Sunday, December 13, 2009

ஒன்று, இரண்டு... XIII- ஒரு இருளின் ஒரு நாள் காதலன்


llc1 அடித்துக் கொட்டும் மழையினுடாக இருளை விரட்டியவாறே விரைந்து கொண்டிருக்கிறது ஓக்லாண்ட்- லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிச் செல்லும் ரயில் வண்டி. ரயிலில் சென்று கொண்டிருக்கும் மக்லேன், தென்னமெரிக்காவிலிருக்கும் சிறிய நாடொன்றில் தஞ்சம் கொண்டிருக்கும் தன் நலன் விரும்பிகளான ஜெனரல் காரிங்டன், மேஜர் ஜோன்ஸ் ஆகியோருடன் சென்றிணைந்து கொள்ள விரும்புகிறான்.

இதற்கு அவன் அமெரிக்க எல்லையைக் கடந்து மெக்ஸிகோவினுள் நுழைய வேண்டும். MOON VALLEY எனும் எல்லைப்புற சிறு நகரை அடைந்து, அங்கு ஜெனரல் காரிங்டனின் முன்னாள் சகா ஒருவனின் உதவியுடன், சிறு விமானமொன்றில் அங்கிருந்து தப்பிப்பதே மக்லேனின் திட்டம்.

ஆனால் மலைக்காட்டில் மக்லேனின் அதிரடித் தாக்குதலிலிருந்து உயிர் தப்பி விடும் அழகிய கொலைகாரி ஜெஸிக்கா, ஜியோர்டினோவைத் தொடர்பு கொள்கிறாள். மக்லேனை தீர்த்துக்கட்டுவதற்கு தனக்கு உதவியாக NSAன் கொலைஞர்களை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்கிறாள். மக்லேனிற்கு தெரியாது அவன் ஏறிய ரயிலில் அவளும் ஏறிவிடுகிறாள்.

SACRAMENTO ரயில் நிலையத்தில் நிற்கும் ரயிலில் ஜெஸிக்காவுடன் இணைந்து கொள்கிறர்கள் NSAன் மூன்று கொலைஞர்கள். ரயிலின் காவல் அதிகாரியை மிரட்டும் அவர்கள், மக்லேன் பயணம் செய்யும் பெட்டி எது என்பதனை அறிந்து கொண்டு அந்தப் பெட்டியை நோக்கி நகர ஆரம்பிக்கிறார்கள்.

NSAன் கொலைஞர்களின் வரவை அவதானித்துவிடும் மக்லேன் பெட்டியிலிருந்து நழுவி விடுகிறான். மக்லேன் பயணித்த பெட்டியின் கதவைத் திறக்கும் கொலைஞர்களிற்கு, திறந்திருக்கும் ஜன்னலும், வெறுமையான பெட்டியுமே கண்களில் படுகிறது. பதட்டமும், சினமும் அவர்களைப் பற்றிக் கொள்ள ரயில் முழுவதையும் சோதனை போட ஆரம்பிக்கிறார்கள் அந்தக் கொலைஞர்கள்.

தன்னைத் தேடும் கொலைஞர்களில் இருவரை மிகத்தந்திரமான வழிகளால் ஓடும் ரயிலிருந்து கீழே வீழ்த்தி விடுகிறான் மக்லேன். ஆனால் ரயில் கூரையின் மீது ஜெஸிக்காவின் துப்பாக்கி முனையில் அவன் மாட்டிக்கொள்கிறான். இறந்து விட்டதாக கருதியிருந்த ஜெஸியை மீண்டும் காண்பது அவனிற்கு வியப்பை அளிக்கிறது. அந்த வியப்புடன் அருகில் செல்லும் பிறிதொரு ரயிலின் கூரை மீது ஹீரோவிற்குரிய ஸ்டைலில் அசத்தலாகப் பாய்ந்து விடுகிறான் மக்லேன்.

llc2 மக்லேனை கண்டிப்பாக தீர்த்துக்கட்ட வேண்டிய நிர்பந்தத்திலிருக்கும் ஜெஸி, மக்லேன் பாய்ந்து தப்பிய ரயில் கூரை மீது தானும் பாய்கிறாள். பாயும் அவளின் பிடி, சளைக்காமல் பெய்யும் மழையில் வழுக்கி விட, ரயில் கூரையின் முனையைப் பற்றியவாறே கண்களில் புதிதாய்ப் பிறந்த பயத்துடன் தொங்கும் ஜெஸியின் உயிரைக் காப்பாற்றுகிறான் மக்லேன்.

ஓடும் ரயிலின் கூரையிலிருந்து பெட்டி ஒன்றுக்குள் ஜெஸியுடன் இறங்கும் மக்லேன், அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி, முரண்டு பிடிக்கும் அழகி ஜெஸியுடன் தன் ஓட்டத்தை தொடர்கிறான்.

ரயில் பாதையின் அருகில் இவர்களிருவரையும் காணும் ஒர் குடும்பம் தங்கள் காரில் இவர்களையும் ஏற்றிச் சென்று அருகிலிருக்கும் WEST LAKE எனும் நகரில் இறக்கி விடுகிறது.

வெஸ்ட்லேக் நகரில் பறக்கும் பலூன் போட்டி அன்று நடக்கவிருப்பதை, தங்களை காரில் ஏற்றிக் கொண்டு வந்தவர்கள் மூலம் அறிந்திருந்த மக்லேன், போட்டி நிகழவிருக்கும் மைதானத்திற்கு ஜெஸியையும் அழைத்துச் செல்கிறான். மைதானத்தில் பறப்பதற்கு தயாராக நிற்கும் பலூன்களில் ஒன்றினுள் ஜெஸியை பலவந்தமாக தள்ளிப் போட்டுக் கொண்டு பலூனைப் பறக்க விடுகிறான் மக்லேன்.

தான் புதிதாக கற்றுக் கொண்ட பலூனில் பறக்கும் திறமையை தனக்குத்தானே மெச்சிக்கொள்கிறான் மக்லேன். ஆனால் திருடப்பட்ட பலூனை ஹெலியில் தேடி வரும் பொலிஸ் அவர்களை உடனடியாக தரையில் இறங்கும்படி கட்டளையிட வேறுவழியின்றி பலூனை தரையிறக்குகிறான் மக்லேன்.

தரையில் இறங்கியவர்களை விசாரிக்க ஆரம்பிக்கிறது பொலிஸ். ஜெஸிக்கா தன் NSA அடையாள அட்டையை அவர்களிடம் காண்பித்து NSAஐ உடனடியாக தொடர்பு கொள்ளச் சொல்கிறாள். மக்லேன் பொலிஸிடம் சிக்கினால் சிக்கல்கள் அதிகமாகும் என்பதை அவள் அறிவாள். NSAஐ தொடர்பு கொள்ளும் பொலிசாரிற்கு ஜெஸியின் அடையாளம் உறுதி செய்யப்படுவதுடன், ஜெஸிக்கு வேண்டிய உதவிகளை உடனே செய்து தரும்படியும் கட்டளை வழங்கப்படுகிறது.

llc3 மக்லேனின் விருப்பத்திற்கிணங்க அரிசோனாவின் எல்லையிலிருக்கும் யூமா எனும் நகரில் தங்களை கொண்டு சேர்க்கும்படி பொலிசாரைக் கேட்டுக்கொள்கிறாள் ஜெஸி. அவர்களிருவரையும் ஏற்றிக் கொண்டு யூமா நகர் நோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது ஹெலி.

NSAஐ தொடர்பு கொண்ட பொலிசாரின் அழைப்பின் மூலம் மக்லேனும், ஜெஸியும் இருக்குமிடத்தை அறிந்து விடும் ஜியோர்டினோ, அவர்கள் அனைவரையும் தீர்த்துக் கட்ட ஒர் சிறு விமானத்தை அனுப்பி வைக்கிறான்.

மக்லேனையும் ஜெஸியையும் ஏற்றிச் செல்லும் ஹெலியை கண்டுபிடித்து விடும் அந்த ஆயுதம்தாங்கிய விமானம், அதனை நோக்கி சராமாரியாகச் சுட ஆரம்பிக்கிறது. காற்றைக் கிழித்துக் கொண்டு சீறி வரும் தோட்டாக்கள் ஹெலியின் உலோக உடலை பதம் பார்க்கின்றன. நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்து கொள்ளும் மக்லேன் ஜெஸியையும் இழுத்துக் கொண்டு கீழே நழுவிக் கொண்டிருக்கும் ஏரிக்குள் குதித்து விடுகிறான். அவர்கள் பயணம் செய்த ஹெலி அவர்கள் மேல் வெடித்துச் சிதறிப் போகிறது.

ஏரிக்குள் வீழ்ந்த மக்லேன் மயங்கிய நிலையிலிருக்கும் ஜெஸியை கரை சேர்க்கிறான். நினைவு திரும்பும் ஜெஸி, தான் கொல்லத்துடிக்கும் மக்லேன் தன் உயிரை இரு தடவைகள் காப்பாற்றியிருக்கிறான் எனும் எண்ணத்தால் சங்கடத்திற்குள்ளாகிறாள். மக்லேனை அவள் தன்னையறியாமலே நெருங்க ஆரம்பித்து விட்டதன் அந்தரங்கக் கணம் அது.

ஏரிக் கரையின் சூழலும், இரவும், நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியும், அவள் தன் மனதை மக்லேனிடம் திறந்து தன் தனிமை நிறைந்த வேதனையான கொலைகாரி வாழ்க்கை குறித்து கண்ணீருடன் பேச வைக்கிறது. மறுநாள் கார் ஒன்றை வாங்கும் ஜெஸி மக்லேனுடன் தன் பயணத்தை தொடர்கிறாள்.

நீண்ட பயணத்தில் ஓய்வெடுப்பதற்காக ஒர் விடுதியில் தங்குகிறார்கள் அவர்கள். அன்றிரவு தானே விரும்பி மக்லேனுடன் தன்னைக் கலக்கிறாள் ஜெஸி. தானே விரும்பி அன்பினால் உங்களைக் கலக்கும் பெண்களின் உள்ளத்தின் வாசம், உங்கள் மனதில் நித்யமானது. மரணத்தின் வாசலில் உங்கள் கண்களை ஈரமாக்குவது. உங்கள் மறுபிறப்புக்களையும் அழகாக்குவது.

llc4 மறுநாள் காலை மக்லேனை அவன் இலக்கான MOON VALLEYன் சிறு விமானதளத்திற்கு காரில் அழைத்துச் செல்கிறாள் ஜெஸி. தன்னுடன் வந்துவிடும்படி மக்லேன் விடுக்கும் அழைப்பை நிராகரித்து விடுகிறாள் அவள். காரை விட்டு இறங்கி விமானத் தளம் நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பிக்கிறான் மக்லேன். காரிற்குள் இருந்த கைத்துப்பாக்கியை பற்றுகிறது ஜெஸியின் அழகான கரங்கள், அவள் குறி மக்லேனின் முதுகின் மேல் பதிகிறது. ஆனால் மக்லேன் காதுகளில் வீழ்ந்ததெல்லாம் முரட்டுத்தனமாக பாதையை விட்டு விலகிச் செல்லும் ஜெஸியின் காரின் ஓசை மட்டுமே. அந்த ஓசையில் கலந்திருந்த ஒரு இருளின் அன்பிற்கான ஏக்கத்தை அப்போது அவன் உணர்ந்திருக்கவில்லை…. தனக்குப் பொறி வைத்துக் காத்திருக்கும் ஜியோர்டினோவின் கொலைஞர்கள் நிறைந்த அச்சிறு விமானத் தளத்தை நோக்கி அவன் கால்கள் நடந்து கொண்டேயிருந்தன..

XIII காமிக்ஸ் தொடரின் 15வது ஆல்பமான Lachez Les Chiensஐ [ நாய்களை ஏவுங்கள் ] வாசகர்கள் மூடும் போது அவர்கள் மனதில் தங்கி விடுவது ஒன்றே ஒன்றுதான். ஜெஸிக்காதான் அந்த அழகான ஒன்று.

பரபரப்பாக ஆரம்பிக்கும் ரயில் ஆக்‌ஷன் காட்சிகளில் அருமையான ஆக்‌ஷனை வழங்குகிறார்கள் வான்ஸ்- வான்ஹாம் கூட்டணி. மக்லேன், ஜெஸிக்காவை தன் பிடிக்குள் எடுத்துக் கொள்ளும்போது ஆரம்பத்தில் திமிறும் ஜெஸி பின்பு வரும் நிகழ்வுகளினால் தன்னை திறக்க ஆரம்பிக்கும் போது ஜெஸிக்காவின் பிடிக்குள் வாசகனை மாட்ட வைத்து விடுகிறது கதை. இந்த ஆல்பத்தில் வான் ஹாமின் வெற்றி என்பது அதுதான். அது மட்டும்தான்!!

llc5 கொடிய கொலைகாரியாக அவள் சித்தரிக்கப்பட்டாலும், தன் காரியங்களிற்காக கட்டில்களை அவள் பகிர்ந்திருந்தாலும், கதையின் ஒரு கட்டத்தில் ஒர் கணம் தான் அடிமைப்பட்டு விட்ட உண்மை அன்பிற்காக அவள் எடுக்கும் முடிவு அவளை மறக்க முடியாத பாத்திரமாக்கி விடுகிறது. அந்த முடிவின் வலியில் மக்லேனுடன் அவள் பகிர்ந்து கொள்ளும் வரிகள் வாசகனை உடைக்கும். அந்த வரிகளின் உணர்வுகளும், வலியும் கெடாது முழுமையாக ஓர் வாசகனைச் சென்றடையச் செய்வது கதையை மொழிபெயர்ப்பவர்களின் கடமை.

தன் பாணியில் சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் பின்பு வான்ஹாம் கதையை நகர்த்தினாலும் தொடரின் நீண்டகால வாசகர்களிற்கு சலிப்பின் சுவையை அறியச் செய்வதிலும் அவர் வெற்றி காண்கிறார். தொடரும் கதையின் சாத்தியமற்ற திருப்பங்கள் வாசகனை குழப்பத்தின் விளிம்பினை தொட்டுப் பார்க்க செய்கின்றன.

மக்லேனிற்கு உடம்பில் XIII எனும் பச்சை மட்டும்தானா இல்லை வேறு ஏதாவது முக்கியமான மச்சங்களும் உண்டா என்பதை வான்ஸ்தான் கூற வேண்டும். ஜெஸிக்கா, மரியா, ஜோன்ஸ் என்று மன்மத மக்லேன் ஆகிவிட்டார் சீரியஸான ஹீரோ. ஜேம்ஸ்பாண்டின் வைரஸ் தொற்றி விட்டது போலும்.

கதையை படிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் என்பதை நன்கறிந்த ஓவியர் வான்ஸ், ஜெஸிக்காவின் முழு உடல் அழகையும் அவர்களிற்கு விருந்தாக்கியிருக்கிறார். குளியல் அறைக்காட்சி செம சூடு.

கதையின் ஒரு கட்டத்தில் தன் அடையாளம் குறித்த கேள்விகளை ஜெஸிக்காவிடம் மக்லேன் எழுப்புவார். அதற்கு ஜெஸிக்கா தரும் பதில்களையும், XIII காமிக்ஸ் தொடரின் 18வது ஆல்பமான La Version Irlandaiseல் நிகழும் சம்பவங்களையும் தமிழ் தொகுப்பு வெளிவரும் வேளையில் தயவு செய்து வாசகர்கள் ஒப்பிட்டுப்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். வாசகர்களை வாத்துக்கள் ஆக்குவதற்கு இதனைவிட சிறந்த உதாரணம் காட்ட முடியாது. ஜெஸிக்காவுடனான இத்தருணம் குறித்த தன் கோபத்தை மக்லேன், XIII காமிக்ஸ் தொடரின் 19வது ஆல்பத்தின் ஒரு பக்கத்தில் மேஜர் ஜோன்ஸிடம் விளக்குவார்.

சுருக்கமாகக் கூறினால், ஜெஸிக்கா எனும் பாத்திரம் காப்பாற்றிய ஆல்பம். [**]

XIII தொடரின் முன்னைய பதிவுகள்

3180232906_1628a5071aஅன்பு நண்பர்களே, கனவுகளின் காதலன் வலைப்பூவை ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடகாலம் நிறைவடைகிறது. இந்த இனிய தருணத்தில் இவ்வலைப்பூவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் நண்பர்கள் யாவரிற்கும் என மனதார்ந்த நன்றிகளை தெரிவிப்பது என் கடமையாகும். வருகை தந்து, கருத்துக்களைப் பதிந்து, உங்கள் பொன்னான ஓட்டுக்களை அள்ளி வழங்கி எனக்கு உற்சாகமும், ஊக்கமும் தந்து கொண்டிருக்கும் அனைத்து அன்புள்ளங்களிற்கும் என் அன்பான நன்றிகள்.

18 comments:

 1. கனவுகளில் காதலரே, மீ த ஃபர்ஸ்ட்டு!

  வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடம் முடிவடைந்ததற்கு பிடியுங்கள் பாராட்டுக்களை! நடுவில் 60க்கும் மேற்பட்ட பதிவுகளை சைலண்டாக தாண்டி வந்துள்ளீர்கள்!

  நயமான தமிழில் தரமான விமர்சனங்களை தொடர்ந்து வழங்கி வருகிறீர்கள்! அது புத்தகமானாலும் சரி, திரைப்படமானாலும் சரி, நமது அன்பிற்கினிய காமிக்ஸ் ஆனாலும் சரி, தங்கள் விமர்சனங்களையே ஒரு அளவுகோலாய் எடுத்துக் கொள்கிறேன்!

  தங்கள் அளவிற்கு இல்லையெனினும் உங்களைப் பார்க்கும் போது நான் மேலும் எனது CONSITENCY-ஐ மேம்படுத்த தொடர்ந்து ஒரு உந்துகோலாய் இருந்து வருகிறீர்கள்!

  முதல் பதிவு முதலாம் ஆண்டு மலர் பதிவு வரை XIII உடன் தொடர்ந்து பயனித்து எங்களையும் உடனழைத்துச் செல்லும் உங்கள் சிறந்த பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 2. வயாகரா தாத்தாDecember 13, 2009 at 10:19 AM

  தம்பி,

  கண்மணி ஜெஸிக்காவின் டூ பீஸ் படத்தை வெளியிட்ட நீ அவள் குளிக்கும் படத்தையும் ஏன் வெளியிடவில்லை?

  தள்ளாத வயசுல ஏம்பா படுத்துற?

  ReplyDelete
 3. //கதையின் ஒரு கட்டத்தில் தன் அடையாளம் குறித்த கேள்விகளை ஜெஸிக்காவிடம் மக்லேன் எழுப்புவார். அதற்கு ஜெஸிக்கா தரும் பதில்களையும், XIII காமிக்ஸ் தொடரின் 18வது ஆல்பமான La Version Irlandaiseல் நிகழும் சம்பவங்களையும் தமிழ் தொகுப்பு வெளிவரும் வேளையில் தயவு செய்து வாசகர்கள் ஒப்பிட்டுப்பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். வாசகர்களை வாத்துக்கள் ஆக்குவதற்கு இதனைவிட சிறந்த உதாரணம் காட்ட முடியாது. ஜெஸிக்காவுடனான இத்தருணம் குறித்த தன் கோபத்தை மக்லேன், XIII காமிக்ஸ் தொடரின் 19வது ஆல்பத்தின் ஒரு பக்கத்தில் மேஜர் ஜோன்ஸிடம் விளக்குவார்.//

  18-வது ஆல்பமும் 13-வது ஆல்பமும் அநேகமாக தமிழில் வரவே வராதுன்னு நினைக்கிறேன்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 4. மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, உங்கள் கனிவான, இனிய வாழ்த்துக்களிற்கு நன்றிகள். தமிழ் தொகுப்பில் 13வது ஆல்பம் வெளிவராமல் போகும் வாய்புக்களே பெருமளவில் உண்டு,ஏறக்குறைய 100 பக்கங்களிற்கு மேல் கொண்டிருக்கும் ஆல்பம் அது. 18வது ஆல்பம் சிறந்ததொரு ஆல்பம் ஆசிரியர் 18 ஆல்பங்கள் கொண்ட தொகுப்பாகத்தானே விளம்பரங்கள் தந்திருக்கிறார். ஒரு சிறிய கணக்கு.ஒரு ஆல்பம் 45 பக்கங்களை கொண்டது என்பதால் 45x18= 810 பக்கங்கள், இதில் 17 பக்கங்களை முன்கதைச் சுருக்கத்திற்காக கழித்தால் கூட மீதியிருக்கும் பக்கங்கள் 793. எனவே 18 ஆல்பங்கள் வரும் வாய்ப்பு உண்டு அல்லவா. தொகுப்பில் 18வது ஆல்பம் இருக்க வேண்டுமென்பதே என் ஆசை. உங்களின் தொடர்ந்த அன்பான ஆதரவிற்கும், ஊக்கமளிக்கும் முதன்மைக் கருத்துக்களிற்கும் நன்றி[ 13,மற்றும் 18வது ஆல்பங்கள் வராது என்ற தகவலை கழகத்திற்கு தந்த ஏஜெண்ட் யார் தலைவரே?]

  ReplyDelete
 5. வயகரா தாத்தா அறிவது, குளிக்கும் படத்தைப் போட்டிருந்தால் பொங்கி வழிந்திருக்க கூடிய விவகாரங்களினாலேயே அப்பக்கம் தவிர்க்கப்பட்டது. இந்த வயதிலும் கிழம் அலைவதைப் பாருங்கள் நண்பர்களே.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் கனவுகளின் காதலரே,

  ஒரு ஆண்டு தொடர்ந்து வலைப்பூ நடத்துவது சாதாரணமல்ல. அதுவும் காமிக்ஸ், சினிமா, புத்தகம் என்று பல்வேறு துறைகளில் தொடர்ந்து பதிவிடுவது இமாலய காரியம். அதில் வெற்றியும் பெற்றுள்ளீர்கள்.

  தொடர்ந்து தங்கள் வலைப்பூவில் மேலும் பல சிறந்த பதிவுகள் வழங்கிட வாழ்த்துக்கள்.

  ஒலக காமிக்ஸ் ரசிகன்,
  100% உண்மையான பதிவுகள்.
  Greatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்

  ReplyDelete
 7. ஒலக காமிக்ஸ் ரசிகரே, நீண்ட நாட்களின் பின் உங்கள் கருத்துக்களை இந்த வலைப்பூவில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பான வாழ்த்துக்களிற்கு நன்றி நண்பரே. என்னை ஹீரோவாக்குவதாக தந்த உறுதிமொழியை மறந்து விடாதீர்கள் என்றும் கேட்டுக் கொள்கிறேன் :)

  ReplyDelete
 8. ஒரு ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் கனவுகளின் காதலரே, XIII பற்றி அவப்போது பதிவிட்டு இரத்தபடலம் தமிழ் பதிப்பின் மீதான ஆவலை தூண்டுகிறீர்கள். புத்தகம் தான் வந்த பாடில்லை. உங்களுடைய வலைதளத்தில் எப்போது 'லயன் காமிக்க்ஸின் XIII' விமர்சனத்தை படிக்கபோறோமோ?? 2010 புத்தக கண்காட்சிக்கு எதிர்பார்க்கலாமா??

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் கனவுகளின் காதலரே. சிறந்த பதிவுகளை கடந்த ஒரு வருடமாக‌ வாசகர்களுக்கு வளங்கியுள்ளீர்கள். திரைப்படமாகட்டும், புத்தமாகட்டும் எல்லாமே சிறந்த அறிமுகங்களும்/ விமர்சனங்களும். தொடருங்கள் உங்கள் பணியை , வாசகர்களாகிய நாங்கள் தருவோம் எங்கள் support ஐ.

  ReplyDelete
 10. காதலரே கனவுகளின் ,
  இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதற்கு வாழ்த்துக்கள். இந்த ஒரு வருடத்தில் கலக்கி விட்டீர்கள் போங்கள். எனது வலைபூவும் விரைவில் இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க போகிறது . ஆனால் உங்களை போல் என்னால் பதிவிட இயலவில்லை . இந்த வருடமாவது நிறைய பதிவிட வேண்டும் என நினைக்கிறன் .

  நண்பரே உங்கள் இந்த XIII தொடர் பதிவுகளை பார்த்து லயன் காமிக்ஸ் அலுவலகத்திற்கு பல முன் பதிவுகள் சென்றிருப்பது நிச்சயம் .

  அன்புடன் ,
  லக்கி லிமட்
  உலவல்

  ReplyDelete
 11. best wishes for first birthday.......

  ReplyDelete
 12. காதலரே, முதலாம் ஆண்டு நிறைவுக்கான வாழ்த்தை முதலில் பிடியுங்கள். முதல் பதிவா ஆரம்பித்த XIII விமர்சன காவியத்தை, உங்களின் முதல் ஆண்டு நிறைவாகவும் படைத்திருக்கும் விதம் அருமை.

  62 பதிவுகள் ஒரு வருடத்தில், அதுவும் ஒவ்வொன்றும் ஒரு விதம், ஒரு புதிய அறிமுகம், உங்கள் வழமையான நடை என்பது எனக்கு ஒரு இமாலய சாதனையாகவே தெரிகிறது.

  இன்னும் பல சிகரங்களை, நீங்கள் அடைய நான் விரும்புகிறேன். தொடர்ந்து கலைகட்டுங்கள், உங்கள் ராஜ்ஜியத்தை.

  விஜயன் XIII மெகா இதழை வெளியிட்டால் அது 1-19 வரை தான் இருக்கும் என்று நம்புகிறேன். 13 ம் ஆல்பம் அத்தொடருக்கு எந்த மதிப்பையும் கூட்டாத வேளையில், அதை அவர் வெளியிடுவதை தவிர்பார் என்றே தெரிகிறது.

  பதிவை முழுவதும் படித்து விட்டு மீண்டும் கருத்திட வருகிறேன்.

  ReplyDelete
 13. காதலரே - பின்னீட்டீங்க போங்க. . . உங்க பதிவுகளே ஒரு அருமையான சிறுகதையைப் படிப்பதுபோன்ற அனுபவத்தைத் தருகின்றன. . கலக்கலைத் தொடருங்கள். உங்கள் ஒரு வருடத்திற்கு எனது வாழ்த்துகள். .

  ReplyDelete
 14. அன்பு நண்பருக்கு
  வாழ்த்துக்கள் பல. மென்மேலும் முன்னேறுங்கள்.

  ReplyDelete
 15. இது நாள் வரைக்கும் உங்களின் பதிவுகளில் செய்த மொழியாக்க பக்கங்களுக்கு தனியான சிறப்பான
  வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும்.

  ReplyDelete
 16. நண்பர் சிவ் அவர்களே உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி. இந்த வருடம் புத்தக கண்காட்சியில் ரத்தப்படலம் வெளியானால் நான் மிக்க மகிழ்ச்சி அடைவேன். ஆசிரியர்தான் பதில் கூற வேண்டும்.

  Tharani, உங்கள் வாழ்த்துக்களிற்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி.

  நண்பர் லக்கிலிமட் அவர்களே வாழ்த்துக்களிற்கு நன்றி. என் பதிவைப் பார்த்து முன்பதிவுகள் சென்றிருக்குமா என்பது சந்தேகம்தான் நண்பரே. ஆசிரியர் முன்பதிவுகளை நம்பியிராது தொகுப்பை வெளியிட வேண்டும் என்பதே என் அவா.

  நண்பர் ரமேஷ் உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 17. ரஃபிக், மீண்டும் உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி. உங்கள் ஆதரவுடன் வரும் வருடத்திலும் நண்பர்களுடன் சிறப்பானவற்றை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு தொடரவேண்டும் என்பதுதான் என் ஆசையும். ஆசிரியர் மெகா இதழை வெளியிட்டால்- உங்கள் கிண்டல் உங்களை விட்டு போகாதே,13ம் ஆல்பத்தை ஆசிரியர் விரும்பினால் ஓர் தனி ஆல்பமாக வெளியிடலாம் ஆனால் அந்த விபரீத விளையாட்டில் அவர் இறங்க மாட்டார் என்றே நம்புகிறேன். சற்றுமுன் கிடைத்த தகவல், இம்முறை சென்னை புத்தக கண்காட்சியில் ரத்தப் படலம் முழுத்தொகுப்பு கிடைக்காவிடில் பாண்டிமைனர் அவர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் :))

  ReplyDelete
 18. நண்பர் கருந்தேள் கண்ணாயிரம் அவர்களே உங்கள் வாழ்த்துக்களிற்கும், கனிவான கருத்துக்களிற்கும் நன்றி.

  நண்பர் வேல்கண்ணன் அவர்களே வாழ்த்துக்களிற்கு நன்றி நன்றி.

  ReplyDelete