நியூயார்க் நகரக் கல்வி நிறுவனம் ஒன்றில் கல்வி கற்று வரும் இளைஞன் டைலர் [Robert Pattinson], அவன் மிகுந்த பாசம் கொண்டிருந்த சகோதரன் மைக்கல் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வால், தன் மனதில் மைக்கல் குறித்த நினைவுகள் தரும் வேதனைகளுடன் தன் நாட்களை நகர்த்துகிறான். பகட்டும், பொய்வேடமும் புனைந்து வாழும் சமூகத்தின் மீது அவன் வெறுப்புக் கொண்டவனாகவும் இருக்கிறான்.
டைலரின் தந்தையான சார்ல்ஸ் [Pierce Brosnan], பெரும் நிறுவனம் ஒன்றை நிர்வகித்து வருபவர். தனது பணியின் காரணமாக தன் குடும்ப உறவுகளை தகுந்த முறையில் பேண முடியாத நிர்ப்பந்தத்திற்கு உள்ளானவராக அவர் இருக்கிறார்.
தன் தந்தை எப்போதும் வேலையின் மீதே அக்கறை கொண்டவராக இருப்பதை இளைஞன் டைலர் வெறுக்கிறான். இதனால் அவனிற்கும் அவன் தந்தை சார்ல்ஸிற்குமிடையில் சுமுகமற்ற உறவு நிலவி வருகிறது.
தன் சகோதரன் மைக்கலின் மரணத்திற்கும்கூட, சொந்தப் பிள்ளைகளின் மீது அக்கறை காட்டாத தன் தந்தையின் அதிகாரப் போக்கே ஒரு வகையில் காரணம் எனும் எண்ணத்தை தன் மனதில் கொண்டிருக்கிறான் டைலர்.
அய்டான் எனும் தன் நண்பனுடன் வாழ்ந்து வரும் டைலரிற்கு கரோலின் எனும் தங்கை இருக்கிறாள். டைலரின் தந்தையான சார்லஸை விட்டு பிரிந்து வாழும் டைலரின் தாயுடன் அவள் வசித்து வருகிறாள். மிகச் சிறப்பாக சித்திரங்கள் தீட்டும் திறமை அவளிற்கு வாய்த்திருக்கிறது. தன் தந்தை சார்ல்ஸ் தன் மீது அக்கறையாக இல்லை என்பது அவள் மனதில் ஏக்கமாக படிந்திருக்கிறது. இந்த ஏக்கம் அவளை நண்பர்களை உருவாக்கி கொள்வதிலிருந்து அப்பால் தள்ளி விடுகிறது. பள்ளியில் சக மாணவிகள் அவளை கிறுக்கு என ரகசியமாக கிண்டல் பண்ணுகிறார்கள்.
சிறுமி கரோலினிற்கு வழங்கக்கூடிய கவனிப்பைக்கூட தன் தந்தை அவளிற்கு வழங்காது இருப்பதையிட்டு கோபம் கொள்ளும் டைலர், கரோலின்மீது மிகுந்த பாசமும், அக்கறை கொண்டவனாகவும் இருந்து வருகிறான். தனக்கு நேரம் கிடைக்கும் வேளைகளில் எல்லாம் கரோலினை வந்து சந்தித்து, அவள் பொழுதுகளை இனிமையானவையாக்க முயல்கிறான், அவள் மனதில் நம்பிக்கையின் அரும்புகளை மலரச் செய்கிறான்.
தன் சகோதரனின் தற்கொலை நினைவுகள் சாதாரண இளைஞன் ஒருவனிற்குரிய கேளிக்கையான வாழ்விலிருந்து டைலரை ஒதுங்கி வாழச் செய்கின்றன. இதனால் டைலர் மீது எரிச்சலுறும் அவன் நண்பன் அய்டான், ஒரு மாலைப் பொழுதை இனிமையாகக் கழிப்பதற்காக டைலரை வற்புறுத்தி ஒரு மதுபான விடுதிக்கு தன்னுடன் அழைத்துச் செல்கிறான்.
மாலையை இனிதாக கழித்த பின், நன்றாக மதுவருந்திய நிலையில் விடுதியை விட்டு வெளியே வருகிறார்கள் நண்பர்கள். அந்த வேளையில் தெருவில் ஒரு கைகலப்பு உருவாக நண்பர்கள் அந்தக் கைகலப்பினுள் மாட்டிக் கொள்கிறார்கள். அடிகளும், குத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. கைகலப்பின் தகவல் கிடைக்கப் பெற்ற காவல்துறை ஸ்தலத்திற்கு விரைந்து வந்து கைகலப்பில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்கிறது.
டைலர் மற்றும் அய்டான் மீது குற்றம் ஏதும் இல்லை என்பதை அறியும் காவல் துறை அதிகாரி நீல், அவர்கள் இருவரையும் உடனடியாக அந்த இடத்திலேயே விடுவிக்க உத்தரவிடுகிறார். ஆனால் டைலரோ அதிகாரி நீலுடன் அவர் எடுக்கும் முடிவுகள் குறித்து சற்று எல்லை மீறி வாக்குவாதம் செய்கிறான். இதனால் கோபம் கொள்ளும் நீல், டைலரையும், அய்டானையும் மீண்டும் கைது செய்கிறார். டைலரை சற்று முரட்டுத்தனமாக தாக்கியும் விடுகிறார்.
தன் தந்தையின் வக்கீலின் முயற்சியால் பொலிஸ் காவலிலிருந்து வெளியே கொண்டுவரப்படும் டைலர், தன் நாட்களை வழமை போலவே தன் சகோதரனின் நினைவுகளுடனும், தங்கை கரோலினுடனும், தந்தை மேல் வளர்ந்து வரும் வெறுப்புடனும் கழிக்க ஆரம்பிக்கிறான். தன்னைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி நீல் மீது அவனிற்கு இருந்த கோபம் படிப்படியாக குறையத் தொடங்குகிறது.
இந்த வேளையில் பொலிஸ் அதிகாரி நீலின் ஒரே மகளான ஆலி [Emilie de Ravin], தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்திலேயே மாணவியாக இருப்பதை தெரிந்து கொள்கிறான் அய்டான். தான் கண்டறிந்த தகவலை டைலரிற்கு அறியத்தரும் அய்டான், பொலிஸ் அதிகாரி நீல், டைலரிற்கு இழைத்த அநீதிக்கு பழிவாங்கும்வகையில் அவருடைய மகள் ஆலியை காதல் வலையில் வீழ்த்தி பின்பு கழற்றி விடும்படி டைலரிடம் வேண்டுகிறான். இந்த முட்டள்தனமான யோசனைக்கு ஆரம்பத்தில் உடன்பட மறுக்கும் டைலர், பின்பு அதனை ஒரு பந்தயமாக எடுத்துக் கொண்டு ஆலியை நெருங்க முயல்கிறான்.
ஆலி, தன் தாயைச் சிறு வயதிலேயே இழந்தவள். ஆலியின் கண்கள் முன்பாகவே அவள் தாய் கொலை செய்யப்பட்டு உயிரிழக்கிறாள். அந்நாள் முதல் கொண்டு பொலிஸ் அதிகாரி நீல், தனக்கு எஞ்சியிருக்கும் ஒரே உறவான தன் அன்பு மகள் ஆலியை ஒரளவு கண்டிப்புடனேயே தன் பாதுகாப்பினுள் வளர்த்து வருகிறார். இருப்பினும் மகள் மீது மிகுந்த நேசமும், அக்கறையும் கொண்ட தந்தையாக அவர் இருக்கிறார்.
அய்டானின் வேண்டுதலிற்கு ஏற்ப ஆலியுடன் அறிமுகம் செய்து கொண்டு பழக ஆரம்பிக்கிறான் டைலர். ஆரம்பத்தில் டைலருடன் தயக்கத்துடனேயே பழகுகிறாள் ஆலி. தொடரும் சந்திப்புக்களில் டைலரின் குணங்கள், தன்மைகளால் அவள் ஈர்க்கப்படுகிறாள். டைலரின் துணை அவளிற்கு பிடிக்க ஆரம்பிக்கிறது. டைலரிடம் தன் மனதை இழக்க ஆரம்பிக்கிறாள் ஆலி.
ஆனால் பந்தயத்திற்காகவும், பழிவாங்குவதற்காகவும் ஆலியை நெருங்கிப் பழக ஆரம்பித்த டைலர், மெல்ல மெல்ல ஆலியின் நெருக்கத்தினாலும், அவள் அப்பாவித்தனத்தினாலும், அவளுடன் தான் கழித்த இனிமையான தருணங்களினாலும் புதிய ஒரு அனுபவத்தை உணர ஆரம்பிக்கிறான். அவனையறியாமலே ஆலியின் மீது அவன் உண்மைக் காதல் கொண்டவனாகி விடுகிறான். சுவாரஸ்யமற்ற அவன் வாழ்வில் அவனை நெருங்கி வரும் ஒரு அழகான நட்சத்திரமாக ஆலியை அவன் காண்கிறான்.
நாட்கள் இனிமையாக நகர்கின்றன, வருவது வரும் என்பதுபோல் புதிய காதலர்கள் வாழ்வில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களினால், தன்னை ஏமாற்றுவதற்காகவே டைலர் தன்னை நேசிப்பதுபோல் ஆரம்பத்தில் நடந்து கொண்டான் என்பதை ஆலி தெரிந்து கொள்கிறாள். இது குறித்து டைலர் தரும் எந்த விளக்கங்களையும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் அவள், டைலருடனான தன் உறவை முறித்துக் கொண்டு தன் தந்தையின் பாதுகாப்பிற்குள் சரண் புகுகிறாள்…. டைலரின் உண்மைக் காதலை ஆலியால் உணர முடிந்ததா? காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? டைலரின் வாழ்க்கையின் ஏமாற்றங்கள் அவனிடமிருந்து விடை பெற்றுச் சென்றனவா?
மென்மையான ஒரு காதல் கதையை, எந்தவிதமான ஹாலிவூட் அலங்காரங்களும், மிகையான அழகுபடுத்தல்களும், தேவையற்ற ஆர்ப்பாட்டங்களுமின்றி, காதலின் இனிமையான உணர்வுடன் திரைக்கு எடுத்து வருகிறது இயக்குனர் Allen Coulter திறமையாக இயக்கியிருக்கும் Remember Me எனும் திரைப்படம். திரைப்படத்தை காணும் வாய்ப்பு உங்களிற்கு கிடைத்தால் அதன் பெயர் எவ்வளவு கச்சிதமாக அதற்குப் பொருந்துகிறது என்பதை நீங்கள் உணர முடியும்.
திரைப்படத்தின் பிரதான பாத்திரங்களான காதலர்கள் இருவரது உணர்வுகளையும், அவர்களிற்குள் சிறகாக அசையும் உறவு குறித்துப் பேசுவதோடு மட்டும் நின்று விடாது, அவர்கள் குடும்ப உறவினர்களின் நியாயமான உணர்வுகள் குறித்தும் திரைப்படம் பார்வையாளர்களோடு உரையாட முயல்கிறது. தன் பணிக்காக, உறவுகளை முதன்மை நிலையில் வைக்கமுடியாத கட்டாயத்திலுள்ள ஒரு தந்தை, தன் மகளின் பாதுகாப்பிற்காக எதையும் செய்யக் கூடிய ஒரு தந்தை என இரு தந்தைகளின் பாசம் குறித்த பார்வையையும் அது முன்வைக்கிறது.
தன் தங்கை கரோலினுடன் டைலர் கழிக்கும் தருணங்கள் யாவும் வாழ்வின் மென்மையான தருணங்களை மனதில் புகுத்துகின்றன. ஆலியுடனான டைலரின் காதல் நிமிடங்கள் செயற்கைத்தனம் அற்றவையாக, உள்ளத்தால் எளிதில் உணரப்படக் கூடியவையாக, இயல்பானவையாக உருப்பெற்றிருக்கின்றன. காட்சிகளுடன் உறுத்தல்கள் ஏதுமின்றிப் பயணிக்கும் இசை, அவை தர வேண்டிய உணர்வை இதமாக இதயத்திற்குள் எடுத்து வருகின்றன.
டைலர் பாத்திரத்தில் வரும் Robert Pattinson, முதிரிளம் பருவ ரசிகர்களை குறி வைத்து வசூலிற்காக உருவாக்கப்படும் கஞ்சல் உருவாக்கங்களையும் தாண்டி தன்னால் வெளியே நிற்க முடியும் என்பதை அப்பாத்திரம் வழி தெளிவாக்கியிருக்கிறார். மென்மையான உணர்வுகளைக் கொண்ட, சமூகத்தின் பகட்டுக்களை வெறுக்கின்ற, அன்பிற்காக கோபத்துடன் வெடிக்கத் தயங்காத இளைஞன் வேடத்தில் அவர் [நான் எதிர்பார்த்திருந்ததை விட] சிறப்பாகவே செய்திருக்கிறார். நல்ல இயக்குனர்கள் கைகளில், நல்லதொரு கலைஞராக இவர் உருவாகக்கூடிய சாத்தியங்கள் இல்லாமல் இல்லை.
டைலரின் தந்தை சார்ல்ஸாக வரும் Pierce Brosnan, தன் மனதில் தன் பிள்ளைகள் குறித்த அக்கறை இருந்தாலும் அதனை தகுந்த முறையில் வெளிக்காட்ட முடியாத ஒரு தந்தையாக, ஒரு நிறுவன அதிபராக அற்புதமாக தன் திறமையை வெளிக்காட்டியிருக்கிறார். மகள் கரோலினின் ஓவியக் கண்காட்சிக்கு தன்னால் வரமுடியாமல் போனதையிட்டு, தன் அலுவலக ஊழியர்களுடனான கூட்டத்தின் மத்தியில் வைத்து டைலர் தன்னை குற்றம் சாட்டி தாக்கும் போது புரொஸ்னான் பாயும் பாய்ச்சலும், பதிலிற்கு டைலரின் பதிலடியும் படத்தின் உணர்சிகரமான தருணங்களில் ஒன்று. புரொஸ்னானின் பிரம்மாண்டத்திற்கு முன்பாக ராபர்ட் பேட்டின்ஸன் முடங்கிப்போவதை எளிதாக தெரிந்து கொள்ளக்கூடிய தருணமது.
ஆலியின் தந்தையாக வரும் பொலிஸ் அதிகாரி நீலாக நடிகர் Chris Cooper பக்குவமான நடிப்பை வழங்கியிருக்கிறார். தன் மகளின் பிரிவால் வாடி, தன் வீட்டுத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஆலியின் குரலை மீண்டும், மீண்டும் அவர் கேட்கும் தருணம் அருமையானது.
ஆலி வேடத்தில் வரும் நடிகை எமிலி தன் இளமையான நடிப்பால் கவர்கிறார். அவர் அழகும் என்னைக் கவர்ந்தது என்ற உண்மையையும் கூறிவிடுகிறேன். டைலரின் தங்கையான கரோலினின் கதை மனதைக் கலங்க வைக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
மிகவும் மென்மையாகவும், அழகான வேகத்துடனும், தொய்வின்றியும், உணர்வுகளை பந்துபோல் ஒடச் செய்து திரைப்படத்தை நகர்த்தி செல்கிறார் இயக்குனர். யாவும் சுபமாக முடியும் என்று கருதக்கூடிய ஒரு முடிவை நோக்கி நகரும் கதையின் இறுதியில் அவர் தரும் திருப்பம் மனங்களை உடைய வைத்து விடுகிறது. அந்த திருப்பம் ரசிகர்களை திரைப்படத்தை சில நாட்களேனும் அவர்கள் மனதில் நினைவிலிருத்தச் செய்து விடும். ஆலியின் திறந்த முதுகில், டைலர் தன் கரங்களின் நிழலினால் பறவை ஒன்றைப் பறக்கச் செய்யும் அந்தக் காட்சி ஒரு நொடி நேரமே வந்தாலும் மனதில் தங்கி விடுகிறது. அந்த நிழல் பறவையைப் போலவே ரசிகர்களின் மனங்களின் மீது தன் மென் சிறகுகளால் வருடிப் பறக்கிறது மனதைக் கனக்க வைக்கும் இத்திரைப்படம். [***]
ட்ரெய்லர்
வழக்கம் போல காதலரின் இந்த சிறப்பு பதிவில் முதலில் வந்து கருத்து கூறுவது - நாந்தான்
ReplyDeleteகாதலரே,
ReplyDelete//மென்மையான ஒரு காதல் கதையை, எந்தவிதமான ஹாலிவூட் அலங்காரங்களும், மிகையான அழகுபடுத்தல்களும், தேவையற்ற ஆர்ப்பாடங்களுமின்றி, காதலின் இனிமையான உணர்வுடன் திரைக்கு எடுத்து வருகிறது இயக்குனர் Allen Coulter திறமையாக இயக்கியிருக்கும் Remember Me //
இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நெடுநாள் எக்ஸ் பைல்ஸ் ரசிகர்களுக்கு இவரை நன்கு தெரியும் (ஒரே ஒரு பாகம் தான் டைரெக்ட் செய்து இருந்தாலும் கூட). எக்ஸ் பைல்ஸ் தொடரின் ஐந்தாம் ஆண்டு. அப்போதுதான் ஸ்டார் ப்ளஸ் சேனலில் நான் அந்த தொடரை பார்க்க ஆரம்பித்தேன். அப்போது நான் பார்த்த முதல் கட்ட பாகங்களில் இவரும் ஒரு இயக்குனர். க்றிஸ் கார்டர் தான் ரெகுலர் டைரெக்டர் என்றாலும் சிலர் கெஸ்ட் எபிசொட் டைரெக்டர் ஆக வருவார்கள். பின்னர் இவரே மில்லேனியம் தொடரில் வந்தபோது கூட அந்த பாகங்கள் சிறப்பாக இருந்தன என்று நண்பர்கள் சொல்லக் கேள்வி (நான் மில்லேனியம் பார்க்க ஆரம்பித்தது எக்ஸ் பைல்ஸ் டை அப் பிறகே).
ஆர்ப்பாட்டம் இல்ல்லாத மென்மையான கதை
ReplyDeleteஇதில் என்ன ஆச்சரியம் என்றால், இப்போது ஸ்டார் மூவிஸில் எக்ஸ் ஃபைல்ஸ் படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது தான் . .
ReplyDeleteஇந்தக் கதையைப் படிக்கையில், கதை நமது தமிழ்ப் படங்கள் போலவே இருப்பதை உணர்ந்தேன். . (காதலிப்பது போல் நடிப்பது, பின் நிஜமாகவே காதலிப்பது, பின்னர் சோதனைகள் இத்யாதி) . .ஆனால், இதை நன்றாக எடுத்துள்ளனர் என்பது உங்கள் விமர்சனத்தைப் படித்தால் தெரிகிறது . . ஸோ, கட்டாயம் பார்க்கப்படும். .
\\காதலிப்பது போல் நடிப்பது, பின் நிஜமாகவே காதலிப்பது, பின்னர் சோதனைகள் இத்யாதி\\
ReplyDeleteநண்பர் கருந்தேள் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்...
விஸ்வா, இயக்குனர் பிரபல தொலைக்காட்சி சீரியல்களையும், ஹாலிவூட்லேண்ட் எனும் திரைப்படத்தையும் நெறியாள்கை செய்திருந்தார் என்பதை அறிந்திருந்தேன். நீங்களும் அதனை உறுதிப்படுத்துகிறீர்கள். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநண்பர் உதயன், உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் நன்றி நண்பரே.
நண்பர் கருந்தேள், நீங்கள் சொல்வது சரியே இருப்பினும் தமிழ் படங்களைப்போல் மிகைப்படுத்தலும், செயற்கைத்தனங்களும், ஹீரோ மகாத்மியமும் இப்படத்தில் இல்லாதபடியால் நன்கு ரசிக்க முடிந்தது. பார்த்து ரசியுங்கள் நண்பரே.
நண்பர் பேபி ஆனந்தன், படத்தை பாருங்கள். மென்மையான ஒரு திரைப்படம். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
அழகாக எழுதியிருக்கிறீர்கள். பார்க்கவேண்டிய படத்தில் சேர்த்தாகிவிட்டது.
ReplyDelete//நெறியாள்கை செய்திருந்தார்//
ReplyDeleteநல்ல அருமையான வார்த்தையை உபயோகித்தமைக்கு நன்றி.
நண்பரே மிகவும் அழகான விமர்சனம்,படம் உடனே பார்த்துவிடுகிறேன்.
ReplyDeleteநண்பர் பின்னோக்கி, கனிவான தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteவிஸ்வா, மெரினா பீச்சில் சில இளம் சிட்டுக்களுடன் நீங்கள் டூயட் பாடியதாக நிருபர் மொட்டுக்கடிச்சான் அறியத் தந்திருக்கிறார் இது உண்மையா :) மீண்டும் வந்து கனிவான கருத்துக்களைப் பதிந்தமைக்கு நன்றி நண்பரே.
நண்பர் கார்திகேயன், தங்கள் வருகைக்கும், ஊக்கமூட்டும் கருத்துக்களிற்கும் நன்றி. திரைப்படம் உங்களைக் கவரும் என்றே நம்புகிறேன் நண்பரே.
This is like 'Amarkalam' ?
ReplyDelete//விஸ்வா, மெரினா பீச்சில் சில இளம் சிட்டுக்களுடன் நீங்கள் டூயட் பாடியதாக நிருபர் மொட்டுக்கடிச்சான் அறியத் தந்திருக்கிறார் இது உண்மையா :)//
ReplyDeleteகாதலரே,
என்மீது அபாண்டமான குற்றசாட்டுக்களை வீசி இருக்கும் அந்த மொட்டுகடிச்சான் யார் என்பதை தெரிந்து கொள்ளலாமா? (மிதவாதி அல்லது அண்டவெளி ரசிகரா?)
விஸ்வா, மொட்டுக்கடிச்சான் மிதவாதியோ அல்லது அண்டவெளி ரசிகரோ அல்ல, மாறுவேடச் சுறா. அவர் டீக் கடையில் டீ விற்பவராகக்கூட மாறுவேடம் போடக்கூடியவர் :))
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
தமிழ் புத்தாண்டு சிறப்பு பதிவாக ஒரு முழு நீள காமிக்ஸ் கதையினை படிக்க அளித்துள்ளேன். படிக்க இங்கே செல்லுங்கள் தோழர்களே.
ReplyDeleteகாமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் என்னுடைய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்
அன்புடையீர்,
ReplyDeleteஅனைவருக்கும் அம்பேத்கர் தின, தமிழ் புத்தாண்டு, விடுமுறை தின சிறப்பு நல்வாழ்த்துக்கள்.
கிசு கிசு கார்னர் 7 வலையேற்றப்பட்டுள்ளது.
லெட் த கும்மி ஸ்டார்ட்.
இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.
பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.
ஆலி டைலரை பிரிந்து தந்தையிடம் திரும்பும் போது, தந்தை தவறான முறையில் பாத்திரம் துலக்கி கொண்டு இருக்க, அதை ஆலி திருத்திவிட்டு, தொடர்ந்து வரும் மௌனமும், ஏதும் பேசாமல் மேலே இருக்கிறேன் என்று விட்டு மாடிக்கு போவதும் அட்டகாசம்.
ReplyDeleteமுடிவு கல்லூரி படத்தை நினைவு படுத்தாமல் இல்லை!
ஆழ்ந்த விமர்சனம். வாழ்த்துகள்!
www.balavin.wordpress.com
நண்பர் பாலா, திரும்பி வருதலும், காத்திருத்தல் தீர்தலுமான அத்தருணம் மெமையான ஒன்று. தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteஇது ஒரு அழகான காதல் படம் என்பது உங்கள் பதிவை படிக்கும் போது தெரிகிறது
ReplyDeleteநண்பர் சிவ், அழகான ஆனால் சற்றுச் சோகம் தரும் படம். காதல் மட்டுமின்றி குடும்ப உறவுகள் குறித்தும் படம் பேசுகிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDelete