Wednesday, April 17, 2013

ஜோன்ஸ் வடை !

முன்பெல்லாம் வீட்டில் எலித்தொல்லை அதிகமாகும்போது எலிப்பொறி எனும் அழிவாயுதத்தின் உதவியை நாடிச் செல்வதென்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. எலிப்பாசனங்கள் எனும் ரசாயான ஆயுதம் அறிமுகமாகியது எலிப்பொறியின் செயற்திறனில் எலியினவழிப்பாளர்களின் நம்பிக்கை குறைவடைய ஆரம்பித்த வேளையிலேதான். மேலும் எலிப்பொறியில் எலியைக் கவர அதற்கு பிடித்த ஏதாவது ஒன்றை லாகவமாக பொருத்தி பொறியை இழுத்துவிட வேண்டும். தேங்காய் துண்டு, வடையின் ஒரு பகுதி போன்றன நம்மூரில் எலிகளிற்கு பிடித்த விடயங்களில் முன்னணியில் இருந்தன. மேற்குலகில் இவற்றிற்கு பதிலாக பாற்கட்டி. இருப்பினும் எலிகளிற்கு புத்தகங்களையும் பிடிக்கும். ஆனால் அவற்றை யாரும் பொறிகளில் வைத்ததாக நான் அறிந்தது இல்லை. இப்படி பொறிகள் வைத்தாலும் அகப்படாது தண்ணி காட்டும் எலிகள் உண்டு. எல்லாப் பொறிகளையும், ரசாயனங்களையும், பூனை போன்ற உயிராயுதங்களையும் தாண்டி வென்று இயற்கை மரணத்தை ஹெமிங்வே எழுதிய நூலொன்றை சுவைத்தபடியே இறந்துபோன எலிகள் வரலாற்றில் உண்டு. மக்லேன், ஹெமிங்வேயை படித்ததாக வான்ஹாம் எழுதியது இல்லை ஆனால் எல்லா வகையான பொறிகளையும் சமார்த்தியமாக கடந்து வெல்லும் ஒரு எலியாக நாம் மக்லேன் மாமா அவர்களை உருவகப்படுத்தலாம்.

எனவே தங்கள் கைகளில் சிக்காது எஸ்கேப்பாகி இயற்கையில் கலந்துபோன மக் மாமாவை அவர் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து வெளிக்கொணர வேண்டுமாயின் அவரிற்கு பிடித்தமான ஒரு பொருளை பொறி ஒன்றில் வைத்தால் போதும் என்பதுதான் XIII - L'Appat  கதையில் USAFE அமைப்பு பிரயோகிக்கும் ராஜதந்திரம். மக்லேன் மாமாவிற்கு பிடித்த பொருள் என்னவென்று தேடியதில் அவர்களிற்கு விடையாக கறுப்பு வைரம் ஜோன்சையும், பொறியை வைக்குமிடம் எது என்பதற்கு பதிலாக ஆப்கானிஸ்தானையும் கதாசிரியர் ஈவ்ஸ் செண்ட் வழங்கியுதவியிருக்கிறார்.

தனக்கு மிகவும் பிடித்தமான காலனல் ஜேம்ஸ், கொடிய தலீபான்கள் கையில் அதுவும் ஒற்றைக்கண்ணுடைய ஒருவரை தலீபான் அணி தலைவராக கொண்ட ஒரு குழுவின் பிடியில் மாட்டிக் கொள்ளும்போது, தலீபான்களும் வீடீயோ கமெராக்கள் வழியாக பயணக் கைதிகள் சிலரின் தலைகள் உருளுவதை வெளியுலகிற்கு அனுப்பி வைக்கும்போது, தன் உயிரிற்கு நெருக்கமான ஜோன்சை மீட்க ஓடிச் செல்கிறார் மக்லேன். மக்லேனை இந்த திட்டத்திற்குள் இழுக்கும் கயிறாக ஜெனரல் காரிங்டன். கதையின் இன்னொரு தளத்தில் Betty மக்லேன் கேட்டுக் கொண்ட சில ரகசியங்களையும், தகவல்களையும் கண்டறிய பயணிக்கிறாள். அவளை அமெரிக்க காவல்துறை, FBI, மற்றும் ஒரு மாஃபியா குழு துரத்துகிறது.

பிரான்சிலிருந்து எந்த சிக்கலுமில்லாது பாகிஸ்தான்
சென்றிறங்கி அங்கிருந்து உள்ளூர் நபர்களின் உதவியுடன் பனிசிஸ்தான் எனும் தலீபான்களின் மலைகோட்டை குகைக்குள் - இங்கு ஆப்கானிஸ்தானும் சரி பாக்கிஸ்தானும் சரி ஏன் அமெரிக்க படைகளும் சரி நெருங்கவே முடியாதாம் - காரிங்டனுடன் நுழைந்து அது USAFE ன் சதி என்பதை மக் மாமாவும், காரிங்டனும் அறிந்து கொள்ளும்வரை கதை என்பது நகைப்பிற்கிடமாகவே இருக்கிறது.  வழமைபோலவே தர்க்கம் எல்லாம் பார்க்காது கதையை படித்திட வேண்டியது ஒன்றுதான் வழி. அதேபோல தனியாளாக Betty நிகழ்த்தும் சாகசங்களை விழுங்கி கொள்ள திமிங்கலமாக இருந்தால் மட்டுமே முடியும். இவ்வளவு வருடமாக இக்கதையை படித்துக் கொண்டு வரும் ஒரு வாசகன் கதையில் இன்னம் கொஞ்சம் நம்பகத்தன்மையுள்ள களத்தையும், நிகழ்வுகளையும், சம்பவங்களையும் சிறிது புத்திசாலித்தனத்தையும் எதிர்பார்த்தால் அது இங்கு கிடைக்காது வேறிடம் பாருங்கள் என அடித்துக் கூறுகிறார் கதாசிரியர் ஈவ் சென்ட்.

ஆப்கானிஸ்தானில் அருமையான ப்ரியாணி ஒன்றை மக் மாமாவிற்கு அறிமுகப்படுத்தும் காரிங்டன், ஜோன்ஸ் தப்பிக்க வசதியாக பாரசூட்டை அவர் தப்பிச் செல்லும் வழியில் வைத்த தலீபான்கள், என் தண்ணீர் பாட்டிலிற்குள் இருப்பது நைட்ரோ கிளிசரின் என மிரட்டி தலீபான்களை நம்ப வைக்கும் காரிங்டன்-- இந்த தலிபான்களைத்தான் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் அமெரிக்க படையினரால் நெருங்கவே முடியவில்லை!!-- தன்னை பலர் பின் தொடரக்கூடும் என்பது குறித்து அதிகம் அலட்டிக் கொள்ளாது மதுவை சுவைத்தபடியே உள்ளாடைகளுடன் ரிலாக்ஸாக ஸாக்காரியாஸ் காத்தவேயின் டைரியை படிக்கும் Betty, இப்படியாக செமையான காமெடிகள் இந்த ஆல்பத்தில் உண்டு.  மேலும் மக்லேன் முக்கியமான ஒரு பொருளை மறைத்து வைத்த டோரதி எனும் பூனை மேஃப்ளவர் எனும் அந்தக் கப்பலின் மாதிரியாக உருவாக்கப்பட்ட கப்பலில் Betty க்காக காத்திருப்பது.... என்ன ஒரு குறியீடு. பின்னிட்டாங்க.

ஒரே ஒரு ஆறுதல் ஜிகுனோவின் சித்திரங்கள். பனிசிஸ்தான் மலைப்பகுதிகளில் அவர் வரைந்து வழங்கியிருக்கும் காட்சிகள் அருமையாக இருக்கின்றன. அவர் சித்திரங்கள் நவீன நுட்பங்களுடன் மெருகேறியிருக்கிறது என்பது தெளிவு.

ஆப்கானிஸ்தானிலேயே மக் மாமாவிற்கு பொறி வைத்த USAFE அவனை தன் பக்கம் இழுத்திட எடுத்திடப் போகும் நடவடிக்கைகளுடனும், மக்லேன் கேட்டுக் கொண்ட தகவல்களை அறிய ரயிலில் பயணிக்கும் Betty யின் புதிர்கள் கோலமிட்ட முகத்துடன் விரையும் ரயிலின் முகத்துடனும் நிறைவு பெறும் இரண்டாம் சுற்றின் இரண்டாம் ஆல்பத்தினை வாசித்து முடிக்கையில் எம் முகத்தில் பூத்திருக்ககூடியது முட்டாள் களை மாத்திரமே !!

12 comments:

 1. வடை என்பது ஒரு பிரசித்தமான வார்த்தை. எல்லா கதைகளிலிலும் ஒரு குறை இருக்கத்தான் செய்யும். சித்திரம் அதை சரி செய்தால் நன்று. இரண்டுமே மொக்கை என்றால்? இப்பொழுது வரும் எல்லா கதைகளிலும் ஆப்கானிஸ்தான் இல்லை என்றால் ஒரு மாபெரும் குற்றம். யாரைத்தான் வில்லனாக காட்டுவது?

  ReplyDelete
  Replies
  1. ம்கூம் நீங்க என்னதான் சொன்னாலும் இது அவ்வளவு ஸ்பீடா தமிழில் வந்திடாது என்றே எண்ணுகிறேன்..... :)

   Delete
 2. ரொம்ப எளிமை நண்பர்களே .... அமெரிக்காவின் அந்தந்த காலங்களின் எதிரிகளை வைத்து கதை வளர்த்து காசாக்குவது தான் மேட்டர்!

  ReplyDelete
  Replies
  1. அமெரிக்கா எதிரிகளை வைத்து காசாக்குவது போல :)

   Delete
 3. நாமும் தலையைக் கழட்டி பார்மலினில் மிதக்க விட்டு விட்டு சில பல ஆண்டுகள் கழித்து எடுத்து மாட்டிக் கொண்டு படிக்க வேண்டியதே!

  ReplyDelete
  Replies
  1. அப்படி எல்லாம் இல்லை.... :)

   Delete
 4. ஷங்கர் இதுக்கு பதிலா Nathan Never படித்திருக்கலாமோ? :-) :-)

  ReplyDelete
  Replies
  1. அதுவும் சுமாராத்தான் இருக்கிறது என்கிறாரே இலுமி :)

   Delete
 5. ஜவ்வு மிட்டாய் :-D

  ReplyDelete
 6. வடையா இருந்தாலும் மசால் வடை தான் எங்களுக்கு பிடிக்கும் ஆமா. :P

  ReplyDelete
  Replies
  1. ச்சும்மா சிவ்காசி மாமி மசாலா போட்டு உங்களிற்கு தந்திட எங்கள் மனம் துடித்திட்ட போதிலும் இடியாப்ப சிக்கல் உள்ள கதையாக இருக்குமோ என இதயம் பல்லாங்குழி ஆடுகிறதே ..... :))

   Delete