Thursday, April 15, 2010

பச்சை [பொய்] வலயம்


ஈராக்கின் கைவசம் மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்கள் இருப்பதற்கான தகுந்த ஆதாரங்கள் உண்டு எனக் காரணம் காட்டி, அந்த நாட்டின் மீது 2003ல் அமெரிக்கா யுத்தம் தொடுத்தது.

ஈராக் ராணுவத்திடமிருந்து பெரும் எதிர்ப்புக்கள் இல்லாத நிலையில் ஈராக் நாட்டை அமெரிக்காவும், அதனது தோழமை நாடுகளும் இலகுவாக தம்வசப்படுத்தின. இந்நிலையில் ஈராக் நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பேரழிவு ஆயுதங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் அமெரிக்க ராணுவப் பிரிவொன்றிற்கு தலைமை தாங்குபவனாக கடமையாற்றுகிறான் ராய் மில்லர் [Matt Damon].

தனக்கு மேலிடத்திலிருந்து அளிக்கப்பட்ட தகவல்களின் துணையுடன், துப்பாக்கி வேட்டுக்களும், வெடிகுண்டுகளும் அங்கும் இங்குமாக உலவும் பாக்தாத் தெருக்களில், தன் மற்றும் தனது வீரர்களின் உயிரைப் பணயம் வைத்து, பேரழிவு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஸ்தலங்களிற்குச் செல்லும் ராய், அந்த பதுக்கிடங்களில் பேரழிவு ஆயுதங்கள் எதனையும் கண்டு பிடிக்காது ஏமாற்றம் அடைகிறான்.

தனக்கு வழங்கப்படும் தகவல்கள் எல்லாம் வெறும் புரட்டு என மேலிடத்திடம் தன் கருத்துக்களை உரத்துக்கூறும் ராய், இந்த தகவல்களை வழங்குவது யார் என தன் மேலதிகாரிகளிடம் வினவுகிறான். வீண் கேள்விகள் கேட்காது அவனிற்கு தரப்படும் கட்டளைகளை ஏற்றுக்கொண்டு கடமையை மட்டும் செய்ய சொல்லி ராய்க்கு பதில் அளிக்கிறார்கள் அவன் மேலதிகாரிகள்.

மேலதிகாரிகளால் புதிதாக வழங்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, தெருவொன்றில் குழிகளைத் தோண்டி, அப்பகுதியில் பேரழிவு ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனவா என சோதனையில் ஈடுபட்டிருக்கும் ராயை, ஃப்ரெடி எனும் ஈராக்கியன் அணுகுகிறான். ஃப்ரெடி தரும் தகவல்களை அடுத்து ஒரு வீட்டின் மீது அதிரடி சோதனையை நடாத்தும் ராய், சதாமின் மிக முக்கிய தளபதிகளில் ஒருவனான அல் ராவி, அந்த வீட்டிலிருந்து தப்பிச் செல்வதை கண்டு கொள்கிறான்.

green-zone-2010-15319-1566841466 தப்பிச் சென்ற தளபதி அல் ராவியைக் கண்டுபிடித்தால், பேரழிவு ஆயுதங்களின் இருப்புக் குறித்த நம்பகமான தகவல்களை அறிந்து கொள்ளலாம் என உறுதியாக நம்பும் ராய், ஈராக்கில் நிலை கொண்டிருக்கும் CIA அதிகாரிகள் ஆதரவுடன் தளபதி அல் ராவியைக் கண்டுபிடிப்பதற்காக கிளம்புகிறான்…

ஆனால் ராய் கண்டுபிடித்து விசாரனை செய்யத் துடிக்கும் அதே அல் ராவியை, பாக்தாத் நகரின் பச்சை வலயப் பகுதி பெண்டகன் உயரதிகாரியான கிளார்க் பவுண்ட்ஸ்டோனும் [Greg Kinnear] கண்டுபிடிக்க விரும்புகிறான். பிணமாக, விரைவாக, ராய் தளபதி அல்ராவியை சந்திப்பதற்கு முன்பாக… இதற்காக தன் அதிகாரத்தின் கீழ் கடமையாற்றும் விசேட அதிரடிப்படை வீரர்களை அல்ராவியின் கதையை முடிப்பதற்காக அனுப்பி வைக்கிறான் கிளார்க் பவுண்ட்ஸ்டோன். ஆரம்பமாகிறது அதிரடி ஆக்‌ஷன் ஆட்டம்..

ஈராக்கில் யுத்தம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரையில், அங்கு எந்தப் பேரழிவு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியானதில்லை. இல்லாத ஒன்றை காரணமாகக் காட்டி அமெரிக்காவானது ஈராக் மீது யுத்தம் தொடுத்ததற்கான உண்மைக் காரணங்கள் இவையாக இருக்கலாம் என்பதை பரபரப்புடன் கூறுகிறது இயக்குனர் Paul Greengrass இயக்கியிருக்கும் Green Zone எனும் இந்த ஆக்‌ஷன் திரைப்படம்.

green-zone-2010-15319-1136329583 ஈராக் போரில் ஈடுபட்ட வல்லரசு நாடுகளின் கூட்டமைப்பின் அதிகார கேந்திர மையம் பாக்தாத் நகரின் மத்திய பகுதியில் அமைந்திருந்தது. எந்தவிதமான ஆபத்துக்களும் அற்ற ஒரு வலயமாக இது கருதப்பட்டது. இவ்வலயத்தையே Green Zone எனும் பெயர் கொண்டழைத்தார்கள். The Washington Post பத்திரிகையில் பணியாற்றிய ராஜீவ் சந்திரசேகரன் இவ்வலயத்தில் தான் பெற்ற அனுபவங்களையும், அவதானிப்புக்களையும் Imperial Life in Emerald City எனும் புத்தகமாக வெளியிட்டார். அப்புத்தகத்தைச் சிறிது தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

பெண்டகன் அதிகாரிகள் ஊடகங்களிற்கு பொய்த் தகவல்களை வழங்கியது, பெண்டகனிற்கும் CIA அமைப்புக்குமிடையில் நிலவிய கடுமையான போட்டி மற்றும் உள்குத்தல்கள், தனக்கு கைப்பொம்மையாக இருக்ககூடிய அரசொன்றை அமெரிக்கா ஈராக்கில் நிறுவ முயன்றது, போரின் பின்னான நாட்களில் ஈராக் மக்களின் கையறு நிலை, ஈராக் மக்களிற்கும் அமெரிக்க ராணுவ வீரர்களிற்குமிடையில் நிலவிய பதட்டமான உறவு, சதாமின் ராணுவத் தளபதிகளின் ஆதாயம் தேடும் கனவுகள், ஈராக் யுத்தக் கைதிகள் நடாத்தப்பட்ட விதம் என்பவற்றின் ஊடாக உண்மையைத் தேடி ஜெட் இயந்திரம் பொருத்திக் கொண்டு பறக்கிறது கதை.

Bourne திரைப்படங்களின் பின் மீண்டும் வெற்றிக் கூட்டணி அமைத்திருக்கிறார்கள் நடிகர் மாட் டாமோனும் இயக்குனர் பால் கிரீன் கிராஸும். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுவென்று தொய்வில்லாது திறமையாக பாய்ந்து செல்கிறது திரைப்படம். அமெரிக்க எதிர்ப்புக் கொள்கையுடைய திரைப்படம் என ஒரு சாரார் இதற்கு முத்திரையும் குத்தியிருக்கிறார்கள்.

அங்கும் இங்கும், மேலும் கீழும், சுற்றி சுழன்று, அதிர்ந்து, விழிகள்போல் இயங்கும் கமெராவும், இமைத் துடிப்பாக நிகழ்ந்திருக்கும் எடிட்டிங்கும், இதயத்துடிப்பை எகிற வைக்கும் அபாரமான இசையும் சேர்ந்து திரையிலிருந்து ரசிகர்கள் தம் கண்களை வேறுபக்கம் நகர்த்த முடியாமல் கட்டிப் போடுகின்றன.

green-zone-2010-15319-893709346 மாட் டாமோனிற்கு இவ்வகையான ஆக்‌ஷன் வேடங்கள் டீ சர்ட் மாற்றுவது போல் ஆகிவிட்டது. களைக்காமல், சளைக்காமல் கதையோடு ஈடு கட்டி ஓடுகிறார் அவர். இதயமுள்ள ஒரு அமெரிக்க வீரனாக[ அமெரிக்கனாக] அவர் சித்தரிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் Bourne பட வரிசையில் அவரிற்கு வழங்கப்பட்டிருந்த தாரளமான ஆக்‌ஷன் பங்கு இப்படத்தில் குறைவாகவே உள்ளது என்பது சிறு குறையாகவே தெரிகிறது.

தகவல் தருபவனாக ஆரம்பித்து பின் மாட் டாமோனிற்கு மொழி பெயர்ப்பாளராக தொடரும் ஃப்ரெடி பாத்திரம், வல்லரசுகளின் சக்திகளிற்கும், அவற்றின் உரத்த குரல்களிற்கும், ஆக்கிரமிப்பிற்குமிடையில் ஒடுங்கும் ஒரு சாதாரண ஈராக் பிரஜையின் குரலாகவே ஒலிக்கிறது. குண்டு வெடிப்புக்களின் சத்தத்தில் அப்பிரஜையின் குரல் தேய்ந்து போகிறது. எனவே இறுதியாக அவரை பின்னனி இசையின் துணை இல்லாது பெரும்பான்மையான ஈராக் மக்கள் கூறவிரும்பும் கருத்தை உரத்துக் கூற வைத்திருக்கிறார் இயக்குனர் க்ரீன் கிராஸ்.

தளபதி அல் ராவியை, மாட் டாமோன் தேடிச் செல்லும் காட்சிகள் வேகம் எனில், அவர் தளபதி அல் ராவியை சந்தித்த பின்பாக வரும் காட்சிகளின் அனல் பறக்கும் வேகத்தை எதிர் கொள்ள முடியாது பார்வையாளர்கள் இருக்கைகளில் அழுந்திப் போகிறார்கள். ஒரு ஆக்‌ஷன் படத்தின் உச்சக்கட்டக் காட்சிகள் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கான அற்புதமான வரைவிலக்கணமாக அக்காட்சிகள் அமைந்து ஆக்‌ஷன் பிரியர்களை திருப்தி செய்கின்றன..

பிரம்மாண்டமான ஒன்றை எதிர்பார்த்திருந்த ரசிகர்களை இயக்குனர் வழங்கும் முடிவு அவ்வளவாக திருப்தி செய்யாது எனினும் ஒரு வன்போரின் பின்னே, பாக்தாத்தின் பச்சை வலயத்தின் உள்ளே உற்பத்தி செய்யப்பட்டிருக்க கூடிய பொய்களையும், அந்த வலயத்திற்கு வெளியே வாழ்ந்திருக்க கூடிய உண்மைகளையும், அவலங்களையும், ஆக்‌ஷன் குழம்பில் தோய்த்து தருவதில் சிறப்பான வெற்றி கண்டிருக்கிறது இத்திரைப்படம். [***]

ட்ரெயிலர்

13 comments:

  1. காதலரின் இந்த பதிவில் முதலில் கருத்தினை பதிப்பது நானேதான்.

    ReplyDelete
  2. படம் இங்கே இன்னமும் வரவில்லை.

    உலக சினிமா ஒன்றே நாளைதான் ரிலீஸ் ஆகிறது. (சுந்தர் சியின் "வாடா").

    அதனைத்தான் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்

    ReplyDelete
  3. படம் சூப்பர் என்று என்று கேள்வி. கனவுகளின் காதலர் என்ன சொல்கிறார்?

    இந்த படத்தினை தமிழில் எடுக்க ஆயத்தம் செய்து விட்டார்கள். உலக நாயகன் J.K ரித்தீஷ் நடிக்கிறார், இயக்கமும், வசனமும், திரைக்கதையும், பாடல்களும், இசையும், அவரே.

    ReplyDelete
  4. காதலரே . . இப்படத்திற்காக நீண்ட நாள் காத்திருக்கிறேன் . .இங்கே, விஸ்வா சொன்ன ‘ஒலகப்படம்’ தான் ரிலீஸாகிறது . . :-)

    பொதுவாகவே, நடுநிலையான அரசியல் படங்கள் ஏல் எனக்கு இஷ்டம் உண்டு. இதற்கு முன்னர் இந்த ரீதியில் நான் சிலாகித்த படம், ‘பாடி ஆஃப் லைஸ்’. இப்படம், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பட்டையைக் கிளப்பும் என்று தெரிகிறது . .

    மேட் டேமன் கொஞ்ச காலமாகவே, நன்றாக நடித்து வருகிறார். ஆனால், வெகு நாட்கள், மார்க் வால்பெர்க்குக்கும் மேட் டேமனுக்கும் வித்தியாசமே தெரியாமல் கண்டபடி குழம்பியிருக்கிறேன் . . :-)

    ReplyDelete
  5. torrentaaya namahaதான் எல்லாப் படத்தயும் இங்குன ரிலீஸ் ஆகிதான் பாக்கோனும்னா வயசாயிரும்...நல்ல பகிர்வு நண்பா.

    ReplyDelete
  6. நல்ல விமர்சனம்.. நம்மூருல ரிலீஸ் ஆகலன்னா என்ன.. torrent இருக்குல்ல.. பாத்துடறேன்..

    ReplyDelete
  7. Matt Damon நடிப்பு,பால் க்ரீன் இயக்கமா?
    ஆக்ஸன் படம் வேற?கண்டிப்பா பாத்துடுவோம்.....
    மேட் பத்தி சொல்ல வேண்டியதில்லை. Good will hunting அவரோட படங்கள்ல எனக்கு பிடிச்சது.....

    ReplyDelete
  8. விஸ்வா, நீங்கள் சொல்லியிருக்கும் உலக சினிமாவின் பெயரே காந்தமாய் இழுக்கிறது. இப்படி அன்பாக அழைக்கும்போது மக்கள் கட்டாயம் பார்க்க போவார்கள். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ஒலக காமிக்ஸ் ரசிகரே, அமெரிக்காவில் அதிக வரவேற்பை இப்படம் பெறவில்லை என்று கேள்வி. இருப்பினும் ஆக்‌ஷன் படம் எனும் வகையில் திரைப்படம் ரசிகர்களை திருப்தி செய்யும். கருத்துக்களிற்கு நன்றி. அன்பு அண்ணன் ரித்திஷ் வாழ்க வளர்க.

    நண்பர் கருந்தேள் ஒலகப்படம் என்பது தமிழ் வாழ்வின் ஒரு அங்கம் அல்லவா. கீரின் ஸோன் நன்றாக இருக்கிறது, திரையில் பார்ப்பது சிறப்பானது. வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    நண்பர் மயில்ராவணன் தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் ஜெய், வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    நண்பர் இலுமினாட்டி, திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  9. உங்களின் பதிவை படிக்கும் போதே பற்றிக் கொள்கிறது ஜெட் வேகம். கண்டிப்பாக பார்க்க வேண்டும் . பகிர்வுக்கு நன்றி நண்பரே. புத்தகம் என்பது வேறு
    ஆனால் படம் எடுத்து உள்ளார்களே ..? அதிகமான எதிர்ப்பு வரும் அல்லவா .

    ReplyDelete
  10. நண்பர் வேல்கண்ணன், எதிர்ப்பு வரலாம், கலைஞர்கள் அதற்கு சளைத்தவர்கள் அல்லவே, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  11. நண்பரே இலங்கையில் இந்த திரைப்படம் கடந்தவாரம் வெளியாகியுள்ளது. வார இறுதியில் பார்த்துவிட்டு இங்கே மீள வருகின்றேன். :)

    ReplyDelete
  12. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

    நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. நண்பர் ஜே, இலங்கையில் வெளியாகி விட்டது நல்லதொரு நிகழ்வே. நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள அரங்கில் பார்த்தீர்கள் எனில் ஆக்‌ஷன் காட்சிகள் ச்சும்மா அதிரும். தாராளமாக மீண்டும் வந்து உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே. வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    நண்பர் ஜாலிஜம்ப்பர் அவர்களிற்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete