Sunday, February 27, 2011

தில்


பதினான்கு வயது நிரம்பிய சிறுமி Mattie Ross, தன் தந்தையை கொலை செய்தவனான Tom Chaney ஐ சட்டத்தின் முன்பாக நிறுத்தி வஞ்சம் தீர்ப்பதற்காக Rooster Cogburn எனும் சட்டத்தின் காவலனை தெரிவு செய்கிறாள். தன் தந்தையை கொன்றவனை தேடிச் செல்லும் தேடுதல் வேட்டையில், மார்ஷல் ரூஸ்டர் கொக்பர்னுடன் பிடிவாதமாக தானும் இணைந்து கொள்கிறாள் மேட்டி ரொஸ்…..

ஒரு குடிகார மார்ஷல், வஞ்சம் தீர்ப்பதற்கு திடமான மனவுறுதி கொண்ட ஒரு சிறுமி, ஒரு கொலைக் குற்றவாளி, அதே கொலைக் குற்றவாளியை நீண்டகாலாமக தேடி வரும் LaBoeuf எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர், இவர்கள் இணைந்து செல்லும் மனித வேட்டை. இதுதான் Joel மற்றும் Ethan Coen இயக்கியிருக்கும் True Grit எனும் நாவலின் சமீபத்திய தழுவல் வடிவத்தின் சுருக்கமான கதை. Charles Portis என்பவர் எழுதிய இந்நாவல் ஏற்கனவே வெஸ்டெர்ன் ஜெமினி கணேசன் ஜான் வெய்ன் அவர்களின் நடிப்பில் 1969ல் வெள்ளித்திரைகளில் வெளியாகி இருக்கிறது.

படத்தின் பிரதான பாத்திரமாக சிறுமி மேட்டி ரொஸ்ஸைத்தான் என்னால் காண முடிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே அசத்த ஆரம்பிக்கும் மேட்டி ரொஸ், இறுதி வரை அதனை தொடர்கிறாள். இறந்துபோன தந்தைக்குப் பதிலாக வியாபார பேச்சு வார்த்தைகளில் அவள் ஈடுபடும் காட்சி அபாரம். தன் வாதங்களால் சிறுமி மேட்டி ரொஸ் தனக்கு வேண்டியவைகளை பெரும்பாலான சமயங்களில் வென்றெடுத்துக் கொள்ளுகிறாள். குடிக்கு விலை போன மார்ஷலான ரூஸ்டர் கொக்பர்ன்கூட அவள் வாதத் திறமையை கண்டு வியந்துதான் போகிறான். வஞசம், அதற்கான ஒரு விலையையும் தன்னுடன் கொண்டே அலைந்து திரிகிறது என்பதையும் இறுதியில் மாட்டி ரொஸ் அறிந்து கொள்கிறாள். ஆனால் அவள் மனவுறுதி குறைவதே இல்லை.

நீதியை நிலை நாட்ட துப்பாக்கி இன்றியமையாத ஒன்றாகும் எனும் நிலைப்பாட்டைக் கொண்ட மேற்கில், ரூஸ்டர் கொக்பர்ன் [Jeff Bridges] போன்ற மார்ஷல்களின் திறமை அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்திய குற்றவாளிகளின் எண்ணிக்கையைவிட, தம் துப்பாக்கிகளால் அவர்கள் பலி கொண்ட குற்றவாளிகளின் எண்ணிக்கையினாலேயே அளவிடப்படுகிறது. குற்றவாளிகளை கையாள்வதில் ரூஸ்டர் கொக்பர்னின் முறைகள் குறித்த எதிர்ப்புக்கள் சட்டத்தின் முன்பாக வாதிக்கப்பட்டாலும், ரூஸ்டர் அவற்றை மதிப்பதேயில்லை. அவன் வழங்கும் நீதி அவன் கொண்ட அறங்களை சார்ந்தது. ஆனால் திரைப்படத்தில் ரூஸ்டர் பாத்திரம் ஒரு குடிகாரனாக, தன் வாழ்க்கை குறித்து அலட்டிக் கொள்ளாத ஒருவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. வயதாகி, உடம்பு பெருத்து முன்புபோல் சக்தி நிறைந்த நிலையில் செயற்பட முடியாவிடிலும் கூட எடுத்த காரியத்தை முடிப்பதில் தனக்குரிய எல்லைகளை அறிந்திருக்கிறான் ரூஸ்டர். தன் திறமைகள் மேல் சந்தேகம் கொள்பவர்கள் முன்பாக தன் திறமைகளை செயற்படுத்திக் காட்டுவதில் அவன் ஒரு கோமாளிபோல் நடந்து கொள்கிறான். திரைப்படத்தின் இறுதியில் அவன் வாழ்வு ஒரு சர்க்கஸில் நிறைவுறுவதாக காட்டியிருப்பார்கள். ஆனால் உண்மையில் அவன் வாழ்வு முழுவதுமே ஒரு சர்க்கஸ்தான் என்பதை நுட்பமாக சொல்லியிருக்கிறார்கள் இயக்குன சகோதரர்கள்.

true-grit-2011-18464-2069476055டாம் சேனி எனும் கொலைஞனை நீண்ட காலமாக தேடி வரும் லாவொஃப் எனும் டெக்ஸாஸ் ரேஞ்சர் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மாட் டாமொனின். ஒப்பனை மற்றும் ஆடை அலங்காரங்கள், குறிப்பாக சுங்கான் புகைக்கும் பாணி என்பன சிறப்பாக இருக்கிறது. அடங்க மறுக்கும் குதிரைகளை அடக்குவதுபோல் சிறுமி மேட்டி ரொஸ் மீது வன்முறையையும் பிரயோகிக்க தயங்காத பாத்திரம் லாவொஃபினுடையது. குறிபார்த்து சுடுவதிலும், தடங்களை பகுப்பாய்வதிலும் நிபுணனான இப்பாத்திரம் எந்த ஒரு நடிகராலும் சிறப்பாக செய்யப்படக்கூடிய ஒன்றே. மாட் டாமொனின் பெயர் அதன் பிரபலத்திற்காக பயன்பட்டுப்போக அவர் நடிப்பு வறண்ட நிலங்களில் நீரைத் தேடி அலையும் ஆன்மாவாக அலைகிறது. டாம் சேனியாக வேடமேற்றிருக்கும் சிறப்பான கலைஞர் ஜோஸ் ப்ரோலான் கூட தன் திறமையை காட்டும் வாய்ப்பு சிறிதளவேனும் வழங்கப்படாத நிலையில் பரிதாபமாக தோன்றி மறைகிறார். இதெல்லாம் கோஎன் சகோதரர்களிற்கான சோற்றுக் கடனா என்று தெரிய ஆர்வமாகவிருக்கிறேன்.

கோஎன் சகோதர்களின் நுட்பமான நகைச்சுவை படத்தில் ஆங்காங்கே மிளிர்கிறது, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள குற்றவாளிகளில் வெள்ளை இனத்தவர்க்கு கடைசி வார்த்தை பேச உரிமை இருப்பதையும், அமெரிக்க பூர்வ குடிகளிற்கு அந்த உரிமை மறுக்கப்படுவதையும், பூர்வ குடிச் சிறுவர்களை மார்ஷல் ரூஸ்டர் காக்பர்ன் தன் பூட்ஸ் கால்களால் உதைத்து மகிழ்வதையும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வண்ணம் காட்சிப்படுத்தும் அதே சமயத்தில் அதன் தீவிரத்தையும் இயக்குனர்கள் உணர்த்திவிடுகிறார்கள். தேடல் பயணத்தின்போது ரூஸ்டரிற்கும், லாவொஃபிற்கும் இடையில் நிகழும் கிண்டல் கலந்த பரிமாற்றங்கள் சிரிக்க வைக்கின்றன, குறிப்பாக துப்பாக்கி சுடும் திறமையை நிரூபிக்க ரூஸ்டர் போதையில் எடுக்கும் முயற்சிகள். எதற்காக இந்தப் பாத்திரம் என கேள்வி எழுப்ப வைக்கும் ஒரு பாத்திரம் படத்தில் உண்டு. கரடித்தோல் அணிந்து சடலங்களிற்காக பண்டமாற்று செய்யும் மருத்துவர்! பாத்திரம்தான் அது. வினோதமான ஒலி எழுப்பி மகிழும் ஒரு கொள்ளையனையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

படத்தின் ஒளிப்பதிவு அபாரம். அதனுடன் கூடவே வியக்க வைப்பது சிறுமி மேட்டி ரொஸ்ஸாக வேடமேற்று ஆச்சர்யப்படுத்தும் வகையில் திறமையை காட்டியிருக்கும் இளம் நடிகை Hailee Stenfeld ன் அபாரமான திறமை. இவர் திறமையின் முன்பாக ஜெஃப் பிரிட்ஜ்ஜஸின் நடிப்பு பிரகாசம் குன்றியே காணப்படுகிறது. அதன் காரணமாகவே அவரை மட்டும் முன்னிறுத்தும் போஸ்டரை நான் இப்பதிவிற்காகத் தெரிவு செய்தேன்.ஆனால் வெஸ்டர்ன் படைப்பு ஒன்றில் தம் பாணிக் காட்சிப்படுத்தல் தவிர்த்து புதிதாக கோஎன் சகோதரர்கள் என்ன பிறப்பித்திருக்கிறார்கள் எனும் கேள்விக்கு படத்தில் விடை இல்லை எனவே தோன்றுகிறது. True Grit ஐ விட அற்புதமான வெஸ்டர்ன்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். அந்த வகையில் கோஎன் சகோதர்களின் இத்திரைப்படம் சிறிய ஏமாற்றமே. சுழல் புதிர்கள் நிறைந்த வழமையான அவர்கள் கதை சொல்லலிருந்து அவர்கள் இத்திரைப்படத்தில் விடுப்பட்டிருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம். [**]

ட்ரெயிலர்

16 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு.

  ரெண்டு ஸ்டார்களுக்கு மேலே கொடுக்க மனம் வராத காதலரை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.


  கிங் விஸ்வா
  தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

  ReplyDelete
 2. வெளிநடப்பு செஞ்சாலும் இந்த கமென்ட் தாங்க முடியாததாகி விட்டது.

  //ஏற்கனவே வெஸ்டெர்ன் ஜெமினி கணேசன் ஜான் வெய்ன் அவர்களின் நடிப்பில் 1969ல் வெள்ளித்திரைகளில் வெளியாகி இருக்கிறது//

  அவரு வாத்தியார். அவரைப்போய் ஜெமினி கணேசன் என்று ஒப்பீடு செய்ததைக் கண்டித்து ஏற்கனவே வெளிநடப்பு செய்த இந்த பதிவிலிருந்து மறுபடியும் வெளிநடப்பு செய்கிறேன். நம்ம எம்ஜியார் அவர்களே தன்னுடைய திரை ஐடல் ஆக ஏற்றுக்கொண்டவர் ஜான் வெய்ன்.

  கிங் விஸ்வா
  தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

  ReplyDelete
 3. // சுழல் புதிர்கள் நிறைந்த வழமையான அவர்கள் கதை சொல்லலிருந்து அவர்கள் இத்திரைப்படத்தில் விடுப்பட்டிருப்பதும் இதற்கான காரணமாக இருக்கலாம்//

  இது போன்ற பிரச்சினைகள் எனக்கும் வரும். பழைய விஷயங்கள் என்ற மூட்டையை நாம் முதுகில் சுமந்துகொண்டே இருப்பதால்தான் புதிய முயற்சியையும் அவற்றுடனே ஒப்பிட்டு கொள்ளும் மனப்பாங்கு நமக்கு தோன்றுகிறது.

  பை தி வே, இந்த நாவலை படித்து பாருங்கள். ஒரு நல்ல அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.


  கிங் விஸ்வா
  தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

  ReplyDelete
 4. // வெஸ்டெர்ன் ஜெமினி கணேசன் ஜான் வெய்ன் //

  வாத்தியாரைப் போய் சாம்பாருன்னுட்டீங்களே?!!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 5. ஆனால் ஜான் வெய்ன் நடித்த படத்தை ஜெஃப் பிரிட்ஜஸை வைத்து ரீமேக்கியிருப்பது எம்ஜியார் படத்தை ஜெமினி கணேசனை வைத்து ரீமேக்கினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருக்கும்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 6. விஸ்வா, வெளிநடப்பு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நீங்கள், தலைவர் ஆகியோர் ஜான் வெய்னின் ரசிகர்கள் என்பதை அறிந்ததாலேயே நகைச்சுவைக்காக ஜெமினி கணேசனை சேர்த்தேன். இருந்தாலும் தமிழ் வாத்தியாருடன் போட்டி போட இயலுமா :)). புதியவைகளை சுமக்க நமக்கு என்ன தயக்கம். இப்படைப்பு மகத்தான ஒன்றல்ல என்பது என் தாழ்மையான கருத்து. மேலும் இது புதிய முயற்சியானாலும் புதுமைகள் இல்லாத முயற்சியாகவே எனக்குத் தோன்றுகிறது. நாவலை வாய்ப்புக் கிடைக்கும்போது படித்துவிடுகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  தலைவர் அவர்களே, ஜான் வெய்னிற்கு இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் கிடைத்ததாமே? ஜெப்ஃ பிரிட்ஜஸின் நடிப்பை ஜான் வெய்னுடன் ஒப்பிட்டவர்கள் ஜான் வெய்னின் நடிப்பையே சிறப்பென்கிறார்கள். இருந்தாலும் ஜெஃப் பிரிட்ஜ்ஜஸை நீங்கள் சாம்பார் என வாரியிருக்க வேண்டாம் :))[ செம கிண்டல் மூடில் இருக்கிறீர்கள் போல]

  ReplyDelete
 7. நேத்து தான் இந்த படத்தை பாந்த்தேன்... உண்மையிலேயே பல வசனங்கள் எனக்கு சுத்தமாக புரியவில்லை... அதனால் கதையும் புரியவில்லை :(

  ஒளிப்பதிவு மிக அபாரம்... கடைசி சண்டைக்காட்சியும் அருமையாக படமாக்கபட்டு இருந்தது..

  திரும்பவும் சப்-டைட்டில்களுடன் பார்க்க வேண்டும்..

  ReplyDelete
 8. வெறும்.. ரெண்டு ஸ்டார் கொடுத்த உங்களுக்கு என்ன தில் இருக்கும்னு யோசிக்கிறேன்.

  நான் படத்தை ‘சீரியஸ் மேன்’கூட கம்பேர் பண்ணி, கோன் ப்ரதர்ஸ் பழைய ஃபார்முக்கு வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன். நீங்க மற்ற வெஸ்டன் படங்களை கம்பேர் பண்ணுறீங்க. :)

  விஸ்வாவுக்கு இதன் ஒரிஜினலும், எனக்கு இந்தப் படமும் பெட்டரா தெரியுது. நீங்க சொன்ன ஒரு விசயம் ஒத்துக்கனும். இது வழக்கமான கோன் படமில்லை. ஒருவேளை இவங்களுக்கு PG-13 படம் எடுக்கறது சாத்தியமில்லையோ?

  ReplyDelete
 9. நண்பர் kanagu, அங்கு திரையரங்குகளில் சப்டைட்டில்கள் போடமாட்டார்களா? தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சுண்டெலி, ஒரு வெஸ்டெர்னை ஏனைய வெஸ்டர்ன்களுடன் ஒப்பிடுவது எனக்கு இயல்பான ஒன்றாகும். சீரியஸ் மேனுடன் இதனை நான் ஏன் ஒப்பிட வேண்டும். அந்த எண்ணமே எனக்கு எழவில்லை:) நீங்கள் கூறுவதுபோல் கோஎன் சகோதரர்கள் வழமையான முறுக்கிற்கு திரும்பியிருக்கலாம், ஆனால் இந்த திரைப்படத்தில் நான் அப்படி எதையும் உணரவில்லை. இதனை விட நோ கண்ட்ரி ஃபோர் ஓல்ட் மேன் எனக்கு பிடித்திருந்தது. ஸ்டார்கள் வழங்க தில் இருக்க வேண்டுமா, என் ரசனையே போதுமானது என்றுதான் நான் நம்புகிறேன் :) //ஒருவேளை இவங்களுக்கு PG-13 படம் எடுக்கறது சாத்தியமில்லையோ// சாத்தியம் இல்லை என்பதாலோ சாத்தியம் என்பதாலோ மட்டும் படைப்புக்கள் உன்னதமாவதில்லை என்பதை அனுபவஸ்தர் நீங்கள் அறிவீர்கள், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 10. //விஸ்வாவுக்கு இதன் ஒரிஜினலும், எனக்கு இந்தப் படமும் பெட்டரா தெரியுது//

  வேறு வழியே இல்லை. நானெல்லாம் ஜான் வெய்ன் அவர்களின் கொலைவெறி ரசிகன். அவரைப்போல இன்னுமொரு வெஸ்டர்ன் நடிகர் இருக்க வாய்ப்பே இல்லை. சந்தேகம் இருந்தால் தி ஸ்டேஜ்கோச் படத்தில் வாத்தியாரின் அறிமுக காட்சியை பாருங்கள். என்ன ஸ்டைல், என்ன பெர்சனாலிட்டி, என்ன ஒரு ஆளுமை. மற்றபடி கோயன் சகோதரர்களின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் இது.  //ஜான் வெய்னிற்கு இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் கிடைத்ததாமே// அது சும்மா கொடுத்தார்கள். இவருக்கு ஆஸ்கார் விருது கொடுக்காவிட்டால் குற்றமாகிவிடும் என்று நினைத்து அப்படி கொடுத்தார்கள்.

  ரெட் ரிவர், தி சர்ச்சர்ஸ் போன்ற சிறந்த படங்களிற்கு கிடைக்காத ஆஸ்கர் இதற்க்கு கிடைத்தது என்றால் வேறென்ன சொல்ல முடியும்? அதுவும் இல்லாமல் வாத்தியாரே அந்த ஆஸ்கர் விருது பற்றி கிண்டல் செய்து "Wow! If I'd Known That, I'd Have Put That Patch on 35 Years Earlier" என்று சொல்லி இருப்பார்.

  ReplyDelete
 11. நண்பரே..நானெல்லாம் கன் பைட் காஞ்சனா,ரிவால்வர் ரீட்டா,எங்க பாட்டன் சொத்து பார்த்து வளர்ந்தவன்.உங்களை நம்பித்தான் ட்ரூ கிரிட் பார்க்க வேண்டும்

  ReplyDelete
 12. விஸ்வா, தங்கள் கருத்துக்களிற்கும், தகவல்களிற்கும் நன்றி நண்பரே.

  உலக சினிமா ரசிகரே, நானும் கூட அந்தப் படங்களை பார்த்திருக்கிறேன். ட்ரூ க்ரிட்டை நீங்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 13. //நண்பரே..நானெல்லாம் கன் பைட் காஞ்சனா,ரிவால்வர் ரீட்டா,எங்க பாட்டன் சொத்து பார்த்து வளர்ந்தவன்//

  இதில் கன் பைட் காஞ்சனா டிவிடி எந்த கம்பெனி வெளியிட்டார்கள் என்ற விவரம் தெரிந்தால் தெரிவிக்கவும். ரிவால்வர் ரீட்டா டிவிடி படு மட்டமான ப்ரிண்டே கிடைக்கிறது. பார்க்கவே பிடிக்கவில்லை.

  ஆனால் ராஜ் வீடியோ விஷன் (?!) எங்க பாட்டன் சொத்து படத்தின் கலெக்டர்ஸ் எடிஷன் டிவிடியை வெளியிட்டுள்ளார்கள். ஆகையால் அது ஒக்கே.

  ReplyDelete
 14. இந்தப் படத்துக்கு ரெண்டு இஸ்டாரு போட்ட காதலரை கண்டித்து , நானும் வெளிநடப்பு செய்கிறேன். எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்தது. இதற்கு இந்த வார இறுதியில் விமர்சனம் போடலாம் என்று நினைத்தால், அவர் இதற்கு ரெண்டு ஸ்டாரு போட்டுட்டாரு... :-) ... இது வலைப்பதிவு மோசடி :-) .. இதோ ஆரம்பிக்கிறேன் பிரியாணி போராட்டம் :-)

  ReplyDelete
 15. நண்பர் கருந்தேள், நானும் பிரியாணி போராட்டத்தில் குதிக்கிறேன் கூடவே ஒயின் அருந்தும் போராட்டம், இரண்டு ஸ்டார் மோசடி செய்த காதலன் ஒழிக, ஒழிக :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 16. place this sharing button at end of every post.......i would like to share ur essays with my friends without leaving ur blog...

  http://tellafriend.socialtwist.com/


  for demo of tell a friend sharing button see here at end of post
  http://mayadevar.blogspot.com/

  ReplyDelete