Saturday, July 17, 2010

கொற்கை


ஒரு குறித்த பிரதேசத்தின் ஒரு மாத கால வரலாற்றை எழுதச் சொல்லி என்னிடம் கேட்டால், அது என்னால் முடியாது என்ற பதிலை உடனே கூறிவிடுவேன். எனவே ஒரு பிரதேசத்தின் 86 ஆண்டு கால வரலாற்றை கதை வழி சொல்லிச் செல்வதென்பது என்னைப் பொறுத்தவரையிலும் ஒரு அரிய சாதனையாகும். அச்சாதனையை தனது கடின உழைப்பால் மிகவும் அனாயாசமாக தனது புதிய நாவலான கொற்கையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவர்கள்.

பண்டைக் காலத்தில் முத்து வணிகத்தில் கொழித்து விளங்கிய கொற்கை துறைமுக பிரதேசத்தில் 1914ல் ஆரம்பமாகும் நாவலின் கதையானது 2000 ஆண்டில் நிறைவு பெறுகிறது. இந்த கால இடைவெளியினுள் கொற்கையை சேர்ந்த பரதவர் சமூகத்தில் உருவாகிய மாற்றங்கள், நாடார் சமூகம் கொற்கையின் ஒரு அடையாளமாக மாறியதன் பின்னனியிலிருக்கும் அச்சமூகத்தின் அசுர வளர்ச்சி, கப்பல் வணிகத்தின் முன்னேற்றம், கொற்கையில் கொழித்த பிற தொழில்களின் விருத்தி, கதை நடக்கும் காலத்தில் இடம்பெறும் அரசியலின் முக்கிய நிகழ்வுகள், வெள்ளையர்கள் மற்றும் கத்தோலிக்க மத பிரதிநிதிகளின் உண்மை முகம் என கொற்கையின் உருமாற்றத்தை பிரம்மிக்கத்தக்க வகையில், எண்ணற்ற தகவல்களுடனும் பாத்திரங்களுடனும் கூறிச் செல்கிறார் நாவலாசிரியர் குருஸ்.

கொற்கை பரதவர் சமூகத்தின் மதிப்பு பெற்ற தலைவராகிய தொன்மிக்கேல் பரதவர்ம பாண்டியனின் மரணத்துடன் ஆரம்பமாகிறது கதை. பரதவ சமூகத்தின் மன்னர்களாக விளங்கிய பாண்டியபதிகள் குறித்த வரலாறும், வாய் வழிக்கதைகளும் அவர்களிடம் இருந்திருக்ககூடிய சித்து சக்திகளும் ஆச்சர்யத்தை மனதில் விதைக்கின்றன. பரதவ சமூகத்தில் பிளவை உண்டாக்கி அதன் மூலம் தம் அதிகாரத்தை அவர்கள் மேல் நிலைநாட்ட விரும்பிய வெள்ளையர்கள், கத்தோலிக்க மத பிரதிநிதிகள், அவர்களின் சதிக்கு துணைபோன பரதவ சமூகத்தின் அந்தஸ்து நிறைந்த குடும்பங்கள் என்பவற்றின் அறிமுகங்களோடு நகர ஆரம்பிக்கிறது இப்பெருங்கதை.

தொழில் நுட்ப, இயந்திர வசதிகள் ஏதுமற்ற காலப்பகுதியில், மனித சக்தியையும், தேர்ந்த கடல் அறிவையும், அனுபவத்தையும் கொண்டு நடுக்கடலில் நிலை கொண்ட கப்பல்களிலிருந்து பாரிய யந்திரங்களை தோணிகளில் பொருத்தப்பட்ட விசேட அமைப்புக்களின் துணையுடன் கரைக்கு எடுத்து வரும் கொற்கை பரதவர்களின் அசர வைக்கும் திறமை வெள்ளையர்களை மட்டுமல்ல வாசகரையும் மூக்கின் மேல் விரலை வைக்கத் தூண்டும் சக்தியுடையது. நாவலின் இப்பகுதியை ஆசிரியர் மிகவும் விறுவிறுப்பாக கூறிச்செல்கிறார்.

நாவலின் ஆரம்பத்தில் வரும் கடலோடிகளின் கப்பல் பயண வாழ்க்கை மிகவும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. உரையாடல், வர்ணனை என படிப்பவர்களை கப்பலினுள் இருக்கும் ஒரு பார்வையாளனாக ஆக்கி விடுகிறார் குருஸ். அவர்களின் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், பலவீனங்கள், சிக்கல்கள், வன்முறை, குடும்பம், சாகசம் என அனைத்துக் குறித்தும் நேர்மையான பார்வையை நாவலின் அப்பகுதி வழங்குகிறது.

பரதவ சமூகத்தை சேர்ந்த தல்மெய்தா, ரிபேரா, சிங்கராயம், பல்டேனா ஆகிய அந்தஸ்து நிறைந்த குடும்பங்களின் பொற்காலத்தையும், கால ஓட்டத்தில் அக்குடும்பங்களினதும், குடும்ப வாரிசுகளினதும் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் இயல்பாக எடுத்துச் சொல்கிறது கதை. கதையின் நெடுகிலும் இக்குடும்பங்களை மட்டும் முன்னிறுத்தி அவர்கள் கதையைக்கூறாது, நாவலில் இடம்பெறும் வெவ்வேறு பாத்திரங்களின் உரையாடல்கள் வழியாக இக்குடும்பங்களின் கதை சொல்லி முடிக்கப்படுகிறது. நாவலில் அறிமுகமாகும் சில பாத்திரங்கள் கதையோட்டத்தில் மாயமாக மறைந்து போய்விடுகிறார்கள். ஆனால் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை நாவலில் பின்பு எங்கோ வரும் ஒரு வரியானது மறக்காது சொல்லிவிடுகிறது.

பரதவர்களின் கப்பல் ஓட்டத்தை தமது வணிகத்திற்கு ஆதாரமாக கொண்டிருந்த நாடார் சமூகம், எவ்வாறு கப்பல் வணிகத்தில் கால் நனைத்தது என்பதனையும், கொற்கைப் பிரதேசத்தில் நாடார் சமூகத்தினரின் பிரம்மிக்கத்தக்க வளர்சியையும் அதற்கான காரணங்களையும் மிகவும் நேர்மையாக தன் நாவலில் வழங்கியிருக்கிறார் குருஸ். நாடார் சமூகத்தில் தளைத்தோங்கிய ஒற்றுமையையும், பரதவ சமூகத்தில் நிலவிய ஒற்றுமையின்மையையும் கதை தெளிவாக காட்டுகிறது. நாவலின் இறுதிப்பகுதியில் நாடார் சமூகத்தில் கூட போட்டி, பொறாமை அதிகரித்து அவர்களிற்கிடையில் முன்னொரு காலத்தில் நிலவிய ஒற்றுமையானது விரிசல் கண்டு விட்டதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

பரதவ சமூகத்தில் நிலவிய ஒற்றுமையற்ற சூழலினால் உருவாகிய பல்வேறு சங்கங்கள், அச்சமூகத்தின் நலனை முன்னெடுப்பதற்குப் பதிலாக தம் சுயநலப்போக்கால் அச்சமூகத்தின் நலனைக் எவ்வாறு குழி தோண்டிப் புதைத்தன என்பதும் நாவலில் கூறப்படுகிறது. கத்தோலிக்க மத பிரதிநிதிகள் எவ்வாறு படிப்பறிவு இல்லாத பரதவர்களை சுரண்டினார்கள் என்பதனையும், குருக்கள், ஆயர்கள் எனும் போர்வைக்குள் ஒளிந்துகொண்டு மக்களிற்கு சேவை செய்வதற்கு பதிலாக சொகுசான சுகவாழ்வு வாழ்ந்ததையும் எந்த தயக்கமுமின்றி நாவலில் விபரிக்கிறார் குருஸ்.

நாவலின் மையமான கொற்கைத் துறைமுகமானது, காலநகர்வில் மனிதர்களைப் போலவே தன் முகத்தை மாற்றி மாற்றி தன்னைப் புதுப்பித்துக் கொள்வதையும், துறைமுகத்தின் அபிவிருத்தியால் கொற்கை பிரதேசத்தில் உருவாகிய அபரிமிதமான மாற்றங்களையும் சுவைபட நாவலில் எடுத்துரைக்கிறார் கதாசிரியர்.

joe-d-cruz நாவலில் இடம்பெறும் பாத்திரங்கள் யாவரையும் மனதில் இருத்திக் கொள்ளல் என்பது சிரமமான ஒன்றாகும். லிடியா, ரஞ்சிதா, சலோமி, மதலேன், பாக்கியம் போன்ற பெண்பாத்திரங்கள் அதிர்வையும், மனநெகிழ்வையும் தருபவையாக உருவாகி நிற்கின்றன. பரதவர் சமூகத்தின் பெண்களின் கண்ணீர் வரலாறு அவர்களின் வளர்ச்சியுடன் கைகோர்த்துப் பயணிக்கிறது. ஆனால் கதையில் வாசகர்களின் மனதில் இலகுவாக வந்து ஏறி விடும் பாத்திரம் பிலிப் தண்டல் பாத்திரமாகும்.

கப்பலில் எடுபிடியாக வேலைக்குச் சேர்ந்து பின் பெரும் முதலாளியாக உருவாகும் பிலிப் தண்டல் பாத்திரம் நாவலின் நடுப்பகுதியில் மெதுவாக மறைந்து போய்விடுகிறது. நாவலினை தொடர்ந்து இழுத்துச் செல்லும் பிற பாத்திரங்கள் வழியாக, பிலிப் தண்டல் மீது நாம் கொண்டிருந்த அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் தகவல்கள் வந்து விழுகின்றன. இருப்பினும் இப்பிரம்மாண்டமான நாவலை வாசகனின் மனதைக் கனக்க வைத்து நிறைவு செய்து வைப்பவர் பிலிப் தண்டல்தான்.

கதைமாந்தர்கள் மீது வாசகர்கள் உணர்வுபூர்வமாக மயங்காத வகையில் கதையை கூறிச்செல்கிறார் குருஸ். ஆனால் நாவலின் சில தருணங்கள் அந்த இடத்திலேயே வாசகனின் மனதை கலங்கடிக்க வைக்கின்றன. மிகையலங்கார சோடனை சொற்கள் அற்ற குருஸின் எளிமையான வரிகளில் பொதிந்திருக்கும் கவர்ச்சி, அவரிற்கேயுரிய தனிச்சிறப்பாகும். நகைச்சுவையும், எள்ளலும் நிறைந்த வட்டார மொழி உரையாடல்களை படிப்பதே தனிசுகம். நாவல் முழுவதையும் வட்டார மொழிகள் அலங்காரம் செய்கின்றன. குறிப்பாக மன்னர் ஒருவர் வளர்த்த நாய் மன்னரிற்கு மாமா முறையாகும் கதை நாள் முழுக்க சிரிக்க வைக்கிறது. ஓவியர் ஆலிவர் வரைந்திருக்கும் நாவலின் அட்டைப்படம் மிகவும் எளிமையான ஒன்று. பாதி தோணியும் பாதி சரக்கு பெட்டக கப்பலுமாக சிலுவையுடன் தோற்றமளிக்கும் அச்சித்திரமே நாவலின் கதையை சுருக்கமாக கூறிவிடுகிறது.

நீண்ட பெருங்கதையின் நடுப்பகுதியில் ஏற்படக்கூடிய ஒரு சிறிய அயர்ச்சியானது நாவலின் பிற்பகுதியால் இல்லாது ஆக்கப்படுகிறது. ஐந்து வருட கடின உழைப்பில் இந்நாவலை உருவாக்கியிருக்கிறார் ஜோ டி குருஸ். நான் இன்றுவரை கண்டிராத, கால் பதித்திராத கொற்கை, நாவலின் முடிவில் என் மனதில் பிரம்மாண்டமாக விரிகிறது. இதனை நிகழ்திக்காட்டக்கூடிய ஒரு எழுத்தாளன் சாதாரணமான ஒருவன் அல்ல. தன் வரிகளால் வாசகன் மனதில் அவன் தன் படைப்பை செதுக்கி, வாசகனையே அதனை அழகு பார்த்து ரசிக்க வைக்கும் கலைஞன் அவன். கொற்கையைப் போலவே ஜோ டி குருஸ் என் மனதில் பிரம்மாண்டமானவராக உருப்பெறுகிறார். ஆழி சூழ் உலகின் வெற்றி குருட்டு அதிர்ஷ்டம் அல்ல என்பதனை கொற்கை நிரூபிக்கிறது. தமிழ் நாவல் இலக்கியத்தில் ஜோ டி குருஸின் பெயர் மறக்கப்படாத ஒன்றாக இருக்கும். [***]

21 comments:

 1. காதலரே,

  வரலாறு எனக்கு பள்ளிக்கால பாட புத்தகங்களில் வெறுப்பான ஒரு சமாச்சாரமாக தான் இருந்தது, ஆனால், பிற்பாடு அவைகளை உளமார்த்தமாக ரசித்து படிக்கையில் அவைகளில் திளைத்திருக்கிறேன். உலக போர்கள், மற்றும் மேற்கத்திய ராஜாங்கங்களை பற்றி படிக்கையில், இப்படிபட்ட கதை சொல்லலுடன் நமது வரலாறை ஏன் நாம் அதிகம் பார்ப்பதில்லை என்று எண்ணி இருக்கிறேன்.

  உங்கள் விமர்சனம் மூலம் கொற்கை அந்த வித எதிர்பார்ப்பை முடித்து வைக்கும் என்று தெரிகிறது. குரூஸின் உழைப்பிற்கு உங்கள் விமர்சனம் மணிமகுடம். விரைவில் படித்து விட முயல்கிறேன்.

  நீங்கள் கூறிய அந்த அட்டை ஓவிய விவரிப்பை, வெளியிட்டிருக்கும் முன் அட்டையில் தேடி பார்த்து கலைத்து விட்டேன். ஒரு வேளை நம்
  ஞான கண்ணுக்கு தெரியவில்லையோ என்று நினைத்தேன்... அது பின்னட்டை ஓவியம் தான் என்று சொல்லி என்னை சந்தோஷபடுத்துங்கள்,,, ப்ளீஸ் :)

  பி.கு.: தமிழகத்தின் பழமை பொருந்திய சமூகங்களின் ஒற்றுமை மூலம் கிடைத்த வெற்றி, மற்றும் வேற்றுமை மூலம் உருவான வீழ்ச்சியை தைரியமாக கூறியிருக்கும் எழுத்தாளரின் எழுத்துகளுக்கு மதிப்பு கொடுத்து உண்மை நிலையை உணராமல், அவர் தம் சமூகத்தை கிளறி விட்டார் என்று எவரும் இப்புத்தகத்திற்கு எதிர்ப்ப்பு தெரிவிக்கா வண்ணம் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்கிறேன்..

  உண்மை சில நேரம் உறைக்க தான் செய்யும்... அதை ஒப்புக் கொள்வதில் தான் சமுதாய முன்னேற்றம் அடைய முடியும் என்பது நிதர்சனம்.

  ReplyDelete
 2. அன்பு நண்பரே,

  நிறைவான விமர்சனம். பரதவர்களின் வாழ்க்கைநிலையை இவ்வளவு கிட்ட நெருங்கிய நாவல்களில் இதுவும் ஒன்று. நிறைய விமர்சனங்கள் இதற்கு வரவில்லை என நினைக்கிறேன். ஜெயமோகன் பிரமாதமான கட்டுரை இதைப்பற்றி எழுதியிருக்கிறார். ஒருவேளை அதற்கு அப்புறம் வேறு என்ன எழுதுவது என்ன மற்ற எழுத்தாளர்கள் நினைத்து விட்டார்களோ என்னவோ,

  நீல பின்னணியில் அட்டைப் படமும் இரசிக்க தக்கதாக இருக்கிறது. ஒவியர் ஆலிவர் கதையை இரசித்தபின்பே வரைந்திருக்க வேண்டும். பிலிப் தண்டல் மறக்க முடியாத பாத்திரம். அவரின் காதலும் அப்படிதான்.

  ReplyDelete
 3. //பி.கு.: தமிழகத்தின் பழமை பொருந்திய சமூகங்களின் ஒற்றுமை மூலம் கிடைத்த வெற்றி, மற்றும் வேற்றுமை மூலம் உருவான வீழ்ச்சியை தைரியமாக கூறியிருக்கும் எழுத்தாளரின் எழுத்துகளுக்கு மதிப்பு கொடுத்து உண்மை நிலையை உணராமல், அவர் தம் சமூகத்தை கிளறி விட்டார் என்று எவரும் இப்புத்தகத்திற்கு எதிர்ப்ப்பு தெரிவிக்கா வண்ணம் இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து கொள்கிறேன்..//

  சென்ஷி நல்ல விமர்சனத்தில் இது தேவையா? எடுத்துக் கொடுப்பது போலுள்ளதே?

  ReplyDelete
 4. வேலரே, அப்படி எண்ணம் யாருக்கும் வந்து விட கூடாது என்ற பயத்தில் தான் அப்படி கூறினேன். ஆனால், குரூஸின் இந்த பேட்டியில், அது உண்மையாக நடந்து கொண்டிருப்பது புலப்படுகிறது. ஆனால், அவற்றை பற்றி அஞ்சாத அவர் முடிவு பெருமைபடவைக்கிறது. எழுத்தாளர் க்ரூஸ் மேம்மேலும் இப்படிபட்ட சரித்திர நிகழ்வுகளை அவர் எழுத்துகள் மூலம் நிதர்சனத்திற்கு கொண்டு வர வேண்டும் எனபது என் ஆவலும் கூட.

  ஒரு வேளை நான் எடுத்தே கொடுத்திருந்தாலும் அதை மதித்து தமிழ்நாட்டில் யார் பிரச்சனை செய்ய போகிறார்கள்... காமடி பண்ணாதீர்கள் வேலரே :)

  பதிவை சார்ந்த மற்ற மீள் வாசிப்பில், இந்த பதிவு கிடைத்தது.... சரித்திர புகழ் வாய்ந்த கொற்கையில் தற்போதைய ஈழ் நிழை... அரசாங்க தமிழ் ஆர்வலர்களை கேள்வி கேட் வைக்க கூடும்.

  ReplyDelete
 5. பகிர்வுக்கு நன்றிங்க. நான் இன்னும் ஆழி சூழ் உலகே படிக்கல. படிச்சிட்டு சொல்றேன்..

  ReplyDelete
 6. அன்பின் கனவுகளின் காதலன் அவர்களே..

  மிக அருமையான நூலைப்பற்றிய நல்லதொரு விமர்சனப் பார்வையை முன்வைத்ததற்கு மிக்க நன்றி.

  கொற்கை, ஆழிசூழ் உலகு இரண்டுமே தமிழ் நாவல் பரப்பிப் மிக முக்கியமான நாவல்களாகும்.

  ஜோ.டி.குரூஸ் அவர்களின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

  ReplyDelete
 7. நல்ல புத்தகம் . நல்ல முறையில் விமர்சிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 8. http://www.saravanakumaran.com/2010/05/blog-post.html

  ReplyDelete
 9. நண்பரே... இந்நாவலைப் பற்றி நீங்கள் சொல்லியுள்ள விஷயங்கள், நெஞ்சைத் தொடுகின்றன... எப்பொழுதுமே, இதைப்போன்று ஒரு சமூகத்தின் வரலாற்றையும், அவர்களது துயரங்களையும் எடுத்துரைக்கும் படைப்புகளின் மீது எனக்கு ஒரு கண் உண்டு..

  இப்புத்தகத்தைப் பற்றிக் கேள்வியே பட்டிருக்கவில்லை. கட்டாயம் படித்து விடுவேன் என்று நினைக்கிறேன்..

  அட்டகாசமான இந்தப் புத்தக விமர்சனத்துக்கு நன்றிகள். . தொடரட்டும் புத்தக விமர்சனங்கள்..

  //பரதவ சமூகத்தில் நிலவிய ஒற்றுமையற்ற சூழலினால் உருவாகிய பல்வேறு சங்கங்கள், அச்சமூகத்தின் நலனை முன்னெடுப்பதற்குப் பதிலாக தம் சுயநலப்போக்கால் அச்சமூகத்தின் நலனைக் எவ்வாறு குழி தோண்டிப் புதைத்தன என்பதும் நாவலில் கூறப்படுகிறது//

  இதுதான் தற்போது நிதர்சனமாக நடந்து வரும் ஒரு விஷயம் . . ஹூம்ம்...

  ReplyDelete
 10. 'ஆழி சூழ் உலகு' ஒரு சிறந்த நாவல் என்பதில் ஐயம் இல்லை. அதில் இருந்த அளவு readability 'கொற்கை' நாவலில் இல்லை என்றுதான் சொல்லப்படவேண்டும். என்றாலும் ஆசிரியரின் உழைப்பு பாராட்டப்பெற வேண்டும்.

  தொடக்க காலத்துப் பாண்டிய மன்னர்கள் பரதவ குலத்தவராக இருந்திருக்கத்தான் கூடுதல் வாய்ப்பு. ஆனால் தூத்துக்குடியை ஏன் கொற்கை என்கிறார்? இந்த முன்முடிவுக்கு வந்துவிட்டதாலோ என்னவோ தூத்துக்குடிக் கடலைவிடக் கூடுதல் ஆழம் உள்ள புன்னைக்காயல் துறை - அதாவது தண்பொருணை(தாம்ரபர்ணி) புகுமிடம் - ஆய்வாளர்களால் புதிய துறைமுகத்திற்காகப் பரிந்துரைக்கப் பட்டபோது (ஆங்கிலத்தில் வாசித்து இருக்கிறேன்) அதை வென்ற தூத்துக்குடிப் பெருந்தலைகளின் அரசியல் நாவலில் பேசப்படவில்லை.

  மற்றபடி, நான் கேள்விப்பட்ட வெட்டுக்குத்து ஆண்டியில் இருந்து, ஓர் இருபது ஆண்டு காலம் நானும் அங்கு வாழ்ந்து கண்ட தூத்துக்குடிப் பட்டினத்தைப் பற்றிய சிறந்த ஆவணமாகவே இந் நாவலைக் மதிக்கிறேன்.

  ReplyDelete
 11. ரஃபிக், பாடங்களில் எதைத்தான் விரும்பிப் படித்தோம் :) அதுவும் வரலாறு என்றால் வேப்பங்காய் அல்லவா. ஆனால் அதுவே எமக்கு பிடித்த ஒரு வடிவில் வரும்போது அதுவே எமக்கு குந்தவியின் இதழ்கள் போல் இனிக்கிறது :) நீங்கள் ஊகித்ததுபோலவே பின்னட்டையில் ஓவியர் ஆலிவரின் சித்திரம் நீண்டு செல்கிறது. தங்கள் முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே. நாவல் என்றாலே காததூரம் ஒடும் உங்களை முதன்மைக் கருத்திட வைத்த குந்தவி வாழ்க வாழ்க :)

  ஜோஸ், மிகவும் சிறப்பான நாவல். நிறைய எழுதலாம். எவ்வளவு தகவல்கள், உணர்வுகள். நாவல் திருப்தியை தந்தது என்பதே இங்கு முக்கியமான ஒன்று. அவ்வகையில் குருஸ் தரமான ஒரு நாவலாசிரியராக மிளிர்கிறார். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் வடகரைவேலன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. நண்பர் ரஃபிக்கின் கருத்துக்களின் நோக்கம் அதுவல்ல :))

  நண்பர் எம் எஸ் கே, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. கண்டிப்பாக ஆழி சூழ் உலகையும், கொற்கையையும் நீங்கள் படித்து விட்டு உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

  நண்பர் சரவணக்குமார், ஆம் மிகவும் கடினமன உழைப்பில் வெளிவந்திருக்கும் நாவல் இது. அந்த உழைப்பிற்காகவேனும் இந்நாவலை நண்பர்கள் வரவேற்க வேண்டும். நீங்கள் கூறியது போலவே அவர் இரு நாவல்களும் முக்கியமானவையே. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  மதுரை சரவணன், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் கருந்தேள், 86 வருட கதையை கதையில் வடித்திருக்கிறார் ஆசிரியர். உங்களிற்கு நேரம் கிடைக்கும் காலத்தில் ஆசிரியரின் இரு நாவல்களையும் நீங்கள் படித்திட வேண்டும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் ராஜசுந்தரராஜன், நாவலில் உள்ள விபரங்களைத் தவிர கொற்கை பிரதேசம் குறித்து நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. ஆனால் உங்கள் கருத்துக்கள் எனக்கு புதிய தகவல்களை அறிய வைக்கிறது நன்றி. ஆழிசூழ் உலகை விட இதில் தகவல்களின் செறிவும், பாத்திரங்களின் எண்ணிக்கையும், உணர்வுபூர்வமாக கதையை நகர்த்தாத தன்மையும் உண்டு[ இருப்பினும் மனதை நெகிழ வைக்கும் தருணங்கள் இல்லாமல் இல்லை]. இருப்பினும் நாவலினை வாசித்து முடித்தபோது எனக்குள் ஏற்பட்ட பிரமிப்பு ஆழி சூழ் உலகின் வாசிப்பை விட அதிகமாகவே இருந்தது.தமிழ் நாவல் உலகில் இது ஒரு சாதனை என்பேன். நீங்கள் அப்பிரதேசத்தில் வாழ்ந்தவர் எனும் வகையில் உங்கள் கருத்துக்களே குருஸின் நாவலிற்கு மேலும் பெருமை சேர்க்கிறது. மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 12. நீங்க எப்புடிங்க இவ்ளோ பெரிய புத்தகத்தையெல்லாம் அநாவசியமா படிச்சு முடிக்கிறீங்க? இந்த புத்தகம் வெளியீட்டு விழாவன்று நான் புத்தக கண்காட்சிலதான் இருந்தேன். விலையையும் புத்தக அளவையும் பார்த்துவிட்டு வாங்காம வந்துட்டேன். ஒண்ணு வாங்கிர வேண்டிதான்.

  ReplyDelete
 13. முதலில் உங்களுக்கு பாரட்டுகளும் நிறைய அன்பும். தமிழ் நாவலை அதுவும் மிக சிறந்த நாவலை நீங்கள் எடுத்துகொண்டது. முன்பே சிறந்த தமிழ் நாவலாக குருசின் 'ஆழி சூழ் உலகு ' உள்ளது. யாரும் தொடாத களம் ஆகியனாலே அது சிறந்த நூலாக உள்ளது என்ற கூற்று உள்ளது. இந்த கூற்றை அந்த நாவலை படித்த நம்மை போன்றவர்கள் ஒருபோதும் ஏற்று கொள்ள மாட்டோம். அவரின் இரண்டாவது நாவல் மறுபடியும் நிருபித்து உள்ளது அவரின் கடுமையான உழைப்பை. அவர் எழுதிய இரண்டு நூலுமே தமிழில் சிறந்த நூல் என்பது சாதாரணமான விஷயம் அல்ல. இந்த நாவலை
  உருவாக்கியதின் பின்னணியில் வலிகள் பல நிச்சயம் இருக்கும். அந்த வலிகள் பற்றி தனி நூலாகவே குருஸ் எழுதலாம்.
  எனது நண்பர் நீங்கள் என்ற உரிமையில் இந்த பதிவை சார்ந்து மூன்று கருத்துகளை பகிர்ந்து கொள்கிறேன். முதலில் (அன்பு)கண்டிப்புடன் : கொற்கை - யில் இன்னும் ஆழம் சென்று இருக்கலாம் நீங்கள்.
  இரண்டு: ஆழி சூழ் உலகு - பற்றியும் எழுதலாமே ..
  மூன்று : இது போன்று ஆகச்சிறந்த நூல் (உங்களிடம் இருக்கும்
  என்ற நம்பிக்கையில்) பற்றி பதிவு போடலாமே
  பொதுவாக : ஒரு நல்ல விமர்சகர் ஒரு நல்ல படைப்பை கொடுக்க முடியும் அந்த தகுதியை நீங்கள் அடைய வாழ்த்துகள்

  ReplyDelete
 14. நண்பர் மயில்ராவணன்,நாவலாசிரியரின் கடுமையான உழைப்பில் வெளிவந்திருக்கும் சிறப்பான படைப்பு இப்புத்தகம். தயங்காது படியுங்கள், எழுதுங்கள். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் வேல்கண்ணன், ஆழிசூழ் உலகை நான் படித்து முடித்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அதன்பின்பாக குருஸ் அவர்களிடமிருந்து எந்த நாவலும் வெளியாகவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது. சென்ற வருடம் காலச்சுவடில் இந்நாவலின் விளம்பரம் வந்தபோது என் தவிர்க்க முடியாத தெரிவாக இது இருந்தது.

  குருஸ் அவர்கள் தான் சந்தித்த சிக்கல்களை பற்றி எழுதுவதைவிட புதிதாக இன்னமும் ஒரு நாவலை உருவாக்குவதையே நான் விரும்புகிறேன். அவர் நாவலை எழுதி முடித்தபின் தூக்கிப்போட்டதன் காரணத்தை அவர் பேடியிலிருந்து அறிந்து கொண்டேன்.

  இந்நாவலை அறிமுகம் செய்வதே என் நோக்கம். அதன் ஆழம் நீங்கள் அறிந்துள்ளதைப் போலவே அதனைப் படிப்பவர்களால் உணரப்படவேண்டும். அதனுள் மறைந்திருக்கும் பிரம்மாண்டமும், அப்பிரம்மாண்டத்தின் எளிமையும், எண்ணற்ற பாத்திரங்களின் வாழ்க்கைச் சித்திரங்களும், வியக்கவும், அதிரவும், நெகிழவும், சிரிக்கவும் வைக்கும் நிகழ்வுகளும் வாசகன் படித்து உணர வேண்டியதாகும். ஆழமாக எழுத எண்ணவில்லை, எளிமையாகவே எழுத விரும்பினேன். அப்படியாகத்தான் இப்பதிவு என்னிடம் இருந்து வெளிவந்தது. அப்படியே வெளியிட்டேன்.

  ஆழி சூழ் உலகு, அதற்குரிய வரவேற்பை பெற்றுவிட்டது அதற்கு என் அறிமுகம் தேவையா என்ன :))

  நான் படிக்கும் நூல்களில் என் மனதைக் கபர்பவையும், எழுத தூண்டுபவையும் பதிவாக வரும் என்பது தாங்கள் அறிந்ததே. தங்களின் அன்பிற்கு வாழ்த்துக்களிற்கும் நன்றி நண்பரே.

  ReplyDelete
 15. மிக அருமையாக வழக்கம் போல உங்கள் கருத்துக்களை எளிமையாக சொல்லி இருக்கிறீர்கள்
  வாங்கி படிக்க முயற்சி செய்கிறேன்
  .

  ReplyDelete
 16. நண்பர் சிபி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 17. Dear Kanavugalin kathalan,

  One of the finest comments about the book has been putforth by you. I have already read Azhi Soozh Ulagu and wondered about the "Sol Alumai"(Word Portrayal)about Mr. Joe D'Cruz. I have studied 30% of his second release KORKAI book and it takes time to complete. However will complete shortly. Thanks for your valuable comments - M. Gurumoorthy Bsc.,MBA.,B.L.

  ReplyDelete
 18. Dear nets, ireally happy to read the comments. I purchased the book from the publisher in triplicane after seeing the advt in chennai book fair. i took nearly six months to read the book . it is nicely written about the life and maritime skill of PARAVAR ,an ancient community prior to Sangan AGE ,IN SOUTHERN Tamilnadu. the status of the community after coversion to christianity by portugese ,their exploitation by the catholic clergy all true . But people will not accept the Truth. I also read in tamil magazines that the author Mr.Joe de cruz WAS SEVERLY CRITICISED by his own community people in his native village. iI really wonder his enthusiasm and zeal to bring out this novel.
  =JAMES FERNANDO/ AMBATTUR

  ReplyDelete
 19. ‘கொற்கை’ நாவல் குறித்த விமர்சனமும் அதை ஒட்டி எழுந்திருக்கும் விவாதங்களும் நிறைய தகவல்களைத் தெரிவிக்கின்றன.

  ReplyDelete
 20. உலக இலக்கியம் என்று பேசப்படும் படைப்புகளின் தகுதித்தன்மையாக நான் பார்ப்பது, ஏதோவொரு நாட்டின் சமூக வாழ்க்கையையும் போராட்டத்தையும் படிக்கிறபோதே நம் மக்களுடைய போராட்டத்தின் ஏதோவொரு அடையாளம் அதிலே இருக்கும் என்பதே. அவ்வகையில் கொற்கை போன்ற படைப்புகளும் உலகெங்கும் அந்த உணர்வை ஏற்படுத்தக்கூடியவையே. இப்படிப்பட்ட படைப்புகள் உலக மொழிகளில் கொண்டுசெல்லப்பட்டால் தமிழ் ஆக்கங்களும் உலக இலக்கியத்தில் வைத்துப் பேசப்படும். நாவல் பற்றிய உங்களின் கட்டுரை அத்தகைய முயற்சிகளை யாரேனும் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

  ReplyDelete
 21. உலக இலக்கியம் என்று பேசப்படும் படைப்புகளின் தகுதித்தன்மையாக நான் பார்ப்பது, ஏதோவொரு நாட்டின் சமூக வாழ்க்கையையும் போராட்டத்தையும் படிக்கிறபோதே நம் மக்களுடைய போராட்டத்தின் ஏதோவொரு அடையாளம் அதிலே இருக்கும் என்பதே. அவ்வகையில் கொற்கை போன்ற படைப்புகளும் உலகெங்கும் அந்த உணர்வை ஏற்படுத்தக்கூடியவையே. இப்படிப்பட்ட படைப்புகள் உலக மொழிகளில் கொண்டுசெல்லப்பட்டால் தமிழ் ஆக்கங்களும் உலக இலக்கியத்தில் வைத்துப் பேசப்படும். நாவல் பற்றிய உங்களின் கட்டுரை அத்தகைய முயற்சிகளை யாரேனும் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

  ReplyDelete