Wednesday, April 3, 2013

அடிக்க முடியா மன்னன் !


வேங்கிக் கோட்டையின் கதவுகள் திறந்தே கிடந்தன! என மன்னன் மகள் நாவலின் இறுதிப்பகுதியின் ஒரு அத்தியாயத்தில் எழுதுகிறார் சாண்டில்யன். கங்கையை கொண்டபின் அரையன் ராஜராஜன் படைகளிற்கும் ராஜராஜேந்திரன் படைகளிற்கும் இடையில் தன் படையைக் காவு கொடுக்க விரும்பாத ஜெயசிம்ம சாளுக்கியன் மேலைச்சாளுக்கியத்திற்கு சோழர்படைக்கு எதிர்ப்பு ஏதும் காட்டாது சென்றுவிட்டதையே அவர் இப்படி எழுதுகிறார். ஆனால் இந்த எதிர்ப்பின்றிய பின்வாங்கலிற்கு காரணம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை கரிகாலன் எனும் கற்பனைப் பாத்திரம் வழியாக தன் நாவலில் தனக்கேயுரிய பாணியில் கூறுகிறார் சாண்டில்யன்.

சூடாமணி விகாரத்திலிருந்து தர்க்க மற்றும் பல சாஸ்திரங்களை கற்று வெளியேறும் கரிகாலன் தன் பிறப்பின் ரகசியம் குறித்து அறியும் ஆவல் கொண்டவனாக இருக்கிறான். அவனின் அந்த தேடலின் குறுக்கே வருகிறாள் வேங்கி நாட்டு மன்னன் மகள் நிரஞ்சனா தேவி. வேங்கி நாடோ சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் ஆதிக்கத்தில். இதை தன் தந்திரத்தால் கரிகாலன் எப்படி முறியடிக்கிறான் என்பது கதையின் கற்பனை இழை. இது ராஜேந்திர சோழனின் பராக்கிரம விஸ்தரிப்பு எனும் வரலாற்று தகவலுடன் இணைந்து ஒரு வரலாற்று சாகச சித்திரமாகிறது சாண்டில்யனின் வரிகளில்.

கதையின் பெரும்பகுதி கரிகாலன் தன் தர்க்க வலிமையால் எவ்வாறாக வேங்கி நாட்டை ரத்தக் களரி அதிகமில்லாது ராஜராஜ நரேந்திரன் கைகளில் ஒப்படைக்கிறான் என்பதை பிரதான இழையாக கொண்டு ஓடுகிறது. அரையன் ராஜராஜன், பிரம்ம மராயன், வந்தியதேவன், ராஜராஜேந்திரன் எனும் முக்கியமான வரலாற்று பாத்திரங்களை தன் தர்க்க சாஸ்திர வலிமையால் கரிகாலன் வென்று செல்வதை இன்றைய வாசிப்பில் புன்னகையுடன் கடந்து செல்ல முடிகிறது. அதேபோல தர்க்கம் புகுந்து விளையாடும் நாவலில் நாம் தர்க்கம் பார்க்க ஆரம்பித்தோமானால் நாவல் நகராது ஆகவே கரிகாலன் மட்டும் நாவலில் தர்க்கம் பேசவிடுதலுடனும் தேடவிடுதலுடனும் நாம் நிற்பதுவே நலமாக இருக்கும்.

வரலாற்று நாவல் எனில் துறவிகள், ஓற்றர்கள் இல்லாமலா! இருக்கிறார்கள் கரிகாலன் பிறப்பு ரகசியம் அவனிற்கு தெரிந்துவிடக்கூடாது என அக்கறை கொண்ட பெளத்த துறவிகள் கூடவே கரிகாலனை எப்படியாவது பழிவாங்கிவிடுவது என அலையும் போலித்துறவி என துறவிகள் நாவலில் அங்கதசுவையை பதித்து செல்கிறார்கள்.

பிறப்பு ரகசியம் கதையின் இறுதிவரை சிறப்பாக கடத்தப்பட்டு இருக்கிறது. அது உடைபடும் வேளை ஒரே உணர்ச்சிகரம்தான். அன்றைய நாட்களில் குமுதம் இதழில் கதையை படித்த வாசகர்களின் மனக்கண்ணீரை இன்று என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. கதையில் வீரம், புத்திசாலித்தனம் போன்றவற்றை தாண்டி தியாகம் தனித்து நிற்கிறது. கரிகாலன் ஏன் கரிகாலன் குடும்பமே தியாகத்தின் வடிவாக சித்தரிக்கப்படுகிறது. வார வாசிப்பில் வாசக நெஞ்சங்களில் கரிகாலனை மறக்க செய்யாத பாத்திரமாக இது நிலைக்க செய்திருக்கலாம்.

காதல் இல்லாத சாண்டில்யனா! வேங்கி நாட்டு மன்னன் மகள் நிரஞ்சனா தேவி, அரையன் ராஜராஜன் மகள் செங்கமலச் செல்வி என இரு பருவ சிட்டுக்கள் சாண்டில்யனின் மகோன்னத வர்ணனைகளில் இன்றைய வாசிப்பிலும் இன்பம் ஏற்றுகிறார்கள். சாண்டில்யனின் கதையில் என்னால் ரசிக்க முடிந்தது அவரின் அடிக்க முடியாத அந்த வர்ணனைகளைத்தான். மனிதர் இரு பக்கத்தில் மார்புகளை வர்ணித்தாலும் களைப்பு அடையாத சிருங்கார வரி யோகி. சிருங்காரம் என்பது சாண்டில்யன் வரிகளில் அழகுறுகிறது அதுவே பலரின் வரிகளில் ஆபாசமாகிறது தேன் குடிக்கும் வண்டா இல்லை சகதியில் அமரும் கொசுவா எனும் கேள்விக்கு வாசகன் சாண்டில்யனின் சிருங்கார வர்ணனைகளில் தேன் குடிக்கும் வண்டாகவே உன்மத்தம் கொள்கிறான். இது அக்காலத்தில் ஆபாசம் என எதிர்க்கப்பட்டது என்பதை நினைக்கையில் இன்று அலெக்ஸ் பாண்டியன் திரைப்படத்திலிருந்து சர்வதேசமெங்கும் ஒலிக்கும் நான் ஒன்னாங்கிளாஸ் படிக்கும்போது எனும் ஒப்பற்ற பாடலை என்னவென்பது.

சாண்டில்யனின் கதைகளில் எனக்கு பிடித்தது கடல் புறா. மன்னன் மகள் அதன் அளவிற்கு இல்லை எனினும் கூட சாண்டில்யனின் தமிழ் இன்னம் சில காலம் நிற்கும். அவ்வகையில் வரலாற்று சாகச நாவல்களின் அடிக்க முடியா மன்னன் அவர்.

8 comments:

  1. அட!
    எப்பவோ படித்த கதை!
    சாண்டில்யன் கதைகளில் நான் படித்ததில் என்னைக்கவர்ந்தது "ராஜமுத்திரை"

    ReplyDelete
    Replies
    1. அவர் கதைகளின் சமீப வாசிப்பில் என்னைக் கவராதது ஜல தீபம் ...... க்ர்ர்ர்ர்ர்ர் :)

      Delete
  2. விஜயமகாதேவி பிடித்திருக்குமே :-D

    சிருங்காரம் சொட்டுமே!

    ReplyDelete
    Replies
    1. அதை எழுதியது சாண்டில்யனா எனும் பலத்த சந்தேகம் எனக்கு உண்டு .... :)

      Delete
  3. உங்களின் இந்த விமர்சனமே இந்த நூலைப் படிக்க தூண்டுகிறது ! ஒரு சிறந்த வாசிப்பாளர்தான் சிறந்த எழுத்தாளர் ஆக முடியும்.

    வலை தாண்டி நீங்கள் எழுத்தும் காலமும் வந்திடும்!

    ReplyDelete
  4. /* வாசகன் சாண்டில்யனின் சிருங்கார வர்ணனைகளில் தேன் குடிக்கும் வண்டாகவே உன்மத்தம் கொள்கிறான் */

    அருமையான வர்ணனை. உன்மத்தம் என்ற சொல் இன்று தமிழ்நாட்டில் பிரபல ஊடகங்களில் கூட வழக்கில் இல்லாதது. [உடனே தீராநதி படித்தீரா எனக் கேட்காதீர் :-)].

    ReplyDelete
  5. ராகவன், இங்கு எழுதுவதே எனக்கு போதுமானதாகவும், திருப்தியானாதாகவும் இருக்கிறது..... அது நீடித்தால் மகிழ்ச்சியே... :) தீராநதிக்கு செல்லாமலே நம்மை நல்ல பல அனுபவங்களிற்கு இட்டு செல்லும் வழிகள் இன்று சாத்தியாமாகி இருக்கிறது.. பயன்படுத்தி பயன் பெறுங்கள்.. :)

    ReplyDelete