கிராமத்தில் மழை, நாட்களை எண்ணாது பெய்து கொண்டிருந்தது. மரங்களில் அரும்புகள் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தன. தனது தந்தையின் பண்ணையில், கடினமான ஒரு வேலை நாளின் முடிவை எட்டுகிறான் 13 வயது நிரம்பிய டாம்.
குடும்பத்தின் ஏழாவது மகனான டாமிற்கு ஏதாவது தொழில் ஒன்றைத் தேடித் தரவேண்டிய கட்டாயம் அவனது தந்தைக்கு இருக்கிறது. அந்தக் காலங்களில் தந்தையின் சொத்துக்கள் குடும்பத்தின் தலை மகனிற்கே உரிமையான ஒன்றாகும் என்பது எழுதப்படாத விதியாகும். குடும்பத்தின் அடுத்த புத்திரர்களிற்கு வேறு ஏதாவது வேலை ஒன்றைத் தேடிக் கொடுப்பதுடன் பெரும்பாலும் தந்தையின் கடமைகள் முடிந்துவிடும்.
டாம் வசிக்கும் கிராமத்தில் வேலைகளிற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என்பதால் ஆவிகள், சூன்யக்காரிகள், துர் சக்திகள் போன்றவற்றை விரட்டியடிக்கும் பேயோட்டி ஒருவனிடம் டாமை தொழில் கற்றுக் கொள்வதற்காக சேர்த்துவிடத் தீர்மானிக்கிறார் அவன் தந்தை. இந்த தீர்மானத்தில் டாமின் அன்னைக்கு பெரும் பங்கு இருக்கிறது. கிரிகொரி எனப்படும் பேயோட்டியை இதற்காக தொடர்பு கொள்கிறாள் அவள்.
மழையினூடு தன் தந்தையின் பண்ணையில் டாம் வேலையை முடித்திருந்த தருணம், பண்ணையை தேடி வந்து சேர்கிறான் பேயோட்டி கிரிகொரி. நீண்ட அங்கி, இடது கையில் பிடித்திருக்கும் ஒரு நீண்ட கோல், பச்சைக் கண்கள், வெள்ளியும் சாம்பலும் கலந்து அடித்த கேசம்.
பேயோட்டியை உன்னிப்பாக அவதானிக்கிறான் டாம். தன்னைப்போலவே பச்சை விழிகளும், இடது கைப்பழக்கமும் உடையவனாக கிரிகொரி இருக்கிறான் என்பது அவனிற்கு வியப்பை அளிக்கிறது. வந்த வேகத்திலேயே டாம் குறித்த கேள்விகளை அவன் தந்தையிடம் கேட்க ஆரம்பிக்கிறான் பேயோட்டி கிரிகொரி. அவன் கேள்விகளிற்கான பதில்களில் அவன் திருப்தி கண்டதும், பேயோட்டி வேலையின் சிரமங்கள் குறித்து டாமின் தந்தைக்கு விளக்குகிறான் அவன். அந்த விளக்கங்களைக் கேட்ட பின்பும் கூட டாமை பேயோட்டி வேலை கற்பதற்கு அனுப்புவதிலிருந்து டாமின் தந்தை பின் வாங்கவில்லை.
டாமின் பயிற்சிக் காலத்திற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் குறித்து பேச ஆரம்பிக்கிறான் பேயோட்டி. டாமின் தந்தை பேயோட்டி கூறிய கட்டணத்தை தருவதற்கு உடன்படுகிறார். மறுநாள் விடியலின் ஆரம்ப மணித்துளிகளில் டாமை தான் வந்து அழைத்துச் செல்வதாக கூறி அங்கிருந்து கிளம்பிச் செல்கிறான் பேயோட்டி கிரிகொரி.
தன் குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு மறுநாள் காலையில் பேயோட்டியுடன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் டாம். ஒரு குடும்பத்தின் ஏழாவது புதல்வனிற்கு, ஏழாவதாக பிறக்கும் ஆண் மகவிற்கு சிறப்பான ஒரு சக்தி கிடைக்கப்பெறும் என்று நம்பப்படுகிறது. டாமிற்கு அந்த சக்தி இருப்பதை அவன் தாய் தெரிந்திருக்கிறாள் ஏனெனில் டாமின் தாயிடமும் சில சிறப்பான ஆற்றல்கள் பொதிந்து இருக்கின்றன.
HORSHAW எனும் கிராமத்தை நோக்கி அடித்துப் பெய்யும் மழையினுள் டாமின் பயணம் தொடர்கிறது. செல்லும் வழியில் தனது புதிய சிஷ்யன் டாமிற்கு இருளில் நடமாடும் துர் சக்திகளையும், தீமையின் பிறப்புக்களையும் குறித்து அறிவுறுத்துகிறான் பேயோட்டி.
ஒரு பேயோட்டியின் கடமை என்பது தீய சக்திகளின் பிடியிலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்றுவதே என்பதை டாமிற்கு விளக்கும் கிரிகொரி, இந்த தொழிலிற்கு வரவேற்பு இருந்தாலும் பொதுமக்கள் பேயோட்டிகளுடன் நெருங்கிப் பழக மாட்டார்கள் என்பதையும், பேயோட்டியின் வாழ்க்கையில் அவனது துணை பெரும்பாலும் தனிமையே என்பதையும் டாமிற்கு தெளிவுபடுத்துகிறான்.
இவ்வாறாக உரையாடியவாறே அவர்கள் ஹார்சோ கிராமத்தை வந்தடைகிறார்கள். நிலக்கரிச் சுரங்கங்களை கொண்ட, நிலக்கரியின் தூசியால் அழுக்கேறிய கிராமமாக ஹார்சோ இருக்கிறது. பேயோட்டியையும், அவனது சிஷ்யனையும் காணும் கிராம மக்கள், தெருக்களிலிருந்து ஒதுங்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள். கிராமத்தின் ஒரு கோடியில், கிராமத்து மக்கள் வசிப்பதை கைவிட்ட, பாழடைந்த ஒரு குடியிருப்புப் பகுதிக்கு டாமை இட்டுச் செல்கிறான் பேயோட்டி.
குடியிருப்பின் ஒரு வீட்டின் கதவைத் திறந்து அந்த வீட்டினுள் நுழைகிறான் பேயோட்டி. வீடு யாருமற்று சிலந்திகளினதும், எலிகளினதும் தங்கும் கூரையாக பாழடைந்து போய்க் கிடக்கிறது. அந்த வீட்டினுள் உறைந்திருக்கும் ஒரு அமானுஷ்யமான குளிரின் தழுவலை டாமால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது.
சரியாக நள்ளிரவு 12 மணிக்கு, அந்த வீட்டின் நிலவறையில் வாழும் ஒரு துர் சக்தியை, டாம் தனியாக எதிர் கொள்ள வேண்டும் என அவனிடம் கேட்டுக் கொள்கிறான் பேயோட்டி. இதில் டாம் தேறினால் மட்டுமே தன்னுடன் பயிற்சிக் காலத்தை தொடரலாம் இல்லையெனில் அவனைத் தன் சிஷ்யனாக தொடர அனுமதிக்க முடியாது என்பதையும் டாமிடம் உறுதியாகக் கூறி விட்டு, அந்த பாழடைந்த வீட்டில் டாமை தனியே விட்டுச் செல்கிறான் பேயோட்டி.
மெழுகுவர்த்தி ஒன்றின் துணையுடன், வீட்டில் பரவியிருக்கும் அமானுடமான அந்தக் குளிரிற்கும், எலிகளிற்கும் துணையாகவிருக்க ஆரம்பிக்கிறான் டாம். மழைத்துளிகளுடன் மணித்துளிகள் விழுந்தோடிச் செல்கின்றன, நள்ளிரவானது அந்த பாழடைந்த வீட்டை ஆசையுடன் நெருங்கி வர வர, வீட்டின் நிலவறையில் இருந்து எழ ஆரம்பிக்கிறது ஒரு வினோதமான ஒலி…. உயிரை ஒடுங்கச் செய்யும் அந்த ஒலியின் விரல்கள் டாமின் மனதின் அச்சங்களை மெல்ல மெல்ல தட்டியெழுப்ப ஆரம்பிக்கின்றன…..
பொதுவாக கதை ஒன்றில் ஊடோடும் விறுவிறுப்பானது வாசகனை அவன் படிக்கும் கதையின் பக்கங்களை விரைவாக நகர்த்திட உதவி செய்யும். சில கதைகளின் நிலை இதற்கு எதிர்மாறாக அமைந்திருக்கும். அக்கதைகளின் நெடுகிலும் பரந்திருக்கும் வறட்சியானது, பக்கங்களை விட்டு படிப்பவரை விரைவாக விரட்டியடிக்கும். Joseph Delaney எழுதியிருக்கும் The Wardstone Chronicles ன் முதல் புத்தகமான The Spook’s Apprentice எனும் இந்தக் கதையானது கச்சிதமாக வாசகனை விரட்டியடிக்கும் வகைக்குள் இடம் பிடித்துக் கொள்கிறது.
நாவல் சிறுவர்களிற்காக எழுதப்பட்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனால் அதைத்தாண்டியும் ஒரு வாசகனை அது திருப்திப் படுத்தும்போதுதான் அது அதற்குரிய வெற்றிப் பரப்பை கண்டடைய முடிகிறது. சிறுவர்களுடன், பெரியவர்களையும் மகிழ்விக்கும் ஒரு படைப்பே சிறப்பான சிறுவர் இலக்கியத்திற்குள் நுழைந்திட முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மிகவும் பரபரப்பான, எதிர்பார்க்க வைக்கும் ஆரம்பத்துடன் தொடங்கும் இந்நாவல், படிப்படியாக அதிலிருக்கும் வெறுமை வழி, மாய உலகை அல்லது இருள் உலகை வாசகனிற்கு காட்ட முடியாது தன் வழி தொடர்கிறது. ஆவலுடன் கதையைப் படிக்க ஆரம்பித்த எனக்கு கிடைத்தது ஏமாற்றமே.
தனது குருவான கிரிகொரியிடம் தீய சக்திகளை அழிப்பதற்காக பயிற்சி பெறுபவனாக டாமின் வாழ்க்கையானது கதையில் நகர்கிறது. குழந்தைகளின் ரத்தம் குடிக்கும் கொடிய சூன்யக்காரிகள், மனிதர்களிற்கு தொல்லை தரும் பூதங்கள் [Gobelin] ஆகியோரை எவ்வாறு ஒரு பேயோட்டி எதிர்கொள்வது என்பதே இம்முதலாம் பாகத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இங்கிலாந்து நாட்டின் கர்ண பரம்பரைக் கதைகளின் பாத்திரங்களை, மற்றும் நம்பிக்கைகளைக் கொண்டு கதையை உருவாக்கியிருக்கிறார் நாவலாசிரியர் டுலேனி.
டாமின் அன்னையை சூழ்ந்திருக்கும் மர்மமும், அவர் வழியாக டாமிற்கு கிடைத்திருக்ககூடிய சில சிறப்பான கொடைகளும், தீமையின் இருள் நாளிற்கு நாள் அதிகரித்து வரும் உலகில், அதனை இருளின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்கே டாம் தயாராகிறான் என்பதும் கதையில் உணர்த்தப்படுகிறது.
உணர்த்தப்பட்டவற்றை ஆசிரியர் வாசகனிடம் அவற்றின் முழு உயிர்ப்புடன் எடுத்து வந்தாரா என்று கேட்டால், இல்லை என்பதே என் பதிலாகும். நாவலாசிரியர் டுலேனியின் கற்பனை வறட்சியானது, கதையின் ஆரம்ப பகுதி தந்த எதிர்பார்ப்பால் ஆவலுற்றிருந்த வாசகனை மெல்ல மெல்ல பட்டினி போடுகிறது.
சூன்யகாரிகள், பூதங்கள் குறித்த மேலோட்டமான தகவல்கள், அவர்களை எதிர் கொள்ளும் சாதாரணமான வழிமுறைகள், இவை எதுவுமே வாசகனை திருப்தி செய்வதாக இல்லை. இத்தகவல்களை சுவையாகத் தன் கற்பனையுடன் கலந்து, விபரித்து, புதிய அனுபவம் ஒன்றிற்கு வாசகனை எடுத்துச் செல்வதற்கு பதிலாக, டாமிற்கு பேயோட்டி கிரிகொரி வழங்கும் பாடங்கள் போன்று, சுருக்கமான குறிப்புக்கள் வழி கதையை கூறிச் செல்கிறார் டுலேனி.
கதையில் வரும் பாத்திரங்களிற்கு இடையில் நிலவும் உறவில் நாவாலாசிரியர் ஏற்படுத்தும் இடைவெளியானது பாத்திரங்கள் மீது எந்த உணர்வையும் படிப்பவர் உருவாக்கிக் கொள்ளப் பெருந் தடையாகிறது. இதனால் வாசகர்களிலிருந்து வெகுதூரம் தள்ளிப்போகிறார்கள் கதை மாந்தர்கள். கதையில் மந்திரம் இல்லை என்பது புதுமை என்பதாகப் பட்டாலும், இவ்வகைக் கதைகளை வெகுவாக ரசிக்க வைக்கும் நகைச்சுவையானது இந்தக் கதையில் துளியும் கிடையாது என்பது வேதனையானது. சிறுவர்களை சற்று அச்சம் கொள்ளச் செய்யும் சம்பவங்களுடன் கதையைக் கூறுகிறார் டுலேனி, சிறப்பாக சொல்லப்பட்டிருக்க வேண்டிய இக்கதையை அவர் முடக்கிப் போட்டிருக்கிறார்.
இதுவரையில் மொத்தம் ஆறு நாவல்கள் இக்கதைத் தொடரில் வெளியாகியிருப்பது, நல்ல சிறுவர் இலக்கியத்தின் ரசனை பட்டுப் போவதையும், லாபம் பார்க்கும் சிறுவர் இலக்கியத்தின் வணிக முகத்தையுமே காட்டி நிற்கிறது. இரவு வேளையில் படிக்காதீர்கள் என பின்னட்டையில் போட்டிருக்கிறார்கள், என்னைக் கேட்டால் முதலாம் பாகத்தின் பின் அடுத்த பாகங்களைப் படிப்பதற்குத்தான் மலையளவு தைரியம் வேண்டுமென்பேன். [*]
அருமையான நடையில் மிக நல்ல பதிவு நண்பரே. ரசித்து வாசித்தேன்.
ReplyDeleteசிறப்பா இருக்கு
ReplyDeleteஅருமை நண்பரே,
ReplyDeleteமிக அழகான நடையில் எழுதியுள்ளீர்கள்.
Appa,naan polachchen...... :)
ReplyDeleteஅன்பு நண்பரே
ReplyDeleteசிறுவர் இலக்கியம் எழுதுவது கடினமான ஒன்று. வெகு சிலரே அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீங்கள் கூறியது போல் சிறுவர் இலக்கியத்தில் முக்கியமானது நகைச்சுவை.
மழையின் ஊடாக ஒரு கிராமம். இரவு. முழுக்க முக்காடும், பச்சைக்கண்களும், கையில் ஒரு கோலுடன் ஒரு மந்திரவாதி.
மிக பிரமாதமான ஆரம்பம். ஆனால் அதைத் தொடர்ந்து கதையும், வர்ணணைகளும் முக்கியம். அது இல்லை என நீங்கள் சொல்லியிருப்பதால், இக்கதை தொடரை காண நேர்ந்தால் காத தூரம் ஒடிவிடுகிறேன்.
அட்டைபடம் வெகு நன்றாக வந்திருக்கிறாக தோன்றுகிறது. ஜோனதன் ஸ்ட்ரௌட் எழுதிய பர்த்தலமியூ ட்ரையலஜி பற்றி நீங்கள் எழுதினால் மகிழ்வேன். நீங்கள் ஏற்கனவே படித்த கதைத் தொடர்தானே.
நண்பர் சரவணக்குமார் அவர்களே, தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் அண்ணாமலையான், தாங்கள் அளித்து வரும் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி நண்பரே.
நண்பர் கார்திகேயன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் இலுமினாட்டி, இதிலிருந்து தப்பியிருக்கலாம் பிறிதொன்றில் அகப்பட்டுக் கொள்வீர்களே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ஜோஸ், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும், நானும் ஆவலுடன் படிப்பதை தொடர்ந்தேன் ஆனால் நண்பரே ஹார்சோ பேய் பிடித்த வீட்டில் ஆரம்பிக்கும் ஏமாற்றம் கதையின் முடிவு வரை தொடர்கிறது. இதற்கு பின்பு வரும் பாகங்கள் இதைப் போலவேயிருந்தால் அவற்றைப் படிக்கவே தேவையில்லை என்று கருதுகிறேன். இவ்வகையான தீர்மானங்கள் ஒரு வகையில் நியாயமற்றது என்பதை நான் அறிந்திருக்கிறேன் இருப்பினும் தொடர்ந்து படிக்கப் போவதில்லை. அருமையான அட்டைப்படம் ஆனால் உள்ளேதான் அருமை காணாமல் போய்விடுகிறது. ஜோனதன் ஸ்ட்ரெளட்டின் பார்த்தலமி ட்ரையாலஜியை மறு வாசிப்பு செய்யும் வாய்புக் கிடைத்தால் எழுதி விடுகிறேன் ஆனால் அந்தக் கதைகளைப் படிக்கும் போது நான் பதிவுகள் எழுதவில்லையே என்பதை நினைத்து வருந்துகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
மீ த பேக் !! - நண்பரே . . அட்டகாசமான துவக்கம். எனக்கு, நம்பர் ஒன் போகவைக்கும்படியான பேய்க்கதைகள் என்றால் உயிர். படித்துப் படித்து பயப்படுவேன். . அப்படியே தான் பேய்ப்படங்களும். . உங்கள் இந்த விமர்சனத்தை நான் படிக்கும் நேரம் சரியாக இரவு 12:07. . . மயிர்க்கூச்செரியப் படித்தேன் . . சூப்பர் !!!
ReplyDeleteதொடர்ந்து நல்ல பல புத்தகங்களை அறிமுகம் செய்வது பிடித்திருக்கிறது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteதல,நீங்க என்ன சொல்ல வர்றிங்கன்னு எனக்கு புரியுது.ஆனா,அத நம்ம கருந்தேள் கிட்ட சொல்லுங்க.அவர் தான் சமீபத்துல பாதிக்கப்பட்டவர்... :)
ReplyDeleteநண்பர் கருந்தேள் அவர்களே, நீங்கள் கூறுவதைப்போல் அட்டகாசமான ஆரம்பம் ஆனால் அதன் பின்பு ஏமாற்றம், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநண்பர் மயில்ராவணன், தங்களிற்கு பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
நண்பர் இலுமினாட்டி, மீண்டும் வந்து கருத்துப் பதிந்தமைக்கு நன்றிகள் நண்பரே.