Friday, July 16, 2010

வேட்டைக்காரன்ஸ்


உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கடத்தப்படும் மனிதர்கள் சிலர், அடர்ந்த காடு ஒன்றினுள் வான்குடை மூலம் வீசப்படுகின்றனர். காட்டினுள் வீசப்படும் அந்நபர்கள் கொலைஞன், கூலிப்படை, ராணுவவீரன், ஜப்பானிய யகூஸா என்பவர்களாக தாம் வாழும் உலகில் சக மனிதர்களை வேட்டையாடுபவர்களாக இருக்கிறார்கள்.

அடர்ந்த காட்டினுள் தமக்குள் அறிமுகமாகிக் கொள்ளும் இந்த மனிதர்கள், தாம் வீசி எறியப்பட்டிருக்கும் காடானது பூமியில் இல்லாது வேறு ஒரு கிரகத்தில் அமைந்திருக்கிறது என்பதனையும், அக்காடு ஒரு வேட்டைச் சரணாலயம் என்பதனையும் தெரிந்து கொள்கிறார்கள்.

மேலும் எல்லாவிதத்திலும் தம்மைவிட பராக்கிரமசாலிகளான வேட்டைக்காரர்களால் தாம் வேட்டையாடப்பட்டுக் கொண்டிருப்பதையும் அவர்கள் அறிந்து கொள்கிறார்கள். பராக்கிரமசாலிகளான வேட்டையர்களை அழித்து, பூமிக்கு திரும்பி செல்வதற்கு தாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக செயற்படுவது எனும் முடிவிற்கு வருகிறார்கள் காட்டினில் வீசப்பட்ட அம்மனிதர்கள்….

Predators திரைப்படத்தில் அவர்களின் அயல்கிரக நண்பர்களான ஏலியன்கள் இல்லை என்பது பெரும் நிம்மதி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது மட்டுமே திரைப்படத்தின் நிம்மதியாக இருந்து தொலைத்து விடுகிறது. படத்தில் ஒரே ஒரு பெண் பாத்திரமாக வரும் நடிகை Alice Braga கூட ஒரு நிம்மதிதான் என்பவர்களை பிரிடேட்டர்கள் கடத்திச் சென்று அந்தக் காட்டில் வீசக் கடவதாக!!

மனிதர்கள் குழுவொன்றை காட்டிற்குள் அனுப்பி, அவர்களை கில்லாடி பிரிடேட்டர்கள் தம் இஷ்டப்படி வேட்டையாட வைக்கும் கதை வழியாக, 1987ல் வெளியாகிய Predator திரைப்படத்துடனான தன் உறவுகளை புதுப்பித்துக் கொள்கிறது இத்திரைப்படம். இத்திரைப்படத்தின் பின்னனி இசைகூட 1987ல் வெளியாகிய பிரிடேட்டரின் முதல் பாகத்தையே நினைவிற்கு எடுத்து வருகிறது.

predators-2010-18699-301633450 ஆகாயத்திலிருந்து வான்குடை விரியாத நிலையில் அடர்ந்த காட்டை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் Adrien Brody, மயக்கத்திலிருந்து கண்விழிக்கும் வேகமான காட்சி ஒன்றுடன் ஆரம்பமாகிறது திரைப்படம். பின் படிப்படியாக காட்டின் வெவ்வேறு பகுதிகளில் வீழ்ந்த மனிதர்கள் ஒன்று சேர்வதும், வேற்றுக் கிரகமொன்றில் அவர்கள் உள்ளார்கள் என்பது தெரியவருவதும், பயங்கரமான பிரிடேட்டர்கள் அவர்களில் ஒருவரைக் கூட உயிருடன் விடாது வேட்டையாடிக் கொல்லப்போகிறார்கள் என்பதும் சற்று திகிலுடன் கூறப்படுகிறது.

ஆனால் தத்தமது துறைகளில் மிகவும் வல்லவர்களாக, ரசிகர்கள் மனதில் எதிர்பார்ப்பை உருவாக்கி அறிமுகமாகும் பாத்திரங்கள், பிரிடேட்டரின் பொறிகளிலும், கொடிய தாக்குதலிலும் பரிதாபமாக இறந்து போகிறார்கள். அப்பாத்திரங்கள் தம் அறிமுகங்கள் மூலம் பார்வையாளர்களிடம் விதைத்த எதிர்பார்ப்பை தவிடு பொடியாக்குகிறது தொடரும் ஆக்‌ஷன் காட்சிகள். தம் திறமைக்கேற்ற வகையில் அவர்கள் பிரிடேட்டர்களுடன் பொருதுவதாக காட்சிகள் ஏதும் இல்லை என்பது பெருங்குறை. கொசுவர்த்தி சுருளில் மாட்டும் கொசுக்கள் இவர்களை விட உஷாராக இருக்கும் என்றே தோன்றுகிறது.

படத்தில் புதிதாக, பிரிடேட்டர்களிற்கு வேட்டையில் உதவும் சில செல்லப்பிராணிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஏலியன்கள் படத்தில் இல்லை என்ற மகிழ்ச்சிக்கு இவை திருஷ்டிப் பொட்டு வைக்கின்றன. இவற்றை பார்த்து திகில் வருவதற்குப் பதில், இப்பிராணிகள் முகத்தில் மீசை வரைந்தால் நன்றாக இருக்குமே என்ற சிறுபிள்ளைத்தனமான எண்ணம் தோன்றித் தொலைக்கிறது.

பிரிடேட்டர் என்ற இனத்திற்குள் இருக்கக்கூடிய பகைமை மற்றும் வேறுபாடுகள் படத்தின் திருப்ப புள்ளியாக அமைகின்றன. ஆனால் இத்திருப்பபுள்ளி வலுவிழந்த ஒரு புள்ளியாக மாறிவிடுகிறது. ஏலியன்களை அடிப்பதிற்கு பதில் தமக்குள் அடித்து மகிழ்கிறார்கள் பிரிடேட்டர்கள்.

predators-2010-18699-222700799 வேட்டையாடுபவர்கள் வேட்டையாடப்படுபவர்களாக மாறிவிட்ட ஒரு சூழலில், ஆபத்திலிருக்கும் சகமனிதனை காப்பாற்றுவதா இல்லை தன் உயிரைக் காக்க ஓடுவதா எனும் அறம் சார்ந்த கேள்வி ஒன்று படத்தில் பிரதானமாக முன்னிறுத்தப்படுகிறது. ஆனால் இது மனதை தொடும் வகையில் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை. அப்படிக் காட்சிப்படுத்தியிருந்தாலும்கூட அழுகை வராது என்பது உறுதி.

பத்து வேட்டை பருவங்களாக பிரிடேட்டர்களிற்கு தண்ணி காட்டி அவர்களிடமிருந்து தப்பித்து காட்டில் மறைந்து வாழும் மனிதனாக அறிமுகமாகும் நடிகர் Laurence Fishburne ன் பாத்திரம் எதிர்பார்ப்பை ஜிவ்வென ஏற்றி பின் ஏமாற்றத்தை உடனடிக் காப்பியாக பரிமாறுகிறது. சற்று மனநிலை குழம்பிய நிலையில் உள்ளவராக லாரன்ஸ் பிஷ்பர்னின் நடிப்பு கொட்டாவிக்கு இ மெயில் அனுப்ப வைக்கிறது.

யப்பானிய யகூஷாவும், பிரிடேட்டரும் மழை வருமாற்போலிருக்கும் இரவொன்றில், காற்றில் அசையும் புற்பரப்பினுள் வாள்களுடன் மோதிக் கொள்ளும் காட்சியை கவிதைபோல் உருமாற்ற விழைந்திருக்கிறார் இயக்குனர். அதன் விளைவு மட்டமான கவிதை ஒன்றை சுவைத்த உணர்வைத் தருகிறது.

predators-2010-18699-1549391553 ஆர்னால்ட் ஸ்வார்ஷ்னேகரினை ஈடுகட்ட வேண்டிய பாத்திரத்தில் நடிகர் ஏட்ரியன் ப்ரொடி, தன் உடலை கட்டாக மெருகேற்றியிருக்கிறார். சிட்டுக்களை அவரது கவர்ச்சியான உடல் நிச்சயம் கவரும். ஆனால் கனமான ஆக்‌ஷன் பாத்திரம் அவரிற்கு பொருந்திப் போகவில்லை. இது போதாது என்று இறுதிக் காட்சியில் முதல் பாகத்தில் உள்ளதுபோலவே தன் உடலில் சேற்றைப் பூசிக் கொண்டு நெருப்பைச் சுற்றி, ஓடி ஓடி ஆக்‌ஷன் செய்கிறார் ப்ரொடி. முதல் பாகத்தின் மயக்கமான தழுவல் இத்திரைப்படம் என்று கூறினால் அது மிகையல்ல.

ராபர்ட் ராட்ரிகேஸின் திரைக்கதை அதற்கேயுரிய பத்தணா திருப்பங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஆனால் அந்த பத்தணா திருப்பங்களைக் கூட முன்கூட்டியே ஓரளவு ஊகித்துவிட முடிகிறது. இயக்குனர் Nirod Antal ன் இயக்கத்தில் இந்த திருப்பங்களும் விறுவிறுப்பை இழந்து தவிப்பது ஒன்றும் ஆச்சர்யமான விடயம் இல்லை.

மலிவான கிராபிக்ஸ், மட்டமான ஆக்‌ஷன், சாரமிழந்த அதிரினலின், ஊகித்து விடக்கூடிய திருப்பங்கள் கொண்ட திரைக்கதை, இயக்குனர் நிரோட் அண்டெலின் கால் விட்டமின் இயக்கம் என இந்த Predators திரைப்படமானது, 1987ல் வெளியாகிய முதல் பாகத்தின் அருகில் யாரும் நெருங்க முடியாது என்பதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் பிரிடேட்டர் எனும் பெயரை வைத்துக்கொண்டு மலிவான பட்ஜெட்டில் கொள்ளை லாபம் பார்க்க விழையும் ஸ்டுடியோக்களின் நரித்தனமான மனோபாவத்தையும் அது தோலுரித்துக் காட்டுகிறது. [*]

ட்ரெயிலர்

19 comments:

  1. கண்டிப்பாக திரையில் பார்க்க போவது இல்லை... டோர்றேன்ட் தான்...

    ReplyDelete
  2. காதலரே என்ன நடக்குது இங்கே .......

    நேற்று தான் ஒரு பதிவு போட்டீர்கள் இன்று மறுபடி ஒரு பதிவா :)

    கலக்குங்க

    கலக்குங்க

    .

    ReplyDelete
  3. படம் கேஸ்டிங்கிலேயே படுத்துவிட்டது.

    பாதி படத்தில் சரத் குமாருக்கு பதிலாக தனுஷை நடிக்க வைத்தது போல இருக்கிறது. முதலில் அர்னால்டை தான் ராபர்ட் அணுகினாராம். அவர் மறுத்ததால், இவரை வைத்து இந்த படம் எடுத்தார்களாம்.

    ReplyDelete
  4. கொசுறு தகவல்: படத்தின் அடுத்த பாகத்தில் அர்னால்டை நடிக்க வைக்க இயக்குனர் முயற்சி செய்கிறாராம். (கொய்யால, அப்போ ரெண்டாம் பாகமும் இருக்கோ?)

    ReplyDelete
  5. // கொசுவர்த்தி சுருளில் மாட்டும் கொசுக்கள் இவர்களை விட உஷாராக இருக்கும் என்றே தோன்றுகிறது //

    சூப்பர் பஞ்ச் பா

    .

    ReplyDelete
  6. //இவற்றை பார்த்து திகில் வருவதற்குப் பதில், இப்பிராணிகள் முகத்தில் மீசை வரைந்தால் நன்றாக இருக்குமே என்ற சிறுபிள்ளைத்தனமான எண்ணம் தோன்றித் தொலைக்கிறது.//

    ஹாஹஹா....

    இவனுங்க எப்ப தான் திருந்துவானுங்களோ தெரியல.

    ReplyDelete
  7. நல்லவேளைங்க... ராட்டன்ல 100-ல் ஆரம்பிச்சி படம் வரும்போது 97-ல் இருந்துச்சி.

    போலாமான்னு அர்னால்ட் ஸைஸுக்கு வந்த எண்ணத்தை... எங்க வீட்டுக்கார ப்ரேட்டர் ஒரு பார்வையிலேயே சுட்டு எரிச்சிட்டாங்க.

    அப்பால நானும் பார்ட் 2 வரட்டும்.. அப்ப என் வீரத்தை காட்டுறேன்னு சொல்லி வெய்ட்டிங்ல இருக்கேன்.

    பார்ட் 2 வரட்டும். அப்பத்தெரியும் நான் யாருன்னு!! ஹா....!! ஹாலியா கொக்கா...!

    ReplyDelete
  8. பதிவில் செம காமெடி..!! :) :) :) நல்லா சிரிச்சேன்!!!! :)

    ReplyDelete
  9. இன்று இந்த படத்தை பார்ப்பதாக இருந்தது. இந்த விமர்சனத்தால் தடுக்கப்பட்டது.

    ஆகையால், மறுபடியும் சுறா அல்லது வேட்டைக்காரன் படம் பார்க்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

    ReplyDelete
  10. ராபர்ட் ரோட்ரிகஸா இதற்குத் திரைக்கதை????????? நம்பவே முடியவில்லை ;-(

    ReplyDelete
  11. ஆட்ரியன் ப்ராடி, பாக்குறதுக்கே காமெடியா இருப்பாரே . . அவரப்போயா?? என்ன கொடும சார் இது..

    ReplyDelete
  12. அப்புறம், இந்தப் படத்தை எதுக்குத் திருட்டு டிவிடில பாக்கணும்?? அதான் சன் டிவில தமிழ்ல சீக்கிரம் வரப்போவுதே ;-)

    ReplyDelete
  13. அய்யகோ... இந்தப் படத்தின் க்ராஃபிக்ஸை தமிழ்ல கன்னாபின்னான்னு உல்டா பண்ணி, குட்டிப்பிசாசோட ரெண்டாம் பாகம் எடுக்கப்போறாரு ராம நாராயணன்.. இது தெரியாம, எல்லாரும் இந்தப் படத்தோட ரெண்டாம் பாகம் வரப்போவுதுன்னு காத்துக்கினு இருக்கீங்களே . . .உங்களையெல்லாம் பார்க்கவே பாவமா இருக்கு ;-)

    ReplyDelete
  14. காதலரே,

    நல்ல வேளை இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பதில் இருந்து தப்பித்தேன். சிறுவயதில் ப்ரிடேட்டர் படத்தின் முதல் பாகத்தை பிரமிப்புடன் பார்த்து விட்டு, அதற்கு பிறகு வந்த 2வது பாகம், ஏலியன்ஸ் கூட்டணி என்ற படங்களை பார்த்து நொந்து நூடூல்ஸ் ஆகி இருந்தேன். சரி அர்னால்ட் காவியம் ஆக்கிய அந்த படத்தையாவது விட்டு வைத்தார்களே என்று எண்ணிணால், வழக்கம் போல ரீபூட் போன்றேன் பேர்வழின்னு, இரண்டாவது பார்ட் ரீமேக்கிங் வேறா...

    முதல் பாகத்தில் அஜானுபாகுவான கூட்டணிக்கு பதில் இரண்டாம் பாகத்தில் சோப்ளாங்கி கூட்டணி. ஏலியன்ஸ் சண்டை போட இல்லை என்பதால், சூப்பர் ப்ரிடேட்டர், கிளாசிக் ப்ரிடேட்டர் என்று பிட் வேறு... ட்ரெயிலர்களை பார்த்தாலே படம் ஊத்தல் ரகம் என்று தெரிகிறது.

    ஏலியன் இரண்டாம் பாகத்திற்கு ஏலியன்ஸ் போல ப்ரிடேட்டர்ஸ் என்று பெயர் சூட்டியோதோடு நில்லாமல், கூடவே ஏலியன் போல முயன்று படத்தை சீக்குவலாக எடுத்து தள்ளாமல் இருந்தால் சரி... அதற்கு இப்போதே இந்த படத்தை பாக்ஸ் அவுட் பண்ணிடனும்.

    // கொசுவர்த்தி சுருளில் மாட்டும் கொசுக்கள் இவர்களை விட உஷாராக இருக்கும் என்றே தோன்றுகிறது //
    // இப்பிராணிகள் முகத்தில் மீசை வரைந்தால் நன்றாக இருக்குமே என்ற சிறுபிள்ளைத்தனமான எண்ணம் தோன்றித் தொலைக்கிறது //

    விழுந்து விழுந்து சிரித்தேன். :)

    ReplyDelete
  15. நல்லவேளை பார்க்கலாம் என்று இருந்தேன். பிழைக்கவைத்தற்கு நன்றி . தற்போது வந்த Robin hood-ப் பற்றி .....

    ReplyDelete
  16. நண்பர் ரமேஷ், இதனைப் பார்ப்பதற்கு பதில் பிரிடேட்டர் முதல்பாகத்தை பார்த்து திருப்தியடையுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிபி, சில வேளைகளில் ஏதோ ஒரு உற்சாகம் எங்கிருந்தோ வந்து என் மேல் ஒட்டிக் கொள்கிறது, அவ்வகையான சந்தர்ப்பங்களில் பதிவுகள் இப்படியாக வெளியாகும்.. அதற்கேற்ற ஒய்வும் உண்டு :) தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    விஸ்வா, படத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்திற்கு அச்சாரம் போட்டுத்தான் வணக்கம் போடுகிறார்கள். ஆர்னால்ட் இவ்வகையான திரைக்கதையில் நடிக்கவே போவதில்லை :))சுறா ஒரு ஒலக சினிமா என்பதனை இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் இலுமினாட்டி, இவர்கள் திருந்தி விட்டால் நாம் பதிவெழுத முடியாதே :)) எனவே இது தொடரட்டும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ஹாலிவூட் பாலா, டிவிடியில்கூட பார்க்காதீர்கள் அவ்வளவு மோசம் :)) எப்படி இவ்வளவு தைரியமாக வீட்டிலிருக்கும் பிரிடேட்டர் என்று எழுதிவிட்டு உயிரோடு இருக்கிறீர்கள் :)தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் கருந்தேள், ராபர்ட் ராட்ரிகஸ்தான் திரைக்கதை ஆனால் சொதப்பி விட்டார்கள் :) ராமநாரயணன் எடுக்கும் படம் இதனைவிட சிறப்பாக இருக்கும் என்பது உறுதி. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ரஃபிக், நல்லவேளை தப்பித்தீர்கள் :)) வசூல் பார்க்கவேண்டி, குறைந்த பட்ஜெட்டில் படத்தை கிழித்து விட்டார்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    நண்பர் வேல்கண்ணன், ராபின் கூட் பதிவின் சுட்டி கீழே.. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
    http://kanuvukalinkathalan.blogspot.com/2010/05/blog-post_13.html

    ReplyDelete
  17. நல்ல சரளமான நகைச்சுவை நடை.சுமார் படத்துக்கு கூட சூப்பரா விமரசனம்

    ReplyDelete
  18. நண்பர் சிபி.செந்தில்குமார் அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete