Tuesday, April 27, 2010

பென்டகனின் ஆடுகள்


பாப் வில்டன் [Ewan McGregor], அமெரிக்கப் பத்திரிகை ஒன்றில் செய்தியாளனாகப் பணியாற்றி வருகிறான். பாப், பணிபுரிந்து வரும் பத்திரிகையின் தலைமை ஆசிரியருடன் காதல் கொள்ளும் பாப்பின் மனைவி டெபோரா, புதிய காதலிற்காக அவனைப் பிரிந்து விடுகிறாள். இதனால் மிகுந்த மனவருத்தம் அடையும் பாப், தன் மனைவி டெபோராவிற்கு தன் ஆளுமையை நிரூபிக்க விரும்பி யுத்த முனையான ஈராக்கிற்கு[2003] சென்று செய்திகள் சேகரிப்பது எனும் முடிவிற்கு வருகிறான்.

ஈராக்கினுள் நுழைவதற்கு முன்பாக குவைத்தில் பாப் தங்கியிருக்கும் ஹோட்டலில் லின் கஸடி [George Cloony] எனும் நபரின் அறிமுகம் அவனிற்கு கிடைக்கிறது. தன் பத்திரிகைக்காக பாப் முன்பு சந்தித்திருந்த ஒரு முன்னைநாள் அமெரிக்க ராணுவ வீரன் வழியாக லின் கஸடி குறித்து ஏற்கனவே சிறிது அறிந்து கொண்டவனாகவிருக்கிறான் பாப்.

1983களில் அமெரிக்க ராணுவமானது “புதிய புவி ராணுவம்” என்றவொரு பிரிவை உருவாக்க விழைந்தது. பெண்டகன் இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியது. புதிய புவி ராணுவமானது சாதாரண வீரர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்க முயன்றது.

சூப்பர் ராணுவ வீரர்கள் அல்லது ஜெடாய் [Jedi] வீரர்கள் ஆயுதங்களால் போரிடுபவர்கள் அல்ல! மாறாக தமது சிறப்பான மனோசக்தியின் வழியாக எதிரிகளை ஒற்றறிதல், அவர்களின் எண்ணங்களைப் படித்தல், அவர்களின் ரகசியங்களை கண்டறிதல், சுவர்களை ஊடுருவிச் செல்லல்! பிறர் கண்களிற்கு தென்படாமல் மாயமாக மறைதல்! மனோசக்தி வழியாக உயிரைப் பறித்தல்! போன்ற செயல்களில் திறமை வாய்ந்தவர்களாக அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.[ உயிரைப் பறித்தல் என்பது புதிய புவி ராணுவத்தின் ஜெடாய் வீரர்கள் செய்யக் கூடாத ஒன்றாகும்]

இவ்வகையான ஜெடாய் வீரர்களில் மிகச் சிறந்தவனே லின் கஸடி. ராணுவத்திலிருந்து விலகியபின் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் லின், தன் பணி நிமித்தம் ஈராக்கிற்கு செல்வதற்காக அந்த ஹோட்டலில் தங்கியிருக்கிறான். லின் போன்ற வீரர்களின் செயல்களைக் குறித்து ஒரு செய்திக் கட்டுரை தயாரிக்க விரும்பும் பாப், அது குறித்த தகவல்களை லின்னிடமிருந்து அறிய முயல்கிறான். இதற்காக லின்னுடன் சேர்ந்து ஈராக்கினுள் நுழையவும் அவன் தயாராகவிருக்கிறான்.

the-men-who-stare-at-goats-2009-17418-1713590814 முதலில் பாப்பின் வேண்டுகோள்களை நிராகரிக்கும் லின், பாப் தனது நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கி வைத்திருந்த ஒரு கிறுக்கல் ஓவியத்தைக் கண்டபின்பாக அவனின் வேண்டுகோள்களிற்கு சம்மதிக்கிறான். ஏனெனில் பாப் தற்செயலாக தன் நோட்டுப் புத்தகத்தில் கிறுக்கியது ஜெடாய் வீரர்களின் சின்னமான மூன்றாம் கண் ஆகும்.

மறுநாள் காலை லின்னும், பாப்பும் ஈராக் நோக்கி தம் பயணத்தை ஒரு காரில் ஆரம்பிக்கிறார்கள். பாலைவனங்களை கடந்து செல்லும் அந்தப் பயணத்தில் தன் கதையை பாப்பிடம் கூற ஆரம்பிக்கிறான் லின். கதையை மட்டுமல்ல தன்னிடம் இருக்கக்கூடிய சில சிறப்பான சக்திகளையும் பாப்பின் முன் பார்வைக்கு வைக்கிறான் லின். லின்னின் நம்ப முடியாத அக்கதையையும், சக்தியே இல்லாத அவன் சக்திகளையும் அறிந்து வாயடைத்துப் போகிறான் பாப்.

வியட்நாம் யுத்தத்தில் ஹெலிஹாப்டர் ஒன்றிலிருந்து கீழே வீழ்ந்து துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகும் ராணுவ அதிகாரி பில் டிஜாங்கோவின் [Jeff Bridges ] மனதில் புதிய சிந்தனைகள் காயத்திலிருந்து வழியும் குருதியாக ஊற்றெடுக்கின்றன. யுத்தத்திலிருந்து நாடு திரும்பும் பில், புதிய வகை ராணுவ வீரர்களை உருவாக்கும் திட்டத்தை அதிகாரிகள் முன்வைக்க, பென்டகன் அதனை அங்கீகரிக்கிறது. புதிய புவி ராணுவப் பிரிவை மகிழ்சியுடன் ஆரம்பிக்கிறான் பில் டிஜாங்கோ.

இவ்வேளையில் ராணுவ அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் லின், அங்கிருக்கும் கணினிகளை தனக்குள் பொதிந்திருக்கும் அபூர்வ சக்தியால் அவனை அறியாமலே செயலிழக்கச் செய்கிறான். இதனை அறிந்து கொள்ளும் அவன் மேலதிகாரி, லின், அவன் சக்திகளை தகுந்த வகையில் விருத்தி செய்யும் பொருட்டு அவனைப் புதிய புவி ராணுவப் பிரிவில் இணைத்து விடுகிறார்.

the-men-who-stare-at-goats-2009-17418-1828079063 புதிய புவி ராணுவப் பிரிவில் பில் டிஜாங்கோவின் தலைமையின் கீழ் தன் மனோசக்திகளை சிறப்பாக விருத்தி செய்ய ஆரம்பிக்கிறான் லின். மிகச் சிறந்த ஒரு ஜெடாய் வீரனாக லின் உருவாகி வருகையில் புதிய புவி ராணுவத்தில் வந்து சேர்ந்து கொள்கிறான் லேரி கொப்பெர் [Kevin Spacey].

தன் மனோசக்தியைப் பயன்படுத்தி உலோகங்களை வளைக்ககூடிய சக்தி லேரியிடம் இருக்கிறது. புதிய புவி ராணுவம் குறித்து ஒரு எள்ளல் மனப்பான்மை கொண்டவனாகவும் லேரி இருக்கிறான். லின்னின் சக்தி வலிமையுடன் போட்டியிட்டு வெல்ல முடியாத லேரி தன் மனதில் பொறாமையை வளர்க்க ஆரம்பிக்கிறான். தனது சக வீரன் ஒருவனிற்கு போதை மருந்து தந்து லேரி செய்யும் ஒரு பரிசோதனை முயற்சி விபரீதத்தில் சென்று முடிகிறது. அதுவே புதிய புவி ராணுவத்தின் முடிவாகவும் அமைகிறது.

லேரி தன் பரிசோதனையை மேற்கொண்ட அவ்வீரன் தன் மனநிலை பிறழ்ந்து, நிர்வாணமான நிலையில் சக வீரர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்வதோடு நின்று விடாது, தன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறான். சம்பவம் மீதான விசாரணையின்போது பில் டிஜாங்கோவின் நடவடிக்கைகளிற்கு எதிராக சாட்சியம் அளிக்கிறான் லேரி. இதனால் பில்லின் பதவி பறிபோகிறது. தான் உருவாக்கிய ராணுவப் பிரிவை விட்டுப் பிரிந்து தனியே தன் வழி செல்கிறான் பில் டிஜாங்கோ.

இதனைத் தொடர்ந்து லேரி, லின்னைக் குறி வைக்கிறான். தனது மேலதிகாரியை அனுகும் லேரி, மனோசக்தியால் உயிர்களை பறிக்கலாம் என்பதை அவரிற்கு தெரியப்படுத்துகிறான். அதிகாரியும் இதனைப் பரிசோதித்துப் பார்க்க சம்மதம் தெரிவிக்கிறார். இந்தக் கொடிய பரிசோதனையை நிகழ்த்துவதற்கு ஜெடாய் வீரர்களில் சிறந்தவனான லின் அழைக்கப்படுகிறான்.

the-men-who-stare-at-goats-2009-17418-1122251288 பரிசோதனைக்காக லின்னின் முன்பாக ஒரு அப்பாவி ஆடு நிறுத்தப்படுகிறது. அந்த ஆட்டை அவனுடைய மனோசக்தியால் கொல்லப் பணிக்கப்படுகிறான் லின். ஒரு உயிரைப் பறிப்பது என்பது புதிய புவி ராணுவத்தின் கொள்கைகளிற்கு எதிரானது. ஆனால் அத்தருணத்தில் மனோசக்தியின் தீமையின் பக்கத்தால் ஆட்கொள்ளப்படும் லின், அந்த ஆட்டை தன் கண்களால் கூர்மையாக நோக்கி அதன் உயிரைப் பறித்து விடுகிறான்.

தான் செய்த செயல் லின்னின் மனதைக் கூறு போடுகிறது. ராணுவத்திலிருந்து பதவி விலகிச் செல்கிறான் சிறந்த ஜெடாய் வீரனான லின்.தன் சக்தியால் ஒரு ஆட்டின் உயிரைப் பறித்ததால் தன்னை விட்டு தன் மனோசக்திகள் நீங்கி விட்டதாகவும் அவன் நம்புகிறான்.

இந்த நம்ப முடியாச் சோகக் கதையை லின் கூறி முடிப்பதற்குள்; லின்னும், பாப்பும் பயணம் செய்யும் கார் பாலைவனத்தில் கல்லொன்றில் மோதி செயலிழக்கிறது, பாலைவன வீதியில் நின்று லிஃப்ட் கேட்கும் அவர்களை ஆயுததாரிகள் சிலர் கடத்திச் செல்கின்றனர், ஆயுததாரிகளிடமிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பும் லின்னும், பாப்பும் அவர்களிடமிருந்து மஹ்முட் எனும் பணயக் கைதியை காப்பாற்றுகின்றனர், பின் ஈராக்கில் செயற்பட்டு வரும் இரு தனியார் பாதுகாப்பு அமைப்புகளின் வீரர்களிற்கிடையில் நிகழும் ஆயுத மோதலில் அவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள்.

அந்த மோதலின் மத்தியிலிருந்து மஹ்முட்டின் வழிகாட்டலில் தப்பி ஓடும் அவர்கள், ராணுவத்தால் சேதமாக்கப்பட்ட மஹ்முட்டின் இல்லத்தில் இரவைக் கழிக்கிறார்கள், மறுநாள் மஹ்முட் தரும் ஒரு காரில் தம் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கிறார்கள். லின்னின் அபாரமான சக்தியின் வழிகாட்டலினால் கண்ணி வெடி ஒன்றில் கார் மாட்டிக் கொள்கிறது. பரந்த பாலைவனத்தில் வழி தெரியாது அலைய ஆரம்பிக்கிறார்கள் லின்னும், பாப்பும். இதன் காரணமாக லின் மீது சீறி விழுகிறான் பாப். அப்போதுதான் லின் அந்த உண்மையை பாப்பிற்கு கூறுகிறான்.

the-men-who-stare-at-goats-2009-17418-872394732 தன் கனவில் பில் டிஜாங்கோ தோன்றியதாலேயே அவனைத் தேடி தான் ஈராக் வந்த விபரத்தை பாப்பிடம் கூறுகிறான் லின். பில் ஈராக்கில் எங்கே இருக்கிறான் என்பது லின்னிற்கு தெரிந்திருக்கவில்லை. லின்னின் சக்திகள் அவனிற்கு உதவ மறுக்கின்றன. பாலைவனத்தின் வெப்பத்தில் கருகி மணல்திட்டு மீது அயர்ந்து போகிறார்கள் அவர்கள். அவர்கள் அயர்ந்த அவ்வேளை பாலைவனத்தில் எங்கிருந்தோ வரும் மணி கட்டிய ஒரு ஆடு அவர்களைக் கடந்து செல்கிறது.

மணிச்சத்தம் கேட்டு விழிக்கும் பாப் வியப்புடன் ஆட்டைத் தொடர்ந்து செல்கிறான். அந்த ஆடு ஒரு தண்ணீர் குட்டையின் முன்பாக சென்று நிற்கிறது. லின்னை தேடி வந்து எழுப்பும் பாப், அவனை அந்த தண்ணீர் குட்டைக்கு அழைத்துச் செல்கிறான். லின், பாப், ஆடு என யாவரும் குட்டையில் இருக்கும் தண்ணீரை ஆசையுடன் பருக ஆரம்பிக்கிறார்கள். இவ்வேளை பாலைவன வானிலிருந்து இவர்களை நோக்கி கீழே இறங்க ஆரம்பிக்கிறது ஒரு ஹெலிகாப்டர்…. பின்பு நடந்த நம்பவே முடியாத நிகழ்வுகள் என்ன என்பதை திரைப்படம் உங்களிற்கு தெளிவு படுத்தும்..

இத்திரைப்படத்தில் இடம்பெறும் பெரும்பான்மையான சம்பவங்கள் நிஜமானவையே எனும் அறிவிப்புடனேயே The Men Who Stare at Goats திரைப்படம் ஆரம்பமாகிறது. ஆனால் திரைப்படத்தில் வரும் சம்பவங்களை அப்படியே நம்புவது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகவே இருக்கிறது. Jon Ronson என்பவர் எழுதிய நூலைத் தழுவி இந்த நகைச்சுவைப் படத்தை இயக்கியிருக்கிறார் பிரபல நடிகர் ஜார்ஜ் க்ளுனியின் தோஸ்த் Grant Heslov.

பாப் பாத்திரம் தன் அனுபவங்களை கூறிச் செல்வதாக ஆரம்பிக்கும் திரைப்படம், காலத்தின் முன்னும் பின்னும் நகர்ந்து இரு வேறு தளங்களில் கதையை நகர்த்தியவாறே முன்னேறுகிறது. தாம் வாழ்வில் நம்பிய உண்மைகளிற்காக தம் வாழ்க்கையை உடைத்த சில மனிதர்கள் எவ்வாறு தம் மீட்பைக் கண்டடைகிறார்கள் என்பதை கதை விபரிக்கிறது. லின் மற்றும் பில்லின் மீட்பிலேயே பாப்பின் மீட்பும் ஒளிந்திருக்கிறது என்பதும் கதையில் தெளிவாகிறது.

the-men-who-stare-at-goats-2009-17418-632456675 கதையில் வரும் நம்பவே முடியாத நிகழ்வுகளை நகைச்சுவை மூலம் எளிதாகவும், கனமின்றியும் ரசிகர்களை உட்கொள்ளும்படி செய்திருக்கிறார் இயக்குனர் கிராண்ட் ஹெஸ்லவ். நிதானமான வேகத்தில் நகரும் இப்படத்தினை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்வதில் நகைச்சுவைக்கு பெரும் பங்குண்டெனில், திரைப்படத்தின் நடிகர்களின் தேர்வு அதன் அடுத்த கவர்ச்சியாக அமைகிறது. ஜார்ஜ் க்ளுனி, ஜெஃப் பிரிட்ஜஸ், கெவின் ஸ்பேஸி, இவான் மக்கிரகோர் எனும் அட்டகாசமான நடிகர் கூட்டணியின் திறமை படத்தினை ரசிக்க வைக்கிறது.

ஜார்ஜ் க்ளுனி தன் வசீகரமான தோற்றத்தையும் கவர்ச்சிகரமான நடிப்பையும் சற்று தள்ளி வைத்து விட்டு ஒரு சூப்பர் வீரன் அவதாரம் எடுத்திருக்கிறார். பில் டிஜாங்கோவின் ராணுவப் பிரிவில் ஹிப்பி சிகையலங்காரத்துடன் அவர் நடனம் ஆட ஆரம்பிப்பதில் இருந்து தான் கொன்ற ஒரு ஆட்டிற்காக அவர் செய்யும் இறுதிச் செயல் வரை தன் அபத்தங்களால் சிரிக்கவும், தன் மனித நேயத்தால் நெகிழவும் வைக்கிறார் அவர். மஹ்முட்டின் வீட்டில் அவரிற்கும் மஹ்முட்டிற்குமிடையில் இடம்பெறும் அந்த சிறு உரையாடல் நெகிழ்வான ஒரு தென்றல்.

க்ளுனியிடம் வந்து தானாகவே மாட்டிக் கொண்டு திணறும் பாப் பாத்திரத்தில் இவான் மக்கிரகோர். க்ளுனி தன் சக்திகளை அவரிற்கு காட்ட விரும்பும் போதெல்லாம் அது எந்த மாற்றங்களையும் தருவதில்லை என அறிந்து அப்பாவியாக அவர் ஏமாறுவதும், க்ளுனியின் புதிய புவி ராணுவத்தின் செயல் முறைகளிற்குள் மாட்டிக் கொண்டு அவர் அனுபவிக்கும் கொடுமைகளும் ரசிகர்களை இலகுவாக சிரிக்க வைத்து மக்கிரகோரின் பாத்திரத்தினை ரசிக்க செய்கின்றன. தான் தன் மனோசக்தியால் கொன்ற ஆடு தன் கனவில் வந்து மெளனமாக வாயை அசைத்துக் கொண்டு நிற்கிறது என்று அவரிடம் க்ளுனி கூறுகையில் பதிலிற்கு Silence of The Goats என மக்கிரகோர் கூறும் அந்த வசனம் திரையரங்கைக் குலுங்க வைக்கிறது.

நீண்ட நாட்களின்பின் கெவின் ஸ்பேஸியை லேரி பாத்திரம் மூலம் திரையில் காணமுடிகிறது. வில்லத்தனமான பாத்திரம் ஆனால் ரசிகர்களைக் கவரும் வகையில் அப்பாத்திரம் உருவாக்கப்படவில்லை. எனவே ஸ்பேஸிக்கு அதிக வேலையில்லாமல் போய்விடுகிறது.

திரைப்படத்தில் என் மனதைக் கவர்ந்தவர் பில் டிஜாங்கோ வேடம் ஏற்றிருக்கும் ஜெஃப் பிரிட்ஜஸ். வியாட்னாம் போரில் ஞானம் பெற்று, பின் உலக அனுபவங்கள் கண்டு, புதிய புவி ராணுவத்தை ஆரம்பித்து, அந்த ராணுவத்திற்கு அவர் வழங்கும் அபத்தமான பயிற்சிகள் மூலம் எம்மை சிரிக்க வைக்கும் அந்த பிரிட்ஜஸ், இறுதியில் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சாதாரண ஒரு எடுபிடிபோல் ஊழியம் புரிகையில் மனதை கலங்கடிக்கிறார். ஜெஃப் பிரிட்ஜஸ் எனும் நல்ல கலைஞனைத் திரையுலகம் தகுந்த முறையில் பயன்படுத்தியிருக்கவில்லை என்பதுதான் உண்மை.

the-men-who-stare-at-goats-2009-17418-193906874 ஈராக்கில் ராணுவங்களால் மட்டுமன்றி, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களாலும், ஆயுதக் குழுக்களாலும் அப்பாவி மக்களின் வாழ்க்கையும், உரிமைகளும் சேதமாக்கப்படுகின்றது என்பதையும், போரைச் சாக்காகக் கொண்டு ஈராக்கினுள் நுழைந்த வல்லரசுகள் மற்றும் பெரு நிறுவனங்கள், ஈராக் ஒப்பந்தங்களையும், நுகர்வோர் சந்தையையும் கொள்ளை லாபம் அடிப்பதற்காக தம்மகப்படுத்திக் கொள்ளத் துடிக்கும் குரூரமான மனநிலையையும் படம் மெலிதாக கோடிட்டுக் காட்டுகிறது.

அமெரிக்க ராணுவமானது ஏதுமறியாப் பிராணிகளான ஆடுகளை தன் சில பரிசோதனைகளிற்காக உபயோகப்படுத்திக் கொள்கிறது. அப்பரிசோதனைகளின் முடிவில் அந்த ஆடுகளின் நிலை பரிதாபத்திற்குரிய ஒன்றாகவிருக்கும். இதே நிலைதான் ராணுவத்தில் பணிபுரியும் சில மனிதர்களிற்கும் என்பது வேதனையளிக்கும் ஒன்றாகும். அமெரிக்கா மட்டுமல்ல உலகின் பல நாடுகளின் ராணுவங்களில் இந்த அவல நிலை நிலவுகிறது .

திரையரங்கிலேயே திரைப்படத்தின் இறுதித் தருணம் வழங்கும் சிரிப்புடன் விட்டுவிட்டு வரக்கூடிய இத்திரைப்படமானது அதில் பொதிந்திருக்கும் அன்பாலும், மனித நேயத்தாலும் மனங்களை நெருங்கி வருகிறது. புதிய புவி ராணுவ வீரர்களில் உறைந்திருக்கும் இப்பண்புகளே அவ்வீரர்கள் மேல் ரசிகனின் பார்வையை சற்று நிலைபெறவும் செய்கிறது. நட்சத்திரப் பட்டாளத்தின் திறமைக்காகவும், நம்பவே முடியாத நகைச்சுவை கலந்த அபத்த நிகழ்வுகளிற்காவும் பார்த்து ரசித்து சிரிக்கக்கூடிய திரைப்படங்களில் அமைதியாக தனது இடம் பிடித்துக் கொள்கிறது இத்திரைப்படம். [**]

ட்ரெயிலர்

14 comments:

  1. நமது ’குழந்தை’ பிஸியாக இருப்பதால், நான் போட்டிக்கு வரவில்லை . . எனவே, நோ ‘மீ த ஃபர்ஸ்ட்’ . . .:-) இதோ படித்துவிட்டு வருகிறேன் . .

    ReplyDelete
  2. முழுதும் படித்தேன் . . மிகவும் ரசித்தேன் . . கண்கள் பனித்தன; இதயம் இனித்தது. . :-)

    ஜார்ஜ் க்ளூனி எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர். அவரது ‘ஓ ப்ரதர் . .வேர் ஆர்(ட்) தோ’ படம், அவர்மேல் எனக்கு மரியாதை வரக் காரணமாக அமைந்தது. .

    நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இப்படம் நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் என்று தோன்றுகிறது . . :-)

    கட்டாயம் பார்த்துவிடுகிறேன் . . (பிக்ஃப்ளிக்ஸில் வந்தவுடன் புக் செய்துவிடுவேன்) . .

    வழக்கப்படி புகைப்படக் கமெண்டுகள் அருமை . . :-)

    ReplyDelete
  3. வழமைபோல அருமையான விமர்சனம். புகைப்பட கமெண்ட்ஸ் மிக அருமை.

    ReplyDelete
  4. அன்பு நண்பரே,



    இருவித பரிணாமங்களில் பயணிக்கக் கூடிய இத்திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதுவது அவ்வளவு இலகுவான செயல் இல்லை. ஆடுகளை உற்று நோக்கும் மனிதர்கள் அல்லது பென்டகனின் ஆடுகள் இவ்விரண்டு தலைப்புமே ஒவ்வொரு பரிணாமத்தையொட்டி அமைந்துள்ளன. முதல் தலைப்பு இப்படத்தினை ஒரு உயர்தர நகைச்சுவையாகவும், மற்றொன்று போர்க் குற்ற ஆவணப் படமாகவும் அணுகுகின்றன.

    இது போன்ற திரைப்படங்களில் நடிக்க தனித் திறமை வேண்டும். க்ளூனி அற்புதமாக அதை செய்திருக்கிறார். மக்ரஹர் இப்போது ஏற்று வரும் பாத்திரங்கள் எல்லாமே அவரின் திறமையை வெளிக் கொண்டுவருவதாக இருக்கிறன. கெவின் ஸ்பேஸி - அன்டர்ப்ளே என்பதற்கு மிகச் சரியான உதாரணத்தை இப்படத்தில் அவரின் நடிப்பு மூலம் பார்க்கலாம் இல்லையா, நண்பரே? அனைவரின் நடிப்பினை பற்றியும் தீர்க்கமாக எழுதியுள்ளீர்கள்.

    மேற்சொன்னது போல் இது போன்ற திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அவற்றை திறம்பட செய்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    என்னுடைய ஆசை என்னவென்றால், சுறா படத்திற்கும் நீங்களே முதல் விமர்சனம் செய்ய வேண்டுமென்பதுதான். :)

    ReplyDelete
  5. நல்ல நடை.நீங்கள் அடுத்து ஒரு கவிதையோ , சிறுகதையோ எழுதி இலக்கியவாதி ஆயிருங்க! என்ன நான் சொல்வது. இந்தப்படம் அவசியம் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  6. நண்பர் கருந்தேள், சிரிக்க, நெகிழ வைக்கும் படங்களில் இது அடங்கும். க்ளுனியின் நடிப்பு எல்லாம் அவர் என்னிடம் கற்றுக் கொண்டதுதான் :)) சுறா த லெஜண்ட் படத்திற்கு முன்பதிவு செய்து விட்டீர்களா :)வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே. கொழந்தயை யாராவது கடத்திவிட்டார்களா என்ன :)

    நண்பர் சரவணக்குமார், மிக்க நன்றி நண்பரே.

    ஜோஸ், முதலில் பாராட்டுக்களிற்கு நன்றி. சுறா த லெஜண்ட் எனும் அமர சினிமாவிற்கு போனால் அங்கு வரும் த லெஜன்டின் ரசிக சிகாமணிகள் அடிக்கும் லூட்டியில் உயிர் கிழிந்து விடும். அதனை விட ஒரு வாரம் பட்டினி கிடந்த சுறா வாழும் தொட்டிக்குள் இருந்து உலக சாதனை செய்வதனையே நான் விரும்புகிறேன் :) வழமை போலவே தாங்கள் படத்தைக் கண்டு இன்புற்று பதிவைச் சுடச் சுட வழங்கி எம்மை மகிழ்விக்கும் படியும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் மயில் ராவணன், நீங்கள் சொல்லியிருப்பதை செய்தால் ஆகிற்று. கவிதையின் முதல் வரி இதோ

    பாண்டியன் தோட்டத்து மயிலே
    மாட்னி ஷோவின் மன்மத முகிலே.....

    வாய்ப்புக் கிடைக்கும்போது படத்தை பார்க்கத் தவறாதீர்கள் நண்பரே. வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. ஏதேது?!!

    ஒரு மூனு நாள் ஊருக்கு போயிட்டு வந்தா... ஒரே பதிவு மழையா இருக்கே?!!

    இருங்க எல்லாத்தையும் ஒவ்வொன்னா படிச்சுட்டு பின்னால வர்றேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  8. //ஏதேது?!!

    ஒரு மூனு நாள் ஊருக்கு போயிட்டு வந்தா... ஒரே பதிவு மழையா இருக்கே?!!

    இருங்க எல்லாத்தையும் ஒவ்வொன்னா படிச்சுட்டு பின்னால வர்றேன்!//

    மீ த ரிபீட்டு.பட், நான் இன்னும் ஊர்ல தான் இருக்கேன்.

    ReplyDelete
  9. //நமது ’குழந்தை’ பிஸியாக இருப்பதால், நான் போட்டிக்கு வரவில்லை . .//

    என்ன கொடுமை சார் இது? இருந்தாலும் நன்றி.

    ReplyDelete
  10. காதலரே,

    இந்த படத்தின் எண்மிய பல்திற குறுந்தகட்டினை நானும் மிதவாதி ஒருவரும்தான் சேர்ந்து ஆளுக்கொரு காபி வாங்கினோம். இதன் ஸ்டார்காஸ்ட் அப்படி. இருந்தாலும் டிரைலருடன் நிற்கிறது என்னுடைய பயணம். இன்னமும் பார்க்கவில்லை.

    ReplyDelete
  11. //சுறா த லெஜண்ட் எனும் அமர சினிமாவிற்கு போனால் அங்கு வரும் த லெஜன்டின் ரசிக சிகாமணிகள் அடிக்கும் லூட்டியில் உயிர் கிழிந்து விடும். அதனை விட ஒரு வாரம் பட்டினி கிடந்த சுறா வாழும் தொட்டிக்குள் இருந்து உலக சாதனை செய்வதனையே நான் விரும்புகிறேன்//

    இதுபோன்ற கருத்துக்களை நீங்கள் வெளியிடுவதின் மூலம் எங்கள் மிதவாதி அவர்களை ஸ்பெஷல் ஷோ பார்க்காமல் தடுத்து விட முடியாது. ஜாக்கிரதை. வேட்டைக்காரன் படத்தையே பிளாக் டிக்கெட்டில் பார்த்தவர் அவர்.

    ReplyDelete
  12. தலைவர் அவர்களே, உங்கள் நேர வசதிப்படி நிதானமாகப் படித்து மகிழுங்கள். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

    விஸ்வா, உங்களை குழந்தைகளை கடத்திச் செல்பவர்கள் கடத்திச் சென்றதாக ஒரு வதந்தி நிலவியதே :)) மிதவாதி அவர்களின் தைரியமும், துணிச்சலும் யாரிற்குத்தான் வரும். பிளாக் டிக்கெட்டில் பார்த்தவர் என்பதை அறியும்போது தாங்க முடியவில்லை என்ன ஒரு ரசிகர். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  13. முதல் முறையாக, உங்கள் விமர்சனத்துக்கு முன்னதாகவே இந்த படத்தை பார்த்து விட்டேன். படம் சுமார் தான், என்னை பொறுத்த வரையில்.

    by the way checkout Crazy Heart, if you haven't. Jeff is great in it.

    ReplyDelete
  14. நண்பர் கமல்,திரைப்படம் குறித்த தங்கள் மனம் திறந்த கருத்துக்களிற்கு நன்றி. கிரேஸி கார்ட் வாய்ப்புக் கிடைக்கையில் நிச்சயம் பார்த்து விடுகிறேன். வருகைக்கும் தங்கள் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete