Saturday, February 12, 2011

கொஞ்சம் திக்குங்கள் என் ராஜாவே


நிர்ப்பந்தங்கள் மிகுந்த சூழ்நிலைகளில் 1936ல் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூட்டிக் கொள்கிறான் ஆறாம் ஜார்ஜ். சிறுவயது முதலே அவனிற்கு இருக்கும் திக்குவாய் காரணமாக அவன் தாழ்வுணர்வு கொண்டவனாகவும், மக்கள் முன்னிலையில் உரையாற்றுவதற்கு சிரமப்படுபவனாகவும் இருக்கிறான்….

Colin Firth அமைதியான நடிகர்களின் பட்டியலில் சத்தமின்று இடம்பிடித்துக் கொள்ளும் தகுதி வாய்ந்தவர். அவருடன் சில படங்களில் இணைந்து நடித்த நடிகரான Hugh Grant பெற்ற புகழின் அளவுகூட அவரிற்கு கிடைத்திருக்கவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானதே. மங்கிய ஒளியில் தோன்றி மறையும் ஒரு நிழல் நாயகனாகவே அவரின் திரை வாழ்வு பெரும்பாலும் கழிந்திருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு வெளியாகிய A Single Man எனும் திரைப்படம் காலின் ஃபர்த் எனும் நடிகர் மேல் பல ரசிகர்கள் கொண்டிருந்த எண்ணத்தை தவிடு பொடியாக்கியது. அத்திரைப்படத்தில் அவரின் அமைதியான பண்பட்ட நடிப்பு பலரின் விழிகளையும் வியப்பால் விரிய வைத்தது. அந்த திரைப்படம் ஒரு தற்செயல் அல்ல என்பதை நிரூபிக்கும் வண்ணமாக வந்து சேர்ந்திருக்கிறது The King's Speech எனும் திரைப்படம். திரைப்படத்தை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Tom Hooper இயக்கியிருக்கிறார்.

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியில், கண்காட்சி ஒன்றை நிறைவு செய்து உரையாற்ற வேண்டிய இளவரசன் ஆல்பர்ட், தன் திக்குவாய் காரணமாக சில சொற்களிற்கு மேல் அந்த உரையை தொடர முடியாத நிலையில் திணறுவதையும், பெரும் மக்கள் திரளின் முன்பாக அவமானத்தில் அவன் குறுகிப்போவதையும் நாம் காண்கிறோம். காலங்கள் ஒடுகின்றன, ஆறாம் ஜார்ஜ் மன்னனாக முடிசூடிக் கொண்ட நிலையில் இளவரசன் ஆல்பர்ட், ஹிட்லர் தன் நாட்டு மக்கள் முன்னிலையில் ஆவேசமாக உரையாற்றுவதையும், ஹிட்லரின் பேச்சில் மதிமயங்கி கிடக்கும் ஜனத்திரள் அவன் பேச்சினால் உந்தப்பட்டு, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஆர்ப்பரிப்பதையும் திரையில் பார்த்துக் கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். இந்த இரு காட்சிகளின் ஒப்பீடுமே மக்களிடம் உரையாடல் என்பதன் முக்கியத்துவத்தை சிறப்பாக உணர்த்திவிடுகின்றன. தன் பேச்சால் மக்களை கவர முடியாத எவருமே அவர்கள் மனதில் இடம்பிடிப்பதில்லை, மக்களை நெருங்கிவிடுவதில்லை, மக்களும் அவர்கள் மேல் நம்பிக்கை கொள்வதில்லை. மேடைப் பேச்சுக்களை நம்பி ஏமாறி வரும் மக்கள் கூட்டம் இன்றும் உண்டு. ஆனால் இளவரசன் ஆல்பர்ட்டின் தலையாய பிரச்சினையோ தன் குறைப்பிரசவ வார்த்தைகளால் பிறரை எதிர்கொள்வது என்பதாக இருக்கிறது.

le-discours-d-un-roi-2011-18825-1562528584 இளவரசன் ஆல்பர்ட் தன் திக்குவாயை குணப்படுத்துவதற்காக பல மருத்துவர்களை அணுகுகிறான், ஆனால் எந்த சிகிச்சையும் அவனிற்கு பலனளிப்பதில்லை. குணப்படுத்த முடியாத இந்தக் குறை அவனை எளிதில் கோபம் கொள்ள வைப்பவனாக மாற்றுகிறது, குடி மக்கள் மத்தியில் அவன் பிரசன்னமாகும் போதெல்லாம் இந்த திக்குவாயால் அவன் தலை குனிய வேண்டியிருக்கிறது. தன் ஆளுமையை அவன் முடக்கி கொள்ள வேண்டியிருக்கிறது. அவன் மனைவியான எலிசபெத் அவனை எப்போதும் தேற்றுபவளாகவே இருக்கிறாள். அவள் தோள்கள் அவன் குனிந்த தலையை அன்புடன் தாங்கிக் கொள்கின்றன. அவர்கள் தோள்கள் அவர்களிருவரினதும் கண்ணீரையும் தாங்கிக் கொள்ளும் அனுபவத்தில் தேர்ந்திருக்கின்றன. எலிசபெத்தான் Lionel Logue எனும் சாதாரண ஒரு பேச்சுத்திறன் சிகிச்சையாளனிடம் இளவரசன் ஆல்பர்ட்டை அழைத்து செல்கிறாள். தன் கணவனின் இடர் களைவதில் அவள் இடையுறாது முன்னிற்கிறாள்.

லியனல் லோக், ஒரு வெற்றி பெறாத மேடை நடிகன். இங்கிலாந்தின் ராஜ குடும்பத்தை சேர்ந்தவன் என்பதற்காக இளவரசன் ஆல்பர்ட்டிற்கு சிறப்பான சலுகைகளையோ, கவனிப்பையோ அவன் வழங்குவதில்லை. தன்னிடம் சிகிச்சை பெறும் சாதாரண ஒரு நபரைப் போன்றே இளவரசனையும் லியனல் கவனித்துக் கொள்கிறான். ஆனால் லியனல் தன்னிடம் சிகிச்சை பெற வருபவர்களின் மீது அதிக அக்கறை கொள்பவனாக இருக்கிறான். அவர்கள் குணமாக வேண்டும் என்பதற்காக அவன் சில வேளைகளில் எல்லைகளை மீறவும் தயங்குவதில்லை.

the-king-s-speech-2010-18825-953387368 ஆரம்பத்தில் லியனலின் நிபந்தனைகள் காரணமாக லியனலை தூக்கி எறியும் ஆல்பர்ட் பின் அவன் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பிக்கிறான். இருவரிற்குமிடையில் மிகையற்ற நட்பு ஒன்று உருவாகிறது. அந்த நட்பு அதன் எல்லைகளை அறிந்திருக்கிறது. அதற்குரிய பிரிவுகளையும், சந்தேகங்களையும் அது கண்டு மீள்கிறது. லியனல் லோக் பாத்திரத்தில் பண்பட்ட நடிகரான Geoffrey Rush அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஒரு சில்லிங்கிற்காக ஆல்பர்ட்டை சீண்டுவதும், தன் வித்தியாசமான பயிற்சி முறைகளால் ஆல்பர்ட்டை புரட்டி எடுப்பதும், தன் துடுக்குத்தனமான வசனங்களால் இளவரசனை எதிர் கொள்வதுமாக சிறப்பான பாத்திரம் அவரிற்கு. மன்னன் முடிசூடும் இருக்கையில் அவர் அமர்ந்திருந்து ஆல்பர்டை சீண்டி, தூண்டியெழுப்பும் காட்சி கலக்கலாக இருக்கிறது. தனக்கு நன்றி செலுத்த வேண்டுமானால் தன்னை ஒரு Knight ஆக்கலாம் என ஆறாம் ஜார்ஜ்ஜிடம் அவர் அடிக்கும் கிண்டல், அக்மார்க் ஆங்கிலேயக் கிண்டல்.

திக்குவாய் குறைபாட்டால் தாழ்வுணர்வு கொண்ட ஆல்பர்ட்டை, தன் பயிற்சிகள் மூலம் அவன் அகத்துடனே மோதச் செய்கிறான் லியனல். தன் மீது நமிக்கையிழந்திருந்த ஆல்பர்ட் மெதுமெதுவாக தன்னம்பிக்கை பெற ஆரம்பிக்கிறான். படிப்படியாக அவன் சொற்கள் திக்கும் அளவு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அவன் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூட வேண்டியிருக்கிறது. ஹிட்லரின் படைகளை எதிர்த்து செய்யப் போகும் போரிற்காக அவன் இங்கிலாந்து நாட்டு மக்களிடம் வானொலி வழியாக உரையாற்ற வேண்டியிருக்கும் மிகப் பெரிய சவாலும் அவனை வந்து அடைகிறது. அந்த சவாலை அவன் எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதே படத்தின் உச்சக்கட்டமாக அமைகிறது.

le-discours-d-un-roi-2011-18825-713197437 படம் ஆரம்பித்தது முதலே தன் அற்புதமான நடிப்பால் ரசிகர்களின் உள்ளங்களை அள்ளி எடுக்கிறார் காலின் ஃபர்த். தன் இயலாமையால் தனிமையில் அழுது வெம்புவதானாலும், தன்னிடம் கதை சொல்லுமாறு கேட்கும் தன் குழந்தைகளிடம் திக்கியவாறு கதை கூறுவதானாலும், தன் தந்தை இறந்த நிலையில் லியனல் லோக்கிடம் தன் மனதை திறப்பதானாலும், தனக்கெதிராக சதி செய்கிறாய் எனக் குற்றம் சாட்டும் தன் மூத்த சகோதரனிடம் தன் கருத்தை கூற முடியாமல் திக்குவதானாலும், அதே சகோதரனிற்காக லியனிலிடம் நீ துரோகி என வெடிப்பதானாலும், மக்களிடம் ஆற்ற வேண்டிய உரைக்காக அழுத்தங்கள் நிறைந்தநிலையில் பரபரவென தயாராவதானாலும் காலின் ஃபர்த் திரைப்படத்தில் வழங்கியிருப்பது அசத்த வைக்கும் நடிப்பு. மதிப்பை தேடி வரவைக்கும் நடிப்பு. இயக்குனர் மிகச் சிறப்பான ஒரு பாத்திரத்தை காலின் ஃபர்த்திடமிருந்து உருவி எடுத்திருக்கிறார். அந்த உரைக்கு முன் அவர் எடுக்கும் ஆயத்தங்கள் ஜாலியான அதிரடி.

the-king-s-speech-2010-18825-1864527704 படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் வானொலி உரையை முடித்தபின் காலின் ஃபர்த் தன் உடல்மொழியில் கொண்டுவரும் மாற்றம் அபாரமானது. கம்பீரமும், ராஜகளையும் சூடி அவர் அரண்மனையில் வீறு பெற்று நடந்து வரும் அத்தருணம் படத்தின் மிக முக்கியமான தருணம். இளவரசன் எட்வர்ட்டின் காதல் விவகாரங்கள், இங்கிலாந்தின் அரசியல் என்பன திரைப்படத்தின் நிதானமான வேகத்தை மேலும் நிதானமாக்கி விடுகின்றன. காலின் ஃபர்த்தின் மனைவியாக வேடமேற்றிருக்கும் ஹெலனா பொன்ஹாம் கார்ட்டரை இப்படியான ஒரு அடக்கமான வேடத்தில் காண்பதே ஆச்சர்யமான ஒன்றாக இருக்கிறது. டிம் பர்ட்டனின் அடுத்த இயக்கத்தில் வாய்ப்புக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.

வழமை போலவே இசை மனதை நெகிழ வைக்க உதவுகிறது. நல்ல திரைக்கதை, சிறப்பான இயக்கம் என்றிருந்தாலும் படத்தை தூக்கி நிறுத்துவது காலின் ஃபர்த்தும், ஜியோப்ஃரி ரஷ்ஷுமே. ஆஸ்கார் விருது எல்லாம் இந்த பண்பட்ட கலைஞர்களின் திறமைக்கு சரியான அங்கீகாரமாக அமையப் போவதில்லை என்பதே என் கருத்து. மன்னனின் இந்த உரை, தித்தித்தித்-திக்கும் ராஜோபசாரம். [***]

ட்ரெயிலர்

16 comments:

 1. காதலரே,

  இன்றுதான் டிவிடி கையில் வந்து உள்ளது. இரவு பார்த்து விடுவேன். ஆஸ்கார் கிடைக்குமா?

  கிங் விஸ்வா
  தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

  ReplyDelete
 2. காதலரே,

  பதிவின் தலைப்பு சுஜாதாவின் நாவலின் தாக்கமா? நில்லுங்கள் ராஜாவே.

  கிங் விஸ்வா
  தமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்

  ReplyDelete
 3. மீ த செகண்டு!

  பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 4. அன்பு நண்பரே,

  காலின் பர்த் என்ற ஒரு சிறப்பான நடிகர் இந்த திரைப்படம் மூலம் நிறைய பேருக்கு தெரிய வந்திருக்கிறது. குறைந்த பட்சம் இரண்டு ஆஸ்கார் விருதுகளாவது இப்படத்திற்கு வழங்கப்பட வேண்டும் என நினைக்கிறேன். பார்க்கலாம்.

  நான் இரசித்த அனைத்து கட்டங்களையெல்லாம் நீங்களும் இரசித்துள்ளீர்கள். ராஜநடை என்றால் எப்படியிருக்கும் என்பதை கடைசியில் நடித்தும் காட்டியுள்ளார்

  வெறும் மூன்று ஸ்டார்கள்தானா? வன்மையாக கண்டிக்கிறேன். :)

  ReplyDelete
 5. 8.5 மதிப்பெண்களை பெற்றுள்ளது மற்றும் நல்ல கதை... BDRip வந்தவுடன் பார்த்து விடவேண்டும்......

  ReplyDelete
 6. >>> விரைவில் பார்த்து விடுவேன். விமர்சனத்திற்கு நன்றி!

  ReplyDelete
 7. விஸ்வா, படத்தை பார்த்து விட்டீர்களா? உங்களிற்கு பிடித்திருந்ததா? சுஜாதாவின் தலைப்பு + இன்னொரு கதையின் தலைப்பு தந்த பாதிப்புகள் இணைந்தே பதிவின் தலைப்பு உருவாகியது. இரண்டாம் கதை ஆனந்தவிகடனில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பாம் ஸ்குவாட் அணி எனும் க்ளு தருகிறேன் தலைப்பை கண்டுபிடியுங்கள் :) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  தலைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.

  நண்பர் nis, நன்றி.

  ஜோஸ், நீங்கள் இப்படத்திற்கு கிடைக்கும் என்றால் அதற்கு கிடைக்காது என்றே கடந்தகால அனுபவங்களை வைத்து ஊகிக்கமுடிகிறது :) உரையின் பின்பாக ஃபர்த்தின் உடல்மொழியே மாறிவிடும், அது அருமையாக இருக்கும். கண்டிப்புக்களை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் நான்கு ஸ்டார்கள் என்பது முடியாத ஒன்று :) மாறாக நாம் பாண்டியாஸ்கார் விருதுகளை வழங்கி மகிழலாம். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் ரமேஷ், நல்ல படம், வாய்ப்புக் கிடைக்கும்போது பார்த்து மகிழுங்கள். கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சிவகுமார், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 8. //மேடைப் பேச்சுக்களை நம்பி ஏமாறி வரும் மக்கள் கூட்டம் இன்றும் உண்டு. //

  எவ்வளவு உண்மை.தமிழகத்திற்கென்றே எழுதப்பட்டது போல இருக்கிறது.ஆனால்,change என்ற ஒற்றை வார்த்தை மூலம் ஒபாமாவிடம் ஏமாந்ததை விட,தமிழகம் மோசமில்லை.தமிழகத்தில் ரெண்டு வார்த்தை.'வோட்டுக்குப் பணம்'. :)

  //8.5 மதிப்பெண்களை பெற்றுள்ளது//

  நண்பரே,நல்ல படத்திற்கும் ratingஇற்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.

  படம் குறித்து நீர் சொன்ன போதே பார்க்கவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.இப்போது பதிவு மேலும் ஆர்வப்படுத்துகிறது.

  ReplyDelete
 9. //கணவனின் இடர் களைவதில் அவள் இடையுறாது முன்னிற்கிறாள். //

  மனைவி சொல்லே மந்திரம் :))
  .

  ReplyDelete
 10. நண்பர் இலுமினாட்டி, படத்தை நல்ல பிரதியில் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் :) கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சிபி, அதே.. அதே :))

  ReplyDelete
 11. பேக்கு என்பதை, backku என்று படிக்க வேண்டுகிறேன்

  ReplyDelete
 12. காலின் ஃபிர்த்தை எனக்கும் புடிக்குமாக்கும்... அவரது Hope Springs படம் எனக்கு ஓரளவு புடிக்கும்.

  ReplyDelete
 13. குத்து நூலகத்தில், ரேப் டிராகனின் சிதறல்களை அள்ளித் தெளித்திட வேண்டுகிறேன்

  ReplyDelete
 14. நண்பர் கருந்தேள், குத்து நூலகத்தில் ரேப் ட்ராகனை தடை செய்து விட்டார்கள் :)) வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.

  ReplyDelete