Saturday, December 26, 2009

மில்லேனியம் 1- பெண்களை வெறுக்கும் ஆண்கள்


அழகும், குளிரும் கலந்து, பொன்னிறக் கூந்தல் அழகிகளால் மேலும் அழகூட்டப்படுவதுமான சுவீடன் தேசத்தில் வெளியாகும் ஒர் மாத இதழ்தான் மில்லேனியம். மில்லேனியம் அதிகளவு வாசகர்களை கொண்ட ஒரு மாத இதழ் அல்ல இருப்பினும் அது தனக்கென ஓர் பெயரை தக்க வைத்துக்கொண்டிருக்கும் ஒரு இதழ்.

மில்லேனியத்தின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிப்பவர்களில் ஒருவன் Carl Mikael Blomkvist. மில்லேனியம் இதழில் பொருளாதாரம் குறித்த கட்டுரைகளை எழுதி வரும் ப்ளொம்கிவிஸ்ட், நிதி மோசடிகள், பங்குச்சந்தை ஊழல்கள், நேர்மையற்ற தொழிலதிபர்கள் குறித்து காரமான கட்டுரைகளை எழுதி வருகிறான்.

தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் Hans-Erik Wennerstrom எனும் தொழிலதிபர் குறித்த கட்டுரை ஒன்றை மில்லேனியத்தில் வெளியிடுகிறான் ப்ளொம்க்விஸ்ட். மில்லேனியத்தில் வெளிவந்த கட்டுரையை அடுத்து ப்ளொம்க்விஸ்ட் மீது வழக்கொன்றைத் தாக்கல் செய்கிறான் வென்னெர்ஸ்ட்ரம்.

நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்கில் தீர்ப்பு ப்ளொம்கிவிஸ்டிற்கு எதிரானதாக அமைந்து விடுகிறது. பண அபராதமும், மூன்றுமாத சிறைத்தண்டனையும் அவனிற்கு வழங்கித் தீர்ப்பளிக்கிறது நீதி மன்றம். இத்தீர்ப்பானது மில்லேனியம் பத்திரிகையின் மீது விழுந்த பலத்த அடியாகவும் இருக்கிறது. தோல்வியால் மனமுடையும் ப்ளொம்கிவிஸ்ட் மில்லேனியம் பத்திரிகையிலிருந்து வெளியேறுகிறான்.

சர்ச்சைக்குரிய வென்னெர்ஸ்ட்ரம் விவகாரத்தை முனைப்பாக தொடர்ந்து வருகிறான் சூவிடனின் வேஞ்சர் கம்பனிகளின் ஓய்வு பெற்ற அதிபரான Henrik Vanger. ப்ளொம்கிவிஸ்டைக் குறித்து நன்கு அறிந்து கொள்ள விரும்பும் ஹென்ரிக் வேஞ்சர் அதற்காக தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றை தன் வக்கீல் வழியாக தொடர்பு கொள்கிறான்.

தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குனர் ஆர்மானி தன் நிறுவனத்தில் சுதந்திரமாக பகுதி நேரப் பணியாற்றி வரும் Lisbeth Slander எனும் இளம் பெண்ணிடம் ப்ளொம்கிவிஸ்ட் பற்றிய அறிக்கை ஒன்றை தயாரிக்கும் பணியை ஓப்படைக்கிறான்.

n246161 ஸ்லாண்டர் வழங்கும் ப்ளொம்கிவிஸ்ட் குறித்த அறிக்கையால் திருப்தி கொள்ளும் வேன்ஞ்சர், ப்ளொம்கிவிஸ்டை தன் வக்கீல் மூலமாக தொடர்பு கொள்கிறான். வயதாகி விட்ட நிலையில் தளர்ந்து போன வேஞ்சரை சிரமம் பாராது ஒரு முறை ப்ளொம்கிவிஸ்ட் வந்து சந்திக்க வேண்டுமென அவனிடம் வேண்டிக் கொள்கிறான் வேஞ்சரின் வக்கீல்.

அவனிருந்த மனநிலையில் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளும் ப்ளொம்கிவிஸ்ட், வேஞ்சர் வசிக்கும் HEDEBY எனும் சிறுதீவிற்கு சென்று அவனைச் சந்திக்கிறான். தன் அழகிய வீட்டில் அவனை வரவேற்கும் வேஞ்சர், ப்ளொம்கிவிஸ்டை தான் அங்கு வரவழைத்ததற்கான காரணங்களை அவனிடம் கூற ஆரம்பிக்கிறான்.

வேஞ்சர் குடும்பத்தின் வரலாறு பற்றிய புத்தகம் ஒன்றை ப்ளொம்கிவிஸ்ட் எழுத வேண்டுமென்பது முதலாவது காரணம். நாற்பது வருடங்களிற்கு முன்பாக காணாமல் போய்விட்ட தன் சகோதரனின் மகளான Harriet மீதான மர்மத்தை ப்ளொம்கிவிஸ்ட் ரகசியமாக ஆராய வேண்டும் என்பது இரண்டாவது.

ஹாரியட் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டுமென்றே வேஞ்சர் கருதுகிறான். ஹாரியட் காணமல் போன வருடத்திலிருந்து தன் பிறந்த நாளின் போது மர்மமான நபர் ஒருவர் தனக்கு அனுப்பி வைக்கும் சட்டத்திற்குள் அடைக்கப்பட்ட உலர்ந்த பூக்களை ப்ளொம்கிவிஸ்டிடம் வேதனையுடன் காட்டுகிறான் வேஞ்சர். கற்சுவரொன்றின் மீது மர்மங்களை சுமந்தவாறு தொங்குகின்றன அந்த உலர்ந்த பூக்கள். ஹாரியட்டைக் கொலை செய்த நபர் தன் குடும்பத்திற்குள்ளேயே இருக்க வேண்டுமென திடமாக நம்புகிறான் வேஞ்சர்.

tyler2 வேஞ்சரின் விளக்கங்களைக் உன்னிப்பாகக் கேட்கும் ப்ளொம்கிவிஸ்ட், வேஞ்சர் பெரும் தொகைப் பணத்தை அவனிற்கு ஊதியமாக தர முன் வந்த போதும் இவ்விவகாரம் பெரும் நேர விரயம் என்று கூறி வேஞ்சரின் கோரிக்கையை ஏற்க மறுத்து விடுகிறான்.

இதனை ஏற்கனவே எதிர்பார்த்திருந்த வேஞ்சர் தன் துருப்புச் சீட்டை ப்ளொம்கிவிஸ்ட் முன் கவிழ்க்கிறான். ஒரு வருட கால ஒப்பந்தத்தில், ப்ளொம்கிவிஸ்ட் தான் வேண்டிக் கொண்ட காரியங்களிற்காக சிரத்தையுடன் பணியாற்றினால், ப்ளொம்கிவிஸ்ட் தன் உள்மனதில் ரகசியமாக திருப்பித்தாக்க துடித்துக் கொண்டிருக்கும் வென்னெர்ஸ்ட்ரம் குறித்த முக்கியமான சில தகவல்களை ப்ளொம்கிவிஸ்டிற்கு தான் வழங்குவதாக வேஞ்சர் தெரிவிக்கிறான்.

வென்னெர்ஸ்ட்ரம் ஒரு ஊழல் எலி என்பதை எவ்வழியிலாவது வெளிச்சத்திற்கு கொண்டு வரத்துடிக்கும் ப்ளொம்கிவிஸ்ட் வேஞ்சரின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டு வேஞ்சரின் குடும்பம், மற்றும் ஹாரியட் மீதான தன் ஆய்வுகளை ஆரம்பிக்கிறான். அவன் ஆய்வுகள் நாற்பது வருடங்களிற்கு மேலாக இருளின் ஆழத்தில் புதைந்து கிடைந்த மர்மங்களை வெளிக்கொணர ஆரம்பிக்கின்றன, தன் ஆய்வுகளில் தனக்கு உதவி புரிய தன் வாழ்வை ரகசியமாக வேவு பார்த்து அறிக்கை தயாரித்த திறமைசாலியான இளம் பெண் ஸ்லாண்டரை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான் ப்ளொம்கிவிஸ்ட். அவர்கள் கிண்டியெடுக்கும், ஹாரியட்டின் மறைவிற்குப் பின்னால் மறைந்திருக்கும் கொடூரமான உண்மைகள், அவர்கள் இருவரையும் அவர்களுடைய உயிரின் விளிம்புகளை நோக்கி தள்ளத் துடிக்கின்றன….

ஹாரியட்டிற்கு நடந்தது என்ன? வேஞ்சர் குடும்பத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்ன? வென்னெர்ஸ்ட்ரம்மின் நிஜ முகத்தை உலகிற்கு காட்டினானா ப்ளொம்கிவிஸ்ட் என்பதனை நாவலைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

6a00d8341c93ee53ef0120a5f07b90970c-800wi மொத்தம் மூன்று நாவல்களை கொண்ட மில்லேனியம் வரிசையில், முதல் நாவலான Man Som Hatar Kvinnor முதலில் சுவீடிய மொழியிலேயே வெளியாகியது. இந்நாவல்களை சூவிடனைச் சேர்ந்த Stieg Larsson எனும் எழுத்தாளார் எழுதினார். ஆங்கிலத்தில் இந்நாவலின் தலைப்பு The Girl With the Dragon Tattoo என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சுவீடிய மொழியில் தலைப்பு பெண்களை வெறுக்கும் ஆண்கள் என்றே பொருள்படுகிறது. பிரெஞ்சு மொழியில் வெளியாகிய நாவலின் தலைப்பும் இதை ஒத்திருக்கிறது. மாறாக ஆங்கிலத் தலைப்பு கதையின் முக்கிய பாத்திரமான ஸ்லாண்டரை அவளின் தோளில் இருக்கும் பச்சை வழி முன்னிறுத்துகிறது.[ ஆங்கில அட்டைப்படத்தை விட பிரெஞ்சு அட்டைப்படமே என்னைக் கவர்ந்தது]

காணாமல் போன பெண் ஒருத்தியின் மறைவில் ஒளிந்திருக்கும் மர்மங்களைத் தேடுவதாக கதை அமைக்கப்பட்டிருந்தாலும், சுவீடன் நாட்டில் பெண்கள் மீது இழைக்கப்படும் வன்முறையே நாவலின் முக்கியமான மையக்கருவாக அமைகிறது. சுவீடனில் பெண்கள் மேல் இழைக்கப்பட்ட வன்முறைகளின் புள்ளிவிபரங்களுடனேயே நாவலின் நான்கு பகுதிகளும் ஆரம்பமாகின்றன.

பெண்களை துன்புறுத்துவதில் இன்பம் பெறும் ஆண்கள், தொடர் கொலைஞர்கள் ஆகியோரின் உளவியல் மிகச்சுருக்கமான விதத்தில் வாசகர்களிற்கு கூறப்படுகிறது. சுவீடன் நாட்டின் இனவெறி மற்றும் நாஸிக் குழுக்களின் சரிதமும் சிறியளவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. கேடித் தொழிலதிபர்களின் நிழல் நடவடிக்கைகள் பற்றியும் நாவல் பேசுகிறது.

கதையின் மிக முக்கியமான பாத்திரம் இளம் பெண் ஸ்லாண்டர். உளவியல் சிக்கல்கள் உடையவள் என்று கணிக்கப்பட்டு, காப்பகங்களிலும் பரமாரிப்புக் காவலர்களின் கட்டுப்பாடுகளிற்குள்ளும் வாழும் அவள் தன் சிறு வயது முதலே வன்முறைக்குள்ளாக்கப்படும் ஒரு பெண்ணாக சித்தரிக்கப்படுகிறாள்.

தன் மேல் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளை வலியுடன் அவள் உள்வாங்கிக் கொண்டாலும், அந்த வன்முறைகளின் உக்கிரங்களால் அவள் நொருங்கி விடாது, தானே அவ்வன்முறைகளிற்கு எப்போதும் தக்க பதிலடி தருபவளாக அவள் இருக்கிறாள். பெண்களின் மீதான வன்முறைக்கு எதிராக நாவலாசிரியர் உருவாக்கியிருக்கும் சிறப்பான பாத்திரம் ஸ்லாண்டர்.

Millenium_Grande_affiche_m புறப்பார்வையில் சாதாரணத்திற்கும் கீழாக ஒதுக்கி தள்ளப்படக்கூடிய பெண்ணாக தோற்றமளிக்கும் ஸ்லாண்டர், சுவீடனிலேயே தலை சிறந்த Hacker ஆவாள்[ கணினிக்குள் கன்னமிடுதல்]. அவள் நினைவாற்றல் Photographic Memory வகையை சார்ந்தது.[ எதையும் இசகு பிசகில்லாது துல்லியமாக நினைவில் மீட்கும் நினைவாற்றல்] இவ்வாறான ஸ்லாண்டரின் திறமைகள் வெளிவரும் தருணங்கள் வாசகர்களை தாராளமாக திருப்திப்படுத்துகின்றன.

நாவலின் ஆரம்ப பகுதியில் வேஞ்சர் குடும்பம் குறித்த ப்ளொம்கிவிஸ்டின் தேடல்கள் மெதுவாகவே நகர்கின்றன. இதனை ஈடு செய்வது போல் ஸ்லாண்டர் எவ்வாறு தன்மீதான ஓர் வன்முறையை திட்டமிட்டு தகர்க்கிறாள் என்பது பரபரப்பாக வேறு தளத்தில் நாவலில் கூறப்படுகிறது. ஸ்லாண்டர் பாத்திரம் வாசகர்களின் மனதினுள் இறங்கிக் கொள்ளும் பகுதியும் இதுதான். நாவலின் பெண்பாத்திரங்கள் தங்கள் வாழ்க்கை மீது முழு அதிகாரமும், சுதந்திரமும் கொண்ட பெண்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

289c0n4 ப்ளொம்கிவிஸ்டின் தேடலில் ஸ்லாண்டர் இணைந்தபின் கதையில் சூடும், வேகமும் கணிசமாக அதிகரித்து விடுகிறது. அவர்களின் தேடலில் அவர்கள் கண்டறியும் உண்மைகள் வாசகனின் மனதைப் புரட்டிப் போட்டு விடக் கூடியவையாக இருக்கின்றன. ஹாரியட் மறைவின் பின் உள்ள மர்மங்கள் பயங்கரமானவை என்றால் கேடித் தொழிலதிபரான வென்னெர்ஸ்ட்ரம்மை ப்ளொம்கிவிஸ்டும், ஸ்லாண்டரும் தனித் தனியே தங்கள் பாணியில் தகர்க்கும் நாவலின் இறுதிப்பகுதி அட்டகாசம்.

கதையினை மர்மங்களும், திருப்பங்களும் ஆக்கிரமித்திருந்தாலும் மனித உறவுகள் வழியே வாசகர்களின் மென்மையான பக்கத்தை நாவலாசிரியர் தொட்டு விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்குப் பிடித்த மர்ம நாவலாசிரியர்களின் பெயர்களையும் நாவலில் தயங்காது நுழைத்திருக்கிறார் அவர்.

நாவலாசிரியர் Stieg Larsson 1954ல் பிறந்தவர். சுவீடன் கம்யூனிஸ்ட் உழைப்பாளர் லீக்கில் செயலாற்றியவர். விஞ்ஞான புனைகதைகள் மீது பிரியம் கொண்ட இவர் சுவீடனின் விஞ்ஞானக்கதைகள் ரசிகர் மன்றத்தலைவராக இருந்திருக்கிறார்.

ஸ்டீக் லார்சன், பின்பு தன்னை Expo Foundation எனும் அமைப்பில் இணைத்துக் கொண்டார். நவ நாஸியம், தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெள்ளை இன மாட்சிமை போன்றவற்றின் வளர்ச்சி சுவீடனின் இளம் சமுதாயத்தில் பரவி வருவதை தடுப்பதை இந்த அமைப்பு தன் நோக்கமாக கொண்டிருக்கிறது.

இந்த அமைப்பில் இருந்து வெளியாகிய EXPO எனும் சஞ்சிகைக்கு லார்சன் ஆசிரியராகவும் செயலாற்றினார். சுவீடனில் இயங்கும் இனவாத, தீவிர வலது சாரிக் குழுக்களை அடையாளம் காட்டுவதில் லார்சன் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். இதனால் அவர் அரசியல் எதிரிகளிடமிருந்து கொலை மிரட்டல்கள் அவரிற்கு வந்த வண்ணமேயிருந்தன.

08090bookssteig_330 2004ல் லார்சன் சுவீடனின் பிரபலமான Norstedts பதிப்பகத்தில் தன் மூன்று நாவல்களையும் கையளித்தார். அவரின் முதல் நாவலை பதிப்பகம் 2005ல் வெளியிட்டது. அந்நாவல் வாசகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. லார்சனின் மூன்று நாவல்களும் சுவீடனில் இன்று வரை 2.3 மில்லியன் பிரதிகள் விற்றுத்தீர்த்திருக்கின்றன.

லார்சனின் மூன்று நாவல்களும் இருபத்தி ஐந்து மொழிகளில் மொழிபெயர்கப்பட்டு உலக மர்ம நாவல்கள் வரிசையில் விற்பனைச் சாதனை படைத்திருக்கின்றன. பிரான்ஸில் இந்நாவல்களிற்கு இமாலாய வெற்றி கிடைத்தது. நாவல்களிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து முதல் நாவலானது சுவீடிய மொழியில் திரைப்படமாக உருவாகி சுவீடனில் சிறப்பான வெற்றியை ஈட்டியது.

தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் போது துரதிர்ஷ்டவசமாக அதனை வாங்கிக் கொள்ள லார்சனிற்கு வாய்ப்பிருக்கவில்லை. ஆம், தன் நாவல்களின் மகத்தான வெற்றியைக் காணும் முன்பே, தன் நாவல்கள் வெளிவரும் முன்பே 9/11/2004ல் இதயவலியால் இறந்து போனார் ஸ்டீக் லார்சன்.

இன்று ஸ்லாண்டர், ப்ளொம்கிவிஸ்ட் எனும் பாத்திரங்கள் உலகெங்கும் மர்மக் கதை ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான பாத்திரங்களாக மாறியிருப்பார்கள். நாவலின் வெற்றிக்கு பெண் வாசகிகளே பெரும் காரணமாக இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம். கனமான வாசிப்பிலிருந்து ஒரு கணம் விடுபட நீங்கள் நினைத்தால் இந்நாவலை நீங்கள் தயங்காது நாடலாம். ஆனால் பெண்களை வெறுக்கும் ஆண்களிற்கு மட்டும் இந்நாவல் அறவே பிடிக்காது என்பது உண்மை. [**]

சுவீடிய மொழி ட்ரெயிலர்

3 comments:

 1. காதலரே,

  சமுதாயத்தால் கட்டம் கட்டபட்ட ஒருவன், சமுதாயத்தால் ஒடுக்கபட்ட ஒருத்தி, என்ற இரு கதாபாத்திரங்கள் ஒன்று சேர்ந்து ஒரு துப்பறியும் பாணி கொண்ட இந்த தொடர் அருமையான ஒன்றாக தெரிபடுகிறது.

  ஆரம்பத்தில், தனக்கு சம்பந்தம் இல்லாத வென்னெர்ஸ்ட்ரம் கதபாத்திரத்தை பற்றி வாங்கர் ஏன் துப்பு துலக்குகிறார் என்று எண்ண தோன்றிற்று. ஆனால், அது ப்ளாம்க்விஸ்ட்டை தன் பணிக்கு அமர்த்த ஒரு தூண்டில் என்று அமைத்திருக்கும் கதாசிரியர் கதையோட்டம் அருமை. அதே வேளையில் இந்த காரியத்தை துப்புதுலக்க ஸ்லேன்டரை அணுகும் நபர், ஏன் அவள் மூலமே தொலைந்து போன உறவுக்கார பெண்ணின் மர்மத்தையும் விடை காண முயலவில்லை என்று உருத்துகிறது. ஒரு வேளை, இரு வேவ்வேறு முறை கொண்ட கதாபாத்திரங்களை கதைகளத்துக்குள் ஒரு சேர பணியாற்ற கதாசிரியர் முயன்ற யுக்தியா.. இல்லை, இந்த இருவரின் கூட்டணிக்கும், அந்த ரகசியங்களுக்கும் சம்பந்தம் உள்ளதா என்று கேள்விகள் பல எழுப்புகின்றன, தங்கள் அறிமும். நாவலை படித்தால் மட்டுமே உணர முடியும் என்று புரிகிறது.... கண்டிப்பாக முயல்கிறேன்.

  நீங்கள் கூறியது போல, பிரஞ்சு நாவலின் அட்டைபடம், அந்த முதுகு அழகியை விட நிரைய ஆழ்ந்த அர்த்தங்களை கூறுவதாக தான் எனக்கும் படுகிறது. அந்த பார்வையே பல மர்மங்களை உள்ளடக்கியது போல தெரிகிறதே.... ஆங்கில நாவல்கள் விற்பனைக்கு கவர்ச்சியான அட்டைபடமும், தலைப்பும் தேவை என்பது ஒரு மாற்ற முடியாத விடயம். அதை தான் பதிப்பாளர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் போலிருக்கிறது.

  இப்படிபட்ட நாவல்கள் வேற்றுமொழியில் இருக்கும் ஒரே காரணத்தால், ஹாலிவுட் படாதிபதிகள் கைவசம் தஞ்சம் அடையாதிருப்பது, அவர்களின் சமீப கால படவரிசைகளில் உள்ள கதை பஞ்சத்திற்கு காரணத்தை கற்பிக்கிறது. ஆங்கில இலக்கியங்களை தவிர வேறு பக்கம் பார்வையை அவர்கள் திருப்பாத வரை, அது நிரந்தரமே.


  உங்கள் தளம் காமிக்ஸ் என்ற வட்டத்தை விட்டு வெளியுலகங்களில் சஞ்சாரம் செய்வதில் இருந்து, உங்கள் நடையில் பல ஊடகங்களுக்கு எனக்கு அறிமுகம் கிடைத்து கொண்டிருக்கிறது. எழுத்துகள் நிறைந்த நாவல்கள் மேல் இருந்த ஒருவித பயத்தை, உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் விலக செய்து வருகின்றன. விரைவில், உங்கள் அளவிற்கு இல்லையென்றாலும், தட்டு தடுமாறி ஒரு நாவலை படித்து முடிக்க உண்டான பொருமை எனக்கும் கைப்படும் என்ற நம்பிக்கை வர தொடங்கியிருக்கிறது. அது கைகூடுமா என்று காலம் பதில் சொல்லும்...

  இன்னொரு அருமையான நாவல் தொடருக்கான அறிமுகத்திற்கு நன்றி. உங்கள் எழுத்துகள் மூலம் ஆர்வம் அதிகரிக்கபட்ட ஸ்லான்டர்ஸ் கதாபாத்திரத்தின் தாக்கம் இன்னும் அடங்காமல், கருத்தை முடிக்கிறேன்.

  பி.கு.: பெண்களை வெறுக்கும் ஆண்கள்... இப்படிபட்ட ஒரு கூட்டமும் இருக்குமோ... அப்படி இருந்தால் அவர்கள் பெண்ணியத்தை முழுவதும் கிரகிக்கவில்லை என்றுதானே அர்த்தமாகும் ? :) சும்மாவா Men are from Mars, Women are from Venus என்று பீடிகை போடுகிறார்கள் :)

  ReplyDelete
 2. நண்பரே
  மீண்டும் நாவல் பற்றிய பகிர்வுக்கு நன்றி பல. இந்த பதிவை உங்களின் மிக சிறந்த பதிவாக நான் கருதுகிறேன். பெண்களின் மீது செயல் படும் வன்முறைகள் உலகம் எங்கும் பரவிக்கிடக்கிறது.
  இம்மாதிரியான ஆக்கங்கள் பெண்களின் இன்னல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதோடு மட்டுமில்லாமல் கண்டிக்கதகுத்தவை என்பதை சுட்டி காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும் மக்களை கவரும் விறுவிறுப்பான நடையில் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. புதிய ஆண்டில் ஆங்கில வழி நாவல் வாங்கிவிடுவேன். மிக சிறப்பான பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 3. ரஃபிக், நீங்கள் கூறியதுபோல் கதையைப் படிக்கும்போது வேஞ்சர் ஏன் ஸ்லாண்டரை தன் தேவைக்காக நாடவில்லை என்பது புரியும். பிரெஞ்சு மூலத்தின் அட்டையில் உள்ள அந்த மர்மம் ஆங்கில மூலத்தின் அட்டையில் இல்லை என்பது தெளிவு. கவர்ச்சியால்தான் ஒன்றை அதிகம் விற்கமுடியும் எனும் வேதனையான நிலை உலகெங்கும் பரவிக்கிடக்கிறது, இது மாறப்போவதில்லை. உங்கள் விரிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் வேல்கண்ணன் அவர்களே, பெண்கள் மீதான வன்முறை குறித்து நீங்கள் சொல்வது உண்மையே. பெண்களை காக்கும் பல சட்டங்கள் கொண்ட மேலை நாடுகளில் கூட பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்தபடியே இருக்கிறது. உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete