Thursday, July 1, 2010

ஷ்ரெக் 4


தொலைதூர ராஜ்யத்தின் இளவரசியான பியோனாவை திருமணம் செய்து, மூன்று குழந்தைச் செல்வங்களையும் பெற்ற பச்சை அரக்கன் ஷ்ரெக், குடும்ப வாழ்வின் பொறுப்புக்கள் நாள்தோறும் தரும் அழுத்தத்தில், தான் சுதந்திரமான காளையாக கட்டற்று திரிந்து, ரவுடித்தனம் செய்த நாட்களை மனதில் எண்ணி மருகுகிறான். தன் குழந்தைகளின் பிறந்தநாள் விழாவன்று பியானாவோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டு, பிறந்தநாள் கொண்டாடங்களிலிருந்து கோபமாக வெளியேறுகிறான்.

இவ்வாறான சமயத்தில் ஷ்ரெக்கின் பாதையில் குறுக்கே வரும் ஒரு துர்மந்திரவாதி , ஷ்ரெக் தன் மனதில் எண்ணி ஏங்கும் வாழ்வை தன்னால் அவனிற்கு வழங்க முடியும் எனக்கூறி, ஒரு ஒப்பந்தத்தில் ஷ்ரெக்கை கையொப்பமிடச் சொல்கிறான்.

துர்மந்திரவாதியின் நைச்சியமான பேச்சில் மயங்கி, மந்திரவாதியின் நயவஞ்சகமான ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிடும் ஷ்ரெக், அதன் விளைவாக தன் வாழ்கையே தலைகீழாக மாறிவிடுவதை கண்டு அதிர்ச்சியுறுகிறான். இருபத்திநான்கு மணிநேர அவகாசத்தினுள், தான் இழந்துபோன அருமையான வாழ்வை மீட்டெடுக்க போராட ஆரம்பிக்கிறான் பச்சை அரக்கன் ஷ்ரெக்…..

பச்சை அரக்கன் ஷ்ரெக்கை, துர்மந்திரவாதி ஏன் மடக்கவேண்டும் என்பதற்கான காரணத்தை சிறிய பிளாஷ்பேக்காக காண்பித்து ஆரம்பமாகிறது Sherek 4 திரைப்படம். இயக்குனர் Mike Mitchell இந்த அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தன் குடும்ப வாழ்வில் மனைவி, குழந்தைகளால் வந்து குவியும் பொறுப்புக்கள், நண்பர்களால் வந்து சேரும் அன்புத் தொல்லைகள் மற்றும் முன்னொரு காலத்தில் தன் நிழலைக் கண்டாலே அலறிக் கொண்டோடும் பொதுஜனத்திற்கு தான் ஒரு வேடிக்கை கண்காட்சிப் பொருளாக மாறிவிட்ட அவலம் என சாதாரண ஒரு குடும்ப வாழ்வை வெறுக்கும் ஷ்ரெக்கை பார்க்கும் பல இளம் ரவுடிக் கணவர்கள், அட இது நம்ப கதையாச்சே என்று மனதில் கூறவே செய்வார்கள்.

shrek-4-il-etait-une-fin-2010-15110-1002790572 இவ்வகையான தொல்லைகளிலிருந்து ஒரு நாளாவது விடுதலை கிடைக்காதா என்று ஏங்குபவர்களைப் போலவே ஏங்கும் ஷ்ரெக், தான் விரும்பியது கிடைக்கும் வேளையில், தன் மனைவி பியோனோ மற்றும் தன் நண்பர்களான கழுதை, பூட்ஸ் பூனை ஆகியோர் தன்னை அறியாதவர்களாக மாறிவிட்டிருப்பதைக் காண்கிறான். பியோனாவை அவன் மீண்டும் காதலிக்க வேண்டியிருக்கிறது, கழுதை மற்றும் பூட்ஸ் பூனையிடம் அவன் மீண்டும் தன் நட்பை வெல்ல வேண்டியிருக்கிறது. நிழலின் அருமை வெயிலில் தெரியும் எனும் பழமொழி ஷ்ரெக்கிற்கு தெரியாததால் வந்த வினை இது.

ஷ்ரெக்கை யாரென்று தெரியாது புலம்பும் கழுதையும், அது அடிக்கும் லூட்டிகளும், தான் பால் குடிக்கும் தட்டில், எலியொன்று வந்து பால் குடிக்க அனுமதிக்குமளவிற்கு சோம்பேறியாகி கொழுத்த பூட்ஸ் பூனையும், அதனது ஆக்‌ஷன்களும் சிரிக்க வைக்கின்றன.

ஆனால் படத்தில் மனதை தொடுவது ஷ்ரெக்கிற்கும், துர்மந்திரவாதியை எதிர்த்துப் போராடும் புரட்சித் தலைவியான பியோனாவிற்கும் இடையில் நிகழும் காதல் காட்சிகள். தன்னை யார் என்று அறியாத பியோனாவிடம் ஒவ்வொரு தடவையும் ஷ்ரெக் தன் அன்பையும், காதலையும் வெளிப்படுத்த துடிக்கும் தருணங்களும், வசனங்களும் மனதை நெகிழ வைக்கும் தன்மை கொண்டவை. குறிப்பாக திரைப்படத்தில் பியோனா பேசும் வசனங்களை கேட்கும் பெண் ரசிகைகள் தம் அருகில் அமர்ந்திருக்கும் காதலர் அல்லது கணவர்களிற்கு ஒரு இடி கொடுப்பது நிச்சயம். பியானோ ஆண்களின் மனச்சாட்சியை தன் வசனங்களால் மனவேதனைப்படுத்தி விடுகிறார். அதேபோல் ஷ்ரெக் க்ளைமாக்ஸ் காட்சியில் பியோனாவிடம் பேசும் வரிகள்.. அடடா..என்ன ஒரு உணர்ச்சிகரமான தருணமது.

shrek-4-il-etait-une-fin-2010-15110-1245994063 சூன்யக்காரிகளின் டிஸ்கோ பார்ட்டி, பச்சை அரக்கர்களின் குரூப் டான்ஸ் என்பன ரசிக்க வைக்கின்றன. ஆனால் சூன்யக்காரிகள், துர்மந்திரவாதி, குழல் ஊதும் கண்ணன் [Pied Piper], ஆகிய பாத்திரங்கள் மனதைக் கவர தவறுகின்றன.

ஷ்ரெக் தொடரை நிறைவு செய்வதாக கூறும் இத்திரைப்படத்தில் அனிமேஷன் மற்றும் கதை இலாகாக்களும் ஷ்ரெக்கைப் போலவே வாழ்க்கையில் சலிப்பை எட்டி விட்டனபோலும். பிக்ஸாரின் தரத்தை பார்த்தபின்னும் எவ்வாறு இவர்கள் கோட்டை விட்டார்கள் என்பது பெரும் கேள்வி. அடுத்த கேள்வி ஏன் இந்தப் படம் 3Dயில் உருவாக்கப்பட்டது என்பதாகும். கண்ணாடிக்கு கொடுத்த காசுக்கு பேசாமல் பீர் அடித்திருக்கலாம் என்பதை உணரும்போது மனம் தாகத்தால் வாடுகிறது.

புதிய பாத்திரங்களை உருவாக்குவதிலும், நகைச்சுவை இழைந்த கதையை படைப்பதிலும் காட்டியிருக்க வேண்டிய கற்பனை திரைப்படத்தில் முழுமையை எட்டவில்லை. ராட்சத வாத்து பாத்திரம் ஒரு கொடுமை. உணர்ச்சிகரமான காதல் காட்சிகளில் நெகிழ வைக்கும் திரைப்படம் ஒரு முழுப்படைப்பாக பார்க்கப்படும்போது திருப்தியற்ற உணர்வையே தருகிறது. பிரபலமான பச்சை அரக்கன் ஷ்ரெக்கின் கதையின் இறுதிப்பாகம் இதனைவிட சிறப்பாக இருந்திருக்கலாம் ஆனால் அது அவ்வாறாக இல்லை என்பதுதான் உண்மை. [**]

ட்ரெயிலர்

26 comments:

  1. அருமையாக தொடங்கிய இது, இப்படி முடிந்திருக்க வேண்டாம் :(. இதற்கு மாறாக டாய் ஸ்டோரி, அழகாக முடிந்திருக்கிறது

    ReplyDelete
  2. // திரைப்படத்தில் பியோனா பேசும் வசனங்களை கேட்கும் பெண் ரசிகைகள் தம் அருகில் அமர்ந்திருக்கும் காதலர் அல்லது கணவர்களிற்கு ஒரு இடி கொடுப்பது நிச்சயம். //

    அடி கொடுத்தால் தாங்கலாம் இடி கொடுத்தால் எப்படி

    // கண்ணாடிக்கு கொடுத்த காசுக்கு பேசாமல் பீர் அடித்திருக்கலாம் என்பதை உணரும்போது மனம் தாகத்தால் வாடுகிறது. //

    ஆஹா பிறவிக் கவி ஐயா நீர்

    ReplyDelete
  3. //இதனைவிட சிறப்பாக இருந்திருக்கலாம் ஆனால் அது அவ்வாறாக இல்லை என்பதுதான் உண்மை. [**]//

    நண்பரே படத்தில் நீங்கள் உணர்ந்தது போல குறை இருந்தாலும்,விமரிசனமும் போட்டொ கமெண்டுகளும் அடி தூள்.அதுவும் படுத்தபடி மோட்டுவளையை பார்த்து வாழ்க்கையா இதுன்னு சொல்லுதே சூப்பர்.

    ReplyDelete
  4. என்ன கொலைவெறி?

    தானைத்தலைவர் விஜய டி.ராஜேந்தர் நடித்துள்ள முதல் விளம்பரப்படத்தை பார்த்துவிட்டு வந்து பார்த்தால் இந்த பதிவு. அதிலும் நான்கு பேர் வந்துவிட்டனர்.

    இந்த சிபி சார் வேறு, நம்முடைய ரெகார்டை முறியடிக்கவே எல்லா இடங்களிலும் வந்து விடுகிறார். என்ன செய்ய?

    ReplyDelete
  5. சீக்குவல்களின் கொடுமையான விடயத்தில் சிக்கி சின்னாபின்னாமான சினிமா தொடர் வரிசையில் ஷ்ரெக்கும் தன் பெயரை இணைத்திருப்பது, வருந்தக்கூடிய விஷயம் தான்.

    3டி படங்களின் வசூலைப் பார்த்து, அனேகமாக ஒவ்வொரு ஹிட் படத்தை கொடுத்த ஆசாமிகளும், மீண்டும் அதை இன்னொரு பாகமாகவாகவாது எடுத்து, பணம் பண்ணும் மூடில் உள்ளார்கள். இதில் ஷ்ரெக் மட்டும் தப்ப முடியுமா... ஏற்கனவே 3ம் பாகம் வேறு எடுத்து தள்ளி விட்டதால், கதையை எப்படி கொண்டு போக வேண்டும் என்று தெரியாமல்.. தேவை இல்லா கதாபாத்திரங்களுடன் மீண்டும் படைக்க முயற்சித்திருக்கிறார்கள்... 3ம் பாகம் தான் இதற்கான சிறந்த நிறைவு என்பதை ஏனோ படாதிபதிகளுக்கு கூட புரியாமல் போய் விட்டது.

    பியோனா ஷ்ரெக் காட்சிகளை காண ஆசை தான்.. ஆனால் துணைவி இல்லாமல் தான் போக வேண்டும் போல, உங்கள் விமர்சனத்தை படித்த பிறகு...

    படத்திற்கு செலவு பண்ணிய காசுக்கு அந்த 3டி கண்ணாடியைவது இலவசமாக குடுத்திருக்கலாம்.. படுபாவிகள் :(

    பி.கு. சேட்டைகளும் அழுகையுமாக அந்த மூன் குழந்தைகளும் படுக்கையில் கிடக்க, அம்மணி நிம்மதியாக தூங்க... ஷ்ரெக் விழித்த பார்வையுடன் படுத்து கிடக்கும் அந்த காட்சியே படத்தின் மொத்த கதையையும் தெரிவித்து விடுகிறது... கூடவே உங்கள் வார்த்தை டாப் டக்கர் தூளு மாமே. :)

    ReplyDelete
  6. ரைட் தல.இந்தப் படமும் புட்டுகிச்சா?ஆக,டாய் ஸ்டோரி தான் போகணும் போல.by the by,expendables படத்துக்கு நானு waiting. :)

    அப்புறம்,முத போட்டோ கமெண்ட் சூப்பர்.வாழ்க்கை தெரியுது அய்யா அதுல.உம்ம வாழ்க்கை. :P

    ReplyDelete
  7. அண்ணே அண்ணே இழுமி அண்ணே எப்புடி அண்ணே இப்புடி எல்லாம் கமெண்ட் போடுறீங்க
    ஹ்ம்ம் புரியுது புரியுது ஒரு சங்கத்துக்கு தலைவரா இருந்துகிட்டு இது கூட பண்ணலன்ன எப்புடி கேக்குறது தெரியுது

    Keep it up gentleman

    ReplyDelete
  8. // இந்த சிபி சார் வேறு, நம்முடைய ரெகார்டை முறியடிக்கவே எல்லா இடங்களிலும் வந்து விடுகிறார். என்ன செய்ய? //

    அண்ணே விஸ்வா அண்ணே ஏதோ ஒரு ரெண்டு தடவ Me the 1st அப்புடீன்னு ஒரு கேப்புல உள்ள பூந்ததுக்கு இப்புடி எல்லாம் கோவப் படக் கூடாது

    உங்க கூட எல்லாம் போட்டி போட முடியுங்களா

    ReplyDelete
  9. அண்ணே சிபி அண்ணே!நீங்க வஞ்சப் புகழ்ச்சில ஏதோ சொல்லுரீங்கன்னு தெரியுது.ஆனா என்னன்னு தான் புரியல.

    அட விடுங்க அண்ணே!வயசுல பெரியவரு உங்களுக்கு மாலை,மோளம்,மஞ்சத்தண்ணி எல்லாம் ஏற்பாடு பண்ணி தடபுடலா ஒரு விழாவே நடத்தி உங்ககிட்ட இருந்து "வெட்டு ஒண்ணு,துண்டு ரெண்டா" தெரிஞ்சுக்கிறேன். ;)

    ReplyDelete
  10. அண்ணே சிபி அண்ணே!நீங்க வஞ்சப் புகழ்ச்சில ஏதோ சொல்லுரீங்கன்னு தெரியுது.ஆனா என்னன்னு தான் புரியல.

    அட விடுங்க அண்ணே!வயசுல பெரியவரு உங்களுக்கு மாலை,மோளம்,மஞ்சத்தண்ணி எல்லாம் ஏற்பாடு பண்ணி தடபுடலா ஒரு விழாவே நடத்தி உங்ககிட்ட இருந்து "வெட்டு ஒண்ணு,துண்டு ரெண்டா" தெரிஞ்சுக்கிறேன். ;)

    ReplyDelete
  11. காதலரே . . எனது கருத்துக்கு நேர் எதிர் கருத்தைப் பதித்திருக்கிறீர்கள் ;-)

    எனக்கும் எனது மனைவிக்கும் இப்படம் தியேட்டரில் மிகவும் பிடித்துப் போனது ;-) . . . இதுவரை ஷ்ரெக்கின் ஒரு பாகத்தைக்கூட நாங்கள் தவற விட்டதேயில்லை. . .

    ஆனாலும், என்னைக் கவர்ந்த அதே படம், உங்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கிவிட்டிருப்பது, சற்று வருத்தம்.. எனிவே, நமக்குத்தான் இருக்கிறதே வோட்கா - அப்சலூட் !! ;-)

    ச்சீயர்ஸ் !! ரேப் டிராகன் அடுத்த பாகம் ரெடியா? ;-)

    ReplyDelete
  12. இன்னொரு விஷயம்... பூனையார்.. என்ன ஒரு ராஜபோகமான வாழ்க்கை.. பெண் பூனை ஒன்று தான் இதில் இல்லை... ;-)

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. I think four is better than Shrek 3. They should have stopped with part one, or may be with part two. Three was pathetic. Four is not so great but much better than 3. Moreover, they should not have made in 3 D. I seriously wonder why everyone wants to go for 3D. There wont be anything exciting if they start releasing all movies in 3D.

    ReplyDelete
  15. // கண்ணாடிக்கு கொடுத்த காசுக்கு பேசாமல் பீர் அடித்திருக்கலாம் என்பதை உணரும்போது மனம் தாகத்தால் வாடுகிறது. //

    ஹா ஹா... :)

    ReplyDelete
  16. காதலரே,

    புதிதாக வந்துள்ள தாம் குரூயிஸ் படம் பற்றி ஏதேனும்??????????????????

    இங்கு அடுத்த வாரம்தான் ரிலீஸ், நீங்கள்தான் முன்னரே பார்க்கும் பாக்கியம் பெற்றவராயிற்றே?

    ReplyDelete
  17. //பெண் பூனை ஒன்று தான் இதில் இல்லை... ;-) //

    அதனால தான் ஓய் ராஜ போக வாழ்க்கை. :P

    ReplyDelete
  18. இந்த படம் ஓரளவுக்கு வருத்தத்தை தந்தாளும்கூட எனக்கு பிடித்திருந்தது.

    அந்த கண்ணாடி கமென்ட் சூப்பர்.

    ReplyDelete
  19. நண்பர் சிபி, மனைவிமாரின் அடிகளே இடிபோல்தான் இருக்கும் :) தங்கள் முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் பின்னோக்கி, முழுமையான திருப்தியை வழங்காத இறுதிப்பாகமாக அமைந்துவிட்டது இத்திரைப்படம். டாய் ஸ்டோரியை விரைவில் பார்த்துவிடுவேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கீதப்ப்ரியன், அந்த போஸில் உள்ளதை பலபேர் வாழ்கிறார்கள் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் விஸ்வா, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ரஃபிக், துணைவியார் இல்லாவிடில் என்ன :)) கேர்ல் பிரண்டுடன் போகலாமே :)) பணத்தை அள்ளினால் போதும் என 3டி வியாபாரத்தில் எல்லாரும் இறங்கிவிட்டார்கள். நல்ல டிவிடியில் பார்த்து மகிழுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    இலுமினாட்டி, உம்ம வாழ்க்கையும் அதில் தெரியும்.. சற்று ஊன்றிப் பார்க்கவும் :)) நீங்கள் பார்த்தபின்பாகவே எக்ஸ்பெண்டபிளை நான் இங்கு பார்க்க முடியும் எனவே விமர்சனத்தை போடவும் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள்,

    ஏமாற்றிவிட்டார்கள் நண்பரே.. அந்த ஆதங்கம்தான்.. நீங்கள்கூறீயதுபோலவே அப்சலூட் வோட்கா.. சீர்ஸ். உங்களிற்கு திரையரங்கில் பக்கத்து சீட்டில் இருந்து குத்துகள் விழவில்லையா :) ரேப் டிராகன் அடுத்த எபிசொட் தயார் :)) பூனையாரின் வாழ்க்கைக்கு இலுமி அர்த்தம் தந்திருக்கிறார்..தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    அனாமிகா, 3டியில் காசு பார்க்க முடிவதால் பெரும்பாலான தயாரிப்புக்கள் அந்த நுட்பத்தை உபயோகப்படுத்திக் கொள்கின்றன. விரைவில் விஜய், சூர்யா, சுந்தர் சி ஆகியோரது படங்களும் 3டியில் வெளிவரக்கூடும். உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளையடுத்து 3டிநுட்ப தொலைக்காட்சிகளின் விற்பனை அதிகரித்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ஜெய், மனவேதனை நண்பரே..மனவேதனை :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ஜேம்ஸ்பாண்ட், டாம் க்ரூஸின் படம் இங்கு மாத இறுதியிலேயே வெளியாகிறது என்பதால் தற்போதைக்கு கருத்துக்கூற முடியாது கமரொன் டயஸ் பெரியம்மாவை வேறு பார்த்து தொலைக்க வேண்டியிருக்கும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    இலுமி, உமக்கு பின்னால் ஒரு பெண்பூனை சுற்றிக் கொண்டு திரிகிறதாமே:) அதனை முதலில் கவனியும் அய்யா :)

    ReplyDelete
  20. நண்பர் ஜாலி ஜம்ப்பர், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  21. //இலுமி, உமக்கு பின்னால் ஒரு பெண்பூனை சுற்றிக் கொண்டு திரிகிறதாமே:) அதனை முதலில் கவனியும் அய்யா :) //

    அதெல்லாம் என் வாழ்க்கைல கிடையாது ஓய்!என்னய பார்த்தாலே எல்லா பிகரும் திகில்ல ஓடிரும்.பின்ன,மொக்க போடுற பிகர எல்லாம் மரண கலாய் கலாய்ச்சா?
    ஆக மொத்தம் ஒண்ணு புரியுது.
    தொடர்ல நீரு எனக்கு ஏதோ வெடிகுண்டு வச்சு இருக்கீறு... :)

    ReplyDelete
  22. Dream works 'இன் மற்ற படங்களின் அளவிற்கு என்னை shrek எந்த பக்கமும் கவரவில்லை. மடகாஸ்கர் I & II நன்றாக இருந்தது. "how to train your dragon " தூள் கிளப்பியது.

    ReplyDelete
  23. நண்பர் ஃபாயிக் நஜீப், ஷ்ரெக் முதல் பாகம் சிறப்பாகவே இருந்தது. ட்ராகன் சூப்பர் படம் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  24. //பிரபலமான பச்சை அரக்கன் ஷ்ரெக்கின் கதையின் இறுதிப்பாகம் இதனைவிட சிறப்பாக இருந்திருக்கலாம் ஆனால் அது அவ்வாறாக இல்லை என்பதுதான் உண்மை//
    போக போக தேய்ந்து போனதோ என்று தெரியவில்லை நண்பரே , இருப்பினும் பகிர்வுக்கு நன்றி (கொடுமை என்னவென்றால் நானும் பார்த்து தொலைத்து விட்டேன் ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் )

    ReplyDelete
  25. நண்பர் வேல்கண்ணன் அவர்களே தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete