Friday, April 30, 2010

நூறு தோட்டாக்கள்


சோப்பு போட்டுக் கழுவினாலும் மனதை விட்டு நீங்காத சிறையின் நாற்றம். பதினைந்து வருடச் சிறை. சிறைத் தண்டனையை முடித்தும் Dizzyயின் மனதில் விடுபடாமலிருக்கும் அந்தக் குற்றவுணர்ச்சி. தன் அன்பு மகன் ஹெக்டரும், காதல் கணவன் சாண்டியாகோவும் படுகொலை செய்யப்பட தானே முழுக் காரணம் எனும் எண்ணம் அவள் மனதைக் கூரான சிறு கத்திபோல் குத்திக் கொண்டிருந்தது.

100b1 சிறையிலிருந்து விடுதலை. வீடு நோக்கிய பயணம். சிந்தனைகளின் சுழல்களில் சிக்கி உழலும் மனம். ரயில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போதுதான் அந்த நபர் டிஸ்ஸியை நோக்கி வந்தார். அவள் அருகில் அமர்ந்தார்.

ஏஜண்ட் கிரேவ்ஸ் என்று தன்னை டிஸ்ஸியிடம் அறிமுகம் செய்து கொள்ளும் அந்த நபரிற்கு டிஸ்ஸியின் வாழ்க்கை குறித்து அத்துப்படியாக தெரிந்திருக்கிறது. அவள் வாழ்க்கை ரோஜா இதழ்களால் நெய்யப்பட்டிருக்கவில்லை. டிஸ்ஸி, சிறு வயதிலேயே குற்றச் செயல்களிற்கு அறிமுகமானவள். சீர்திருத்தப் பள்ளிகளில் தன் நாட்களைக் கழித்தவள்.

பின்பு சாண்டியாகோவுடன் காதல். திருமணம். அன்புக் குழந்தை ஹெக்டர். புதிய வாழ்க்கை. திடீரென ஒரு நாள் தெருவில் இடம்பெறும் ஒர் துப்பாக்கி மோதல். மோதலில் உயிர்பிழைத்த டிஸ்ஸி குற்றவாளியாகச் சிறையில். கணவனும், மகனும் இனந்தெரியாத நபர்களால் தெருவில் வைத்து சுடப்பட்டு படுகொலை. தன்னை வஞ்சம் தீர்ப்பதற்காகவே தனக்கு எதிரான ரவுடிக் குழுவொன்றால் இக்கொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதும் டிஸ்ஸி.

ஆனால் ஏஜண்ட் கிரேவ்ஸ், டிஸ்ஸியின் மகனையும், கணவனையும் கொன்றது இரு பொலிஸ் அதிகாரிகள் என்பதை அவளிற்கு தெரிவிக்கிறார். அந்த அதிகாரிகளின் போட்டோவொன்றையும் கிரேவ்ஸ் டிஸ்ஸிற்கு வழங்குகிறார். கூடவே ஒரு சூட்கேஸையும் அவளிடம் தருகிறார்.

அந்த சூட்கேஸினுள் அடையாளம் காண முடியாத நூறு தோட்டாக்களும், ஒரு கைத்துப்பாக்கியும் இருக்கின்றன. கொலைகாரர்களான இரு பொலிஸ் அதிகாரிகள் குறித்து டிஸ்ஸி செய்ய விரும்பியதை செய்வதற்கு க்ரீன் சிக்னல் வழங்குகிறார் ஏஜென்ட் கிரேவ்ஸ். எந்த விசாரணைகளிலிருந்தும் அவளைத் தான் காப்பாற்றுவேன் என்பதனையும் கிரேவ்ஸ் அவளிற்கு தெரிவிக்கிறார்.

டிஸ்ஸியின் முடிவு இரு பொலிஸ் அதிகாரிகளையும் தீர்த்துக் கட்டுவது எனில், அது குறித்த பொலிஸ் விசாரணைகள் மரணத்திற்கு காரணமான தோட்டாக்களை கண்டெடுப்பதுடன் நின்றுவிடும் என்பதையும் கூறிவிட்டு டிஸ்ஸியை விட்டு விலகிச் செல்கிறார் கிரேவ்ஸ்….

100b2 டிஸ்ஸி எடுத்த முடிவு என்ன? தன் கணவன் மற்றும் மகன் இருவரினதும் படுகொலைகளிற்கு பின் ஒளிந்திருக்கும் ரகசியத்தை அவள் கண்டு பிடித்தாளா? வஞ்சத்தின் சுவையை டிஸ்ஸி அறிந்து கொண்டாளா?

=========

வழமையான மதுபான விடுதிக் கைகலப்பு. உடைந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளைக் கூட்டி அள்ளுகிறான் லீ. உடைந்துபோன அவன் வாழ்க்கையைத்தான் அவனால் அள்ளிவிட முடியவில்லை.

அழகான மனைவி. புத்திசாலிக் குழந்தைகள். இனிய குடும்ப வாழ்க்கை. லீ, பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளன். பின் ஒரு நாள் லீயின் வீட்டினுள் நுழையும் FBI ஏஜண்டுகள். லீயின் கணணியில் அவனிற்கு தெரியாமலே வந்து குந்தியிருக்கும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக [Pedophile] போட்டோக்கள்.

லீயின் பெயரும் பீடோபைல்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது. ஊடகங்கள் அவனைச் சிலுவையில் அறைகின்றன. அவன் மனைவியும் குழந்தைகளும் அவனை விட்டுப் பிரிந்து செல்கிறார்கள். லீயின் உணவகம் வாடிக்கையாளர்களை இழந்து, நஷ்டத்தில் மூடப்படுகிறது.

இப்போது, அழுக்கு வடிந்தொழுகும் இந்த மதுபான விடுதியில் லீ ஒரு ஊழியன். தன் வாழ்க்கையை யாரோ சதி செய்து உடைத்தார்கள் என்று உறுதியாக நம்புகிறான் லீ. கையாலாகதவனாக.

குடிகாரர்கள், விபச்சாரிகள், வாழ்வைத் தொலைத்தவர்கள். அழுக்கான பார். மேலும் அழுக்கேற முடியாத வாழ்க்கை. அந்த பாரில்தான் லீயை வந்து சந்திக்கிறான் ஏஜண்ட் கிரேவ்ஸ். லீயின் கணிணியில் பீடோபைல் போட்டோக்களை பதுக்கியது யார் என்பதை லீக்கு அறியத்தருகிறான் கிரேவ்ஸ்.

அவள் ஒரு அழகிய இளம் பெண். அவள் பெயர் மெகான். வழமை போலவே அடையாளம் காண முடியாத நூறு தோட்டாக்களையும், ஒரு கைத்துப்பாக்கியையும் கொண்ட ஒரு சூட்கேஸை லீயிடம் விட்டுச் செல்கிறான் கிரேவ்ஸ். தன் வாழ்வை நொருக்கியவளை பழி வாங்குவது இனி லீயின் கைகளில்…

யார் இந்த மெகான்? ஏன் மெகான் அந்த போட்டோக்களை லீயின் கணிணிக்கு அனுப்பி வைத்தாள்? மெகானை லீ பழிவாங்கினானா?

100B3 அடையாளமில்லாத நூறு தோட்டாக்கள் மனிதர்களின் வாழ்வில் கொண்டு வரும் அதிரடிச் சம்பவங்களை வாசகன் கண்முன் விரிக்கும் மேற்கூறியவை போன்ற கதைகள்தான் 100 Bullets காமிக்ஸ் தொடரின் உயிர்நாடி. தன் மனதில் இருக்கும் வஞ்சத்தை தீர்க்க மனிதர்களிற்கு தரப்படும் ஒரு வாய்ப்பு. அந்த வஞ்சத்தை தேடிய அவர்களின் பயணத்தில் வெளிக்கிளம்பும் எதிர்பாராத ரகசியங்கள். அவர்கள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்தார்களா இல்லை அந்த வஞ்சம் அவர்களை வேறு சுழல்களிற்குள் இட்டுச் சென்றதா என்பதை அருமையான கதை சொல்லலுடனும், கதைகளின் இருளை உணர்த்திடும் அசர வைக்கும் சித்திரங்களுடனும் வாசகனிடம் எடுத்து வருகிறது 100 Bullets.

டிஸ்ஸியின் கதையை எடுத்துக் கொண்டால், அவள் வாழும் இடத்தின் சூழலையே உயிர் ததும்ப கதாசிரியர் Brian Azzarello கதைக்குள் புகுத்தி விடுகிறார். வசதியற்ற மெக்ஸிகன் வம்சாவழி மக்கள் அடர்ந்து வாழும் அந்தப் பகுதியில் நிலவும் வறுமை, வெறுமை, குற்றக் குழுக்கள், அவற்றிற்கிடையேயான மோதல்கள், போதைப் பொருள், கொலைகள், காவல்துறையின் தகிடுதித்தங்கள், தங்கள் துணைகள் சிறையில் வாழ்ந்திருக்க வெளி உலகில் வாழத் தவிக்கும் இளம் அன்னைகள் என அச்சூழல் குறித்த ஒரு நிறைவான பார்வையை மூன்று பாகக் கதையில் வழங்குகிறார் கதாசிரியர்.

100b4 லீயின் கதை மதுபான விடுதியையும், அதனை நாடி வருபவர்களையும் பிரதானமாகக் காட்டி இரு பாகங்களில் கதையை நகர்த்துகிறது. ஆடை அவிழ்ப்பு நடன பார்களில் லீ காணும் நடனங்கள் மட்டுமே அவனை மனிதனாக உணர வைக்கும் தருணங்கள் என்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. உச்ச செல்வந்த அதிகாரத்தையும்,அறிவையும், உடைந்து போன மனிதன் ஒருவனின் வஞ்சத்தையும் மோதவிட்டிருக்கிறார் கதாசிரியர். இக்கதையின் முடிவு மனதை நெகிழ வைக்கும்.

கதைகளில் வரும் பிரதான பாத்திரங்களின் வலிகள், பலவீனங்கள், நம்பிக்கைகள், வாழ்க்கை குறித்த அவர்களின் கேள்விகள் என்பவற்றின் துணையுடனேயே கதையை நகர்த்துகிறார் பிரையன் அஸாரெல்லோ. அப்பாத்திரங்களிற்கு அவர் மிகையான சக்திகளையோ, வாய்ப்புக்களையோ வழங்கவில்லை. நாளாந்த வாழ்வின் நிகழ்வுகளோடும், உணர்வுகளோடும் சாதாரண மனிதர்கள்போல் மோதுகிறார்கள் அவர் உருவாக்கியிருக்கும் பாத்திரங்கள். கதையில் வஞ்சம் என்பதன் வெற்றி, வஞ்சம் தீர்க்க விழையும் பாத்திரங்களின் வாழ்க்கை ஓட்டத்தால் தீர்மானிக்கப்படுகிறது. இதுதான் இக்காமிக்ஸ் தொடரின் மிகவும் கவர்சியான அம்சமாகும்.

கதை நடக்கும் சூழலிற்கேற்ப மொழியையும் சிறப்பாக கையாள்கிறார் கதாசிரியர். சில உரையாடல்களில் கத்தியின் கூர்மை மின்னுகிறது. உரையாடல்கள், படிப்பவர்களைக் கதையின் சூட்டோடு ஒன்றச் செய்வதில் வெற்றி காண்கின்றன. ஒரு Noir வகைத் த்ரில்லரிற்குறிய அம்சங்களை அளவுடன் உள்ளடக்கி கதைகள் சிறப்பான வகையில் வடிவம் பெற்றிருக்கின்றன.

கதைகளின் இருளையும், சூட்டையும், சூழலையும், கவர்ச்சியையும் கண்முன் நிறுத்துகின்றன ஓவியக் கலைஞர் Eduardo Risso வின் சித்திரங்கள். மிகவும் நளினமான பாணியில் அமைந்திருக்கும் அவர் சித்திரங்கள் காமிக்ஸ் தொடரின் கூடுதல் பலம். வாசகர்களிற்கு கொண்டு செல்ல வேண்டிய உணர்ச்சிகளை அவர்களிடம் அழகாக எடுத்து வருகிறது ரிஸோவின் சித்திரங்கள். நிழலும், ஒளியும் கலந்த அவர் சித்திரங்கள், கதை நகரும் சூழலோடு அதனைப் படிப்பவர்களை இலகுவாக ஒன்ற வைக்கிறது. ரிஸோ வழங்கியிருக்கும் ஆக்‌ஷன் தருணச் சித்திரங்கள் அதிர்கின்றன. தனக்கென தனிப் பாணி கொண்ட காமிக்ஸ் ஓவியர்களில் ரிஸோ குறிப்பிடத்தக்க ஒருவர்.

கதைத் தொடரின் மிக முக்கிய கேள்வி, யார் இந்த ஏஜண்ட் கிரேவ்ஸ் என்பதாகும். கிரேவ்ஸ் ஏன் மனிதர்களிற்கு வஞ்சம் தீர்ப்பதற்குரிய வாய்ப்பை வழங்குகிறார்? அம்மனிதர்கள் குறித்து அவர் எவ்விதம் அறிந்து கொண்டார்? இதன் மூலம் கிரேவ்ஸ் அடைய விரும்புவது என்ன? மொத்தம் 13 தொகுப்புக்களாக வெளிவந்திருக்கும் 100 Bullets காமிக்ஸ் தொடர் இக்கேள்விகளிற்கான விடைகளை வழங்கும். 100 Bullets கதை நெற்றியில் துப்பாக்கி ஒன்று அழுத்தும் உணர்வின் ஒரு அலையை வாசகனிடம் இலகுவாகக் கடத்திவிடுகிறது. படிக்க ஆரம்பித்தால் ஆல்பத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்க்க வைக்கும் காமிக்ஸ் கதைகளில் 100 Bullets சுலபமாக இணைந்து கொள்கிறது. [****]


முதல்பாகத்தினை தரவிறக்க

19 comments:

  1. நண்பரே
    நானே இதை(காமிக்ஸ்) பற்றி கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். பதிவே போட்டு விட்டீர்கள். நல்லது.முதல் பாகத்தை தரவிறக்கம் செய்து கொண்டேதான் பின்னூட்டம் போடுகிறேன். உங்களின் பதிவு தோட்டாவின் வேகத்தை விட அதிகமாக - விறுவிறுவென பாய்கிறது. மிகச்சிறந்த SCRIPT WRITTER-உடைய நேர்த்தி தெரிகிறது.வாழ்த்துகள். படித்து விடுகிறேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. மிக மிக அருமையான விவரிப்பு . . ரசித்துப் படித்தேன் . . நல்ல ஓவியங்கள் வேறு . . இதோ இறக்கி விடுகிறேன் . . என்னைப் பொறுத்தவரை, ஒரு திரைப்படத்தை விட, ஒரு காமிக்ஸை வடிவமைப்பதில்தான் ஒருவர் தனது முழுத்திறமையையும் காட்டிச் செயல்பட முடியும் என்பதை உறுதியாக நம்புபவன் நான். அத்தகைய காமிக்ஸ்களை நீங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்வது மனதுக்கு நிறைவாக இருக்கிறது.

    உங்களின் வேகம் என்னைப் பிரமிக்க வைத்தது நண்பரே. . இது உங்களின் பதினோராவது படைப்பு இந்த மாதத்தில். இந்த வேகம் தொடர எனது வாழ்த்துகள் !! :-)

    இப்பொழுது தான் பார்த்தேன் பதிவை.. அதுவும் எனது பதிவைப் போட்டவுடன் . . :-)

    ReplyDelete
  3. நண்பர் வேல்கண்ணன், படித்துக் கொண்டிருக்கும்போதே கதை சொல்லலில் ஒரு திறமை, அருமையான சித்திரங்கள் என கண்டிப்பாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய காமிக்ஸ் இது எனத் தீர்மானித்தேன். இது குறித்து நீங்களும் அறிய விரும்பியது எனக்கு இப்பதிவையிட்டது குறித்த நிறைவை வழங்குகிறது. பிற பாகங்களையும் நீங்கள் இணையத்தில் தரவிறக்கிப் படிக்கலாம். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் கருந்தேள், மிக்க நன்றி. நல்லதை குறித்து பகிர்ந்து மகிழ்ந்திருப்பதே எங்கள் ஆச்சிரமத்தின் நோக்கம். இந்த மாதம் கன்னி மாதுளை மதன புஷ்டி லேகியத்தை அளவிற்கு மீறி உபயோகித்ததால்தான் இந்த வேகம்:) அடுத்த மாதம் நிதானம். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. மீ த ஃபோர்த்து.

    என்னமோ போங்க, இந்த பின்னூட்ட போட்டிக்கு நம்மால முதலிடத்தினை வாங்கவே முடியாதோ?

    ReplyDelete
  5. காதலரின் சிறப்பு ஸ்டாரை பெற்றுள்ள இந்த புத்தகத்தினை கையகப்படுத்த மனம் துடிக்கிறது.

    ReplyDelete
  6. //நல்லதை குறித்து பகிர்ந்து மகிழ்ந்திருப்பதே எங்கள் ஆச்சிரமத்தின் நோக்கம்//

    சிஷ்யைகள் எங்கே சுவாமி?

    //இந்த மாதம் கன்னி மாதுளை மதன புஷ்டி லேகியத்தை அளவிற்கு மீறி உபயோகித்ததால்தான் இந்த வேகம்://

    ஆஸ்ரமத்தில் பல சிட்டுக்குருவிகளை காணோமாமே? சிட்டுக்குருவி லேகியம் ஏதும் உண்டா? அல்லது தங்க பஸ்பமா?

    ReplyDelete
  7. ரைட்டு.டவுன்லோட் பண்ணிடறேன்..... :)

    ReplyDelete
  8. அட்டைப்படம் அருமை. இதே போன்ற ஒரு அட்டைப்படத்தை நான் தமிழ் மாத நாவல் ஒன்றிலும் பார்த்த ஞாபகம். சரியா காதலரே?

    ReplyDelete
  9. காதலரே,

    பதினோரு பதிவிட்ட பன்முக திறமையாளர் என்ற பட்டத்தினை உங்களுக்கு பதிவுலகம் சார்பில் வழங்குகிறேன்.

    ReplyDelete
  10. //சோப்பு போட்டுக் கழுவினாலும் மனதை விட்டு நீங்காத சிறையின் நாற்றம்//

    இது போன்ற வரிகளை படிக்கும்போது ஏனோ பட்டுக்கோட்டை பிரபாகர் தான் மாற்றுப்பெயரில் வந்து இது போன்ற பதிவுகளை எழுதுகிறாரோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. அது ஏன் காதலரே?

    ReplyDelete
  11. விஸ்வா, சிஷ்யைகள் பாண்டி மைனர் ஆச்சிரமத்திற்கு டூர் சென்று விட்டார்கள். சிட்டுக்குருவி லேகியம், தங்க பஸ்பம் எல்லாம் புராண கால முனிவர்களிற்குரியவை. கன்னி மாதுளை மதன புஷ்டி லேகியம், நவீன ரசவாத சித்தர்களால் உருவாக்கப்படும் ஒரு ஜில்மிளிங்கா அமிர்தம் :)) அதனை உண்டால் இளைய தளபதிபோல் சக்தி பெறலாம். வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    இலுமினாட்டி, டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள். வருகைக்கு நன்றி நண்பரே.

    ஒலக காமிக்ஸ் ரசிகரே, நான் பார்த்த மாத இதழ் அட்டைப்படங்களை மறந்து வெகுநாட்களாகிவிட்டது. நீங்கள் கூறினால் சரியாகவேயிருக்கும். டாக்டர் பட்டம் எல்லாம் வழங்க மாட்டீர்களா :)). ஒரு கதையைப் படிக்கும்போது நான் உணர்பவற்றை என் பாணியில் எழுதுகிறேன். பிகேபியுடன் ஒப்பிடுவது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  12. பதிவிறக்கம் செய்யத்தொடங்கிவிட்டேன். இரசிகரின் பதிவே பதிவுதான். சிறப்பு நடசத்திரம் பெற்ற இந்தப் புத்தக்கதை விரைவில் அடியேன் வாங்கிவிடுவேன் :)

    ReplyDelete
  13. அருமையான பதிவு நண்பரே. பதிவிற்கு நன்றி. பதிவிறக்குகின்றோம்.

    ReplyDelete
  14. நண்பர் ஜெ, வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    நண்பர் ஹாலிவுட் மயூ, படித்து மகிழுங்கள். கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  15. அன்பு நண்பரே,

    டி.சி. காமிக்ஸில் இது போன்ற ஒரு கதையையும், சித்திரங்களையும் நீங்கள் எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள். நானும்தான். பச்சை விளக்கன், காவக்காரர்கள், சூப்பர் மேன் மற்றும் பலரை வைத்துக் கொண்டு பக்கங்களை நிரப்புவதாகவே இவர்களின் புத்தகக்ங்களை பற்றிய நான் கருதி வந்துள்ளேன்.. ஆனால் நடுநடுவில் நல்ல கதையோட்டத்துடன் கூடிய சித்திரத் தொடர்களை ஆரம்பித்தாலும் அதனை அடுத்த மூன்றாவது கதைத் தொடரிலேயே ஒழித்து விடுவார்கள்.

    இவர்களிடமிருந்து இப்படியொரு தொடரை எதிர்பார்க்க வில்லை. நீங்களும் எதிர்பார்க்கவில்லை என நீங்கள் கொடுத்துள்ள ஸ்டார்கள், எழுதிய விதம், எழுத எடுத்துக் கொண்ட மணித்துளிகளை பார்க்குபோது தெரிகிறது.

    நல்ல தொடரை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்.

    ReplyDelete
  16. ஜோஸ் நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. ஆனால் இனி அமெரிக்க காமிக்ஸ் மொழிபெயர்ப்புக்களை -வவ்வா மனுசன், சிலந்தி மனுஷன், ஓநாய் இரும்பன், இக்ஸ் மனுசர்கள், உச்ச மனுஷன் வகையறாக்களைத் தவிர்த்த- முயன்று பார்க்க தயங்கக் கூடாது எனும் தீர்மானத்தில் உள்ளேன். படித்தவுடனேயே பற்றிக் கொண்டு விட்டது. எழுதியும் விட்டேன். வாய்ப்புக் கிடைக்கும்போது படிக்கத் தவறாதீர்கள் அன்பு நண்பரே.

    ReplyDelete
  17. அன்பின் காதலரே,

    இன்னொரு அருமையான தொடரின் அறிமுகம். ரிஸோவும், அஜரல்லோவும் கதையை ஒரு பல்ப் கால தொணியில் அருமையாக நகர்த்தியிருக்கிறார்கள். நீங்கள் கூறியபடி ஒவ்வொரு சித்திரத்திலும், வண்ணத்தை விட கருப்பு மை தான் தன் ஆதிக்கத்தை பலமாக நிரூபிக்கிறது. வண்ணங்கள் Noir தொனியை குலைத்திடாத வண்ணம் கருப்பிற்கு முக்கியத்துவம் அளித்து ஒப்புக்காக பூசபட்ட நடிகை போல சேர்ந்து கொள்கிறது.

    மர்மம் நிறைந்த ஏஜென்ட், வாழ்வில் பிரச்சனைகளை மூட்டை கட்டி அதன் கனத்தோடு நாளை தள்ளும் சக்தி இல்லாத சாதாரண மணிதர்கள், இவர்களை பிணைக்கும் பழி வாங்கும் வெறி, அதற்கு உதவும் 100 தோட்டாக்கள், பிண்ணயில் ஒரு பெரிய கூட்டம், என்று கதைகளம் பிண்ணி எடுக்கிறது...

    கூடவே உங்கள் வர்ணணைகள் :- //
    சோப்பு போட்டுக் கழுவினாலும் மனதை விட்டு நீங்காத சிறையின் நாற்றம்.
    அவள் வாழ்க்கை ரோஜா இதழ்களால் நெய்யப்பட்டிருக்கவில்லை.
    உடைந்துபோன அவன் வாழ்க்கையைத்தான் அவனால் அள்ளிவிட முடியவில்லை.//

    கதைக்கு ஒரு கவிஞத்துவத்தை அளிக்கிறது. இக்கதையை நீங்கள் பிரஞ்சில் தான் படித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்... அப்படி என்றால், ஆங்கிலத்தில் வெளியான கதை தொடரான இதை பிரஞ்சில் அதே சாராம்சம் குறையாமல் வர்ணணை செய்திருக்கிறார்களா என்று கேள்வி கேட்க தோன்றுகிறது.

    கதையின் நொயிர் பாணியை கொண்டு வர உங்கள் பக்க மொழியாக்கங்களில் நீங்கள் லோக்கல் தமிழிற்கு முயற்சிகள் செய்தது தெரிகிறது. காதலருக்கு தேன் சொட்டும் வார்த்தைகள் தவிர வேறு பாணி செயல்படுமா... நீங்கள் அதை உடைக்க முயன்றிருப்பது வெட்டவெளிச்சம்... நமது பாண்டி மைனரிடம் சென்னை பாஷையை சற்று கற்று கொண்டீர்கள் என்றால் உபயோகபடலாம் இவ்வேளைகளில்.

    ஆமாம், சித்திரத்தில் ஒரு மன்ஹாட்டன் என்று அந்த அழகிய பெண்மணி கேட்கும் அந்த பானம் எவ்வகை பட்டது என்று அறிவீர்களா... இல்லை அதையும் பாண்டி மைனரிடம் கேட்டு கொள்ளட்டுமா ? )

    நூறு தோட்டாக்கள் என்ற இந்த கதை தொடரை பல முறை இங்கிருக்கும் புத்தக கடைகளில் வரிசையாக அடிக்கி வைக்க காண கண்டிருக்கிறேன். ஒரு புத்தகத்தின் விலை 700 ரூபாய் அளவில் இருப்பதும், அதற்கு 13 பாகங்கள் கொண்ட தொகுப்பும் என்னை எப்பவும் அவைகளை வேடிக்கை பார்ப்பதுடன் நிற்க வைத்து விட்டது. 100 பாகங்கள் கொண்ட தனி புத்தக தொகுப்புகள் 13 ல் கிடைக்க பெறுகிறது என்றாலும், விலைவாசி நமது கட்டுக்குள் இல்லை என்பது நிதர்சனம்.

    உங்கள் விமர்சனத்திற்கு பிறகு, ஒரு இரு பாகங்களையாவது இணைய பிரதியில் படித்து பார்க்க ஆவலாகி விட்டது... பின்ன, நெற்றியில் துப்பாக்கி ஒன்று அழுத்தும் உணர்வின் ஒரு அலையை நானும் வாசிக்க வேண்டாமா....?

    பி.கு.: 100 Buleets ன், அந்த 13 தொகுப்புகளையும் கையபடுத்த முடியவில்லை என்றாலும், அதன் ஒவ்வொரு தொகுப்புக்கும் வித்தியாசமாக அவர்கள் வைத்திருக்கும் தலைப்பை பார்த்து அதிசயத்திருக்கிறேன். ஒவ்வொரு பாகத்தின் வரிசை எண்ணை அடிப்படையாக கொண்டு, டர்டி (டஜன்),

    அவைகள் ஒரு நொயிற் விடயம் என்றால், தங்களில் நொயிர் விடயத்தை என்னவென்று சொல்வது. நண்பர்கள் கவனிக்க தவறியிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிவிற்கு 100 புல்லட் விமர்சனத்தை கையில் எடுத்திருப்பது, உங்கள் 100 வது பதிவு இதுவென சூசுகமாக சொல்ல தானே.

    2 வருடத்தில் 100 பதிவுகள் ஒரு இமாலய சாகசம்... அவை ஒவ்வொண்றும் ஒரு வித்தியாசமான அறிமுகம் என்பது இன்னும் சிறப்பு. எந்தவித கொண்டாட்டங்களும் இல்லாமல் உங்களில் இந்த 100 பதிவு அமைதி பயணம், உங்கள் அமர்க்கள் மொழி நடையில் ஒரு தனி ரசிக வட்டத்தை தங்களுக்கு துணையாக சேர்த்திருக்கிறது...

    ReplyDelete
  18. அன்பின் காதலரே, மற்றும் ஜோஷ் சான் அவர்களே,

    டிசி காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்களின் மாயையில் இருந்து விடுபடவில்லை என்பது உண்மைதான். ஆனால், இவ்வகை தொடர்களை அவர்கள் தங்கள் பிரதான வரிசையில் வெளியிடாமல், வெர்டிகோ என்ற வெளியீடின் மூலம் வெளியிட்டு கொண்டு தானிருக்கிறார்கள்.... அதற்கு காரணம், இவ்வகை வித்தியாச கதைகளங்களை முன்னிலை வைத்து மற்ற காமிக்ஸ் நிறுவனங்கள் இவர்களை முந்தி சென்றது தான் காரணம்.

    நீங்கள் இருவரும் கூறியபடி அவர்கள் அரைத்த மாவையையே அரைத்தாலும், சில வேளைகளில் அந்த சூப்பர் ஆசாமிகள் கதைகளில் கூட சில முத்துகள் வெளிவரவும் செய்கின்றன.... எல்லாவற்றிற்கும் பிண்ணயில் இருக்கும் கதாசிரியர்களின் பங்களிப்பு தானே முக்கியம்.

    எனவே, நேரம் கிடைக்கும் போது அந்த ஜட்டி போட்ட ஆசாமிகளின் கதைகளையும் முகர்ந்து பாருங்கள்... அங்கு சில ரத்தினங்கள் கைவரபடலாம்... :)

    ReplyDelete
  19. ரஃபிக், ரிஸ்ஸோவின் கருப்பு வெள்ளை சித்திரங்கள் இன்னமும் அபாரமாக இருக்கும், இக்கதையில் கதாசிரியரும், ஓவியரும் கைகோர்த்த்துப் பயணிக்கிறார்கள். வாசகர்களை அந்த கைகோர்ப்பு கதையுலகிற்கு இலகுவாக எடுத்துச் செல்கிறது. ரிஸ்ஸோவின் ஸ்டைல் ஸ்டைல்தான்.

    ஏஜண்ட் கிரேவ்ஸ் பின், ட்ரஸ்ட் எனும் ஒரு அமைப்பு, மினிட்மேன் எனும் அதன் தளபதிகள், XIII எனும் எண், ட்ரஸ்ட் அமைப்பில் நிகழ்ந்துவிட்ட அசம்பாவிதங்கள் என ஒவ்வொரு அத்தியாயத்திலும் சுழலும் ஆழமாகிறது அதேவேளையில் மெல்லிய ஒரு விளக்கமும் உதயமாகிறது.

    பிரெஞ்சு மொழியில்தான் படிக்கிறேன். சிறப்பான மொழிபெயர்ப்பு. என்னால் இயன்றவரை பதிவில் கொண்டுவர முயன்றிருக்கிறேன். ஆனால் கேங்ஸ்டர்களிற்குரிய மொழியே தனிதான் ஆங்கிலத்தில் இன்னமும் சிறப்பாக இருக்கும். ஆங்கில தொகுப்புகளில் உள்ள கதை வரிசைகளிற்கும், பிரெஞ்சு தொகுப்புகளில் உள்ள கதை வரிசைகளிற்கும் தொகுக்கப்பட்ட ஒழுங்கில் வித்தியாசம் உண்டு. பாண்டிமைனரிடமே தமிழாக்கம் செய்ய கொடுத்து விடலாம் என்றால் மனிதர் இறக்கை கட்டிக் கொண்டு பறக்கிறாரே.

    ஆம் நண்பரே 700ரூ என்பது அதிகமான விலைதான். இவ்வகையான தருணங்களில் ஒரு இதழையாவது இணையப் பிரதிகளில் படித்துவிடுவது நல்லதே.

    மன்ஹாட்டன் காக்டெயில் என்ன என்று தெரிந்து கொண்டேன் ஆனால் அதனுடன் பரிச்சயம் இதுவரையில் இல்லை:) பாண்டி மைனரிடம் இது குறித்து கேட்டால் ஒர் மந்தகாசப் புன்னகை பதிலாக வரும் அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருக்கும்.

    நண்பரே, 100 புல்லட் கதைகளுடன் Batman & Dracula- Blood Rain எனும் கதையையும் படித்தேன். சாகடித்து விட்டார்கள். எனவே மூகமூடி, ஜட்டி நாயகர்களிடமிருந்து சற்று ஒதுங்கியே இருப்பேன். மாறாக வெர்டிகோவின் வெளியிடுகளில் கவனம் செலுத்த தீர்மானித்து இருக்கிறேன்.

    பதிவுகளோடு என் பகிர்தல் அமைதியாக தொடரும். ஆழமான கருத்துப் பகிர்தலிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete