Saturday, December 18, 2010

சூரியக் கூந்தலாள்


இளவரசி Rapunzel, அவள் கூந்தலில் பொதிந்திருக்கும் ஆபூர்வ சக்தியின் காரணமாக குழந்தையாக இருக்கும்போதே Gothel எனும் சூன்யக்காரியினால் கடத்தி செல்லப்படுகிறாள். நித்திய இளமையை எப்போதும் வேண்டும் கோத்தல், அதனை இளவரசி ரப்புன்ஸலின் கூந்தலில் பொதிந்திருக்கும் சக்தியின் வழியாகவே தான் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் அவளை காட்டினுள் ரகசியமான ஒரிடத்தில் அமைந்திருக்கும் உயரமான கோபுரமொன்றினுள் வெளியுலகிற்கு தெரியாது வளர்த்து வருகிறாள்.

அந்த உயர்ந்த கோபுரத்திலிருந்து இளவரசி ரப்புன்ஸல் வெளியே செல்லாத வண்ணம், வெளியுலகை குறித்த அச்சம் தரும் தகவல்களை அவளிற்கு தொடர்ந்து கூறிவருகிறாள் கோத்தல். குழந்தையாக கோத்தல் கவர்ந்து வந்த ரப்புன்ஸல் வாலைக்குமரியாக வளர்ந்து நிற்கிறாள். வெளியுலகின் மீதான ஆர்வம் அவளிற்குள் வளர்ந்து நிற்கிறது.

தனது பிறந்த தினத்தன்று மட்டும் ஆகாயத்தில் பறந்து செல்லும் வண்ண வெளிச்சக்கூடுகளை பற்றிய வியப்பும் அவற்றை ஒரு முறையேனும் நேரில் சென்று பார்த்திட வேண்டும் எனும் ஆசையும் ரப்புன்ஸல் மனதில் பூக்கிறது. தன் ஆசையை தன் வளர்ப்புத் தாயான கோத்தலிடம் கூறுகிறாள் ரப்புன்ஸல், ஆனால் கோத்தலோ இளவரசியின் வேண்டுகோளை நிராகாரித்து விடுகிறாள்.

இந்நிலையில் ராஜகாவலர்களால் துரத்தி வரப்படும் திருடனான Flynn Rider, காவலர்களிடமிருந்து தப்புவதற்காக ரப்புன்ஸல் வாழ்ந்திருக்கும் உயரமான கோபுரத்தினுள் நுழைகிறான். ஃப்ளின் ரைடரை சமயோசிதமாக மடக்கும் இளவரசி ரப்புன்ஸல் அவன் திருடி வந்த பொருளை மறைத்து வைத்து விடுகிறாள். ப்ளின் ரைடர் தன்னை வெளிச்சக்கூடுகள் பறக்கும் விழாவிற்கு அழைத்துச் சென்றால் அவன் திருடிய பொருளை அவனிடம் திருப்பி தந்து விடுவதாகவும் அவனிடம் ரப்புன்ஸல் வாக்கு தருகிறாள். வேறுவழிகள் அற்ற நிலையில் ரப்புன்ஸலை கோபுரத்தைவிட்டு வெளியே உலகை காட்ட அழைத்து செல்ல சம்மதிக்கிறான் ஃப்ளின் ரைடர். இளவரசியின் கண்களின் வழியாக அவள் இதயக்கோபுரத்தில் தான் மெல்ல மெல்ல நுழைவதை ஃப்ளின் உணர்ந்தான் இல்லை…..

தேவதைக் கதைகளில் உள்ள மந்திரம் என்னெவெனில், அவைகளைக் கேட்டோ படித்தோ காலங்கள் பல கடந்து சென்றிருந்தாலும்கூட அவை மீண்டும் புதிதாய் சொல்லப்படும் விதத்தில் உங்களை அவை மீண்டும் தற்காலிக கணங்கள் சிலவற்றிலேனும் குழந்தைகள் ஆக்கி விடுவதுதான். கிரிம் சகோதரர்களால் தொகுக்கப்பட்ட தேவதைக் கதைகளின் தொகுப்பில் இளவரசி ரப்புன்ஸலின் கதை இடம்பெற்றிருக்கிறது. அக்கதையில் பொருத்தமான மாற்றங்களை செய்து வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவின் ஐம்பதாவது அசைவூட்ட திரைப்படமாக வெளிவந்திருக்கும் Tangled திரைப்படமானது அதன் ஆரம்பம் முதல் நிறைவுவரை உங்களை குழந்தைகளாக்கி அழகு பார்க்கும் மந்திரத்தை தன்னுள் தாராளமாகக் கொண்டிருக்கிறது. Nathan Greno, Byron Howard ஆகிய இரு இயக்குனர்களின் திறமையும் படத்தில் அற்புதமாக வெளிவந்திருக்கிறது.

raiponce-2010-16872-23480533 சூரியனில் இருந்து விழும் ஒரு துளியானது அபூர்வ சக்தி கொண்ட அழகான மலராக உருவெடுத்து, அம்மமலரின் சக்திகள் அம்மலரைவிட அழகான குழந்தையின் கூந்தலில் சென்று பொதிந்துவிடும் ஆரம்ப கணங்கள் முதல் கொண்டே திரையில் தன் வித்தையை காட்ட ஆரம்பித்து விடுகிறது திரைப்படம். சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், திரைக்கதை, அருமையான நகைச்சுவை, பாடல்கள், இசை, அட்டகாசமான அசைவூட்டத் தரம் என களிப்பான கொண்டாட்டம் ஒன்றின் ஆனந்தக் குவியலாய் இருக்கிறது திரைப்படம். திரைப்படம் முடிவடைந்த பின் இக்கொண்டாட்ட மனநிலை உங்களிற்குள் கூடுகட்டி விட்டதை உங்களால் உணரமுடியும். பெற்றோரின் கவனமான பராமரிப்பிலிருந்து விடுபட்டு, வெளியுலகினை துணிவுடன் தனியே எதிர் கொள்ளல் என்பதை இவ்ளவு சந்துஷ்டியான ஒரு படைப்பாக உருவாக்க முடியுமா எனும் வியப்பை திரைப்படம் தொடர்ந்து அளிக்கிறது.

படத்தின் முக்கிய பாத்திரமான இளவரசி ரப்புன்ஸலின் மரகத விழிகள் அழகா இல்லை அவள் கூந்தல் அழகா என ஒரு பட்டி மன்றமே வைக்கலாம். இளவரசியின் மிக நீண்ட கூந்தலின் அழகிலும், பொன்னிற அலைபோல் அது அசைந்து அவளை பின்தொடர்வதிலும் அசைவூட்ட கலைஞர்களின் அருமையான உழைப்பைக் காணமுடிகிறது. இவ்வளவு அழகான கூந்தலை நான் இதுவரை பார்த்ததில்லை [ என் மனைவியின் கூந்தலை தவிர்த்து ]. டிஸ்னி உருவாக்கியிருக்கும் இளவரசிகளில் என் மனதை ரப்புன்ஸல் போன்று கொள்ளை கொண்ட வேறு இளவரசிகள் இல்லை [ நல்ல வேளையாக என் மனைவி இளவரசி இல்லை ].

திருடனாக அறிமுகமாகும் ஃப்ளின் ரைடர் கூட அருமையான பாத்திரப் படைப்பே. அவரின் முகபாவனைகள் ரப்புன்ஸலை அவர் மடக்க நினைக்கும் தருணங்களில் மாற்றம் கொள்வது அருமை. துருதுருவென சக்தி நிறைந்த ஒரு இளம் திருடனாக ப்ளின் ரைடர், இளவரசி ரப்புன்ஸலிற்கு ஜாடிக்கேத்த சூப்பர் மூடி. இருவரினதும் ஜோடிப் பொருத்தம் போல் அண்மைக்கால அசைவூட்ட படைப்புக்களில் பொருத்தமான ஜோடியை நான் பார்த்ததில்லை.

அசைவூட்டத் திரைப்படங்களில் வழமையாக பிரதான பாத்திரத்திற்கு அருகில் துணைப்பாத்திரங்களாக பிராணிகள் இடம்பிடிக்கும். இங்கு Pascal எனும் பச்சோந்தி இளவரசி ரப்புன்ஸலின் கோபுரத்தனிமையை சிறிதளவேனும் போக்கிடும் தோழனாக இருக்கிறது. இளவரசியுடன் பாஸ்கல் நடாத்தும் பச்சோந்தி சேஷ்டைகளை புன்னகையுடன் ரசிக்க முடிகிறது. பாஸ்கலிற்கு பெண்களின் ஆடை அணிந்து அழகுபார்க்கும் தருணம் அருமை. ஆனால் மனிதர்களை பிரதான பாத்திரங்களாக கொண்ட திரைப்படத்தில் ஒரு பிராணியை அதேயளவு முக்கியத்துவத்துடன் முன்னிறுத்தியிருக்கிறார்கள் இயக்குனர்கள். அந்தப் பிராணி ஒரு குதிரை! அதன் பெயர் Maximus.

மக்ஸிமஸை குதிரைகளில் வால்டர் வெற்றிவேல் என்று அழைத்தால் தப்பில்லை. அவ்வளவு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்த ராஜகாவல் குதிரை அது. திருடப்பட்ட உணவுகளை அது உண்பதில்லை எனும் ஒரு உதாரணமே அதன் கடமையுணர்வை பறைசாற்றிடும். திருடனான ப்ளின் ரைடரை பிடிப்பதற்காக மக்ஸிமஸ் நிகழ்த்தும் சாகஸங்கள் விசிலடிக்க வைப்பவை. அதனது உடல்மொழி, முகபாவனைகள், கம்பீரமான சேஷ்டைகள் என சில சமயங்களில் பிராதான பாத்திரங்களுடன் போட்டியிடும் அளவிற்கு இக்குதிரையானது உருவாக்கப் பட்டிருக்கிறது. ஜொலிஜம்பர் பார்த்தால் நிச்சயம் பொறாமைப்பட்டு லக்கியை கடித்து வைக்கும்.

raiponce-2010-16872-1024484832 டிஸ்னியின் அசைவூட்டங்களில் மனதை அள்ளிச் செல்லும் ஒரு தருணம் எப்போதும் இடம்பெறும். Tangled திரைப்படத்தில் அக்காட்சியானது வண்ண வெளிச்சக்கூடுகள் பறக்கவிடப்படும் சமயத்தில் வந்து சேர்கிறது. பளிங்குபோல் நீரைக் கொண்ட ஆற்றில், ஒரு அழகான சிறு தோணியில் இளவரசி ரப்புன்ஸல் தன் மரகதக் கண்களை ஆற்றின் ஆழத்துடன் மோதவிட்டிருக்க, அவளிடம் மெல்ல மெல்ல தன்னை அமிழ்த்திக் கொண்டிருக்கும் ப்ளின் ரைடர் அவள் அருகில் இருக்க, இரவின் மங்கிய ஒளி போர்வையாக அவர்கள் மேல் விழ, எண்ணற்ற வெளிச்சப் பறவைகளாக வெளிச்சக்கூடுகள் வானில் பறந்து செல்ல ஆரம்பிக்கும் தருணத்தில் மனதை பறிகொடுக்காமல் இருப்பதென்பது சிரமமான ஒன்று. அந்த தருணத்திற்கேற்ப ஒலிக்கும் பாடலும், இசையும் மனதை குழைத்து விடுகின்றன.

ஜப்பானிய இயக்குனர் மியாசகியின் படைப்புக்களுடன் போட்டி போடுவது என்பது டிஸ்னி ஸ்டுடியோவின் ரகசிய விருப்பமாக இருந்தே ஆகவேண்டும். அந்த ஆசையின் ஏக்க வெளிப்பாடாய் அசத்தி எடுக்கிறது திரைப்படம். சில திரைப்படங்கள் மட்டுமே அதன் ஒவ்வொரு கணத்தையும் ரசிகனிடம் சுவைக்க தரும் தாராள மனம் கொண்டவையாக இருக்கும் Tangled அவ்வகையான படங்களில் ஒன்று. இளவரசி ரப்புன்ஸலின் விழிகளிலும், கூந்தலிலும் மட்டுமல்லாது டிஸ்னியின் அரிய முத்துக்களில் ஒன்றான Tangled ல் முழுமையாக சிக்கிக் கொள்கிறான் ரசிகன். [****]

ட்ரெயிலர்

15 comments:

 1. அன்பு நண்பரே,

  முன்னோட்ட காட்சியை பார்த்த போதே டிஸ்னியின் சிறந்த அசைவூட்ட திரைப்படமாக இருக்குமென நினைத்து உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். அது வீணாக போகவில்லை. நான்கு ஸ்டார்கள்.

  இதற்கு முன்னர் வெளிவந்த இளவரசியும் தவளையும் படம் கூட எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக பாடல்கள். காலத்திற்கேற்ப டிஸ்னியின் மாற்றம் பிரமிக்க வைக்கிறது.

  அவர்களின் வெற்றிக்கு காரணமும் அதுதானாகதான் இருக்கும்.

  ReplyDelete
 2. ஆச்சரியம்! ஆச்சரியம்! காதலன் அவர்கள் பழைய பாதைக்கு வந்து விட்டார் போல இருக்கிறது.... நான்கு நச்சதிரம்... படம் பார்க்க துண்டிவிட்டீர்கள்...

  ReplyDelete
 3. .பதிவு சூப்பர்,நீண்ட விளக்கம்.அருமை

  19 ஓட்டு இண்ட்லில வாங்கியும் கமெண்ட் கம்மி யா இருக்கே?

  ReplyDelete
 4. டைட்டில் கலக்கல்.கவிதையாய் மனசுக்குள் பாய்கிறது.பதிவை டைப் பண்ணவே ஒரு மணீ நேரம் ஆகி இருக்குமே?

  ReplyDelete
 5. நல்ல தலைப்பு, சூரியகேசி அல்லது கதிர்கூந்தல்னு கூட வச்சிருக்கலாம், இதுவும் நல்லாத் தான் இருக்கு.

  ReplyDelete
 6. Trailer பார்த்தேன்.அதிலேயே இவ்வளவு கொண்டாட்டம் இருக்குமென்றால்,படத்தில்?சீக்கிரம் தியேட்டரில் பார்க்க முயற்சிக்கிறேன்.

  //தேவதைக் கதைகளில் உள்ள மந்திரம் என்னெவெனில், அவைகளைக் கேட்டோ படித்தோ காலங்கள் பல கடந்து சென்றிருந்தாலும்கூட அவை மீண்டும் புதிதாய் சொல்லப்படும் விதத்தில் உங்களை அவை மீண்டும் தற்காலிக கணங்கள் சிலவற்றிலேனும் குழந்தைகள் ஆக்கி விடுவதுதான்.//

  உண்மை தான்.தேவதைக் கதைகள் கற்பனையின் அளவுகோல்களால் நிர்ணயிக்கப் படுகின்றன.நாள் பட நாள் பட,அவற்றின் வண்ணங்கள் மாறி புதுப் புது அர்த்தங்கள் தருவதற்கு காரணமும் இதுவாகவே இருக்க முடியும்.

  ReplyDelete
 7. ஜோஸ், நீங்கள் கூறியபின் படத்தை பார்க்க ஆவலாக இருந்தேன் எனினும் அதிக எதிர்பார்ப்புகள் இருந்திருக்கவில்லை. ஆனால் நண்பரே படம் என்னைக் கட்டிப்போட்டு விட்டது. இது என் கருத்து. மேலும் டிஸ்னி ஸ்தாபனத்தார் தேவதைக் கதைகளில் மீண்டும் நாட்டம் கொண்டிருப்பது மகிழ்ச்சியான ஒன்றுதான். காலத்திற்கேற்ப சுவைதரும் மாற்றங்களை கதைகளில் செய்வது நல்ல விளைவை அளிக்கிறது. இளவரசியும் தவளையும் பட பாடல்கள் கொண்டாட்டல் அல்லவா, அதுவும் முதலையின் ட்ரெம்பெட் வாசிப்பை மறக்க முடியுமா, அல்லது மின்மினி ரேயைத்தான் மறக்க முடியுமா. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் ரமேஷ், //ஆச்சரியம்! ஆச்சரியம்! காதலன் அவர்கள் பழைய பாதைக்கு வந்து விட்டார் போல இருக்கிறது// :) என்னை நம்பாதீர்கள் :)வாய்புக் கிடைக்கும்போது படத்தை கண்டிப்பாக பாருங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சி.பி. செந்தில்குமார், கமெண்டுகள் மற்றும் ஓட்டுக்கள் பதிவுகளை படிப்பவர்களின் கைகளில் உள்ளவை :) அவை இல்லாவிடிலும்கூட என் பதிவுகள் தொடரும். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் இக்பால் செல்வன், நீங்கள் கூறியபடியும் வைத்திருக்கலாம்தான் ஆனால் இவை எனக்கு தோன்றவில்லை அடுத்து வரும் சந்தர்பங்களில் பயன்படுத்திக் கொள்கிறேன். எம் நண்பர் இலுமினாட்டியை சூரியகேசி என்று இன்றுமுதல் அழைத்து மகிழப் போகிறோம் :) தங்கள் கருத்துக்களிற்கு மிக்க நன்றி.

  நண்பர் இலுமினாட்டி என்றழைக்கப்படும் சூரியகேசி அவர்களே, தியேட்டரில் இன்னமும் வரவில்லையா! சமீபகாலமாக இந்தியாவில்தான் ஹாலிவூட் திரைப்படங்கள் முதலில் வெளியாகின்றன. தேவதைகள்கூட நாள்பட நாள்பட வண்ணங்கள் மாறி எம் மனங்களை வானவில் கூடாரங்களாக மாற்றியடிக்கிறார்களே. தங்கள் கருத்துக்களிற்கு மிக்க நன்றி சூரியகேசி :)

  ReplyDelete
 8. சூரிய கேசி? இது நல்லா இருக்கே :-) ..

  பல நாட்கள் கழித்து நான்கு ஸ்டார்கள் !! இதைக் கண்டிப்பாகப் பார்ப்பேன். அனிமெஷன் படங்கள் என்றா எனக்கு உயிர்..

  அந்தக் குதிரையின் முகபாவம் அட்டகாசம்! அதைவிட அட்டகாசம், உங்கள் கமெண்ட்டு :-)

  ReplyDelete
 9. வாவ் நான்கு ஸ்டார்கள் !!
  அப்ப கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் அப்படீன்னு சொல்லுங்க :))
  .

  ReplyDelete
 10. // இளவரசி ரப்புன்ஸலின் மரகத விழிகள் அழகா இல்லை அவள் கூந்தல் அழகா என ஒரு பட்டி மன்றமே வைக்கலாம். //

  வரும் பொங்கலன்று அனைவரும் காணத் தவறாதீர்கள் நம்ம டிவில ;-)
  .

  ReplyDelete
 11. //இவ்வளவு அழகான கூந்தலை நான் இதுவரை பார்த்ததில்லை [ என் மனைவியின் கூந்தலை தவிர்த்து ]//

  //மனதை ரப்புன்ஸல் போன்று கொள்ளை கொண்ட வேறு இளவரசிகள் இல்லை [ நல்ல வேளையாக என் மனைவி இளவரசி இல்லை ]//

  இதுல எங்கேயோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே காதலரே :))
  .

  ReplyDelete
 12. // சூரிய கேசி? இது நல்லா இருக்கே :-) .. //

  Me also repeettu........ :))
  .

  ReplyDelete
 13. நண்பர் கருந்தேள், திரையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாதீர்கள். ஆம் சூரியகேசி சூப்பராகவே இருக்கிறது. தங்கள் கருத்துக்களிர்ற்கு நன்றி.

  நண்பர் சிபி, நீங்கள் எந்த டிவியில் பணியாற்றுகிறீர்கள் :) நிச்சயமாக உள்குத்து எதுவுமில்லை :)) சூரியகேசி வாழ்க. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 14. இந்த படத்தை பாக்குறதுக்கு எனக்கு ஒரு பய கம்பெனி கொடுக்க மாட்டேங்க்றாய்ங்க. பார்க்கலாம்...

  ReplyDelete
 15. நண்பர் பிரசன்னா ராஜன், குழந்தையின் மனநிலையில் பார்க்க வேண்டிய படமிது. பின்பு என்னை வெட்ட வரக்கூடாது :)) கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete