Saturday, December 11, 2010

நரகம், மோனம்


நீயூ ஆர்லியன்ஸ் நகரில் ஜாஸ் இசைத்தட்டுக்களை தயாரிக்கும் தயாரிப்பாளரான ஃபோஸ்ட் லாசப்பெல், தலைமறைவாகிவிட்ட ஜாஸ் இசைக் கலைஞனான செபாஸ்டியனை கண்டுபிடிப்பதற்காக தன்னாலான முயற்சிகளை எடுத்து வருகிறான். காதும் காதும் வைத்தாற்போல் இவ்விடயத்தை கையாளவிரும்பும் லாசப்பெலிற்கு துப்பறிவாளனான தன் நண்பன் ப்ளாக்சாட்டை அறிமுகம் செய்து வைக்கிறான் பத்திரிகையாளனான வீக்லி….

துப்பறிவாளன் ப்ளாக்சாட் குறித்து ஆர்க்டிக் தேசம் எனும் பதிவில் பார்த்திருக்கிறோம். ஐந்து வருட இடைவெளியின் பின்பாக இந்தக் காமிக்ஸ் கதை வரிசையின் நான்காவது ஆல்பமான L’Enfer, Le Silence இந்த ஆண்டில் வெளியாகி இருக்கிறது. ஆல்பத்தின் கதையானது 1950களின் நீயு ஆர்லியன்ஸிற்கு வாசகர்களை இட்டுச் செல்கிறது. தனக்கேயுரிய வளமான கதை சொல்லலுடன் ப்ளாக்சாட்டை கதை சொல்லியாக்கி கதையை ஆரம்பிக்கிறார் கதாசிரியர் Juan Diaz Canales.

Sartre ன் நரகம் என்பது என்ன என்பதற்கான கூற்றை [ நரகம் என்பது பிறரே], ப்ளாக்சாட் நரகம் குறித்த தன் சிந்தனைகளுடன் ஒப்பீடு செய்வதுடன் கதை ஆரம்பிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஃபோஸ்ட் லாசப்பெல், தன் மகன்போல் கருதும் ஜாஸ் இசைக்கலைஞனான செபஸ்டியானை ஏன் தேடுகிறான் என்பதும், செபஸ்டியான் தலை மறைவாக வாழ்வதற்கான காரணம் என்ன என்பதுமே கதையின் பிரதான மர்ம முடிச்சுக்களாக அமைகின்றன.

நியூ ஆர்லியன்ஸ் நகரின் துகிலுரி நடன விடுதி ஒன்றில் தொடங்கும் கதை, ப்ளாக்சாட் எவ்வாறு லாசப்பெல்லிற்கு அறிமுகமானான் எனும் பிளாஷ்பேக்கிற்கு தாவி, பின் அங்கிருந்து கதை ஆரம்பித்த புள்ளிக்கு மெதுவான ஓட்டத்தில் வந்து சேர்ந்து அங்கிருந்து முன்னோக்கி நகர்கிறது. லாசப்பெல்லிற்கு சிகிச்சை வழங்கும் வூடு மருத்துவிச்சி, பேராசை பிடித்த மோசக்கார துப்பறிவாளன் டெட் லீமேன், ஜாஸ் இசைக்கலைஞன் செபாஸ்டியன், அவனது நண்பர்கள், லாசப்பெலின் மகன் தாமஸ் என பாத்திரங்கள் தமக்கேயுரிய இயல்புகளுடனும், குணாதிசயங்களுடனும் கதையினுள் மெதுவாக வந்து சேர, நீயூ ஆர்லியன்ஸின் தெருக்கள், சந்துகள், கேளிக்கை ஊர்வலங்கள், விலைமாதர் நிழலாக நகரும் விடுதிகள் என ப்ளாக்சாட்டும், வீக்லியும் தம் தேடலை கொண்டு செல்கிறார்கள்.

bs1 ப்ளாக்சாட் ஒரு புறமாக தன் விசாரணையை நகர்த்திச்செல்ல மறுபுறமாக ஜாஸ் இசைக் கலைஞன் செபாஸ்டியனின் வாழ்க்கையானது நெகிழவைக்கும் தன்மையுடன் கதையில் கூறப்படுகிறது. போதை மருந்துக்கு அடிமையாகி, தன் மனைவியைப் பிரிந்து, போதைக்காக வாழும் கலைஞனான செபாஸ்டியனின் வாழ்க்கை மனதை கனமாக்கும். அவன் மனதில் பொதிந்து கிடக்கும் ஒரு ரகசியத்தை போதையினாலேயே அவன் புதைக்க விரும்புகிறான். ஆனால் போதை அவனை புதைத்துவிடுகிறது.

ஆல்பத்தின் தலைப்பை போலவே நரகம் என்பதற்கான அர்த்தமானது பாத்திரத்திற்கு பாத்திரம் வேறுபடுகிறது. லாசப்பெலிற்கு நரகம் என்பது இசையற்ற இடம். ப்ளாக்சாட்டிற்கு நரகம் என்பது சூன்யத்தன்மை. ஒவ்வொரு மனிதனும் தனக்கேயுரியவகையில் அர்த்தம் கொள்வதுபோல் நரகமும் தன் முகத்தை மாற்றிக் கொண்டே செல்கிறது எனலாம். கதை மாந்தர்களின் முகங்களும்கூட கதையோட்டத்தில் மாற்றங்களை காணத்தவறுவதில்லை.

ஆல்பத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை கதையை தொய்வில்லாத வகையில் நகர்த்திச் செல்கிறார் கதாசிரியர். லாசப்பெல், டெட் லீமேன், வூடு மருத்துவச்சி, செபாஸ்டியன், அவனது நண்பன் பிக் பில் லுநுவார் என அவர் உருவாக்கி இருக்கும் பாத்திரங்கள் சிறப்பான வகையில் கதையின் சுவையை அதிகரிப்பதற்கு கை கொடுத்திருக்கின்றன. அதேபோல் மர்மத்தை இறுதிவரை சிரமமின்றி நகர்த்தி செல்வதிலும் கதாசிரியரிற்கு வெற்றியே. வழமைபோலவே கதையின் முடிவானது மனங்களை கனக்க வைக்கும் ஒரு முடிவாகவே அமைந்துவிடுகிறது.

ஆல்பத்திற்கு சித்திரங்களை வரைந்திருக்கும் Juanjo Guardino தன் சித்திரங்களால் மனதை அள்ளி எடுத்து விடுகிறார். தூரிகையும், பென்சிலும் கொண்டு அவர் பாணியில் அவர் படைத்திருக்கும் சித்திரங்கள் அருமை. நீயூ ஆர்லியன்ஸ் நகரின் ஆன்மாவின் ஒரு கூறை தன் ஓவியங்கள் மூலம் ஆல்பத்தின் பக்கங்களில் நடமாட விட்டிருக்கிறார் என்றால் அது மிகையான ஒன்றல்ல. எத்தனையோ பக்கங்களை அவர் திறமைக்கு உதாரணமாக கூறிடலாம் எனினும் லாசப்பெலின் மகன் தாமஸும், ப்ளாக்சாட்டும் உணவருந்தும் தருணத்தில் அவர்கள் அருகே நிற்கும் மரமொன்றின் இலைகளின் நிழல்கள், மழைத்துளிகள்போல் அந்தப் பகுதியில் வீழ்ந்து கொண்டிருக்கும் காட்சி ஆல்பங்களின் சிறப்பான பக்கங்களில் என்னை மிகவும் கவர்ந்தது.

சீரான வேகம் கொண்ட தெளிவான கதை, அசர வைக்கும் சித்திரங்கள் என ப்ளாக்சாட்டின் நான்காவது ஆல்பம் அந்தக் கதை வரிசையின் ரசிகர்களை நிறைவாகவே திருப்தி செய்துவிடுகிறது. [***]

8 comments:

 1. வாவ் ஹாட் ட்ரிக் காமிக்ஸ் பதிவிட்டு

  கலக்கி விட்டீர்கள் காதலரே :))

  தொடருங்கள் உங்கள் சேவைகளை ;-)
  .

  ReplyDelete
 2. // மரமொன்றின் இலைகளின் நிழல்கள், மழைத்துளிகள்போல் அந்தப் பகுதியில் வீழ்ந்து கொண்டிருக்கும் காட்சி ஆல்பங்களின் சிறப்பான பக்கங்களில் என்னை மிகவும் கவர்ந்தது. //

  எங்களையும் தான் காதலரே :))
  .

  ReplyDelete
 3. // மரமொன்றின் இலைகளின் நிழல்கள், மழைத்துளிகள்போல் அந்தப் பகுதியில் வீழ்ந்து கொண்டிருக்கும் காட்சி ஆல்பங்களின் சிறப்பான பக்கங்களில் என்னை மிகவும் கவர்ந்தது. //

  உண்மைதான் காதலரே

  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல

  இந்த ஒரு ப்ளாக்சாட் காமிக்ஸ் புக்குக்கு இந்த ஒரு பக்கமே போதுமே அந்த ஓவியரின் திறமையை எடுத்து காட்ட :))
  .

  ReplyDelete
 4. வழமை போல அசத்தல்

  ReplyDelete
 5. //அவன் மனதில் பொதிந்து கிடக்கும் ஒரு ரகசியத்தை போதையினாலேயே அவன் புதைக்க விரும்புகிறான். ஆனால் போதை அவனை புதைத்துவிடுகிறது.//

  //ஒவ்வொரு மனிதனும் தனக்கேயுரியவகையில் அர்த்தம் கொள்வதுபோல் நரகமும் தன் முகத்தை மாற்றிக் கொண்டே செல்கிறது எனலாம்.//

  அருமை.நான் சமீப காலத்தில் படிக்க ஆசைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு தொடர் இது.புத்தகம் கையில் இருந்தாலும்,படிக்கும் வாய்ப்பு தான் இல்லை.சீக்கிரமே படித்துவிட்டு கருத்துக்களை பகிர்கிறேன்.இக்கதையின் சித்திரதரம் ஆச்சர்யமான ஒன்று.விலங்கின முகங்களில் மனித உணர்ச்சியைக் கொண்டு வருவது எவ்வளவு கடினம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஆனால், இதன் தரம்,ஓவியர் மிகத் திறமையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லாது செய்கிறது.

  ReplyDelete
 6. நண்பர் லக்கி லிமட், முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சிபி, வாய்புக் கிடைத்தால் ப்ளாக்சாட் கதைகளைப் படியுங்கள். வித்தியாசமான காமிக்ஸ் கதைவரிசை அது. ப்ளாக்சாட்கூட ஒரு வித்தியாசமான பாத்திரம்தான். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் nis, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இலுமினாட்டி, மனித முகங்களில் மிருக உணர்வானது எவ்வளவு எளிதாக உருவாகிவிடுகிறது என்பது ஆச்சர்யம் அல்லவா. இக்கதைத் தொடரின் ஓவியங்கள் அற்புதமானவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete