Wednesday, April 3, 2013

ரகசியத்தின் காவலர்கள்


 வாழ்சமூகத்தின் அஸ்திவாரமான நம்பிக்கைகள் மீது ஐயம் உருவாக்கும் வகையில் கற்பனையான தர்க்கவாதங்களை முன்வைத்து அந்நம்பிக்கைகளை சிறிதேனும் ஆட்டம் காணச்செய்யும் உத்தியை வரலாற்றுத் தகவல்களையும், நம்பத்தகுந்த கற்பனை தரவுகளையும் கலந்து உருவாக்கப்படும் வரலாற்று மர்மப்புனைகள் தம்மில் கொண்டிருக்கும். காலகாலமாக நிறுவனங்களால் உறுதியாக்கப்பட்ட அந்நம்பிக்கைகளின் உண்மைநிலை என்ன எனும் கேள்வியையும், பரபரப்புநேச வாசகத்தளத்தில் சுறுசுறுப்பான விமர்சனங்களையும் இவ்வகையான படைப்புக்கள் உருவாக்கவும் செய்கின்றன என்றால் அது மிகையல்ல. சமகாலத்தில் Angels & Demons வழியாக டான் ப்ரவுன் இவ்வகையான புனைவுகளிற்கு ஒரு வாசலை திறந்துவைத்தார். ஆனால் அவர் பிரபலமானது The Da Vinci Code வழியாகவே.

The Guardians of Covenant ஐ எழுதிய நார்வேஜிய எழுத்தாளரான Tom Egeland அவர்கள் 2001 ல் எழுதிய Relic எனும் நாவலிற்கும் 2003 ல் வெளியாகிய டாவின்சி கோட் க்குமிடையில் தகவல் ஒற்றுமைகள் வியப்புதரும் வகையில் உண்டு என்கிறது விக்கி. டாம் எக்லேண்டின் நாவலை நான் படிக்கும்போது என்ன இவர் டான் ப்ரவுன் போல எழுத முயற்சிக்கிறாரே என்ற எண்ணமே என் மனதில் எழுந்தது. ஆனால் டாவின்சி கோட் டில் உள்ள தகவல்கள் உங்கள் நாவலில் உள்ள தகவல்களுடன் ஒத்தவையாக இருக்கிறதே, உங்கள் நாவல் காப்பி அடிக்கப்பட்டது என நீங்கள் எண்ணுகிறீர்களா என டாம் எக்லேண்டிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, நானும் , டான் ப்ரவுனும் நிகழ்த்திய தேடல்களில் கிடைத்த தகவல்கள் ஒத்துப் போவதாக இருக்கிறது அவ்வளவே எனக்கூறியிருக்கிறார் எக்லேண்ட்.

டாம் எக்லேண்டின் கதை ஐஸ்லாந்தில் ஆரம்பமாகிறது. சிரா மக்னேஸ் எனும் மதகுருவின் கைகளில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த ஒரு ஆவணத்தொகுப்பு வந்து சேர்கிறது. அந்த ஆவணத்தொகுப்பில் சில ரகசிய தகவல்கள் இருக்ககூடும் என எண்ணும் மதகுரு தன் நண்பனும் தொல்லியலாளனுமான பிஜ்ஜோர்ன் பெல்டோவை துணைக்கு அழைக்கிறார்.... அங்கிருந்து ஆரம்பமாகும் தேடல் ஐஸ்லாந்து மற்றும் நார்வேயில் உள்ள புராதண ஸ்தலங்களில் ரகசியமாக விட்டு செல்ல்பபட்டிருக்கும் தகவல்கள் வழியாக இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, அமெரிக்கா என ஓடி சென் டாமிங்கோவில் உச்சம் கண்டு, மறுபடியும் எகிப்தில் நிறைவு பெறுகிறது.

சங்கேத எழுத்துருக்கள், புனித வடிவியல் போன்றவை வழியாக ஸ்தலம் விட்டு ஸ்தலம் சென்று சங்கேத மொழி நிபுணர்களின் உதவியுடன் இன்று வாழ்சமூகம் நம்பியிருக்ககூடிய நம்பிக்கைகள் சிலவற்றை சந்தேகத்திற்குள்ளதாக்க விழைகிறார் டாம் எக்லேண்ட்.

அவரின் நாவல் ஆதி நார்வேஜிய கலாச்சாரத்திற்கும் பண்டைய எகிப்திய கலாச்சாரத்திற்குமிடையில் நிகழ்ந்திருக்ககூடிய பரிமாற்றங்களை எடுத்து வருகிறது. கொலம்பஸ் அமெரிக்க கண்டத்தில் காலடி வைக்கும் முன்பாகவே அங்கு வைக்கிங்குகள் சென்றிருந்திருக்கிறார்கள் என நிறுவுகிறது. முரட்டுத்தனமான கொள்ளையர்களான வைக்கிங்குகள் எகிப்து வரையில் பயணித்து அங்கிருந்து மிக முக்கியமானதொருவரின் பாடம் செய்யப்பட்ட உடலொன்றையும், அதனுடன் கூடவே இருந்த ஆவணங்களையும் நோர்வேக்கு இட்டு வந்தார்கள் எனக் கூறுகிறது.... அந்த ரகசியம் மிக முக்கியமான ஒன்றாக பாதுகாக்கப்பட்டும் வந்திருக்கிறது என்பதை விபரிக்கிறது.

கதையின் நாயகன் பிஜோர்ன் பெல்ட்டோ இந்த பாடம் செய்யப்பட்ட உடல் யாருடையது என்பதையும், அந்த ஆவணங்கள் என்ன என்பதையும் தன் தேடல் வழி கண்டடைகிறார். டாம் எக்லேண்ட் உலகின் மூன்று பெருமறைகளின் பிதாவாக இருக்ககூடிய ஒரு பாத்திரத்தின் வரலாற்றை தன் கற்பனையில் பிறிதொன்றாக காட்டுகிறார். புனித நூல்களில் உள்ளவற்றின் ஆதார வேர்கள் என்னவாக இருக்கலாம் என்பதை விளக்குகிறார். இதன் வழியாக முப்பெருமறைகளும் இதுவரை நிறுவியிருந்த நம்பிக்கைகளை மாற்றுப் பார்வையில் நோக்க செய்கிறார்.

 சிறிய சிறிய அத்தியாயங்களுடனும், வரலாற்று தேடல் தகவல்களுடனும், நம்பகத்தன்மை குறைந்த கற்பனை வாதங்களுடனும் உருவாக்கப்பட்டிருக்கும் இந்நாவலானது டான் ப்ரவுன் திறந்து வைத்த வாசல் வழியேயே பயணிக்கிறது. ஆனால் ஆழமும், ஆர்வமும் வாசகனின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்காத வகையில். ஒரு கிண்ணம் திராட்சை மதுவிற்குள் ஒரு ஜாடி நீரைக் கலந்து சுவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது இதன் வாசிப்பு அனுபவம்.

4 comments:

 1. அன்பு நண்பரே,

  ஒரு அலையில் நிறைய பேர் சாகசம் செய்ய நினைக்கிறார்கள். இருப்பினும் உள்ளூர திறமை என்று இருக்கிறதல்லவா? ஐஸ்லாந்தில் ஐஸ் மட்டும் இல்லை என ஒருவர் நிருபீக்க முயற்சி செய்கிறார் என்னும்போது, பாண்டிச்சேரியில்தான் நாகரிகமே ஆரம்பமாயிற்று என நானும் எழுதவிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்..... தலைப்புடனும் ஆரம்ப அத்தியாயத்துடனும் நிறுத்திவிடக் கூடாது.... :)

   Delete
 2. நம்பிக்கை என்பதுதானே அடுத்தடுத்து பயணமாகிறது! தலைமுறைதோறும் சில நம்பிக்கைகள் தோன்றி நிலைப்பதும் நிற்காமல் செல்வதுமாக வாழ்வு சுவை மிகுந்து காணப்படுகிறது! பதிவுக்கு நன்றி நண்பா!

  ReplyDelete