Wednesday, December 9, 2009

சாம்பல் விதைத்த பாதை


இன்றிலிருந்து பத்து வருடங்களில் உலகில் ஏற்படும் நிகழ்வொன்றினால் உருவாகும் பேரழிவில் மனித குலமானது அதன் அழிவின் எல்லைக்குத் தள்ளப்படுகிறது. இந்த அழிவின் பிடியிலிருந்து மீண்டவர்கள் சிலரே.

அழிவின் பின்னான உலகில் மின்சாரம் கிடையாது. தாவரங்கள், விலங்குகள் அழிந்து போய்விட்டன. உணவுப் பொருட்களே இல்லை எனும் நிலையில் எஞ்சியுள்ள மனிதர்களின் வாழ்க்கையானது தம் உயிர்வாழ்தலிற்கான சாத்தியத்தின் எல்லா இழைகளையும் எவ்வழியிலும் தேடி ஓடுவதாக அமைந்து இருக்கிறது.

சிதைந்து போன மனித நாகரீகத்தில் நிலவும் கொடிய உணவுப் பற்றாக்குறையானது மனிதர்களில் சிலரை மனித மாமிசம் உண்ணுபவர்களாக மாற்றி விட்டிருக்கிறது. வன்முறை செறிந்த குழுக்களாக செயற்படும் இந்த நரமாமிச உண்ணிகள் சக மனிதர்களை உணவிற்காக தேடித் தேடி வேட்டையாடுபவர்களாக இருக்கிறார்கள்.

வேட்டையில் சிக்கும் மனிதர்களை விலங்குகள் போல அடைத்து வைத்து, தங்களிற்கு தேவையான வேளைகளில் அவர்களை வெட்டிப் புசித்து தம் பசியை ஆற்றிக் கொள்கிறார்கள் இக்குழுவினர்.

நாளிற்கு நாள் உலகில் சூரியனின் ஒளி மங்கிக் கொண்டே செல்கிறது. கார்வண்ணத்தின் சாயல் வெளிச்சத்தை விழுங்க ஆரம்பிக்கிறது. உடலை உறையவைக்கும் குளிரோ புவியின் மீது தன் பிடியை மெல்ல மெல்ல அதிகரிக்கிறது.

மேற்கூறிய நிலைமைகளிலும் நாகரீக சமுகம் நிறுவிய ஒழுக்க நெறிகளிற்குள் தொடர்ந்தும் வாழ முற்படும் மனிதர்களின் நிலை பித்துப் பிடித்ததாகி விடுகிறது. அவ்வகை மனிதர்களிற்கு தற்கொலை என்பது அவர்கள் வாழ்வின் ஓர் இனிய அனுபவமாக இருக்கக்கூடியதான நிலையைப் பெறுகிறது.

G149571447989278அவனும், அவளும் தம்பதிகள். இதமான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அழிவின் பின் அவளிற்கு இஷ்டமில்லாமலேயே அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அவலமான நிலையில் உள்ள ஓர் உலகில் தன் குழந்தை பிறக்கிறதே எனும் வேதனை அவளிற்கு.

அவன் நல்ல ஓர் கணவன். தன் மனைவியையும் குழந்தையையும் தன் உயிராக நேசிப்பவன். அவன் குழந்தைதான் அவனிடம் கடவுள் பேசிய வார்த்தை. தன் மனைவி தற்கொலை முயற்சிகளில் இறங்க விரும்பும் போதெல்லாம் அவளைத் தடுப்பதற்காக அவளிடம் கெஞ்சுகிறான். இந்தக் கொடிய நிலையை தாம் எவ்வாறாயினும் கடந்து சென்றுவிடலாம என அவளிற்கு நம்பிக்கை தருகிறான்.

அவர்கள் பையன் அவர்கள் அரவணைப்பில் வளர்கிறான். அழிந்த உலகில் பிறந்த குழந்தை அவன். அவன் தந்தை அவனிற்கு பாடங்களும், நற்போதனைகளும், கதைகளும் ஊட்டி வளர்க்கிறான்.

la-route-2009-14957-949688813 நரமாமிச உண்ணிகளிற்கு அஞ்சி மறைந்து, நாளிற்கு நாள் இருளும், குளிரும் அதிகரித்துக் கொண்டிருக்கும் உலகில் வாழும் அழுத்தம் மிகுந்த வாழ்க்கையை அவளால் தாங்கிக் கொள்ள முடியாத கணமொன்றில் அவள்; அவனையும் பையனையும் பிரிந்து குளிரான இரவொன்றினுள் நுழைந்து தொலைந்து போகிறாள்.

அவர்களை விட்டு பிரிந்து செல்வதற்கு முன் அவள் அவனிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க, அவன் வாழும் நாட்டின் தென்பகுதியை நோக்கி தன் மகனுடன் நீண்ட ஓர் பயணத்தை அவன் ஆரம்பிக்கிறான். அவர்கள் கண்டடையப் போவதும், விரும்புவதும் கிடைக்குமா என்பது நிச்சயமற்ற நிலையில், நம்பிக்கை எனும் காற்றுடன், அழிந்த உலகின் சாம்பல் விதைத்த பாதைகளில் ஆரம்பமாகிறது அந்தப் பயணம்…….

பின் உலக அழிவு குறித்து மிகையான கற்பனைகளுடன் உருவாகி வெளிவந்த திரைப்படங்கள் போலல்லாது உண்மையின் அருகில் பயணித்துச் செல்கிறது The Road எனும் இத்திரைப்படம். Cormac McCarthy எனும் அமெரிக்க எழுத்தாளர் எழுதி 2007ல் புனைகதைக்கான Pulitzer Prizeஐ வென்ற The Road எனும் நாவலைத் தழுவி திரைப்படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் அவுஸ்திரேலிய இயக்குனர் Jhon Hillcoat.

G149571400247160 தந்தை, மகன், அழிந்து கொண்டிருக்கும் உலகில் நிகழும் ஓர் பயணம் எனும் பாத்திரங்களை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் பார்வையாளனை தன்னுடன் ஒன்றவைக்க அதில் இடம்பெறும் இசை,உரையாடல்கள், அழிவுக்குட்பட்ட உலகின் காட்சிகள் என்பவற்றின் மூலம் கச்சிதமாக வழி தேடிக்கொள்கிறது. படத்தில் இடம்பெறும் உரையாடல்கள் எளிமையாகவும் அதேவேளையில் ஆழமான அர்த்தம் செறிந்தவையாகவும் அமைந்து பார்வையாளனை வசப்படுத்துகின்றன.

படத்தின் ஒவ்வொரு கணமும் அடுத்து என்ன நடக்கும் என்ற பயத்திலேயே நகர்கிறது, நரமாமிசம் உண்ணும் குழுக்கள் வரும் காட்சிகள் வயிற்றைப் பிசைய வைக்கின்றன. பணம் என்பது காலில் மிதிபட்டுக் கிழியும் கஞ்சலாக காட்டப்படுகிறது. மனிதர்களின் இயல்புகள் உயிர்வாழ்தலை தொடர்வதற்காக கொள்ளும் மாற்றங்களின் உக்கிரம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் உருவாக்குகிறது.

la-route-2009-14957-795861225 காட்டுமிராண்டித்தனம் ஓங்கிய உலகில் தன் மகனை ஒழுக்கம் நிறைந்தவனாக வளர்க்க நினைத்து அவனிற்கு நற்போதனைகளை வழங்கும் தந்தை அவற்றை தானே மீறும்போதும், மதிக்காதபோதும் சிறுவனிடமிருந்து வரும் எதிர்வினைகள் ரசிக்க வைக்கின்றன.

அதிர்ஷ்டவசமாக தந்தை கண்டெடுக்கும் ஒர் கொக்கோகோலா பானத்தை மகனிற்கு பருகத்தரும்போது முதல் தடவையாக அப்பானத்தை பருகும் சிறுவனின் உணர்வு வெளிப்பாடு அருமை. அதே போன்று மறைத்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை கண்டுபிடித்த பின்னாக தந்தையும் மகனும் வாழும் அந்த மகிழ்வான கணங்களை இயக்குனர் பார்வையாளர்களையும் வாழச் செய்துவிடுகிறார். அவனும் அவளும் காதலுடன் வாசித்துக் களித்த பியானோ நெருப்பு உண்டாக்குவதற்காகக் கொத்திச் சிதைக்கப்படுவது மனதில் வேதனையின் நிழலை உருவாக்குகிறது.

roadspan.1212073042 தன் மகனை எவ்வழியிலாவது காப்பாற்றிவிட நினைக்கும் உறுதியான தந்தை வேடத்தில் Viggo Mortensen தன் திரையுலக பாத்திரப் பட்டியலில் கடினமான, அருமையான பாத்திரத்தை நிறைவாகச் செய்திருக்கிறார். சிறுவன் பாத்திரத்தில் வரும் Kodi Smit- McPhee தன் அப்பாவித்தனமான நடிப்பால் மனதைக் கவர்ந்து விடுகிறார்.

தன் உயிர்வாழ்தல் என வரும்போது நாகரீகமும், ஒழுக்க நெறிகளும், மனித நேயமும் அதன் முன் அர்த்தமிழந்து சிதறிப்போய்விடுவதை படம் தெளிவாக்குகிறது. திரைப்படத்தின் சில காட்சிகளின் முடிவுகளை பார்வையாளன் ஊகித்து அறிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. படைப்பின் முழுமையாக்கலில் பார்வையாளன் ஆற்ற வேண்டிய பங்காக இதை எடுத்துக் கொள்ளலாம்.

மனதைக் கனக்க வைக்கும் இறுதிக்காட்சிகள் கொண்ட இத்திரைப்படமானது களிப்புடன் நேரத்தைக் கடத்துவதற்கு உதவாது என்பது தெளிவு. ஆனால் படத்தை பார்க்கும்போது மனதில் மிக ஆழமான கேள்விகளை எழுப்பி, அரங்கின் வெளியேயும் சிந்திக்கவைக்கும் படங்களில் ஒன்றாக இது இருக்கிறது. அவ்வகைப் படங்களை விரும்பும் ரசிகர்களிற்கு இது ஓர் குட்டிப் பரிசு.

எல்லாப் பயணிகளும் தங்கள் பயணங்களின் இலக்குகளை சென்றடைந்து விடுவதில்லை, இலக்குகளை கண்டடையச் செல்லும் பாதைகளிலேயே அவர்கள் பயணங்களும் முடிவடைவந்து விடுகின்றன. ஆனால் பாதைகளோ புதிய பயணங்களின் பிறப்பிற்காக நம்பிக்கையுடன் காத்துக் கொண்டுதானிருக்கின்றன. [***]

ட்ரெயிலர்

11 comments:

 1. படத்தை பற்றி கூறிவிட்டீர்கள் அல்லவா! உடனே பார்த்து விட வேண்டியதுதான் ....
  மறந்து விட்டேன் me the first
  அன்புடன் ,
  லக்கி லிமட்
  உலவல்

  ReplyDelete
 2. காதலரே,

  உலக அழிவை பிரம்மாண்ட பட்ஜெட்டில் தான் படமாக்க முடியும் என்ற கோட்பாடை உடைத்து, வெளிவந்திருக்கும் படம் போல. சில நேரங்களில், குறைந்த முதலீடில் தோன்றும் படங்கள், தொழில்நுட்ப மாயங்கள் இல்லாத குறையை தீர்ப்பதற்காக, மனித உறவுகளை மையபடுத்துவது சிறப்பான விடயமாக தெரிகிறது.... நம்மை பார்க்க தூண்டுவது அவைதானே...

  அருமையான விமரிசனம், படத்தை பார்த்தவுடன், திரும்ப வருகிறேன் கருத்து பகிற.

  பி,கு.: // முதல் தடவையாக அப்பானத்தை பருகும் சிறுவனின் உணர்வு வெளிப்பாடு அருமை //

  என்ன பெரிசாக உணர்வுகளை வெளிபடுத்தி விட முடியும்.... நம் இளைய தளபதியின் கோக் குடிக்கும் அழகுக்கு (????!!!) ஈடாக முடியுமா ? :)

  ReplyDelete
 3. அன்பு நண்பரே

  இப்படத்தையும் பார்ப்பதற்கான பட்டியலில் வைத்திருக்கிறேன். பெரும் அழிவிற்கு எடுக்கப்படும் திரைப்படங்கள் எல்லாமே ஆக்ஷன் படங்களாகவே இருக்கின்றன. இதில் வித்தியாசமாக மனித உணர்ச்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பதாக படித்ததையொட்டி இப்படத்தை காண ஆவலாக இருக்கிறேன்.

  உங்கள் விமர்சனம் அதனையே உறுதிப்படுகிறது. நேர்த்தியான விமர்சனம்.

  ReplyDelete
 4. // தன் உயிர்வாழ்தல் என வரும்போது நாகரீகமும், ஒழுக்க நெறிகளும், மனித நேயமும் அதன் முன் அர்த்தமிழந்து சிதறிப்போய்விடுவதை படம் தெளிவாக்குகிறது//
  இந்த வார்த்தைகளின் ஆழம் உங்களின் பதிவிலேயே தெரிகிறது நண்பரே, பின்னணி இசையும் நம்முடன் பயணம் செய்கிறது என்பது உண்மைதான். படம் முடித்தவுடன் எனக்கு தோன்றிய எண்ணம் 'வாழும் காலத்தில் அர்த்தமற்ற பேச்சுகள், சண்டைகள் எதற்கு? '. படத்தின் இறுதி காட்சிகள் மனதை விட்டு இன்னும்
  அகலவில்லை நண்பரே,

  ReplyDelete
 5. நண்பர் லக்கிலிமட் அவர்களே முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.

  நல்ல ஒரு கதையும், அதனை சிறப்பாக கூறவல்ல ஓர் இயக்குனரும் பட்ஜெட்டை விட மிகவும் முக்கியம். படத்தைப் பார்த்து விட்டு வாருங்கள், இளைய தளபதியின் அழகா??!! நீங்கள் நம் பாண்டி மைனர் இரண்டு கிளாஸ் பீரை ரசித்துக் குடித்து விட்டு தரும் முகபாவங்களை இன்னமும் பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன் :)) கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ஜோஸ், இந்தப் படம் உங்கள் பட்டியலில் இல்லாவிடில்தான் நான் ஆச்சர்யப்பட வேண்டும். கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  வேல்கண்ணன், நீங்களும் படத்தை ரசித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நாம் வாழ்க்கையில் இறுகப் பற்றிக் கொண்டிருப்பவற்றின் அவலமான வீழ்ச்சியானது சிந்திக்க வைக்கிறது. உங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ReplyDelete
 6. நண்பர் கனவுகளின் காதலரே.... உங்கள் வலைப்பூவின் முதல் ஆண்டு நிறைவு நாளான இன்று. என் மனப்பூர்வமான வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்.

  இந்த ஒரு வருடத்தில் நீங்கள் கடந்து வந்த பாதை, மற்றும் பரிணாமங்களை கூடவே இருந்து பார்த்த திருப்தி எனக்கு என்றும் இருக்கும்.

  உங்கள் பதிவுகளின் காரம் இன்று போல் என்றும் நிறைந்திருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

  அமர்க்களமாக தொடருங்கள்... நண்பரே.

  ReplyDelete
 7. ரஃபிக்,ஒரு வருடத்திற்கு முன்பாக என் முதல் பதிவில் முதன்மையாகக் கருத்துக்கள் பதிந்து என்னை வாழ்த்தி வ்ரவேற்றவர் நீங்கள்தான். இதோ மீண்டும் இன்னொரு வருடத்தினை உங்கள் வாழ்த்துக்களுடன் ஆரம்பிக்கிறேன். உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  ReplyDelete
 8. ட்ரெய்லர் பார்த்ததில் இருந்தே இந்தப் படத்த்தை பார்க்கனும்னு ரொம்ப ஆர்வமா இருந்தேங்க.

  ஆனா... இங்க ட்ரெய்லர் மட்டும்தான் வந்துச்சி. லிமிடட் ரிலீஸ். டிவிடி வந்தப் பின்னாடிதான் பார்க்கனும்.

  ReplyDelete
 9. நண்பர் ஹாலிவுட் பாலா அவர்களே, கட்டாயமாக பாருங்கள். வித்தியாசமான படைப்பு. கருத்துப் பதிந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 10. அற்புதமான திரைப்படத்தை பற்றி பேசியுள்ளீர்கள் - நிச்சயம் பார்க்க வேண்டும். பிரமாண்ட மாயையில் இருந்து விலகி - நிஜம் இன்னும் நெருக்கத்தில் - வெகு குறைந்த கால அளவில் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தை இந்த திரைப்படம் அற்புதமாக சொல்வதாக நினைக்கிறேன். டி.வி.டிக்கு முயற்சி செய்கிறேன்..!! நன்றி..

  ReplyDelete
 11. நண்பர் முத்துக்குமார் அவர்களே, நிஜம்தானே உண்மையான பிரம்மாண்டம். அதன் ரூபத்தை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில்தான் கனவுகளை பிரம்மாண்டமாக்க வேண்டியிருக்கிறது. உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete