஸிற்கும் இது குறித்து குழப்பம் உருவாகிறது. இதுவும் ஒரு கனவுதான் எனத் தன்னைத்தானே கிள்ளிப் பார்க்கும் ஆலிஸ், அந்த முயற்சி எந்தப் பலனையும் அளிக்கவில்லை என்பதை அறிந்து ஆச்சர்யம் கொள்கிறாள்.
ஆலிஸின் மேல் சந்தேகம் கொண்ட விலங்குகள் அவளை கீழுலகின் ஆருட சிகாமணி நீலக் கம்பளிப் பூச்சியிடம் உடனடியாக இட்டுச் செல்கின்றன. நீலக் கம்பளிப் பூச்சி ஒரு செயின் ஸ்மோக்கர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் வெளி விடும் புகை அவரைச் சூழ ஒரு மாயத்தன்மையை உருவாக்குகிறது.ஆலிஸ் குறித்து நீலக் கம்பளிப் பூச்சியின் கணிப்பு புரியாத் தன்மை கொண்டதாக இருக்கிறது. கீழுலகின் விபரங்கள் அடங்கிய மந்திர நாட்காட்டிச் சுருள் ஒன்றைப் பார்த்தவாறே இவர்களின் விவாதம் தொடர்கிறது. மந்திர நாட்காட்டிச் சுருளில் ஆலிஸின் தோற்றத்தைக் கொண்ட பெண் ஒருத்தி, கீழுலகின் கொடுங்கோல் ராணியாகிய சிகப்பு ராணியின் செல்லப் பிராணியான கொடிய ட்ராகனைக் கொல்வது போல் காட்டப்பட்டிருக்கிறது.
இவ்வாறாக அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில் கீழுலகை தன் கொடுங்கோல் ஆட்சிக்குள் வைத்திருக்கும் சிகப்பு ராணியின் சீட்டுக் கட்டு வீரர்களாலும், சிகப்பு ராணியின் காதலனான குதிரை வீரனாலும் அவர்கள் தாக்கப்படுகிறார்கள். இத்தாக்குதலில் சில விலங்குகள் சிறை பிடிக்கப்பட்டு சிகப்பு ராணியின் அரண்மனைக்கு எடுத்து செல்லப்படுகின்றன. தாக்குதல் நடந்த இடத்தில் மந்திர நாட்காட்டி சுருளைக் கண்டெடுக்கும் குதிரை வீரன் கீழுலகிற்கு ஆலிஸ் வந்திருப்பதை ஊகித்து விடுகிறான்.
தாக்குதலில் இருந்து தப்பிக் கொள்ளும் ஆலிஸ், கீழுலகில் பாதை தெரியாது தடுமாறுகிறாள். அப்போது அவள் முன்பாக தோன்றும், காற்றில் மறையும் சக்தி கொண்ட பூனை [Cheshire Cat] அவளை கிறுக்குத் தொப்பிக்காரன் [Mad Hatter] என்பவன் இருக்கும் இடத்திற்கு இட்டுச் செல்கிறது.
சிறை பிடித்த விலங்குகளுடன் சிகப்பு ராணியின் அரண்மனைக்கு திரும்பும் குதிரை வீரன், சிகப்பு ராணிக்கு ஆலிஸின் வருகையையும் அது அறிவிக்கும் அபாயங்களையும் விளக்குகிறான். ஆலிஸை உடனடியாகப் பிடித்து வரும் படி தன் பெரிய தலையை ஆட்டிய படியே உத்தரவு இடுகிறாள் ஆலிஸ். இது நிகழ்வதற்குள் சிகப்பு ராணியின் பழக் கேக்கை திருடித் தின்ற அடிமைத் தவளை ஒன்றுக்கு, சிகப்பு ராணியின் உத்தரவுப்படி தலை வெட்டப்பட்டு விட்டதை நண்பர்கள் அறிந்து கொள்வது நல்லது.
தன் இருப்பிடத்தில் ஆலிஸை வரவேற்கும் கிறுக்குத்தனமான சேஷ்டைகள் கொண்ட கிறுக்குத் தொப்பிக்காரன், இப்போது ஆலிஸாக வந்திருப்பது கீழுலகிற்கு முன்பு வந்த அதே ஆலிஸ்தான் என உறுதிப்படுத்துகிறான். அவளால்தான் சிகப்பு ராணியின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்ட முடியும் என்று நம்புகிறான். சிகப்பு ராணியின் சகோதரியான வெள்ளை ராணியிடமிருந்து கொடூரமான முறையில் சிகப்பு ராணி ஆட்சியைப் பறித்த சோகக் கதையை ஆலிஸிற்கு கூறுகிறான் கிறுக்குத் தொப்பிக்காரன்.
குறித்த ஒரு தினத்தில் சிகப்பு ராணியின் கொடிய ட்ராகனை ஆலிஸ் கொல்வாளெனில், வெள்ளை ராணியின் நல்லாட்சி மீண்டும் திரும்பும் என்பதை ஆலிஸிற்கு விளக்குகிறான் தொப்பிக்காரன். அந்தக் கொடிய ட்ராகனைக் கொல்வதற்கு ஒரு மந்திர வாள் தேவை எனவும், அந்த மந்திர வாள் தற்போது சிகப்பு ராணியின் மாளிகையில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆலிஸிற்கு அறியத்தருகிறான் அவன்.
இந்த வேளையில் ஆலிஸைத் தேடி தேடுதல் வேடையில் இருக்கும் சிகப்பு ராணியின் வீரர்கள் இவர்களைச் சுற்றி வளைக்கிறார்கள், கிறுக்குத் தொப்பிக்காரன் ஆலிஸைக் காப்பாற்றுவதற்காக சீட்டுக் கட்டு வீரர்கள் பிடியில் தான் சிக்கிக் கொள்கிறான். ஆலிஸ் மறுபடியும் வீரர்கள் பிடியிலிருந்து தப்பிக் கொள்கிறாள். ஆனால் அவள் ஓய்ந்து விடவில்லை, சிகப்பு ராணியின் இரும்புப் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் தன் நண்பர்களைக் காப்பாற்ற சிகப்பு ராணியின் மாளிகையை நோக்கி விரைந்து செல்கிறாள் அவள்……
தொப்பிக்காரனையும், விலங்குகளையும் சிகப்பு ராணியின் பிடியிலிருந்து ஆலிஸ் மீட்டாளா? மந்திர வாளை அவள் கைப்பற்றினாளா? கொடிய ட்ராகனைக் கொன்று கீழுலகில் சிகப்பு ராணியின் ஆட்சிக்கு முடிவு கட்டினாளா? ஆலிஸிற்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தின் முடிவுதான் என்ன? என்பதை திரைப்படத்தினைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
“ உன்னைச் சுற்றியிருக்கும் கூட்டை உடைத்து உன் கனவுகளைப் தேடிப் பற ” எனும் கருத்தையே இயக்குனர் Tim Burton சிறப்பாக இயக்கியிருக்கும் Alice in Wonderland எனும் இத்திரைப்படம் கூற விழைகிறது. Lewis Carroll என்பவர் எழுதிய Alices Adventures in Wonderland, Through the Looking Glass ஆகிய இரு நாவல்களின் பாத்திரங்களை மையமாக வைத்து புதிதாக உருவாக்கப்பட்ட திரைக்கதை ஒன்றை, தனது வழமையான இருட் சுவை கலந்து வழங்கியிருக்கிறார் இயக்குனர் டிம் பெர்டென்.
கீழுலகு எனப்படும் விந்தை உலகை மிகவும் அருமையான கற்பனையில் திரைப்படத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். விலங்குகள், தாவரங்கள், மனிதர்கள் என ஒவ்வொன்றின் உருவாக்கலிற்கும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கிய பாத்திரங்களின் உடையலங்காரங்கள், வண்ணத் தெரிவுகள், உள் மற்றும் வெளி அலங்காரங்கள் என்பன ரசனை மிகுந்த கற்பனையில் மிளிர்கின்றன.
கீழுலகம் கண்களிற்கு விருந்தளித்து உவகை தந்தாலும், டிம் பெர்டென் ரசிகர்களை நெருங்கி வருவது திரைப்படத்தின் ஆழமான பாத்திரப் படைப்புக்களாலேயே என்பதுதான் உண்மை. குறிப்பாக சிகப்பு ராணி, கிறுக்குத் தொப்பிக்காரன் ஆகிய பாத்திரங்களில் அவரது ஆழமான ஈடுபாடு தெளிவாகப் புலனாகிறது. இதேபோல் காற்றில் மறையும் செஷயர் பூனையும், செயின் ஸ்மோக்கர் நீலக் கம்பளிப் பூச்சியும், தன் குடும்பத்திற்காக சிகப்பு ராணிக்கு விலை போகும் நாயும் மனதை கவர்கின்றன.
சுதந்திரங்களை அடக்கு முறைக்குள்ளாக்கும் அதிகாரங்களையும், அந்த அதிகாரத்தை சுற்றி ஜால்ரா அடிக்கும் போலி வேடதாரிகளையும் எதிர்த்துப் போரடுபவளாக ஆலிஸ் பாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. கீழுலகில் தான் கற்றுக் கொண்ட இந்தப் போர்க்குணத்தை ஆலிஸ் மேல் உலகிலும் உபயோகித்து தன் வாழ்வை தன் விருப்பப்படி வாழும் சுதந்திரத்தை பெற்றுக் கொள்கிறாள். ஆலிஸ் வேடத்தில் புதுமுக நடிகையான Mia Wasikowska நடித்திருக்கிறார். இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார். ரசிகர்களை தன் பிடிக்குள் வீழ்த்த இவரால் முடியவில்லை என்பது தெளிவு.
ஆனால் ஆலிஸ் பாத்திரத்தை சுவையான கேக் போல் கபளீகரம் செய்து ஏப்பம் விடுகிறார்கள் சிகப்பு ராணியாக வரும் Helena Bonham-Carter, மற்றும் கிறுக்குத் தொப்பிக்காரன் வேடமேற்றிருக்கும் Johnny Depp ஆகியோர்.
பெரிய தலையும், அந்தத் தலைக்கேற்ற தலைக்கனமும் கொண்டு, வெட்டுங்களடா அவன் தலையை என்று கண்டபடிக்கு தண்டனைகளை அள்ளி வீசும் சிகப்பு ராணியாக ஹெலனா பொன்ஹாம் கார்ட்டர் வெளுத்து வாங்கியிருக்கிறார். அவரது முகபாவங்களும், உடல் அசைவுகளும், சிறப்பான நடிப்பும் ரசிகர்களை மயங்கடிக்கிறது. அவரது உதடுகளில் இதய வடிவில் இருக்கும் உதட்டுச் சாயம் செம அழகு. முத்தம் தர மனசு அலைகிறது. தன் துணைவிக்கு அசரடிக்கும் பாத்திரத்தை வழங்கி சிறப்பித்திருக்கிறார் டிம் பெர்டென்.
தன் மனதில் பொதிந்திருக்கும் ஒரு ஆழமான வேதனையுடன், எதிர்பாராத சமயங்களில் கிறுக்குப்பிடித்து ஆவேசமாகும் தொப்பிக்காரன் பாத்திரத்தில் ஜொனி டெப் பின்னிப் பிழிந்திருக்கிறார். சிகப்பு ராணியின் தலைக்கு தொப்பி செய்து தருவதாகக் கூறி ராணியை அவர் கவிழ்க்கும் பாணி அட்டகாசம். ஆலிஸிற்கும் அவரிற்குமிடையில் உருவாகும் பாசமான நட்பின் பிரிவு மூலம் ரசிகர் மனங்களை நெகிழ வைத்திருக்கிறார் இயக்குனர். ஆலிஸைப் பிரியும் வேளையில் டெப்பின் நடிப்பு உன்னதம். பரபரப்பான இறுதிச் சண்டைக் காட்சியின் பின்பாக டெப் ஆடும் அந்த நடனம் சூப்பரோ சூப்பர்.
விந்தை உலகம், சாகசம், நகைச்சுவை, ஆக்ஷன், மந்திரம் எனத் தொய்வில்லாது படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர், இருப்பினும் வெள்ளை ராணி வரும் காட்சிகளில் சலிப்பு சற்றுத் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறது. இதனை ஆலிஸின் அற்புத உலகம் என்பதை விட டிம் பெர்டெனின் அற்புத உலகம் என்பதே பொருத்தமானதாக இருக்கும்.
ஒரு கூட்டுப் புழுவானது, தனது புது வாழ்விற்காக, அது அடைபட்டிருக்கும் கூட்டைக் கிழித்து, அழகான வண்ணத்துப் பூச்சியாக உருமாறி காற்றில் பறந்து செல்வதைப் போலவே தன் கனவுகளை நோக்கிச் சுதந்திரமாக பறந்து செல்கிறாள் இந்த ஆலிஸ். அற்புத உலகில் ஆலிஸ், கேளிக்கைக்கு உத்தரவாதம். [***]
ட்ரெயிலர்
ஆஹா , அருமையான படம் போலிருக்கிறது. கண்டிப்பாக இவ்வருட மே மாத குதுகலமான கொண்டாட்டமாக அமையும் என்பதில் ஐயம் இல்லை
ReplyDeleteஅருமையான பதிவிற்கும் பகிர்வுக்கும் நன்றி நண்பரே
நல்ல விமர்சனம்.
ReplyDeleteடிம் பர்ட்டன் என்றாலே ப்ளானட் ஆஃப் த ஏப்ஸ் பார்த்த பிறகு மைல்டாக ஒரு அலர்ஜி உண்டாகிறது!
ReplyDeleteஅவரது முந்தைய படங்களான பேட்மேன், எட்வர்ட் சிஸர்ஹாண்ட்ஸ், பிக் ஃபிஷ் போன்றவற்றிற்கு நான் தீவிர ரசிகனாக இருக்கும் போதிலும் கூட தற்போதைய படங்களைப் பார்க்கும் போது ஏற்படும் இந்த சலிப்பு தவிர்க்க முடியவில்லை!
இவரது படங்களில் இரண்டு விஷயங்கள் எப்போதும் மாறாது! ஒன்று நல்ல விஷயம் - ஜானி டெப்! மற்றொன்று அவ்வளவு நல்ல விஷயமல்ல! அது அவரது அனைத்து படங்களிலும் காணப்படும் குதர்க்கத்தனம்! ஆனால் அது இல்லாமல் டிம் பர்ட்டன் இல்லை என்பதால் வேறு வழியில்லை!
அடுத்து அவர் ஆஸ் நாட்டு மந்திரவாதி, காட்டேரி வேட்டையன் ஆபிரகாம் லிங்கன் போன்ற படங்களை இயக்கப் போவதாகக் கேள்வி! ஆண்டவன் அவரிடமிருந்து நம்மை ரட்சிப்பாராக!
தலைவர்,
அ.கொ.தீ.க.
காதலரே,
ReplyDeleteஆலிஸ் இன் வன்டர்லேன்ட், என்ன ஒரு அற்புத சிறுவர் காவியம். வளர்ந்த பின்பும் அது நம் மனதில் இவ்வளவு தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை, ஒவ்வொரு முறையும் அந்த அந்த காலத்திற்கு ஏற்ப நவீனத்துவங்களை வைத்து இன்னும் சிறப்பாக படைக்கும் போது புலபடுகிறது.
கற்பனை குதிரைகளுக்கு எல்லையில்லா அளவு அதில் வரும் வித்தியாசமான பாத்திரங்களின் குணாதிசியம் மலைக்க வைக்கிறது, அள்ள அள்ள குறையா அச்சய பாத்திரம்.
டிம் பெர்டனின் இம்முயற்சி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கவே செய்கிறது. ப்ளானட் ஆப் த ஏப்ஸ் தான் நான் பார்த்த அவரின் கடைசி படம். மூல நாவலில் இருந்து வெளிவந்து அவர் கதையின் சாரத்தை தொலைத்து விட்டார் என்று அப்போது ஒரு குறை இருந்தது. ஆனால், அச்சமயத்திலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் அவர் எந்த குறையையும் வைக்கவில்லை. இம்முறை ஆலிஸின் மூல கதையை எடுக்காமல், அவரை இரண்டாம் முறையாக தன் பார்வையில் அவ்வுலகத்தை விஜயம் செய்ய செய்திருக்கிறார் போல. இம்முறை சாதிக்கலாமோ.... எப்படியோ, விரைவில் இப்படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்.
ஜானி டெப் அலட்டாமல் தன் முத்திரையை பதித்திறுக்கிறார் போல... அதுதான் அவருக்கு கைவந்த கலையாயிற்றே.
அந்த நீலக் கம்பளி பூச்சியினி முகத்தில் போதையில் மயங்கும் நிலை அற்புதமாக வடிவமைக்க பட்டிருக்கிறது. கதாபாத்திரங்களின் தோற்றத்தில் அதீத அக்கறை எடுத்திருக்கிறார்கள், என்பது நிச்சயமாகிறது.
பி.கு.: மெகான் பாக்ஸை, மியாவின் முன்தோற்ற படத்தின் போது நினைத்து ஏங்கியிருக்கிறார்கள்... எல்லோரும் அம்மையை போல இருந்துவிட்டால், அவருக்கு ஏது வாய்ப்பு... :)
இலங்கைக்கு இஒந்த படம் வருமா? இல்ல டோரென்ட் தான் உதவனும்
ReplyDeleteடெஸ்ட்
ReplyDeleteநண்பரெ மிக அருமையாக எழுதிருக்கிறீர்கள்,பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது,காணொளியும் அருமை.
ReplyDeleteஜானி டெப்பை காமெடியனாக பார்க்க தான் பிடிக்க மாட்டேன் என்கிறது
போட்டோ மீது எழுத போட்டோஷாப் இல்லாமல் எதேனும் எளிய வழி இருக்கிறதா நண்பரே?உங்கள் பதிவின் சிறப்பில் அதுவும் ஒன்று
ReplyDeleteஅன்பர் கார்த்திக்கேயன், படங்களில் மேல் எழுத, காதலர் Paint.NET என்ற இலவச மென்பொருளை உபயோகபடுத்துகிறார். அவர் அறிமுகத்தில், நானும் அதை உபயோகபடுத்த முடிந்தது. அருமையான ஒரு உபகரணம், போட்டோஷாப் போல பயமுறுத்தும் விடயங்கள் இல்லாமல் எளிதாக வேலை செய்ய முடிகிறது. முயன்று பாருங்கள்.
ReplyDeleteநன்றி நண்பர்,ரஃபிக் ராஜா,காதலரே எனக்கு ஈமெயிலில் அழகாய் விளக்கியும் விட்டார்.மிக்க நன்றி இருவருக்கும்.
ReplyDeleteரொம்ப அருமையான பதிவு.. Tim Burton மனுஷன் கனவுலகத்துலயே கலக்கறாரே... big fish, chalie n chocolate factory, இப்போ இதுன்னு போயிகிட்டே இருக்காரு.. ஒருவேளை அதான் கனவுகளின் காதலருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கோ.. :)
ReplyDeleteவழக்கம்போல உங்கள் நடையில் அருமையான விமர்சனம். Tim Burton படங்களில் Big Fish மட்டுமே இதுவரை நான் பார்த்திருக்கிறேன். அதைப் பற்றிய பதிவொன்றையும் எழுதியுள்ளேன். Alice in Wonderland படம் பாத்தவர்களெல்லாம் அற்புதம் என்று சொல்லிகொண்டிருக்கிறார்கள். நான் இன்னும் பார்க்கவில்லை.
ReplyDeleteமுதன்முதலில் Alice in Wonderland ரிலீஸ் ஆனது 1903ல். அதாவது சுமார்107 வருடங்களுக்கு முன். யூடியூபில் உள்ளது. லிங்க் கொடுத்துள்ளேன் |:-)
http://www.youtube.com/watch?v=zeIXfdogJbA
நண்பர் வேல்கண்ணன், ஜாலியாக நேரத்தைக் கழிக்க படம் உதவும், பார்த்து மகிழுங்கள் நண்பரே. உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் இராமசாமி கண்ணன் அவர்களே தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
கேங் லீடர்காரு, இந்தப் படம் நன்றாகவே இருக்கிறது. தயங்காது பாருங்கள். டிம் பெர்டெனின் குதர்க்கத்தின் விளைவுகள் அவரின் படங்களை ரசிக்க வைத்தால் அதுவே போதுமானது இல்லையா. அவரின் வருங்காலப் படங்கள் எம்மைத் திருப்தி செய்வனவாக அமையும் என்று நம்புவோம். தங்கள் மேலான கருத்துக்களிற்கு நன்றி கேங் லீடரு அவர்களே :)
ரஃபிக், ஆலிஸ் கதையில் துணைப் பாத்திரங்கள் வாசகனை அதிகம் நெருங்கி வர மாட்டார்கள். பெர்டெனின் திரைப்படம் அதை முறியடித்து சிறு பாத்திரங்களையும் பார்வையாளன் அருகே நெருங்க வைத்து விடுகிறது. ஆம் ஜானி டெப் சிறப்பாக நடித்திருக்கிறார் குறிப்பாக உச்சக் கட்ட காட்சிகளில். நீலக் கம்பளிப் பூச்சியை வைத்தே தான் சொல்ல வந்ததை ஒரு கவிதைபோல் சொல்லி விடுகிறார் பெர்டென். மெகான் ஃபாக்ஸ் என் உயிர் என்பதைக்கூற இங்கு நான் அச்சப்படவில்லை, மதகுருவிடம் கிலோ கணக்கில் அடிவாங்க நான் தயாராகவே இருக்கிறேன் ;) உங்கள் ஆச்சிரம வேலைகளைக்கு நடுவே பஞ்சனையில் அமர்ந்து இந்தப் படத்தையும் பார்த்திடுங்கள். நண்பர் கார்திகேயனின் கேள்விக்கு விளக்கம் தந்து உதவியதற்கும், தங்கள் கருத்துக்களிற்கும் நன்றி அன்பு நண்பரே.
நண்பர் சிவசங்கர் அவர்களே, நீங்கள் சொல்வது சரியே, காத்திருப்பதை விட வேறு வழி தேடிக் கொள்வதே உசிதமானது. தங்கள் ஆதரவிற்கு நன்றி.
நண்பர் கார்திகேயன், ஜானி டெப் பல தடவைகள் சற்றுக் கிறுக்குத்தனம் கொண்ட வேடங்களில்தான் கலக்கியிருக்கிறார். ஜாக் ஸ்பாரோ பாத்திரம் கூட கிறுக்குத்தனம் கலந்த ஒன்றாகவே தோன்றுகிறது. இருப்பினும் இப்படத்தில் அவர் சிறப்பாக செய்திருக்கிறார். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
நண்பர் பாலாஜி, எம்மை அழுத்தம் மிகுந்த இந்த இடத்திலிருந்து வேறு இடங்களிற்கு கொண்டு செல்லும் கனவுகள் எனக்குப் பிடிக்கும். அது தரும் அனுபவம் மனதைக் குழந்தையாக்கிவிடுகிறது. மீண்டும் குழந்தையாவது பெரும் பாக்கியமல்லவா. தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
நண்பர் பேபி ஆனந்தன், வாய்ப்புக் கிடைத்தால் பார்க்கத் தவறாதீர்கள். நீங்கள் வழங்கியிருக்கும் சுட்டியை உப்யோகித்து பார்த்து விடுகிறேன். சுட்டிக்கும், தங்கள் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஅன்பு நண்பரே,
ReplyDeleteசிறிய வயதிலிருந்ததே இரசித்த புத்தகம் இது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி கற்பனையை உண்டாக்கக் கூடிய புத்தகம். வெகு சில கதைகளே இத்தகைய உணர்வை வாசகனுக்கு உருவாக்க முடியும்.
உதாரணத்திற்கு, லார்ட் ஆப் த ரிங்ஸ், ட்ராகுலா போன்றவை.
செஷயர் பூனையின் புன்னகை ஆன்மீக குறியீடாக உருவகப்படுத்தலாம். பூனை மறைந்து விட்டது. புன்னகை மட்டுமே எஞ்சியிருக்கிறது என. படத்தில் அக்காட்சி எப்படி வந்திருக்கிறது என பார்க்க ஆவலாக இருக்கிறது.
டிம் பர்ட்டனுக்கும் அவர் கற்பனைக்கேற்ப எடுக்க சுதந்திரம் இருக்கிறது. நம்முடைய இரசனைக்கு எவ்வாறு ஒத்து போகிறது என்பதைதான் பார்க்க வேண்டும். உங்கள் விமர்சனத்தை பார்க்கும்போது அக்கற்பனை உலகத்தை அழகாகதான் காட்டியிருக்கிறார்.
ஜானி டெப், ஹெலினா போஹம் கார்ட்டர் போன்ற தொழில் முறை நடிகர்கள் சிறிய பாத்திரங்களை கூட பிரமாதமாக நடித்துக் கொடுத்து விட்டு செல்லக் கூடியவர்கள்.
அழகிய வரிகளில் விமர்சனம் வந்திருக்கிறது. படத்தின் தாக்கமாக கூட இருக்கலாம், :)
ஜோஸ், ஆம் நண்பரே, ரசனைக்கேற்ப கற்பனைகளும் பார்வைகளும் வேறுபடும் என்பது உண்மையே.செஷயர் பூனையின் புன்னகை குறித்த உங்கள் விளக்கம் நீங்கள் ஆச்சிரமம் அமைக்க தயாராகிவிட்டீர்கள் என்பதை உணர்த்துகிறது:) நல்லதொரு விளக்கம். படம் என்னை மகிழ்வித்தது தரமான பிரதியில் நீங்களும் பார்த்தபின் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
ReplyDeleteவிமர்சனத்துக்கு நன்றி நண்பரே.சீக்கிரமே பார்க்கிறேன்.
ReplyDeleteமுன்னாடி மாதிர் நேரமிருந்தா... இந்தப் படத்தையும், க்ராஃபிக்ஸையும்... குதறியிருப்பேன். தப்பிச்சிக்கிச்சி.
ReplyDeleteஆனாலும்.. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க. :)
நண்பர் இலுமினாட்டி, வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி. சீக்கிரமே பார்த்து மகிழுங்கள் நண்பரே.
ReplyDeleteநண்பர் பாலா, திரைப்படம் உங்களின் எதிர்பார்ப்புக்களை திருப்தி செய்யவில்லை என்று எண்ணுகிறேன்! மாறாக நான் திரைப்படத்தை ரசித்துப் பார்த்தேன். அதன் வெளிப்பாடாகவே இப்பதிவு அமைகிறது. ஒரு படைப்பு எல்லாரையும் திருப்திப்படுத்த முடியாது என்பது உண்மையே. தாராள மனமெல்லாம் கிடையாது இதிலும்கூட கஞ்சத்தனம் செய்திருப்பதாகவே உணர்கிறேன் :)) வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
this is not review
ReplyDeleteஅனானி அன்பரே, தங்கள் மனம் திறந்த கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteகாதலரே,
ReplyDeleteஆலிஸ் சிறுவயதில் விரும்பி பார்த்த ஒரு கார்ட்டூன்.கடிகாரத்தை பார்த்துக்கொண்டே ஓடும் அந்த முயலார் மறக்க முடியாது. அனைத்து பற்களையும் காட்டிகொண்டே தோன்றும் ,மறையும் பூனையும் மிகவும் கவரும்.
நண்பர் லக்கி லிமட், மீண்டும் உற்சாகமாக களம் இறங்கியிருக்கிறீர்கள், நீங்கள் புதிதாக உருவாக்கி இருக்கும் அம்போ ஸ்பெஷல் போஸ்டர்... மன்னிக்கவும் ஜம்போ சிறப்பிதழ் போஸ்டர் அருமையாக இருக்கிறது. திரைப்படத்திலும் பூனையின் புன்னகை சிறப்பாக காட்டப்பட்டிருக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
http://www.thalaivan.com
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information http://www.thalaivan.com
Latest tamil blogs news