Friday, April 23, 2010

இருளே என் பெயர் இரினா


13049_167674563396_89262728396_2619981_6052789_n வெண்பனி, அளவெடுத்து போர்வை தைத்து பெலரூஸின் அந்தக் கிராமப்புறத்தை போர்த்தியிருந்தது. காமம் கொண்ட காதலன் போல், இரவு பிடிவாதமாக அப்போர்வையின் மீது படிந்திருந்தது. கிராமத்திலிருக்கும் அந்த அனாதை விடுதியின் விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டிருக்கின்றன. பெண்களிற்கான அந்த விடுதியின் படுக்கை மண்டபத்தினுள், தன் கையில் ஒரு டார்ச் விளக்குடன் நுழைகிறாள் விடுதியைக் காவல் காக்கும் பெண்.

மண்டபத்தில் நீண்டு கிடக்கின்றன படுக்கைகள். அனாதையான எதிர்காலங்கள் அவற்றின்மேல் தம்மை மறந்து துயில் கொண்டிருக்கின்றன. ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் இரினா மற்றும் யூலியா ஆகிய இரு இளம் பெண்களையும் அவர்களின் உறக்கத்திலிருந்து எழுப்பும் விடுதியின் காவற்காரி, அவர்களைத் தனியே அழைத்துச் செல்கிறாள்.

அனாதை விடுதியில் சுகாதர விதிமுறைகள் எவ்வாறு பேணப்படுகின்றன எனபது குறித்து, திடீர் சோதனையிட மொஸ்கோவிலிருந்து வந்திருக்கும் அதிகாரி ஒருவன், இந்த நள்ளிரவிலும் அவர்களைத் தனித் தனியே சோதனையிடப் போகிறான் என்பதை டார்ச் லைட்டின் வீர்யமற்ற பிரகாசத்தில் இளம் பெண்களிற்கு விளக்குகிறாள் அனாதை விடுதியின் காவற்காரி.

முதலாவதாக யூலியாவை அதிகாரி பரிசோதிப்பதற்காக அவனிருக்கும் அறைக்கு இட்டுச் செல்கிறாள் காவற்காரி. தனது ஆருயிர் தோழியை எதிர்பார்த்து இருளில் காத்திருக்கிறாள் இரினா. யூலியாவின் இதழ்களின் சுவை இரினாவில் விழித்திருந்தது.

சில மணித்துளிகளின் பின் யூலியாவும், காவற்காரியும் இருளில் காத்திருந்த இரினாவை நெருங்கி வருகிறார்கள். தனது தோழி யூலியா மடங்கியவாறே நடந்து வருவதையும், அவள் முகத்தில் ஓடும், வலியின் விகாரமான கோடுகளையும் அவதானித்து விடுகிறாள் இரினா.

iri1 விடுதியின் காவற்காரி இரினாவை மறு பேச்சு பேசாது உடனடியாக படுக்கை மண்டபத்திற்கு திரும்ப உத்தரவு தருகிறாள். இரினாவோ யூலியாவிற்கு என்ன நிகழ்ந்தது என்று அக்கறையுடன் விசாரிக்க, யூலியாவின் உடல் நிலை திடீரென சீர் கெட்டு விட்டது எனப் பதில் தருகிறாள் காவற்காரி. இரினாவை உடனடியாகப் படுக்கைக்கு திரும்பச் சொல்லும் காவற்காரி யூலியாவை விடுதியின் சிகிச்சைப் பிரிவிற்கு இட்டுச் செல்கிறாள்.

காவற்காரி, யூலியாவுடன் சிகிச்சைப் பிரிவை நோக்கி மறைந்ததும், யூலியாவை சோதனையிட்ட அறையை நோக்கி மெதுவாக நகர்கிறாள் இரினா. அந்த அறையை நெருங்கும் அவள், அங்கு ஒரு அதிகாரி தன் கத்தியையும், தரையில் சிந்தியிருந்த ரத்தத்தையும் சுத்தம் செய்து கொண்டிருப்பதைக் காண்கிறாள். சிறிது நேரத்தில் அந்த அதிகாரி அந்த அறையை விட்டு வேகமாக வெளியேறி விட, அறையினுள் நுழையும் இரினா தரையில் ஊறியிருந்த ரத்த வாடையை முகர்கிறாள், கீழே வீழ்ந்திருந்த ஒரு சிகப்பு நட்சத்திரப் பதக்கத்தையும் கண்டெடுக்கிறாள்.

மறுநாள் காலை, யூலியா அந்த அனாதை விடுதியிலிருந்து தடயம் ஏதுமின்றி காணமல் போயிருக்கிறாள். அனாதை விடுதிக் காவற்காரியை தன் தோழி பற்றிய கேள்விகளால் துளைத்தெடுக்கிறாள் இரினா. ஆத்திரமுறும் காவற்காரி இரினாவை அடித்து, மிரட்டுகிறாள்.

தன் உயிர்த் தோழியின் மறைவிற்காக மனம் வருந்தும் இரினா, பரிசோதனையின்போது யூலியா அதிகாரியால் சேதமாக்கப்பட்டிருக்க வேண்டும் என எண்ணுகிறாள். காயமுற்றிருந்த யூலியா பின்பு சிகிச்சைப் பிரிவில் இறந்திருக்க வேண்டும் எனும் முடிவிற்கு வரும் இரினா, பெயர் தெரியாத அந்த அதிகாரியை, அவன் யாராகவிருந்தாலும், அவன் எங்கேயிருந்தாலும் அவன் உயிரைத் தானே பறிப்பேன் என சபதமிடுகிறாள். அந்த அதிகாரியின் முகத்தை தன் மனதில் பதித்துக் கொள்கிறாள். சில நாட்களின் பின் அந்த அனாதை விடுதியிலிருந்து தப்பிச் செல்லுகிறாள். அவள் வாழ்வே அவளிடமிருந்து தப்பிச் செல்லப் போகிறது என்பதை அறியாமல்.

iri2 அனாதையான ஒரு இளம் பெண்ணிற்கு அவள் வாழும் உலகை விட சிறந்த நரகம் வேறேதுமில்லை. Minsk எனும் சிறு நகர் ஒன்றிற்குள் நுழையும் இரினா, உண்பதற்கும், உயிர் வாழ்வதற்கும் வீடுகளில் திருடுகிறாள். மூதாட்டிகளை அடித்து, நொருக்கி அவர்களிடமிருந்து பணம் பறிக்கிறாள். ஆனால் இரினா அந்நகரில் நுழைந்ததிலிலிருந்து ஒரு குழு அவள் நடவடிக்கைகளை தொடர்ந்து வேவு பார்த்து வருகிறது.

ஒரு சமயம் வீடொன்றில் திருடி விட்டுத் திரும்பும் இரினா இந்தக் குழுவிடம் மாட்டிக் கொள்கிறாள். அவர்களிடமிருந்து முரட்டுத்தனமாக தப்பிக்க முயலும் இரினாவை அடிகளால் பின்னி எடுக்கிறார்கள் அக்குழுவினர். அவர்கள் கேட்கும் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்காதிருக்கிறாள் இரினா. அவளின் உறுதி அக்குழுவினரை அசத்தியிருக்க வேண்டும். இரினாவிற்கான புதைகுழியை இரினாவையே தோண்டச் சொல்கிறார்கள் அவர்கள்.

பனி உறைந்த நிலம், காதலைப் புறக்கணித்த பெண்களின் மனங்களை விடக் கடினமானது. அந்த நிலத்தில் புதைகுழியை தோண்ட முடியாது தினறுகிறாள் இரினா. அந்த வேளையிலும், துப்பாக்கி தன் உயிரைக் குறி வைத்தபோதும், அக்குழுவினரின் கேள்விகளிற்கு பதில் அளிக்கவில்லை அவள். உயிரே போனாலும் சரி, தன் வாழ்க்கையில் மீண்டும் அந்த அனாதை விடுதிக்கு திரும்ப மாட்டேன் என உறுதியுடன் பேசுகிறாள் இரினா. அவளின் அந்த உறுதிதான் அவள் வாழ்வைப் புரட்டிப் போட்டது. அவளைக் கொல்லப் போவதாக மிரட்டிய அக்குழுதான் அவளை KGB யில் கொண்டுபோய் சேர்த்தது.

அந்தக் குழுவானது Minsk நகரில் இரினாவின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்தது. நூறு வீதம் எதிர்ப்பை எதிர் கொள்ள வேண்டிய ஒர் சூழலில், எவ்வாறு அவள் தன்னைக் காத்துக் கொள்கிறாள், உயிர் வாழப் போராடுகிறாள், அவளது திறமைகள், அவளது தவறுகள் என யாவும் அக்குழுவால் கண்காணிக்கப்பட்டன. ஆனால் இரினாவிடம் அவர்களிற்கு மிகவும் பிடித்திருந்தது என்னவெனில், உயிர் தப்ப வேறு வழிகள் ஏதும் இல்லாத வேளையில், மரணத்தை மட்டுமே அவள் உறுதியாக எதிர் கொள்ளத் துணிந்தாள் எனும் அந்தத் தகுதிதான்.

KGB யில் இரினா பெறும் பயிற்சிகள், அதிகாரத்தின் கட்டளைகளிற்கு மறுபேச்சு ஏதும் பேசாது அடி பணியும் ஒரு தேர்ந்த கொலை எந்திரமாக அவளை வார்த்து எடுக்கிறது. KGBல் தான் பெற்ற பயிற்சிகளையும், தன் கவர்ச்சியையும் உபயோகித்து, அனாதை விடுதிக்கு நள்ளிரவில் விஜயம் செய்த அதிகாரி யார் என்பதை இரினா கண்டு பிடித்து விடுகிறாள். அந்த அதிகாரியின் பெயர் வசிலி இவானென்கோ. KGBன் உயர் மட்ட அதிகாரிகளுடன் நெருக்கம் கொண்டவன். KGBல் அவள் இணைந்ததிற்கு ஒர் புதிய அர்த்தம் கிடைத்து இருப்பதை இரினா உணர்ந்து கொள்கிறாள். இப்போது வாழ்வில் அவளிற்கு தேவையானது ஒன்று மட்டுமே, அது வசிலி இவானென்கோவின் ரத்தம்….

iri3 12 வருடங்களின் பின் இரினா எவ்வாறு வசிலி இவானென்கோவை நீயூயார்க்கில் வைத்து பழிவாங்குகிறாள் என்பதை விபரித்து செல்கிறது தொடரும் கதை. ஜெசிக்காவை KGBன் பக்கம் இழுப்பதற்காக இரினா, ஜெசிக்காவுடன் ஆடும் காதல் நாடகம், கேணல் ஏமஸை கொலை செய்யும் முயற்சி, மங்கூஸ்ட்டுடனான அறிமுகம் என XIII காமிக்ஸ் தொடரின் பிரபல பாத்திரங்களை கதைக் களத்திற்குள் புகுத்தியிருக்கிறார் கதாசிரியர் Corbeyran. கதாசிரியர் கோர்பேரான் எழுதிய ஒரு காமிக்ஸ் தொடர் குறித்து இரவுப் பறவையின் கானம் பதிவில் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.

ஆனால் ஜிவ்வென வேக விமானம் போல் பறக்க வேண்டிய கதை, மழையில் நனைந்த புறாவாக தத்துகிறது. கதையின் ஆரம்பத்தில் இருந்த வேகம் கதையின் ஓட்டத்தில் காணமல் போய்விடுகிறது. இரினா, இவானென்கோவிற்கு நெருங்கிய KGBன் குறிப்பிடத்தக்க அதிகாரியான விளாடிமீரை சந்தித்தல், விளாடிமீர் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தும் அவனைத் திருமணம் செய்தல், ஜெசிக்காவுடனான முதல் சந்திப்பிலேயே அவளை இரினா தன் காதல் வலையில் வீழ்த்தல், அமெரிக்காவில் KGBக்காக இரினா ஆற்றும் கொலைகள் போன்ற சம்பவங்கள் யாவும், கதையில் தட்டில் வைத்து இரினாவிற்கு வாய்ப்புக்களும்,அதிர்ஷ்டங்களும் பரிமாறப்படும் எளிமையான உணர்வை வழங்குகின்றன. இவற்றை போராடி அடைந்தால் அல்லவா வாசகனிற்கு இரினா பாத்திரம் மறக்க முடியாத ஒன்றாகவிருந்திருக்கும். அதிலும் KGB அதிகாரி இவானென்கோ, ஜெசிக்காவை சந்தித்த இரு மணி நேரத்திலேயே, அவளுடன் காதல் செய்வதற்காக ஒரு மூன்றாம்தர ஹோட்டலிற்கு ஓடி வருவது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது.

தன் தோழி யூலியா போலவே தோற்றம் கொண்டவள் ஜெசிக்கா என்பதால்தான் அவள் மேல் இரினா கூடுதலான ஈர்ப்பு உடையவளாக இருக்கிறாள் என்று கதையில் கூறப்படுகிறது. ஆனால் இந்த உறவை வலுவாக்கும் உணர்வுகள் சிறப்பாக கதையில் வெளிப்படவில்லை என்பதால் அந்த உறவு நாடகம் எனும் நிலையிலேயே நின்று விடுகிறது. கதையில் இரினா குறித்து மங்கூஸ்ட் எவ்விதம் தெரிந்து கொண்டான் என்பதற்குரிய எந்தக் காரணங்களும் வழங்கப்படவில்லை. வாசகர்கள் பக்கங்களை பிறாண்டிக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி.

iri4 கேணல் ஏமஸ் கொலை முயற்சியும், அதன் பின்னே இருக்கும் KGBன் சதியும் உண்மையிலேயே ஒரு அமெச்சூர் நாடகம் பார்த்த உணர்வை வழங்கும் தரத்தில் இருக்கிறது. இவ்வகையான ஒரு நொளாநொளா கதை சொல்லலால், XIIIன் மிக முக்கிய வில்லியான இரினா பாத்திரத்தை வாசகர்கள் மனதில் உறுதியாக ஊன்றக் கிடைத்த வாய்ப்பை அநியாயத்திற்கும் தவற விட்டிருக்கிறார் கதாசிரியர்.

இரினா தங்கியிருந்த அனாதை விடுதியில் உண்மையில் என்ன நடந்தது என்பதை வாசகர்கள் அறியும் போது, இரினா மேல் இரக்கப்படுவதற்குப் பதிலாக அட போங்கய்யா என்று சொல்ல வைத்து விடுகிறது விறுவிறுப்பற்ற கதையோட்டம். மங்கூஸ்ட் கதையில் இருந்த அந்த விறுவிறுப்பு, மங்கூஸ்ட் பாத்திரத்திற்கு அக்கதையின் கதாசிரியர் சேவியர் டாரிசன் வழங்கியிருந்த புதிய பரிமாணம் போன்ற அம்சங்கள் இந்தக் கதையில் உயிரற்று மிதக்கிறது.

கதைக்கு சிறப்பான சித்திரங்களை வரைந்திருப்பவர் Philippe Berthet. கதை நெடுகிலும் மயக்கமான ஒரு இருள் மறைந்திருக்குமாற்போல் சித்திரங்களை வழங்கியிருக்கிறார் அவர். பனி படர்ந்த பெலரூஸ், வசந்தகால அமெரிக்கா, வான்ஸிற்கு இஷ்டமான மழைக்காட்சி என்று தன் பணியை சிறப்பாக செய்திருக்கிறார் ஓவியக் கலைஞர் பிலிப் பேர்த்தே.

சித்திரங்களில் அவர் காட்டியிருக்கும் ஒளி விளையாட்டுக்கள் அருமை. இளைமைப் பருவ இரினாவின் அழகை அவர் அழகாக வடித்திருக்கிறார். இரினாவினதும், ஜெசிக்காவினதும் இளமை அழகுகள் வாசகர்களிற்கு தாராளமாக அள்ளி வழங்கப்படுகிறது. வான்ஸ் உருவாக்கிய இரினாவைத் தழுவி, ஒரு புதிய, இளமையான இரினாவை வாசகர்களிற்கு தருவதில் பேர்த்தே வெற்றி பெற்றிருக்கிறார். இந்தக் காமிக்ஸ் ஆல்பத்தை காப்பாற்றுவதில் பேர்த்தேயின் சித்திரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன என்றால் அது மிகையல்ல.

XIII மிஸ்டரியின் இரண்டாவது ஆல்பமாகிய இரினா, வான்ஹாம் உருவாக்கிய இரினாவிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. பணத்தை அள்ளுவதற்காக மட்டுமே தொடரை நீட்டினால், இவ்வகையான விளைவுகள் தவிர்க்க முடியாத ஒன்றே. தன்னைச் சுற்றிப் படர்ந்திருக்கும் இருளில் நின்றவாறே எங்களைப் பார்த்து கவர்சியாகப் புன்னகைக்கிறாள் அழகி இரினா. அவளைச் சூழ்ந்திருக்கும் அந்த இருள் நீங்கப் போவதில்லை. வான்ஹாம் உருவாக்கிய இரினா மட்டுமே எங்கள் மனதில் நிலைத்திருப்பாள். இருள் மாறாமலே. [*]

20 comments:

  1. மீ த ஃபர்ஸ்ட்டு !!! :-) இதோ படிச்சிகினு வாரேன் . . :- )

    ReplyDelete
  2. காதலரே - இந்தப் புத்தகத்தை அறிந்து கொண்டேன் . . கண்டிப்பாக இதைப் படித்து, பதிமூன்றின் மேல் இருக்கும் மரியதையைக் குறைத்துக் கொள்ள மாட்டேன் . . இந்த அறிமுகத்துக்கு நன்றி . .

    நேற்றுதான் மாக்ஸிமிலியன்’ஸ் கோல்ட் படித்தேன் . . பதிமூன்றின் தொடர்களிலேயே படு திராபையான கதை என்றால் அது இது தான் .. மொக்கையின் உச்சம் . . பயங்கரக் கடுப்பாகி விட்டேன் . . ஹூம்ம். .

    இந்த ஒரு வாரமாக, நமது XIII பதிவுகளில் திடீரென பிரபலமாக ஆரம்பித்திருப்பது ஆனந்தமாக இருக்கிறது . . :-) கலக்குவோம் !!

    பி.கு - மீ தெ செகண்ட் ஆல்ஸோ . . :-)

    ReplyDelete
  3. அண்டு, மீ த தேர்ட் . . இப்படிக்கி, பின்னூட்டப் புலி கருந்தேள் . . !! :-)

    ReplyDelete
  4. மீ த ஃபோர்த்து !

    சற்று பிசியாக இருந்ததால் (மற்றுமொரு சுற்றுப்பயணம் - என்னகொடுமை சார் இது) இந்த பின்னூட்டப் புலி கருந்தேள் இடம் தோற்று விட்டேன்.

    ReplyDelete
  5. அருமையான கருத்துக்களை வழங்கிய குருஜி குத்தானந்தா வாழ்க.

    ReplyDelete
  6. கருந்தேள் அவர்களே...
    XIII எட்டாம் பாகத்தில் முடிக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும்.அட்லீஸ்ட் 12 வது பாகத்திலாவது முடிக்கப்பட்டு இருந்திருந்தால், அது இப்படி கம்பீரம் இழந்து, சோகை வந்து திராபை ஆனதை பார்க்காமல் இருந்திருக்கலாம்.என்ன செய்ய?

    ReplyDelete
  7. // காமம் கொண்ட காதலன் போல், இரவு பிடிவாதமாக அப்போர்வையின் மீது படிந்திருந்தது.//

    //அனாதையான ஒரு இளம் பெண்ணிற்கு அவள் வாழும் உலகை விட சிறந்த நரகம் வேறேதுமில்லை.//

    //பனி உறைந்த நிலம், காதலைப் புறக்கணித்த பெண்களின் மனத்தை விடக் கடினமானது.//

    எங்கிருந்துயா புடிக்கிறீங்க இந்த மாதிரி லைன எல்லாம்?
    காமிக்ஸ்ன்னாலே காதலருக்கு கவிதையா கொட்டுது. அடுத்தடுத்து காமிக்ஸ் பதிவுகளா? பாக்கவே சந்தோசமா இருக்கு.நடத்துங்க.

    //ஆனால் ஜிவ்வென வேக விமானம் போல் பறக்க வேண்டிய கதை, மழையில் நனைந்த புறாவாக தத்துகிறது.//

    இது நான் எதிர்பார்த்தது தான்.....

    ReplyDelete
  8. கனவுகளி காதலரே!

    // காமம் கொண்ட காதலன் போல், இரவு பிடிவாதமாக அப்போர்வையின் மீது படிந்திருந்தது.//

    //அனாதையான ஒரு இளம் பெண்ணிற்கு அவள் வாழும் உலகை விட சிறந்த நரகம் வேறேதுமில்லை.//

    //பனி உறைந்த நிலம், காதலைப் புறக்கணித்த பெண்களின் மனத்தை விடக் கடினமானது.//

    ILLUMINATHI - ஐ வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  9. அழகான பதிவு. அதுவும் கடைசி ஸ்கேனின் உங்களின் மொழிபெயர்ப்பு அற்புதம். (அந்த ஸ்கேனில் மற்றதையெல்லாம் விட்டுவிட்டு உங்களின் மொழிநடையை ஆராய்ந்த என்னை நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும்)

    ReplyDelete
  10. //அந்த ஸ்கேனில் மற்றதையெல்லாம் விட்டுவிட்டு உங்களின் மொழிநடையை ஆராய்ந்த என்னை நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும் //

    கண்டிப்பா.... :)
    ஆமா சிவ்,இவ்ளோ நல்லவரா நீங்க? :)

    ReplyDelete
  11. நண்பர் பின்னூட்டப் புலி கருந்தேள் அவர்களே, மக்ஸிமில்லியன் தங்கத்தை விட இறுதி ஆட்டம் ஏமாற்றத்தை தரும் ஆல்பமாக அமையும். 3 பின்னூட்டங்களால் நீங்கள் குழந்தையை முந்தியிருப்பது பாராட்டுக்குரியது :)) வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    நண்பர் விஸ்வா, இனி உங்களை ஊர் சுற்றும் குழந்தை என்று அழைக்க வேண்டியதுதான் :) குருஜி குத்தானந்தா தன் கடமையைத்தானே செய்திருக்கிறார். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் இலுமினாட்டி, காமிக்ஸ் பதிவுகள் எனக்கும் மகிழ்வையே அளிக்கின்றன. தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. நண்பர் சிவ் ஒரு அமைதிப் புறா ஆனால் பாய்ந்தால் சுறா :)

    நண்பர் தமீம், தங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

    நண்பர் அ.வெ. அவர்களே தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிவ், மிக்க நன்றி. பாராட்டுக்களும் உரித்தாகுக. உண்மையைச் சொல்லுங்கள் ஒன்றையுமே அவதானிக்கவில்லையா :)

    ReplyDelete
  12. இரத்தப் படலம் மீதான காதலரின் ஆர்வமோ பெரும் ஆச்சர்யம்.

    அது சரி எங்களில் பலரிற்கும் அதுதானே நிலை. :)

    ReplyDelete
  13. நண்பர் ஜே, பல ரசிகர்கள் ஆர்வமாக இருந்தபோதும் விடாப்பிடியாக ஜம்போ ஸ்பெசலை வெளியிடாது அடம் பிடிக்கும் ஆசிரியரிற்கு இந்த உணர்வுகள் புரியுமா. இதனை விட அவர் தனித்தனி இதழ்களாகவே ரத்தப்படலத்தை வெளியிட்டிருக்கலாம். என்றுதான் அவர்தன் பிடிவாதப் போக்கை மாற்றிக் கொள்வாரோ!! வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  14. வாவ் மிக சிறந்த மற்றும் தேர்ந்தெடுத்த ஸ்கேன் பக்கங்கள்
    நன்றி

    ReplyDelete
  15. நண்பர் சிபி, வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

    ReplyDelete
  16. அன்பு நண்பரே

    பதிமூன்றாம் உலகத்திலிருந்து மற்றொரு முகத்தை உங்கள் அருமையான உரைநடையுடன் அறிமுகப்படுததியுள்ளீர்கள்.

    ஆரம்பம் நன்றாக இருந்தால் முடிவு சரியில்லை என கணித்துள்ளீர்கள். ஆனால் சித்திரங்கள் என்னை பொறுத்தவரையில் அற்புதமாக இருக்கின்றன.

    ரஷ்ய புறாப் பள்ளியிலிருந்து வெளியேறிய அழகிகளின் கதைகளை படித்திருக்கிறேன். இரியான இதிலிருந்து வித்தியாசமானவள் என தெரிகிறது.

    நல்ல அறிமுகம். மேஜர் ஜோன்ஸ் பற்றி வந்தாலும் தெரியபடுத்துங்கள்.

    ReplyDelete
  17. ஜோஸ், சித்திரங்கள் சிறப்பாக இருக்கின்றன என்பது உண்மையே. இரினா, அவள் மனதில் தன் தோழியின் மரணத்திற்கு வஞ்சம் தீர்ப்பது என்பதை மட்டும் பிரதானமாகக் கொண்டு தன் வாழ்வை அதன் பாதையில் அமைத்துக் கொள்கிறாள். அவள் வித்தியாசமானவள்தான். அடுத்து வருவது ஜெனரல் விட்டேக்கரின் கதை. ஜோன்ஸின் கதை வந்ததும் பதிவிட்டு விடுகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  18. Looks interesting. Where can I get the link for this story

    ReplyDelete