Sunday, October 31, 2010

விட்டத்தில் மலர்ந்த வண்ணத்திகள்


மனச்சிக்கல்கள் கொண்ட தன் மனைவியை விட்டு பிரிந்து, தன் இரண்டு குழந்தைகளுடனும் வாழ்ந்து வருகிறான் Uxbal [ Javier Bardem ]. தனக்காகவும், தன் குழந்தைகளினது ஜீவிதத்திற்காகவும் அவன் கடுமையாக பாடுபட வேண்டியிருக்கிறது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனை ஒன்றின் முடிவுகள் உக்ஸ்வாலிற்கு புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளது என்பதையும், அவன் இன்னமும் சில மாதங்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்பதையும் அவனிற்கு அறியத்தருகிறது….

மெக்ஸிக்க இயக்குனரான Alejandro Gonzalez Inarritu, Amores Perros முதல் Babel வரையிலான தன் திரைப்படங்கள் வழி, திரையில் கவித்துவமாக கதையை நகர்த்தும் தன் திறமையை சினிமா ரசிகர்களிற்கு நிரூபித்தவர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நடிகரான Javier Bardem, Mar Ardentro, No Country for Old men போன்ற திரைப்படங்கள் வாயிலாக தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்ட ஒரு சிறப்பான கலைஞன். இந்த இரு திறமைசாலிகளின் கூட்டணியிலும் உருவான திரைப்படமான Biutiful குறித்து ரசிகர்கள் மத்தியில் பலமான எதிர்பார்ப்புகள் உருவானதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

பார்சலோனாவின் புறநகர் ஒன்றில், வசதி குறைந்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலேயே Biutiful படமாக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் வாழும் ஒரு மனிதனாகவே உக்ஸ்வால் அறிமுகமாகிறான். உக்ஸ்வாலின் தினசரி வாழ்க்கையானது சிரமமானது. தனது பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து செல்வது முதல், பார்சலோனாவில் வதிவதற்கு தகுந்த ஆவணங்கள் கிடைக்கப் பெறாமல் சட்டவிரோதமாக வாழும் சீன, ஆபிரிக்க இனத்தவர்களை, முதலாளிகளிடம் வேலைக்கு அனுப்பி அதில் சிறிது பணம் ஈட்டுவதுவரை, உக்ஸ்வால் ஒவ்வொரு கணத்திலும் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இயக்குனர் இன்னாரிட்டு, பல மனிதர்களின் வாழ்க்கைகள் ஒன்றுடன் ஒன்று குறுக்கிடும் கதை சொல்லலை தவிர்த்து, கதையின் மாந்தர்கள் யாவரும் உக்ஸ்வாலுடன் ஏதோ ஒரு வகையில் நேரடித் தொடர்பை கொண்டிருப்பவர்களாக சித்தரித்திருக்கிறார். கதையும் நேர்கோட்டு பாதையில் பயணிக்கிறது. கதையின் மாந்தர்களை பாதிக்கும் எந்த ஒரு சம்பவமும் உக்ஸ்வாலையும் பாதிக்கவே செய்கிறது. அவர்களின் புன்னகையிலும், கண்ணீரிலும் உக்ஸ்வாலிற்கு பங்கு தவறாது கிடைத்துவிடுகிறது.

பார்சோலானவில் தகுந்த ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வரும் சீன மற்றும் ஆபிரிக்க இனத்தவர்கள் மீது நிகழ்த்தபடும் சுரண்டல்களும், தம் நாட்டில் இல்லாத சொர்க்கமொன்றை அந்நிய மண்ணில் தேடி வந்து, நரகம் ஒன்றில் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் இன்னல்களையும், அவலங்களையும் அவற்றிற்கேயுரிய வலிகளுடனும், கனவுகள் சிதைந்த விழிகளுடனும் திரைப்படுத்துவதில் பின்னியிருக்கிறார் இயக்குனர் இன்னாரிட்டு. சர்வதேச அரங்குகளில் மனித உரிமைகள் குறித்து பீற்றிக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகள் நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் ஐரோப்பாவில் இன்று அந்நிய நாட்டு மக்கள் குறித்த உண்மை நிலையானது இன்னாரிட்டு திரைப்படுத்தியதை விட மோசமான எல்லைகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை ஐரோப்பாவில் வதியும் அந்நியர்கள் மறுக்க மாட்டார்கள்.

biutiful-2010-18524-475996845 உக்ஸ்வாலிடம் இறந்துபோனவர்களின் ஆவிகளுடன் தொடர்பாடக்கூடிய ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றலையும் சிறிது பணம் ஈட்ட அவன் பயன்படுத்திக் கொள்கிறான். இறப்பின் பின் இருக்கக்கூடிய ஒரு வாழ்வின் மீது பரிச்சயம் கொண்ட உக்ஸ்வால், தான் இவ்வுலகை விட்டு நீங்கி மறுவுலகிற்குள் நுழையும் முன், தன் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வை சிறப்பாக்க விழைகிறான், தன் தவறுகளிற்கு பிராயசித்தம் காண ஓடுகிறான், தான் தவறிழைத்த ஆன்மாக்களிடம் மன்னிப்பை வேண்டுகிறான், தன் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ முயல்கிறான். ஆனால் வாழ்வின் எதிர்பாராத அழகுகள் அவனை சுற்றி சுற்றி அடிக்கின்றன. அவன் மீது பாரங்களை படிப்படியாக ஏற்றி விட்டத்தில் மலர்ந்த வண்ணத்துப்பூச்சிகள் போன்ற மரணத்தின் பிரசன்னத்தின் முன் அவனை முடங்க வைக்கின்றன. பார்சோலானாவின் அந்நியர்களின் முகங்களினதும், அடையாளங்களினதும், வாழ்கைகளினதும் ஊடு அவர்களைப்போலவே வாழ்வின் நுண்ணிய அழகுகளை தரிசிக்க வேண்டி மரணத்துடன் போட்டி போட்டு இயங்குகிறான் உக்ஸ்வால். பொறுப்பான தந்தை பிம்பத்திற்காக உக்ஸ்வால் அயராது செயற்படுகிறான். இயக்குனர் இன்னாரிட்டுவும் தன் தந்தைக்கு இப்படத்தை சமர்பித்திருக்கிறார்.

மிகவும் சிக்கலும், கனமும் நிறைந்த உக்ஸ்வால் பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகர் ஹாவியர் பார்டெமின் அர்பணிப்பை பாராட்ட வார்த்தைகளை தேடுவது சிரமமான ஒன்று. படம் முழுக்க நிறைந்து நிற்கிறார் அவர். அவரின் உழைப்பும், சக்தியும், திறமையும், நடக்க அடம்பிடிக்கும் ஒரு குழந்தையை தோளில் ஏந்திச் செல்லும் ஒரு பாசமான தந்தைபோல் திரைப்படத்தை ஏந்திச் செல்கின்றன. அவரது திறமையின் வீச்சு ரசிகனை திகில் கொள்ள வைக்கிறது.

ஆனால், அற்புதமான ஹாவியர் பார்டெம்மின் திறமை இருந்தும் கூட திரைப்படமானது அதன் பிடியிலிருந்து பார்வையாளனை இழக்க ஆரம்பித்து விடுகிறது. இயக்குனர் இன்னாரிட்டுவின் கவித்துவமான மனம் நெகிழ வைக்கும் இயக்கம்கூட இந்த பிடியிழத்தலிலிருந்து ரசிகர்களை மீட்க முடியவில்லை. திரைப்படத்தின் துன்பங்களும், வேதனைகளும், அழுத்தங்களும் திரையிலிருந்து ரசிகனை அமுக்கி திணற வைக்கின்றன. சலிப்பின் எல்லையையும் சற்று எரிச்சலையும் அவன் உணர ஆரம்பிக்கிறான். அளவிற்கதிகமாகவே பரிமாறப்படும் வேதனைகள் எதிர்பார்பிற்கு எதிரான விளைவுகளை மனதில் உண்டாக்குகின்றன. திரையரங்கை விட்டு வெளியேறும்போது ஒரு மனவுளைச்சலுடன் வெளியேறிச் செல்லும் உணர்வை திரைப்படம் வழங்குகிறது. தன் பெயரிற்கேற்ற அழகை காட்ட இன்னாரிட்டுவின் படைப்பு திணறுகிறது. ஹாவியர் பார்டெம் மட்டுமே தெரிகிறார், பெரும் அழகுடன். [**]

ட்ரெயிலர்

10 comments:

  1. //அவரின் உழைப்பும், சக்தியும், திறமையும், நடக்க அடம்பிடிக்கும் ஒரு குழந்தையை தோளில் ஏந்திச் செல்லும் ஒரு பாசமான தந்தைபோல் திரைப்படத்தை ஏந்திச் செல்கின்றன. //

    அருமை...

    //தம் நாட்டில் இல்லாத சொர்க்கமொன்றை அந்நிய மண்ணில் தேடி வந்து, நரகம் ஒன்றில் மாட்டிக் கொண்டு அவர்கள் படும் இன்னல்களையும், அவலங்களையும் அவற்றிற்கேயுரிய வலிகளுடனும், கனவுகள் சிதைந்த விழிகளுடனும் //

    இப்படி அல்லல் படுவோர் எத்தனை எத்தனை..
    துபாய் மட்டுமே துயர்க் காவியங்கள் பல சொல்லுமே..

    //அளவிற்கதிகமாகவே பரிமாறப்படும் வேதனைகள் எதிர்பார்பிற்கு எதிரான விளைவுகளை மனதில் உண்டாக்குகின்றன.//

    ஹஹா...அளவுக்கதிகமாக எது சென்றாலும் அது நிரடவே செய்யும் நண்பரே..
    அழகானது என்ற தலைப்பைக் கொண்ட இப்படம்,வாழ்கையின் அழகுகளையும் பதிவு செய்து இருந்தால் நன்றாகவே இருந்திருக்குமோ?

    ReplyDelete
  2. சொந்த நாட்டை விட்டு செல்வது.... சொர்க்கத்தை விட்டு நரகத்தை நோக்கிய பயணமாகத்தான் இருக்கும்

    ReplyDelete
  3. ககா, பின்னிட்டீங்க நண்பரே...அருமையான வரிகள்.
    பேசாம கவிதைகள் எழுத ஆரம்பியுங்கள்...நன்றி.

    ReplyDelete
  4. நண்பர் இலுமினாட்டி, திரைப்படத்தில் அழகான தருணங்கள் இருக்கவே செய்கின்றன ஆனால் வேதனைகள் அவற்றை விஞ்சி விடுகின்றன. கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் உலக சினிமா ரசிகரே, சொந்த நாடும், புகுந்த நாடும் நரகம் எனும்போது அவற்றில் மாட்டிக் கொண்ட மனிதர்களின் வேதனைக்கு முடிவு என்பதே இல்லாமல் போகிறது. கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் மரா, கவிதைக்கு இலுமினாட்டி இருக்கிறார். கொரிய பட டிவிடிகளைக் கண்டாலே அவரிற்கு கவிதை மூட் வந்துவிடுகிறது. கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி.. :)

    ReplyDelete
  6. இந்த படம் எனக்கு ஒரு நாள் முன்பு கிடைத்து விட்டது. உங்களின் கேட்கலாம் என்று இருந்தேன்( மெயிலில் தான்).
    கொஞ்சம் எதிர்பார்ப்பும் இருந்தது. இரண்டே ஸ்டார் தானா ... சற்று ஏமாற்றம் தான். நேரம் கிடைக்கும் போது பார்த்துவிடுகிறேன் நண்பரே .. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. காதலரே எங்கிருந்து தான் இந்த மாதிரி படங்களை பிடிக்கிறீங்களோ தெரியல :)

    துபாய் மட்டுமே துயர்க் காவியங்கள் பல சொல்லுமே... : (

    Me also repeatu......

    .

    ReplyDelete
  9. அடடா சொல்ல மறந்துட்டேன்

    அனைவருக்கும் இனிய அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்! :))
    .

    ReplyDelete
  10. நண்பர் MSK வருகைக்கு நன்றி.

    நண்பர் வேல்கண்ணன், திரைப்படத்தை பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள், கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிபி, தங்களிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete