Monday, October 4, 2010

வேகமாய் விரையும் ரத்தம்


முதல் தடவையாக ஜேம்ஸ் எல்ரோயின் நாவலை நான் படித்தபோது, அதுவரை நான் படித்திருந்த த்ரில்லர் நுவார் வகை க்ரைம் எழுத்துக்களிலிருந்து அவரின் எழுத்தானது வீர்யமான, விறுவிறுப்பான, அதிர வைக்கும் உணர்வை எனக்களித்தது. புதியதொருவகை கதையுலகினுளும், கதை சொல்லலினுளும் நுழைந்து விட்ட அனுபவத்தை நான் அடைந்தேன். அது ஒரு போதையைப்போல் என்னை பீடித்தது. இன்றைய நாள்வரையில் எல்ரோயின் எழுத்துக்கள் என் போதையை தீர்க்காது ஏமாற்றி ஏய்ப்பவையாக அமைந்ததேயில்லை.

நான் முதலில் படித்த எல்ரோயின் நாவல் American Tabloid என்பதாகும். அதன்பின், சுவை கண்ட வெறியனாக அவரது நாவல்களை தேடித் தேடி நான் படித்திருக்கிறேன். Black Dahlia மற்றும் L.A. Confidential ஆகிய எல்ரோயின் நாவல்கள் அவரது L.A. Quartet ல் அடங்குபவை. இந்நாவல்கள் திரைப்படங்களாகவும் உருவாகியிருக்கின்றன. ஆனால் எல்ரோயின் எழுத்துக்களை நாவலில் படிப்பது போன்ற அந்த கச்சிதமான போதையுணர்வை திரைப்படங்கள் வழங்கவில்லை என்பதே என் தாழ்மையான கருத்து. குறிப்பாக அவரது அட்டகாசமான நாவலாகிய Black Dahlia திரையில் அதன் அடையாளத்தையே முற்றாக இழந்தவிட்ட ஒரு தோற்றத்தை எனக்களித்தது.

Underworld USA Trilogy எனப்படும் நாவல் தொடரின் முதலாவது நாவலாக அமைந்ததுதான் American Tabloid. ஜான் கென்னடி அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு முன்பாக ஆரம்பிக்கும் இந்நாவல் அவரின் படுகொலையின் சில நிமிடங்களின் முன்பாக நிறைவு பெறும். ஜான் கென்னடியை பதவிக்கு வராமல் தடுப்பதற்கு நிகழும் சதி மற்றும் அவரது படுகொலை எவரால், எவ்வாறு, ஏன் திட்டமிடப்பட்டது என்பன இந்நாவலில் பிரதான பங்கு வகிக்கும்.

இந்நாவல் தொடரின் இரண்டாம் பாகமான The Cold Six Thousand, ஜனாதிபதி ஜான் கென்னடியின் படுகொலை நடந்த சில நிமிடங்களின் பின்பாக ஆரம்பமாகி, வியட்னாம் யுத்தம், அதற்காக நடாத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல், ராபர்ட் கென்னடி மற்றும் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் படுகொலைகளின் பின்னான சதிகள் என விரிகிறது. இந்த இரு நாவல்களும் படு வேகமாக வாசகனை பக்கங்களை திருப்ப வைக்கும் கதைக்களனையும், கதை நகரும் வேகத்தையும் கொண்டவையாகும்.

வரலாற்றில் நிகழ்ந்த உண்மைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டு, தன் கற்பனை பாத்திரங்கள் மற்றும் அந்த சம்பவங்களுடன் தொடர்பு கொண்ட நிஜ பாத்திரங்கள் வழி தன் அருமையான கற்பனை திறனால் அந்த சம்பவங்களின் பின் ஒளிந்திருக்ககூடிய உண்மைகளையும், சதிகளையும், மர்மங்களையும் வாசகர் முன் விடுவிப்பதாக அவரது கற்பனைக் கதைகள் அமைந்திருக்கின்றன. ஜான் கென்னடி, ராபர்ட் கென்னடி, மார்ட்டின் லூதர் கிங் ஆகியோரின் படுகொலைக்கு காரணமானவர்கள், க்யூபாவிற்கு எதிரான ரகசிய கெரில்லா யுத்தங்கள் போன்ற நிகழ்வுகளை தன் கற்பனை வழியே பரபரப்பான அதிர்வை உருவாக்கும் நாவல்களாக இவர் வாசகனிற்கு வழங்குகிறார்.

Couv இவரது கதை சொல்லும் முறையானது அதிகமான வர்ணனைகள் அற்றது. சுருக்கமான தந்தி உரைநடை பாணியில் உருவாவது. ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்துவது. இவரது கதை சொல்லல் முறைக்கு பழக்கப்பட்டபின்னர் மாத்திரமே எல்ரோயின் எழுத்துகள் எவ்வளவு வீர்யமானவை என்பதை ஒருவர் உணர்ந்து கொள்ள முடியும். அதேபோல் இவரது கதைகளில் இடம்பெறும் இனத்துவேஷமும், வன்முறையும், வக்கிரமும் பழக்கப்படாத வாசகர்களை சங்கடத்துடன் நெளிய வைக்கும் தன்மை கொண்டவை. ஆனால் எல்ரோயின் பலமும், தனித்துவமும் மேற்கூறியவை யாவும் சேர்ந்து உருவானவையே.

வாசகர் மத்தியில் தனது கற்பனைக் கதைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் உத்தியாக அத்தியாயங்களின் இடையே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள், கடிதங்கள், அந்தரங்க டயரிகளின் பக்கங்கள், செய்திப் பத்திரிகைகளில் பிரசுரமாகிய செய்திகள் மற்றும் கட்டுரைகளை எல்ரோய் இணைப்பதுண்டு. Underworld USA Trilogyன் மூன்று நாவல்களிலும் இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்க குற்ற குழுக்களிற்கும்[மாஃபியா], அரசியல் புள்ளிகளிற்கும், காவல்துறைக்கும், பிரபலங்களிற்கும்,CIA மற்றும் FBI போன்றவற்றிற்கும் இடையில் ரகசியமாக இருந்து வந்த தொடர்புகள், அதனால் ஏற்பட்டிருக்ககூடிய விளைவுகள் என்பவற்றை தன் கற்பனையில் அதிர்வை தரும் விதமாக வடித்தெடுத்து வழங்குபவையாகவே Underworld USA Trilogy ன் மூன்று நாவல்களும் அமைந்திருக்கின்றன. நாவல் தொடரின் இரண்டாம் பாகமான The Cold Six Thousand வெளியாகி எட்டு வருடங்களின் பின்பாகவே தொடரின் இறுதிப்பாகமாகிய Blood’s a Rover வெளியாகியது.

இந்நாவலில் மூன்று பிரதான பாத்திரங்களாக Wayne Tedrow Junior, Dwight Holly, Donald Crutchfield ஆகியோர் முன்னிறுத்தப்படுகிறார்கள். 1968 முதல் 1972 வரையிலான காலப்பகுதியில் கதை நகர்கிறது. வாட்டர்கேட் விவகாரத்தை எல்ரோய் தவிர்த்திருக்கிறார்.

A.E. Housman என்பவர் எழுதிய Reveille எனும் கவிதையின் வரிகளிலிருந்தே நாவலின் தலைப்பு உருவாகியிருக்கிறது[Clay lies still, but blood’s a rover]. 1964ல் தெற்கு லாஸ் ஏஞ்சலீஸீல் கறுப்பின மக்கள் செறிந்து வாழும் பகுதியில் நிகழும் ஒரு கவச வாகனக் கொள்ளையின் படு அட்டகாசமான விபரிப்புகளுடன் Blood’s a Rover நாவல் ஆரம்பமாகிறது. பின் கதை 1968ற்கு ஒரே தாவில் தாவுகிறது. இந்நிலையில் நாவலின் மூன்று பிரதான பாத்திரங்களும் வாசகர்களுடன் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். Wayne Tedrow மற்றும் Dwight Holly நாவல் தொடரின் இரண்டாம் பாகத்திலேயே அறிமுகமான நாயகர்கள்தான். புதிய வாசகர்களிற்காக இவர்கள் இருவரையும் குறித்த சுருக்கமான ஆனால் தெளிவான அறிமுகம் நாவலில் முன்வைக்கப்படுகிறது.

JamesEllroy_TheBlackDahlia Dwight Holly, ஒரு FBI ஏஜெண்ட். FBIன் இயக்குனர் John Edgar Hoover ன் பணிப்பின் நிமித்தம் கறுப்பின புரட்சி அல்லது கலகக் குழுக்களினிடையே வேறுபாடுகளையும் மோதல்களையும் தோற்றுவித்து அக்குழுக்களை மக்கள் முன்னிலையில் மதிப்பிழக்க செய்யும் திட்டத்தை மேற்கொள்ளுபவன். கறுப்பின குழுக்கள் வழி போதைப்பொருள் விற்பனையை நிகழ்த்தி அச்சமூகத்தை சீரழிக்க வேண்டுமென்பது Hooverன் விருப்புக்களில் ஒன்று. இதற்காக Dwight கறுப்பின குழுக்கள் பற்றிய தகவல் தரும் நபர் ஒருவரையும், கறுப்பின குழுக்களினுள் ஊடுருவி அவர்களை வேவுபார்த்து அவர்களிடையே பிரிவினைகளை உருவாக்ககூடிய நபர் ஒருவரையும் பணிக்கமர்த்துகிறான். Wayne க்கு குடும்ப நண்பனாகவும் Dwight இருக்கிறான்.

Wayne Tedrow Junior, மார்ட்டின் லூதர் கிங்கை கொலை செய்தவனாக இவன் சித்தரிக்கப்படுகிறான். தீவிர இனவாத குடும்பத்தின் வாரிசான இவன், தனது மனைவியின் கொலையின் பின் கறுப்பின குற்றவாளிகள் மீது கொலைவெறியுடன் மோதுபவன். கறுப்பின சமூகத்தினரால் அச்சத்தோடு நோக்கப்படுபவன். மாஃபியா குழுக்களிற்காகவும், செல்வந்தன் Howard Hughes க்காகவும் காரியங்கள் ஆற்றுபவன். மேற்கூறியவர்களிற்கும் ஜானாதிபதி தேர்தலில் போட்டியிடும், தேர்ந்தெடுக்கப்படும் Richard Nixon க்குமிடையில் சூட்கேஸ் நகர்த்தி காரியங்கள் சாதிப்பவன். மாஃபியாக்களின் கறுப்பு பண முதலீட்டிற்கும், நிர்வாகத்திற்கும் பொறுப்பானவன். டொமினிக் குடியரசில் மாஃபியாக்களிற்காக சூதாட்ட விடுதிகளை உருவாக்கும் திட்டத்தின் பிரதான தூண்.

Donald Crutchfield, தனியார் துப்பறியும் நிபுணர்களிற்காக வேவு பார்க்கும் வேலைகளை செய்பவன். சிறுவயதில் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்ட தன் தாய் மீதான ஏக்கம் கொண்டவன். மறைந்திருந்து ரகசியமாக பெண்களை நோட்டம் விட்டு ரசிக்கும் இயல்பு கொண்டவன். ஒரு வாடிக்கையாளானிற்காக மோசடிக்கார பெண் ஒருத்தியை தேடும் வேட்டையை ஆரம்பிக்கிறான் இவன்.

james-ellroy நான்கு வருட காலப்பகுதியில் இந்த மூன்று நாயகர்களும் கதையின் ஆரம்பத்தில் அவர்கள் கொண்டிருந்த கருத்துக்களை படிப்படியாக மாற்றிக்கொண்டு வேறு மனிதர்களாக ஆக முயல்வதை அற்புதமாக சொல்லியிருக்கிறார் எல்ரோய். கறுப்பினத்தவர்களையும், இடதுசாரிகளையும் நசுக்க உழைக்கும் Dwight, மாஃபியாக்களிற்காக பணியாற்றும், கறுப்பின சமூகத்தின் சிம்ம சொப்பனமாக இருக்கும் Wayne, காஸ்ட்ரோவின் ஆதரவாளர்களை சுட்டுத் தள்ளும் Crutchfield ஆகிய மூவரும் நான்கு வருடங்களில் அடையும் மாற்றங்களும், அவர்களின் முடிவுகளும் நெகிழ வைப்பவையாக இருக்கின்றன. நாவலில் இந்த நாயகர்களிற்கும் பெண்களிற்குமிடையிலான உறவுகள் மனதை மென்மையாக தொட்டு விடுகின்றன.

கறுப்பின மக்களின் மீதான ஒடுக்குமுறை, இனவாத அமைப்புக்கள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள், இடதுசாரி அமைப்புக்களின் ரகசிய நடவடிக்கைகள், காவற்துறையின் ஊழல் மற்றும் அராஜகம், டொமினிக்கன் குடியரசில் ஜனாதிபதி நிக்சனின் தயவில் நிகழும் அமெரிக்க மாஃபியாக்களின் சூதாட்ட விடுதி கட்டுமானப் பணிகள், டொமினிக்கன் குடியரசில் மக்கள் மீதான அடக்குமுறை, க்யூபாவின் கரைகளில் நிகழ்த்தப்படும் காஸ்ட்ரோ ஆதரவாளர்களின் கொலைகள், செல்வந்தன் Howard Hughesன் இனவாத மனப்பிறழ்வுகள், FBI இயக்குனர் Hoovern மனக்கனவுகள், வக்கிரங்கள், வூடு மூலிகை ரசாயனம், வூடு மாந்திரிகம் என எண்ணற்ற விபரங்களுடன் வாசகனை சுற்றி சுற்றி அதிர அடிக்கிறது நாவல். இவற்றினூடு 1964ல் இடம்பெற்ற அந்த கவசவாகனக் கொள்ளைச் சம்பவமும், மரகதக்கற்களும் நாவல் நெடுகே கொடும் மர்மமாக பயணிக்கின்றன. ஒரு பெண் பாத்திரம் மிக முக்கிய திருப்பங்களை கதையோட்டத்தில் ஏற்படுத்துபவளாக படைக்கப்பட்டிருக்கிறாள்.

எல்ரோயின் நாவலின் நாயகர்கள், அகவழுத்தங்களும், பதட்டங்களும், உள்ளே வெடிக்க தருணம் பார்த்திருக்கும் வன்முறையையும் உடையவர்கள். தங்கள் தீவிர எல்லைகளை எப்போதும் மீறிச் சென்று ரட்சணியத்திற்காக தம்மைத் தாமே அழிக்க முற்படுபவர்கள். இந்நாவலின் நாயகர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. மகிழ்ச்சியான முடிவு என்பது எல்ராய்க்கு பிடிப்பதில்லை என்பதை இந்நாவல் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. கதையின் செறிவும், வேகமான நகர்வும், தகவல்களும் நாவலை வேகமாக படித்து முடித்து மர்மத்தையும், முடிவையும் அறிய விழையும் வாசகனை களைக்கச் செய்யும் அளவிற்கு கடுமையாக உழைத்திருக்கிறார் எல்ரோய். அசத்தலான கற்பனை, அற்புதமான லேசர் வெட்டு எழுத்து நடை, இறுதிவரை நீண்டு செல்லும் மர்மம், நெகிழ வைக்கும் தருணங்கள், கலங்கவைக்கும் முடிவு என Underworld USA Trilogy க்கு Blood’s a Rover மூலமாக மிகவும் கச்சிதமான நிறைவை வழங்கியிருக்கிறார் எல்ரோய்.

12 comments:

 1. இந்த கதாசிரியரின் L.A Confidential படமும், பிரையன் டி பால்மா இயக்கிய பிளாக் டாலியா படங்களும் என்னை கவர்ந்தவை. அவற்றை பற்றியும் நீங்கள் எழுதி இருக்கலாமே?

  பை தி வே, பிளாக் டாலியா படம் பலரால் மொக்கை என்று கூறப்பட்டாலும்கூட என்னை கவர்ந்த ஒன்றாகும். காதலரின் கருத்தென்னவோ?

  ReplyDelete
 2. காதலரே,
  //குறிப்பாக அவரது அட்டகாசமான நாவலாகிய Black Dahlia திரையில் அதன் அடையாளத்தையே முற்றாக இழந்தவிட்ட ஒரு தோற்றத்தை எனக்களித்தது//

  அப்படியா? என்ன கொடுமை ஐயா இது?

  ReplyDelete
 3. ஹ்ம்ம் மிக அழகாக விவரித்து படிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்

  .

  ReplyDelete
 4. விஸ்வா, நீங்கள் குறிப்பிட்டுள்ள இரு படங்களில் L.A. Confidential சற்று சிறப்பாக இருக்கும் ஆனால் நாவலின் தரத்தை இரு திரைவடிவங்களும் எட்டவில்லை, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

  நண்பர் சிபி, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 5. பொதுவாக நான் ஆங்கில நாவல்களை படிப்பதில்லை. ஆனால் இந்த மாதிரி விமர்சனங்களை படிக்கிற போது ஆவல் அதிகமாகிறது. முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
 6. சார்...L A COnfidential படம் எனக்கு பிடிச்சது..Black Dahila சுத்தம். James Ellory புத்தகங்களை அடிக்கடி கிராஸ் ஆனாலும் நா இங்லிபீசு படிக்கவே ஒரு மாமாங்கம் ஆகும்னு தள்ளிபோட்டுகிட்டு வரேன்.

  உங்கள் விமர்சனம் படிக்கத் தூண்டியது(ஹி..ஹி..template)..

  ReplyDelete
 7. நண்பரே... இதில் இருக்கும் எந்தப் பெயரும் எனக்குப் பரிச்சயமில்லாததால், இப்பதிவிலிருந்து , ரேப் டிராகன் பதிவுக்கு வெளிநடப்பு செய்கிறேன் ;-) ஹீ ஹீ

  ReplyDelete
 8. நண்பர் எஸ்.கே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கொழந்த, நேரம் கிடைக்கையில் படித்துதான் பாருங்களேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  நண்பர் கருந்தேள், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

  ReplyDelete
 9. //
  குறிப்பாக அவரது அட்டகாசமான நாவலாகிய Black Dahlia திரையில் அதன் அடையாளத்தையே முற்றாக இழந்தவிட்ட ஒரு தோற்றத்தை எனக்களித்தது.
  //
  I watched that movie too and I totally agree

  ReplyDelete
 10. நண்பர் ஜோ, தங்கள் கருத்துக்கு நன்றி.

  நண்பர் குரு, நன்றி.

  ReplyDelete