Thursday, May 6, 2010

நீ என் அருகில் இல்லாது


கார் விபத்தொன்றில் தன் கணவனைப் பறி கொடுக்கும் பாடகி ஜேன் [Renée Zellweger], அந்த விபத்தின் வழியாக தன் கால்கள் இயங்காத நிலையில் சக்கர நாற்காலியில் தன் நாட்களை கழிப்பதற்கு தள்ளப்படுகிறாள். தனது ஒரே மகனான டெவொனை தகுந்த முறையில் பராமரிக்க முடியாத அவளின் நிலை காரணமாக டெவொனை ஜேனிடமிருந்து பிரித்து, வளர்ப்பு பெற்றோர் வசம் ஒப்படைக்கிறது நகர நிர்வாகம்.

தொலைக்காட்சியைப் பார்த்து பொழுதுகளை விரட்டுபவளாகவும், மதுபான விடுதிகளில் இருக்கும் தனிமையான இருக்கைகளிற்கு துணை தருபவளாகவும், ஜேன் தன் அர்த்தமற்ற வாழ்க்கையை தொடர்கிறாள், தான் வாழும் வாழ்கையின் வெறுமை அவளைப் பாடல்களை இயற்றிப் பாடுவதிலிருந்து விலக்க செய்கிறது. தன் சக்கர நாற்காலியின் சக்கரங்களை தன் கால்களாக உணர ஆரம்பிக்கிறாள் ஜேன். தன் முடங்கிய வாழ்வு மீண்டும் எழுந்து நடக்குமா என்பது அவள் மனதில் நீங்காத கேள்வியாக இருந்து வருகிறது.

ஜேனிற்கு ஜோயி[Forest Whitaker] எனும் நண்பன் இருக்கிறான். அவன் ஒரு முன்னாள் தீயணைப்பு படை வீரன். தன் குடும்பத்தவர்களை தீ விபத்து ஒன்றில் பறி கொடுத்த பின்பாக, மனநிலை சற்று பிறழ்ந்தவனாக ஆகி விடுகிறான் ஜோயி. தேவதைகள் மற்றும் ஆவிகளுடன் பேசும் சக்தி தனக்கிருப்பதாக திடமாக நம்புகிறான் அவன். இதனால் பிறரின் பார்வையில் ஜோயி ஒரு கிறுக்கனாக கணிக்கப்படுகிறான்.

வாழ்க்கையின் சலிப்பின் சிறைக்குள் அடைபட்டுக்கிடந்து, வெறுமையான நாட்களைக் கடக்கும் ஜேனும், ஜோயியும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கிறார்கள். பெரும்பாலான சமயங்களில் தங்களிற்குள் இருவரும் சண்டையும் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் ஜேனின் மீது எப்போதும் அக்கறை கொண்டவனாகவே ஜோயி இருக்கிறான்.

இந்த வேளையில் ஆவிகள் மற்றும் தேவதைகளின் இருப்புக் குறித்து புத்தகங்களை எழுதும் பிரபல எழுத்தாளர் ஒருவர், நியூ ஆர்லியன்ஸ் நகரிற்கு தன் வாசகர்களை சந்திக்க வருவதை பத்திரிகை விளம்பரம் ஒன்றின் வழியாக அறிந்து கொள்கிறான் ஜோயி. அந்த எழுத்தாளரை நேரில் சென்று சந்திக்க விரும்பும் ஜோயி, ஜேனையும் வற்புறுத்தி தன் பயணத்தில் துணைக்குச் சேர்த்துக் கொள்கிறான். உலகில் தேவதைகளுடன் உரையாடுவது தான் மட்டும் அல்ல என்பதை உறுதி செய்து கொள்ள விரும்புகிறான் அவன்.

my-own-love-song-2010-17448-624328077 ஆனால் ஜேனிற்கு சொல்லாது பயணம் குறித்த ஒரு விடயத்தை தன் மனதில் ஜோயி ரகசியமாக வைத்திருக்கிறான். ஜேனிடமிருந்து பிரிக்கப்பட்டு வளர்ப்பு பெற்றோரின் பராமரிப்பில் வாழ்ந்து வரும் ஜேனின் மகன் டெவொன், அவளிற்கு அனுப்பி வைத்திருந்த கடிதமொன்றை திறக்கப்படாத நிலையிலேயே ஜேனின் வீட்டில் ஒரு இரவு கண்டெடுக்கிறான் ஜோயி. தன் தாயை தன்னை வந்து காணுமாறு அந்த மடலில் அழைப்பு விடுத்திருக்கிறான் சிறுவன் டெவொன்.

சிறுவன் டெவொனைக் காண்பதற்காக ஜேனை அவனிடம் அழைத்துச் செல்ல விரும்புகிறான் ஜோயி. ஆனால் பயணத்திற்கு முன்பாக இதை ஜேனிடம் தெரிவித்தாள் அவள் வீட்டை விட்டு நகர மாட்டாள் என்பதை அவன் அறிவான். தன் மகனைத் தன்னால் வளர்க்க முடியவில்லையே என்பது குறித்த குற்றவுணர்வு கொண்டவளாகவே ஜேன் இருக்கிறாள். எனவே டெவொனை பார்க்க செல்வது எனும் திட்டத்தை அவளிடமிருந்து மறைத்து விடுகிறான் ஜோயி. நியூ ஆர்லியன்ஸ் சென்ற பின்பாக ஜேனை எவ்வழியிலாவது சம்மதிக்க வைத்து அவளை டெவொனிடம் அழைத்துச் செல்வது என தன் மனதில் தீர்மானிக்கிறான் ஜோயி. நியூ ஆர்லியன்ஸ் நோக்கி இருவரின் பயணமும் ஆரம்பமாகிறது……

La Vie en Rose எனும் திரைப்படத்தின் வழி பிரபல பிரெஞ்சுப் பாடகியான Edith Piaf அவர்களின் வாழ்க்கையை ரசிகர்களின் உள்ளங்கள் கரைந்து ஓடும் வகையில் திரைக்கு எடுத்து வந்த பிரெஞ்சு இயக்குனர் Olivier Dahan, இம்முறை முடங்கிப்போன ஒரு பாடகியினதும், ஆவிகளுடன் பேசும் அவளது நண்பனினதும், தொலைந்துபோன வாழ்க்கையின் மீட்சியை நோக்கிய ஒரு பயணத்தை திரையில் வடித்திருக்கிறார், மிகவும் நீர்த்துப்போன வகையில்!

my-own-love-song-2010-17448-1148727602 திரைப்படத்தின் ஆரம்பத் தருணங்களிலேயே ஜேன் மற்றும் ஜோயி ஆகிய இரு பாத்திரங்களிலும் ஒன்ற முடியாது ரெனே செல்வெகெரும், ஃபாரஸ்ட் விடெகெரும் திணறுகிறார்கள். அவர்கள் நடிப்பில் கண்கூடாகத் தெரியும் செயற்கைத்தனமும், உணர்ச்சிகளை கவர்ந்திழுக்க தவறும் உரையாடல்களும், காட்சிகளும் ரசிகர்களை இரு பிரதான பாத்திரங்களிலிருந்தும், கதையோட்டத்திலிருந்தும் தொலைவில் தள்ளி வைக்கின்றன. இயக்குனர் ஒலிவியே டாஆன் தன் முன்னைய திரைப்படம் தந்த வெற்றியின் கனவு நிலையிலிருந்து மீளாது திரைப்படத்தை இயக்கியிருப்பார் போலும்.

ஜேனும், ஜோயியும் தங்கள் பயணத்தின்போது சந்திக்கும் முக்கிய பாத்திரங்களாக டீன், பில்லி, பில்லியின் சகோதரியின் குடும்பம், முதிய கிதார் கலைஞன் கால்ட்வெல் [Nick Nolte], இறுதிப் பயணம் மேற்கொள்ளும் ஒரு முதிய ஜோடி, ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

நம்ப வைத்து ஏமாற்றுபவனாக டீன், ஏதுமே கூறாது காணாமல் போய்விட்ட தன் கணவனை தேடி வாடும் பெண்ணாக பில்லி, கத்தரீனா சூறாவளியில் அனைத்தையுமே தொலைத்து விட்டு சட்ட விரோத நடவடிக்கைகளால் தன் வாழ்க்கையை கொண்டோடுபவனாக முதிய கித்தார் கலைஞன் கால்ட்வெல். கதையை சுவாரஸ்யமாக்கியிருக்க வேண்டிய இப்பாத்திரப் படைப்புக்களின் ஆழமற்ற தன்மையும், ஜேன், ஜோயி ஆகியோருடனான இவர்களின் சந்திப்பில் காணக்கிடைக்கும் உயிர்ப்பின்மையும் இப்பாத்திரங்கள் ரசிகர்கள் மீது எந்த ஒரு ஈர்ப்பையும் உருவாக்க இயலாது செய்து விடுகின்றன.

my-own-love-song-2010-17448-141498791 பாத்திரங்கள் பயணம் செய்யும் பாதையில் மிக அழகான இயற்கைக் காட்சிகளையும், மாந்தர்களையும் தவிர்த்து, ஒதுக்கப்பட்ட கிராம மற்றும் நகரப் புறங்களையும், அங்கு வாழும் சராசரி மாந்தர்களையும், இவற்றுடன் ஒட்டி வாழும் சோகத்துடன் படம் நெடுகிலும் காட்டியவாறே பயணிக்கிறது கமெரா.

படத்திற்கு இசை பிரபல பாடகர் Bob Dylan. உச்சக்கட்ட காட்சியில் நடிகை ரெனே செல்வெகெர் பாடும் Life is Hard எனும் பாடல் மனதை பிழிந்து விடுகிறது. ஏனைய பாடல்கள் திரைப்படத்தின் சம்பவங்களுடன் இணைந்து கொள்ளச் சற்றுச் சிரமப்படுகின்றன. பின்னனி இசை மனதை மென்மையாக ஆக்கிரமிப்பு செய்கிறது.

திரைப்படம் நிறைவு பெறாமலேயே சில ரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறிச் சென்றார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளையும், ஏமாற்றங்களையும் என்னால் நன்கு உணர முடிந்தது. எழுத்தாளருடனான சந்திப்பில் ஜோயிக்கு கிடைக்கும் அதிர்ச்சி, தன் மகனுடன் ஜேனின் சந்திப்பு எனும் நெகிழ வைக்கும் உச்சக்கட்ட காட்சிகள் ரசிகர்களின் மனதை நெருங்கி வர முடிந்தாலும் கூட, திரைப்படம் வழங்கிய சலிப்பிலிருந்தும், சுவையற்ற கற்பனைகளிலிருந்தும் ரசிகர்களை மீட்டெடுக்க அவற்றால் இயலாமல் போகிறது. ஒலிவியே டாஆன் இசைக்க விரும்பிய பாடல் வேறு, திரையில் ரசிகர்கள் கேட்கும் பாடல் வேறு. அரங்கிலிருந்து வெளியேறும்போது ஏமாற்றம் மட்டுமே பாடலாக ஒலிக்கிறது. [*]

ட்ரெயிலர்

13 comments:

  1. நீண்ட நாட்கள் பிறகு வந்து முதலில் பார்த்தது நான் தான்

    ReplyDelete
  2. மிக அருமையாக உங்களின் நடையில் விவரித்து உள்ளீர்கள்
    சென்ற மாதத்தில் பதினொன்று பதிவுகள் இட்டு கலக்கிவிட்டீர்கள்
    உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இதோ நான் வந்தாச்சு .. நிதானமாகப் படித்துவிட்டு வருகிறேன் . . .

    ReplyDelete
  4. அன்பு நண்பரே,

    எடித் ப்ளாஃப் வேடத்தை எமிலி எடுத்துச் சென்றது போல இப்படத்தை அவரால் திறம்பட நடிக்க இயலவில்லை என்கிறீர்கள். ரெனே ஸெல்வேகர் காதலினுடனான நகைச்சுவை படங்களில் நடித்தே பழகி விட்டார் என நினைக்கிறேன். ஆயினும் மீ, மைசெல்ப் மற்றும் ஐரீன் படத்தில் எனக்கு ரெனேவின் நடிப்பு பிடிக்கும். ஜிம் கேரியின் நடிப்பிற்கு ஈடாக நடித்திருப்பார்.

    உணர்ச்சி பூர்வமான வேடங்களில் நடிக்க அதனால்தான் திணறுகிறார் போலும். இப்போதெல்லாம் நம்பிக்கை வைத்திருக்கும் இயக்குநர்கள் தொடர்ந்து சொதப்பும் காலம்.

    விடேகர் நல்ல நடிகர். அதற்கு மேல் என்ன சொல்வது?

    இந்த மாதிரி எதிர்பார்த்த திரைப்படங்கள் சொதப்பும்போது அந்த மனத்துயரை நீக்க என்னிடம் ஒரு அட்டகாசமான தீர்வு இருக்கிறது. எவ்வித கேள்வியும் கேட்காமல் பின்பற்றுங்கள். உங்கள் ஏமாற்றம் பஞ்சாக பறந்து விடும்.

    சுறா பாருங்கள்.

    ReplyDelete
  5. எவ்வலவு அழகான ஒரு கதை; எவ்வளவு அருமையாக இதைக் கொண்டுசென்றிருக்கலாம்.. ஆனால், கரெக்டாகக் கோட்டை விட்டுவிடுவார்கள் . . :-) அந்த வரிசையில் இப்படமும் சேர்ந்துவிட்டது போலும் . .

    ரனே ஸெல்விகர் ஒரு ஆண்ட்டியாக மாறிப் பலகாலம் ஆகிவிட்டதோ? நம்ம விட்டேகர், இஞ்சி தின்ற மூதாதையர் போலவே முகத்தை வைத்துக்கொண்டிருப்பார் ஆயிற்றே . .

    ரொம்ப எதிர்பார்த்து பொசுக்கென்று போய்விட்டால், வெல். . கண்ணாடிக் குவளைகள் தான் கதி . . :-)

    நண்பர் ஜோஷ் சொன்னதுபோல், சுறா பாருங்கள். . அதைப்பற்றி எழுதுங்கள் . . :-)

    ReplyDelete
  6. நண்பரே நலமா?
    மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.அருமை

    ReplyDelete
  7. ஆஹா,அப்ப இது சோகப் பாட்டா?

    //சுறா பாருங்கள்.//

    ஆஹா,சோகப் பாட்டுக்கு சுதி சேக்கப் பாக்கறானுங்களே.....சங்கு சத்தம் இல்லாம போக மாட்டாங்க போல.... :)

    ReplyDelete
  8. நல்லதொரு படம்.முடிவு இயக்குனரின் விருப்பம். ஏனோ சமயங்களில் சொதப்புவது இயல்பே!! ‘சுறா’ பார்பதற்கு முன் எல்லா கட்டுரைகளையும் வெளியிட்டுவிடவும்.அதற்கப்புறம் இருப்பீர்களெண்ட நம்பிக்கை எனக்கில்லை. :)

    ReplyDelete
  9. காதலரே,
    அந்த நான்காவது படம் அருமையான ஒன்று. இந்த படத்தை பார்த்தவுடனே Good Will Hunting படம் போஸ்டர் நினைவுக்கு வருகிறது.Good Will Hunting பார்த்து உள்ளீர்களா?

    ReplyDelete
  10. Boss,athukku vimarsanam kooda eluthi irukken. :)
    Arumayaana padam. Oscar vaangi irukka vendiya padam... humm....

    ReplyDelete
  11. நண்பர் சிபி, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    ஜோஸ், விடெகர் மற்றும் செல்வெகர் இருவருமே திறமையான நடிகர்கள். இருப்பினும் டாஆன் அவர்களை சிறப்பான வகையில் பயன்படுத்தவில்லை என்றே நான் கருதுகிறேன். துணைப் பாத்திரங்களின் சறுக்கல்களும் படத்தை ரசிக்க விடாது செய்து விடுகின்றன. சுறா 20 நிமிடங்கள் வரை பார்த்திருக்கிறேன். அருமையான படம். தமிழ்நாட்டு க்ளுனி எனும் பட்டத்தை இளைய தளபதிக்கு வழங்குகிறேன். அவர் டால்பின் போல் பாய்ந்து பாய்ந்து நீந்தும் அழகிருக்கிறதே. சூப்ப்ப்ப்ப்ப்பர். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் கருந்தேள், சரியாகச் சொன்னீர்கள். செல்வெகர் பாட்டி போல்தான் தெரிகிறார். கண்ணாடிக் குவளைகளையும் தாண்டிய அமிர்தம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் சுறா. 20 நிமிடங்களிற்குள் எத்தனை ஆச்சர்யங்கள்! அதிலும் இளைய தளபதி இரு வாரங்கள் கடலில் நீந்திவிட்டு மேக்கப் கலையாமல் வரும் அழகிருக்கிறதே. தூள் டக்கர்... தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் கார்திகேயன், நலமே. மீண்டும் உங்களை காண்பதில் மகிழ்சி. தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, சுறா ஒரு விட்டமின் சூப். லோக்கல் சங்கு அல்ல வெற்றிச் சங்கு. 1400 வீடுகளை கட்டத் துடிக்கும் கட்டத்தில் விஜய்.. ஒ மை லார்ட், வாட் எ பெர்பார்மன்ஸ்.. கருத்துக்களிற்கு நன்றி.

    விஸ்வா, நீங்கள் கூறிய படத்தை பார்த்திருக்கிறேன். நல்லதொரு படம். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    இலுமினாட்டி, சுறாவிற்கு ஆஸ்கார் கிடைக்கும். கிடைக்காவிடில்கூட அது ஒரு அருமையான படமே. அதுவும் விஜய் மீன் குழம்பு வைக்கும் அந்தக் காட்சி. கண்களில் நீரை வரவழைத்து விட்டது.

    ReplyDelete
  12. //லோக்கல் சங்கு அல்ல வெற்றிச் சங்கு.//

    இதுக்கு தான் சுறா பாக்க வேணாம்னு முன்னேயே சொன்னேன்.பாருங்க.இப்போ இப்படி ...

    //அதுவும் விஜய் மீன் குழம்பு வைக்கும் அந்தக் காட்சி. கண்களில் நீரை வரவழைத்து விட்டது. //

    இது வேறயா....

    ReplyDelete
  13. இலுமினாட்டி, உண்மையிலேயே சுறா ஒரு அருமையான படம் நண்பரே. கட்டாயம் பாருங்கள்.

    ReplyDelete