Friday, April 19, 2013

நிற்றல்- சரிதல்

1936களில் சீனாவின் தெற்குபகுதியில் அமைந்திருக்கும் Foshan எனுமிடத்தில் ஆரம்பமாகிறது இயக்குனர் Wong Kar-wai ன் திரைப்படமான The Grand Master. கொட்டும் மழையில் தன்னுடன் பொருத வந்தவர்களை எதிர்ப்பவராகவும் திரைப்படத்தின் கதையை இறுதிவரை கூறிச்செல்பவராகவும் அறிமுகமாகிறார் Wing Chun எனும் தற்காப்பு கலைப் பாணியின் கலைஞரான Ip Man. ஆனால் திரைப்படம் இப் மேனை கதை சொல்லியாக கொண்டாலும் அவரை பிரதானமான ஒருவராக அது முன்னிறுத்த விழையவில்லை. கதையின் நாயகன் எனும் மயக்கத்தை தரும் விதமாக இப் மேன் பாத்திரத்தின் ஆதிக்கம் திரையிலிருந்தாலும  கதையானது குங்ஃபூவின் இன்னம் சில ஆசான்களையும் தன்னகத்தே எடுத்துக் கொண்டிருக்கிறது. ஓடிச் செல்லும் காலத்துடன், இப்மேனும் ஏனைய ஆசான்களும், அவர்களின் ஒப்பற்ற கலையான குங்ஃபூவும் எவ்வாறான முடிவுகளை நோக்கி நகர்ந்தன என்பதே திரைப்படத்தின் பிராதான இழையாக என்னால் உணரப்பட முடிகிறது.

ஃபோசானில் மிகுந்த வசதிபடைத்தவராக வாழ்ந்திருந்த இப்மேனின் வாழ்க்கை ஜப்பானிய ஆக்கிரமிப்பின் பின்பாக எவ்வாறான நிலைக்கு தள்ளப்பட்டது. ஹாங்ஹாங்கிற்கு வந்து சேரும் இப்மேன் அங்கு எப்படியான ஒருவராக மாற்றம் கொள்கிறார் எனும் இருபுள்ளிகளிற்கு இடையில், மா சான், கொங் எர், ரேஸர் எனும் மூன்று பேராசான்களின் குங்ஃபூ பாணிகளையும், அவற்றுடன்  பொருதிக் கொள்ளும் அவர்களின் வாழ்க்கையையும் திரைப்படம் விபரிக்கிறது. கூடவே குங்ஃபூ என்பது  நாம் வழமையாக பார்ப்பதுபோல மலிவான சர்க்கஸோ அல்லது ஸ்டண்ட் வித்தையோ அல்லது பணத்திற்காக ஆடப்படும் கேளிக்கை கூத்தோ அல்ல என்பதையும் அது மிக ஆழமாக உணரச் செய்கிறது.

ஒரு குரு தான் ஓய்வு பெறும் நிலையில் தனக்கு பின் ஒருவனை நியமிப்பது வழக்கம். குங்ஃபூ எனும் கலை பல பள்ளிகளையும், பாணிகளையும், ஆசான்களையும் கொண்ட ஒரு பெருங்கலையாகும். இவற்றை ஒரு குடையின்கீழ் கொணர்ந்து சீன தற்காப்பு கலைகளின் பெருந்தலைவராக இருக்கும் பாவோசான், சீனாவின் மேற்குப் பகுதியில் தன் சீடனான மா சானை தனக்கு பின் தலைமைப் பதவிக்கு பொருத்தமானவனாக தேர்வு செய்கிறார். தெற்கு பகுதியின் தலைமைக்காக அவர் தன்னுடன் ஒருவர் பொருதி வெல்ல வேண்டும் என அறிவிக்கிறார். தெற்கு பகுதி குங்ஃபூ ஆசான்கள் அவர்களின் பிரதிநிதியாக இப்மேனை தேர்ந்தெடுக்கிறார்கள். இப்மேன் பேராசான் பாவோசான் அவர்களுடன் தன் நடனத்தை நிகழ்த்துகிறான்.

குங்ஃபூ கரங்களை ஆயுதமாக்குகிறது, சித்தாந்தங்களை தியானமாக்குகிறது, வன்முறை என்பதை வக்கிரம் ஆக்குகிறது, தற்காப்பு கலையினை ஒரு நடனம் போலவே அழகான ஒன்றாக்குகிறது. திரைப்படம் முழுதும் சண்டைக் காட்சிகளிற்கு பதில் அழகான நடனங்களை உருவாக்கி தந்திருக்கிறார் கலைஞர் Yuen Woo-ping. அவர் உருவாக்கி தந்திருக்கும் அந்த நடனக் காட்சிகள் விசிலடிக்க வைக்கவில்லை மாறாக அந்நடனங்களினுள் ஒருவனை தன்னை இழக்க செய்கின்றன, அந்த அசைவுகளின் நளினங்களிலும், அந்த நளினங்கள் பிறப்பிக்கும் உணர்வுகளிலும் கிடைத்திடும் திரையனுபவம் அலாதியானது. இதுவரை திரைகளில் பார்த்த குங்ஃபூ மோதல் காட்சிகளின் வக்கிரம் உறைக்கும் தருணமது. கலையென்பது  கலைஞர்களால் நிகழ்த்தப்படும்போது அதுவும் அதற்கென தம்மை அர்பணித்த கலைஞர்களால் நிகழ்த்தப்படும்போதும் அங்கு உருப்பெறும் ஆத்ம நடனத்தின் ஒரு சிறு சாட்சியாக இப்படத்தின் மோதல் காட்சிகள் உளப்புலன்களிற்கு விருந்தாகின்றன. இயக்குனர் வொங் கார் வாய் அவர்களின் நெறியாள்கையில் அக்காட்சிகள் திரையில் பெறும் பிரசன்னம் உன்னதமான ஒன்றாக இருக்கிறது.

 பேராசான் பாவோசானுடனான இப்மேனின் நடனத்தின் பின்பாக கதை பேராசனின் மகள் கொங் எர் இப்மேனிற்கு விடுக்கும் சவால், அதன் பின்பாக இப்மேனிற்கும் கொங் எரிற்குமிடையில் வாழ்ந்திருக்ககூடிய ஒரு மதிப்புணர்வு மற்றும் சொல்லப்படாத ஒரு காதல், மா சான் இழைக்கும் துரோகம், அந்த துரோகத்திற்கான வஞ்சத்தையும், தன் குடும்பத்தின் கவுரவத்தையும் மீட்க தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும் கொங் எர், ஜப்பானிய ஆக்கிரமிப்பு, ரேஸர் எனும் ஆசானின் கதை, உள்நாட்டு யுத்தம், ஹாங்ஹாங்கில் மூன்று கதாமாந்தர்களின் நிலை என்பதாக கதை பயணிக்கிறது. ஆனால் இதில் என்னைக் கவர்ந்தது கொங் எர் பாத்திரமே. அந்த பெண் கலைஞியின் கதை மட்டுமே இப்படத்தில் முழுமை கொண்டது என்பேன் நான். இப்மேனும் சரி ஏனைய பாத்திரங்களும் சரி குங்ஃபூ எனும் தற்காப்பு கலையின் நகர்வை காலத்தின் ஒரு புள்ளிக்கு எடுத்து வர உதவும் காவிகளாகவே இப்படைப்பில் எனக்கு தெரிகிறார்கள். எனவேதான் அவர்களின் கதைகள் முற்றுப் பெறா ஒரு நிலையை அடைகின்றன. திரைப்படமும் முழுமை காணா ஒரு படைப்பின் அழகு போன்ற அலைகளை மனதிற்குள் நீர்வரிபோல எழுதுகிறது. அந்த அலைவரிகளின் மேல் தம் அற்புதமான திறமையால் அழகு செய்கிறார்கள் நடிகர்கள்.

 வொங் கார் வாய் மிகவும் அழகுணர்ச்சி கொண்ட இயக்குனர். அவர் படைப்பு அழகால் செதுக்கப்பட்டிருக்கிறது. படைப்பின் இன்னொரு ஜீவ நாடி இசை, படைப்பின் உயிர்வண்ணமாக ஒலிப்பதிவு, ஆன்மாவின் சிமிட்டலாக எடிட்டிங். இவ்வாறாக முழுமை தரா ஒரு படைப்பாக இருந்தாலும் அதன் படைப்பில் இவை யாவும் கலந்தே அதை சிறப்பான ஒரு திரையனுபவமாக்குகின்றன. வசனங்களில் கலந்திருக்கும் சித்தாத்தங்கள்  அவற்றை சாதாரண திரைவசனங்களாக கடந்து செல்ல தடைவிதிக்கின்றன. திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் இப்மேனிற்கு ஒரு சிறுவன் சீடனாக வந்து சேருவான். அவன் யார் என்பதை உங்களிற்கு சொல்ல தேவையில்லை. திரைப்படமும் சொல்லாது. வொங் கார் வாய் இம்முறை தந்திருப்பது குங்ஃபூ எனும் தற்காப்பு கலைக்குரிய ஒரு கவுரவத்தை. மிக மிக அழகாக. அது முழுமையாக இல்லை என்றாலும் கூட. நிற்றலிலிம்- சரிதலிலும் இருக்கும் அழகின் உணரனுபவமே அவரின் இப்படைப்பு.
11 comments:

 1. அட்டகாசம்......திருட்டுத்தனமா க்ளாஸ்ல உக்காந்துகினு வாத்திக்கு தெரியாம படிச்சு..கமென்ட் போட்டிருக்கேன்.... சீடனுக்காக தான் இந்தப் படத்தை பார்க்கணும்னு இருந்தேன்....ஆனா குருவின் மேல் பெரிய ஈடுபாட்டை இயக்குனர் வர வெச்சிருவார்னு உங்க பதிவில் இருந்து தெரியுது...அதுசரி, குரு இல்லாதா சீடன் உலகில் உண்டா ?

  ReplyDelete
  Replies
  1. இப்மேன் ஒரு தருணத்தில் தன் கலையை எல்லைகள் தாண்டி எடுத்து செல்ல விரும்புகிறேன் எனக்கூறுவார் அதை அவர் செய்யாவிடிலும் அவர் சீடன் செய்து வைத்தார் எனக் கூறலாம் என நினைக்கிறேன்... இப்மேன் பாத்திரமும் இப்படத்தில் முழுமை பெறவில்லை என்பதே என் கருத்து எனினும் திரையனுபவம் ஏமாற்றம் தராத ஒன்று... பார்த்துவிட்டு எழுதுங்கள்... பவர் ஸ்டாரின் குரு யார் ? :))

   Delete
 2. Wong Kar-wai எனக்கு பிடித்த இயக்குநர்களுள் முதன்மையானவர் எழுத்தில் மட்டுமே கொண்டு வர கூடிய மிக மெல்லிய உணர்வுகளை குறிப்பாக தனிமை / பிரிவு தரும் வலி போன்றவற்றை காட்சி வழியாகவே கொண்டு வரக்கூடியவர். இது ரொம்ப நாளாக எதிப்பார்த்து கொண்டிருக்கும் படம். இங்கு தியேட்டரில் வாய்ப்பே இல்லை இணையத்தில் கூட எதோ மொக்க பிரிண்ட் தான் இருக்கு நல்ல பிரிண்ட் வர வரைக்கும் வெயிட் பண்ண வேண்டியது தான்.

  ReplyDelete
  Replies
  1. திரைப்படத்தில் கொங் எரை இறுதி தடவையாக இப்மேன் சந்திக்கும் காட்சி நீங்கள் எழுதியுள்ளவற்றை பிரதிபலிக்கும். தயவுசெய்து நல்ல பிரதியில் பாருங்கள்.... ப்ளுரே பிரதி எனில் இன்னம் சிறப்பு.... :))

   Delete
  2. http://torrentz.in/28db21baba8211d95ab51d4320fe71d9432b12b0

   இந்த லிங்க் டவுன்லோட் செய்து பார்க்கவும் செம்ம பிரிண்ட்

   Delete
 3. http://torrentz.in/28db21baba8211d95ab51d4320fe71d9432b12b0

  இந்த லிங்க் டவுன்லோட் செய்து பார்க்கவும் செம்ம பிரிண்ட்

  ReplyDelete
 4. தொடருங்கள்..!! வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 5. என்ன காதலரே கொம்பு குதிரை பாகம்3 எப்போது வெளி வரும் என்று விழி மேல் வலி வைத்து காத்திருந்த எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
  எப்ப தான் குதிரை வெளிய வரும், இல்ல வருமா வராதா.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா,,,,, அமைதி அமைதி.... உங்கள் விழி மேல் வலிக்கு ஏமாற்றம் கிட்டவே கிட்டாது... :) வெளியிடும் நாள் சஸ்பென்ஸாக இருக்கட்டும் :))

   Delete