Sunday, December 26, 2010

வெனிஸ் காதலன்


நிதி மோசடிக்காக ஸ்காட்லாண்ட்யார்ட் பொலிசாரால் தீவிரமாக தேடப்பட்டு வரும் நபரான ஆண்ட்ரே பியர்ஸின் காதலியான எலிஸ் [Angelina Jolie] , இரு வருட கால பிரிவின் பின்பாக அவனை சந்திப்பதற்காக வெனிஸ் நகரை நோக்கி ரயிலில் பயணிக்கிறாள். தன்னை நிழல்போல் தொடரும் காவல்துறையினரின் கவனத்தை திசைதிருப்ப விரும்பும் எலிஸ், வெனிஸ் நகர் நோக்கி அதே ரயிலில் பயணம் செய்யும் அமெரிக்க உல்லாசப் பிரயாணியான பிராங்கை [Jhonny Depp] தன் காதலன் ஆண்ட்ரே பியர்ஸாக காட்டிக் கொள்ள ஆரம்பிக்கிறாள்..

Anthony Zimmer எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் மீது ஹாலிவூட் தயாரிப்பாளர்களின் கடைக்கண் பார்வை தவறி விழுந்ததன் விளைவு, ஹாலிவூட்டின் உச்ச நட்சத்திரங்களாகிய ஜானி டெப், ஏஞ்சலினா ஜொலி ஆகியோரை ஜோடியாகக் கொண்டு F.H.Donnersmarck இயக்கத்தில் டூர் செய்ய ஆரம்பித்திருக்கிறது. இந்த டூர், செம டர்ராக போகாததிற்கு பிரதான காரணம் பாண்டிச்சேரி ரசிகர் மன்றம் நடாத்திய யாகமாகவே இருக்ககூடும்.

பாரிஸ் நகரில் ரசிகர்களிற்கு தன் முகம் காட்டும் தருணம் முதல் அம்மணி ஏஞ்சலினா ஜொலி அவர்களின் உடைகள், ஆபரணங்கள், அலங்காரங்கள் என யாவும் மிகையான டாம்பீகத்தையும், ரசனையையும் ரசிகர்களிற்கு விருந்தாக பரிமாறுகின்றன. பாரிஸ், வெனிஸ் போன்ற உல்லாசபுரிகளிலும், காப்பியகம், ரயில் வண்டி, தங்கு விடுதி, நடன விருந்து மாளிகை என அவர் தன் பிரசன்னத்தால் அருள்பாலிக்கும் இடங்கள் யாவற்றிலும் மக்கள் அவரின் டாம்பீக அழகை வாயைப் பிளந்து அமுதமாக பருகுகிறார்கள். தன்னால் பொறிக்குள் மாட்டி கொண்டவனிடம் மனதை இழக்கும் நல்லிதயம் கொண்ட நங்கை வேடத்தில் ஏஞ்சலினா நடிப்பதை யார் அவதானிக்கப் போகிறார்கள்!!

ஒரு நகரின் மிகவும் அழகான, ஆடம்பரமான இடங்களை அஞ்சல் அட்டைகளில் காட்டுவது போலவே, படம் நெடுகிலும் மனதை அள்ளி எடுக்கும் அழகு கொண்ட இடங்களாக படம் பிடித்து தள்ளியிருக்கிறார்கள். உல்லாசப் பிரயாணி ஒருவனின் மனநிலையுடன் அக்காட்சிகளை திருப்தியுடன் உள்ளெடுக்க கூடியதாக இருக்கிறது.

அழகான பெண்ணொருத்தியுடன் ஏற்படும் திடீர் அறிமுகம், அவள்மேல் உருவாகும் காதல், அதன் பின்பான விளைவுகள், இவற்றை எதிர்கொள்ளும் வேடத்தில் ஜானி டெப். ஸ்காட்லாண்ட்யார்டால் மட்டுமல்லாது மிக மோசமான ஒரு முரடர் குழுவாலும் தேடப்பட்டுவரும் ஒரு நபராக மாறி விடும் சாதாரண உல்லாசப் பிரயாணியாக ஆர்ப்பாட்டங்கள் ஏதுமின்றி அமைதியாக அவர் நடித்து செல்கிறார். ஏஞ்சலினா ஜொலி பாத்திரத்தின் பகட்டிற்கு எதிர்மாறாக அவர் பாத்திரம் அமைந்திருக்கிறது.

the-tourist-2010-15607-1144853302 பைஜாமா அணிந்த நிலையில் வெனிஸ் நகரின் கூரைகள் மீது முரடர்களிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் ஓடும்போதும், வெனிஸ் பொலிஸ் நிலைய தடுப்பு காவல் அறையில் முரட்டுக் கைதியைக் கண்டு அஞ்சும் போதும், நவநாகரீக உடையணிந்து ஏஞ்சலினா ஜொலியை தேடி நடன விருந்து மாளிகைக்கு அவர் வரும்போதும் அவர் நடிப்பை ரசிக்கமால் இருப்பதென்பது முடியாத ஒன்று. ஆனால் திரைப்படத்தில் தன் முழுத்திறமைகளையும் ஜானி டெப் ஜொலிக்க விடவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

திரைப்படத்தில் டெப், ஜொலி ஜோடிக்கிற்கிடையில் பெரிதாக ஏதும் மந்திரமோ அல்லது ரசாயனமோ ஏன்...பெளதிகமோ வேலை செய்துவிடவில்லை. ஜொலி, டெப்பிற்கு ஏற்ற ஜோடி அல்ல என்பது தெளிவு [ யாரிற்குதான் அவர் பொருத்தமான ஒரு ஜோடியாக அமைய முடியும் என்பது ஒரு கேள்வியே! ] . உண்மையில், உருகி வழிந்த இத்தாலிய ஐஸ்க்ரீம் போன்ற அழகையே திரையில் ஏஞ்சலினா ஜொலி வழங்குகிறார். விரைவில் இன்னொரு வரிசை அழகியல் சத்திர சிகிச்சைகள் அவரிற்கு தேவையாக இருக்கலாம் என்பதாக நான் உணர்கிறேன் [ பஞ்சவர்ணப் பைங்கிளி ஏஞ்சலினா ஜொலி பாண்டிச்சேரி ரசிகர் மன்ற மிரட்டல்களிற்கு எல்லாம் நான் மிரள்பவன் அல்ல!]. ஏஞ்சலினா ஜொலி செல்லுமிடமெல்லாம் அவரின் அழகையும், கால் ஒடிந்த அன்னம் போன்ற அவரின் நடையையும் பார்த்து விழிகளை உயர்த்தி ரசிக்கும் நபர்கள் குறித்த காட்சிகள் சிரிப்பையே வரவழைக்கின்றன.

டெப்பும், ஜொலியும் திரைப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன்களில் நேரடியாக இறங்காதது ஒரு நிம்மதி. ஸ்காட்லாண்ட்யார்ட், காவல்துறை, முரடர் குழு ஆகியோரை மட்டும் ஏமாளிகளாக்கி விடாது ரசிகர்களையும் அவர்கள் அனைவரையும் விட ஏமாளிகளாக கருதிக்கொள்ளும் வகையிலேயே படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. திரைப்படத்தில் இருக்கும் மென்மையான நகைச்சுவை, ஒரளவு விறுவிறுப்புடன் கதையை நகர்த்திச் சென்ற விதம் போன்றவையே படத்தை சலிப்பின்றி ரசிக்க துணைக்கு வருகின்றன. திரைப்படத்தின் முக்கியமான மர்மத்தை முன்கூட்டியே ஊகிக்ககூடிய வகையில் திரைக்கதை இருப்பதால் உச்சக்கட்டக் காட்சிகள் பெரிதாக களேபரப்படுத்த தவறுகின்றன.

ஏஞ்சலினா ஜொலியின் கவர்ச்சியையும் தாண்டி இத்திரைப்படத்தை அந்தோ பரிதாப நிலைக்கு இட்டுச் சென்று விடாமல் காத்து இருக்கும் காரணம் ஜானி டெப்தான் என்பது என் தாழ்மையான கருத்து. இருப்பினும் ஜானி டெப் தன் தீவிர ரசிகர்களை இத்திரைப்படத்தில் முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்பதை இங்கு மீண்டும் கூறியாக வேண்டும். திரைக்கதையின் ஓட்டைகளையும், காதில் பூச்சுற்றல்களையும், ஏஞ்சலினா ஜொலியின் களைத்துப்போன கவர்ச்சியையும் பெரிய மனதுடன் தாண்டி வந்து, டெப்பையும், நகைச்சுவையையும் ரசிக்ககூடியவர்களிற்கு மட்டும் டூரிஸ்டுடனான இந்தப் பயணம் ஜாலியான அனுபவமே. [**]

ட்ரெயிலர்

20 comments:

  1. நல்ல ஸ்டார் காஸ்ட் இருந்தும் சமீபத்தில் இது போன்ற பல மொக்கைப் படங்கள்தான் வருகின்றன! ஏனோ?!!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  2. சைட் பார் கிளுகிளுப்புப் படம் சூப்பரப்பு!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  3. //ஏஞ்சலினா ஜொலி செல்லுமிடமெல்லாம் அவரின் அழகையும், கால் ஒடிந்த அன்னம் போன்ற அவரின் நடையையும் பார்த்து விழிகளை உயர்த்தி ரசிக்கும் நபர்கள் குறித்த காட்சிகள் சிரிப்பையே வரவழைக்கின்றன.//

    ஹாஹா,வயசாயிடுச்சு இல்ல? :)

    ReplyDelete
  4. Angelina jolie has aged.Just like Cameron Diaz.

    ReplyDelete
  5. Even the trailer shows that more prominently.உமக்கு சிரிப்பு வந்ததுல ஆச்சர்யமே இல்ல. :)

    ReplyDelete
  6. கவர்ச்சியின் கடைசி காலத்தில் இருக்கும் Angelina Jolie வகையறாக்களை விட்டு விட்டு இளஞ்சிட்டுகளை தேடிப்பிடிக்குமாறு ஹாலிவுட் இயக்குனர்களை வலியுறுத்துகிறேன்!

    ReplyDelete
  7. தலைவரே, ஹாலிவூட்டில் நல்ல கதைகளிற்கு தட்டுப்பாடு நிலவுகிறதாம். எனவே நாவல், காமிக்ஸ், பிறமொழிப் படங்கள் என உரிமைகளை பெற்று தழுவுகிறார்கள். அவை வெற்றி பெறுவது ரசிகர்களின் ரசனையைப் பொறுத்தது. இப்படம் என்னவோ டைம்பாஸிற்காக டெப்பும், ஜொலியும் நடித்தது போல் உணர்வைத் தருகிறது. சைட்பார் அம்மணி எல்லாம் ஏதோ என்னால் ஆன சிறு காரியம் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சூரியகேசி[இலுமினாட்டி], ஆம் வயதாகிவிட்டது ஜொலிக்கு, ஆனால் டயஸ் பரவாயில்லை கொஞ்சம் ரசிக்க முடிகிறது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் Ben, உங்கள் கருத்துக்களோடு முழுமையாக உடன்படுகிறேன். இதனை வலியுறுத்தும் முகமாக பீர் குடிக்கும் போராட்டம் ஆரம்பிக்கப்படலாம். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  8. ஏஞ்சலினா ஜொலி யாரு? எங்க பக்கத்து வீட்டு பெர்சு ஒருத்தர் ரொம்பவும் புகழ்ந்துகிட்டுயிருந்தார்.

    ReplyDelete
  9. //யாரிற்குதான் அவர் பொருத்தமான ஒரு ஜோடியாக அமைய முடியும் என்பது ஒரு கேள்வியே//

    Brad pitt கூட இந்த அளவிற்கு கவலைபட்டிருக்க மாட்டார்....என்ன ஒரு emotional feelingஓட எழுதியிருக்கீங்க..

    ReplyDelete
  10. இந்த மாதிரி படங்களை பார்க்கிறீர்கள், சரி ஒக்கே. ஆனால் இன்னமும் எங்கள் கேப்டனின் படத்தை பார்க்காதது ஏன்?

    தமிழன் என்றால் ஏளனமா?

    கேப்டன் ரசிகர் மன்றம்,
    கொல்கத்தா கிளை.

    ReplyDelete
  11. படம் இந்தியாவில் இந்த வெள்ளியன்றுதான் ரிலீஸ் ஆகியது. திரு ராம நாராயணின் சுட்டி சாத்தான் படம் ரிலீஸ் ஆனா அதே நாளில் ரிலீஸ் ஆனதால், போதுமான அளவில் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

    வழக்கமாக ஆங்கில படங்கள் ரிலீஸ் செய்யும் தியேட்டர்கள் கூட இந்த முறை சுட்டி சாத்தானை ரிலீஸ் செய்துள்ளன. ஆகையால் சில தியேட்டர்களிலேயே இந்த படம் வந்துள்ளது. ஆகையால் குடும்ப அரசியல் ஆதிக்கம் ஏஞ்சலினா ஜோலியையே பாதித்தது இப்படித்தான்.

    ReplyDelete
  12. ஹாலிவுட் அர்ஜுன் ஆகிய ஜான்னி டெப் நடிப்பு சுமாரா?

    ReplyDelete
  13. //King Viswa said...

    இந்த மாதிரி படங்களை பார்க்கிறீர்கள், சரி ஒக்கே. ஆனால் இன்னமும் எங்கள் கேப்டனின் படத்தை பார்க்காதது ஏன்?

    தமிழன் என்றால் ஏளனமா?

    கேப்டன் ரசிகர் மன்றம்,
    கொல்கத்தா கிளை.//

    அதானே..

    இப்படிக்கு
    சவுதி கிளை

    ReplyDelete
  14. ஆனால் இன்னமும் எங்கள் கேப்டனின் படத்தை பார்க்காதது ஏன்?

    "தமிழன் என்றால் ஏளனமா?"

    சரியாக சொன்னிர்கள் பாஸ்

    உங்களுக்கு தமிழன் மேல அவ்வளுவு கொலை வெறி



    இதையும் படிச்சி பாருங்க

    இந்தியா பைத்தியகார நாடு...?

    ReplyDelete
  15. சைடு பாரில் உள்ள கிறிஸ்துமஸ் கிப்ட் சூப்பர் காதலரே ;-)
    .

    ReplyDelete
  16. உங்கள் மொழி நடையில் சுறா வந்தது போல கேப்டனின் பட விமர்சனத்தை ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருக்கிறோம் :))
    .

    ReplyDelete
  17. படம் சரியில்லைன்னு கேள்விப்பட்டேன்... நீங்களும் அப்படித்தான் சொல்றீங்க.!

    நான் ரொம்ப எதிர்பார்த்திருந்தேன்!!

    ReplyDelete
  18. நண்பர் கொழந்த, பிராட் பிட்டின் மனக்குமுறல்களை யாரறிவார் :) மீண்டும் உங்களை காண்பதில் மகிழ்ச்சி. கருத்துக்களிற்கு நன்றி.

    விஸ்வா, இங்கு சுறா வருகிறது, எந்திரன் த ரோபோ வருகிறது, ரத்த சரித்திரம் வருகிறது ஆனால் விருதகிரி வரவில்லை. கேப்டனின் அருமை தெரியாத ரசனையற்ற சமூகத்தில் வாழ்வதற்காக கலங்குகிறேன், கண்ணீர் வடிக்கிறேன். நீங்கள் இட்டிருக்கும் கருத்தை அர்ஜூன் மட்டும் பார்த்தார் எனில் எவ்வளவு மகிழ்ச்சியடைவார் தெரியுமா. நிழற்படை மாயாவிபோல் அவர் படங்கள் வருவதும் போவதும் தெரிவதேயில்லை :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் செ.சரவணக்குமார், கொல்கத்தா கிளை, சவுதிக் கிளை ஆகியவற்றுடன் பிரான்ஸ் கிளையையும் சேர்த்துக் கொள்ளுங்கள் :) கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  19. நண்பர் உண்மை தமிழன், நேர வசதிக்கேற்ப நீங்கள் பரிந்துரைத்திருக்கும் பதிவை படித்து விடுகிறேன். கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ஐத்ருஸ், உங்கள் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை :)

    நண்பர் சிபி, அந்த சைட் பார் கிஃப்ட் எனக்கும் கிடைக்க வேண்டும் என்பதே என் அவா :) விருதகிரி இன்னமும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த அதிர்ஷ்டம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் ஆதவா, அதிக எதிர்பார்ப்புகள் எதனையும் இப்படம் பூர்த்தியாக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete