Saturday, February 26, 2011

வானகப் பருந்து


sh1பிரபல மங்கா கதாசிரியரும் ஓவியருமான ஜிரோ டனிகுச்சி அவர்களிற்கு தொலைமேற்கின் கவ்பாய் சாகசக்கதைகள் மீது அலாதியான பிரியம் உண்டு. Mac Coy, Blueberry, Comanche, Jonathan Cartland போன்ற காமிக்ஸ் கதைகள் தன்னை பெரிதும் கவர்ந்தவையாக இருக்கின்றன என அவர் தெரிவித்திருக்கிறார் தொலைமேற்கை களமாகக் கொண்டு ஒரு மங்காவை படைத்திட வேண்டுமென்பது நீண்டகாலமாக அவர் மனதில் கசியும் ஆசையாக இருந்தே வந்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக ஜப்பானிய மங்கா வாசக அன்பர்களின் ரசனையானது கவ்பாய் சாகசங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டதாக இருந்ததில்லை. கவ்பாய் கதை ஒன்றை உருவாக்க தகுந்த ஒரு தருணத்திற்காக காத்திருந்த ஜிரோ டனிகுச்சி, அதற்கான வாய்ப்பு உருவாகியபோது படைத்திட்ட கதைதான் Sky Hawk.

1868ல் தம் தலைமையின் வீழ்ச்சியின் பின்னாக ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புலம் பெயர்கிறார்கள் Hikosaburo, Manzo எனும் இரு சமுராய் வீரர்கள். கலிபோர்னியாவின் தங்கச் சுரங்க முதலாளி ஒருவனால் ஏமாற்றப்படும் இரு சமுராய்களும் அதன் பின்பாக வட அமெரிக்காவின் வையொமிங் பிரதேசத்தில் தங்கம் அகழ்பவர்களாக தம் வாழ்க்கையை தொடர்கிறார்கள். இந்த முயற்சியிலும் அவர்களிற்கு பெருத்த ஏமாற்றமே கிட்டுகிறது. ஒரு நாள் தமது உணவுத்தேவைக்காக மலைக்காட்டில் வேட்டையாடச் செல்லும் ஹிக்கோ, அங்கு ஒரு குழந்தையை பிரசவித்த நிலையில், உயிரிற்காக போராடிக் கொண்டிருக்கும் ஒரு செவ்விந்தியப் பெண்ணைக் காப்பாற்றுகிறான். இதனால் அந்த செவ்விந்தியப் பெண்ணை அடிமையாக வாங்கிய வெள்ளையனின் அடியாட்களுடன் அவன் மோத வேண்டிய சந்தர்ப்பம் உருவாகிறது. இந்த மோதல் காரணமாக ஹிக்கோ, மான்ஸோ எனும் இரு சமுராய்களிற்கும் Oglala எனும் செவ்விந்திய குழுவைச் சேர்ந்த வீரனான Crazy Horse ன் அறிமுகமும் , நட்பும் கிடைக்கப் பெறுகிறது.

கிரேஸி ஹார்ஸின் அழைப்பை ஏற்கும் இரு சமுராய்களும் அவர்களின் வதிவிடத்தை நீங்கி கிரேஸி ஹார்ஸின் கிராமத்தில் தங்கிவாழச் செல்கிறார்கள். இந்த இரு சமுராய்களும் எவ்வாறு செவ்விந்தியர்களால் சகோதரர்களாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்பதையும், எந்தவிதமான மனக்கிலேசங்களும் அற்ற நிலையில் அமெரிக்க பூர்வ குடிகளை ஒடுக்கி, அவர்களின் வாழ்விடங்களை விட்டு அவர்களை விரட்டி, இனவழிப்பை மேற்கொண்ட வெள்ளை இனத்தவர்களை, செவ்விந்தியர்களுடன் இணைந்து இந்த இரு சமுராய்களும் எவ்வாறு எதிர்த்து போராடுகிறார்கள் என்பதையும் மீதிக் கதை கூறிச்செல்கிறது…

sh2கிரேஸி ஹார்ஸின் குழுவில் உள்ள வீரர்களிற்கு ஜப்பானியர்களின் பராம்பரிய தற்காப்பு கலையான Ju Jitsu வை பயிற்றுவிக்கிறான் மான்ஸோ. ஹிக்கோ தன் பங்கிற்கு செவ்விந்திய வீரர்களிற்கு தொலை இலக்குகளை குறி தவறாது தாக்கும் அம்பு எய்யும் பயிற்சியை வழங்குகிறான். இரு சமுராய்களும் செவ்விந்தியர்களிற்கு வெள்ளை இனத்தவர்களால் இழைக்கப்படும் அநீதியை கண்கூடாக காண்கிறார்கள், நீதிக்காக போராடுவது சமுராய்களின் கொள்கை என்பதால் செவ்விந்தியர்களுடன் இணைந்து அவர்கள் வெள்ளையர்களை எதிர்க்க ஆரம்பிக்கிறார்கள். தம் மக்களிற்காக போராடும் இரு சமுராய்களையும் தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளும் செவ்விந்தியர்கள், மான்ஸோவிற்கு Winds Wolf எனவும் ஹிக்ஹோவிற்கு Sky Hawk எனவும் தம் இன வழக்கப்படி பெயர்களை சூட்டி கவுரவிக்கிறார்கள். இயற்கையோடும் தம் மூதாதையர்களின் ஆன்மாக்களோடும் இணைந்த செவ்விந்தியர்களின் வாழ்வை தம் சமுராய் வாழ்க்கைக்கு காட்டப்பட்ட ஒரு பாதையாக உணர்ந்து கொண்டு இரு சமுராய்களும் தம் வாழ்வை செவ்விந்தியர்களுடன் தொடர்கிறார்கள்.

ஜிரோ டேனிகுச்சி, தான் கூறும் கதையில் சமுராய்களின் வாழ்க்கை முறைகள் குறித்தோ அல்லது நெறிகள் குறித்தோ அதிகம் அலசினார் இல்லை. அதே போன்று Oglala செவ்விந்தியர்களின் வாழ்க்கை முறை குறித்தோ அவர்கள் சடங்குகள், பண்பாடுகள், அவர்கள் வாழும் பிரதேசங்களின் நிலவியல் பண்புகள் பற்றியோ அதிக விபரங்களை விரிவாக தரவும் இல்லை. இந்த செவ்விந்தியர்கள் குழு குறித்த ஒரு மேலோட்டமான பார்வையையே அவர் கதை ஒரு வாசகனிற்கு வழங்குகிறது. மேலாடையை மாற்றிக் கொள்ளும் இலகுடன் இரு சமுராய்களும் தம் வாழ்முறைகளை மாற்றிக் கொள்ளுவது வேகமான வாசிப்பிற்கு உவப்பான ஒன்றாக இருந்தாலும், அதிக தேடல்களுடன், சுவையான தகவல்களை வாசகர்களிற்கு வழங்கும் மங்கா கதை சொல்லும் வழக்கத்தில் ஊறிய ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறார் டேனிகுச்சி.

sh3ஆனால் கதையின் பெரும்பாலான பகுதிகளில் ஈவுஇரக்கமின்றி செவ்விந்தியர்களை அழிக்க பொங்கிய வெள்ளை இன அதிகாரங்களையும், மனிதர்களையும் டேனிகுச்சி ஒரளவு விரிவாகவே காட்டியிருக்கிறார். அவரின் கதை சொல்லலின் பாணி செவ்விந்தியர்களின் இன அழிப்பை இரு சமுராய்களின் பார்வை வழி நோக்கும் ஒன்றாகவே இருக்கிறது. செவ்விந்தியர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்களை மதிக்காது, அவர்களின் வாழ்விடங்களை ரயில் போக்குவரத்து, கனிம அகழ்வு, தங்க தேட்டை போன்றவற்றிற்காக வெள்ளை இனத்தவர்கள் ஆக்கிரமித்த வன்முறை அவர் கதையில் ஓயாத ஓலமாக ஒலித்துக் கொண்டே பயணிக்கிறது.

செவ்விந்தியர்களின் முக்கிய உணவு இருப்பான காட்டு எருமைகளை திட்டமிட்டு அழித்தொழித்தல், செவ்விந்தியர்கள் எதிர்பாராத வேளைகளில் அவர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல்களை நடாத்தல், செவ்விந்திய இனக் குழுக்களிற்கிடையே உலவிய பகையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களின் இன ஒற்றுமையை நீர்த்துபோகச் செய்தல், செவ்விந்தியர்கள் வாழ்வதற்கென ஒதுக்கப்பட்ட விசேட வலயங்களில் வாழ மறுத்த செவ்விந்தியர்களை தேடி அழித்தல் என வேகமாக ஒரு நிலத்தின் பூர்வ குடிகளை அழிவின் எல்லைக்கு கொண்டு செல்ல வெள்ளையர்களால் முடிந்திருப்பதை வேதனையுடன் டேனிகுச்சி விபரித்து செல்கிறார். வரலாற்றில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களையும், அந்த சம்பவங்களின் பின்னிருந்த மனிதர்களையும் தன் கதையின் நம்பகத்தன்மைக்கு ஆதரவாக எடுத்துக் கையாண்டிருக்கிறார் டேனிகுச்சி.

sh4செவ்விந்தியர்களின் எதிர்ப்புக்கள் எல்லாம், அடக்க முடியாத அலைகளாக, பேராசை கொண்டு பொங்கி வந்த கட்டிலடங்கா வெள்ளை இனத்தவர்களின் முன்பாக பரிதாபமாக தோற்றுப்போவதை கதையில் வலியுடன் கூறுகிறார் கதாசிரியர். செவ்விந்தியர்கள் தம் புனித நிலமாக கருதிய Black Hills ன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடாத்திய யுத்தம், செவ்விந்தியர்களை தேடி தேடி அழித்தொழித்த, வெள்ளை இனத்தாலும் அதிகாரத்தாலும் வீர நாயகன் எனக் கொண்டாடப்படும் லெப்டினெண்ட் கேணல் George Armstrong Custer உயிரிழக்கும் Little Big Horn யுத்தம் என்பன கதையில் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய தருணங்கள் ஆகும். ஜார்ஜ் ஆம்ஸ்ட்ராங் கஸ்டரின் இன அழிப்பு ஆர்வம் இன்றும் திகிலை தரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது. சமகால இன அழிப்புக்கள் கூட இலக்கியங்களாக படிக்கப்படும் வேளைகளில் மட்டுமே எம் உணர்வுகள் ஒரு இமையை விழிக்ககூடுமான நிலையில் நாம் வாழ்கிறோம் இல்லையா.

தொடர்ச்சியான மோதல்களால் தளர்வுற்று, வெள்ளையர்கள் ஒதுக்கிய சிறப்பு வலயத்தில் கிரேஸி ஹார்ஸ் எனும் செவ்விந்திய வீரன் தன் இறுதி நாட்களை கழிக்க செல்ல, தம் மனவுறுதியில் தளராத இரு சமுராய்களும் வெள்ளையர்களிடம் தஞ்சம் பெறாது, அமெரிக்காவின் வடக்கின் பரந்த இயற்கையில் கலந்து கரைந்து போவதாக கதையை முடிக்கிறார் டேனிகுச்சி. ஆக்சனும், விறுவிறுப்பும் கலந்து நிறைந்த கவ்பாய் கதைகளை படித்து பழக்கப்பட்ட வாசகர்களிற்கு டேனிகுச்சியின் மிதமான வேகம் உகந்ததாக இல்லை, மேலும் டேனிகுச்சியின் கவிதையான கதை சொல்லலும், உரையாடல்கள் இல்லாமலே வசப்படுத்திவிடும் உணர்வுகள் மிகுந்த அவர் பாணி சித்திரங்களும் இக்கதையில் இல்லாமல் போயிருப்பது அவரின் கதைகளின் வாசிப்பில் கிடைக்கும் தாக்கத்தில் இருந்து முற்றிலும் வேறான ஒரு அனுபவத்தை கதையைப் படிப்பவரிற்கு வழங்குகிறது. கதையைப் படிக்கும்போது அதில் Dances With Wolves திரைப்படத்தின் சாயல் ஒட்டியிருப்பதை ஒருவர் அறிந்திட முடியும். டேனிகுச்சியின் இந்தக் கவ்பாய்!! கதையானது வானகப் பருந்து போல் உயரப் பறக்கமுடியாது திணறுகிறது என்பதுதான் உண்மை. [**]

9 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு!

  பதிவைப் படித்து விட்டு மீண்டும் வருகிறேன்!

  தலைவர்,
  அ.கொ.தீ.க.

  ReplyDelete
 2. காதலரே,
  //கதையைப் படிக்கும்போது அதில் Dances With Wolves திரைப்படத்தின் சாயல் ஒட்டியிருப்பதை ஒருவர் அறிந்திட முடியும். டேனிகுச்சியின் இந்தக் கவ்பாய்!! கதையானது வானகப் பருந்து போல் உயரப் பறக்கமுடியாது திணறுகிறது என்பதுதான் உண்மை//

  ஒரு மகத்தான படைப்பை வேறொரு வடிவில் கொணர முயலும்போது கண்டிப்பாக அதுவும் (மொக்கையாக இல்லாமல்) ஓரளவுக்காவது சிறந்தே இருக்கும். இருந்தாலும் இரண்டு ஸ்டார்கள்தானா?


  கிங் விஸ்வா
  தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

  ReplyDelete
 3. பகிர்வுக்கு நன்றி நண்பா.

  ReplyDelete
 4. அருமையான பதிவு தோழா! இனபடுகொலைகளை காலங்காலங்மாக செய்துவரும் அமெரிக்காவுக்கு கண்டிப்பாக ஒரு இருண்டகாலம் வரும், அப்போது வெள்ளையர்களுக்கு தெரியும் பல அப்பாவி மக்களின் இன்னல்கள்!

  ReplyDelete
 5. நமது இரவுகழுகாருக்கு இணையாக இந்த வானகப் பருந்து வருமா.. காதலரே

  ReplyDelete
 6. மங்கா சித்திரங்கள் நமது கவ்பாய் கதைகளுக்கு ஓட்டவில்லை காதலரே

  லக்கி லிமட்
  The Next Three Days - மனைவிக்காக....

  ReplyDelete
 7. உங்கள் பதிவைப் படிக்கையிலேயே இது dances with wolves போலவே இருக்கிறதே என்று நினைத்தேன். மேலே லக்கி கூறியது உண்மையா? மங்கா சித்திரங்கள், கௌபாய் கதைகளுக்கு சரிவருகின்றனவா? மீ த மேக் ஆஃப்டர் டுமாரோ காதலரே.. நாளையிலிருந்து ஐ வில் பீ பேக் .. ஓ யா பேபி

  ReplyDelete
 8. தலைவர் அவர்களின் வருகைக்கு நன்றி. படித்து விட்டு மீண்டும் எப்போது வருவீர்கள் :))

  விஸ்வா, இதனை நான் மொக்கை எனக் கூறவில்லை ஆனால் வழமையான டேனிகுச்சி இந்தப் படைப்பில் இல்லை என்றே கூறுகிறேன். அவரின் முன்னைய படைப்புக்கள் தந்த அனுபவத்திலிருந்து இந்தப் படைப்பானது உணர்வுகள் நீக்கப்பட்ட ஒரு அனுபவத்தையே வழங்குகிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் சரவணக்குமார், தங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி.

  நண்பர் cap tiger, நாம் யாவரும் இனப் படுகொலைகளிற்கு உடந்தையாகவே இருக்கிறோம். இதில் அமெரிக்காவை மட்டும் குற்றம் சொல்லி என்ன பயன் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் லக்கி லிமட், இரவுக் கழுகார் கதைகள் வேகமானவை. இக்கதை அப்படியானது அல்ல. ஆனால் இரவுக் கழுகாரை விட டேனி குச்சியின் கதை வெள்ளை இனத்தவர்களின் இனவழிப்பு குறித்து நேர்மையுடன் பேசுகிறது எனலாம். மங்கா கதைக்கான சித்திரங்கள் எனும் வகையில் டேனி குச்சியின் சித்திரங்கள் அதற்குரிய பாணியிலேயே ஒரு கவ்பாய் கதையை சித்திரப்படுத்தியிருக்கிறது. அதனை முழுவதுமாக தூக்கி எறிந்துவிட இயலாது. வேகமான கவ்பாய் புனைவுகளின் சித்திரங்களிற்கு நாம் அதிகம் பழக்கப்பட்டிருக்கிறோம் அல்லவா. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கருந்தேள், வாருங்கள், உங்கள் வரவு நல்வரவாகட்டும். ஓ யா பேபி. உங்கள் கேள்விக்கான பதிலை நண்பர் லக்கி லிமட்டிற்கான பதிலில் அளித்திருக்கிறேன். கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete