Friday, December 4, 2009

வெண்பனியில் ஒரு கிறிஸ்துமஸ் பாடல்


tn-le-drole-de-noel-de-scrooge-2009-13582-2047188084 கிறிஸ்துமஸ் காலத்தின் வெண்பனி, தன் நுண்ணிய சிதறல்களால் லண்டன் நகரைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறது. டிசம்பர் மாதத்தின் குளிரான இரவினூடு, மென்கூனல் ஒன்றை தன் முதுகில் ஏற்றிக் கொண்டு பனி பரவிய தெருக்களில் நடந்து செல்கிறான் வயதேறித் தளர்ந்த அந்த முதியவன்.

தெரு விளக்குகளின் பிரகாசத்தினால் முற்றிலும் கலைக்கப்பட்டுவிடாத இருளினூடு தன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருக்கும் அந்த முதியவனின் பார்வையில் கசப்பு ஊறிப்போயிருக்கிறது. அந்த முதியவனின் பெயர் எபெனேஸர் ஸ்கூருச் என்பதாகும்.

எபெனேஸர் ஸ்கூருச்சை சுருக்கமாக, ஒரு கஞ்சன் என்று கூறிவிடலாம். தன் வியாபாரப் பங்காளி ஜாக்கோப் மார்லியின் மரணத்தில் கூட இரண்டு பென்சுக்களை இழக்க விரும்பாதவன் அவன். பிறர் மீதான அன்பும், காருண்யமும் அவனிற்கு அன்னியமானவை.

ஸ்கூருச் தன் உறவினர்களிடமிருந்து விலகியே இருக்கிறான். உறவுகளின் அன்பான அழைப்புக்களையும் அவன் தட்டிக் கழித்து விடுகிறான். தனக்கு கீழ் பணி புரியும் குமாஸ்தாவான பாப் கிராட்ஷிட் என்பவனின் அவல நிலை குறித்து அவன் மனம் அலட்டிக் கொள்வதேயில்லை. பாப் கிராட்ஷிட்டை மிக மோசமாக வேலை வாங்குகிறான் ஸ்கூருச்.

அவன் வாழ்வில் அவனிற்கு தேவையான ஒன்று, பணம். பணம் தேடுவதற்காக மட்டுமே தன் வாழ்வின் மணித்துளிகள் ஒவ்வொன்றையும் ஸ்கூருச் அர்பணித்திருக்கிறான். பணத்தை ஈட்டித்தர முடியாத எதுவுமே அவன் பார்வையில் வீணான ஒன்றாகப் படுகிறது.

le-drole-de-noel-de-scrooge-2009-13582-451697508 le-drole-de-noel-de-scrooge-2009-13582-1412865459 பணத்தை செலவு செய்வது என்பதை கடுமையாக வெறுக்கும் ஸ்கூருச்சிற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலம் தாங்கிக் கொள்ள முடியாத எரிச்சலையும், சினத்தையும் தருவதாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் மனிதர்களிடம் ஊற்றெடுத்துப் பொங்கும் அன்பை அவனிற்குப் பிடிக்கவில்லை. பண்டிகைக் காலத்தின்போது மக்கள் செலவு செய்யும் பணம் வீண் செலவு என்று பொருமுகிறான் அவன். பண்டிகைக்காக ஒரு நாள் விடுமுறை வழங்குவதையும் அவன் வெறுக்கிறான்.

ஸ்கூருச் தெருவில் நடந்து செல்கையில் பனியில் சறுக்கி விளையாடும் சிறுவர்கள் அடங்கிப் போகிறார்கள். லண்டன் தெருக்களின் முனைகளில் நின்று, தூவும் பனியின் மத்தியில் கிறிஸ்துமஸ் இசைக்கீதங்களை பாடும் குழுவினர் ஸ்கூருச்சைக் கண்டதும் பாடுவதை நிறுத்துகிறார்கள், சில்லறை சேகரிக்கும் குவளையையும் மறைக்கிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் வசதியற்றவர்களிற்கு உதவி செய்வதற்காக நிதி சேகரிக்கும் அமைப்புக்களின் உறுப்பினர்களை ஓட ஓட விரட்டி அடிக்கிறான் ஸ்கூருச்.

தன் தனிமையையும், பணத்தையும் மட்டுமே தன்னுடன் கொண்ட ஸ்கூருச்சின் வீட்டில் ஒளிரும் மெழுகுவர்த்தி கூட அந்த வீட்டின் இருளைப் போக்குவதற்கு வலிமையற்றதாகவே இருக்கிறது.

லண்டன் நகர மக்களின் ஊதாரித்தனத்தை எண்ணி மனதிற்குள் புறுபுறுத்தவாறே தன் வீட்டை அடையும் ஸ்கூருச், தன் வீட்டின் வாசல் கதவை திறக்க முயல்கையில் அந்தக் கதவின் பிடியில் ஏழு வருடங்களிற்கு முன்பாக இறந்து போன தன் வியாபாரப் பங்காளி ஜாக்கோப் மார்லியின் கோரமான முகம் தெரிவதைக் கண்டு வெலவெலத்துப் போகிறான்.

ஒரு வழியாக தன்னைச் சுதாரித்துக் கொள்ளும் ஸ்கூருச் இது வெறும் பிரமை என எண்ணியவாறே தன் வீட்டினுள் நுழைந்து தூங்கச் செல்வதற்கு தயாராகிறான். ஆனால் வீட்டினுள் வினோதமான சத்தங்கள் கேட்க ஆரம்பிக்கின்றன. ஸ்கூருச்சின் படுக்கை அறையிலிருக்கும் சிறு மணிகள் கிறுக்குப் பிடித்தாற் போல் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. ஸ்கூருச்சின் மனதில் பயம் உருவாகி அவன் நடுங்க ஆரம்பிக்கின்றான். அவன் அச்சம் கொண்டது சரிதான் என்பதை நிரூபிப்பதைப் போலவே உடலில் பிணைக்கப்பட்டிருக்கும் கனமான சங்கிலிகளுடன் ஸ்கூருச் முன் குதிக்கிறது ஜாக்கோப் மார்லியின் ஆவி.

le-drole-de-noel-de-scrooge-2009-13582-1670616268 வாழும் போது தான் செய்யத்தவறிய செயல்களால் இறந்த பின்னும் தான் வேதனைப்பட வேண்டியுள்ளதாக ஸ்கூருச்சிடம் கதறியபடியே ஒப்பாரி வைக்கிறது மார்லியின் ஆவி. எபனேசர் ஸ்கூருச்சிற்கு இந்த உலகில் இன்னும் வாய்ப்பு இருக்கும் போதே அவன் தன் நடத்தைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அந்த ஆவி ஸ்கூருச்சை எச்சரிக்கை செய்கிறது. கிறிஸ்துமஸின் முன்னிரவு விடியும் முன்பாக ஸ்கூருச்சை மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகள் வந்து சந்திக்கும் என்பதையும் தெரிவித்து விட்டு தன் அவல வாழ்க்கையை தொடர மிதந்தபடியே செல்கிறது மார்லியின் ஆவி.

இரவின் ஓட்டத்தில் மார்லியின் ஆவி கூறியபடியே கடந்தகால, நிகழ்கால, வருங்காலங்களை சேர்ந்த மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகள் ஸ்கூருச்சை வந்து சந்திக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஸ்கூருச்சினை தங்களிற்குரிய காலங்களிற்கு இட்டுச் செல்கின்றன. அந்த ஆவிகள் ஸ்கூருச்சின் முன்பாக திரை விரிக்கும் காட்சிகள் மூலம் மனம் மாறி புது வாழ்வொன்றை ஆரம்பிக்கும் ஸ்கூருச், லண்டன் நகரிலேயே பெரும் கொடை வள்ளல் எனவும், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஸ்கூருச்சை அடித்துக் கொள்ள வேறு எவருமே லண்டனில் இல்லை எனவும் பெயர் எடுத்துக் கொள்வதே மீதிக்கதை.

பிரபலமான ஆங்கில நாவலாசிரியரான சார்லஸ் டிக்கின்ஸ் அவர்களால் எழுதப்பட்டு 1843ம் ஆண்டில் வெளியான A Christmas Carol எனும் நாவலைத் தழுவி அதே தலைப்பில் இத்திரைப்படத்தினை இயக்கியிருப்பவர் Forrest Gump, Beowulf ஆகியதிரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் Robert Zemeckis.

நிஜ நடிகர்களின் அசைவுகளைப் படமாக்கி அவற்றை 3D அனிமேஷன் வடிவில் உருவாக்கிவிடும் Performance Capture எனும் தொழில் நுட்பத்தில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

le-drole-de-noel-de-scrooge-2009-13582-653268359 டிக்கின்ஸின் நாவலில் வரும் ஸ்கூருச் எனும் புகழ் பெற்ற கதாபாத்திரத்தை திரையில் கொணர அவர் மாடலாக தேர்ந்தெடுத்தது உலக மகா முகச்சுளிப்பு சேஷ்டைகளின் ராஜாவான Jim Carrey அவர்களை. ஸ்கூருச் பாத்திரத்திற்கு ஜிம் கேரி வழங்கியிருக்கும் நடை, சீறல், ஏளனச் சிரிப்பு, கண்கலங்கும் பார்வை, குதூகல நடனம் போன்றவை அட்டகாசம். அதே போன்று திரைப்படத்தில் தோன்றும் மூன்று கிறிஸ்துமஸ் ஆவிகளிற்குமான மாடலும் கேரிதான். வருங்கால கிறிஸ்துமஸ் ஆவி ஜிம் கேரியிடம் அதிகம் வேலை வாங்கவில்லை. கறுப்புத்துணி ஒன்றை உடல் முழுக்கப் போர்த்திக் கொண்டு அங்கேயும் இங்கேயும் விரலை நீட்டுவதுதான் அந்த ஆவியின் அபாராமான நடிப்பு.[ இந்தக் கால சிறுசுகள் ஆவிகளைப் பார்த்து பயப்படுவார்களா என்ன!!]

ஸ்கூருச்சின் குமாஸ்தாவான பாப் கிராட்ஷிட் பாத்திரத்திற்கு மாடல் தந்திருப்பவர் நடிகர் Gary Oldman. படத்தில் இவரது பாத்திரமும், நடிப்பும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. வேதனையான தருணங்களில் அவரின் உணர்ச்சி வெளிப்பாடுகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன. ஜாக்கோப் மார்லியின் ஆவிக்கும் இவரே மாடலாக இருந்திருக்கிறார்.

19ம் நூற்றாண்டு லண்டன் நகரை அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். வறுமையில் வாடும் மக்கள், செல்வம் கொழிக்கும் குடும்பங்கள் என மக்களின் வாழ்க்கை தர வேறுபாடுகளையும் படம் தெளிவாகக் காட்டுகிறது. வெண் பனி பொழியும் கிறிஸ்துமஸ் கால லண்டன் நகரக் காட்சிகள் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முன்கூட்டிய சுவையை பார்வையாளன் மனதில் கிளர்ந்தெழச் செய்கிறது.

le-drole-de-noel-de-scrooge-2009-13582-992206759 இவ்வாறாக தொழில்நுட்பத்தின் தரத்திலும், காட்சி உருவாக்கலின் அழகிலும் அசர வைக்கும் இத்திரைப்படமானது ரசிகர்களின் மென்மையான உணர்வுகளை தொடத் தவறிவிடுகிறது.

கடந்தகால, நிகழ்கால கிறிஸ்துமஸ் ஆவிகள் விரிக்கும் காட்சிகள் பார்வையாளன் மனதில் மென்மையான உணர்வுகளை துளிர்க்கச் செய்கின்றன, இந்த துளிர்ப்புகளையெல்லாம் இயக்குனர் செழிப்பாக வளர்த்தெடுத்து அழகான ஒர் கிறிஸ்துமஸ் மரமாக்கியிருக்க வேண்டாமா? மாறாக 3D ரசிகர்களின் வியப்புக் கூச்சல்களை அள்ள வேண்டி உருவாக்கப்பட்டிருக்கும் ஏராளமான காட்சிகளின் கால்களில் அழுந்தி இந்த மென் உணர்வுகள் பரிதாபமாக நசுக்கப்பட்டு விடுகின்றன.

அட! மனம் திருந்தி புது வாழ்வை ஆரம்பிக்கும் ஸ்கூருச்சின் வாழ்வையாவது இயக்குனர் ஓர் நீண்ட கொண்டாட்டம் ஆக்கியிருக்க கூடாதா? சில கண நேரம் வானில் வெடித்து மறையும் வண்ணமிகு வான வேடிக்கையென பட்டென முடிந்து விடுகிறது திரைப்படம்.

தன் அற்புதமான கற்பனைத்திறனாலும், பிரம்மிக்க வைக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் மிக அழகாகவும், இனிமையாகவும் இயக்குனர் ஸெமெகிஸ் உருவாக்கியிருக்கும் இந்தக் கிறிஸ்துமஸ் பாடல் தன் ஆன்மாவைத் தொலைத்து விட்டல்லவா ஒலிக்கிறது. [**]
ட்ரெயிலர்


மிக்கியின் கிறிஸ்துமஸ் பாடல் [1983]

15 comments:

 1. அன்பு நண்பரே,

  கிறிஸ்மஸ் சமயங்களில் இதுபோன்ற திரைப்படங்களை எடுத்து கல்லா நிரப்பும் வணிக தந்திரம் சில சமயம் நேரகெடுபிடி காரணமாக கதையில் சில மாற்றங்களை செய்வதுண்டு. அதையும் மீறி சில நல்ல படங்கள் இதே கதையோட்டத்தில் வருவதுண்டு. உதாரணமாக, போலர் எக்ஸ்பிரஸ் என்ற படம் இவரேதான் இயக்குநர் என நினைக்கிறேன்.

  பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கும். ஜிம் கேரி மனதிற்கு பிடித்த நடிகர். How the Grinch stole the chirstmas என்ற படத்தில் பின்னியெடுத்திப்பார்.

  டிஸ்னியின் தவளையும் இளவரசியும் வெளிவருகிறது. விமர்சனத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
 2. உங்க தாராள மனசு, படத்துக்கு கொடுத்த ஸ்டார்ஸை வச்சே தெரியுதுங்க தல! :) :) :)

  ReplyDelete
 3. You make me hungry… I love to watch animation movies… Charles Dickens was a great story teller… I read another one story which also in comics format. I forget that comics name and published (poonthaler?). Thank for this nice post …..

  ReplyDelete
 4. காதலரே,

  கிறிஸ்துமஸ் பெருநாள் நெருங்கும் போது வழக்கமாக பல சின்ன பட்ஜெட் அனிமேஷன் படங்கள் வெளிவரும், இந்த முறை அவ்வரிசையில் டிஸ்னியும் தன்னை ஐக்கியம் ஆக்கி இருக்கிறது.

  ஜிம் கேரே, டிஸ்னியுடன் இணைந்து பணியாற்றும் முதல் படம் என்று இந்த படத்தை பற்றி முற்செய்தி அறிந்ததிலிருந்து, படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  உங்கள் விமரிசனம் மூலம் டைரக்டர், கிராபிக்ஸ் மாயையில் சற்று கோட்டை விட்டிருக்கிறார் போல தெரிகிறது. சமீப கால டிஸ்னி படங்கள் பிக்சார் போல நம்மை மனதளவில் பாதிக்காமல் போய் விடுவது, அவர்கள் நிர்வாக அமைப்பில் ஏதோ கோளாறு உள்ளது என்பதை பகிரங்கதானே படுத்துகிறது...

  மற்றவர்கள் முழிப்பதற்குள், டிஸ்னி முழித்துக்கொண்டால் தேவலம்.

  ஜிம் கேரேவின் முக பாவனைகளை பார்க்கவாவது இந்த படத்தை தவற விட மாட்டேன். மனிதர் இப்போதெல்லாம் நிறைய படங்களில் தென்படாத வருத்தத்தை (ஒரு வேளை அவர் நடிப்புக்கு இணையான கதைகளை கதாசிரியர்களால் உருவாக்க முடியவில்லையோ ?) இந்த படம் மூலம் தான் நிவர்த்தி செய்ய முடியும் இல்லையா ?

  சுட சுட விமர்சனங்கள், தொடர்ந்து செலுத்தி எம்மை எக்கணமும் மகிழ்வியுங்கள், நண்பரே.

  ReplyDelete
 5. சொல்ல மறந்துவிட்டேன், இந்த ஸ்கூருஜ் கதாபாத்திரம், கிட்டதட்ட டிஸ்னியின் அங்கிள் ஸ்கூரூஜ் கதாபாத்திரத்தை போன்றே கஞ்சத்தனத்தில் வித்தகராக தெரியவில்லை ?

  அனேகமாக டிக்கன்ஸின் இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டுதான், டிஸ்னி கதாசிரியர் கார்ல் பார்க்ஸ் இதை அடிப்படையாக கொண்டுதான் அந்த உலக புகழ்பெற்ற கார்டூன் கதாபாத்திரத்தை படைத்திருப்பாரோ என்னவோ ?

  சும்மாவா இந்த அமர நாவலை 25 முறைக்கும் மேலாக திரைபடமாக எடுத்திருப்பார்கள் :)

  ReplyDelete
 6. படம் (சமீப கால டிஸ்னி படங்கள் போலாவே) படு மொக்கைன்னு கேள்விப்பட்டேனே!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 7. நல்ல பகிர்வுக்கு நன்றி :-)

  ReplyDelete
 8. பாடசாலையில் படிக்கும் காலத்தில் ஆங்கில இலக்கியம் படிக்கும் போது படித்த சாள்ஸ் டிக்கன்ஸ்சின் கதை இது.

  நூறு ஆண்டுகள் கடந்தபின்னரும் மனதை வருடும் இனிமையான கதை. பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 9. ஆஹா!

  மிக்கியின் கிறிஸ்துமஸ் பாடல் கார்ட்டூனை வெளியிட்டு எம்மை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியதற்கு நன்றிகள்!

  சிறுவயது முதல் இந்த கார்ட்டூனிற்கு நான் பெரும் ரசிகன்!

  கண்டிப்பாக இது 3D அனிமேஷன் திரைப்படத்தை விட சிறந்தது என்பதில் ஐயமேதுமில்லை!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 10. காதலரே ,
  சிறுவயதில் கிறிஸ்துமஸ் சமயம் போடப்படும் கிறிஸ்துமஸ் பற்றிய கார்ட்டூன்களை மிகவும் ரசித்து பார்த்ததுண்டு . அதில் மிகவும் பிடித்த கார்ட்டூன் The Grinch Who Stole Christmas http://www.youtube.com/watch?v=U3v-kz4lWrA . இதையும் ஜிம் கர்ரி படமாக நடித்துள்ளார் . படம் அவ்வளவாக வெற்றி அடையவில்லை . படத்தின் பெயர் How the Grinch Stole Christmas. ஆனால் கார்ட்டூன் நன்றாக இருக்கும் .
  A Christmas Carol படம் அலுப்பூட்டுவதாக இருப்பதாக கூறினார்கள் . நானும் இப்படம் பார்க்க வேண்டும் .

  அன்புடன் ,
  லக்கி லிமட்
  காமிக்ஸ் உலவல்

  ReplyDelete
 11. தலைவர் அவர்களே, படத்தை முற்று முழுதாக ஒதுக்கிவிட முடியாதபடிக்கு அதில் ரசிக்க கூடிய காட்சிகளும் உண்டு என்பது என் கருத்து. நீங்கள் வாய்ப்பு கிடைத்தால் இப்படத்தை பார்க்க வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள். மிக்கியின் அனிமேஷன் குறும்படம் 3D படத்தைவிட மனதோடு ஒன்றிவிடுவதில் சந்தேகம் இல்லை. அதிலும் கதவைப் பூட்டிக்கொண்டு வீட்டிற்கு கிளம்புகையில் கடையின் பெயர்ப்பலகையை தன் கைத்தடியால் ஓர் தட்டுத் தட்டும் ஸ்கூருச் அருமை. உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி தலைவரே.

  நண்பர் சிங்கக்குட்டி அவர்களே, ஊக்கம் தரும் உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் ஜே, உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் லக்கிலிமட், படத்தைக் கட்டாயம் பாருங்கள் வருங்கால கிறிஸ்துமஸ் ஆவி வரும் கட்டங்கள் மட்டுமே சலிப்பைத்தரும். மிகுதி ரசிக்கும் படியாகவே உள்ளது.கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 12. ஜோஸ்,சினிமா என்பது ஓர் வணிகம் எனும் போது அதனைப்பற்றி அதிகம் கூற ஏதுமில்லையே. இந்த மார்கழி மாதம் மட்டும் முழுகுடும்பம் பார்த்து மகிழக் கூடிய ஒரு டஜன் படங்கள் வெளியாகின்றன. பள்ளிவிடுமுறை என்பதும் ஒர் காரணம். தவளையும் இளவரசியும் ஜனவரியின் இறுதி வாரத்திலேயே இங்கு வெளியாகிறது பார்த்தபின் பதிவை இடுகிறேன்.முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

  நண்பர் ஹாலிவூட் பாலா அவர்களே, இந்த திரைப்படத்தைப் பார்த்தபின்னும் நான் கஞ்சப்பயலாக இருக்கமுடியாதே :) உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 13. நண்பர் ரமேஷ் அவர்களே டிக்கின்ஸ் திருப்திப்படுத்தாத இளம்நெஞ்சங்கள் உண்டா என்ன? உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ரஃபிக்,இப்படத்திற்கு டிஸ்னி தாராளமாக செலவு செய்திருக்கிறது என்றே எண்ணுகிறேன். இயக்குனர் தொழில்நுட்ப வேட்கையில் மனித உணர்வுகளை ஆழமாக வடிக்கத் தவறியிருக்கிறார். இருப்பினும் படம் அமெரிக்க ஃபாக்ஸ் ஆபிசில் நான்காம் இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. டிக்கின்ஸின் பாத்திரத்தின் பாதிப்பில் உருவானதுதான் அங்கிள் ஸ்கூருச் பாத்திரம் என்கிறார்கள். உங்கள் கருத்துக்களினைப் படித்தபின் தேடிக் கண்டடைந்ததே மிக்கியின் கிறிஸ்துமஸ் பாடல். என் விமர்சனங்கள் ஆறிய விமர்சனங்கள்தாம் நண்பரே, என்ன செய்வது குதிரைக்கு வயதாகி விட்டதே.தேடவைத்த கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே. நீண்ட கருத்துக்களை அனுமதிக்காத ஃப்ளாக்கர் ஓழிக, பாண்டிமைனர் வாழ்க என் உரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 14. சிறந்த கதை. கடந்த ஞாயிறு எங்கள் சேச்ch நத்தார் பெருவிழாவில் யூத்ஸ் இக்கதையை நாடகமாக நடித்திருந்தார்கள். மீண்டும் ஒரு சிறந்த விமர்சனப் பதிவை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. Tharani, உலகின் பல பகுதிகளில் கிறிஸ்துமஸ் கால ஒளிவிழாக்களில் இக்கதை நாடகமாக தொடர்ந்தும் நடிக்கப்பட்டு வருகிறது. கதை இன்றைய காலத்திற்கும் பொருந்திப்போகிறது அல்லவா. வாழ்த்துக்களிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

  ReplyDelete