Sunday, April 25, 2010

ஜாங்ரிஜட்டி சூப்பர் ஹீரோஸ்


kick-ass டேவ் [Aaron Johnson], நீங்கள் தினமும் [அமெரிக்க] வீதிகளில் காணக்கூடிய சாதாரண பள்ளி மாணவர்களில் ஒருவன். அவனிடம் சிறப்பான திறமைகள் என்று சொல்லிக் கொள்வதற்கு எதுவும் கிடையாது. பள்ளி வளாகத்தில் பிறரால் கவனிக்கப்படாது உலாவரும் உயிர்களில் அவனும் அடங்குவான். தன் தாயின் மரணத்தின் பின் அவன் தந்தையுடன் வசித்து வரும் டேவ், ஒரு காமிக்ஸ் ரசிகன். குறிப்பாக சூப்பர் ஹீரோக்கள் மீது அவனிற்கு அதிக ஆர்வம் இருக்கிறது.

காமிக்ஸ் கதைகளில் விதம்விதமாய் உருவெடுத்து, தீமைகளை ஓட ஓட விரட்டும் சூப்பர் ஹீரோக்கள் நிஜ வாழ்வில் ஏன் இருப்பது இல்லை என்ற கேள்விக்கு அவன் மனம் விடை காண முயல்கிறது. மாறாக காமிக்ஸ் கதைகளில் வரும் வில்லன்களை விட மோசமான மனிதர்களை டேவ், நிஜ உலகில் தினம் தினம் காண்கிறான்.

உலகில் ஒரு மனிதன் கூட தீமைகளை அடக்கி பிறரிற்கு உதவுவதற்காக சூப்பர் ஹீரோ வேடம் போட்டதேயில்லையா என்று தன்னையே கேள்வி கேட்கும் டேவ், தன்னைச் சுற்றி நிகழும் குற்றச் செயல்களை தாங்கிக் கொள்ள முடியாது, தானே ஒரு சூப்பர் ஹீரோவாக மாற முடிவெடுக்கிறான். இணையத்தில் சூப்பர் ஹீரோக்கள் அணிவது போன்ற ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு Kick-Ass எனும் சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறான் டேவ்.

சிறப்பான சக்திகளோ, தகுந்த தற்பாதுகாப்பு பயிற்சிகளோ அற்ற டேவின் சூப்பர் ஹீரோ வேடம் நடைமுறையில் அவ்வளவு எளிதானதாக இல்லை. தீமையை எதிர்த்து, நீதியை நிலைநாட்ட கிடைக்கும் முதல் வாய்ப்பிலேயே, கிக் ஆஸாகிய டேவை ரவுடிகள் கத்தியால் குத்தி, மரண அடி அடித்து விடுகிறார்கள். தெருவில் வரும் ஒரு கார், கிக் ஆஸின் மீது மோதி விட்டு பறந்து விடுகிறது. படு காயங்களிற்குள்ளாகும் கிக் ஆஸ் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறான்.

G17443371521644 சிறிது கால சிகிச்சையின் பின் உடல் நலமாகி மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் கிக் ஆஸ், மேலும் மன உறுதி கிடைக்கப் பெற்றவனாய், மீண்டும் தீமையை எதிர்த்துப் போராடக் கிளம்புகிறான். இம்முறை காணாமல் போய்விட்ட பூனை ஒன்றை தேடிச் செல்லும் கிக் ஆஸ், தெருவில் இடம் பெறும் கைகலப்பு ஒன்றில் சந்தர்ப்பவசமாக மாட்டிக் கொள்கிறான்.

தெருவில் நடைபெறும் அம்மோதலில் மூன்று தடியர்களின் பயங்கரமான அடி உதையிலிருந்து ஒரு மனிதனைக் காப்பாற்றுகிறான் கிக் ஆஸ். அந்த மூன்று தடியர்களிடமும் மரண அடி வாங்கியவாறே கிக் ஆஸ் சளைக்காமல் மோதுவதை கைத்தொலைபேசியில் படம் பிடிக்கும் ஒரு இளைஞன் அதனை இணையத்தில் போட்டு விட, ஒரே நாளில் தன் தீரச் செயலால் மக்கள் மத்தியில் பிரபல்யமாகி விடுகிறான் கிக் ஆஸ்.

கிக் ஆஸ் காமிக்ஸ், கிக் ஆஸ் டீ சர்ட், கிக் ஆஸ் காப்பி கப் என கிக் ஆஸ் பெயரில் வியாபாரம் களை கட்டுகிறது. கிக் ஆஸின் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அல்லல்களை தீர்த்து வைக்குமாறு விண்ணப்பித்து மின் மடல்கள் வருகின்றன. ஒரு நாள் தன் நண்பிக்கு தொல்லை தரும் போதை மருந்து விற்பனையாளன் ஒருவனை மிரட்டுவதற்காக அவன் வசிக்குமிடத்திற்கு செல்லும் கிக் ஆஸ், அங்கு போதை பொருள் விற்பனையாளனின் அடியாட்களிடம் வகையாக சிக்கிக் கொள்கிறான்.

ஆனால் கிக் ஆஸை போதைப் பொருள் வியாபாரி அடித்து துவம்சம் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக அங்கு திடீரெனத் தோன்றும் ஒரு சிறுமி, அங்கிருக்கும் அடியாட்களை தன் குத்து வாளால் வெட்டியும், குத்தியும் கொல்கிறாள். சூப்பர் ஹீரோக்கள் போல் உடையணிந்து, எதிரிகளை பந்தாடும் அச்சிறுமியின் திறமையைக் கண்டு தன் வாயைப் பிளக்கிறான் கிக் ஆஸ். அச்சிறுமியுடன் ஒப்பிடுகையில் தான் ஒரு பூஜ்யம் என்பதனையும் அவன் உணர்ந்து கொள்கிறான்.

kick-ass-2010-17443-1075845859 போதை மருந்து வியாபாரியையும், அவன் அடியாட்களையும் கொன்று தீர்க்கும் அச்சிறுமி தன்னை Hit-Girl [Chloe Grace Mortez]என கிக் ஆஸிடம் அறிமுகம் செய்து கொள்கிறாள். அச்சிறுமியுடன் Big-Daddy [Nicolas Cage]என்பவனும் சேர்ந்து ஒரு அணியாக தீமையை எதிர்த்துப் போராடுவதையும் கிக் ஆஸ் தெரிந்து கொள்கிறான். தம்மைப் பற்றி எவரிடமும் எதுவும் பேசக் கூடாது என கிக் ஆஸை எச்சரித்து விட்டு ஹிட் கேர்லும், பிக் டாடியும் அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்கிறார்கள்.

இதே வேளையில் நகரின் முக்கியமான தாதாவான பிராங், தனது போதைப் பொருட்களை யாரோ சூறையாடுவதையும், தனது அடியாட்களை எவரோ கொன்று போடுவதையும் அறிந்து கோபம் கொள்கிறான். சூழ்நிலைகள் எல்லாம் சேர்ந்து இந்தப் படுபாதகச் செயலை செய்வது கிக் ஆஸ்தான் என்று பிராங்கை நம்ப வைத்து விடுகிறது. கிக் ஆஸின் கதையை எவ்வகையிலாவது முடித்து வைத்து விடுவது என உறுதி கொள்கிறான் தாதா பிராங்……

கொடிய தாதாவான பிராங்கின் போதைப் பொருட்களை அபகரித்து, அவன் அடியாட்களை பரலோகம் அனுப்பி வைக்கும் அந்தப் படு பாவிகள் யார்? ஹிட் கேர்ல், பிக் டாடி எனும் மோஸ்தரான பெயர்களிற்கு சொந்தக்காரர்கள் யார்? அவர்கள் ஏன் தீமையை எதிர்த்துப் போர் புரிகிறார்கள்? அப்பாவி சூப்பர் ஹீரோவான கிக் ஆஸ், தாதா பிராங்கின் கொடிய கரங்களிலிருந்து தப்ப முடிந்ததா?

உங்கள் வாழ்க்கையில் ஒரு கணமாவது இரும்புக்கை மாயாவியாகவோ, அல்லது வேதாள மாயாத்மாவாகவோ மாற நீங்கள் விரும்பியதில்லையா? அல்லது உங்கள் உள் மனதில், உங்கள் கண் முன்னால் தீமை செய்பவர்களை கேப்டன் போலவோ அல்லது இளைய தளபதி போலவோ போட்டுப் புரட்டி எடுக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டதில்லையா? என்ன, அது பெரும்பாலும் அந்த ஆசையுடனேயே நின்று விடும். எம்முன் நடக்கும் அநியாயங்களை பார்த்து உள்ளம் கொதித்தாலும், தட்டிக் கேட்க மனம்[மீசை] துடித்தாலும், ஏதும் பேசாது நகர்ந்து விடுவோம். பிறரிற்கு என்ன நடந்தாலும் அது குறித்து எமக்கு அக்கறையில்லை.

kick-ass-2010-17443-1019486074 தன் கண்களிற்கு முன் நிகழும் தீமைகளை, சூப்பர் ஹீரோ வேடம் போட்டு தட்டிக் கேட்க விரும்பும் அப்பாவி இளைஞன் ஒருவனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை காமெடி கலந்து Kick-Ass திரைப்படத்தில் ரசிக்கும் வண்ணம் எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர் Matthew Vaughn. Kick-Ass எனும் பெயரில் Mark Millar உருவாக்கிய காமிக்ஸ் கதையை தழுவி திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

எந்தவித பயிற்சியுமே இல்லாது மூன்று குண்டர்களுடன் ஒரு இளைஞன் மல்லுக் கட்ட முடியும்! 11 வயதே ஆன சிறுமி ஒருத்தி கொசுக்களை போல் ரவுடிகளைக் கொல்ல முடியும், இருளில் அங்கும், இங்கும், எங்குமாய்ப் பறக்கும் தோட்டாக்கள், ஹீரோ எவர் மீதும் படாது வில்லன்களின் உயிரை மட்டுமே பறிக்க முடியும்! ஒரு மணி நேரத்தில் பறக்கும் இயந்திரம் ஒன்றை இயக்குவது பற்றி அறிந்து கொண்டு, நகரத்தின் மீது பறந்து, வில்லனின் அடுக்கு மாடியிருப்பினை அடைந்து அதனை தவிடு பொடியாக்க முடியும்! இவ்வகையான முடியும்களை நீங்கள் எவ்வித எதிர் கேள்வியும் கேட்காது ஜாலியாக ரசிக்க முடியும் எனில் நீங்கள் தாரளாமாக இப்படத்தை சிரித்துக் கொண்டே பார்க்க முடியும்!

ஆரம்பத்தில் காமெடியாக ஆரம்பித்து, நடுப்பகுதியில் சிறிய தொய்வு பெற்று, இறுதிப் பகுதியில் நம்ப முடியாத அசத்தல் அதிரடி ஆக்‌ஷன் மற்றும் சென்டிமெண்டுடன் நிறைவடைகிறது படம். படத்தைக் காப்பாற்றிக் கொண்டு வருவது படம் நெடுகிலும் ஒடி வரும் நகைச்சுவைதான்.

kick-ass-2010-17443-599943070 Kick-Ass பாத்திரத்தில் வரும் இளம் நடிகர் ஆரோன் ஜான்சன் அற்புதமான தெரிவு. ஒரு சாதரண இளைஞனிற்குரிய ஆசைகளும், கனவுகளும் கொண்ட அவர், தன் சூப்பர் ஹீரோ ஆசையால் நிஜ உலகில் பரிதாபமாக வாங்கும் அடிகள் சிறப்பாக கதையில் காட்டப்படுகிறது. சூப்பர் ஹீரோவாக வேடம் புனைந்து தன் நண்பியை வளைக்க முயலல், உலகில் தீமையின் குரூர முகத்தை அறிந்து கொண்ட பின் சூப்பர் ஹீரோ எண்ணமே வேண்டாம் என முடிவெடுத்தல் என சிரிப்பிற்கு மேல் சிரிக்க வைக்கிறார் ஆரோன். ரெட் மிஸ்டின் காரில் பாட்டிற்கு நடனமாடிக் கொண்டு அவர் வரும் காட்சி சூப்பர்.

ஹிட் கேர்ல், பிக் டாடி ஆகியோரது பாத்திரங்கள் இதற்கு மாறாக அமைந்து இருக்கின்றன. நிஜ வாழ்வில் அவர்கள் தந்தையும், மகளும் ஆவார்கள். பிறந்த நாளிற்கு கத்திகளை மகளிற்கு பரிசாக வழங்கல், துப்பாக்கி தோட்டாக்களின் உதைக்கு மகளை பயிற்றுவித்தல், பார்த்துப் பார்த்து ஆயுதங்களை வாங்கல், சகட்டு மேனிக்கு தீயவர்களை கொன்று குவித்தல் என்று நம்ப முடியாத பாத்திரங்களாக அவை உருப்பெற்றிருக்கின்றன.

kick-ass-2009-17443-1662744509 தனது ஒரே மகளை இப்படியாக ஒரு தந்தை வளர்க்க முடியுமா எனும் கேள்வி எழாமலில்லை. நிஜ உலக வாழ்க்கையில், காமிக்ஸில் உலா வரக்கூடிய தன்மை கொண்ட தந்தை, மகள் பாத்திரங்களை உலவ விட்டிருக்கிறார் இயக்குனர். ஒரு இடத்தில் காமிக்ஸ் கட்டங்களால் கடந்த காலக் காட்சிகள் விபரிக்கப்படுகிறது. ஹிட் கேர்ல் பங்கு பெறும் ஒரு துப்பாக்கி மோதல், வீடியோ கேம் போல் படமாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தந்தை, மகளிடையே வன்முறை மட்டுமல்ல அன்பும் வாழ்கிறது என்பதை சில காட்சிகள் வழி சிறப்பாக காட்டி விடுகிறார் இயக்குனர் மாத்யூ வேன். அதே வேளையில் கண்முன்னே திரையில் நிஜக் கொலை நடந்தாலும், அதனை ஒரு கேளிக்கை நிகழ்சியாக மட்டுமே எடுத்துக் கொண்டு உணர்ச்சியை மட்டும் சிந்தும் நவீன சமுகத்தின் மனப்பான்மையையும் இயக்குனர் கிண்டல் அடிக்கத் தவறவில்லை.

பிக் டாடி பாத்திரத்தில் நிக்கோலாஸ் கேஜ் சிறப்பாக எதனையும் செய்து விடவில்லை. தாதா பிராங் வேடத்தில் வரும் என் அபிமான நடிகர் மார்க் ஸ்ட்ராங்கிற்கும் பெரிதாக வாய்புக்கள் இல்லை. ரசிகர்களின் கண்களையும், வாயையும் அகலத் திறக்க வைப்பவர் ஹிட் கேர்லாக வரும் குளோவேய் கிரேஸ் மொர்டெஸ். சவடாலான பேச்சுக்கள் ஆகட்டும், பல்டிகள் அடித்து, சுவர் மேல் நடந்து, காற்றில் பறந்து அடிப்பதில் ஆகட்டும், கத்தி, துப்பாக்கி வகையறாக்களை சுளுவாக கையாளுவதில் ஆகட்டும், ஆத்தா, இந்தச் சிறுமி அடிக்கும் கூத்து ஆனாலும் கொஞ்சம் ஓவர். இளைய தளபதிக்கு சரியான போட்டி.

திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகளில் காரம் சற்று அதிகமாகவே இருக்கிறது. அதிலும் சிறுமி ஹிட் கேர்ல் வாங்கும் அடிகளின் வலியை அரங்கில் உள்ள பார்வையாளர்கள் உணருமளவிற்கு வன்முறைக் காட்சிகளில் உக்கிரம் நிரம்பி வழிகிறது. பின்னனி இசையும், ஆக்‌ஷன் தருணங்களில் ஒலிக்கும் பாடல்களும் சிறப்பாக இருக்கின்றன.

காதில் நல்ல மல்லிப் பூவாகப் பார்த்து வாங்கி வைத்துக் கொண்டு, லாஜிக்கையெல்லாம் பெரிய மூட்டையாக கட்டி எறிந்து விட்டு இத்திரைப்படத்தைப் பார்த்தால் நிறையச் சிரிக்கலாம், அளவாய் ரசிக்கலாம். Kick-Ass, இன்னும் வலுவாய் இருந்திருக்கலாம். [**]

ட்ரெயிலர்

15 comments:

  1. Me the first.

    பதிவின் தலைப்பை பார்த்துவிட்டு சரி கனவுகளின் காதலர் நல்ல காமெடி பதிவு போட்டிருப்பார் என வந்தால் சற்று ஏமாற்றமே. இருந்தாலும் அருமையான விமர்சனம்

    \\காதில் நல்ல மல்லிப் பூவாகப் பார்த்து வாங்கி வைத்துக் கொண்டு, லாஜிக்கையெல்லாம் பெரிய மூட்டையாக கட்டி எறிந்து விட்டு இத்திரைப்படத்தைப் பார்த்தால் நிறையச் சிரிக்கலாம்\\

    பெரும்பான்மையான தமிழ் படங்களுக்கு இந்த வரிகள் பொருந்தும்

    ReplyDelete
  2. பரவாயில்லை மீ த செக்கண்ட்.. பதிவை வாசித்துவிட்டு வருகின்றேன் மீளவும்.

    ReplyDelete
  3. வித்தயாசமான சுப்ப நசுரல் கதை. விரைவில் இறக்க வேண்டியதுதான் :) பதிவிற்கு நன்றி நணபரே

    ReplyDelete
  4. நல்ல பதிவு. அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கும் போலத் தெரிகின்றது. பதிவிற்கு நண்றி நண்பரே.

    ReplyDelete
  5. நானும் வந்தாச்சு . . . இதோ படித்துவிட்டு வருகிறேன் . .

    ReplyDelete
  6. இலுமி ஆஜர்..... :)

    ReplyDelete
  7. காதலரே,டைட்டில் சூப்பர்.... :)

    ReplyDelete
  8. உங்களுக்கேயுரிய நல்ல நடையில் அருமையான விமர்சனம். படம் பார்க்கும் ஆவல் எழுகிறது காதலரே.

    ReplyDelete
  9. மீ த ............, சரி விடுங்க காதலரே,

    பயணத்தில் இருப்பதால் இன்று முதல் நாம பின்னூட்ட போட்டிக்கு வரவே முடியாது. இது போன்ற படங்களை எல்லாமே பார்த்து விடுவேன். ஏதாவது ஓரிரு காட்சிகளாவது நன்றாக இருக்கும் என்ற ஆசையில். சில வேளைகளில் நிறைவேறியதும் உண்டு.

    ReplyDelete
  10. இந்தப் படத்தைப் பற்றி ஏற்கெனெவே படித்திருந்தேன் . . ஆனால் பார்ப்பதா வேண்டாமா என்று குழம்பிக்கொண்டிருந்தேன். இப்போது, இதைப் படித்த பின்னர், பார்த்தேதீருவது என்ற முடிவிற்கு வந்துவிட்டேன். . அருமை!!

    டைட்டில் படா சோக்காக்கீது நைனா . . !! :-)

    ReplyDelete
  11. நண்பர் சிவ், சில ஆங்கிலப் படங்கள் தமிழ் படங்களை விட மோசமாக இருக்கின்றன :)) காமெடி பதிவை எதிர்பார்த்து வந்த உங்களை ஏமாற்றியதற்காக வருந்துகிறேன். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    மிஸ்டர் ஜே, இறக்கிடுங்கள், பார்த்து மகிழ்ந்திடுங்கள். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் ஹாலிவூட் மயூ, திரைப்படத்தில் ஆக்சனிற்கும், நகைச்சுவைக்கும் குறைவில்லை. படத்தைப் பார்த்து மகிழுங்கள்.

    நண்பர் கருந்தேள், பூச்சுற்றல் எனிலும் நீங்கள் கண்டிப்பாக இப்படத்தை பாருங்கள், நல்ல நகைச்சுவை, கிண்டல், பாடல்கள் என்று ஜாலியாகப் பொழுது போகும். இந்த டைட்டிலிற்கெல்லாம் விருது தர மாட்டாங்களா :)) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் இலுமினாட்டி தங்கள் ஆஜரிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

    நண்பர் சரவணக்குமார், மிக்க நன்றி. வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள், ஜாலியாக பொழுதைக் கடத்திடலாம்.

    விஸ்வா, கண்டிப்பாக பாருங்கள், ஹிட் கேர்லின் துடுக்குத்தனங்கள் உங்களைக் கவரும். நகைச்சுவையும் நன்றாகவே இருக்கிறது. கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  12. விமர்சனம் சூப்பர்

    ReplyDelete
  13. என்னங்க தல.. வெறும் ரெண்டு ஸ்டார் மட்டும் கொடுத்திருக்கீங்க??? :(

    ReplyDelete
  14. // காதில் நல்ல மல்லிப் பூவாகப் பார்த்து வாங்கி வைத்துக் கொண்டு, லாஜிக்கையெல்லாம் பெரிய மூட்டையாக கட்டி எறிந்து விட்டு இத்திரைப்படத்தைப் பார்த்தால் நிறையச் சிரிக்கலாம், அளவாய் ரசிக்கலாம். Kick-Ass, இன்னும் வலுவாய் இருந்திருக்கலாம் //

    ஹி ஹி...என்ன கிண்டல்.காமிக்ஸ் படிக்கிறவிகளுக்கு பிடிக்கும் என்று சொல்லுங்க!

    ReplyDelete
  15. நண்பர் உதயன் அவர்களே, வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

    நண்பர் ஹாலிவுட் பாலா, படத்தைப் பார்த்து விட்டீர்களா? டேவ் எண்ணெய் மசாஜ் செய்யும் போது கேத்தி மட்டும் தன் கைகளை தன் நெஞ்சுகளின் மீது இருந்து விலக்கியிருந்தார் எனில் இதற்கு 5 ஸ்டார் வழ்ங்கியிருப்பேன் :)) வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.

    நண்பர் மயில்ராவணன், காமிக்ஸ் படிப்பவர்களிற்கு மட்டுமன்றி இளைஞர்களையும் கவரும். நாமெல்லாம் இளைய சமுதாயத்தின் கலங்கரை விளக்குகள் அல்லவா :)) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete