Friday, December 17, 2010

மனைவியே மணாளனின் பாக்யம்


affiche ஜான், லாரா தம்பதிகளின் இல்லற வாழ்க்கையானது அவர்களின் செல்ல மகன் லூக்குடன் இனிதே கழிந்து கொண்டிருக்கும் வேளையில் கொலைக் குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்படுகிறாள் லாரா. லாரா ஒரு நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கு சட்டரீதியாக ஜான் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியுறுகின்றன. வேறு வழிகள் ஏதும் அற்ற நிலையில் சிறையிலிருக்கும் தன் மனைவியை தானே சிறை மீட்பது எனும் முடிவிற்கு வருகிறான் ஜான்….

Paul Haggis, Crash திரைப்படத்தை இயக்கியவர், Million Dollar Baby க்கு திரைக்கதை அமைத்தவர். இந்த இரு திரைப்படங்களையும் காணும் வாய்ப்புக் கிடைத்த நண்பர்கள் அத்திரைப்படங்களில் இடம்பெற்றிருந்த உணர்ச்சிகரமான காட்சிகளை இன்றும் மெலிதாக நினைவுகூற முடியும்.

உணர்ச்சிகரமான காட்சிகளை உருவாக்குவதில் தேர்ந்த நிபுணரின் கைகளில் மனைவியை காப்பாற்றப் போராடும் கணவன் ஒருவனின் கதையைக் கொண்ட Pour Elle எனும் பிரெஞ்சு திரைப்படத்தின் ஆங்கில வடிவத்தை உருவாக்கும் வாய்ப்பு வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும். The Next Three Days எனும் திரைப்படம் வழியாக கணவன், மனைவி, குழந்தை என குடும்பமொன்றின் பாசமான உணர்வுகளையும், சஸ்பென்ஸையும் கலந்து சுத்தமான ஒரு த்ரில்லரை திரையில் வழங்கியிருக்கிறார் பால் ஹாஹிஸ்.

மூன்று வருடங்கள், மூன்று மாதங்கள், மூன்று நாட்கள் என மூன்று பகுதிகளாக பிரிக்கபட்டிருக்கும் கதையில், தன் மனைவியின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட சாதாரண ஆசிரியனான ஜான், அவளை சிறையிலிருந்து விடுவிக்க மேற்கொள்ளும் முயற்சிகளையும், அதில் அவன் காணும் தோல்விகளையும், இந்த தோல்விகள் வழங்கும் நிராதரவான நிலையினால் அவன் சட்டத்திற்கு எதிரான ஒருவனாக மாறுவதையும் படிப்படியாக காட்டிச் செல்கிறார் இயக்குனர் ஹாஹிஸ்.

திரைப்படம் நெடுகிலும் மனதை உருக்கும் காட்சிகளிற்கு பஞ்சமே இல்லை. மனைவி கைது செய்யப்பட்ட பின் வரும் மூன்று வருடங்களில் தன் மகனை வளர்க்கும் பொறுப்பான ஒரு தந்தையாக, தன் மனைவிக்காக சட்டத்துடன் போராடும் ஒரு பாசம் மிகுந்த கணவனாக, தன் முயற்சிகள் யாவும் பயனற்றுப் போகையில் நொருங்கிப் போகும் ஒரு மனிதனாக ஜானைக் காணமுடிகிறது. அதன் பின் வரும் மூன்று மாதங்களில், தன் மனைவியை சிறையிலிருந்து மீட்க திட்டமிடும், சட்டத்திற்கு இன்னும் அஞ்சும், தவறுகள் இழைத்தால் தடுமாறி திணறும் ஒரு ஜானைக் காண முடிகிறது. அதற்கு அடுத்து வரும் மூன்று நாட்களிலும் எதிர்பாராத ஒரு திருப்பத்தால் அதிரடியான ஒரு மனிதனாக ஜான் மாறுவது காட்டப்படுகிறது.

les-trois-prochains-jours-2010-18859-50613082 எவ்வாறு ஒரு ஆசிரியன் தன் மனைவிமீது கொண்ட அன்பால் சட்டத்தின் முன்பாகவும் சமூகத்தின் பார்வையிலும் ஒரு குற்றவாளியாக உருவெடுக்க முடியும் என்பதை படத்தின் முதலிரு பகுதிகளும் மிக நிதானமான வேகத்தில் கூறுகின்றன. இணையம் ஒன்றின் உதவியுடன் சாதாரணன் ஒருவன் கூட குற்றத்தின் நுட்பங்களை கற்றுத் தேர்ந்திட முடியும் என்பதற்கு சான்றாக ஜான் பாத்திரம் இருக்கிறது. ஆசிரியன் ஒருவன் குற்றங்களை கற்கும் மாணவன் ஆகும் சூழ்நிலையின் வினோதம் ஆச்சர்யமான ஒன்றுதான்.

நிதானமான வேகம் கொண்ட திரைப்படத்தின் விறுவிறுப்பான பகுதி இறுதி மூன்று நாட்களிலும் வந்து சேர்கிறது. தனது திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கும், அழுத்தத்திற்கும் உள்ளாகும் ஜானுடன் கூடவே வேகமும், பரபரப்பும் திரைக்கதையில் தொத்திக் கொள்கின்றன. மூன்று நாட்களினுள் தன் மனைவியை காப்பாற்றியே ஆக வேண்டிய கட்டாயத்தின் அழுத்தம் தன்னுள் பொதிந்திருக்க, அதனை வெளியுலகிற்கு காட்டாது திறமையாக தன் திட்டங்களை ஜான் முன்னெடுத்து செல்லும் காட்சிகளில் விறுவிறுப்பு தன் முகவரியை தெளிவாக எழுதியிருக்கிறது.

ரஸல் க்ரோவிற்கு உணர்ச்சிகரமாக நடிக்க வராது என்ற என் கருத்தை இப்படத்தின் அனுபவத்தின் பின்பாக நான் மீள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. நடிகர் திலகம்போல் … அம்மாஆஆஆ, இந்த வாழ்கை உன் வாழ்க்கை இல்லேம்மாஆஆஆஆஆ என வசனங்களை மேலதிகமாக இழுத்து பேசாவிடிலும் கூட, சிறையில் மனைவியை சந்திந்து உரையாடும் தருணங்களில் ரஸல் கணேசன் ஆகியிருக்கிறார் ரஸல் க்ரோ. திரைப்படத்தில் லியம் நீசன் தோன்றும் தருணத்தில் ஏற்படும் எதிர்பார்ப்பு அவர் மதுவகத்தை விட்டு நீங்கும்போதே இறங்கிவிடுகிறது. சிறையிலிருந்து தப்புவதற்கான ஆலோசனைகளை வழங்கிவிட்டு திரைப்படத்தை விட்டு தப்பி ஓடி விடுகிறார் நீசன்.

திரைப்படத்தின் இறுதி முப்பது நிமிடங்களும் சஸ்பென்ஸ் நிமிடங்கள். அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து திரையை விட்டு விழிகள் நகர மறுக்கின்றன. வழமைபோலவே காவல்துறையினரை ஏமாளிகள் ஆக்கும் எளிமையான தந்திரங்களால் அந்த நிமிடங்கள் நிறைந்திருந்தாலும் அவற்றை ரசிக்க முடிகிறது. இந்த முப்பது நிமிடங்களிற்காகவேனும் இப்படத்தை பார்த்து ரசிக்கலாம். ஆனால் படத்தை பார்த்து முடித்ததும் மனதில் எழும் ஒரு கேள்வி ஒன்று உண்டு. எத்தனை கணவர்கள் ஜான் போல் தம் மனைவியை காப்பாற்ற இவ்விதமாக தீவிரமாக போராடுவார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. The Next Three Days கலங்க, அதிர, உங்கள் அன்பு மனைவிமேல் நீங்கள் கொண்டுள்ள ப்ரியத்திற்காக நீங்கள் செல்லக்கூடிய எல்லைகள் எவை என கேள்வியெழுப்ப வைக்கும் ஒரு படைப்பு. ஆனால் உலக மனைவிமாரிற்கு ஜான் ஒரு உதாரணக் கணவன் என்பதில் ஐயமே இல்லை. [**]

ட்ரெயிலர்

17 comments:

  1. "மணாளனே மங்கையின் பாக்யம்" போய்
    "மனைவியே மணாளனின் பாக்யம்"
    வந்து விட்டதா காதலரே :))
    .

    ReplyDelete
  2. //ஆனால் படத்தை பார்த்து முடித்ததும் மனதில் எழும் ஒரு கேள்வி ஒன்று உண்டு. எத்தனை கணவர்கள் ஜான் போல் தம் மனைவியை காப்பாற்ற இவ்விதமாக தீவிரமாக போராடுவார்கள் என்பதுதான் அந்தக் கேள்வி. //

    இதுல எதுவோ உள்குத்து இருக்கிற மாதிரியே இருக்கே ?எதுனா மறைமுக எச்சரிக்கை உண்டோ? ;)

    ReplyDelete
  3. நண்பரே!ரஸ்ஸல்குரோவை பாராட்டும்போது சிவாஜியை வாரி இருக்கவேண்டாம்.சிவாஜியின் மிகைநடிப்புக்கு இயக்குனர்களே காரணம்.நல்ல இயக்குனர்கள் கையில் தேவர்மகனாக முதல் மரியாதை பெற்றவர்.

    ReplyDelete
  4. நண்பர் சிபி, உங்களிற்கு திருமணமாகிவிட்டதா :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, மிகவும் நேர்மையான ஒரு கேள்வியில் அப்படி என்ன உள்குத்து இருக்க முடியும். கலங்குகிறேன். கண்ணீர் வடிக்கிறேன். கருத்துகளிற்கு நன்றி.

    நண்பர் உலக சினிமா ரசிகரே, நடிகர் திலகம் செய்ததைதானே கூறியிருக்கிறேன். இதில் வார என்ன இருக்கிறது. இன்றும் மிகைப்படுத்தல்கள்தானே பெரிதும் ரசிக்கப்படுகிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  5. // உங்களிற்கு திருமணமாகிவிட்டதா :) //

    இத இதத்தான் எதிர் பார்த்தேன் காதலரே ;-)

    யாருமே என்னிடம் இந்த கேள்வியை கேட்கவே இல்லை
    உங்கள் ஊரில் யாராவது இருந்தால் சொல்லுங்களேன் ;-)
    .

    ReplyDelete
  6. உலக கணவர்கள் மனமகிழ் மன்றம் என்று நாமெல்லோரும் சேர்ந்து ஏன் ஒரு கும்பல் துவக்கக்கூடாது? உதாரணக் கணவர்கள் ஆலிவுட்டு பாலா, கிங் விஸ்வா, ஆக்கோதீக்கா பயங்கரவாதி, புரட்சிவீரன் ரஃபீக், அப்புறம் ஃப்ரான்ஸிலே வாழும் எங்கள் அண்ணன் தன்மான ஃப்ரான்ஸ் மகன் - வீரியவாதி - ரேப் டிராகன் படைத்திட்ட வால்மீகி - கனவுகளின் காதலர் ஆகிய அத்தனை பேரும் உலகக் கணவன்மார்களுக்கு ஒளிவிளக்காய் ஏன் திகழ்ந்திடக்கூடாது?

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம். டி.வி. டி க்கு சொல்லியாகிவிட்டது.

    ரஸல் கணேசன்.. ர‌சித்தேன்.

    ReplyDelete
  8. நண்பர் கருந்தேள், மனைவியர் மனமகிழ் மன்றம் ஸ்டார்ட்ஸ் :) ஆனால் வனிதையர்களின் வானவில், மங்கையர்களின் மதனக்கொடி, பத்தினிகளின் காவல் சேவல், கணவர்களில் கணவர் திரு இலுமினாட்டி அவர்களையும் மன்றத்தில் சேர்த்துக் கொள்ளலாம் :) கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் செ.சரவணக்குமார், பார்த்து மகிழுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  9. anything for her-ங்கிர திரைப்படம் மாதிரி இருக்கே?

    ReplyDelete
  10. //வனிதையர்களின் வானவில், மங்கையர்களின் மதனக்கொடி, பத்தினிகளின் காவல் சேவல், கணவர்களில் கணவர் திரு இலுமினாட்டி அவர்களையும் மன்றத்தில் சேர்த்துக் கொள்ளலாம் :)//

    யோவ்,என்னய்யா என்னையும் கிழவனாக்க பாக்குறீங்களா? விட மாட்டேன்.இலுமி, நீ குஜாலா சைட் அடிச்சிட்டு சுத்துடா செல்லம்.இந்த மாதிரி துடப்பக் கட்டையால அடிவாங்குற பயலுக, சாரி,கிழடுக கூட சகவாசம் வச்சுக்காத. ;)

    ReplyDelete
  11. நண்பர் கிள்ளிவளவன், பதிவில் கூறியிருக்கும் பிரெஞ்சு திரைப்படத்தின் ஆங்கில டப்பிங் வடிவம்தான் Anything for Her. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    சூரியகேசரி, aunty களின் ஆபந்த்பாவன், மாமிகளின் மதனன் இலுமினாட்டியை மனைவிகள் மனகிழ் மன்றத்திற்கு வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் :)

    ReplyDelete
  12. மாமிகளின் மதனன் - அட்டகாசமான பெயர் இது :-)

    ReplyDelete
  13. //மாமிகளின் மதனன்//

    யோவ் விளக்கெண்ண,அது கல்யாணத்துக்கு கீழ வராதுயா. ;)
    உமக்கெல்லாம் கல்யாணம் செய்து வச்சு.. ;)

    ReplyDelete
  14. நண்பர் சூரியகேசி[ இலுமினாட்டி], நீங்கள் இவ்வளவு நல்லவரா :))

    ReplyDelete
  15. த்யேட்டரில் பார்க்கும் வாய்ப்பை விட்டு விட்டேன். பின்ன வந்த வேகத்தில் த்யேட்டரை விட்டு போனால் நான் என்ன செய்வேன்? டிவிடி அல்லது ஸ்க்ரீனர் ரிப்புகள் வந்தால் தான் பார்க்க வேண்டும்...

    அது எப்படி விமர்சனம் எல்லாம் புகழ்ற மாதிரி எழுதிட்டு, ரேட்டிங்க்ல படத்த நார் நாரா கிழிக்கிறீங்க?

    ReplyDelete
  16. நண்பர் பிரசன்னா ராஜன், திரைப்படத்தின் இறுதி முப்பது நிமிடங்களே பெரிதும் கவரக்கூடியவையாக இருக்கின்றன. புகழ்வது மாதிரி எழுதி நார்நாராக கிழிப்பதே எம் பாணி என அறிக :)

    ReplyDelete