Tuesday, March 23, 2010

புத்தர் புரியும் புன்னகை


லடாக் பீட பூமிக்கு வடக்கே, கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்திலிருக்கும் தேப்சாங் பள்ளத்தாக்கில் ரோந்து செல்லும் ராணுவ வீரர்கள், வெண் பனியில் பதிந்திருக்கும் ராட்சத காலடித் தடங்களைக் கண்டு கொள்கிறார்கள். இந்தக் காலடித் தடங்களை போட்டோ பிடிக்கும் அவ்வீரர்கள் அதனை தமது ராணுவ மேலிடத்திடம் அனுப்பி வைக்கிறார்கள்.

கடந்த காலங்களில் பல முறை இது போன்ற பனியில் பதிந்த ராட்சதக் காலடித் தடங்களை இந்திய ராணுவத்தினர் அவதானித்திருக்கிறார்கள். அக்காலடித் தடங்கள் பதினேழு தடவைகள் புகைப்படங்களாகவும் எடுக்கப்பட்டிருக்கின்றன. இமய மலைப் பகுதிகளில் வாழும் பனி மனிதனின் காலடித்தடமாக இது இருக்கலாம் எனக் கருதப்பட்டாலும் விஞ்ஞானிகள் இவை பனியில் இயற்கையாக ஏற்படும் குழிகள் எனக் கூறுகிறார்கள்.

லடாக்கின் ராணுவத் தலைமையகத்தின் பிரிகேடியர் கே.கே. நாயர், இந்த விடயம் குறித்த ரகசிய விசாரணை ஒன்றை மேற் கொள்ளும்படி ராணுவ வீரன் மேஜர் பாண்டியனைப் பணிக்கிறார்.

விசாரணைகளை ஆரம்பிக்கு முன்பாக சில தகவல்களை அறிந்து கொள்ள பாண்டியன் விரும்புகிறான். ராணுவ ஆராய்ச்சிப் பிரிவு அவனிற்கு வழங்கிய தகவல்கள் பயனளிக்காத நிலையில் டாக்டர் திவாகர் என்பவரைச் சந்தித்து தனக்கு வேண்டிய தகவல்களை பெற்றுக் கொள்ள அவன் தீர்மானிக்கிறான்.

டாக்டர் திவாகர் ஒரு மானுடவியலாளர். இமய மலையில் உள்ள மனிதர்களைப் பற்றிய ஆராய்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர். அவர் டா பிங் எனும் மலைக் கிராமத்தில் வசித்து வருவதால் அக்கிராமத்தை நோக்கி வழிகாட்டி ஒருவனுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் பாண்டியன்.

டா பிங் கிராமத்தை நோக்கி செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தின் ஆதி குடிகள், தம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் கிம் சுங்கை மலைத் தேவதைகளின் பலீ பீடத்தில் உயிரோடு காணிக்கையாக செலுத்துகிறார்கள். சிறுவன் கிம் சுங்கிற்கு கடுமையான காய்ச்சல் கண்டிருக்கிறது. பலி பீடத்தில் கிடத்தப்பட்ட சிறுவனின் உடலைக் குறிவைத்து பெரும் கழுகுகள் வானிலிருந்து கீழே இறங்க ஆரம்பிக்கின்றன. சிறுவன் கிம் சுங்கின் நிலையைக் கண்டு பதறும் பாண்டியன், சிறுவனைக் கிராம மக்களிற்கு தெரியாது காப்பாற்றுகிறான். டா பிங் கிராமத்திற்கு மயங்கிய நிலையிலிருக்கும் சிறுவன் கிம் சுங்கை தன்னுடன் எடுத்துச் செல்கிறான்.

மலையின் இருளில் வழி தெரியாது சில கணம் தடுமாறும் பாண்டியனின் வழிகாட்டி, காற்றில் கலந்து வரும் தேவதாரு மரத்தின் புகையை மோப்பம் பிடித்து டா பிங் கிராமத்திற்கு அவர்களை இட்டுச் செல்கிறான். கிராமத்தில் நுழையும் பாண்டியன் டாக்டர் திவாகரைச் சந்திக்கிறான். டாக்டர் திவாகர் காய்சலில் வாடும் சிறுவன் கிம் சுங்கிற்கு சிகிச்சை அளிக்கிறார்.

yeti_footprint மறுநாள் காலை டாக்டர் திவாகருடன் உரையாடும் பாண்டியன், டாக்டர் மலையில் வாழும் மக்கள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டாலும் பனி மனிதன் குறித்த தேடல்களிலும் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பதை அறிந்து கொள்கிறான். டாக்டர் திவாகரைப் பொறுத்த வரை பனிமனிதன் மீதான அவரது ஆராய்ச்சி என்பது உண்மையில் மனிதர்கள் மீதான ஆராய்ச்சியாகவே இருக்கிறது. மேலும் பனிமலையில் வழி தவறிப் போன சிறுவர்களை பனி மனிதன் காப்பாற்றி வருகிறான் என்ற தகவலையும் அவர் பாண்டியனிற்கு கூறுகிறார். இது பாண்டியனிற்கு ஆச்சர்யத்தை அளிக்கிறது.

இந்த வேளை டா பிங் கிராமத்தை நோக்கி ஓநாய்கள் கூட்டம் ஒன்று வந்து கொண்டிருப்பதை டீன் பறவைகள் கிராமத்தவர்களிற்கு அறியத் தருகின்றன [ ஏன் என்பதை கதையில் படித்து அறிந்து கொள்ளுங்கள்], ஓநாய்க் கூட்டத்தின் தாக்குதலை முறியடிக்க விரும்பும் கிராமத்தவர்கள், ஓநாய்கள் வரும் பாதையில் பாறைகளில் வெடி ஒன்றை வெடிக்க வைத்து ஓநாய்க் கூட்டத்தை விரட்டியடிக்கிறார்கள். இந்தக் களேபேரங்கள் முடிவடைந்த வேளையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் கிம் சுங், குரங்கு மனிதன் என்னைப் பிடிக்கிறான் என அலறியவாறே திடுக்கிட்டு எழுகிறான்.

டாக்டர் திவாகரும், பாண்டியனும் சிறுவன் கிம் சுங்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள், ஆடு மேய்ப்பதற்காக சென்ற வேளையில் தனக்கு காய்ச்சல் உண்டாகி நடக்க முடியாமல் போனதெனவும், தன்னை தன் தந்தையும் தனியே கைவிட்டு வந்த வேளையில் குரங்கு மனிதன் தன்னைத் தூக்கிக் கொண்டு சென்ற சம்பவத்தையும் சிறுவன் கிம் சுங் அவர்களிடம் கூறுகிறான். குரங்கு மனிதன் தன்னைத் தூக்கிச் சென்ற வேளையில் ஒரு தருணத்தில் மயக்கமடைந்த அவன் இப்போதுதான் மயக்கம் தெளிவதாகவும் அவன் தெரிவிக்கிறான்.

அது மட்டுமல்ல குரங்கு மனிதன் தன்னை தூக்கிச் சென்ற பாதையை அவர்களிற்கு தான் காட்ட முடியும் எனவும் கிம் சுங் அறிவிக்க, அடுத்த நாளே டாக்டர் திவாகரும், பாண்டியனும் சிறுவன் கிம் சுங்குடன் பனி மனிதனைத் தேடி தம் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்…

குளிர் அதன் உச்சத்தில் குதூகலிக்கும், இயற்கை தன் ஜால வித்தைகளை நிகழ்த்தும், ஆபத்தும், அபாயமும் உங்கள் ஒவ்வொரு அசைவுகளையும் கூர்ந்து அவதானிக்கும் பனிமலைப் பாதைகளினூடாக, சாகசப் பயணமொன்றிற்கு பனி மனிதன் எனும் தன் நாவல் வழியாக அழைப்பு விடுக்கிறார் நாவலாசிரியர் ஜெயமோகன்.

அறிவியல், ஆன்மீகம், இயற்கை என நாவல் எங்கிலும் தெளிவான விளக்கங்களுடன், சிறப்பான தகவல்களை வழங்கி அவர் கதையை சுவையாகக் கூறிச் செல்கிறார். பனி மனிதனைத் தேடி ஆரம்பமாகும் பயணமானது, மனிதன் இயற்கையுடன் கொடூரமாக அறுத்து எறிந்திருக்கும் தன் தொப்புள் கொடி உறவு குறித்து வேதனையோடு பகிர்ந்து கொள்கிறது. இதற்குக் காரணமாகவிருந்த மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்துக் கேள்விகளை முன் வைக்கிறது.

nepal_headerfull மேலோட்டமாக தகவல்களை வழங்கி விட்டு நகர்ந்து விடாது, நல்லதொரு ஆசானைப்போல் பல விடயங்கள் குறித்தும் தன் தெளிவான விபரிப்பால் வாசகனின் ஆர்வத்திற்கு திகட்டாத ஒரு விருந்தை படைத்திருக்கிறார் ஆசிரியர்.

சாகசப் பயணத்தில் ஈடுபடும் டாக்டர் திவாகர், வழியில் நிகழும் சம்பவங்களை அறிவியல் ரீதியாக விளக்க முனைகிறார். சிறுவன் கிம் சுங்கோ, அவன் பெற்றிருக்கும் புத்த மடாலயப் போதனைகள் வழி அச்சம்பவங்களை மொழி பெயர்க்க விழைகிறான். ராணுவ வீரன் பாண்டியனோ அறிவியல், ஆன்மிகம் இவை இரண்டிற்குமிடையில் பயணித்துச் செல்பவனாக இருக்கிறான். என்னைப் போன்ற வாசகனின் பயணம் பாண்டியனின் பயணத்தை ஒத்ததே.

சாகசத்தின் இறுதிப் பகுதியானது மனிதனின் நான் எனும் உணர்வைக் குறித்த சிந்தனைகளை வாசகனிடம் எழுப்புகிறது. கூட்டு ஆழ் மனம் மூலம் இயங்கக் கூடிய ஒர் உயிர் சூழலின் சாத்தியத்தையும், அதன் தேவையையும், வாசகன் முன் அந்த உயிர் சூழலின் அற்புதங்களுடன் பரிமாறுகிறது.

இயற்கையும், அதில் இருக்கக் கூடிய எல்லா உயிர்களும் ஒரே மனம் கொண்டவையாக இருந்தால் அந்த உலகம் எவ்வாறு இருக்கும், அந்த உலகில் பரிணாமத்தின் வேகம் எப்படியாக இருக்கும், அங்கிருக்கும் மனிதர்கள் எதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள், அவர்கள் பேசும் மொழி என்னவாகவிருக்கும், அந்த சூழலில் தீமை என்பது என்ன போன்றவற்றை ஒரு விசித்திர உலகின் மூலம் வாசகன் முன் விரிக்கிறார் நாவலாசிரியர்.

pm2 சிறுவர்களாக இருந்தபோது இக்கதையைப் படித்தவர்களிற்கு அதில் வரும் ஆன்மீகம் தத்துவம் என்பன எவ்வளவு தூரம் ஆர்வம் தந்திருக்கும் என்பது ஆச்சர்யமே. ஆனால் கதையில் வரும் சாகசமும், விந்தைகளும் அவர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். மாறாக கதையின் ஆன்மிகமும் தத்துவமும் என்னைப் போன்ற வளர்ந்த குழந்தைகளை அணைத்துக் கொள்கிறது.

அறிவியல் ரீதியாக பனி மனிதன் இருப்பு குறித்து அறிய முயலும் கதையில், சிவபுராணத்திலும், ரிக் வேதத்திலும் அவர்கள் குறித்து குறிப்புக்கள் கணப்படுகின்றன என்பது தெரியவரும்போது ஆச்சர்யம் எகிறுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் சிறிய பெட்டித் துணுக்குகளாக ஏராளமான பயனுள்ள தகவல்களை தந்து அவற்றைக் கதையில் சொல்லப்படும் விடயங்களுடன் இணைத்திருக்கும் பாணி சிறப்பாக இருக்கிறது. தமிழ் சிறுவர் நாவல் ஒன்றில் நாவலாசிரியரின் இவ்வளவு நேர்மையான அர்பணிப்பை காண்பது அரிதான ஒன்று என்றே நான் எண்ணுகிறேன்.

பனிமலைப் பகுதியில் பூரண நிலவு எழும் அந்த சொர்க்கத்திற்கு ஒப்பான காட்சியை ஜெயமோகன் தன் வார்த்தைகளால் வர்ணிக்க, அக்காட்சி அப்படியே வாசகனுள் உயிர் பெறுவது அபாரமானது.

ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் தெளிவான, விறுவிறுப்பான கதை சொல்லல் மூலம் அருமையான தகவல்களை அள்ளி வழங்கி சிறப்பான ஒரு வாசிப்பனுபவத்தை தரும் நாவலாகவே பனி மனிதன் அமைகிறது. பனிமலைச் சிகரங்களின் உச்சிகளில், அஸ்தமனத்துச் சூரியனின் கதிர்கள் பட்டுத் தெறித்து அப்பிரதேசத்தையே செந்தீயாலான வெளியாக மாற்றியடிக்கிறது. மனதை மயக்கும் இந்நிகழ்வை புத்தரின் புன்னகை என ஒப்பிடுகிறான் சிறுவன் கிம் சுங். அந்தப் புன்னகையை எங்கள் மனதிற்குள்ளும் எடுத்து வருகிறது ஜெயமோகனின் பனி மனிதன். [***]

12 comments:

 1. காதலரே,

  ஜெயமோகனின் எழுத்துகளில் இருக்கும் வசீகரத்தை பற்றி நண்பர்க்ள் கூறிய போது கூட நான் பரிபூரணமாக உணரவில்லை. ஆனால், பனிமனிதன் அந்த எழுத்துகளுக்கு உண்டான சக்தியை ஆத்மார்த்தமாக அனுபவிக்க வைத்து விட்டது என்றே சொல்லாம்.

  இன்று உலகத்தில் இருக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம், மூல காரணத்தை கண்டுபிடிக்கும்போது, அது இயற்கையுடன் மனிதன் நடத்தும் போராட்டத்திற்கு கிடைத்த பரிசு என்று தான் அறிய பெருவதாக, அறிவியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதை மனதளவில் என்னையும் உணரவைத்த ஒரு நாவல் "பனி மனிதன்".

  கதையின்ஒவ்வொரு கட்டத்திலும் பாண்டியன் மற்றும் டாக்டருக்கு இடையில் நடக்கும் தர்க்க ரீதியான வாதங்கள், வாழ்வில் நாம் தொலைத்து விட்ட எத்தனையோ அற்புதங்களை நமக்கு திரும்பவும் அறிமுக படுத்துகிறது. கூடவே, தான் கூறும் அனைத்து கதை கருக்களுக்கும், அறிவியல் ரீதியான விளக்கம், மற்றும் சரித்திர மேற்கோளை இட்டு ஜெயமோகன் இந்த நாவலை ஆத்மார்த்தமாக வடித்திருக்கிறார்.

  இந்த கதையை அவர் வார நாளிதழ் ஒன்றிற்காக எழுதினார் என்றும், அது கடைசியில் முடிவடையாமல் நின்று போனதையும் அவர் விவரிக்கும் கட்டங்களில், இத்தகைய அற்புத கதைகரு புத்தக வடிவில் கிடைப்பது பெருமிதம் கொள்ள செய்கிறது. இருப்பு தீர்ந்து போன ஒரு இதழை, மீண்டும் விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் கிழக்கு பதிப்பகத்திற்கு அதற்கு ஒரு பாராட்டை கண்டிப்பாக கொடுக்கலாம். என்ன இப்படிபட்ட அருமையான விவரிப்புகள் அடங்கிய இந்த எழுத்து நாவலுக்கு, சற்று பிரம்மாண்டமான ஓவியங்களை அவர்க்ள் சேர்த்திருந்தால், அது மகுடம் வைத்தாற் போல இருந்திருக்கும். ஆனால், ஜெயமோகனின் இயற்கை வர்ணிப்புகளை, சித்திரங்களில் கொண்டு வர, எந்த ஒரு ஓவியருக்கும் கைவந்திருக்குமா என்பது யோசிக்க வேண்டிய விடயம் தான்.

  இந்த புத்தகத்தின் சொற்நடை குழையாத அருமையான விமர்சனம். சித்திர நாவல் பிரியர்கள், மற்றும் சிறுவர் (நமக்குள் இருக்கும் குழந்தைக்கும்) இலக்கிய ரசிகர்களுக்கு இந்த நாவல் ஒரு சரியான படிப்பானுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்த புத்தகத்தை எனக்கு அறிமுகபடுத்திய நண்பர் ஜோஷுக்கு, நன்றி.

  ReplyDelete
 2. ரஃபிக், அவரின் எழுத்தில் தனியான ஒரு வசீகரம் உண்டு என்பது உண்மையே. பனி மனிதனின் சிறப்பு அதன் தெளிவான கதை சொல்லல்.

  இயற்கை குறித்துp பார்த்தால் அதன் அழிவு மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு தந்த விலையாகிவிடுகிறது. இதனையே நாவலில் ஆசிரியர் அழகாக இயற்கையை அழித்துதான் மனிதனால் வாழ முடியும், அவன் அப்படிப் பழகி விட்டான் என்று திவாகர் வழி கூற வைக்கிறார்.

  கதையில் வரும் பெரும்பாலான நிகழ்வுகளிற்கு ஆசிரியர் தரும் ஆதாரங்கள் இக்கதையை ஒரு சிறிய கலைக் களஞ்சியம் ஆக்கி விடுகின்றன.

  அவதார் திரைப்படத்திற்கும் கதையில் வரும் சில சம்பவங்களிற்கும் உள்ள ஒற்றுமைகள் வியப்பை ஏற்படுத்தியது. பனிமனிதனைக் கூட ஒரு மகானின் அவதாரமாக இறுதியில் கற்பனை செய்திருப்பார் ஆசிரியர்.

  கதையில் வரும் சித்திரங்களைக் கிழக்கு பயன்படுத்தாமலே இருந்திருக்கலாம். கதையை மறுபதிப்பாக சிறப்பாக வெளியிட்டிருக்கிறார்கள். நண்பர் ஜோஸ்தான் என்னையும் படிக்கும்படி தூண்டினார். அவரிற்கு சொல்ல வேண்டிய நன்றிகுப் பதிலாகவே இப்பதிவு :)

  தங்களின் விரிவான மனம் திறந்த கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே. நாவல் குறித்த உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறோம் :)

  ReplyDelete
 3. நண்பரே மிக அருமையாக சொல்லி படிக்கும் ஆவலை தூண்டிவிட்டீர்கள்,ஜெமோ காட்சிகளை வார்த்தைகளால் வர்ணிக்கும் கலையில் வித்தகர்.நாமும் அங்கேயே உலவுவதை போல செய்வார்.இவரின் காடு நாவல் அடிக்கையில் நானும் பெரிய காட்டுக்குள் அலைந்ததுபோன்ற ஃபீலை தந்தார்.
  அதிலும் இவரின் படைப்புகளில் வரும் கதாபாத்திரங்கள்.அவர்களுக்கு நம்மை விசிறியாக்கிவிடுவார். அப்படி ஒருவர் காடு நாவலில் குட்டப்பன்.எழாம் உலகத்தில்=போத்தியம்பதி.
  பின்னூட்டத்தி முடிக்க மனமில்லை,வேலைக்கு செல்கிறேன்.

  ReplyDelete
 4. காதலரே,
  நல்ல புத்தகத்தை பிரந்துரை செய்திருக்கிறீர்கள்... நான் மிகவும் மலைத்துப் படித்த புத்தகங்களில் இந்த 'பனிமனிதனு'ம் ஒன்று...

  எனது நண்பர் ஒருவர் (அவ்வளவாக புத்தகம் வாசிப்பவரில்லை) BIG FOOT போன்ற MYSTERIESலிருந்த ஆர்வத்தில் இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை பார்த்ததும் வாங்கிவிட்டார். இதை படிக்க ஆரம்பித்தவர், திரு.ஜெயமோகன் அவர்களின் எழுத்தில் ஈர்க்கப்பட்டு, இப்போது தொடர்ந்து பல புக்கதங்களை தேடிப்படிக்கும் புத்தகப்புழுவாகிவிட்டார்... இது போல் பலரை வாசகனாக்கிய புண்ணியம், திரு. ஜெயமோகன் அவர்களின் எழுத்துமந்திரதுக்கே உரித்தது...

  உங்களது இந்த இடுகை, புத்தகத்தை மீண்டும் படிக்க ஆவலைத் தூண்டும்படி அமைந்துள்ளது சிறப்பு...

  -
  DREAMER

  ReplyDelete
 5. நண்பர் கார்திகேயன், காடு எனக்கும் பிடித்த நாவல்தான். அது எனக்களித்த உணர்வுகளை எழுதிக் கொண்டே செல்லலாம். ஏழாம் உலகம் நாவல் காட்டிலிருந்து வேறுபட்டிருக்கும். காடு எம் மனதில் நாம் ஒளித்து வைத்திருக்கும் ஒரு அந்தரங்க வனத்திற்குள் எம்மை அழைத்துச் சென்று அலையவிடும், எழாம் உலகம் மிகவும் வன்மையான ஒரு உலகிற்குள் எம்மை இட்டுச் செல்லும். உங்கள் வேலை நாள் இனிமையாகக் கழிந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  Dreamer, நானும்தான் பிரம்மித்து விட்டேன். சிறுவர் நாவல்தானே என்றுதான் ஆரம்பித்தேன் ஆனால் ஜெ பின்னியிருக்கிறார். ஜெ இதன் தொடர்ச்சியை விரிவான ஒரு நாவலாக எழுதினால் நான் மிக மகிழ்சியடைவேன். உங்கள் வருகைக்கும் கனிவான கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 6. அன்பு நண்பரே,

  எதிர்பார்க்காத இந்த விமர்சனம் மிகுந்த மகிழ்ச்சியை எனக்களித்தது. ஜெயமோகன் சிறுவர் இலக்கியத்திற்கு இன்னும் நிறைய தன்னுடைய பங்களிப்பை அளிக்க வேண்டுமென்பது என்னுடைய அவா.

  சித்திரக் கதைகள் இந்திய பாணியில் உருவாக வேண்டுமென்றால் வலுவான கதை முக்கியம். இவரைப் போல சிலர் இத்துறையில் தங்களுடைய பங்களிப்பை அளித்தால் ஐரோப்பிய சித்திரக் கதை சாம்ராஜ்யத்திற்கு வலுவான போட்டியை நாமும் கொடுக்க முடியும். நம்மிடம் மிகச் சிறந்த ஒவியர்கள் இருக்கின்றார்கள். கதாசிரியர்கள்தான் குறைவு.

  இக்கதை சித்திரக் கதையாக வருவதற்கு தகுதியான கதை. ஒருகணம் ஆசிரியர் சொற்களில் வடித்த வடிவங்களை சித்திரங்களில் காண நேர்ந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பார்த்தேன்.

  ஒரு சிறிய குறை என சொன்னால், கிழக்கு பதிப்பகத்தின் மூலமாக வந்த இந்நூல் மற்ற புத்தகங்களை விட விலை அதிகமாக உள்ளது என்பது என் கருத்து. இது குறித்து இருவேறு கருத்துகள் இருக்கலாம் என்றாலும் , நிறைய பேருக்கு போய் சேரும் என்ற நிலையில் விலை ஒரு முக்கிய காரணி என கருதுகிறேன்.

  மிக அற்புதமான சிறுவர் இலக்கியத்திற்கு சிறந்த அறிமுகம்.

  ReplyDelete
 7. மிக அருமை.. கண்டிப்பாக படிக்கிறேன்.. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே..

  ReplyDelete
 8. ஜோஸ், தொலைக்காட்சி தொடர் ஒன்றிற்காக எழுதிய கதையை சில வேளைகளில் அவர் நாவலாக்கக்கூடும் என்று அறிவித்திருக்கிறார், பார்க்கலாம். இக்கதை சித்திரக்கதையாக வருவதற்குரிய முழுத்தகுதியும் பெற்றிருக்கிறது. நடைமுறையில் அதனை சாதிக்கமுடியுமா என்பதே கேள்வி. பதிப்பகங்கள் புத்தகங்களின் விலையை குறைப்பது என்பது இனி நிகழப் போகாத ஒன்று. அவர்கள் கழிவு தரும்போது வாங்கிக் கொண்டால்தான் உண்டு. எனக்கு அதுவும் கிடையாது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் பாலாஜி, கண்டிப்பாகப் படியுங்கள். வருகைக்கும், கருத்துப் பதிந்து சென்றமைக்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 9. நண்பரே
  முதலில் மிகப்பெரிய வாழ்த்துகளை சொல்லிவிடுகிறேன். நாவல் பற்றி - அதுவும் தமிழ் நாவல்பற்றி - அதுவும் ஜெயமோகன் நாவல்பற்றி என்ற போது மகிழ்ச்சியுடனும் நெருக்கமாயும் உணர்ந்தேன். நான் படித்தபோது ஏற்பட்ட அதே தாக்கத்தை இந்த பதிவும் ஏற்படுத்தியது. வழமையான அதுவும் நேர்த்தியுடன் இருக்கிறது உங்களின் புத்தக பார்வை. முதல் பக்கத்தில் தொடங்கும் விறுவிறுப்பு முடிவுவரை தொடரும். அதே சமயத்தில் இயல்பாய் பல தகவல்கள் நமக்குள் பரிமாறப்படும். இதற்க்கு ஜெயமோகனே காரணம். இவரின் 'காடு' தொகுப்பு மிகச்சிறந்த ஒன்று. தொடருங்கள்.... இன்ப அதிர்ச்சி கொடுக்க...

  ReplyDelete
 10. நண்பர் வேல்கண்ணன், வாழ்த்துக்களிற்கு நன்றி. காடு அருமையான நாவல் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. என் மனம் கவரும் தமிழ் புத்தகங்கள் குறித்தும் என் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன். தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 11. நண்பரே, ஒரு வழியாக பனி மனிதனை ஆன்லைனில் வாங்கிவிட்டேன். இன்று தான் வந்தது. படித்து விட்டு சொல்கிறேன்...

  ReplyDelete
 12. நண்பர் பேபி ஆனந்தன், நன்று நன்று, படித்துவிட்டு தயவு செய்து உங்கள் உணர்வுகளை இங்கு பகிர்ந்து கொள்வீர்களாயின் - அது எதிர்மறையான கருத்துக்களாக இருந்தால் கூட- நான் மகிழ்ச்சியடைவேன், தங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete