முன்னே ஓடும் மிருகம் எனும் இப்பதிவைத் தயாரித்து ஏறக்குறைய ஒரு வருடம் ஓடிச் சென்று விட்ட நிலையில் இன்று இதனை உங்கள் பார்வைக்கு எடுத்து வருகிறேன். இப்பதிவை முதலில் நான் எழுத ஆரம்பித்த போது என்னிடம் ஸ்கேனர் இருந்ததில்லை. என் ஆரம்ப கால பதிவுகள் சின்ன அணில் மார்க் டிஜிட்டல் கமெராவினால் பிடிக்கப்பட்ட படங்களின் துணையுடனேயே வெளியாகின என்பதை நண்பர்கள் மறந்திருக்க மாட்டீர்கள். சின்ன அணில் கமெராவானது எனக்கு அலெக்ஸாண்டார் பிரபுவால் வழங்கப்பட்டிருந்தது என்பதையும் நண்பர்கள் அறிவீர்கள்.
ஸ்டீபன் கிங்கின் இருள்கோபுரம் பதிவிலேயே ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை நான் முதன்முதலில் பயன்படுத்த ஆரம்பித்தேன். அந்தக் காலப்பகுதியில் என் வலைப்பூவில் காமிக்ஸ் குறித்து மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன் [லார்கோவின்ச் திரைப்பட விமர்சனம் ஒரு விதி விலக்கு]. ஸ்கேனர் தந்த மயக்கத்தில், முன்னே ஓடும் மிருகம் எனும் இப்பதிவில் ஸ்கேனர் உதவியால் பிரதி செய்யப்பட்ட சில படங்களையும் இணைத்து, சின்ன அணில் மார்க் டிஜிட்டல் கமெரா உதவியால் பிடிக்கப்பட்ட பக்கங்களையும் இணைத்து பதிவை ஒரு வகை ரீ மிக்ஸாக நிறைவு செய்திருந்தேன். ஆனால் இன்று வரை இப்பதிவானது வெளியிடப்படாமல் ஓரத்தில் தூக்கிப்போட்ட பதிவாக இருந்து வந்திருக்கிறது. கடந்த பதிவான ஏலகிரியில் சிறுத்தை வேட்டையானது இப்பதிவிற்கு ஒரு புதிய கதவை திறந்து விட்டிருக்கிறது. இப்பதிவை நீங்கள் படிக்கும் போது அதனைப் புரிந்து கொள்வீர்கள். இந்த தருணத்தில் இப்பதிவை நண்பர் ஒருவர் மொழிபெயர்த்துள்ள ஒரு கவிதையுடன் வெளியிடுவது சிறப்பாக இருக்கும் என்றே கருதுகிறேன்,
பறவைகளின் அழுகை
மீன்களின் கண்ணீர்
ஏகும் இளவேனில்.
18ம் நூற்றாண்டு. பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பொண்ட் டு வொ வுவசான்எனும் மலையோரக் கிராமமொன்றின் எல்லையில், நெடிதுயர்ந்து வளர்ந்து நிற்கும் பைன் மரக்கூட்டங்களின் அருகில், சேதமுற்றிருக்கும் ஒர் வீட்டை ஆராய்ந்து கொண்டிருக்கிறது பிரான்ஸ் மன்னனின் சிறப்பு வீரர் குழு. வீட்டினுள் பொருட்கள் தாறுமாறாக சிதறிக் கிடக்கின்றன. ஆடு ஒன்றின் வயிற்றுப் பகுதி உண்ணப்பட்டு, குடல்கள் வெளியேறிய நிலையில் அது இறந்து போய்க் கிடக்கிறது. வீட்டில் வசித்த தம்பதிகளின் நிலையும் இந்நிலையிலிருந்து மாறுபடவில்லை.
வீரர்களின் உரையாடலிலிருந்து சேதத்தை ஏற்படுத்திய மிருகத்தினை கொல்வதற்காக அவர்கள் அதனை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாகிறது. தாம் கற்பனை செய்திருந்ததிலும் பார்க்க மிருகம் அளவில் பெரிதாக இருக்க வேண்டும் என்கிறான் ஒர் வீரன். மற்றொருவனோ மிருகத்தின் எடை ஒர் டன் வரை இருக்கலாம் எனக் கூறுகிறான். தேடலை வீட்டில் முடித்துக் கொண்ட வீரர்களின் காப்டனான சேவியர், வீரர்களை கிராமத்தை நோக்கி நகரச் சொல்கிறான்.
மலைகளும், மரங்களும், மென் குளிர்காற்றும், சூழ நின்று பசுமை தர வீற்றிருக்கும் கிராமத்தினுள் நுழையும் வீரர்கள், கிராமம் வெறிச்சோடிக் கிடப்பதை அவதானிக்கிறார்கள். வீடுகளில் யாருமில்லை, விளை நிலங்களிலும் யாருமில்லை. கிராமத்தின் மையத்தில் அமைந்திருக்கும் ஆலயத்தின் மேலாக காகங்கள் கூட்டமாக பறப்பதை அவதானிக்கும் காப்டன் சேவியர், வீரர்களையும் அழைத்துக்கொண்டு அப்பகுதியை நோக்கி செல்கிறான்.
ஆலயத்தின் அருகிலிருந்த புதைகுழிகள் கிளறப்பட்டு, மனித எலும்புகளும், மண்டையோடுகளும் வெளியே சிதறிக் கிடக்கின்றன. தன் வீரர்களை குதிரையிலிருந்து கீழே இறங்குமாறு உத்தரவிடும் சேவியர், மிருகத்தின் தடங்களைத் தேடி அது திரும்பிச் சென்ற பாதையைக் கண்டுபிடிக்குமாறும் , மறைந்து விட்ட கிராம மக்களை தேடும் படியும் அவர்களைப் பணிக்கிறான்.
வீரர்கள் தேடலை ஆரம்பிக்கிறார்கள். பயத்தினால் ஆலயத்தினுள் ஒளிந்து கொண்டிருக்கும் கிராம மக்களை இறுதியில் அவர்கள் கண்டு பிடிக்கிறார்கள். வீரர்களிற்கு உணவு தந்து , களைப்பாறச் செய்யும் கிராம மக்கள், நடந்தவற்றை வீரர்களிடம் விபரிக்கிறார்கள்.
இரவின் ஆரம்பத்தில் தங்கள் விளை நிலங்களில் வேலை முடிந்து வீடுகளிற்கு திரும்பிக் கொண்டிருந்த கிராமத்தவர்களின் காதில், கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள வீட்டில் இருந்தவர்களின் கதறல் சத்தங்கள் கேட்டிருக்கிறது. வீட்டிலிருந்தவர்களின் கதறலிற்கும் மேலாக ஒலித்த ஒரு மிருகத்தின் கர்ஜனையால் அவர்கள் குலை நடுங்கியது. அவர்கள் அவ் வீட்டினை நோக்கி ஓடினார்கள். காட்டினுள் மீண்டும் அம்மிருகம் நுழைவதற்கு முன்பாக அதன் அளவைக் கண்டவர்கள் பயத்தினால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
அவர்களின் பேச்சை இடைமறிக்கும் சேவியர், அம்மிருகத்தின் சாயல் எப்படி இருந்தது எனக் கேட்கிறான். அதன் சாயல் கரடியை ஒத்திருந்தாலும் கரடியை விட அது அளவில் பெரிதாக இருந்தது என்கிறான் ஒருவன். இதில் ஒருவர் அது ஒர் நர ஒநாயாக இருக்கலாம் எனத் தன் கற்பனையை கட்டவிழ்த்து விடுகிறார்.
அம்மிருகத்தை கண்டு பீதியடைந்த கிராமத்தவர்கள், கிராமத்து ஆலய மணியை அடித்து, கிராம மக்களை ஒன்று கூட்டி ஆலயத்தினுள் ஒளிந்து கொண்டதாகவும், இரவு முழுதும் ஆலயத்தை அண்மித்த பகுதியின் தரையைக் கிளறியவாறே அம்மிருகம் மூர்க்கமாக ஓலமிட்டுக் கொண்டு அலைந்ததாகவும் கிராமத்து மக்கள் தெரிவிக்கிறார்கள்.
மிருகம் திரும்பி வந்து மீண்டும் தாக்கலாம் என அஞ்சும் கிராம மக்கள், இறந்த உடல்களை நஞ்சூட்டலாம், பொறிகள் தோண்டலாம் என ஆலோசனை தெரிவிக்கிறார்கள். அருகிலுள்ள மலைக் கிராமங்களில் இவ்வழிமுறைகளை கையாண்டும் அம்மிருகம் மிகத் தந்திரமாகவும், கவனமாகவும் அவற்றை தவிர்த்ததை கிராம மக்களிற்கு விளக்கும் சேவியர், இம்மிருகம் தான் தாக்கும் இரைகளை முழுமையாக உண்ணாது அவற்றின் வயிற்றுப் பகுதியை மட்டுமே உண்ணுகிறது என்றும், ஒர் முறை தாக்கிய இடத்தில் அது மறு முறை தாக்குவதில்லை எனவும், இது சாதாரமான ஒர் மிருகம் அல்ல என்றும் கூறுகிறான்.
பிரான்ஸ் மன்னர் இம்மிருகத்தினைக் கொல்ல தங்களை பிரத்தியேகமாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கும் சேவியர், மிருகத்தின் தடங்கள் பிரான்ஸின் எல்லையைக் கடந்து இத்தாலியின் எல்லைக்குள் சென்றிருப்பதால், தங்களால் ஒர் முழு வீரர் குழுவாகவோ அல்லது பிரான்ஸ் வீரர்களின் சீருடையிலோ இத்தாலிய எல்லையைக் கடந்து அம்மிருகத்தினை வேட்டையாட முடியாது என்கிறான். தான் எல்லையைக் கடந்து செல்லப் போவதாகவும் தன்னுடன் கூட வர விரும்பும் வீரர்கள் யார் எனத் தெரிவிக்கும் படியும் சேவியர் தன் வீரர்களிடம் வினவுகிறான்.
பிரான்ஸ் எல்லையைத் தாண்டி இத்தாலியின் சவுவா பிரதேச மலைக்காடுகளில் மிருகத்தினை தேடிச் செல்கிறது வீரர்கள் குழு.பளிங்கு நீர் கொண்ட அருவிகளையும், உயர்ந்த மரங்களையும், குளிர் காற்றையும் தன்னுடன் கொண்ட வனத்தை குதிரைகளின் மீதமர்ந்து ஊடுருவிச் செல்கிறது அச்சிறு குழு.
வீரர்கள் மத்தியில் வேட்டையாடப்படும் மிருகம் குறித்து பலவித ஊகங்கள் பேசப்படுகின்றன. ஜான் வஃப்டிஸ்ட், வீரர்களின் உரையாடலில் கலந்து கொள்ளாது அமைதியாக வருகிறான். அவனை மற்ற வீரர்கள் கிண்டல் செய்கின்றனர். ஜானின் உடையிலிருந்தே அவன் பிரான்ஸ் மன்னரின் வீரர் குழுவைச் சேர்ந்தவன் அல்ல என்பது தெரிகிறது. காப்டன் சேவியர், ஜானைத் தங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டதற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என தங்களிற்குள் பேசிக் கொள்கிறார்கள் வீரர்கள்.
பயணத்தின் ஒர் தருணத்தில், காட்டினுள் முதுகு மேல் சுமைகளை சுமந்து கொண்டு நடந்து வரும் மனிதர்களைக் காணும் சேவியர் குதிரைகளை நிறுத்த சைகை செய்கிறான். சுமைகளை சுமந்து வந்த கூட்டத்தின் தலைவன் போல் காணப்படுபவன் சேவியரிடம் அவர்கள் எங்கே செல்கிறார்கள் என வினவ, தாங்கள் ரோமை நோக்கி யாத்திரை செய்கிறோம் எனப் பதில் தருகிறான் சேவியர். ஆனால் அக்கூட்டத்தினர் மீது சேவியரிற்கு சந்தேகம் உண்டாகிறது. காடுகள் வழியே, தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தும் ஒரு கூட்டமாக அது இருக்கலாம் என்பது சேவியரின் ஐயம்.
புகையிலை வேண்டுமா எனக் கேட்டவாறே தன் பையினுள் கையை வைத்து துப்பாக்கியை எடுக்க முனையும் கூட்டத்தின் தலைவனை அவன் வாயில் சுட்டுக் கொல்கிறான் சேவியர். தொடரும் துப்பாக்கி மோதலில் சில கடத்தல்காரர்கள் இறந்து விழ, எஞ்சியுள்ளவர்கள் தப்பி ஓடுகிறார்கள். தன் அருகில் இருந்த ஒர் கடத்தல் காரனை குறிபார்த்துச் சுடத் தவறி விடுகிறான் ஜான்.
தாக்குதல் தந்த அதிர்ச்சியாலும், வனத்தினூடு செய்த பயணத்தின் களைப்பினாலும், ஏரி ஒன்றின் அருகில் ஓய்வெடுக்க ஒதுங்குகிறது வீரர் குழு. மோதலின் போது காயம் பட்ட வீரனொருவனின் காயத்திற்கு கட்டுப் போடுகிறான் ஜான். ஓய்வெடுக்கும் வீரர்கள், ஜான் அருகிலிருந்த நபரைக் கூட குறி பார்த்து சுட முடியாததைக் கூறி கிண்டல் பண்ணுகிறார்கள்.
சேவியர், ஜானிடம் அவன் யாரையும் இதுவரை கொன்றதில்லையா என வினவுகிறான். ஜானோ, துரதிர்ஷ்டவசமாக நான் கொன்றிருக்கிறேன், ஆனால் நான் அச் செயலை விரும்ப வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறான்.
சேவியரோ, தான் ஒரு முறை துப்பாக்கி ஏந்தி நின்ற ஒரு சிறுவனை நெற்றியில் சுட்டுக் கொன்றதாகக் கூறுகிறான். அது எனக்குப் பெருமை தரவில்லை ஆனால் அதனை மாற்றியமைப்பதற்காக கடந்த காலத்திற்கு என்னால் திரும்பிச் செல்ல முடியாது. அதனுடன் நான் வாழ்கிறேன், அதிலிருந்து முன்னோக்கிச் செல்கிறேன் அதே போன்று ஜானும் கடந்த காலத்தின் கசப்புக்களை மறக்க முயல வேண்டும் என்கிறான்.
இதே வேளை பயங்கரமான கர்ஜனை ஒன்று அவர்கள் தங்கியிருந்த பகுதியில் ஒலிக்கிறது. ஓய்வில் நின்ற குதிரைகள் தறி கெட்டு ஓடுகின்றன. கர்ஜனை வந்த திசை நோக்கி ஜானும், சேவியரும் ஓடுகிறார்கள். ஏரியின் கரையருகில் ஒர் வீரன், வயிற்றுப் பகுதி கடித்து உண்ணப்பட்டுள்ள நிலையில் இறந்து போய்க் கிடக்கின்றான். ஏரியின் கரைகளை நோட்டம் விடும் சேவியர், ஜான் சுட்டிக் காட்டிய திசையில், தூரத்தில் தெரியும் ஒர் மிருகத்தின் உருவத்தை நோக்கிச் சுடுகிறான் ஆனால் மிருகம் மறைந்து விடுகிறது.
அழகான மலைப் பூக்களில், தேனீக்கள் உற்சாகமாக தேன் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. விழுந்து கிடந்த மரமொன்றின் உடல் மீது இரு பைன் மரக் காய்களை இலக்கென வைத்து, ஜானிற்கு துப்பாக்கி சுடப் பயிற்சி தருகிறான் சேவியர்.
ஜான் விரைவாக கற்றுக் கொள்வதாக தன் பாராட்டுக்களையும் சேவியர் தெரிவிக்கின்றான். பயிற்சியை முடித்துக் கொண்டு இருவரும் வீரர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு திரும்புகிறார்கள்.
அருகில் இருந்த கிராமம் ஒன்றில் உணவுப் பொருட்கள் வாங்கி வரச் சென்ற வீரர்கள், சற்றுத் தொலைவிலுள்ள மலைக் கிராமமொன்றில் பசுக்கூட்டங்களை மிருகம் தாக்கியதாகவும், எல்லைகளினூடாக பொருட்களைக் கடத்திச் செல்பவர்களோடு தாங்கள் கொண்ட மோதல் கிராம அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். தாங்கள் கைது செய்யப் பட்டால் பிரான்சின் மன்னர் கூட தங்களை விடுவிக்க மாட்டார் என்பதனை உணரும் சேவியர், தான் தனியே மிருக வேட்டையை தொடர்வதாகவும், மற்றவர்களை திரும்பி போகவும் சொல்கிறான்.
சில வீரர்கள் கிளம்பிச் சென்றுவிட, ஜானும், எஞ்சிய சில வீரர்களும் சேவியருடன் மிருகத்தினை தேடிச் செல்ல உடன் படுகிறார்கள். மலையில் வளர்ந்துள்ள முட் செடியொன்றை[Thistle] அவதானிக்கும் ஜான், நாளை மதியம் மழை வரும் என்கிறான். உடனிருந்த வீரர்கள் அவன் ஒர் கிறுக்கன் என நினைத்துக் கொள்கிறார்கள்.
தாங்கள் அதிகாலையில் பயணத்தை ஆரம்பித்தாலும் கிராமத்தை மழை வருமுன் சென்றடைய முடியாது என்பதை அவர்கள் உணர்கிறார்கள். மழையினால் மிருகத்தின் தடங்கள் அழிந்தால் பயணத்தில் பலனேதும் இல்லையல்லவா. எனவே அன்றிரவே கிளம்பலாம் என்கிறான் ஜான்.
இந்த மலைக் காட்டில் இரவில் யார் வழி காட்டுவார்கள் என வீரர்கள் வினவ, மலையின் புற்பரப்பில் மலர்ந்திருக்கும் பூக்களில் தேனெடுத்துச் செல்லும் தேனீக்களை தொடர்ந்து செல்கிறான் ஜான். சிறிது நேர தொடர்தலின் பின் தேனீக்களை வளர்க்கும் நபர் ஒருவனைக் கண்டு கொள்ளும் ஜான் அவனுடன் உரையாடுகிறான்.
வசந்த காலத்தின் போது மலைகளில் தேனீக் கூடுகளை இடங்கள் மாற்றுவர். மலையின் வெவ்வெறு பகுதிகளில் மலர்ந்து கிடக்கும் மலர்களின் தேனை தேனீக்கள் உறிஞ்சுவதற்காகவே இந்த நடவடிக்கை. தேன் கூடுகளை இடம் மாற்ற வேண்டுமானால், தேனீக்கள் கூட்டில் உறங்கும் இரவு வேளையே அதற்கு உகந்தது. வீரர்கள் குதிரைகளில் தன் தேன் கூடுகளை சுமந்து வந்து உதவுவார்களேயானால், அவர்களிற்கு தான் இரவில் காட்டில் வழிகாட்டுவதாக சம்மதம் தருகிறான் தேனீக்கள் வளர்ப்பவன்.
பயணம் ஆரம்பமாகிறது. கையில் ஏந்திய லாந்தர்களுடன் வனத்தின் அடர்ந்த இருளினூடு நடந்து செல்கிறார்கள் அவர்கள். மலைப் பாதையின் ஒரு பகுதியில் ஓநாய்க் கூட்டமொன்றின், மினுங்கும் வெளிர் பச்சைக் கண்கள் இரவினைக் கிழித்து அவர்களை வெறித்துப் பார்க்கின்றன. அவர்களின் உள்ளம் கடவுளை வேண்டிக் கொள்கிறது. அவர்களின் அதிர்ஷ்டம் ஓநாய்கள் அவர்களைத் தாக்கவில்லை.
காலையில் அவர்கள் செல்ல வேண்டிய கிராமத்தின் வழியில் அவர்களை விடுகிறான் தேனீ வளர்ப்பவன். அப் பாதையில் தங்கள் பயணத்தை தொடரும் வீரர் குழுவை பலத்த மழை எதிர் கொள்கிறது. துப்பாக்கியின் வெடி மருந்துகள் நனையாது பாதுகாக்கும் படி வீரர்களைக் கேட்டுக் கொள்கிறான் சேவியர். அவ்வேளையில் அவர்களை, தங்கள் கழுத்தில் கட்டியுள்ள சிறு மணிகள் ஒலியெழுப்ப பதட்டத்துடன் ஒடிக், கடந்து செல்கின்றது ஒர் பசுக்கூட்டம்.
அப்பசுக் கூட்டத்தினை தொடர்ந்து ஓடி வரும் பெண்கள், வீரர்களைக் கண்டு கொள்கிறார்கள். இருள் மிருகம் திரும்பவும் வந்து விட்டதாகவும், தங்களிற்கு உதவி செய்யும் படியும் வீரர்களை வேண்டுகிறார்கள். பெண்னொருத்தி மலையின் ஒர் பகுதியில் அமைந்திருக்கும் சிலுவை ஒன்றினைச் சுட்டிக் காட்டுகிறாள். கடும் மழையினுள், இருண்ட உருவமாய், சிலுவையை விட உயரமாக எழுந்து நிற்கிறது அந்த மிருகம். சிலுவையை நோக்கி குதிரைகளில் விரைகிறார்கள் வீரர்கள். அவர்கள் சிலுவையை நெருங்கும் வேளையில் அம்மிருகம் அங்கிருந்து மறைந்து விடுகிறது.
அன்றைய இரவில், கிராமத்தில் தங்கும் வீரர்களிடம் தங்கள் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறார்கள் கிராமத்தில் வாழும் பெண்கள், ஆண்கள் மலை அடிவாரத்தை அண்டிய பகுதிகளில் வேலை செய்வதால் அவர்களால் தினந்தோறும் வீடு திரும்ப முடியாது எனும் தகவல் வீரர்கள் சிலரிடம் ரகசியப் புன்னகையை உண்டாக்குகிறது. பெண்களிடம் மிருகத்தைப் பற்றி வினவுகிறான் சேவியர். அம் மிருகம் மலையின் உயர்ந்த சிகரப் பகுதியில், மனிதர்கள் இது வரை காலடி எடுத்து வைக்காத பிரதேசத்தில் வாழ்வதாக கூறுகிறார்கள் பெண்கள். இனி மிருகத்தை தொடர்வது பைத்தியக்காரத்தனமான செயல் என மற்ற வீரர்கள் ஒதுங்கிக் கொள்ள, மறு நாள் காலையில், மனிதர்கள் சென்றிராத மலைப்பகுதியினை நோக்கி மிருகத்தினை தேடிச்செல்கிறார்கள் ஜானும், சேவியரும்......
மலைப் பயணத்தின் ரம்யம், அதன் அழகில் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள், மலைகளின் பிரம்மாண்டமும் மனிதனின் தனிமையும் மனித மனதில் ஆடும் விளையாட்டு, தன் எல்லைக்குள் அத்து மீறி விட்ட இரு மனிதர்களை அலைக்கழித்து, ஆட்டம் காட்டும் தந்திரம் அறிந்த ஒர் மிருகம், இறுதியாக மனிதனிற்கும் மிருகத்திற்குமிடையிலான நேருக்குநேர் மோதல். இரு மனிதர்களின் வாழ்க்கையிலும் அது ஏற்படுத்தும் மாற்றங்கள் எனத் தொடர்கிறது கதை.
Le Marquis d'Anaon(The Marquis of Anaon) எனும் காமிக்ஸ் தொடர் வரிசையில், 2006ல் வெளியான La Bete [மிருகம்] எனப்படும், நான்காவது ஆல்பம் இதுவாகும். 18ம் நூற்றாண்டில் பிரபல்யமான இக்கதை வரிசை இப்போது காமிக்ஸ் வடிவில் வெளியாகிறது. லு மார்கி ட'அனாவொன் என்பது அல்லறும் ஆன்மாக்களின் ஆண்டகை எனப் பொருள் படும். இது வரையில் மொத்தம் 5 ஆல்பங்கள் இக் கதை வரிசையில் வெளியாகி உள்ளன.
எந்த வித அதிரடி ஆர்பாட்டங்களோ, அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளோ இல்லாது அமைதியாக நகர்கிறது கதை. மனிதர்களை, மனிதர்களாகவே சித்தரிக்கும் இக்கதையானது வேகக் கதை ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளாது.
இயற்கையோடு ஒன்றி வாழும் மலைப் பிரதேச மக்கள், பணம் என்பதன் தாக்கம் பற்றி அதிகம் அறிந்திராத மக்கள், ஒருவரிற்கு ஒருவர் உதவி செய்து அனைவரும் நலமாக வாழ வேண்டுமென வாழும் ஏழை மக்கள், கடந்த கால நினைவுகளில் கூடு கட்டி முடங்கிப் போயிருக்கும் ஜான் [இவர் தான் அந்த ஆண்டகை] , கடந்த காலத்தின் ஆவிகளை தான் வெற்றிகரமாக கடந்து விட்டேன் எனும் மாயையில் புரளும் காப்டன் சேவியர், மனிதனின் வாழ்விட எல்லைகளும், அவன் ஆசைகளும் விரிந்து கொள்ள, குறுகிய பகுதிக்குள் தங்களை அடக்கி கொள்ள வேண்டிய இயற்கையும் ,விலங்குகளும் என கதையை தெளிவாக நகர்த்திச் செல்கிறார் ஃபவியன் வெஹ்ல்மேன் (Fabien Vehlmann).
வெஹ்ல்மேன், 1972ல் பிரான்சில் பிறந்தவர். சிறு வயது முதலே காமிக்ஸ் மேல் காதல் கொண்டவர். நிர்வாகத் துறையில் கல்வி. சித்திரக்காரராக முயற்சித்து பின் கதாசிரியராக தன்னை நிலை நாட்டிக் கொண்டார். இவரின் மற்றுமொரு புகழ் பெற்ற தொடரான கீரின் மனோர் பற்றிய பதிவை நண்பர் ரஃபிக் அவர்களின் காமிக்காலஜியில் நீங்கள் படிக்கலாம்.
கதையின் மென்மையான ஓட்டத்திற்கேற்ப, மலைப் பிரதேசத்தின் வனப்பை அழகான காட்சிகளாக விரிய விட்டிருக்கிறார் மாத்தியூ பொன்னொம் [Mathhieu Bonhomme]. 18ம் நூற்றாண்டின் மலைப்பகுதி கிராமங்கள், அங்கு வசிக்கும் மக்கள், அவர்களின் வதிவிடங்கள், மலைக் காடுகளின் வனப்பு, மலைகளின் ரம்யம், திகில் ஊறச் செய்யும் இரவுக் காட்சிகள் என தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார். இறுதி மோதல் காட்சியில் சித்திரங்களை மிகையின்றி இயல்பாக வரைந்து மனதை அள்ளுகிறார். இவர் 1973ல் பாரிசில் பிறந்தவர். சித்திரங்கள் வரைதல் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் தன் கல்வியையும் கலைத்துறையிலேயே தொடர்ந்தார். ஸ்பிரு போன்ற சித்திர இதழ்களில் பணியாற்றியவர். என் சித்திரங்கள், முதலில் என்னைக் களிப்படையச் செய்தாலே அது வாசகர்களையும் களிப்படையச் செய்யும் என்று கூறுபவர். காமிக்ஸ் உலகின் வளர்ந்து வரும் கலைஞர்களில் ஒருவர். சுருக்கமாக கூறினால், இயற்கை ஆர்வலர்களைக் கவரும் கதையாக இக்காமிக்ஸ் கதை அமைந்திருக்கிறது.
இயற்கையில் வாழும் மிருகங்களை எளிதாக வெற்றி கொள்ளும் மனிதன், தன் மனதில் வாழும் மிருகங்களை வெற்றி கொள்வதில் எப்போதும் ஜெயித்து விடுவதில்லை. தானும் ஒரு மிருகம் என்பதை அவன் இலகுவாக மறந்துவிடக்கூடியவனாகவே வாழ்ந்து வருகிறான். மிருகம் முன்னே ஓடிக் கொண்டேயிருக்கிறது. [***]
ஆர்வலர்களிற்கு
Fabien Vehlmann
Mathhieu Bonhomme
Le Marquis d'Anaon